ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்


பண் :

பாடல் எண் : 1

பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

பொழிப்புரை :

மெய்யாயபொருளிடத்து அன்பை உண்டாக்கி யாவராலும் துதிக்கப்படுகின்ற திருவடியைப் பற்றிக்கொள்ளக் கொடுத்து, தூயசொல்லாலே ஐயமும், திரிபும் ஆய குற்றம் முழுதும் போக நீக்கி, `சத்து, அசத்து, சதசத்து` என்னும் மூவகைப் பொருளின் இயல்பையும் நன்கு உணர உணர்த்தலால், அப்பயனைச் சிவநெறி ஆசிரியர்பால் பெற்ற மாணாக்கர் அனைவரது உள்ளமும் அவரை, `சிவன்` எனவே தெளிவன ஆகின்றன.

குறிப்புரை :

சுத்தம் - வாய்மை, சோதித்தல் - துடைத்தல். சத்து - நிலையுடையது, அசத்து - நிலையில்லாதது, சதசத்து - மேற்கூறிய அவற்றோடு கூடி அது அதுவாய் நிற்பது. இவை முறையே, `பதி, பசு, பாசம்` என்பனவே யாதலும், இவையொழிய அறிதற்கு வேறுபொருள் இன்மையும் அறிக. `இங்குக் கூறியவற்றைச் செய்வது சிவமன்றி வேறின்மையால், சிவகுருவைச் சிவம் என உணர்தலே மெய்யுணர்வாம்` என்றவாறு. எனவே, `மேற்கூறிய செயலைச் செய்யச் சிவமாம் தன்மை எய்தி நின்ற அருளாளரே சிவகுரு ஆவர்` என்பதும் போந்தது. சிவகுரு - சிவத்தை உணர்த்தும் குரு. சித்தம், மாணாக்க ருடையதாதல் ஆற்றலால் விளங்கிற்று. `சிவ குரு இறையே ஆம்` என மொழி மாற்றியுரைக்க. `சிவகுரு இறையே` என்றது. அவ்வாறு உணரும் உணர்வை.

பண் :

பாடல் எண் : 2

பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.

பொழிப்புரை :

நாட்டவருள் உள்ள ஒருவன்போலத் தோன்றுகின்ற, குற்றமற்ற ஞானாசிரியன், உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய தளை களின் இயல்பைத் தெளிவித்து, அதனானே அவற்றால் உளதாய கட்டினை அறுத்து, உடம்பின் மேல் உள்ள ஆசையாகிய தொடக்கி னின்றும் ஆன்மாவை விடுவித்து, உலகவரது போலியாகிய இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை இவ்விடத்தே பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அந்தப் பரமசிவனே யாவான்.

குறிப்புரை :

மெய்யுணர்வு வந்தவிடத்து நீங்குவன உலக பாசமே யாகலான், ``பாசம்`` என்றது இங்கு அதனையேயாயிற்று. அதன் இயல் பாவது அழிவுடைமையும், உள்ளபொழுதும் திரிபுடைமையு மாம். ``நேர் நேர்`` என்னும் அடுக்கு வலியுறுத்தற் பொருளது. `நேரே கூட்டலால்` என இயையும். `உலகவர் இகழ்ச்சி இகழ்ச்சியன்றாம்` என்பதை,
``சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றி``1
எனவும்,
``நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப``2
எனவும் மணிவாசகரும் அருளிச்செய்தார். இம்மந்திரம் பலவிடத்துப் பாடம் திரிய ஓதப்படுகின்றது.
இவ்இரண்டு மந்திரங்களாலும் சிவகுருவினது பெருமை ஏதுவுடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

பொழிப்புரை :

இறை அன்பும், அதன்வழி ஓதப்படும் பலவகை மந்திரங்களின் சித்திகளும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அந்த யோகத்தால் அடையப்படும் அட்டமா சித்திகளும், வாமை முதல் எட்டாய் விரிந்து நிற்கின்ற திரோதான சத்தி அங்ஙனம் நில்லாது, அருட் சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத் தின்வழி விளங்கிய சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைப்பனவாம்.

குறிப்புரை :

``சித்திகள் எட்டு`` முதலியவற்றைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். திண்மை - நிலைபேறு. இதனால், சிவமாகி விட்ட உயிர் மீளப் பிறிதாகாமை குறிக்கப்பட்டது. சுத்தம் - சுத்தநிலை. `ஒடுக்கமுறையில் இறுதிக்கண் நிற்கும் மனோன்மணியே அருட் சத்தியாய் மாறியருளுவது` என்னும் கருத்தால், ஏனை எட்டையுமே திரோதாயிகளாகக் கூறினார். தூய்மை - பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாதல், அங்ஙனம் ஆகின்ற அதுவே சிவஞானம் ஆதலை அறிக. சாதக போதம் - சாதித்தவனது அறிவு நிலை. குருவை `நாதன்` என்றலை இந்நூற் பாயிரம் முதலியவற்றினும் காண்க.
இதனால், சிவகுருவால் சிவஞானமேயன்றிப் பிறபயன் களும் கைகூடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால்
சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே.

பொழிப்புரை :

உலகங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சுத்த சிவன், தனது அருள் காரணமாக, மலம் நீங்கியோரது சுத்தான்ம சைதன் னியத்தில் தயிரில் நெய்போல இனிது விளங்கிநின்று, பக்குவி களுக்கு உண்மை ஞானத்தை அருளுதலாலும், ஏனைய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் அருள்புரிந்து ஆட்கொண்டு இவ் விடத்தே நலம் செய் தலாலும் சொல்லுதல் நிறைந்த ஞானகுரு அந்தச் சுத்த சிவனேயாவன்.

குறிப்புரை :

சுத்தசிவன் தற்போதம் அற்று அருள்வழியே நிற்கும் அருளாளரது உள்ளத்திலே இனிது விளங்கி நிற்றலை
``அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்``1
என்னும் திருவாசகத்தாலும், `இத்தகையோரே` `சாக்கிரத்தே அதீதத்தைப் புரிபவர்` என்பதையும், `இவரிடத்தே சிவன் அவராய் நின்று உலகிற்குச் செயத் தக்கனவற்றைச் செய்வன்` என்பதையும்,
``துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்``2
என விளக்கி, இதற்கு எடுத்துக் காட்டாக ஆளுடை நால்வரது அருட் செயல்களைக் குறித்தருளிய திருக்களிற்றுப்படி முதலியவற்றாலும் அறிக. மிக்கு - மிக விளங்கி ``நல்கலால், அளித்தலால்`` என்பவற்றில் எண்ணும்மை தொகுத்தலாயின. சொல் - சொல்லுதல்; முதனிலைத் தொழிற் பெயர். ஐயம் திரிபு அற அனைத்தையும் இனிது விளங்கச் சொல்லுதல் என்க.
இதனால், ஞானகுரு எல்லாம் வல்ல சிவனேயாதல் அனுபவத்தின் வைத்து உணர்த்தப்பட்டது. இஃது இனிது விளங்கு தற்கே முன்னை மந்திரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

பொழிப்புரை :

சிவன் தான் நேரே அருளுதல், குருமூர்த்தியிடமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் குருவாய் அருளுமிடத்து அக்குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அவ்வுணர்வினால், அநாதியே பசுத்துவப்படுத்தி நின்ற பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் உளவாகின்ற எல்லா நலங்களையும் அருளுவார்.

குறிப்புரை :

அஞ்ஞானம் அசுத்தமாதலின், சுத்தம் - ஞானம். `சுத்த சைதன்னியம்` எனினும் ஆம். ``குருவும்`` என்பதன் பின், `ஆம்` என்பது வருவிக்க. சிவன் உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தும் வகை `நிராதாரம், சாதாரம்` என இரண்டாம். முன்னையது தான் நேரே அருளுதல். அது விஞ்ஞானகலர் பிரளயாகலர்கட்கு. குருமூர்த்தி யிடமாக நின்று அருளுதலே சாதாரம் அது சகலர்க்கு அவற்றுள் குருவிடமாக நின்று `அருளும் முறை இஃது ஒன்றே அன்று` என்றற்கு ஏனையதையும் குறித்தார். காணுதல் - இங்குச் செய்தல். முத்திக் காலத்தில் உளவாகின்ற நலங்கள், ``நாமார்க்கும் குடியல்லோம்``1 என்பது முதலாகவும், ``எங்கெழில் என் ஞாயிறு`` 2 என்பது போலவும் அருளிச்செய்யப்பட்டன.
இதனால், சிவகுருவினது ஆற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணி வாரே.

பொழிப்புரை :

சுத்த சிவனே குருவாய் எழுந்தருளி வந்து மலங்களைப் போக்கித் தூய்மைப் படுத்தி, அங்ஙனம் தூய்மைப் படுத்தப்பட்ட உயிர் ஐம்புலன்களாகிய வேடர் கூட்டத்தினின்றும் நீங்கி3 அரசனாகிய தன் தந்தையை அடையச் செய்கின்ற அருட் சிறப்பைக் கூறும் ஞானக்கண் இல்லாத பெரும் பேதையர் தமது ஊனக் கண்ணால் மட்டும் கண்டு அக்குருவையும் நம்மில் ஒருவனாக எண்ணுவர். ஆயினும் ஞானக்கண்ணை அடைந்த புண்ணியர் அக்குருவை, `இவன் சிவனே` என்று அறிந்து அவனது பாதங்களை வணங்கி நிற்பர்.

குறிப்புரை :

``அத்தன்`` என்றது முறை உணர்த்தி நிற்றலின், வேறொருவன்போலக் கூறினார். அடையப்படுபவனைக் கூறிய தனாலே, நீக்கப்படுபவர் பெறப்பட்டனர். பொய்த் தகு - பொய்ம்மையாம் இயல்பைக் கொண்ட பொய்த்தகு கண்ணாரை இகழ்ந் தமையால் ``புண்ணியர்`` என்னும் புகழுரை, மெய்த் தகு கண்ணை உடைமை பற்றியதாயிற்று.
``பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வைஎனக் காணா புவி``1
என்றார் திருவருட்பயனிலும்.
இதனால், சிவ குருவின் பெருமை உணரமாட்டாதவரது இழிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பால்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்த மயக்கமும்
அண்ணல் அருளன்றி ஆரறி வாரே.

பொழிப்புரை :

மெய்ப்பொருள் இன்னது என்பதையும், அதனை உணர ஒட்டாது பொய்ப்பொருள்கள் மறைத்து நிற்கும் தன்மையை யும், அப் பொய்ப் பொருள்களினின்றும் நீங்கி, மெய்ப்பொருள் களில் நிலைத்து நிற்கும் முறையையும் அறிவுப் பொருளாம் சிவமாகிய நல்ல மேன்மையை உடைய இறைவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி என்னும் இருநிலையிலும் உடனாய் நின்று செய்து உதவி வருதலையும், பெத்த காலத்தில் புத்தியின் அலைவுகளாகிய அறுபத்து நான்கினையும் குருவருளால் அன்றி யார் அறிந்து கொள்ள இயலும்!.

குறிப்புரை :

புத்தி மயக்கம் அறுபத்து நான்காவன, புத்திகுண பாவகங்களாகிய தன்மம் முதலிய எட்டனுள் அஞ்ஞானத்தின் விரியாகிய அவையாம். அவற்றைச் சிவஞான மாபாடியம் முதலிய விரிவுகளிற் கண்டுகொள்க. பாவகங்களுள் ஏனையவற்றைக் கூறாது அஞ்ஞானம் ஒன்றையே கூறியது. அதன் கொடுமை மிகுதி பற்றி `குருவருளால் அன்றி இவற்றை ஒருவராலும் அறிய இயலாது` என்பதை,
``நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானும்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்``1
எனவும்
``நானார்என் உள்ளம்ஆர் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல்``2
எனவும்,
``ஆகமங்கள் எங்கே! அறுசமயந் தானெங்கே!
யோகங்கள் எங்கே! உணர்வெங்கே! - பாகத்
தருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு``3
எனவும்,
``ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேரறிவான் வாராத பின்`` 3
எனவும் வருவனவற்றாலும், பிறவற்றாலும் அறிக.
இதனால், குருவருளாலன்றி ஒருவராலும் உண்மை உணரலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நலமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சிவஞானி சிவனே ஆதலால்` என மாற்றி அதன்பின் `அவனை` என்பது வருவித்துக் கொள்க. சிவஞானியே சிவகுரு வாவன் என்றற்குச்சிவகுருவை அவ்வாறு கூறினார், நவமான தத்துவம் - புதிய பொருள் அது கருவிகளைக் கடந்த `இன்பம் அதனை யுடைய முத்தி` என்க. நண்ணும் - கிடைக்கும் ``ஆம்`` என்றதும் அது, பவம் - பிறப்பு. ``லோகம்`` என்றது. ஆகாயம் என்றவாறு. ``நன் முத்தி`` என்றது முத்தியின்` பயனையும், ``பரலோகம்`` என்றது அதன் மேன்மையையும் கூறியவாறு.
இதனால், சிவகுருவின் உண்மையை உணர்ந்து அடை வார்க்கு உளதாம் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

``நந்தி கூறினன்`` என்றது தாம் அறிந்தவாற்றைக் கூறியது. என்பது - என்று வேதாகமங்களிற் சொல்லப்படும் பொருள். குறித்தல் - உளங் கொள்ளுதல். ``சிவனுமாய் நிற்கும்`` என்றது, சிவனை வேறு வழிபட வேண்டாமைக் கூறியதாம். ``கோனுமாய் நிற்கும்`` என்றதும் இவனது ஆணையே சிவனது ஆணையாக. அதன் வழி நிற்றலே அறமாதலை உணர்த்திற்று. ஈற்றடி, குரு உருவுடைய னாயினும், உருவிலனாகிய சிவனே எனச் சிவனோடு இவனிடை வேற்றுமை இன்மையை வலியுறுத்தவாறு.
இதனால், சிவகுருவை அணுகி நிற்கும் முறை பலவும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்த மியாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.

பொழிப்புரை :

உயிரின் அறிவு அறிவன அனைத்தும் சிவன் தனது அருளால் அறிவிப்பனவேயாகும். அந்நிலையில் உயிரின் அறிவு அறிவன யாவையும் உறுதியான சிவனேயாய் முடிந்துவிட்டால், சிவனும் அவ்வறிவில் பிறவற்றைத் தோற்றுவியாது தன்னைமட்டுமே தோற்றுவித்து நிற்பான்.

குறிப்புரை :

``சித்தம்`` என்றது அறிவை. `சித்தம் சிந்தித் திருந்திடும் யாவையும் அத்தன் அருளால் உணர்த்துபவதாகும்` என மாற்றுக. முதலடியை மாற்றாது ஆற்றொழுக்காகவே உரைப்பின், அது சித்தத்தின் இயல்பு கூறியதாக்கி அதன் இறுதியில் `அவை` என்பது வருவித்துக்கொள்க. `உணர்த்துவது` என்னும் ஒருமை அத்தொழில் மேல் நின்றது. `உயிரின் அறிவு பக்குவம் எய்தாத பொழுது சிவன் அதன்கண் வினைக்கீடானவற்றை உணர்த்துவன். பக்குவம் எய்திய வழி அவற்றை ஒழித்துத் தன்னையே உணர்த்தி நிற்பான்` என்பது இதன் திரண்டபொருள். `ஞானாசிரியர் சிவன் தன்னையே உணர்த்தி நின்ற அறிவையுடையராதலின், அவர் அச்சிவனேயாவார்` என்பது இதனால், உணர்த்தப்படும் பொருள். எனவே, ``குருவே சிவம்`` என்பது முதலியன அமையுமாறு காட்டியதாயிற்று.
இதனால், சிவகுரு சிவமேயாதல் அதன் உண்மையுணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி என்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி அங்கித் தனிச்சுட ராகுமே.

பொழிப்புரை :

`ஞானத்தைப் பெற்றவன் சிவனது இயல்பைத் தனது அறிவில் காணும்படி வைத்த ஆசிரியன் அந்தச் சிவனே என்க` என்னும் சிவனது திருவுள்ளத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறிய வல்ல ஒருவனுக்கு அச்சிவன் மாலைக் காலத்தில் ஏற்றப்பட்ட புறவிளக்குப் போன்று ஒப்பற்ற அக விளக்காய் நிற்பன்.

குறிப்புரை :

`நந்தியது சீர்மையை உள்ளே சந்தித்த சீர்` என்க. இச் சீரினைப் பெற்றவன் ஞானியாகையால் ``தான்`` என்றது அவனையே யாயிற்று. `கோன் நந்தி என்னும் குறிப்பு` என்க. மகிழ்தற்கு `அக் கோனை` என்னும் செய்யப்படுபொருள் வருவிக்க. ``அந்தி அங்கி`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது.
இதனால், சிவகுருவைச் `சிவன்` என உணர்தலே சிவனது திருவுளத்திற்கு உவப்பாவது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.

பொழிப்புரை :

ஞானமாகிய பேறும், முத்திப்பயனும், மெய்ம் மையை மறவாத அருள்நிலையும், மயக்கம் நீங்குதற்கு ஏதுவாகிய உண்மைப் பொருளையுடைய வேதத்தின் விளக்கமும் சிவனே குருவாய் வாராவிடில் ஒருவற்கும் அறிய இயலாது.

குறிப்புரை :

``சீர்மை`` என்றது மெய்மையை. `மருளாதருளும்` என்பது பாடமாயின் மருளாத என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது என்க. ``பொருளாய வேதாந்தம்`` எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார். `வாராவிடில்` என்பது முதல் குறுகி நின்றது.
இதனால், சிவன் உருவாய் வரவேண்டுதலின் இன்றியமை யாமை கூறப்பட்டது. ``உண்மையும் பொய்ம்மை`` என்னும் மந்திரம் (1560) குருவருளின் இன்றியமையாமை கூறியது.

பண் :

பாடல் எண் : 13

பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள்தரின் தான்எளி தாமே.

பொழிப்புரை :

சிவபுண்ணியமும், அதன் பயனாகிய மல பரிபாக இருவினை ஒப்புக்களும் ஆகிய இவற்றால் பரமுத்திக்கு ஏதுவாகிய சிவோகம் பாவனையைத் தலைப்படும் நிலையே உண்டாதலாலும், அந்தப் பாவனையாலே அஞ்ஞானம் வாசனையும் இன்றிப்போக, முத்திக்கு நேரே வாயிலாகிய சிவஞானம் தோன்றி நிற்றலாலும் அத் தோற்றம் சிவனது அருள் அவ்விடத்து முன்னின்று அருளியவழியே உண்டாவதாம்.

குறிப்புரை :

``பத்தி`` என்பது அதனாற் செய்யப்படும் சரியை, கிரியா யோகங்களைக் குறித்தது. ``ஞான வைராக்கியம்`` என ஒருங்கு தொகுத்து ஓதினமையால், அவ்விடத்து ``ஞானம்`` என்றது, ஞானத்தை யுணரும் பக்குவத்தையாம். இருவினை ஒப்பினையே ``வைராக்கியம்`` என்றார். ``சிவோகம்`` என்றதும் அதற்குரிய தகுதியையே. `பத்தியாலும், வைராக்கியத்தாலும்` என அவ்விடங் களில் மூன்றாவது விரிக்க. அவ்வாறன்றி எழுவாயாகவே வைத்து `சேர்த்தலால்` எனப்பாடம் ஓதுதலுமாம் ``சேர்தலால்`` என்பது, ``முளைத்தலால்`` என்பதனோடே முடிந்தது. ``முத்தியின் ஞானம்`` என்புழித் தொக்கு நின்ற ஆறாவது` `வனைகலத்து திகிரி` என்றாற் போலக் கருவிக் காரகத்தின்கண் வந்தது. அதனால், அது முத்திக்கு நேரே வாயிலாய் ஒருதலையாகத் தருதல் பெறப்பட்டது. ``அருள் தரின்`` என்பதில் தருதல் துணைவினையாய் நின்றது. `முன் இரண்டு அடிகளால் சரியை முதலிய மூன்றையும் `ஏனைக் குருமார்கள் வழி யாகவும் பெறுதல் கூடும்` என்பதும் பின்னிரண்டடிகளால் `ஞானம் ஞான குரு வழியாலன்றி ஏனையோர் வழியால் பெறுதல் இயலாது` என்பதும் கூறியவாறு. சத்தி அருள்செய்தல், இங்குக் குருவாய் நின்று அருளுதல் என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.
இதனால், ஞானகுரு ஏனைக் குருமார்களினும் மேம்பட்ட வராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.

பொழிப்புரை :

இவ்வுடம்பு நீங்கிய பின்பு அடையுமாறு வைத்துள்ள இன்பத் தோற்றத்தை அதற்கு முன்பே அடையும்படிச் செய்த ஞானகுரு எங்கள் சிவபெருமானே. அவன் தன்னை நிலை பேறாக அடைதற்கு வைத்த மனம் அங்ஙனம் அடையும் காலத்துத் தானே குருவாய் வெளிவந்து அருள் செய்வான்.

குறிப்புரை :

``பிறப்பு`` என்றது தோற்றத்தை. ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டி, `முதல்வன் எம் இறையே` என மாற்றி யுரைக்க. மனம் தன் எய்தும் காலம், பக்குவ காலம். `அம்மன்னை` எனச் சுட்டு வருவித்தும், தொகுக்கப்பட்ட இரண்டாவதை விரித்தும் உரைக்க.
இதனால், இறைவன் குருவாய் வந்தருளும் காலம் இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

 சிவமான ஞானந் தெளியஒண் சித்தி
சிவமான ஞானந் தெளியஒண் முத்தி
சிவமான ஞானம் சிவபர தேகம்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

பொழிப்புரை :

சிவஞானத்தைத் தெளிய உணர்தலாலே (மூன்றாம் தந்திரத்திற் சொல்லப்பட்ட) பரசித்திகளும், பின் பரமுத்தியும் உளவாகும். அவை முறையே அருளேதனுவாய் நிற்றலும், ஆனந்தத்து அழுந்தலுமாம்.

குறிப்புரை :

சிவஞானம் சிவகுருவால் அன்றி எய்தாமை மேற் பல்லாற்றானும் கூறிவந்தமையால், அந்தச் சிவஞானத்தால் விளைவன இவை என்பதனை இதன்கண் கூறினார். `சிவபரதேகம், சிவானந்தம் இரண்டும் நல்கும்` எனச் செவ்வெண் தொகை வருவிக்க.
இதனால், குருவருளின் நேர் பயனும், அதன் வழிநிலைப் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அறிந்துணர்ந தேன்இவ் வகலிடம் முற்றும்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

16 தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

குருவின் அருளால் நான் இப்பெரிய பூமி முழுவதன் இயல்பையும் முன்னர்ப் பொதுவாகவும், பின்னர் உண்மை யாகவும் உணர்ந்தேன். அவ்வாறே அவரது அருளையடைந்து சிவனது இயல்பையும் முன்னர்க் கேள்வியளவில் உணர்ந்து, பின்பு நூல்களை ஓதி உணர்ந்து, அவனது திருவருள் கிடைக்கப்பெற்றேன். அதனால், அறிவையிழந்துள்ள உலகவரது வாழ்க்கையில் பற்றுச் சிறிதும் இல்லாதவனானேன். அதனால், இவ்வுடம்பில் இருந்தும் அதனில் நீங்கி நிற்கும் நிலையை உடையவனாயினேன்.

குறிப்புரை :

முதல் அடியால் தத்துவ சுத்தியும், இரண்டாம் அடியால் கேட்டல் சிந்தித்தல்களும், ஏனைய அடிகளால் முறையே தெளிதலும், நிட்டை கூடலும் கூறியவாறு. `குருவருளால்` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனானே, ``செறிந்து`` என்பது, அவரது அருளையடைத லாயிற்று.
இதனால், சிவகுருவால் அடையும் பயன்கள் பலவும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டன.
[பதிப்புக்களில் இதன்பின் ``தரிக்கின்ற பல்லுயிர்`` என வரும் மந்திரம் அடுத்த தந்திரத்தில் வருவதாகும்].
சிற்பி