ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்


பண் :

பாடல் எண் : 1

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.

பொழிப்புரை :

குருடாய இரண்டு குழந்தைகள் தம்மிற் கூடிக் கண்ணைமூடி ஆடும் ஒருவகை விளையாட்டை விளையாடி, அதனால் இரண்டும் பாழுங் குழியில் விழுந்து அழுந்தினாற்போலப் பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ் ஆற்றல் இல்லாத போலிக் குருவைக் குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்க பெறுதலைச் செய்யின், இருவரும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. முதற் கண் நின்ற `குருடு` இரண்டும் சிறப்புருவகமாய். மல மறைப்பால் உண்டான அறியாமையைக் குறித்தன. இதனானே, நல்லாசிரியர் குருட்டினை நீக்கும் மருத்துவம் வல்ல மருத்துவராலும், போலி ஆசிரியர் அம் மருத்துவம் உணராத போலி மருத்துவராலும் பெறப் பட்டன. கண்ணுள்ள குழந்தைகள் கண்ணை மூடி ஆடினாலும் முன்னைப் பழக்கத்தால் தீங்கின்றி ஆடி மகிழ்வடையும். கண்ணில் லாத குழந்தைகள் பிற விளையாட்டு விளையாடினாலும் தீங்கடையா. குருட்டாட்டம் ஆடின் வழியறியாது குழியில் வீழ்ந்தொழியும். அதுபோல நல்லாசிரியர் மாணவரது பக்குவத்திற்கு ஏற்ப எவ்வாறு அருளினும் பயன் உண்டாம். ஆசிரியரல்லாதார் கிரியா மார்க்கத்தை உணர்த்தினும், அவர்பால் அதனைச் சிலர் பெறினும் பயன் ஓரளவேனும் உளதாகும். அவர் ஞானத்தை உணர்த்தினும், அதனைச் சிலர் பெறினும், `பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது` என்னும் பழமொழியோடொப்ப இருவரும் முன்னையினும் பார்க்கப் பெரிய தோர் அறியாமையில் வீழ்ந்து அழுந்துபவர் என்பது உவமையால் பெறப்பட்டது. `கண் குருடுபோல அறியாமையும் அகக்கண் இன்மை யாகிய ஒருவகைக் குருடே` என்பது தோன்ற, மல மறைப்பினையும் இங்குக் குருடாகவே உருவகித்து ஓதினார்.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உண்டாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதற்றொட்டு அவற்றின் அறிவாகிய கண்ணிற்கு அமைந்த மாயையாகிய கண்ணாடி ஆணவமாகிய குற்றங் காரணமாகப் பொருளியல்பைத் திரித்துக் காட்டும் வாஞ்சனைக் கண்ணாடியாய் உள்ளது. கல்வி கேள்விகளால் பெற்ற அறிவுகொண்டு இதன் இயல்பை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர் நல்லாசிரியர் அவர்களது வினை நீங்கும் வழியை விளக்கிக் கூறினாலும் விளங்கிக்கொள்ள மாட்டார். அவர் இயல்பு தலைவாயில் வழியைக் காட்டினாலும் புறக்கடை வாயிலை விரும்பி அதன்வழி நுழையும் இயல்பு போல்வதாம்.

குறிப்புரை :

அறிவை `மனம்` என்றலும் வழக்கு. ``எழுந்தது`` என்னும் வினைப்பெயர். `தோன்றியதாகிய கண்ணாடி` என்பதைக் குறித்து எழுவாயாய் நின்று, ``மாயக்கண்ணாடி`` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது. மாயம் - பொய்; திரிபு. இங்ஙனம் கூறவே, `அக்கண்ணாடியாவது மாயையே` என்பது விளங்கிற்று. ``நினைப்பு`` என்று சிந்தனை அறிவை. `அதனில் அதன் நிழலையும் காணார்` என்க. ``நிழலையும் காணார்`` என்று, `அதன் இயல்பைச் சிறிதும் அறியார்` என்றவாறு. ``காணார்`` என்பதும் எதிர்மறை வினைப்பெயர். காணாமை பக்குவம் இன்மையினாலாம். `விளக்கவும்` என்பது திரிந்து நின்றது `விளக்கினும்` எனப் பாடம் ஓதலுமாம். `விளக்குவார் நல்லாசிரியர்` என்பது ஆற்றலால் பெறப்பட்டது. ஓர் இல்லத்தில் தலை வாயிலால் நுழையாது புறக்கடை வாயிலால் நுழைவார் இன்னல் பலவும் உறுதல் வெளிப்படை. இதனுள் ஒருவாற்றான் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உளதாயினும் அது பயன்படாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே.

பொழிப்புரை :

உலக மக்கள், அறிவுடையரோ `ஏ` என அழைத்தால் அவர்க்கு, `ஏன்` என மறுகுரல் கொடுக்கும் அத்துணைப் பக்குவமும் இலர். அவர் தாயின் முலை அவர் பெற்ற குழவி தன்வாயில் வைத்த பொழுதே பால் சுரத்தலல்லது, எப்பொழுதும் பால் சுரவாத தன்மையை உணர்தல் இயலாததே. அவ்வியல்புடைய இனத்தவரது உள்ளத்திலும் உருவமற்றவனாகிய சிவபெருமான் அங்ஙனம் உருவமற்றவனாகவே நிலை பெற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஏ` என்பது வடமொழியில் திரிபு. வரையறை யின்மை யின் இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. முதற்கண் நின்ற ``முலை`` என்பது பின்னர் வரும் அதனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. பெய்தலுக்கு வினைமுதலாகிய `குழவி` என்பது வருவிக்க. மதுரம் - இனிமை. அஃது ஆகு பெயராய்ப் பாலை யுணர்த்திற்று. `குழவி வாய்வைத்த பொழுதே தாயின் முலை பால்சுரக்கும் இயல்பினை அறியார்` என்றது, `இறைவனது அருள் அவனை உணர்ந்து போற்றுவார்க்கே விளங்கி நின்று நலம் செய்யும் என்பதனை அறிந்து அவனை உணர முயலார்` என்றதாம். `அதற்குக் காரணம் பக்குவம் இன்மையே` என்பது கருத்து. `அன்னோர்க்குத் தமராய் உள்ளோரது ஊனின்கண்ணும் உருவிலி நிலை செய்யும்` என்க. தமர் - சுற்றத்தார். இஃது இங்குப் பிறப்புப் பற்றியதாகாது, இயல்பு பற்றியதாய் நின்று. இதன் ஈற்றடி இரண்டாம் அசை எதுகையாய் நின்றது.
இதனால், பக்குவம் இல்லாதார் இறைவனை உணர்ந்து அவனது அருளால் நலம்பெறுந் தன்மை இலராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

 வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.

பொழிப்புரை :

பெருந் தகுதியாகிய பக்குவத்தை எய்திய மாணவனே, நீ யாதொரு செயலிலும் `மனம், மொழி மெய்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது. அங்ஙனம் அவை ஒருவழிப்பட நிற்றலே உனக்கு நன்மையைப் பயப்பதாகும். அவை வேறு வேறு வழிப்படல் இழந்தோரது இயல்பாதலின், நீ அவை அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாராய உலகர் அது பற்றி என்னைப் பின் வெகுளி மிகுதியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.

குறிப்புரை :

`அதுபற்றி எனக்கு வருவதோர் இழுக்கில்லை` என்பதாம். `அங்ஙனம் செய்யாமையாகிய அதுவே உறுதி` என்க. அங்ஙனம் செய்யாமை, அவை ஒருவழிப்பட்டு நிற்கச் செய்தலை உணர்திற்று. `தீயை` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. தீமை, இங்கு இழிவு. தன் ஈற்றடிக்கு இவ்வாறன்றி ``என்று`` என்பது ``தெளியார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தாக வைத்து, `அது பற்றி என்னைப் பிறர் பழியார்` என்று உணர்த்தலுமாம். இங்கும் `உன்னை` என்றே பாடம் ஓதி அதற்கு இயைய உரைப்பாரும் உளர்.
இதனால், பக்குவம் எய்திய மாணாக்கற்கு அபக்குவ நெறியிற் செல்லாதவாறு விழிப்பூட்டு முகத்தால் அபக்குவிகளது போலி ஒழுக்கத்தின் இயல்பும், அவர்க்கு நல்லாசிரியரது அருள் கூடாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும்
அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின்
பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.

பொழிப்புரை :

பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப் பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச் செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.

குறிப்புரை :

பாதகத்தை இங்கு, `துரோகம்` என்றார். `மாபாதம் ஐந்து இவை` என்பது மேற் கூறப்பட்டது. l ``துரோகத்து`` என்னும் உவமம் ``பாதகர்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. `துரோகத்திப் பாதகர் தம்மை` என்றாராயினும், `துரோகத்துப் பாதகர் இவர்தம்மை` என்றலே கருத்தென்க. உம்மை, மேல் முதல் தந்திரத்தில் `அரசாட்சி முறை` அதிகாரத்தில் அரசனால் தண்டிக்கப்படத் தக்கவராகக் கூறப் பட்டவரைத் தழுவி நின்று. ``விஞ்சை`` என்றது, செயலால் நல்லராய்த் தோன்றுதல் பற்றிக் கண்ணோடி அளவிற் குறையச் செய்யாது என்றதாம். வேறுசெய்தல் - திருத்துதல்.
இதனால், அபக்குவராயுள்ளார் பக்குவர்போல ஓழுகுதல் பல தீமைக்கு ஏதுவாதல் நோக்கிக் கடியப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

பொழிப்புரை :

தவத்தில் நிற்கும் பக்குவிகளுக்கு நுகர்ச்சியாய் நிற்கின்ற கன்மங்கள் அனைத்தும் அவற்றை ஊட்டுவிக்கின்ற முதல்வ னுடையனவேயாய், அவர்க்கு நுகர்ச்சி யாகாயையைத் தேவரும் அறியாமாட்டார். அதனால், கன்மங்கள், எடுத்த பிறப்பில் நுகர்ச்சி யாதல், பக்குவம் இன்மையால் தவத்தில் நிற்குமாற்றை உணராதவர் கட்கேயாம்.

குறிப்புரை :

``தவம்`` என்றது இங்கு ``அவன் அருளாலல்லது ஒன்றும் செய்யாமை``3 ஆகிய இறை பணியை. இதன் கண் நின்றார்க்குப் பிராரத்தம் நுகர்ச்சி யாகாமையை,
``நாமல்ல இந்திரியம்; நம்வழியின் அல்ல; வழி
நாமல்ல; நாமும் அரனுடைமை - யாம்என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்`` 3
என்பதனானும் அறிக. `தேவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. பவம் - பிறப்புய பாடு - நிகழ்ச்சி. நுகர்வு. கன்மங்கள் வகை யானும், விரியானும் பவவாயினும் தொகையான் ஒன்றே யாதல் பற்றி `அது` என ஒருமையாற் கூறினார். `அறியாதவர் எல்லாம்` என்பது பாடமன்று.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு வினை நீங்காமை கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் `கன்றலும் கருதலும்`` என்னும் பாடல் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், நாயனார் திருமொழி யன்றாம்.

பண் :

பாடல் எண் : 7

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.

பொழிப்புரை :

ஒளியைக் காணும் கண் இல்லாதவர் இருள் புலர்ந்தாலும் புலர்ந்ததனை அறியமாட்டார். அதனால், விடிந்தபின் ஒளியில் பொருள்களை நன்கு கண்டு பயன் கொள்ளவும் மாட்டார். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர் தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டார். அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரமாட்டார். அதனால் நீவிர் அவ்வாறின்றிப் பரியதாகிய ஊனக் கண்ணை மூடி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காணுங்கள்; அத்திருவருளே அறியாமை யாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகும்.

குறிப்புரை :

முதலிரண்டடிகள் ஒட்டணி `விடியிலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. கடுமை பருமையை உணர்த்திற்று. ``இமை`` என்றது ஆகுபெயர். கட்டுதல் - தடுத்தல். காணுதற்குச் செயப்படுபொருள். முதற்கட் கூறியவாற்றால் `திருவருள்` என்பது பெறப்பட்டது. ``விடியாமை`` என்பது `இரவு` என்னும் பொருட்டாய் இருளைக் குறித்தது. ``காக்கும்`` என்பது, ``குற்றமே காக்க பொருளாக`` l என்பதிற் போல நின்றது. `திருவருளே விளக்கு` என்றதனால் `நீவிர் அவ்விளக்கையே நுமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` என்பதும் கூறினாராயிற்று.
இதனால், `இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப்
பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

பொழிப்புரை :

`உயிர்களையே பற்றுதற்கு உரியன` என நூல்களில் சொல்லிவைக்கப்பட்ட, பசுத்துவத்தைத் தரும் பாசத்தை அகற்றுவ தாகிய தவநெறியில்நின்று, அதனால் அப்பாசங்களின் கட்டு நெகிழ, வீடு பெறும் பக்குவத்தை எய்தி, முன் சென்ற உலகியலினின் றும் மாறி மெய்ந்நெறியைப் பற்றி, மெய்ப் பொருளையே அடைய விரும்பி அதற்கேற்ற முயற்சியால் அதனை அடையாது, மேற்கூறியவாறு விடிவதறியாப் பேதைமை மிக்கார்க்கு மேற்கூறிய விளக்கு நல்லாசிரியரால் ஈயப்படா.

குறிப்புரை :

``வைகி`` என்பது முதலாகப் போந்த எச்சங்கள் பக்குவம் படிமுறையான் முதிர்ந்து வருமாற்றை உணர்த்தி நின்றன. முன்னை மந்திரத்தில் ஒட்டணி வகையாற் கூறியதனையே இங்கு, ``அவ்வாறு`` எனச் சுட்டினார். பித்துப் போலுதல் பற்றிப் பேதைமையை, ``பித்து`` என்றார். பெறுவாரது பன்மையால் விளக்கும் பலவாம் ஆதலின் ``ஈயப்பெறா`` எனப் பன்மையாக ஓதினார். `தானே` என்பது பாடமன்று.
இதனால், அபக்குவர்க்கு ஞானமும், ஞானத்தின் பயனும் கிடையாமை கூறப்பட்டது. ``ஈயப் பெறா`` என்பது ஆசிரிய ராயினார்க்கும் அறிவித்தாம்.

பண் :

பாடல் எண் : 9

மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவான் அதற்சீட னாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``ஓரான்`` என்றது, `ஓரும் முயற்சியிலன்` என்றவாறு, காமாதி `காமம், வெகுளி மயக்கம்` என்பன. `இவற்றில் தோயும் தொழில்` என்க. தோய்தல் - மூழ்குதல். பின்னுதல் - கட்டிச் சொல்லுதல். அன்னியன் - ஞானத்திற்கு அயலானவன் என்க. ``ஓரான்`` முதலிய நான்கும் முற்றெச்சங்களாய் நின்று ``அன்னிய னாவன்`` என்னும் வினைப்பெயர் பயனிலை கொள்ள, அஃது எழுவா யாயிற்று. `ஓராமை முதலிய நான்கனுள் ஒன்றேயே உடையோனும், பலவற்றையுடையோனும் அன்னியனாவன்` என்க.
இதனால், அபக்குவிகளது இயல்புகள் கூறப்பட்டன. இறுதிக் கண் ``அசற்சீடனாம்`` என்றதனால் இஃது ஆசிரியராயினாரை நோக் கிற்றாய், `பக்குவம் எய்தாதாரையும், எய்தினாரையும் அறியுமாறு கூறிப்பக்குவம் எய்தாதார்க்கு ஞானத்தை உணர்த்துதலும், எய்தினார்க்கு அதனை உணர்த்தாது ஒழிதலும் செய்யற்க` என உணர்த்தியதாயிற்று.
சிற்பி