ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்


பண் :

பாடல் எண் : 1

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

பொழிப்புரை :

திருக்கோயிலில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்து கொடுத்தல், தொடுத்துக் கொடுத்தல், அலகிடல் மெழுகல், துதி பாடல், ஊர்தி சுமத்தல், பலவகைத் திருமஞ்சனப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தல் முதலிய எளிய பணிகளைச் செய்தல், தாச மார்க்கம், தொண்டர் நெறியாகும்.

குறிப்புரை :

``எளியன`` என்பதை ஈற்றடியின் முதலிற் கூட்டி உரைக்க. எளிமையாவது, மன ஒருக்கம், பொறியடக்கம் முதலியன செய்ய வேண்டாமை. தளி - கோயில். இதனைக் குறிக்கும் ``அது`` என்னும் சுட்டுப்பெயர் செய்யுளில் முன் வந்தது. தூர்த்தல் - குப்பைகளைப் போக்கல்; அஃதாவது அலகிடல். பள்ளி - இருக்கை. சிவிகை முதலிய ஊர்திகள்; இஃது இடைக் குறைந்து நின்றது. அதற் குரிய பணியாவது சுமத்தல். `தளித்தொழில்` என்பதில் தகரவொற்றுத் தொகுத்தல் பெற்றது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்று, `புறத்தொழில் மாத்திரையால் சேய்மையில் நின்று செய்தலால் சரியை தாச மார்க்கமாயிற்று` என்பது விளக்கி நின்றது.
இதனால், `சரியைத் தொண்டாவன இவை` என விளக்கும் முகத்தால், சரியை தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அதுவிது ஆதிப் பரமென் றகல்வர்
இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே

பொழிப்புரை :

`அந்தத் தெய்வம் முதற்கடவுள், இந்தத் தெய்வம் முதற்கடவுள்` என்று பலவான எண்ணங்களைக் கொண்டு பலர் சிவனை அடையாது நீங்குவர். அதனால், `சிவனை அடைவதே உய்யும் நெறி` என்று தெரிந்து, அவனை வணங்குவார் அரியர். `எல்லாத் தேவர்க்கும் தலைவன் சிவபெருமான்` என்பது வேதாகமங் களை உணரின் தெளிவாம். ஆதலால், அம்முறையே சென்று அவனையே விரும்பி அடையுங்கள். அவ்வாறு அடையும் முறையே மக்கள் உள்ளத்தில் பொருந்தி நிற்கும்படி ஆன்றோர் உணர்த்துகின்ற நெறியாகும்.

குறிப்புரை :

``வேந்தனை`` என்பது பின்னர் வருதலால், வாளா, ``இறைஞ்சினரில்லை`` என்றார். ``வேந்தன்`` என்று, முன் `அது, இது` எனச்சுட்டிய தெய்வங்கட்கு வேந்தனை என்றவாறு. ``விதி`` என்றது, சிறப்புப்பற்றி வேதாகம விதியையே குறித்தது. `அதன் வழியே சென்று நாடும்` என்றதனால், அது சிவனே வேந்தனாதலை இனிது விளக்கி நிற்றல் பெறப்பட்டது. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், `சிவனுக்குரிய தொண்டுகளைச் செய்தலே, தொண்டர் நெறி` என்பது ஆன்றோர் துணிபாதலை விளக்கும் முகத்தால், சரியையே தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

பொழிப்புரை :

நான் முதலில் இடநாடியின் வழியும், பின்பு வல நாடியின் வழியும் பிராண வாயுவை அடக்கியும், விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் இயன்றன.

குறிப்புரை :

அந்தித்தல் - அடக்குதல். இதனை, ``ஞாயிறு`` என்ப தற்கும் கூட்டுக. திங்கள் - சந்திர கலை. ஞாயிறு - சூரிய கலை. `மந்திர செபம், தியானம்` என்பவையும் பிராணாயாமத்தோடு கூடியவழிச் சிறந்து நிற்றலை முதல் இரண்டடிகளில் கூறியவாறு. புறத்தே சிவனை வழிபடும் இடங்களில் ஞாயிற்று மண்டலம் இங்கு முதற்கண் கொள்ளத் தக்கது. வகை, தாசமார்க்கமாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. சரியை யாகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்வராயின், அவரது சரியைத் தொண்டு பொதுவாய் ஒழியாது சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.
இதனால், தாச மார்க்கம் சிறப்பு நிலை எய்துமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

பொழிப்புரை :

சிவனைத் தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லி உளம் மகிழ்ந்து போற்றித் தியானிப்பர். அவர் அவன்பாலே நின்று அங்ஙனம் செய்யினும் அவன் தன்னைத் தமக்குக் கண்போலச் சிறந்தவன் எனக் கருதி, அன்பும், ஆர்வமும் கொண்டு வழிபடுகின்ற அடியவரது உள்ளத்தில் நீங்காது நின்று, அவர்கள்பாலே பேரருள் உடையவனாகின்றான்.

குறிப்புரை :

தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லிப் போற்றுதலை,
``பேரா யிரம் பரவி வானோர் ஏத்தும் - பெம்மானை`` 1
என அப்பரும் எடுத்தோதியருளினார். தேவர்கள் எத்துணைப் பணி வுடையராயினும், `யாம் தேவர்` என்னும் செருக்கு முற்றிலும் நீங்கப் பெறாமையின், அச் செருக்குச் சிறிதும் இல்லாத அடியார்களிடத்தே சிவன் மிக்க கருணையுடையவனாய் இருக்கின்றான் என்பதாம்.
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி`` 2
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்`` 3
என்பவனவற்றையும் நோக்குக. `உள்மகிழ்ந்து உன்னுவர்` என மாற்றிக்கொள்க. `தொழவும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. தேவ இனத்தராய் அருகணைதல் பற்றி ``உள் நின்று`` என்றார். ``பண்ணவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிறப்பு நிலைத் தாச மார்க்கமும் செருக்கு நீங்கி அன்போடு கூடியவழியே பெரும் பயன் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருந்த நினைவறி யாரே.

பொழிப்புரை :

சிவபெருமானது புகழைக் கூறும் நூல்களை ஓதுதல், இயன்ற வகையில் சிவனை வழிபடுதல், மலர் கொய்து கொடுத்தல் முதலிய தொண்டுகளைச் செய்தல் என்னும் இவை போல்வனவற்றைச் செய்யினும், கல் வந்து விழப்பட்ட பாசிக் குளம் அக் கல்வீழ்ச்சியின் வேகம் உள்ள துணையும் பாசி நீங்கி நின்று, பின் பாசியுடையதாய் விடுதல் போல, மனத்தின் இயல்பை ஆராயுமிடத்து அத் தொண்டு களில் ஈடுபடும் துணையும் அஃது ஐம்புல ஆசையின் நீங்கி நின்று, பின் அதனை உடைத்தாய்விடும். அப்பொழுது மக்கள் சிவன்பால் அன்பு கொண்டிருக்கும் நிலை இல்லாதவராவர்.

குறிப்புரை :

`ஆதலின், புறத்தொண்டு இல்லாதபொழுதும், செபம், தியானம் என்ற இவற்றை யுடையராதல் யாவர்க்கும் நன்று` என்பது குறிப்பெச்சம். ``பாசிக் குளத்தில் வீழ் கல்லாம் மனம்`` என்றா ராயினும், `கல்வீழ் பாசிக் குளமாம் மனம்` என மாற்றியுரைத்தல் கருத்தென்க.
``பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதிற் பரக்கும்`` 1
என்றார் சிவஞான சித்தியிலும். இரண்டாம் அடி யிறுதியில் `அவ்விடத்து` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இம்மந்திரம் பின்வருமாறும் ஓதப்படுகின்றது:-
``வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசக் கிணற்றினில் வீழ்கின்ற பாவிகாள்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருக்க நினைவறி யீரே.``
இது கொள்ளப்படுமாயின், இரண்டாம் அடியை முதல் அடியாகக் கொண்டு ஓதிக் கொள்ளுதல் நன்று.
இதனால், `சிவனை எஞ்ஞான்றும் மறவாதிருக்க முயலல் வேண்டும்` என்பது, இறுதிக்கண், நான்குமார்க்கத்திற்கும் பொதுமை யாக வைத்துக் கூறப்பட்டது.
சிற்பி