ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்


பண் :

பாடல் எண் : 1

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.

பொழிப்புரை :

இதன் சொற்பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

இஃது ஒட்டணியாய், ``இருட்டறை`` என்பது ஆணவ பந்தத்தையும் ``மூலையிருந்த`` என்றது, தன் இயல்பு தோன்றாது மறைந்திருந்ததையும், ``கிழவி`` என்றது அநாதியாய அருட் சத்தியை யும், ``குருடு`` என்றது அஞ்ஞானத்தையும்,``கிழவன்`` என்பது ஆன்மாவையும், ``குணம் பல`` என்றது நிலையாமை உணர்வு, துற வுள்ளம் முதலியவற்றையும், ``மருட்டுதல் என்பது மேற்கூறியவாறு உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கு தலையும், ``மணம் புணர்தல்`` என்பது ஆன்ம அறிவிற் பதிதலையும் உணர்த்தி நின்றன. இருட்டறை மூலையிருத்தல் முதலாகக் கூறிய பலவற்றானும் இது சத்திநிபாதத்தின் முதற்படியின் இயல்பாதல் இனிது விளங்கும். ``கிழவி`` என்பதனை, `குமரி` எனவும் பாடம் ஓதுப.
இதனால், சத்திநிபாதம் முதற்கண் நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.

பொழிப்புரை :

`உண்மையில் இன்பப் பொருளாய் உள்ள சிவனை அறிந்து அவனை அடையும் வழியை நாடினால், அங்ஙனம் அறிந்து நாடுவோர்க்கு அவன் தான் ஒருவனே இன்பப் பொருளாய்த் தோன்றித் தேவாமுதம்போலத் தித்தித்து நிற்பான். அவ்வாற்றால் அதற்குமேல் அவனது உண்மை நிலையைத் தெளிந்தவர்கட்கு அவன், தனக்கு நல்ல புல்லும், நீரும், நிழலும் உள்ள இடம் யாது என நோக்கிய பசுவிற்கு அங்ஙனமே உள்ளதாய்க் கிடைத்த புனம்போல நின்று எல்லையில் இன்பத்தை அளிப்பான்.

குறிப்புரை :

``புலன்`` என்பதனை நான்கிடத்தும் `புனல்` எனப் பாடம் ஓதுவாரும் உளர். கோ - பசு. `கோப்புலன்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
இதனால், இச்சத்திநிபாதம் வரப் பெற்றார்க்குச் சிவானந்த வேட்கை விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.

பொழிப்புரை :

`ஆதி` எனப்படும் சத்தி (முற்பக்கத்து நிலவுபோல) ஆணவ இருளை நாள்தோறும் படிமுறையாகப் பல பிறவிகளிலும் நின்று கழித்து, அம்மலம் பரிபாகம் உற்ற காலத்து அருளாகிய தனது இயற்கை தன்னைவிட்டு நீங்கியது போலக் காட்டிய அதனைவிடுத்து அருளேயாதலில் மாறாது நின்று, தனது மறைத்தலினின்றும் நீங்கமாட்டாத தேவர்களை அவரவர்க்கு ஏற்ற நிலையில் வைத்து ஆள்பவனாகிய சிவனோடு நீங்காதுநின்று அழிவில்லாத இன்பத்தை நுகர்தலாகிய நிலையை ஆன்மாவுக்கு அருளுவாள்.

குறிப்புரை :

``ஆதி`` என்பதனை முதலில் வைத்து ``எண்ணில் பிறவி கடத்தி`` என்பதனை அதன்பின்னரும்,. ``அருளும்`` என் பதனை இறுதியிலும் கூட்டி உரைக்க. ``அருள்`` என்பது ``அருளாகிய இயல்பு`` என்றவாறு. `நீங்காவண்ணமாய்` என ஆக்கம் வருவிக்க. மருள் - மயக்கம். இது மலங்களின் காரியம். இக்காரியமும் சிவனது சத்தியின்றி நிகழாது. அதனால், அச்சத்தி இதனை நிகழ்த்து விக்கும் நிலையில் `திரோதானசத்தி` எனப் படுகின்றது. இங்கு, ``ஆதி`` என்றது திரோதான சத்தியையே. ஓரிடத்தினின்றும் நீங்கிப் பிறிதோ ரிடத்துச் செல்லுதலினின்றும் நீக்கி, நசித்தலை உணர்த்தற்கு, ``பொருள் நீங்கா`` என்றார். புலம் - அறிவு. அஃது ஆகுபெயராய் ஆன்மாவைக் குறித்தது. பயில் - பயிலல். நுகர்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
இதனால், சிவனது சத்தி மலபரிபாகம் வருதற்கு முன்பு திரோ தானமாய் நின்று உபகரித்து, பரிபாகம் வந்தபின் அருட்சத்தியாய்ப் பதிந்து உபகரித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.

பொழிப்புரை :

இருள் சூழ்ந்திருந்த அறையில் உள்ள பொருளைக் காணலுறும்பொழுது ஒளிமிக்க விளக்குச் சென்று எரிந்தாற்போல, அறியாமை சூழ்தலால் மயக்கம் பொருந்தி நின்ற உள்ளத்தாமரை யின்கண் சிவன், அருள் மிகுந்து, அப்பனும், அம்மையுமாய் நிற்பான்.

குறிப்புரை :

எனவே, விளக்குச் சென்று எரிந்தபொழுது அந்த அறையில் இருள் நீங்கினாற்போல, இறைவன் அருள் மிகுந்து நின்ற பொழுது உள்ளம் மருள் நீங்கி உண்மையை உணர்தல் பெறப்பட்டது. இது பயன் பற்றிய சுட்டிக்கூறா உவமை. பொருளாவது, இங்கு ஒளி `மயக்கத்து மலர்` எனவும் `நந்தி ஆம்` எனவும் இயையும். ``மலரின் கண்` என உருபுவிரித்து, அதனையும், ``ஆம்`` என்பத னோடு முடிக்க.
இதனால், முதற் சத்திநிபாதத்தின் இயல்பு உவமையில் வைத்து விளக்கப்பட்டது. முதற் சத்திநிபாதத்தில் சத்தி நிவிர்த்தியாய்ப் பதிந்து, நிலை, நிலையாமை உணர்வைத் தோற்றுவித்து, `உலகப் பற்றை நீக்கும்` என்பர் சிவாக்கிர யோகிகள்.
1498. இனி ஐந்து மந்திரங்களால் இரண்டாம் சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 5

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.

பொழிப்புரை :

``இருட்டறை மூலை`` என்னும் மந்திரத்திற் கூறியவாறு, ஆன்மாவைத் தன் வயமாக்கிப் பதிந்த சத்தி, பின்பு, ஆன்மாவின் மயக்க உணர்வை முற்றிலும் போக்கி, வினைகளை வெருண்டோட ஓட்டி, அவ்வினைகளால் உளவாகிய அலமரல் நீங்கியதனால் உண்டாகும் அமைதியை உணர்த்தி, சிவனை உணரமாட்டாதிருந்த அந்நிலையை நீக்கி, அவனது அருட்குணங்கள் பலவற்றை உணரப் பண்ணி, அவனது அருளில் விளங்கி நிற்கும் உணர்வைத் தருவாள்.

குறிப்புரை :

அருட் சத்தி தனது முதற் பதிவில் உலகப் பற்று நீங்கச் செய்தபின், ``ஊசல் கயிறற்றால் தாய் தரையே யாந் துணையான்`` 1 என்றவாறு, தனது இரண்டாம் பதிவில் சிவனது திருவடியை நோக்கிச் செலச் செய்தலை இவ்வாறு விரித்தார் என்க. `இரண்டாம் முறையில் சத்தி பிரதிட்டையாய்ப் பதிந்து, மேற்கூறிய நிவிர்த்தி நிலையை நிலை பெறுத்தும்` என்பர் சிவாக்கிர யோகிகள். ``புணர்ந்து`` என்றது, `புணர்ந்தபின்` என்றவாறு. ``குணம்``, இங்கு சிவனுடையன. புரிதலுக்கு, `சத்தி` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்து இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

பொழிப்புரை :

கன்னியாகுமரிக் கடல் துறையில் மூழ்கி விளை யாடும் மாந்தர் அந்நீர் வடிவாய் நிற்கும் சத்தியின் பதிவில் மூழ்கி விளையாடும் எண்ணத்தினைக் கொள்கின்றாரில்லை. அக்கருத்து அவருக்கு உண்டாகுமாயின், அடுத்து ஒரு பிறவிதானும் உண்டாக மாட்டாது; வீடு பெறுவர்.

குறிப்புரை :

``ஆடிய, ஆடுங் கருத்திலர்`` என்ற குறிப்புக்களால், `கன்னித் துறை` என்பது சொற்பின் வருநிலையாய், இரண்டிடத்தும் வேறு வேறு பொருளைக் குறித்தது.
இதனால், சத்திநிபாதம் வரப்பெற்றார்க்குப் பிறவியறுதல் கூறப்பட்டது. இதுபோல்பவை இவ்வதிகாரத்தின் எப்பகுதியிலும் இயையுடையனவாம்.

பண் :

பாடல் எண் : 7

செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

பொழிப்புரை :

சிவனை யடையும் வேட்கை யுண்டாயினோரே, அவனை, `சிவப்பன்` என்றோ, `கறுப்பன்` என்றோ. `வெளுப்பன்` என்றோ, `பச்சையன்` என்றோ நன்கு உணரவல்லவராவர். ஆதலால், அவனை, `நெருப்புமிழுங் கண்களையுடைய பெரிய கொலை யானையை யாவரும் வியக்கும் வண்ணம் உரித்து அத்தோலைப் போர்த்த வெவ்விய கையை உடையவன்` என்று அறிந்து அவனை அடையும் வேட்கையுடையீராகுங்கள்.

குறிப்புரை :

முதலடியின் ஈற்றில் நின்று, முன் வந்த எல்லாவற் றோடும் இயைந்த ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல் விகற்பத் தின்கண் வந்தது. எய்த உணர்தல், அடைய விரும்புதல். எய்வர் - அறிவார். ``ஐ`` வியப்பு `ஐயெனெப் போர்த்த` என்க. கரி, ஆகுபெயர். `மைவென் றகன்ற பகடுரி போர்த்தவன்` என்பது பாடமாகவும் ஓதுப. யானையை உரித்துப் போத்தமை அவனது எல்லாம் வல்ல தன்மையை வெளிப்படையினாலும், ஐம்புல ஆசையை அறுக்கும் தன்மையைக் குறிப்பினாலும் உணர்த்தி, அவற்றை உணர்தல் அவன் மாட்டு அன்பு நிகழ்தற்கு ஏதுவாதலைக் கொள்ள நின்றது. `சிவனை அடையும் காதல் உடையவரே அவனை அடைதல் கூடும்; ஆதலின், அக்காதல் உண்டாதற்கு ஏதுவாய அறிவைப் பெறுங்கள்` என்றவாறு. `அவ்வறிவும், அதன் வழியான இக்காதலும் சத்திநிபாதத்தால் உண்டாம்` என்பது கருத்து. இரண்டாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், சத்திநிபாதம் சிவஞானத்திற்கும், சிவ பக்திக்கும் ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.

பொழிப்புரை :

`பிறந்து இறந்து உழன்ற காலங்கள் எத்துணையன கழியினும், அவ்வுழலலை நீக்கி நிலைபெறச் செய்யும் தலைவர் சத்தியும், சிவனுமாய அவரன்றிப் பிறர் இலர்` என, அனுபவம் வந்தோர் அறுதியிட்டுரைப்பர். இனித் தன்னை நாள்தோறும் தப்பாது வழிபடுவோர்க்குச் சிவன் கைமேல் பயனைப் பெறுவிக்கின்ற துணைவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

எய்திய காலங்கள் - சென்ற காலங்கள். யாண்டும், உகமும், கற்பமும் என்னும் இப்பகுதிகள் பற்றி, ``காலங்கள்`` எனப் பன்மைப்படுத்து ஓதினார். தனி - ஒப்பின்மை; `தம்மோடொப்பர் பிறரை இவர்` என்றவாறு. நாயகம் - தலைமை; தலைமை யுடையாரை, `தலைமை` என்றே உபசரித்து ஓதினார். முன்னர், `சிவனும்` என்னாது ``தானும்` என்றமையால், பின்னர், ``தன்னை`` என்றது சிவனையே யாயிற்று. கருமம் - பயன். காட்டு - காட்டாய் நிற்கும் பொருள். ``அது`` பகுதிப் பொருள் விகுதி. காட்டாதற்கு. ``தான்`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `சத்திநிபாதம்` என்றே கூறப்படினும், சத்தி தனித்து நில்லாமை உணர்த்துவார். ``தையலும் தானும்`` என முன்னர்க் கூறிப்பின்னர்க் காட்டாதலைச் சிவன்மேல் வைத்தே கூறினார். சிவாக்கிர யோகிகளும் `சத்தி தனது பதிவில் நிவிர்த்தி முதலியவளாய் உள்ள பொழுது, சிவனும் நிவிர்த்தீசன், பிரதிட்டேசன், வித்தியேசன் முதலியவனாய் நிற்பன்` என்பர். ``வணங்கும் அவர்கட்குக் காட்டாம்`` என்றதனால், இச்சத்திநிபாதம் கிரியையின்வழி மலத்தைப் பாகம் அடைவித்துத் தானும் முதிருதல் பெறப்பட்டது.
இதனால், இரண்டாம் சத்திநிபாதம் கிரியையால் ஆன்மாவை உய்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.

பொழிப்புரை :

`சந்திர கலை, சூரியகலை` என்னும் இரு வாயுக்களை முறைப்படி தொடருமாற்றால் அவை ஒரு வழிப்பட்டு முடியும் அவ்விடத்தை அடைந்து, அங்குள்ள ஒளியை நாங்கள் கண்டு பற்றிக்கொண்டோம். அவ்வொளியே முன்னே முன்னே பலர் காண முயன்று காணாது இளைத்த பெரியோன்; எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப்பவன்; (சிவன்) அவன் அவ்விடத்தில் நிலைத்து நின்று தன்னைக் காண்பவர்க்கு அஞ்ஞான இருளைப்போக்குவான்.

குறிப்புரை :

``ஆங்கு`` எனப்பண்டறி சுட்டாற் குறித்து, ஒளிக் காட்சியைக் கூறினமையால் இஃது யோகத்தை உணர்த்தியதாதலின், ``இரண்டு`` என்று இப்பொருட்டாயிற்று. ஆங்கு என்றது, ஆஞ்ஞைத் தானத்தை. மூன்றாம் அடி, `சிவன்` என்பது உணர்த்தி நின்றது. இரண்டாம் சத்திநிபாதம் தனது முதிர்வில் யோகத்தையும் தருதல் கூறியவாறு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்தால் யோகமும் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற களியது வாமே.

பொழிப்புரை :

இனி, நான்கு மந்திரங்களால் மூன்றாவதாகிய சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.
முன் துன்பமாய் நின்ற நிலை மாறி இப்பொழுது இன்பமாய் நிற்கின்ற சத்தி, சிவனால் கட்டிக்கொடுக்கப்பட்ட குடிலாகிய ஓர் உடம்பினுள் நின்று, `ஏழ்` என்னும் வகையுட்டானே மாறி மாறி வருகின்ற பலவாகிய பிறப்புக்களிலும் உளவாகின்ற துன்பங்களை யெல்லாம் உணரச்செய்வாள். பின் அவ்வுணர்ச்சி காரணமாக உயிரின் அகத்தே யுள்ள பல வகையான விருப்பு வெறுப்புக்களும் ஒழிந்துபோக, முதல்வனாகிய சிவனைக் கண்டு களிக்கும் களிப்புமாவாள்.

குறிப்புரை :

அண்ணித்தல் - இனித்தல். `எண்ணுவிக்கும்` என்பது திரிபெய்தி நின்றது. ``ஏழ் ஏழ்`` ஒருசொல் அடுக்கு. அறிவு உடம்பிட மாக நிகழ்தலின், அறிவின்கண் நிற்றலை உடம்பின்கண் நிற்பதாகக் கூறினார். ``நிலவாத புலால் உடம்பே புகுந்து நின்ற - கற்பகமே``1 என்ற அப்பர் திருமொழியையும் காண்க. ``பிறவி`` என்பது, விடாத ஆகுபெயர். ``கண்ணுற்று நின்ற`` என்பது ஒருசொல் நீர்மைத்து. அப் பெயரெச்சம் `ஆறு சென்ற வெயர்` என்பதுபோல, ``களி`` என்னும் காரியப்பெயர் கொண்டது. ``உணர்விக்கும்`` ``கண்ணுற்ற நின்ற களியாகும்`` என்றதனால், தீவிர சத்திநிபாதம் ஞானத்தைத் தருதல் பெறப்பட்டது. சிவாக்கிர யோகிகளும், ``தீவிர சத்திநிபாதம் சிவஞானம் பிரகாசம்`` என்றார். `இதில் சத்தி வித்தையாய்ப் பதியும்` என்பதும் அவர் கூறுவது. இந்த ஞானம் சிவநூல்களைக் கற்றல் கேட்டல்களால் வரும் கருவி ஞானமே (அபர ஞானமே) என்க.
``ஞானநூல் தனைஓதல், ஓது வித்தல்,
நற்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை`` 1
என்பதில், முதலில் உள்ள மூன்றும் இந்த ஞானமேயாதல் அறிக.
``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` 2
என்று அருளிச்செய்ததும் இந்நிலையினரை நோக்கியே என்க.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

பொழிப்புரை :

இமய மலையில் தோன்றி வளர்ந்த மகளும், அபர ஞான பரஞானங்களையே இருதனங்களாகக் கொண்டு உயிர்கட்கு அந்த ஞானமாகிய பாலை ஊட்டி வளர்ப்பவளும் ஆகிய சத்தி, மேற் கூறியவாறு முதல்வனைக் கண்ணுற்று நிற்கும் ஞானத்தால் வழிபடு கின்றவர்கட்குத் தவங்கள் எல்லாவற்றினும் சிறந்த தவமாகிய சிவ புண்ணியத்தை வழங்குவாள்; அதனால் பிறப்பை ஒழிப்பாள்; சிவனை மறக்கும் மறதியாகிய அஞ்ஞானத்தை நீக்குவாள்; யாவரும் அவரை வழிபடும் நிலையில் உயர்த்து வைப்பாள்.

குறிப்புரை :

காரண காரிய முறையால் முன் நிற்கற்பாலதாய பெருந் தவம் நல்கல், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. குறச்சாதியாகக் கூறியது, மலைமகளாதலை நயம்படக் குறித்தவாறு. சிறப்பு, இங்கு ஞானம், ஒடு உருபு, ``வேலொடு நின்றான், கோலொடு நின்றான்`` 1 என்பவற்றிற் போலச் சிறப்பித்தற் பொருளில் வந்தது. நின்றார் - உரியராயினார்.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.

பொழிப்புரை :

எட்டுத் திசைக்கும் தலைவனாகிய சிவனை அவன் துணைவியோடும் அறிவினுள் அறிந்து மறவாதிருங்கள். ஏனெனில், அவ்வாறு இருக்கும் அறிவை உடையவர்கட்கே சத்திநிபாதம் தொடர்ந்து முதிர்வதாகும்.

குறிப்புரை :

தாங்குதல் - சுமத்தல்; இங்கு அறிவினுள் அறிதலைக் குறித்தது. `தலைமகனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. தூங்குதல் - மிகுதல். ``ஒளி நீலம்`` என்பதில் பொதுப்பெயர் முன்னும், சிறப்புப்பெயர் பின்னுமாய் நின்றன. சிவ ஒளி செம்மையும் சத்தி ஒளி நீலமும் ஆதல் அறிக. `தலைமகனைப் புரிகுழ லாளொடும் தாங்குமின்` எனக் கூட்டுக.
இதனால், `சத்தநிபாதக் குறி தோன்றப் பெற்றோர் பின்னர் அந்நிலையை நெகிழாது பற்றி நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.

பொழிப்புரை :

தனு காரணங்களின் வழிவருபவற்றுள் ஒன்றையும் நோக்குதல் இல்லாத சத்திநிபாதன், தன்னை யார் அணுகினாலும் அவர்கட்கு முதிர்ந்த ஞானம் ஒன்றையே உணர்த்துவன். சிவனைப் புறத்தில் மலர் தூவி வழிபடினும் படுவான். தான் அடையும் எவ்விடத் திலும் அங்கு உள்ளார்க்கு உயிர்போலச் சிறந்து விளங்குவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலிற் கொள்க. சத்தி நிபாதர் தம்மை அணுகினவர்க்கு ஞானம் ஒன்றையே உணர்த்துவர், ``அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்துதவார் ஆகலான்`` 1 என்பதில் எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது. ``பணிகினும்`` என்பதை ``பணிவன்`` என்பதற்கு முன்னே கூட்டுக. உம்மை, அஃது ஒருதலை யாகாமை குறித்தது. ``உலகெங்கும்`` என்பதின்பின், `அவ்விடத் தார்க்கு` என்பது எஞ்சி நின்றது.
இதனால், தீவர சத்திநிபாதம் வந்தோரது இயல்பு கூறப் பட்டது.
இனி மூன்று மந்திரங்களால் தீவிரதர சத்திநிபாதம் உணர்த்து கின்றார். இஃது `அதிதீவிரம்` எனவும் சொல்லப்படும்.

பண் :

பாடல் எண் : 14

இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணமல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

பொழிப்புரை :

இருவகை வினைகளும் ஒரு தன்மையவாக ஒத்து நிற்குங் காலத்தில் உண்டாவதே இனிய அருட்சத்தியது பதிவு. `அஃது உண்டானபொழுது சிவன் குருமூர்த்தியாய் வந்து குற்றங்கள் யாவற்றையும் நீக்கி வழங்குவான்` எனப்படுகின்ற அந்த ஞானத்தாலே புருடன் தன் செயல் அற்று அருள் வழியில் நிற்பானாயின், மும்மலங்களும் பற்றற்று ஒழிய, அந்தச் சிவனே தானாவான்.

குறிப்புரை :

சத்திநிபாதமாவது சிறப்புடைய இந்நான்காஞ் சத்தி நிபாதத்தின் இயல்புகளை இங்கே முற்ற எடுத்தோதினார். இரு வினைகளும் நேரொத்தலாவது அவற்றது பயன்களாகிய உலகியல் இன்பம், துன்பம் இரண்டனையும் ஒரு பெற்றியவாகவே உணர்ந்து, அவற்றில் விருப்பு வெறுப்புக்கள் இல்லாதிருக்கும் நிலையாம். இதுவே ஆணவ மலம் பரிபாகமானதற்கு அறிகுறியாகும். ஆகவே, `இருவினை யொப்பும், மலபரிபாகமும் வந்தால், சத்திநிபாதம் வரும்` என்பர். ஞானத்தைப் பரிபாகம் வருமுன் உணர்த்துதல், வந்தபின் உணர்த்தாதிருத்தல் இரண்டுமேகூடா ஆகலின், சத்தி நிபாதம் வரப்பெற்றார்க்குச் சிவன் குருவாய் வந்து ஞானத்தை உணர்த்துதல் ஒருதலையாம். இது பற்றிய செய்திகள் பலவற்றையும் சிவஞானபோத எட்டாம் சூத்திரத்திலும், அதன் உரைகளிலும் விளங்கக் காண்க. சத்தி நிபாதத்தின் வழிச் சிவன் வந்து செய்தலை அச்சத்தியே செய்வதாகக் கூறினார்.
இதனால், சத்திநிபாதத்து இயல்பெல்லாம் இதனுள் வைத்து முற்ற உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி
அரவசெய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி யாளும் பராபரை தானே.

பொழிப்புரை :

உயிர் தனு கரணாதிகளைப் பெறாது ஆணவத் தோடு மட்டுமே கூடிச் சடம்போலக் கிடந்த இராக்காலமாகிய கேவல நிலையும், பின் தனு கரணாதிகளைப் பெற்றுப் பிறப்பு இறப்புக்களில் உழன்ற பகற் காலமாகிய சகல நிலையும் பின் ஒருபோதும் உண்டாகாது ஒழிந்த சுத்தநிலையாகிய முத்திக் காலத்திலே, சத்தி யாகிய திருவருள் ஒன்றையே நோக்கித் தற்போதத்தைச் சிறிதும் எழாத படி அடக்கி அவ்வருளோடே ஒன்றியிருக்க, அவ் அருளாகிய சத்தி யும் இவன்பால் இரக்கம் மிக்கவளாய் இவனைத் தன் அடியவனாக ஏற்றுக்கொள்வாள்.

குறிப்புரை :

`அதன்பின் துன்பம் ஏதும் இல்லை` என்பது குறிப் பெச்சம். கேவல சகலங்களை `இரவு, பகல்` என்றல் மெய்ந்நூல் வழக்கு, ``இரவும்பகலும் இறந்த இடம்`` என்றதனால் `அழிப்புக் கேவலம், படைப்புச்சகலம்` என்பனவும், `உறக்கக் கேவலம், விழிப்புச் சகலம்` என்பனவும், `மறப்புக் கேவலம், நினைப்புச் சகலம்` என்பனவுமாகிய இடைநிலை மாற்றங்களும் எய்தாது ஒழிந்த நிலை என்பது போந்தது. இதனை இவ்வாறே,
``இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே``
என்றும்,
``கங்குல் பகல் அற நின்ற எல்லையுளது எது`` 1
என்றும் பிறவிடங்களிலும் குறித்தல் காண்க. குரவம் செய்கின்ற - குராமலர் அழகைச் செய்கின்ற. அரவம் - ஓசை; பேச்சு; என்றது, தற்போதம் தலையெடுத்தலை. `பரிவொன்றிலாளும்` என்பது பாடமன்று.
இதனால், சத்திநிபாத நிலையது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்
தூனை விளக்கி உடனிருந் தானே.

பொழிப்புரை :

என்னுள் விளங்காது மறைந்து கிடைந்த ஞானத்தை அம்மறைவு நீக்கி விளங்கி எழச்செய்த என் குருநாதன் `மாலை, இரவு, பகல்` ஆகியவற்றில் ஒரோவொரு காலத்தில் விளக்கத்தைத் தருகின்ற `விளக்கு, சந்திரன், சூரியன்,` என்னும் ஒளிகளுக்கும் ஒளியைத் தருகின்ற ஒப்பற்றபேரொளி` அவன் என் உள்ளே புகுந்து உயிரை மட்டுமின்றி உடலையும் ஒளியாய் விளங்கச் செய்து, பின் என்னைவிட்டு அகலாது உடனாயே இருக்கின்றான்.

குறிப்புரை :

விளக்கு விளக்கந்தரும் காலத்தைக்கூறவே, ஏனை இரண்டும் விளக்கந்தரும் காலத்தையும் எடுத்துக்கூறுதல் கருத்தா யிற்று. `விளக்கு முதலிய மூன்றும் காலத்தாலும், இடத்தாலும் வரை யறுக்கப்படும் ஒளிகள்` என்பதை எடுத்தோதி, `அவற்றுக்கும் விளக்கம் தரும் ஒளி` எனவும், `ஒப்பற்றது` எனவும் கூறியவற்றால் அக இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞான ஒளியாய் விளங்குதலும், அது பிறிதொன்றால் ஆகாமையும் குறிக்கப்பட்டன, மாயையும் கன்மமும் ஆன்மா மருள்நிலையில் உள்ளபொழுது மருளாயும், அருள்நிலையை எய்தியபொழுது அருளாயும் நிற்கும் இயல்புடையனவாதல் பற்றி, `ஊனையும் விளக்கினான்` என்றார். மாயையும், கன்மமும் இவ்வியல்பின் ஆதலை,
``மாயைமா யேயம் மாயா வரும் இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின்மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்`` 1
என்னும் `சிவப்பிரகாசத்தால்` அறிக. `தீவிரதர சத்தநிபாதத்தால் அனுபவ ஞானமாகிய நிட்டை கைவந்து, ஆன்மா சிவமாம் தன்மையைப் பெறும்` என்றவாறு. சிவாக்கிர யோகிகளும் இங்கு சத்தி சாந்தியாய்ப்பதிந்து, உபசாந்தத்தைத்தரும் என்றார். இப்பாட்டு இருவிகற்பம் பெற்றது.
இதனால், சத்திநிபாதத்தின் நிறைந்த இயல்பும், பயனும் கூறப்பட்டன.
சிற்பி