ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்


பண் :

பாடல் எண் : 1

அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :

சிவனது சத்திபதிவால் தாம் அவனுக்கு அடிமை யாதலை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகும் ஒழுக்கம் உடையவராய்த் தமது உடம்பும் ஏனைய பொருள்கள்போலச் சிவனது உடைமயாம் சிறப்பை உணர்ந்து, அவ் இரண்டுணர்வையும் தடுத்து நிற்கும் இருள் நீங்கப்பெற்றுத் தம்செயல் அற்றிருப்போர் வேடமே, `சிவவேடம்` எனக் கொள்ளப்படும் சிறப்புடைய வேடமாம்.

குறிப்புரை :

`சிவவேடம் யாரிடத்துக் காணப்படினும் சிவவேடமே யாயினும், இத்தன்மை யாரிடத்துக் காணப்படும் சிவவேடமே உண்மைச் சிவவேடமாம் சிறப்புடையது` என்றவாறு. இதனானே இவர் சிவவேடத்தை மிகப்பூணாது சிறிதே பூண்டிருப்பினும் அது சிறந்த வேடமேயாதலும் பெறப்படும். `அடிமையாதல் செயலா னன்றித் தெருட்சியாலே` என்றற்கு, ``தெருளாம் அடிமை`` என்றார். `அடிமை வேடத்தார்` என இயையும். அடிமை சிவனுக்கு ஆதல் ``சிவ வேடம்`` என்றதனாற் பெறப்பட்டது. ``அன்றோர் வேடத்தார்`` என்றா ராயினும் இவ்வாறு உரைத்தலே கருத்து என்க. `பொற்பதி` என்பது பாடமன்று.
இதனால், `உண்மைச்சிவவேடம் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.

பொழிப்புரை :

உடம்பில் பொருத்தப்பட்ட வேடங்கள் உயிர்க்கு உரியன ஆகமாட்டா. அதனால், உடம்பு நீங்கினால் வேடமும் அத னோடே நீங்கிப் போதலன்றி உயிரோடு உடன் செல்லுதல் இல்லை. `உடம்பு, உயிர் சிறிது காலம் தங்கியிருக்கும் ஓர் இடமே` என்னும் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர் கடலில் அகப்பட்ட மரத்துண்டு அதன் அலைகள் பலவற்றாலும் அலைக்கப்படுதல் போலப் பிறவியிற் பட்டு பல்வேறு உடம்புகளால் அலைக்கப்படுவர்.

குறிப்புரை :

``உண்மை``, `உளதாதல்` எனத் தொழிலாய் நின்று அதற்குரிய இடத்தைக் குறித்தது.l ``உடம்பில் - துச்சில் இருந்த உயிர்க்கு`` என்ற வாறு, சிறிது காலம் இருத்தலையே இங்கு, ``உண்மை`` என்றார். ``கடலில் அகப்பட்ட கட்டை`` என்பது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அஃது இங்ஙனம் விரிக்கப்பட்டது. இது, `வேடம் மாத்திரமே உயிர் உய்தற்கு வழியாம்` என மயங்கி, ஞானத்தைப் பெறும் வேட்கை இன்றி இருப்போரை நோக்கிக் கூறியது. எனவே, மேற்கூறியவாறு அரசனுக்கு அடிமையாதல் முதலியன உளவாய வழியே வேடம் சிவவேடமாதலைத் தெளிவித்தவாறாயிற்று.
இதனால், உடல் உயிர்த் தன்மைகளை இனிதுணர்த்து மாற்றால், மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மயலற் றிருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்
தயலற் றவரோடுந் தாமேதா மாகிச்
செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :

யாதும் அறியாமையும், மயங்கி யறிதலும் ஆகிய இரண்டும் நீங்கி, அதனானே புலன்மேற் செல்லும் மனம் அடங்கி, அவ் அடக்கத்தானே மகளிர் ஆசை முதலிய ஆசைகளும் அற்று, தமக்கு முன்னே அங்ஙனம் அற்று நின்றாரை அடைந்து `அவர், தாம்` என்னும் வேற்றுமை யின்றி அவரே தாமாய் ஒன்றியியங்கித் தம் செயல் அற்றிருப்பர் உண்மைச் சிவவேடத்தார்.

குறிப்புரை :

முன்னிற்கற்பாலதாகிய ``இருள்``, செய்யுள் நோக்கிப் பின்னின்றது. `கண்ணியரோடு` என உருபு விரிக்க. கை, இடைச் சொல். இணக்கு - இணங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். தையல், `தயல்` எனப் போலியாயிற்று. `தையலற்றவர்` என்றது, `மேற்கூறிய நிலையை யெல்லாம் அடைந்தவர்` என்றவாறு. ``தாம்`` இரண்டில் முன்னது, `அவர்` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், அரனுக் கடிமையாதல் முதலியவற்றால் உண்மைச் சிவவேடத்தராயினாரது இயல்பு கூறும் முகத்தால், அவ்வேடத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.

பொழிப்புரை :

மனிதர்காள், வேடமாத்திரத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்! அந்த நிலை வேண்டுவதில்லை. ஓடுகின்ற குதிரை போல உள்ள பிராணவாயுவை அதன் கடிவாளத்தை இறுகப் பிடித்து ஓட்டுதல் போல இரேசக பூரக கும்பக முறைகளை ஒழுங்காகக் கடைப் பிடித்தலால் அடக்குங்குள் அதனால், மனம் உம் வசப்பட, அது கொண்டு நம் பெருமானாகிய சிவபெருமானை அடைய விரும் புங்கள். அவ்விருப்பம் நிறைவுறுதற்குரிய வழியில் செல்லுங்கள். பின்பு பேரின்பப் பொருளாகிய முதற்பொருளைச் சென்று அடையலாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``குதிரை, குசை`` என்பன யோகநூற் குறிச்சொற்கள். `திண்ணமாக` என ஆக்கம் வருவிக்க.
இதனால், யோக நெறியில் நிற்பின் மனம் அடங்கச் சிவபத்தியும், சிவப்பணியும் வாய்க்க, வேடமும் உண்மைச் சிவ வேடமாய் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.
சிற்பி