ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்


பண் :

பாடல் எண் : 1

ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.

பொழிப்புரை :

ஞானம் இல்லாதவர் ஞானிகட்குரிய வேடத்தைப் பூண்டிருப்பினும் நரகத்திற்கு உரியவரேயாவர். ஞானம் உள்ளவர்கள் தம்மிடத்தில் ஞானிகட்குரிய வேடம் இல்லாதொழியினும் பரமுத்திக்கு உரியவரே. அதனால், ஞானம் உண்டான பின்னர் அதற்குரிய வேடத்தை விரும்புவோர் சிவபிரானைப் போலவே அந்த வேடத்தைப் பூண்டிருப்பர்.

குறிப்புரை :

`இன்றெனிலும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. ``உளதாக`` என்னும் செயவெனெச்சம், ``கைப்பொருள் ஒன்றுண்டாகச் செய்வான் வினை``* என்பதிற் போல இறந்த காலத் தின்கண் வந்தது. இவ்வாறன்றி, எதிர் காலத்ததாகக் கொண்டுரைப் பின், அது முன்னை யதிகாரத்துத் தவ வேடமாயே முடிதல் அறிக. ``வேடம் நண்ணி நிற்பார்`` எனப் பின்னர்க் கூறுதலின், வேண்டுதல் வேடத்தையே ஆயிற்று. `ஞானிகட்குரிய வேடவாவது இது` என்பது உணர்த்துதற்கு ``நக்கன்போல்`` எனவும், `அவ்வேடம் காண்பார்க்கும் ஞானத்தை உண்டாக்கும்` என்றற்கு ``ஞானம் உள வேடம்`` எனவும் கூறினார். `நக்கன்பால்` என்பது பாடமன்று. நக்கன் - உடையில் லாதவன். ``அணியெல்லாம் ஆடையின்பின் என்பதை விடுத்தலின், `நகப்படுவன்` என்பது இதன் பொருளாம். சிவபிரானை இப் பெயராற் கூறுதல் பட்டும், துகிலும் உடாது, தோலையே ஆடையாக உடுத்தல் பற்றியாம். இனிக் `கீள், கோவணம்` என்னும் இவற்றளவே கொண்டு நிற்றலும் உடையின்மையாகவே கூறப்படும். இவ்வாறன்றி, `திகம்பரன்` என்பதே வெற்றரையாய் நிற்றலைக் குறிக்கும், எனவே, `நக்கன்` என்பதை `நக்நன்` என்னும் ஆரியச் சொல்லின் திரிபாகக் கொள்ளின் அது `திகம்பரன்` எனவே பொருள்படும். சிவபிரானை, `திகம்பரன்` என்றல் அவனது வியாபக நிலையைக் குறிக்குமல்லது வேடத்தைக் குறியாது. `சிவபிரான் பிச்சைக் கோலம் கொண்டு சென்ற பொழுது வெற்றரையாகச் சென்றனன்` என்பது உளதாயினும், கீள் கோவணத்தோடு சென்றனன் என்ற கருத்தும் உண்டு.
``உறைவது காடுபோலும்; உரிதோல் உடுப்பர்;
விடைஊர்வது ஓடு கலனா`` l
என்றொடக்கத்தனவாய் வரும் திருமொழிகள் சிவபிரானது வேடங்கள் உலகரால் நகப்படுவனவாயிருத்தலையே உணர்த்தும். அவ்வாறிருப்பினும்,
``இறைஇவர் வாழும் வண்ணம் இதுவேலும்
... ... ... ... ... ,..
அறைகழல் வண்டுபாடும் அடிநீழல் ஆணை
கடவா தமர ருலகே`` 3
என்றற்றொடக்கத்தனவாய் வரும், திருமொழிகள் அவ்வேடங்கள் சிறிதும் பற்றுடபடாத தூய உணர்வைத் தெரிவிப்பனவாய்ப் பற்றுட் பட்டு மயங்கும் மயக்க உணர்வையுடைய தேவர் முதலிய பலரையும் ஆளும் தலைமைக் கோலங்களாய் இருத்தலை விளக்குமாகலின், அவை ஞானவேடங்களாதல் நன்கறியப்படும். அவ்வேடங்கள் காண்பார்க்கும் ஞானத்தைத் தோற்றுவித்தலை,
``ஓதிஓர்க் கப்படாப் பொருளை ஓர்விப்பன
... ... ... ... ... ...
ஆதிஅந் தம் இலா அடிகள் வேடங்களே`` 8
என்றற்றொடக்கத்தனவற்றால் அறிக. `நக்கன்பால்` என்பது பாடம் அன்று.
இதனால், `ஞானிகட்குரிய வேடத்தை ஞானம் இல்லாதார் புனைந்து வஞ்சிப்பின் நரகம் புகுவர்` என்பதும், `ஞானிகட்குரிய வேடம் இது; இதனை ஞானியர் விரும்பிற் பூண்பார்; பூணாது விடினும் அவர்க்குத் தாழ்வில்லை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.

பொழிப்புரை :

இழிந்த ஞானத்தை உடையவர்கள் உயர்ந்த ஞானத்தை உடையவரது வேடத்தைப் பூண்பாராயினும், அதனால் அவர்க்கு வருவதொரு நன்மை இல்லை. உயர்ந்த ஞானத்தை உடை யவர் இறைவனது அருளாகிய பயனைப் பெற்றுவிட்டமையால், `குறித்ததொரு வேடத்தைப் பூணவேண்டும்` என்னும் விருப்பமும் இலராவர். தமது ஞானத்தையே பெரிதாக மதிக்கும் குற்றத்தை உடையவர் ``தத்தம் மதங்களே அமைவதாக அரற்றிமலையும்`` 3 சமயப் பூசலை உடையராவர். மற்று, உண்மை ஞானம் உடையோர் அதற்குத் தகுதியில்லாதாரைக்காணின் ஒன்றும் பேசாது வாளாதே போவர்.

குறிப்புரை :

இழிவு, உலகியலுள் அழுந்தலும், உயர்வு அதனின் நீங்கி மேற்போதலுமாம். ``பூணார்`` என்பது `பூணுதலில் கருந் தூன்றார்`` என்றதாம். ``வேண்டுமாறு விருப்புறு வேடத்தர்`` l எனச் சேக்கிழாரும் கூறினார். ``சமயம்`` சமயவாதத்தைக் குறித்தலின் ஆகு பெயர். ``பின்`` என்பது, வினைமாற்றாய `மற்று` என்னும் பொருளில் வந்தது. ``ஒன்றும் பேசகில்லார்`` என்பது, `தமது நிலையைப் பிறர்க்கு வெளிப்படுத்திப் புகழ்பெற விரும்புதல் இலர்` என்பது உணர்த்தி, `அத்தகையோர் ஞானவேடத்தைப் புனைந்து கொள்ளுதலையும் ஒருதலையாக விரும்புதல் இல்லை` என்பதை வலியுறுத்தி நின்று. இதனுள் `` பூணார்`` என்பதை, `பூண்பர்` எனவும், முன்னை மந்திரத்தில், ``இன்றெனில்`` என்பதை `உண்டெனில்` எனவும் ஓதுவன திரிக்கப்பட்ட பாடங்களாதல் விளங்கும்.
இதனால், உண்மை ஞானியர் சாத்தியமாகிய திருவருளை யன்றிச் சாதனமாகிய வேடத்தைப் பெரிதாகக் கொள்ளாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

பொழிப்புரை :

பயனில்லாத வேடம் சிவஞானிகட்கும், சிவ யோகிகட்கும், ஆகாது. ஆராயுமிடத்து அது வேதாகமங்களாகிய தொன்னெறியல்லாத புதுநெறியில் நிற்போர்க்கு ஆவதாம். அது நிற்க, சரியை முதலிய நான்கு நெறிகட்குரிய வேடங்களே ஒருதனிச் செம்பொருளாகிய சிவம் உள்நிற்கும் வேடங்களாம்.

குறிப்புரை :

ஆகவே, `அவையே சிவஞானிகட்கும், சிவயோ கட்கும் உரியன` என்பதாம். பயனில்லாத வேடங்கள் பாயுடுத்தல், தலைமுடியயைப் பறித்துக்கொள்ளல், மயிற்பீலி பிடித்தல், துவராடை அணிதல், வெற்றரையாய் இருத்தல் முதலியனவாம். இவை பரம் பொருள் வடிவாகாது, வாளா உடம்பை வருத்துதலாய் முடிதலின், பயனிலவாயின. இவை முதனூல்களாகிய வேதாகமங்களை இகழ்ந்து, புதியனவாய்ப் படைக்கப்பட்ட எதிர்நூல்களின் வழிநிற்பர் கொள்வன வாதல் வெளிப்படையாதலின், ``நவமாம் அவர்க்கு`` என்றார். வேடம் வகையானும், விரியானும் பலவாயினும், தொகையால் ஒன்றே யாகலின், ``ஆகாது`` எனவும், ``அது`` எனவும் ஒருமையாற் கூறினார். ``நான்கு`` என்றது ஆகமங்களின் வழி யவாதலின், `சரியை முதலிய நான்கு` என்பது விளங்கிற்று. சரியை முதலிய நான்கில் நிற்போர் தாம் தாம் செய்யும் பணிகட்கு ஏற்ற வேடங்களை யுடையராய் இருத்தல் பற்றி, அவைகளை வகுத்தோ தினார். இங்கு எடுத்துக் கொண்டது ஞானவேடமேயாயினும், சரியை முதலிய மூன்றும் ``அரும்பு, மலர், காய்`` l என்பனபோல ஞானத்தின் படிகிளைகளேயாதல் பற்றி, அவற்றது வேடங்களையும் உடன் ஓதினார். `சாதனமாவது இங்குவேடமே` என்பது அதிகாரத்தால் விளங்கும். உவமானம் இப்பொருள், இரண்டாவதில்லாத தனிப் பொருள். இதனை ``ஏகம்`` என்றல் உபநிடத வழக்கு ``ஒன்ற வன்றானே`` என நாயனாரும் தொடக்கத்தே உணர்த்திப் போந்தார்.
இதனால், பிறவேடங்கள் கடுந்துறவை விளக்குவனபோல உலகரை மருட்டுவவாயினும், அவை சிவநெறியாளர்க்கு ஆகாமை கூறப்பட்டது. ஆகாதவற்றை. `ஆகா` எனக் கண்ணோட்டமின்றி அறுதி யாக விலக்கி ஒழித்தலும் உண்மை நூல்கட்கு இயல்பு என்பதை ஊன்றி யுணர்க.

பண் :

பாடல் எண் : 4

கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல்
கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும்
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

பொழிப்புரை :

அனுபவத்தால் இன்பம் உறாது, பேச்சினாலே இன்ப மடையும் நூலறிவுடைய சிலர், கழுமரத்தடியில் நின்று அதன் உச்சியில் உள்ள உடல் எட்டாதபொழுது குரைத்தலையும், சிறிது எட்டிய பொழுது அதனைக் கடித்தலையும் செய்கின்ற நாய்களைப் போலத் தாம் அறிந்தவற்றைக் காலம், இடம், தகுதி முதலியவற்றை நோக் காமலே உரக்க எடுத்துப் பேசுதலும், காலம் முதலியன சிறிது வாய்த்த வழிக் கேட்பாரது உள்ளத்தை அலைத்தலும் செய்து திரிவார்கள். சிவஞானத்தை அனுபவமாக அடைந்தோர் வாக்கும், காயமும் வன்மைபெற்றிருப்பினும் செத்தவரைப்போலயாதும் உரையாதே, எவ்விடமும் இடமாக உலாவிவருவர்.

குறிப்புரை :

``கழுவடி நாய்கள்போல்`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்து. குரல் களி - குரலால் களிக்கின்ற இதுவே பாடம்; `குரக்களி` என்பது பாடமன்று என்பது உவமையால் இனி துணரப்படும். `பொறியும், உடலும் ஒத்து இருக்க` என மாற்றுக. `மூப்பொறி` என்னும் வழக்குப் பற்றி, `வாக்கு` என்னும் தொழிற் கருவியை, `பொறி` என்றார். வாக்கு வன்மைபெற்றிருத்தலாவது சொல்வன்மை வாய்த்திருத்தல். உடல்வன்மை உரத்தும், நீட்டித்தும் பேசுற்குத் துணையாகும். குரற்களி ஞானிகள் உரத்துப் பேசுதல் பயனில் செயலாம் என்பதை விளக்கவே, ``கத்தித் திரிவர்`` என்றார். வைதுரை `சொல்லம்பு` எனப்படுக் கேட்போர் உள்ளதைப் புண் படுத்தல் போல, இவரது பேச்சும் அலைவால் புண்படச் செய்யும் என்பதனை, ``கொத்தி`` என்பதனாற் குறித்தார். மனம் இன்னல் உறுதலை, `நெஞ்சு புண்ணாதல்` என்னும் வழக்குண்மையறிக. செத்து - செத்தாற் போன்று. ``திரிவர்`` மூன்றில் இறுதியது பற்றின்றி இருத் தலையும், ஏனையவை பயனின்றி வாழ்தலையும் குறித்தன. இவர்களை நாயனார் முன்பு ``சோம்பர்`` எனவும், ``தூங்குபவர்`` எனவும் குறித்தமை காண்க.
இதனால், `வாய்வாளாமையும் சிறந்ததொரு ஞானவேடப் பகுதியாம்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அடியா ரவரே அடியா ரலாதார்?
அடியாரு மாகாதவ் வேடமு மாகா
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.

பொழிப்புரை :

குணத்தால் அடியவரல்லாதவர் பிறவாற்றால் அடியவராவரோ? ஆகார். அடியார் ஆகாதபொழது அவர்கட்கு அந் நிலைக்குரிய வேடங்களும் கூடா. அடியராவார் சிவஞானத்தை அடைந் தோர். ஆதலால், அத்தன்மையில்லாதவர் ஒருவாற்றானும் அடியரல்லர்.

குறிப்புரை :

``அடியாரவரே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், அடியவாரகாமையைக் குறித்தது. `ஆகாதவழி` என்பது ``ஆகாது`` எனத் திரிந்து நின்றது. மூன்றாம் அடி, அடியாராகும் முறைமையைக் குறித்தது.
இதனால், ஞானவேடம் மட்டுமே ஞானியராகச் செய்யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற்றவனுக்கு உலகர் கொள்ளும் அழகிய வேடமும், ஞானவேடமேயாய்ச் சிறந்து நிற்கும். அதனால், அவன் எந்த வேடத்தோடு இருப்பினும் அது பரம சிவனோடு ஒன்றி யிருத்தற்குரிய வேடமாயே அமையும். இனி, ஞானவேடமாகச் சொல்லப்பட்ட அவ்வேடம் ஞானம் சிறிதும் இல்லாதவனுக்கு ஏற்புடையதாதலும் உலகியலாய் உள்ளது.

குறிப்புரை :

சுந்தர வேடமாவது உலகத்தார் விரும்பி யணியும் வேடமாதலை,
``சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை`` - திருமுறை - 7.100.3.
என அருளிச் செய்தவாற்றால் அறிக. நன்மை - ஞானம். நல்ல - ஞானத்தையுடையன. சரியை முதலிய மூன்றில் நிற்போர் தடத்த சிவத்தையே சாரந்து நிற்க, ஞானி சொரூப சிவத்தைச் சார்ந்திருப்பன் ஆதலின், ``தற்சிவ யோகம்`` என்றார். யோகம் - ஒன்றுதல். ஒன்று தலைத் தருவதனை `ஒன்றுதல் என்றே கூறினார். `அருள்ஞான சாதனம் அவ்வேடம்` என மாற்றிக்கொள்க. ஒன்றும் - சிறிதும். ஆகாதவன் இதற்கு `ஞானம்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `உலகியல் அவ்வாறிருப்பினும், அதனால் பயன் என்னை` என்பது கருத்து.
இதனால், ஞானம் இல்லதார் ஞான வேடம் புனையினும் பயன்பெறுதல் இல்லை; ஞானம் உடையவர் ஞானவேடம் புனையா தொழியினும் பயன் இழத்தல் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே

பொழிப்புரை :

சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தால் முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத் தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப் பிடத்தை உடையனாய் இருப்பன். சொல்லேயன்றி மனமும் அடங்கி விட்ட நிலையை உடையனாதலின் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனே யாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முற்றப் பெற்றவனாம். சிவஞானத்தைப் பெறாது சிவான வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.

குறிப்புரை :

`ஏனைத் தவசி சிவஞானியாகான்` எனவே, இத்தவசி (சிவஞானம் பெற்றவன்) வேடம் இன்றியும் சிவ ஞானியே என்பது பெறப்பட்டது. `அதனில்` என்பது `அத்தில்` எனமருவிற்று. ``அது`` என்றது சிவன் பாதத்தை. `இருப்பிடம்` சிவனுக்கு என்க. அஃது உயிரேயாம். மோனம் - மௌனம். அஃது இங்கு வாய் வாளாமை யோடு மனம் அடங்கியதையும் குறித்தது. `தவசியை` என்னும் இரண்டாவது தொகுத்தல் பெற்றது.
இதனால், அகத்தில் ஞானம் உடையவன் புறத்தில் வேடம் இலனாயினும் சீவன்முத்தனாய் விளங்குவன்; ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் அத்தன்மையன் ஆகான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானற்ற தன்மையும் தான் அவ னாதலும்
ஏனைய அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே.

பொழிப்புரை :

தற்போதம் அற்றிருத்தல், தான் சிவமேயாய் நிற்றல், சிவனல்லாத ஏனை எல்லாப் பொருள்களிலும் சிவம் நிறைந்து நிற்றலை உணர்ந்து, அவற்றைச் சிவமாகவே காணுதல், ஞானத்தை நழுவாது நிலை நிறுத்தற்குத் துணையாய் உள்ள வேடங்களைப் பூணுதல் வாய்வாளாமை ஆகிய இவை யாவும் சிவனது திருவடிப்பேறாகிய முத்தியைப் பெற்ற நிலையின் இயல்புகளாம்.

குறிப்புரை :

ஏனைய - மற்றையவை. எல்லாவற்றையும் சிவமாகக் காணுதலை.
``மரத்தை மறைத்தது மாமத யானை``1
என்னும் மந்திரத்துள் நாயனார் பின்னர் இனிது விளங்க அருளிச் செய்வார்.
``காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்`` 2
என்பது முதலாக நாவுக்கரசரும் பலபட அருளிச் செய்தமை காண்க.
``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்`` 3
என்பதும் காண்க. பெற்றதன்கண் உள்ளவற்றைப் `பெற்றது` வேடத்தின் கால ஆகுபெயர்.
இதனால், ஞானம் பெற்றவழி நிகழ்வன பலவும் ஞான வேடத்தின் பாற் பகுத்துக் கூறப்பட்டன.
சிற்பி