ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்


பண் :

பாடல் எண் : 1

தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தாரே.

பொழிப்புரை :

குற்றத்தைப் பொருந்துதல் சிறிதும் அறியாத மேலான் ஆசிரியரை நூல்முறை வழியே வழிபட்டு அவர்பால் உய்யும் வழியை அறிபவரே நல்வழியை அறிபவராவர். அல்லாதா ரெல்லாம் ஏனைக்கெடும் வழியை அறிபவரேயாவர்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொண்டும், முதலடியை மொழி மாற்றியும் உரைக்க. ஈற்றடியிலும், `அல்லாதவர் மற்றை அழிவறிவார்` எனக் கூட்டுக. குற்றம், காம வெகுளி மயக்கங்கள் அவற்றைச் சிறிதும் பொருந்தாமை சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுதலால் அமைவதாகலின், அவரே மேலான ஆசிரியாரதல் அறிய `அத்தகையோரை அறிந்து அடைந்து வழிபடப்பெறுதல் பக்குவிகட்கேகூடும்` என்பது, `அறிவாளர்` எனவும், ``அறிவார்`` எனவும் மறித்து மறுத்து வலியுறுத்தவாற்றால் பெறப்பட்டது.
இதனால், `அதிபக்குவரே பரம ஆசிரியரை அடைந்து வழிபட்டு உய்வர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும் பியே அடியேன் துடித்தேன்; அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவரது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழி யும் படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.

குறிப்புரை :

`என்று பக்குவிகள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர்` என்றவாறு. எனவே, இம்மந்திரம் அவர்களது கூற்றாம். ``ஒழிந்தேன்`` என்பவற்றில் ஒழிதல் துணிவுப் பொருள்மைக் கண் வந்தன. அகைதல் - அறுத்தல். இங்கு உயிரெதுகையும், மூன்றாம் எழுத்தெதுகையும் வந்தன. ``சிந்தின`` என்பது முற்றெச்சம் `அதைத்து`, `சிந்தனை` என்பன பாடமல்ல. அறக் கருணைசெய்து ஆளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்றற்கு, `திருவடி சூட்டி` என உயர் சொற்கூறாது, `உதைத்து` எனத் தாழ்சொற் கூறப்பட்டது.
இதனால், அதிபக்குவர்கள் அருட்பேராசிரியரைக் கண்டவழி அவரை அடையும் வகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

பொழிப்புரை :

உள்ளமாகிய நிலத்தில் ஆசிரியராகிய உழவர் விதைக்கின்ற விதையை முளைத்து வளர ஒட்டாது தின்றொழிக்கின்ற ஐம்புல ஆசையாகிய கிருமியை உடைய மனமாகிய மேல்மண்ணை யோக முயர்ச்சியால் ஆஞ்ஞையும், அதனைக்கடந்த ஏழந்தானமும் ஆகிய வானத்தில் நின்று நோக்கும் மெய்யுணர்வாகிய வெயிலால் அக் கிருமிகளை அழித்துச்செம்மை படுத்தி அம்மனத்தைத் தம்மோடு ஓத்துவரச் செய்கின்ற அடியவருக்குச் `சிவஞானம்` என்னும் விதையை உள்ளத்தில் ஊன்றக் கொடுத்தல் தக்கது.

குறிப்புரை :

இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கி, ``மேல் நின்று நோக்கி`` என்பதனை ``சிந்தையை`` என்பதன் பின்னும் ஈயலும் `ஆம்` என்பதனை முதலடியின் இறுதியிலும் கூட்டி அவ்வித்தினை எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``பதைக்கின்ற போதே`` என்னும் ஏகார இடைச்சொல் இரட்டுற மொழிதலாய் `பதையாமுன் ஈயற்க` எனப் பிரிநிலைப் பொருளும், பதைத்த பொழுது சிறிதும் தாழாதே ஈக` எனத் தேற்றப் பொருளும் தந்தது. பரம் - சிவம். இஃது ஆகுபெயராய் அதனை உணரும் ஞானத்தைக் குறித்தது. ஞானத்தை `வித்து` என ஏகதேச உருவகமாகக் கூறியதனால், ஏனையவும் ஏற்றபெற்றியால் ஆகும் உருவகமாதல் பெறப்பட்டது.
``மெய்ய்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் திருநேரிசையும் இங்கு அறியத் தக்கது. ``ஈயலும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், பக்குவிகள் ஆசிரியன் அருளைப் பெற்றபின், அதனைப் போற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டது. இதனைப் பயன் நோக்கி, `ஆசிரியராவார் போற்றுந்தன்மை யில்லார்க்கு விரைந்து அருளுதலும், கூடா` என்னும் முகத்தாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

``கொள்ளின்`` என்பது, நல்லாசிரியரை அடையும் பக்குவத்தினது அருமையுணர நின்றது. உம்மை உயர்வு சிறப்பு. உள்ள பொருள் - தம்மிடம் உள்ள அனைத்துப் பொருளும். உடலையும், உயிரையும் நோக்க இப்பொருள் மிகச் சிறிதாகலின், ``உடல் ஆவி யுடன்`` என உயர்பின்வழித்தாய* மூன்றாவதன் ஒருவினை ஒடுஉருபுசொல் கொடுத்துக் கூறினார். `இப்போது நுகர்வனவும், நுகருங்காற் செய்வனவுமாய வினைகளும் பொருளேயாம்` என்பது சித்தாந்தமாதலை இவ்விடத்து நினைக. இடைவிடாமை ஆசிரியரை. தெள்ளுதல் - சிந்தித்தல். அறிதல் - தெளிதல். இவை உபதேச மொழியினை இடைவிடாமை, இவர்றின் பொருட்டேயாம். ``சிவபதம்`` என்பதன் `உளதாம்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``தான்`` என்பது தேற்றப்பொருள் தந்தது.
இதனால், ஆசிரியரை அடையும் பக்குவர் அவரை அடையுமாறும், அடைந்து பயன் கொள்ளுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது.
ஆதியும் ஏதும் அறியகில் லானே.

பொழிப்புரை :

`விரிச்சிகமும், கற்கடகமும் என்னும் இரண்டு ஓரைகளையுடைய `சுவாதி, விசாகம்` என்னும் இரு நட்சத்திங்கள் பொருந்திய, முன்னோர் சொல்லிய இருநாட்களே குருமொழியை உணர்தற்கு உரிய நாள்கள்` என்று மரபு நெறியின் சிறப்பை எண்ணுவாருள் அங்ஙனம் உணர்ந்து ஒழுகுவார்க்குக் கூறியதல்லது, இறைவனும் அதற்குரிய காரணம் எதனையும் எங்கும் சொல்லி வைக்கவில்லை.

குறிப்புரை :

`அதனால், இன்றியமையாத பொழுது ஆசிரியர் எந்த நாளையும் நாளாக, எந்த ஓரையையும் ஓரையாகக் கொள்ளலாம்` என்பதாம். `தேள், நண்டு தொடர்ந்த சோதி விசாகம் ஓதிய இருநாளே உணர்வது` எனக் கூட்டுக. `தொடர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. உபதேசித்தற்கு ஆசிரியர் தாம் கொள்ளும் ஓரைதேளும், நண்டும் ஆதல் வேண்டும்` என்றமையால் அவற்றிற்கு ஏற்ற மாதம் தாமே அமையுமாதலின், அது கூற வேண்டாதாயிற்று. நீர்மை, ஆசிரியர் ஆணைவழியே நிற்றல் ``நினைந்தவர்க்கு`` என்பதனஅபின், `உணர்த்தியது` என ஒருசொல் வருவிக்க. ஆதி - முதல்வன், இறைவன். உயிர்வர மூன்றாமடியிறுதியில் குற்றுகரம் கெடாது நின்றது. `அவ்வாதியும், என ஓதலுமாம். `அறிவிக்கிலான்` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
இதனால், பக்குவிகட்குப் பயன்படுவன சிலகால மரபுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

பொழிப்புரை :

சரியை முதலிய பணிகள் நிரம்பிவர, அதனால், சிறந்த முத்துப்பேலும் தூயதான மனத்தில் உண்டாகும் எழுச்சி காரணமாக இறைவன் அதனைத் தனக்கு இடமாகக் கொண் டருளுவான். அப்பொழுது வீணரது வெற்றிப்பாடாம் வினை நீங்கிப் போக, அப்பணிகளில் நின்றோன் சிவனது வீரக்கழலை அணிந்த திருவடியை நேரே கண்டு, அவனது அருளேயாய் நிற்பன்.

குறிப்புரை :

தொழில், இங்கு இறைவன் பணி, மணி, இங்கு முத்து. வெண்மை தூய்மையைக் குறிக்குமாதலின், தூய்மை பெற்ற மனத்திற்கு முத்து உவமையாயிற்று. `சிந்தை தூய்தாதல் பணி நிரம்புதலாம்` என்றதனால், சரியை முதலிய பணிகளால் பக்குவம் முதிர்தல் கூறப்பட்டதாம். `பக்குவ முதிர்ந்தவழித் திருவடிப்பேறு கிடைக்கும்` என்றதனால், `பக்குவ முதிர்ச்சி வேண்டுவோர் மேற்கூறிய இறைவன் பணியை மேற்கொண்டு செய்க, என்றதாயிற்று.
இதனால், பக்குவம் வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி

சாத்தவல் லானவன் சற்சீட னாமே.

பொழிப்புரை :

சத்துவ குணம் மிக்கவனாய், பரம்பொருளை அடைய எண்ணி, அப்பரம் பொருள் முதலிய நுண்பொருள்களின் உண்மையை அடியாகக்கொண்ட சமயங்களே `சமயங்கள்` என்னும் உணர்வு உள்ளத்தில் தோன்றப்பெற்று, தொன்று தொட்டு விடாது கட்டியுள்ள பிறவிக்கட்டிற்கு அஞ்சி அறநெறியைத் தளராது மேற்கொள்ள வல்லவனே சற்சீடன் - நன்மாணாக்கன் ஆவான்.

குறிப்புரை :

`சாத்துவிகன்` என்பது மருவி நின்றது. ஆத்திகம் - உண்மைப்பொருள்களை உண்டென்று உடம்படும் நெறி அவற்றை உண்டென உடம்படாது `இல்லை` எனப்பிணங்குவது `நாத்திகம்` எனப்படும். முன்னையது பொது வகையில் ஒன்றாயினும், சிறப்பு வகையில் பலவாதலை, ``பேதநெறி`` என்றார். தோற்றம் - உள்ளத்தில் தோன்றுதல் இதனையே,
``தெய்வ என்பதோர் சித்தம் உண்டாகி``
என அருளிச்செய்தார் ஆளுடைய அடிகள். இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேலாகிய ``தோற்றமாகி`` என்னும் சினை வினை, ``அஞ்சி`` என்னும் முதல் வினையோடு முடிந்தது. இவ்வாறன்றி, ``ஆகி`` என்பதனை `ஆக` எனகத் திரித்துக்கொள்லுமாம். சாத்தல் - தரித்தல்; தாங்கல்; மேற்கொள்ளுதல். ஆத்திக புத்தி உடையவனே அறநெறியை உள்ளவாறு மேற்கொள்வானாகலானும், அவனே மாணாக்கன் ஆதற்கு உரியவன் ஆகலானும், ``ஆத்திக பேத நெறி தோற்ற மாகியே ... ... ... அறநெறி சாத்த வல்லானவன் சற்சீடனாமே`` என்றார். `நூல்கேட்கும் மாணாக்கர்க்கும் இந்நிலை வேண்டும்` எனக் கல்வியாசிரியர் வேண்டுதலை இங்கு நினைக.3 `ஆத்திகம் அடியாக வரும் அறஉள்ளமே பக்குவத்தை வருவிக்கும்` என்பது கருத்து.
இதனால், நன்மாணாக்கராம் பக்குவத்தை எய்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த
சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.

பொழிப்புரை :

சிவனது திருவருள் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி நன்னெறியை அடைவித்தமையால், `நிலை யுடைய பொருள் நிலை யாமையுடைய பொருள்களின் இயல்புகள் யாவை` என்னும் ஆராய்ச் சியைத் தலைப்பட்டு அவற்றை உள்ளவா றுணரும் உணர்வைப் பெறுதல்பொருட்டு ஆசாரியரை அன்போடு வழிபட்டு, சிவனது ஆனந்தசத்தியில் மூழ்குதற்கண் வேட்கை மிக்கவனே சற்சீடனாவன்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து அதனுள், ``சிவனருள்`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. ``ஆறு`` என்பது அதன்கண் நிற்கும் பொருளைக் குறித்தன, `ஞானம் பெறப் பத்தியின் பணிந்து` என இயைக்க. சிவனது சக்தி ஆன்மாக்களுக்கு முதற்கண் அறிவாயும், முடிவில் ஆனந்தமாயும் நின்று பயன் தருமாதலின், அவற்றை முறையே ``ஞானம்பெற`` எனவும், ``ஆனந்தசத்தியில் இச்சைதகுவோன்`` எனவும் கூறினார்.
இதனால் பக்குவர்க்கு ஞான வேட்கை முதிரும் - படிநிலைவகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.

பொழிப்புரை :

என்றும் சிவனது திருவடியைத் தாங்கி நிற்கின்ற தனது சீரியதலை, நிலையாமை யுடைய பிறவித் தொடர்ச்சியின் மூலங்களைக் காய்ந்தபின் அருட் சத்தியால் ஆசாரியரை அடைந்து, `ஆசாரியரே, இன்றே அடியேனுக்கு உமது திருவடியைச் சூட்டி அருள்செய்ய வேண்டும்` என வேண்டி நின்று, அவ்வாறே திருவடி சூட்டி அருளப்பட்ட ஞானத்தால் அசைவற நிற்பவனே மலம் நீங்கிய முத்தனாவான்.

குறிப்புரை :

முதலடியை மூன்றாம் அடியின்பின் கூட்டி யுரைக்க முடிவில் வைத்த அடியினது தொழிலை அம்முடியின் மேல் ஏற்றி கூறினார். அவ்வடியாவது திரோதான சத்தி. அதுவே பிறவியின் மூலமாகிய ஆணவாதி பாசங்களைக் காய்ந்தொழிப்பது. திரோதான சத்தி அருட்சத்தியாவதன்றிப் பிறிதில்லையாயினும் மாறுதலைப்பட்டு நிற்றல் பற்றி வேறுபோல ஓதினார். இந்நிலையே `சத்திநிபாதம்` எனப்படுவது, ``ஆசான்`` அண்மை விளி. பின்னின்ற ``வைத்த`` என்பது அஃறிணைப் பன்மை வினைப் பெயர். அஃது இரண்டாவதன் தொகை பட வந்தது.
இதனால், சிவனது அருள் ஆன்மாவிற்கு இருநிலையிலும் உபகரிக்குமாற்றால் ஆன்மாப் பக்குவம் எய்திப்பயன் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல
ஆராத காதல் குருபரன் பால் ஆகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய ஞானத்தின் கண் விருப்பம் மிக மிக, அது காரணமாகர ஞானாசிரியன்பால் அடங்காத அன்பு உளதாக, அதனால், அவ்வாசிரியன் அவன் மேல் தனது திருவடியைச் சூட்டி அருள்செய்ய, அவ்வாற்றானே, `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்கு சாதனங்களையும் முற்றி உலகியலில் நீங்கினவனே அறிவுடையோரால் `ஞானி` என ஆராய்ந்து கூறப்படும் முதிர்ந்த ஞானியாவான்.

குறிப்புரை :

சீராரும் ஞானம், சிவஞானம். இதில் இச்சை மிகுதல் தீவிரதர சத்திநிபாதத்தினாலாம். `சாராத சாதகம் நான்கும் உற்றேன்` என்றாராயினும், `சாதகம் நான்கினாலும் சாராமை உற்றேன்` எனறலே கருத்தென்க. சார்தற்குச் செயப்படுபொருளாகிய `உலகியல்` என்பது வருவிக்கப்பட்டது ஈற்றடியில் உள்ள ``அடிவைக்கவே`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டி உரைக்க.
இதனால், முதிர்ந்த பக்குவத்தில் உளதாம் தீவிரதர சத்திநிபாதத்தில் நிகழும் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

பொழிப்புரை :

உண்மை ஞானாசிரியனாயுள்ளவன் சிவ ஞானத்தை உணரத்தத்தக்க அதிபர்குவர்கட்கே அதனை முன்பு கேள்வியளவான் உணர்த்தி, அதன்பின் அவர்கள் அதனைச் சிந்தித்துத் தெளிந்த தெளிவு நிலையில் சிவனது வியாபகத்துள் அவர்களை வியாப்பியமாகச் செய்தலாகிய நிட்டையை எய்துவித்து, அந்நிட்டை நிலைபெற்ற வழி கிழக்கு முதலிய திசைப் பாகுபாடுகளுள் யாதும் இல்லாதவாறு சிவனது வியாபகத்தை முற்றுமாகத் தலைப் படுவிப்பன். அங்ஙனம் அச்செயல் அனைத்தையும் அவன் செய்வது, அனைத் துயிர்களையும் உடைய அருட் சத்தியைத் தியானித்தே.

குறிப்புரை :

மின் - மின்போலும் பெண். `மின்னாகிய ஆவுடையாள்` என்க. அவளை உன்னுதலாவது. தனது ஞானேச் சாக்கிரியைகள் யாவும் அவளாகவே நிற்றல். `ஆவுடையான்` எனப் பாடம் ஓதுவோர், `மின்னையுடைய ஆவுடையான்` என உரைப்பர். `ஆவுடையாள்` என்பதே வழக்கின்கண் மரபுப்பெயராய் வழங்கும். எவ்வாறு ஓதினும், அத்தொடர் சிவோகம் பாவனையைக் குறிப்பதே. துரியமாகிய அருள் நிலையுள் நிறுத்தலை, ``எல்லையுள் இட்டு`` எனவும் அதீதமாகிய ஆனந்தநிலையுள் நிறுத்தலை, `திசைப் பாகு பாடு நீக்கி` எனவும் கூறினார். குணக்கு - கிழக்கு. உத்தரம் - வடக்கு. பச்சிமம் - மேற்கு. கொண்டு - தான் கைக்கொண்டு. என்றது `அவனுக்குத் தோன்றாவகை செய்து` என்றதாம்.
இதனால், அதிபக்குவம் உடையார் குருவருளால் முத்தி நிலையை விரையப் பெறுதல் கூறப்பட்டது. இதனானே, ஞானாசிரியராவார். அதிபக்குவர்க்கு விரைய அருளல் வேண்டும் என்பதும் குறிப்பாற் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

பொழிப்புரை :

குருவருளை விரும்பும் மாணவனே, உன்முன் குருவாய் வந்து நிற்கும் சிவனை அங்ஙனமான சிவனாகவே கண்டு அவனது திருவடிகளில் வீழ்ந்து, ஏகாங்க திரியங்க பஞ்சாங்க சடங்க அட்டாங்கங்களாகிய ஐந்து வணக்கங்களையும் செய்து, பிறவித் துயரால் வருந்தும் உனது குறையை விண்ணப்பித்து, அச்சிவனது அருட்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் புகழ்ந்தபொழுது, நீயிருக்கும் சிறைக்கூடமாகிய உடம்பையே நீ என மயங்கியிருக்கும் உனது மயக்கத்தைப் போக்கி உனது உண்மையை உனக்குத் தெரிவித்து, நீ சிவத்தோடு ஒன்றாகும் நிலையை உன் அறிவு அறியும்படிச் செய்பவனே உண்மை ஞானாசிரியனாவான்.

குறிப்புரை :

``இறை``, குருவாய் வந்து நிற்கும் இறை என்பது அதிகாரத்தால் விளங்கிற்று. ஏகாங்க வணக்கமாவது கைகட்டித் தலையால் மட்டும் வணங்குவது. திரியங்க வணக்கமாவது, இரு கைகளையும் தலைமேற் குவித்துக் கும்பிட்டுத் தலை தாழ்த்து வணங்குதல். பஞ்சாங்க வணக்கமாவது மோவாய் இரு தோள் இரு முழந்தாள் இவ் ஐந்துறுப்பும் நிலத்தில் தோய வணங்குதல். சடங்க வணக்கமாவது, மோவாய் இரு கைகள், மார்பு, இரு கால்கள் இவ் ஆறுறுப்பும் நிலத்தில தோய வணங்குதல், அட்டாங்க வணக்கமாவது, மேற்கூறிய ஆறுறுப்புக்களுடன், இருகாதுகளும் நிலத்தில் தோய வணங்குதல். வணக்கம் நமஸ்காரம் எனப்படும். எட்டுறுப்போடு கூடிய வணக்கத்தை `சாட்டாங்க நமற்காரம்` என்பர். பல `வகையாலும் வணங்கி` என்றவாறு, ``நீ`` என்பதன்பின் `ஒன்றாக` என்பதும், ``அறிவுக்கு`` என்பதன்முன் `உனது` என்பதும், எஞ்சி நின்றன. அறிவித்தல் அறியும் தன்மையை உளதாக்கல்.
இதனால், பக்குவி நல்லாசிரியனை அனுபவத்தில் தெளியுமாறு கூறப்பட்டது. பக்குவம் இன்மையால் நல்லாசிரியனைத் தலைப்படாது, ஆசிரியன் அல்லாதானைத் தலைப்பட்டவழி அதனை அனுபவத்தால் உணர்ந்து நீங்குமாறும் இதுவேயாதல் அறிக. ஆசிரியன் அல்லாதானை அடைந்து பயன் பெறாது எய்த்த மாணவன் அவனை வருத்தத்தோடு விட்டு நீங்கி நல்லாசிரியனை நாடிச் செல்லு தற்கு. தேன் இல்லாத மலரை அடைந்த தேனீ பின்னர் அதனைவிட்டுத் தேன் உள்ள மலரை நாடிச்செல்லுதலை உவமையாகக் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 13

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.

பொழிப்புரை :

காமியத்தை நிரப்பும் நெறி வேத நெறியாக, அதனை விடுத்து நிட்காமியமாவது சிவனிடத்துச் செய்யும் பத்தியே யாதலாலும், ஒழுக்கமாகிய நீரை உலகியலாகிய மடையினின்றும் மாற்றிச் சித்தாந்த நெறியாகிய மடையிற் பாய்ச்சி ஆசையை ஒழிக்கும் உண்மை வேதாந்தியே குருவாகத்தெளிந்து அவன் திருவடிகளில் தாழ்ந்து வணங்கி, அவன் வழி நிற்பவனே சற்சீடனாவன்.

குறிப்புரை :

`வேதத்தை வேட்கைவிடும் நெறி` என்றமை யால், `வேத நெறி அதனையுடையது` என்பது பெறப்பட்டது. அஃதாவது, பலவகை வேள்விகளால் இம்மை மறுமை உலகங்களில் உள்ள இன்பத்தை அடையும் நெறியாம். ``வாழ்க்கை`` என்றது ஒழுக லாற்றை. `புனலைச் சித்தாந்தத்து ஆக வழிமாற்றி என்க. வழி, இயல் பாய் அமைந்த உலகியல் `ஆக` என்பது தொகுத்தப்பட்டது. முதல் மூன்று அடிகளால், `உண்மை வேதாந்தியாவன் சித்தாந்தியே` என்பது உணர்த்தப்பட்டதாம். இதன்கண் மூன்றாமெழுத் தெதுகை வந்தது.
இதனால், சற்குரு (நல்லாசிரியன்) கிடைக்கப் பெற்றோனே பக்குவியான சற்சீடன் (நன்மாணாக்கன்) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

பொழிப்புரை :

சற்குணம் முதல் அற்புதம் ஈறாக உள்ள ஏழியல்பும் உடையவனே சற்சீடனாவான்.

குறிப்புரை :

சற்குணம் - நற்பண்பு. அது மனம், மொழி, மெய் என்னும் மூன்றனுள் யாதொன்றானும் பிறவுயிர்க்குத் தீங்கு தேடாது இயன்ற அளவு நன்மை தேடுதல். விவேகம் - நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து, தீமையை விலக்கி, நன்மையைக் கொள்ளல். தண்மை - யாவர் மாட்டும். எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடைமை. சிற்பர ஞானம் - பேறறிவாகிய பரம்பொருளை அறியும் அறிவு. அதனைத் தெளிதற் பொருட்டு அதற்குரிய வாற்றால் ஓர்தலாவது. நூல்களாலும், பொருந்துமாற்றானும் ஆராய்ந்து ஒருமைபெற உணர்தல். அற்புதம் தோன்றலாவது! உலகியலில் நின்றபொழுது தோன்றாத புதுமைகள் தோன்றப் பெறுதல். அஃதாவது, ``பேரா, ஒழியாப், பிரிவில்லா, மறவா, நினையா, அளவிலா, மாளா இன்ப மாக்கடல்`` l போலப் புதிது புதிதாக எல்லையின்றி விளையக் காண்டல். `சற்சீடன்கண் ஆகும்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `சற்சீடன்கண் ஆகும்` எனவே, `அது` பக்குவத்தின் பயன்` என்றதாயிற்று. `சற்சீடற்கே` எனப் பாடம் ஓதலுமாம்.b
இதனால், பக்குவ மிகுதியது பெரும்பயன் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி