ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்


பண் :

பாடல் எண் : 1

தவமிக் கவரே தலையாய வேடர்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.

பொழிப்புரை :

அகத்துத் தவ உணர்வு மிகுந்தவரே புற வேடத்தால் உயர்த்துக் கூறப்படுவர். அகத்து அவ்வுணர்வில்லாது உலகியல் உணர்வு மிகுந்தோர் தவவேடம் புனையின் `உயிர் கொலையை மிகச் செய்யும் வேடர்` எனப் பொருள் படுமாறு இருபொருட் சொல்லாக `வேடர்` எனச் சொல்லப்படுவர். அவர் வேட மாத்திரையால் தவத்தோர் ஆகார் ஆதலின், தவ உணர்வுமிகுந்தவர்க்கல்லது, தவ வேடத்தைத் தாங்கிநிற்றல் பொருந்தாது,

குறிப்புரை :

``தலையான வேடர்`` என்றாராயினும், `வேடத்தால் தலையானவர்` என்றலே கருத்தாதல் அறிக.`தவ உணர்வு இல்லாதார் தவ வேடம் புனையின் இகழப்படுவர்` என்பது இரண்டாம் அடியில் கூறப்பட்டது, மூன்றாம் அடியில், `வேடத்தால்` என உருபு விரிக்க. ``ஆகார்`` என்பதற்குமுன் `தவத்தோர்` என்பதும், பின் `ஆகலான்` என்பதும் எஞ்சிநின்றன.
இதனால், `தவவேடம் தவ உணர்வு உடையோர்க்கே உரியது` என்பது, `அதனைத் தாங்குதல் அவர்க்கு மிக்க சிறப்பைத்தரும்` என்பதும் கூறப்பட்டன. இதனுள் ஈரிடத்தும் `தவத்தோர்` என்னாது, ``தவம்மிக்கவர்`` என்றே அருளிச் செய்த குறிப்பு நோக்கற்பாலது.

பண் :

பாடல் எண் : 2

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்காம் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

பொழிப்புரை :

தவவேட்கையோர் யாவர்க்கும் முதற்சாதனமாவது திருநீறணிதல். சிவநூல் கற்பிக்கும் ஆசிரியர்க்கு அதனோடு காதில் அணியப்படுகின்ற செப்புக் குழையும், செம்பை இடையிட்டுக் கோத்த உருத்திராக்க மாலையும் வேடங்களாம். சிவயோகிக்குரிய வேடத்தை ஆராயுமிடத்துச் சிவனிடத்துக் காணப்படும்` கோலங்கள் பலவுமாம்.

குறிப்புரை :

அவை வருகின்ற மந்திரத்தில் கூறப்படும். `ஆதியில் சாதனம் பூதி அணிவது` என மாற்றி யுரைக்க. `ஓதியவர்`` என்பது, `பிறரை ஓதுவிக்கும் ஆற்றலுடையார்` என்பது உணர்த்திநின்றது, ``சிவயோகி சாதனம் தேரில் உருத்திர சாதனம்` என்க.
இதனால், `பொதுத் தவ வேடமும், ஒருசார்ச் சிறப்புத் தவ வேடமும் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாகற்றுச் சுற்றம் சடையதொன்
றாகத்து நீறணி அங்கம் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

பொழிப்புரை :

சிவயோகிக்கு அணியப்படும் பொருள்களாவன, அரையிற் கட்டும் கீளோடு கூடிய கோவணம் உமைக்குப் பாகம் இல்லாமல் ஒரு சடையால் சுற்றிக் கட்டப்படும் சடைமுடி, உடம்பு முழுவதும் முற்றுப் பூசிய திருநீறு, வேண்டும் பொழுது எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொள்ளுதற்கும், தன்னை வனங்கினார்க்குக் கொடுத்தற்கும் திருநீறு வைக்கப்பட்ட பொக்கணம் அல்லது பை, பிரம கபாலத்தை நினைப்பிக்கும் பிச்சைப் பாத்திரம், திருக்கையில் பிடிக்கும் மாத்திரைக் கோல் அல்லது பிரம்பு என்னும் இவைகளாம்.

குறிப்புரை :

அது - அவ்வேடம். பின்வரும் பொருள்கள் பலவும் `வேடம்` என ஒன்றாக வைத்துச் சுட்டப்பட்டன. `பாகம் அற்று` என்பது, `பாகற்று` எனக் குறைந்து நின்றது, மேல், ``உருத்திர சாதனம்`` என்றது பற்றிச் சிவன், ``மதுவிரிக் கொன்றை துன்று சடைபாகம், மாதர் குழல் பாகம்`` ஆதல்3 கொள்ளப்படாது, சடை ஒன்றுமே கொள்ளப் படும் என்றற்கு, `தோகைக்குப் பாகமற்றுச் சுற்றும் சடை ஒன்று` என்றார். இதனானே, சிவயோகி ஏனை உலக யோகிபோலத் துணைவி யோடிருத்தல் கூடாமை குறிக்கப்பட்டது. ``ஆகத்து நீறு`` என முன்னர்ப் போந்ததனைப் பெயர்த்தும் கூறினமையின் உடம்பு முழுதும் பூசிய நீறு என்பது போந்தது.``அணி`` என்பது, `அணிகின்ற, அணி விக்கின்ற` என, ``இருவயினிலையும் பொருட்டாய்`` 8 நின்றது, `அதனை அணி அங்கம்` என்க. சாங்கமாகிய பொக்கணம், திருநீற்றுப் பை இவற்றை ``அங்கம்`` என்றது பான்மை வழக்கு. `ஷ்ரீஹஸ்தம்` என்னும் ஆரியச்சொல், `சீகத்தம்` எனத் தற்பவமாயிற்று.
இதனால், `சிவயோகிக்குரிய தவ வேடம் இவை` என்பது கூறப்பட்டது. இதனை,
``சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம்சூழ் சடைவெண் பொத்திய கோலத்தினீர்`` l
என்பதனோடு வைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 4

காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.

பொழிப்புரை :

காதில் அணியப்படும் குண்டலம், உருத்திராக்க மாலை, நல்ல ஒலி உண்டாக வாய்வைத்து ஊதுகின்ற திருச்சங்கு, குண்டலத்தினும் உயர்ந்ததாகிய ஆறு கட்டி, திருவோடு, சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தவச் சாலை, பாதுகை, யோகம் முடிதற்குரிய இருக்கை, குற்றமற்ற யோக பட்டம், யோக தண்டம் என்னும் பத்தும் தவத்தோர்க்குரிய வேடங்களாம்.

குறிப்புரை :

பொதுப்படக் கூறியதனால், `இவைகளை அவரவர் ஏற்ற பெற்றியாற் கொள்வர்` என்பது கருத்து. தவச்சாலையும் உபாங்கமாய்த் தவவேடமாதல் குறிக்கப்பட்டது.
இதனால், தவ வேடமாவன பலவும் தொகுத்துக் கூறப் பட்டன.
சிற்பி