ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு


பண் :

பாடல் எண் : 1

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.

பொழிப்புரை :

வினையின்வழி மனம் சென்றவாறே செல்லுதலால், உலகவர்மேற் செல்கின்ற அன்பின்வழியே மனம் நெகிழ்ந்து செல்லுகின்ற கீழோரைப் பாசத்தினின்றும் விடுபடச் செய்தற்கு ஞானகுரு வந்து அவர்களது தலையின்மேல் தனது கையை வைத்த வுடன் அவர்களது உள்ளமாகிய பொய்கையில் அவனது திருவடிகளா கிய தாமரை மலர்கள் மலர்ந்து பொருந்தி மலர்வனவாம்.

குறிப்புரை :

`ஈசரை` என்பது பாடம் ஆகாமைக்குப் பன்மை யாயதே சான்றாகும். `பாசத்தின்` என்பதும் பாடமன்று. ``ஏக`` என் பதன்பின், `செய்ய` என ஒருசொல் வருவிக்க. சிவத்தல் - தழல் போலும் ஒளியையுடையனாதல். சென்னியில் கையை வைத்தலே `பரிச தீக்கை` எனப்படுவது. அதன் இயல்பைக் கிரியை நூல்களிற் காண்க. ``உவந்த`` என்னும் அஃறிணைப் பன்மை முற்றினை இறுதி யிற் கூட்டியுரைக்க. உவத்தல் மகிழ்தல். இங்கே மலர்தலின் மேற்று. இது குறிப்புருவகம். மாணவன் ஆசிரியனது திருவடியைப் பற்றாகப் பற்றி இன்புறுதல் மெய்ஞ்ஞானத்தின் விளைவாதலும், மெய்ஞ்ஞானம் தீக்கையான் உளவாதலும் கூறியவாறு.
இதனால், சிவகுரு சிவஞானத்தையும், அதுவழியாகச் சிவானந்தத்தையும் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாடந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

பொழிப்புரை :

தனது சத்தியை உலகுக்கு உதவ வைத்தபொழுதே, அவ்வுதவியைப்பெறும் உயிரை அந்நிலையில் வைத்த எங்கள் சிவ பிரான், பின்பு இப்பூமியில் குருவாகி வந்து பலருக்கு அருள் புரிந்தது, அஞ்ஞானமாகிய மரத்தை வெட்டி வீழ்த்தும் வாள்போல்வதாகிய ஞானத்தின் உறுதிப்பாட்டைத் தந்து, `வீட்டுலகத்தை எல்லையில் காலம் ஆள்க` என அளித்தற் பொருட்டு, மும்மலக் கட்டினின்றும் வெளிப்படுத்தி அருள் தோற்றமாகிய தனது திருவடிகளை அவரது இனிய தலையிற் சூட்டியேயாம்.

குறிப்புரை :

சத்தியை, `தாள்` எனவும், உயிரை, `தலை` எனவும் உருவகித்துக் கூறுதல் மரபு. `சத்தி, திரோதான சத்தி` என்பதும், `உயிர்கள், சகல நிலையில் உள்ள உயிர்கள்` என்பதும், ``தந்த`` என்ப தனால் பெறப்பட்டன. ``வாள் தந்த`` என்பதில், ``தந்த`` என உவம உருபு. ``தந்திட்டு`` என்னும் செய்தென் எச்சம், எதிர்காலத்ததாய் நின்ற ``என`` என்னும் செயவெனச்சத்தோடு முடிந்து, எதிர்காலத்தில் இறந்த காலமாய் நின்றது, என்னை?
``செய்தெ னெச்சத் திறந்த கால ம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்``1
என்பது கட்டளை யாகலின். விடுதல் - கட்டறுத்து இனிதியங்கச் செய்தல். பாடு - தோற்றம். அஃது அதற்கு இடமாகிய திருவடியைக் குறித்தது. ``தந்தது`` எனத் தொழிற்பெயர் எழுவாய் நின்றமையின், ``வைத்து`` என்னும் வினையெச்சம் பயனிலையாதல் பொருந்திற்று. `எம் இறை பார் வந்து தந்தது, விட்டு, வைத்து` என வினை முடிபு கொள்க. அவ்விடத்து, `தந்திட்டு ஆள்கெனற்கு` என்னும் தொடர் பயனிலையைச் சிறப்பித்து நின்றது.
இதனால், சிவகுருவினது திருவடியே பிறவிக்கு ஏதுவாகிய பாசத்தை அறுத்து, வீட்டிற்கு ஏதுவாகிய ஞானத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

பொழிப்புரை :

ஆன்மா சிவனாகி, அச்சிவனது உண்மை இயல்பில் தனது உண்மை இயல்பு பொருந்துதலால் இன்புற்று, முன்னே செயற்கையாய் வந்து பற்றிய `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்` என்னும் நான்கின் இயல்புகளையும் நீக்கிநின்ற சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்ட சிவன், ஆங்ஙனம் ஆட்கொள்வதற்கு முன் தான் குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்டவனது உள்ளத்திலே நிலைபெறச் செய்தது உண்மை.

குறிப்புரை :

எனவே, ``திருவடியை அங்ஙனம் சூட்டித் தாபியாத வழி, முன்னர்க் கூறிய பயன்களை ஆன்மா எய்த மாட்டாது` என்பது போந்தது. ஆக்கம் கூறினமையால், செயற்கையாதல் அறியப்பட்டது. ஐம்மலங்களில் உண்மையில் மலங்களாவன திரோதாயி ஒழிந்தவை யேயாகலின், அவற்றையே கூறினார். `மலங்களது சொரூபமே அகற்றப்பட்டது` என்றதனால், அவைபற்றறக் கழிந்தமை தெளிவா யிற்று. ``ஏனைய முத்திரை`` என வேறு வைத்துக் கூறினமையின், அது தலையாய சின்முத்திரையையே குறித்தது. ``முத்திரை`` என்பது காரிய ஆகுபெயராய் அதனால் உணர்த்தப்படும் நிலையை உணர்த்திற்று. சின்முத்திரையின் இயல்பும், அஃது இங்குக் குறிக்கப் பட்ட நிலையை உணர்த்துமாறும் அறிந்துகொள்க. உயிர்வரக் குற்றியலுகர ஈறு உகரம்பெறுதல் செய்யுள்முடிபு.
இதனால், குருவின் திருவடியைப் பெறுதல் ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

பொழிப்புரை :

`இஃது இவ்வாறிருந்தது` எனச் சொல்லும் சொல்லும், `இவ்வாறிருக்கின்றது` என உணரும் உணர்வும் அற்றமை யால் உயிர் தன் பசுத்துவம் முற்றும் நீங்கி, அலையில்லாத நிலைநீர் போல அசைவற நிற்கும் சிவமாம் தன்மையை எம் குருநாதன் எமக்கு முற்றத்தந்து, நாத காரியமாகிய நால்வகை வாக்குக்களையும் கடந்த இயற்கை நிலையில் எம்மை இருக்கச் செய்தான்; அதனால் யாம் பேச்சற்று நிற்கின்றோம்.

குறிப்புரை :

`இஃது அவனது திருவடியை யாம் பெற்ற பேற்றின் பயன்` என்பது குறிப்பெச்சம். உரை அறுதல் முதலிய மூன்றும் ஒன்றற்கு ஒன்று காரண நிலையாம் முறையில் வைத்துக் கூறப்பட்டன. படவே மலவாசனை படிமுறையான் நீங்கினமை பெறப்பட்டது. பரம் - முதன்மை. உயிரது முதன்மை `யான்` என முனைந்து நிற்றல். `நீரின்கண் எழுகின்ற அலை காற்றின் செய்கை யாதல்போல, உயிரினது தன் முனைப்பு ஆணவமலத்தின் செய்கையாய் உயிர்க்கு அல்லலை விளைவிக்கும்` என்பது, ``திரையற்ற நீர் போல்`` என்னும் உவமையாற் பெறப்படும் குறிப்புப் பொருள். உவமை, இல்பொருள் உவமை. தீர்த்தல் - முடித்தல், முற்றச்செய்தல், சத்தாதி - சத்தத்தை ஆதியாக உடையன. நாதத்தை, ``சத்தம்`` என்றார். நாதமே சூக்குமை வாக்காயினும் அதுவும் கடக்கப் பட்டமைதோன்ற ``நான்கும்`` என்றார். ``கரையற்ற`` என்றது, `கடத்தற்கு அரிய` என்றவாறு.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``1
என இவ்வாக்குகள் கடத்தற்கு அரிய பரம பந்தமாதல் கூறப்பட்டமை காண்க. உரை உணர்வு, ஆறுதலை,
``உரையுணர் வுணர்ந்துநின் றுணர்வதோர் உணர்வே``2
``உணர்ந்தார்க் குணர்வரியோன்``3
எனவும்,
``இங்ங னிருந்தென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ங னிருந்தென் றுந்தீ பற;
அறியும் அறிவதன் றுந்தீ பற``4
எனவும், மற்றும் இவ்வாறும் போதவற்றால் அறிக.
சொரூபம் - இயற்கைநிலை, இந்நிலை ஆணவ மலமாகிய செயற்கையால் மாறுவதாயிற்று என்க.
இதனால், திருவடிப்பேறு பரமுத்தியாகிய முடிந்த பயனைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற்
றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.

பொழிப்புரை :

சிவகுரவன் உயிர்களுக்கு உள்ள மூன்று இயல்பு களையும் தான் கைக்கொண்டு, அவன் காட்டிய சின்முத்திரையையே அறியத் தகும் அரிய பொருளாக யான் கொண்டு, `நந்தி` என்னும் பெயருடைய பெரிய பெருமானாகிய சிவனது திருவடிக்கண் உள்ளம் உருகும்படி என்னை அப்போழுதே உய்யக்கொண்டருளினான்.

குறிப்புரை :

`என் உள்ளம் பெரிய பிரானடிக்கண் உருகிடத் தனது திருவடி சூட்டலால் செய்து உய்யக்கொண்டான்` என்றவாறு. உயிரின் மூன்றியல்பாவன, `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் நிலைகளில் காணும் இயல்புகள் முதலிய மூன்றும் முறையே இருள்நிலை, மருள் நிலை, அருள்நிலை என்க. எனவே, சுத்தம் என்றது அதன்கண் துரி யம் ஈறாயவற்றையே யாயிற்று. `முத்திரை பொருளாகக் கொண்டு` என மாற்றிக்கொள்க. ``பேர்`` என்பது அதனை உடையவனைக் குறித்தது. வாளா `நந்தி` என ஓதல் பாடம் அன்று. ``அங்கு`` என்றது, திருவடி சூட்டிய அப்பொழுது என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய பயன் நிகழும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற அறிவுருவனாகிய சிவகுரவன் மல பரிபாகம் வாய்க்கப் பெற்ற என்னைத் தன் திருவடியைச் சூட்டி, மலம் காரணமாக எனக்கு நியதியாக வந்து பொருந்திய `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இனி நிகழாவாறு தான் கைக் கொண்டு சிவமாகச் செய்து, பேச்சற்றதும், எல்லையில்லாததுமாகிய இன்பத்திலே என்னையே யான் அறியாதபடி மூழ்குவித்து, அதனால் எனக்கு வருகின்ற புகழையும் யான் எண்ணாதபடி என்னோடு உடன் இருந்து அருளுகின்றான்.

குறிப்புரை :

`சோதி, என்னை, தந்து, கொண்டு, ஆக்கி, ஆனந்தத் திலே மாள்வித்து, புகழ்மாள மன்னும்` என வைக்கற்பாலன, செய்யுள் நோக்கி முறைபிறழ வைக்கப்பட்டன. `மாசு காசு` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. ``மாசு அற்ற`` என்பதில் அறுதல், அறும் நிலையைப் பெற்றமையைக் குறித்தது. `துணிவு பற்றி எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று` என்றலுமாம். மாள்வித்தல் - வெளிப்படா திருக்கச் செய்தல். ``மாள`` என்றதும் எண்ணப்படாமை பற்றியாம்.
``எனைநான் என்ப தறியேன் பக லிரவாவது மறியேன்
மனவாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கி``1
என ஓதுதல் காண்க. ``தாள்தந்து`` என எடுத்தோதினமையால். `இவை தாள் தந்தமையான் விளைந்தன` என்றவாறாம், ``இன்பம், ஆனந்தம்`` என்பன அடையொடு வந்து ஒருபொருட் பல பெயர் ஆயின.
இதனால், தான் திருவடி சூட்டப் பெற்றவர்க்குச் சிவகுரு பின்னும் நீங்காது உடன் இருந்து பயன்விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

பொழிப்புரை :

சிவன் குருவாகி வந்து, தனது திருவடிகளை எனது இதயத்திலும், கண்ணிலும், மனத்திலும் நீங்காது பொருந்தியிருக்கச் செய்து, அதனானே ஞானத்தை உணர்த்திய வகையும், அந்த ஞானத் தினால் மெய்ப்பொருளைத் தலைப்படுவித்த வகையையும், பின் அம் மெய்ப்பொருளை நீங்காதிருத்தற்குரிய முறைகளை உணர்த்திய வகையும் யான் சொல்லும் தரத்தன அல்ல.

குறிப்புரை :

``பதி வித்த பாத நந்தி`` என உடம்போடு புணர்த்தமை பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது முதலடியோடு,
``மனத்தான் கண்ணி னகத்தான் மறு மாற்றத்திடையானே``1
``சிந்தையி னுள்ளுமென் சென்னியி னும்சேர
வந்தவர் வாழ்கஎன் றுந்தீ பற``2
என்பன முதலியவற்றை வைத்துக் காண்க. ``கதி என்பது ஞானத்தை உணர்தல் வடமொழி மதம்``3 என்பர் சிவஞான யோகிகள். `ஒண்ணாது` என்பது பன்மை யொருமை மயக்கம். `ஒண்ணாவே` எனப் பாடம் ஓதினுமாம்.
இதனால், திருவடி சூட்டி அருள் செய்யும் முறைமையது பெருமை அளவிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

எனது சென்னிமேல் தனது திருவடிகளைச்சூட்டி, அருளே எனக்கு வடிவாம்படிப்பார்த்து, அதனால், பின்பு பரம் பொருளை யான் பெறும்படி தந்தவரும், குருவடிவில் பலராலும் காணப் பட்ட ஞானத்தலைவரும், எங்கள் தலைவரும் ஆகிய நந்தி பெருமானை நான் எனது பிறவியின் வேர் அற்றொழியுமாறு அடைந்தேன்.

குறிப்புரை :

`அருள் ஆக நோக்கி` என ஆக்கம் வருவிக்க. ``பெரு வடிவு`` என்பதில் வடிவு - பொருள்;
``அந்தப் - பெருவடிவை யாரறிவார் பேசு``4
என்றதும் காண்க. ``பேர் நந்தி`` என்னும் இரு பெயரொட்டு அதனை உடையானைக் குறித்தது. ``கண்ட`` என்றது ``காணப்பட்ட`` என்றவாறு. ``எம்`` என்றது, ``நந்திகள் நால்வர்`` முதலியோரை உளப்படுத்து. ``அற்றிட`` என்பது காரியப் பொருளில் வந்தது கண்டுகொள்ளுதல், உணர்ந்துகொள்ளல் அஃது அடைக்கலமாக அடைதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. நான்காம் அடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், தம் ஆசிரியர் தமக்குத் திருவடி சூட்டி அருள் செய்த முறையும், அதனால் விளைந்த பயனும் கூறுமுகத்தால் தம் அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

``திருவடி ஞானம்`` நான்கையும் இரட்டுற மொழிந் து, `திருவடியால் விளைந்த ஞானம், திருவடியால் விளங்கிய ஞானம்` என உரைத்துக் கொள்க. முதற் பொருளில் திருவடியும், இரண்டாவது பொருளில் திருவடி திருவருளும் ஆம். மூன்றாம் அடியில், `மீட்கும்` என்பது பாடமாயின், `மலமாகிய சிறையினின்றும் மீட்கும்` என உரைக்க. இப்பொருட்டு, `மலச் சிறை` என்பது பின் முன்னாய் நின்றது என்க. திண் சித்தி - அழியாப் பேறு. முத்தி தருவதனை ``முத்தி`` எனப் பாற்பகுத்து ஓதினார்.
இதனால், திருவடி ஞானத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

பொழிப்புரை :

எம் குரவர் எம் தலைமேல் தம் திருவடியைச் சூட்டிய அந்த முறைமையைச் செய்யாவிடில் அவர் அருள்செய்த பின்பும் வினைகள் தோன்றி, முன்பு மயங்கியிருந்த உள்ளத்தை மீளவும் அப்பழக்கம் பற்றி மயக்கம் உறச்செய்யும். அதனால், பிறை முடித்த, பேரொளி வடிவினனாகிய சிவபெருமான், குருவாகி வந்து தனது திருவடியைச் சென்னி மேல் வைத்துததுபோலச் சிந்தையிலும் நீங்காது தங்குவித்தான்.

குறிப்புரை :

`சஞ்சிதம் தீக்கையாலும், பிராரத்தம் நுகர்ச்சியாலும் கெட, ஆகாமியம் ஞானத்தாலே கெட வேண்டுதலின், இவ்வாறு செய்தான்` என அருளிச்செய்தவாறு.

``என்ற வினைஉடலோ டேகும்; இடை ஏறுவினை தோன்றில் அருளே சுடும்`` 1
என்றது காண்க. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், திருவடி சூட்டல் தரிப்பித்தல்களின் இன்றியமை யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கழலார் கமலத் திருவடி யென்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.

பொழிப்புரை :

வெற்றியை யுடையனவும், தாமரை மலர்போல் வனவும் ஆகிய குருவின் திருவடி என்னும் நிழலை யான் அடையப் பெற்றேன். அதனால், நெடியோனாகிய மாயோனாலும் அறியப்படா தவனும், ஓங்கி வளர்கின்ற வேள்வித் தீயில் விளங்குபவனுமாகிய சிவபிரான், எனது உயிர்க் கூடாகிய உடம்பின் தன்மையையும் மாற்றி, எனது இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்குகின்றான்.

குறிப்புரை :

அஞ்ஞானத்தைப் போக்கும் வெற்றியைக் குறிக்க, ``கழல் ஆர்`` என்றும், ``அனைத்தெலும்புள் நெக ஆனந்தத் தேன் சொரிதலைக்3 குறிக்க, ``கமலம்`` என்றும், பிறவி வெப்பம் நீங்க அடையும் இடமாதல் தோன்ற ``நிழல்`` என்றும் கூறினார். `அறியாப் பிரான், அங்கியுட் பிரான்` எனத் தனித்தனி முடிக்க. அழல், `அழலுதல்` என முதனிலைத் தொழிற்பெயர். `அழலுதல்` என்பது முறைப்படி வளர்க்கப்பட்டு வளர்தலைக் குறித்தது. ``குழல்`` என்பது `நாளம்` என்னும் பொருட்டாய், அதன்மேல் உள்ள மலரைக்குறித்தது. `சேரும்` என்பது முற்று உடம்பின் தன்மையாவது மாயையின் காரியமாய் மயக்குதல்.
இதனால், திருவடிப் பேற்றால் சீவன் முத்தநிலை வருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

பொழிப்புரை :

ஆராயுமிடத்து, சிவனது திருவடியில் அறிவால் நிலைத்திருப்பவர் இந்நிலவுலகத்தில் மூவுலகையும் ஆளும் மன் னராய் இருந்து யாவர்க்கும் பெருந்தலைவராய் உள்ள மூம்மூர்த்திகள் தாமும் சிவனது ஏவலைச் செய்யும் சிற்றரசராய் நின்றே குற்றம் அற்று விளங்குகின்றனர். அதனால், சிவனடியைச் சேர்ந்தவர் அடையும் இன்பத்திற்கு அளவில்லை.

குறிப்புரை :

``அடிமன்னர்`` என்பதை முதலிலும் ``இன்பத்து அள வில்லை`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. ``அடிமன்னர்`` என்பதில் ``மன்னர்`` என்பது, `மன்னுதல் உடையவர்` எனப் பொருள் தந்து. மூன்றாம் அடியில் உள்ள ``முடிமன்னர்`` என்பது வினைத் தொகையாய், `மிகமேலே உள்ள தலைவர்` என்னும் பொருட் டாயிற்று. `தேவர்கள்` என்பது பாடம் அன்று. ``குற்றம்`` என்பது அதனால் விளையும் துன்பத்தின் மேல் நின்றது. இறுதியில் ஆதலால், என்பது எஞ்சிநின்றது. `இன்பத்துக்கு` என்பதில் குகரம் தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 13

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.

பொழிப்புரை :

என்னை, மயக்குவனவாயும் கொடியனவாயும் உள்ள ஐம்பொறி களின் வழிப்போகாமல், என் மனத்துள்ளே சிவனது திருவடிகளை வைத்தேன். அதனால், இணைத்து உழலுதற்கு ஏதுவாகிய இரு வினைகள் என்னும் புதரை அழித்து வேதமாகிய மரத்தின் உச்சிக் கொம்பில் உள்ள மெய்ப் பொருளாகிய தேனை அறிவினால் அடைந்து இன்புறுகின்றேன்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``புலன்`` என்றது பொறிகளை ``எய்த்தேன்`` என்பது முற்றெச்சம். ``மாற்றிட்டு`` என்பதில் இடு, துணைவினை. ``மெய்த்தேன்`` என்பது ஏகதேச உருவகம், ஈற்றடி இறுதியில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

பண் :

பாடல் எண் : 14

அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

பொழிப்புரை :

முற்காலத்து ஞானிகள் பலரும் இறைவன் திரு வடியை அடையவேண்டியே குருவின் திருவடியைத் தம் தலையில் வைத்து அங்ஙனம் நலம் பெற்றனர். அதனால், உலக இன்பத்தையே தருவதாகிய இந்தப் பழைய பௌதிக உடம்பை இகழ்ந்து ஒதுக்கும் அந்த உயர்ந்தோர் கூட்டத்தை யடைதற்குரிய நெறியைப் பற்றினவர்களது கொள்கையும் இதுவே.

குறிப்புரை :

``அடி சாரலாம்`` என்பதின் ஈற்றில் `என` என்பது எஞ்சி நின்றது. அண்ணல் - தலைவன்; ஞானத்தலைவன் ஞானாசிரியன். படி - உலகம். `பழ வடிவை எள்ளும் அக்குடியைச் சாரும் நெறி` என்க. அந்நெறி, மெய்ந்நெறியே. குடி, `குலம்` எனப்படும் அச் சொற்பற்றி, கூட்டத்தை, ``குடி`` என்றார். ``கொள்கை`` என்னும் எழுவாய்க்குரிய `இது` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றது, ஏகாரம், தேற்றம்.

பண் :

பாடல் எண் : 15

மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

தந்திரம் - நூல். ``தானம்`` என்றது அறத்தை. சுந்தரம் - அழகு. உடல் அழகும் ஒருபேறே என்பதை அது பேறுகள் பதினாறனுள் ஒன்றாகக் கூறப்படுதலோடு, ``திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்``1 என்பதனுள், ``உருவாக்கும்`` என்பதும் கூறப்பட் டமையான் அறிக. ``ஆவது`` என்பன பலவும் ஒற்றுமை பற்றி வந்த ஒருமை.
இறுதி நான்கு மந்திரங்களாலும், இவ்வதிகாரத்தில் `திருவடி எனப்பட்ட பொதுமையால் சிவனது திருவடிப் பேற்றினது சிறப்புக் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி