ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்


பண் :

பாடல் எண் : 1

சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

மலைபோன்றவர்களாக மதிக்கப்படுகின்ற தேவர் பலருக்குரிய புறச்சமயங்களைத் தமக்கு உரியனவாகக் கொண்டோர் அவற்றின் நூல்களை ஓதி, `அதனால், நிறை நிலையை அறிந்து விட்டோம்` என்று பெருமை பேசிக்கொள்வார்கள். ஆயினும், முதற் கடவுளாகிய சிவபெருமான் அவர்களது உள்ளத்தில் தோன்றாது மறைந்து, பொறையுடைமை, வெகுளாமை முதலிய ஒழுக்கங்களை உடையவரது உள்ளத்திலே விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

சிமயம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. `மலைபோல்வாராக மதிக்கப்படுதல் அறிவு நிரம்பாதாரால்` என்க. `இமையங்கள்` என்பது பாடமன்று. ``சிமையம், சமையம்`` என்ப வற்றில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. அமை, முதனிலைத் தொழிற் பெயர். அமைதல் - நிரம்புதல். கமை - பொறை. இது மற்றைய ஒழுக்கங்கட்கு உபலக்கணம். `புறச்சமய நூல்களையே உண்மை நூல்கள் என மயங்கினாராயினும், அவை பற்றிப் பிற சமயங்களைப் பழித்து நிற்றலை விடுத்து, அவை கூறும் ஒழுக்கத்தை உடைய ராயினார்க்குச் சிவன் அருள்புரிவன்` என்றவாறு. இதனானே சிவ நூலை ஓதினார்க்கும் இது குறிப்பாற் கூறப்பட்டவாறு அறிக.
இதனால், நூல்களை ஓதியவழியும் ஒழுக்கம் இல்வழிப் பயன் இன்றாதல் கூறப்பட்டது. இதனை,
``ஓதலின் நன்றே வேதியர்க் கொழுக்கம்`` 1
``மறப்பினும் ஓத்துக்கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` 2
என உயர்குலத்தார்மேல் வைத்தும்,
``ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை`` 3
`ஓதியுண்ர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்`
எனப் பொதுப்பட வைத்தும் பிறவிடங்களிலும் கூறுமாறு அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 2

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொழிப்புரை :

நன்மை அமைந்த சிவபெருமானது திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கின்ற மனத்தை உடையவர் இப்பூமியில் தமக்குத் தாமே ஒப்பாகும் பெருமையை உடையவராவார். அவ்வாறின்றி அவற்றை எஞ்ஞான்றும் நீங்கி நின்ற வண்ணமாய் ஒருபோதும் நினையாதவர் உலகில் விரும்பியது ஒன்றனையும் பெறாது வாளா இருந்து துன்புறுவார்கள்.

குறிப்புரை :

`தமக்கு நேர் தாமேயாவர்` என்பதனை, ``நேர் ஒப்பர்`` என்றார். இது, செல்வம் முதலிய எல்லாவற்றாலுமாம். ஏங்குதல் - விருப்பம் நிறைவுறாமையால் அதனையே நினைத்துக் குறையுறுதல். இதனை `ஏக்கறுதல்` எனவும் கூறுவர். `இரந்தழுவார்` எனப்பாடம் ஓதி, ``இரத்தலை மேற்கொண்டு அதனானும் நிரம்பப் பெறாது துன்புறுவர்`` என்று உரைப்பினுமாம்.
``வானகம் ஆண்டுமந் தாகினி ஆடினந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும், சிதவல் சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் - கனகவண்ணப்
பானிற நீற்றற் கடியரும், அல்லாப் படிறருமே`` 1
என்றாற்போல்வனவற்றையும் இங்கு நினைக.
இதனால், சிவனடியை நினைதல் நினையாமைகளே ஒழுக்கமும், இழுக்கமுமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

வாழும் வழி யாதும் அறியாது திகைத்திருந்து அழுகின்றவர்களும், முன்னர் வாழ்வுடையராய் இருந்து பின்னர்க் கேடு எய்தினவர்களும் (தாம் முழுத் தீவினையும், அரைத் தீவினையும் உடையராய் இருத்தலை அறிந்து அவை ஒழிதற்பொருட்டு) அந்நிலை யில் அரிய தவம் செய்தலை மேற்கொண்டு சிவபிரானை நினைவரா யின், தேவ தேவனாகிய அவன் அவர்களது தாழ்நிலையை நீக்கி, உயர் நிலையைத் தருவன் - அதுவே யன்றி அவர்கட்குப் பிறப்பற்ற வீடுபேறும் உண்டாகும்.

குறிப்புரை :

`சிவபிரானை நினைத்தலே மேலான தவமாம் என்றற்கு, ``அருந்தவம் மேற்கொண்டு`` என்றார்.
இதனால், சிவ பத்தியாகிய தவ ஒழுக்கம் உடையோர் தீவினையின் நீங்கி நலம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
நீரறி வாளர் நெடுமுகி லாமே.

பொழிப்புரை :

தூர்ந்த அறிவினை உடையோர் தோன்றாத் துணை யாயுள்ள இறைவனை நினைக்கமாட்டாது யாதொரு பயனையும் எய்தார். தூல அறிவினை உடையோர் வருவதை அனுபவித்துக் கொண்டிருப்பர். மயக்க அறிவினை உடையோர் உள்ளதை `இல்லை` என்று சொல்லி மறைத்து, அதனால், பின் வறியராய்ப் பிறப்பர். அறத்தின் தன்மையை அறிந்த அறிவினை உடையோர் பெரிய மேகம் போலப் பலர்க்கும் கைம்மாறு கருதாது உதவி, அதனால், பின் செல்வராய்ப் பிறப்பர்.

குறிப்புரை :

தூரறிவு, படுபயன் என்பன வினைத்தொகை. பாரறிவு, காரறிவு என்பன பண்புத்தொகை. தூர்ந்த அறிவாவது அறிவின்மை; பேதைமை. `துணைவனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தல் பெற்றது. ``நினைப்பிலர்`` என்றது தன் காரியமும் உடன் தோன்ற நின்றது. `நாகரது பலி` என்பது போலும் ஆறாவதன் தொகை எனினுமாம். `காரறிவு, மயக்க அறிவு` என்பதனை, ``களவென்னும் காரறிவாண்மை``1 என்பது பற்றியும் உணர்க. நீர் - நீர்மை. நீர்மையை அறியும் அறிவினை ஆளுதல் உடையார்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆவரே` என்னாது `ஆமே` என்றது ஆரிட அமைதி. ``கரந்து`` என்றதனால், `வறியவராய்ப் பிறப்பர்` என்பது பெறப் பட்டது. படவே, முகில்போல்வார் செல்வராய்ப் பிறத்தல் கூறப்பட்டதாம்.
இதனால், அவரவர் அறிவு நிலைக்கு ஏற்பவே அவரவரது ஒழுக்கம் உண்டாமாறு கூறுமுகத்தால், மெய்யறிவினை யுடையோர் சிவ பத்தி யுடையராய் ஒழுகல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொழிப்புரை :

சிவனது திருவடியாகிய, ஞானத்தொடு பொருந்தி வருவித்துஏறிய ஒப்பற்ற ஓர் தோணி, வினையாகிய சரக்கினை அது நின்ற உடலாகிய மூடையோடு சிவலோகமாகிய பழைய நகரத்தை அடைந்து, இறக்கிவிடுகின்ற அறிகுறிகளை அறிந்தும், தீவினை யுடையோர் அத்திருவடிகளைப் பொருந்தி நிற்க எண்ணுவதில்லை.

குறிப்புரை :

``அறிவுடன் கூடி அழைத்தது`` என்றது `நல்ல தோணியை அறிந்து அழைத்து அதில் ஏறுதல் அறிவுடையோர்கன்றி ஆகாமைபோலச் சிவனடியை வேண்டிப்பெறுதல் ஞானிகட்கு அல்லது ஆகாது` எனக் கூறியதாம். பறி - கூடை, அது சரக்குப் பொதிந்த மூடையைக் குறித்தது. தோணி, பறி, பழம்பதி என்பன சிறப் புருவகங்கள். அறிகுறிகள், அவ் அடியைப்பற்றினோர் மாட்டுக் காணப்படும் ஏமாப்பு, நமனையும் அஞ்சாத அச்சமின்மை 1 முதலியன.
இதனால், அறிவேயன்றி, ஒழுக்கமும் நல்வினையுடையார்க் கன்றி வாயாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொழிப்புரை :

அழிவிலனாகிய இறைவன் தன்னை நினைப்ப வரது நினைவே வடிவாய் விளங்குபவன் என்று வேதாகமங்கள் சொல்லவும் அதனை அறியாது இவ்வுலகத்தில் உள்ள அறிவிலிகள் அவனை நினையாது இகழ்ந்தொழிவார்கள். நீவிர் அங்ஙனம் செய்யாது மனம் பொருந்தி அவனை வணங்குங்கள். வணங்கினால், அப்பொழுதே ஒப்பற்ற ஒருவனாகிய அவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``என்னில்`` என்பது, அதனை உணர்ந்து நினைதலே அவனைத் தலைப்படுதற்குக் காரணமாதலைக் குறித்தது. `மனிதர்` என்னும் விதப்பு, `மனிதத்தன்மை இலர்` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினது.
இதனால், அறிவிலும் ஒழுக்கமே சிறந்த சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.

பொழிப்புரை :

பிரணவத்தின் உள்ளே விளங்குவதாகிய ஒளியை அறிவினுள்ளே வெளிப்படுதலால் உண்டாகின்ற அனுபவத்தை அடையப் பெறார்; இறப்பு என்றாயினும் ஒருநாள் உளதாதலை நினையார்; அதனை நினைந்து, மேலும் பிறந்து இறத்தலை ஒழியும் நெறியைப் பற்றார்; வாளா சமயத்தை மட்டும் பற்றிக்கொண்டு அதன் பயனைப் பெறாதொழிகின்றார்கள் மக்கள்.

குறிப்புரை :

சமயத்தில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை எதிர்மறை முகத்தான் உணர்த்தி, அவற்றையுடை யோரே சமயத்தின் பயனைப் பெறுவர் எனக் கூறியவாறு. `உறுதலான்` என்பதன் திரிபாகிய ``உற்று`` என்பது ``கைகூடார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
இதனால், சமய ஒழுக்கம் இல்லாத சமயிகள் சமயத்தின் பயனை எய்தாமை கூறப்பட்டது.
சிற்பி