ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்


பண் :

பாடல் எண் : 1

இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.

பொழிப்புரை :

[ஏதோ ஒன்றை மட்டுமே `இலிங்கம்` என உலகவர் நினைத்தால்,] இலிங்கம் - என்பதன் உண்மையை உணர்ந்தவர் அரியர். எட்டுத் திசைகளாய் விரிந்து காணப்படும் உலகம் முழுதுமே இலிங்கம். அறுபத்து நான்காகச் சொல்லப்படுகின்ற கலைகளும் இலிங்கம். இறைவன் உலகத்தைத் தனது அருட்குறியாகவே உண்டாக்கினான்.

குறிப்புரை :

``ஆவது`` என்பன இரண்டும் தொழிற் பெயராய் நின்றன. ``எண்டிசை`` என்றதனால் பொருளுலகமும் ``எண்ணெண் கலை`` என்றதனால் சொல்லுலகமும் குறிக்கப்பட்டன.
இதனால் எல்லாம் இலிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே.

பொழிப்புரை :

உலகத்தைத் தோற்றுவித்த இறைவன் உலகில் அனைத்துப் பொருள்களையும் ஆக்கியது தனது சத்தியே பொருளாக வும், பொருளின் வடிவமைப்பாகவும், குணமாகவும் அமைத்தேயாம்.

குறிப்புரை :

`அதனால் உலகமே இலிங்கம் ஆதலில் ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம். `எல்லாம் சிவமயம்` என்றல், சிவன் சத்தியாய் நிற்கும் நிலைபற்றியே என்பது தெளிவாகலின், இவ்வாறு கூறினார். கூறவே, `சிவனது திருமேனி சத்தியாதல் பற்றி உலகமே இலிங்கமாதல் தெளிவாகும்` என்பதாம். ``பொருள்`` என்றது செயலாற்றலும், பயன் தருதலுமாகிய இவைபற்றி. `முதல்` எனினும் `பொருள்` எனினும் ஒக்கும். ஈற்றடியை முதலிற் கொள்க.
இதனால், உலகமே இலிங்கமாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.

பொழிப்புரை :

ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களினின்றும் நீங்கித் தான் தனித்து நிற்கும் நிலையையும், அதன்பின் அது தன்னைப் பெற்று நிற்கும் நிலையையும், அந்நிலைக்கண் விளைகின்ற தனது பரபோகத்தையும் தருதலேயன்றி, உடம்பும், அதனால் உண்டாகின்ற புலன் உணர்வும் அதனால் வரும் புலன் இன்பமும் என்னும் இவற்றையும் தந்து நிற்பான் சிவன் ஆதலின் அவன், சிவாகமங்களில் பாசக் கூட்டமாகச் சொல்லப்படுகின்ற ஆறத்துவாக்களாயும் விளங்குவான்.

குறிப்புரை :

`ஏகமும், முத்தியும், போகமும் - ஆகமும், புத்தியும், சித்தியும், என ஓதற்பாலதனைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். சிவன் தன்னையடையச் செய்தலே முத்தியாதலை நினைக. யோகம், ஏற்புழிக் கோடலால் பரபோகமாயிற்று. எண்ணிய எண்ணியாங் கெய்தும் உலகபோகத்தை, ``சித்தி`` என்றார். உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் உடன் வைத்துக் கூறிய குறிப்பால், `உயர்ந்தவற்றையேயன்றித் தாழ்ந்தவற்றைத் தருபவனும் சிவனே` என்பது போந்தது. தாழ்ந்தவற்றைத் தருதல் அவற்றின்கண் உவர்ப்புத் தோன்றுதற் பொருட்டு,
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப்பகுதி, 52
என்றாற்போலும் திருமொழிகளை நினைக.
`பாசமாகிய அண்டங்கள் அனைத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் பாசங்களாகிய அண்டமாய் நிற்றல் எவ்வாறு என்னும் ஐயத்தை நீக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
``அண்டமாய், ஆதியாய், அருமறையோ டைம்பூதப் பிண்டமாய் உலகுக்கோர் மெய்ப்பொருளாம் பிஞ்ஞகனை``
-தி.4 ப.7 பா,4
என நாவுக்கரசரும் அருளிச்செய்தார். இதனானே பிண்டமும் இலிங்க மாதற்கு ஐயமின்று என்பது பெறப்படும்.
இதனால் அண்டம் இலிங்கமாதல் பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.

பொழிப்புரை :

தேவர் பலரும் தாம்செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவன் உருவத்திருமேனி கொண்டு வெளிப்படக் கண்டு புகழ்ந்தும், வாழ்த்தியும், இன்பப் பொருளாக உணர்ந்தும், வேண் டுவார் வேண்டுவதை அருளப்பெற்று, `வரையாது வழங்கும் வள்ளல்` என ஆரவாரித்தும் நின்றாராயினும், `அவன் உண்மையில் உலகங் கடந்தவனே` என்னும் உண்மையை உணர்கின்றிலர்.

குறிப்புரை :

`அஃது அவர்கள் அவனைத் தம்மில் ஒருவனாக எண்ணும் அதனால் விளங்கும்` என்பது கருத்து. எனவே, `அவன் அண்டலிங்கமாய் நின்று வழிபடுவார் செய்யும் வழிபாட்டினை ஏற்றுப் பயன் தருவானாயினும் உண்மையில் அவன் உலகங்கடந்தவன் என்பதை அறியாமை குற்றமாம்` என்றபடி. அவனது உண்மை நிலையை அறிந்த பொழுதே, `அவன் நமக்காக இறங்கி வந்து அருள் செய்கின்றான்` என்பது விளங்க, அதனால் அவன்மாட்டு அன்பு நிகழ் தலும், அதனை அறியாத பொழுது அங்ஙனம் அன்பு நிகழாமையும். அன்பு நிகழாது செய்யும் வழிபாடு, வழிபாடு ஆகாமையும் உளவாதல் பற்றி, `அவனது உண்மையை உணராமை குற்றம்` எனக் கூறினார்.
இதனால் `அண்டலிங்கம் முதலிய இலிங்கங்களாய்ச் சிவன் நிற்றல் உயிர்கள் மாட்டுவைத்த அருள் காரணமாக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.

பொழிப்புரை :

அந்தப் பரம்பொருளாகிய சிவம் தீக் கடவுள், அயன், மால், உபப்பிரமா, சூரியன், சந்திரன் ஆகியோரது கண்களுக்கு அவரவர் வழிபடும் இலிங்கமாகியும், அவ்விலிங்கங்களை வழிபடும் பொழுது அவர்கள் விரும்பியவற்றை வழங்க எங்கும் வெளிப்படும் அழகிய மூர்த்திகளாயும் விளங்கினும் எங்கும் கலந்து நிற்கும் பெரும்பொருளேயாகும்.

குறிப்புரை :

``தற்பரம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. பிரமனால் அவனது படைத்தற்றொழிலை இயற்றப் படைக்கப் படுபவர், `உபப்பிரமாக்கள்` எனப்பட்டு, `பிரசாபதிகள்` எனவும் கூறப் படுவர். `தட்சப் பிரசாபதி` என்பது காண்க. தேவருள் சிறப்புடைய சிலரை எடுத்துக் கூறியவாறு. செவ்வேள் ஈற்றில் `இவர்தம்` என்பது தொகுத்தலாயிற்று. `கட்சுடர்` என்னும் நான்காவதன் தொகை எதுகை நோக்கி மெலிந்து நின்றது. அதன்கண் ``சுடர்`` என்றது இலிங்க வடிவினை. தேவர் யாவரும் லிங்க வடிவில் சிவனை வழிபடுதல் வெளிப்படை. ``கலந்தெங்கும்`` என்பதை இறுதியில் ``ஆம்`` என்பதனோடு இயைத்து முடிக்க. `அத்தேவர்கள்` எனச் சுட்டுவருவித்துக் கொள்க. சிவனது மூர்த்தம் நிறத்தால் பொங்கழலோடு ஒப்பதாயினும், வெப்பம் இன்றித் தட்பக் குணமேயுடைத்தாய் இருத்தல் பற்றி, `தண்சுடராய்` என்றும், வழிபடுவார் வழிபடும் இடங்கள்தோறும் அவர்க்கு அருள்புரியத் தோன்றுதலால், ``எங்கும் தண்சுடராய்`` என்றும் கூறினார். ``எங்கும் கலந்து ஆம்`` என்பதில் ஆதல் உளதாதல்.
இதனால், `அவன் இலிங்கம் முதலிய கண்டப் பொருளாய்த் தோன்றினும் அகண்டப் பொருளேயாதலை நினைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. ``எங்கும் தண்சுடராய்`` என்றதனால் இலிங்க வடிவில் வழிபடுவார்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிதல் குறிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.

பொழிப்புரை :

சிவனது மிக மேலான உண்மை நிலையை உணர்ந்து அவனை வழிபடுவோர் மிக அரியர். அதனை உணர்ந்து வழிபடுகின்ற அவர்கட்கும் பூவைத் தன்னுள்ளே அடக்கியுள்ள அழகிய கொடி அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போலத் தனது உண்மை நிலையை வெளிப்படுத்துவான். ஆகவே அவனது பொது நிலையாகிய இலிங்க வடிவிலும் அவன் நின்று படிமுறையால் மேல் நிலையை அருளுவான்.

குறிப்புரை :

`ஆகவே இலிங்க வடிவம் அவனது அகண்ட நிலையோ, உண்மை நிலையோ அன்று என இகழாது கொள்க` என்பது குறிப்பெச்சம். ``தாபரத் துள்நின்று அருளவல்லான்`` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க. தாபரம் - பெயர்ப்பொருளாகிய திருவுருப் படிமங்கள். ``வழிபடுவாளர்க்கும்`` - என்பது பாடம் அன்று. ``ஆகும்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. சுட்டிக் கூறா உவமம் ஆகலின் பொதுத் தன்மை வருவிக்கப்பட்டது.
இதனால், இலிங்க வழிபாட்டின் சிறப்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :

கருவறையின்மேல் உயர்ந்து விளங்கும் விமானங்கள், `தூல லிங்கம்` என்பதும், கருவறையில் மூலமாய் விளங்கும் இலிங்கம் `சூக்கும லிங்கம்` என்பதும், திருவாயிலின் முன் விரிந்து காணப்படும் பலிபீடம், `பத்திரலிங்கம்` என்பதும் சிவா லயங்களின் உண்மையைச் சிவாகம நெறியால் ஆராய்ந்துணர்வார்க்கு விளங்குவனவாகும்.

குறிப்புரை :

``விமானமும்`` என்னும் உம்மை, `சதாசிவ மூர்த்தியே யன்றி` என இறந்தது தழுவி நின்றது. அண்டத்தின் உள்ளாய் விளங்கும் பொருள்களும் இலிங்கங்களாதல் இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.

பொழிப்புரை :

முத்து முதலிய இவை பலவும் இலிங்கமாகச் செய்து கொள்ளுதற்குரிய பொருள்களாகும்.

குறிப்புரை :

மொய்த்த - ஒளிமிகுந்த. கொம்பு - மரக்கழி. ``கொத்தும்`` என்றதனால், அது செதுக்கி உருவாக்கப்படுதல்` விளங்கிற்று. கோமளம் - அழகு. அஃது ஆகுபெயராய் இரத்தினத்தை உணர்த்திற்று. இதனால், படிகம், மரகதம் முதலாக எஞ்சிய இரத்தினங்களைக் கொள்க. சிலை - கருங்கல் வகைகள். `மாக்கல் கூடாது` - என்பர். ஆகமம் - சிவாகமம் எழுதப்பட்ட சுவடி. திருமுறைச் சுவடி களும் இதனானே பெறப்படும். அன்னம் - சோற்றுருண்டை. அரிசி - அரிசித்திரள். பூ - தனி மலரும், கோத்த மலரும். இனி இதனை இரட்டுற மொழிந்து, `மண்` எனவும் கொண்டு, `பிசைந்து பச்சையாக வைக்கும் மண்ணும், சுட்டுக் கொள்ளும் மண்ணும்` என உரைக்க. `இலிங்கம் உய்த்து அதன் சாதனம் ஆம்` என மொழிமாற்றி, `இலிங்க மாகச் செயப்பட்டு அதற்கு மூலப்பொருளாம்` என உரைக்க. சாதனம் ஆதல் முக்காலத்தினும் ஒக்கும் ஆதலின். அதனை இங்கு இறந்த காலத்தில் வைத்துக் கூறினார். ஏகாரம் ஈற்றசை.
சிவவழிபாடு `ஆன்மார்த்தம், பரார்ரத்தம்` என இரு வகைப் படும். ஆன்மார்த்தம் - தன்பொருட்டு. பரார்த்தம் - பிறர் பொருட்டு. அவரவரும் தம் தம் இல்லத்திலாயினும், பூசைப் பெட்டகத்திலாயினும், இலிங்கத்தை எழுந்தருள்வித்துக் கொண்டு வழிபடுவது ஆன்மார்த்த வழிபாடு. வீரசைவர், `இலிங்கம் அங்கத்திலே (உடம்பிலே) ஒன்றாய் நீங்காதிருக்கத் தக்கது` எனக் கொண்டு வழிபாட்டுக் காலத்தில் இலிங்கத்தை இடக்கையிலே வைத்து, வலக்கையால் வழிபடுவர்.
உலகம் முழுவதற்குமாகத் திருக்கோயில்களில் இலிங்கம் எழுந்தருள்வித்துச் சிவாசாரியர்களால் செய்யப்படுவது பரார்த்த வழிபாடு.
இவ்விரண்டனுன் மேலை மந்திரம் பரார்த்த லிங்கம் ஆவன வற்றைக் கூற இம்மந்திரம் ஆன்மார்த்த லிங்கம் ஆவனவற்றைக் கூறிற்று.
பரார்த்த லிங்கம் இடம் விட்டுப் பெயராதிருத்தலால், `அசல லிங்கம்` என்றும், ஆன்மார்த்த லிங்கம் வேண்டும் இடங்களில் கொண்டு செல்லப் படுதலாலும், வழிபாட்டின் பொழுதும், அதற்குப் பின்னும் இடம் மாற்றி வைக்கப்படுதலாலும் `சல லிங்கம்` என்றும் சொல்லப்படும். சலம் - அசைவுடையது, அசலம் - அசைவில்லது. இவற்றுள் மேலைமந்திரம் அசல லிங்கமாவனவற்றைக் கூற, இம் மந்திரம் சவலிங்கமாவனவற்றைக் கூறிற்று. இவற்றுள் அசலல லிங்கம் ஆதற்கு உரியனவும் உள; அவற்றை அறிந்து கொள்க.
இனி சல லிங்கமும், `கணிகம், திரம்` - என இரண்டு வகைப்படும். கணிகம் - நிலையில்லாதது; அவ்வப்பொழுது ஆக்கி அமைத்து, வழிபட்டவுடன் விட்டு விடப்படுவது.
திரம் - நிலையுள்ளது, அஃது ஒருமுறை எழுந்தருள்வித்துக் கொண்டு, வாழ்நாளளவும் விடாமல் வழிபடப்படுவது.
`இவற்றுள் இங்குக் கூறப்பட்டவை இன்ன இன்ன இலிங்கமாதற்கு உரியன` என்பது அந்த அந்தப் பொருள் இயல்பு பற்றியும் அவரவரது கருத்துப் பற்றியும் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம்
வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முத்து முதலியனவேயன்றித் தயிர் முதலியனவும் இலிங்கம் ஆதற்குரிய மூலப்பொருள்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிந்தெடுத்துக்கொள்க.

குறிப்புரை :

``துய்ய`` என்றது, `பசுவினின்றும் தோன்றுவது` என்ற தாம். இதனை தயிர் முதலிய நான்கிற்கும் கொள்க. மெழுகு - மெழு குதல்; முதனிலைத் தொழிற்பெயர். இஃது ஆகுபெயராய், அதற்குக் கருவி யாகிய சாணத்தைக் குறித்தது. ஆனைந்தில் (பஞ்ச கௌவியத்துள்) கோ நீர் தவிர ஏனை நான்கும் இங்குக் கூறப்பட்டன. தயிர் பால் நெய்கள் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளப்பட்டும், சாணம் பிடித்து வைக்கப் பட்டும் ஆவில் ஐந்தும் கலந்து நிறைகுட வடிவில் இலிங்கமாகும். நெய், சிறப்பாக வெண்ணெயே ஆகும். கன்றிய செம்பு - உருக்கி வார்க்கப் பட்ட தாமிரம். கனல் - எரியும் நெருப்பு; இது வேள்வித் தீ. பெரிதாய் எரியும் விளக்கும் ஆகும். வேள்வித் தீயில் குண்டமும், விளக்கில் தகழியும் பீடமாய் இருக்கும். ஒரு தகழியில் பல சுடர்கள் ஏற்றப்பட்டால் அவை முகங்களாகும். இரதம் - சித்த மருத்துவ முறையில் பண்ணப் படும் இரசக் கல். சந்தம் - சந்தனம். வில்வம் - வில்வக் காயும், பழமும். பொன் செம்பொன்னும், வெண் பொன்னும். இவை உருக்கி வார்க்கப் பட்டு இலிங்கமாம். `தேன்` என்பது எதுகை நோக்கிக் குறுகி நின்றது. தேனும் பாத்திரத்தில் கொள்ளப்படும். `தென்`, அழகுமாம். திருக் கொட்டை - உருத்திராக்கம்.
இதனால் கணிக லிங்கம் ஆம் ஆவனவே கூறப்பட்டன. `சலம் தென்தியங்கொன்றை` என்பனவும் பாடம்.
இரத்தினத்தால் ஆயவை `இரத்தினசம்` என்றும், பொன்னால் ஆயவை `உலோகசம்` என்றும் கல்லால் ஆயவை `சைலசம்` என்றும் பொதுப் பெயர் பெறும். ஏனைய ஒவ்வொன்றேயாம்.
இவ்விலிங்க வகையால் பயன் வகைகள் ஆகமங்களில் சொல்லப்படுகின்றன. எனினும் நாயனார் பொதுவாகவே கொள்ளவைத்தார்.

பண் :

பாடல் எண் : 10

மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

அந்தணர் முதலிய வருணங்களை ஒழுக்கம் பற்றிக் கொள்ளுதலே தமிழ்நெறி, வாணம் - பாணம். இதுகல்லால் ஆகியது; கோமளம் - இரத்தினம்` என்பதும் ``முத்துடன் மாணிக்கம்`` என்னும் மந்திரத்தில் (பா.1696) கூறப்பட்டது.
[பதிப்புகளில் இதன்பின் காணப்படுகின்ற இரண்டு மந்திரங்களும் இவ்வதிகார இறுதியில் நிற்றற்கு உரியன.]

பண் :

பாடல் எண் : 11

போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.

பொழிப்புரை :

அண்டமாகிய இலிங்கத்தில் பூமி சிவனது திருவடி களாயும், அண்ட முகடு திருமுடியாயும், வானம் திருமேனியாயும் அமையும், ஆகவே, அண்டமாகிய இலிங்கத்துடன் சிவன் நிற்றல் மேற்கூறியவாறாகும்.

குறிப்புரை :

மாது - கங்கை, ``உள், ஈசன்``, `உளனாகிய ஈசன்` எனப் பண்புத் தொகை, இது மேல் நின்ற `கழல், முடி` என்பவற் றோடும் இயைந்தது.
இதனால் அண்டலிங்கம் சிவனது திருவடி முதலிய உண்மை உறுப்புக்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.

பொழிப்புரை :

இன்னும் அண்டலிங்கத்தில் பூமி பீடமாயும், வானம் பீடத்தின் மேல் உள்ள இலிங்கமாயும், கடல் நீர் திருமஞ்சனக் குட நீராயும், மேகம் அந்த நீரை முகக்கின்ற கலமாயும், திசைகள் எல்லையற்ற சிவனது உந்தியின்மேல் உடுக்கப்படும் உடையாயும் நிற்கும்.

குறிப்புரை :

`தரை, சத்தி` என இயையும். உள்ள - இலிங்கம் பொருந்தி நிற்கின்ற - பீடம் சத்தி வடிவாதல் பற்றி, ``சத்தி`` என்றார். நீர் - சால், குடம். `ஐ` `அழகிய நீர்` என்க. ``மஞ்சு நீர்`` என்பதில் உள்ள ``நீர்``, தானியாகு பெயர். கரை - எல்லை; என்றது திசையை. ``கரை`` என முன் வந்தமையின் ``அற்ற`` என்றே போயினார். `அற்ற நந்தி உந்திக்குக் கலை ஆம்` என மாற்றிக்கொள்க. உந்திக்கு - உந்திக்கண், வேற்றுமை மயக்கம்.
இதனாலும் அண்டலிங்கம் சிவனது உபசார அங்க உபாங்கங்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.

பொழிப்புரை :

உபநிடதங்களின் வழி தன்னை `அது` என்னும் அளவில் தன்னைப் பொதுவாக உணர்ந்தவன் பின்பு தனது ஒப்பற்ற இயல்புகளைச் சிறப்பாக உணர வேண்டி ஆராயும்பொழுது அவன் அவ்வியல்புகளுள் ஒன்றையேனும் உணராதபடி மறைந்து நிற்கின்ற சிவன், வேதாந்திகட்கு மிகவும் புதுமையாய்த் தோன்றுகின்ற அண்டலிங்கமாகிய இந்தத் தன்மையை உணர்ந்த என் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குகின்றான்.

குறிப்புரை :

``அது`` என்றது வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள - தற்பதத்தினை. அப்பதத்தின் பொருளை அப்பதமாகக் காரியத்தைக் காரணமாக உபசரித்துக் கூறினார். ``நாடி`` என்னும் எச்சம் ``உணரா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தது. `தேடி யறிந்திலர்` என்பது போல `எதுவும்` என்னும் இழிவுசிறப்பும்மை தொகுக்கப்பட்டது; `அண்டமே இலிங்கம்` என்னும் சைவாகமப் பொருள் வேதாந்திகட்குப் புதுமையாய்த் தோன்றுதல் பற்றி அதனை, ``புது உணர்வு`` என்றார். அசுத்த மாயா புவனங்கள் பூதபுவனம், தன் மாத்திரைப் புவனம், மனோ புவனம், அகங்கார புவனம், புத்தி புவனம், பிரகிருதி புவனம், புருட புவனம், மாயா புவனம் என ஓராற்றால் எட்டு வகைப்படுதல் பற்றி அவற்றை, ``புவனங்கள் எட்டும்`` என்றார். ``எட்டும்`` என்றது அதிகார இயைபால், எட்டும் இலிங்கம் ஆதலைக் குறித்தது. `இது உணர்ந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அண்டலிங்கத்தின் உண்மையை உணர்ந்ததனால் தாம் எய்திய பயனைக் கூறவே, `பிறரும் அதனை உணர்வாராயின் அப்பயனைப் பெறுவர்` என்பது தானே அமைந்தது.
ஈசன் உடலைக் கோயிலாகக் கொள்ளுதல் உள்ளத்தில் வீற்றிருத்த லாலேயாம். இஃது இவ்வாறு கூறப்படும் பிற இடங்கட்கும் ஒக்கும். இதனை இட்டலிங்கமாக உடம்பில் பொருந்தியிருத்தலாக உரைப்பாரும் உளர்; முன்னைத் தந்திரத்தில் நாயனார் `தவ வேடம்` கூறிய இடத்திலாதல், பிறிதோர் இடத்திலாதல் தூல உடலில் சிவன் வேறோர் இலிங்கமாய்ப் பொருந்தியிருத்தலைக் கூறிற்றிலர். ஆதலால், அது பொருளாகாமை அறிக.
இதனால், அண்டலிங்கத்தினை உணராதாரது தாழ்வும், அதனை உணர்ந்தாரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

பொழிப்புரை :

அடியவரது பாவத்தை ஒழிப்பவனாகிய சிவன் அண்டமே இலிங்கமாகக் கொண்டு அமர்ந்திருத்தல் அன்றியும் உண்மையை உணராமையால் வீணாய் ஒழிகின்ற ஒரு நிலையில் பொருளாகிய உடம்பினுள்ளே அதன் நடுவிடமாகிய இருதய தாமரையைத் தான் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்டு விளங்குகின்ற புண்ணிய மூர்த்தியாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அகலிடமாயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அறியாமையாவது, ஊனுடம்பே சிவனுக்கு ஆலய மாயும் இருத்தலை அறியாமை. ``அறியாமல்`` என்பதன் பின், `இருத் தலால்` என்பது எஞ்சி நின்றது. `அறியாமை` எனப் பாடம் ஓதி, `அறியா மையால்` என உருபு விரித்தலும் ஆம். ``அறியாமல் அடங்கும்`` என்ற தனால், ``பயனின்றி`` என்பது பெறப்பட்டது. உகல் - உகுதல்; அழிதல். பகல் - நடுவிடம். `நுகத்திற் பகல் ஆணிபோல நடுவு நிலைமையை உடையர்` என்றல் வழக்காதல் அறிக. (``நெடு நுகத்துப் பகல்போல - நடுவு நின்ற நன்நெஞ்சினர்`` - பட்டினப் பாலை - 106, 27. ``பகலன்ன வாய்மொழி`` - புறப்பொருள் வெண்பா மாலை - வாகைப்படலம் - அரச வாகைக்கொளு) `முனம்` என்பது பாடம் அன்று. புண்ணியம், சிவபுண்ணியம், `அப்புண்ணியத்திற்கு ஏற்புடைய மூர்த்தி` என்றபடி. உள்ளக் கோயிலில் வழிபடுதல், `கிரியை, யோகம்` என்னும் சிவ புண்ணியங்களாதலை நினைக. சிவனை, ``பாவ வினாசன்`` என்றதனால் `இவ்வழிபாட்டில் நின்றாரது வினையைப் போக்குபவன் அவன்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது. சிவபுண்ணியத்தை நோக்க உலக வினைகளுள் நல்வினையும் பாவமேயாகும்.
இதனால், முன்னை மந்திரத்தில் ``உடல் கோயில் கொண்டான்`` எனப் பொது வகையாற் கூறியது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.
இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் ஆயின.
சிற்பி