ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்


பண் :

பாடல் எண் : 1

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

பொழிப்புரை :

மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.

குறிப்புரை :

``வடிவு`` என்பவற்றை எல்லா அடிகளிலும் ஈற்றில் வைத்து உரைக்க. ``வடிவு`` என்றது, `அதன் மயம்` என்றபடி. இலிங்க மாதல் கூறுவார் பிறவாதலையும் உடன் கூறினார். அங்ஙனம் கூறவே, `ஊன் மயமாய்ச் சிறிதாய் நிற்கும் மானுட யாக்கை அருள் மயமான இலிங்கமாதல் எவ்வாறு` என்னும் ஐயத்திற்கு இடமில்லையாயிற்று. `இறைவன் எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாய் நிற்றலால், மானுட யாக்கை அவனது பொருள்கள் எல்லாமாய் விளங்கும்` என்பது கருத்து.
வந்தி - வந்தித்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
இதனால், அண்டம்போலப் பிண்டமும் இலிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உலந்திலிர் பின்னும் `உளர் என நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி ஊன்நவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

பொழிப்புரை :

உடம்பில் பொருந்தியுள்ள அழுக்கினை மண் குழைத்த நீர் போக்கித் தூய்மை செய்து, சிவனை அந்த உடம்பாகிய இலிங்கத்திலே வழிபடுங்கள்; இறந்த பின்னும் இறந்தவராக மாட்டீர்; என்றும் ஒரு பெற்றியை உடையிராய் வாழ்வீர்.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டி, `பின்னும் உலந்திலிர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உலந்திலிர்`` எனப் பின் வருவதனால், ``உலந்த பின்னும்`` என்பது பெறப்பட்டது. `என்றும்` என்பது, ஆற்றலால் வந்தியைந்தது.
`உடம்பையே இலிங்கமாக வைத்து வழிபடப் புகும்பொழுது உடம்பை மாசு போக மண்ணாற் கழுவிக் குளித்தல் தவறாமற் செய்யத் தக்கது` என்பது உணர்த்துதற்கு அதனை எடுத்தோதினார், `ஊன்நவை நிலந்தரு நீர் தெளி செய்ய` என்க. பூதங்கள் ஐந்திலும் தனித் தனியே இறைவனை எண்ணி வழிபடுதல் உண்டு ஆகலின், ``அவை ஐந்தும் ஒன்றாக வந்தி செய்யீர்`` என்றது, `அவை ஒருங்கு கூடி ஒன்றாய்ப் பரிணமித்த உடம்பிலே அவனை எண்ணி வழிபடுக` என்றதாயிற்று, வலம் - வெற்றி. சிவன் தன்னை வழிபடுபவர்க்கு வெற்றியைத் தருதலாவது, அவர் நினைத்தவற்றை நினைத்தவாறே கைகூடச் செய்தல். இதனால், இவ்வழிபாட்டின் இடைநிலைப் பயனாகச் சிலவற்றைப் பெறுதல் குறிக்கப்பட்டது. `பிற பயன்கள் இடைநிலையாகக் கிடைப்பினும் முடிநிலைப் பயனாகிய வீடுபேறு உளதாம்` என்பது முதலடியில் கூறப்பட்டது. இறந்த பின்னும் இறந்தவர் ஆகாமையாவது, மீளப் பிறவாமை. என்னை? இறந்தவர் பிறத்தல் ஒருதலையாகலின்.
இதனால் பிண்டலிங்க வழிபாடு எல்லாப் பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக
ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.

பொழிப்புரை :

உடம்பை இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டு அதன்கண் எழுந்தருளியவுடன், அதனைத் தங்கள் இல்லமாகக் கொண்டு வாழ்ந்து அதில் உள்ள உயிரை அலைக்கழித்து வந்த ஐம்புல வேடர், தம் நிலைமாறி, அந்த உடம்பு தானே அதில் உள்ள உயிர்க்கு உய்யும் வழியாக உடன்பட்டு, அவ்வுயிரின் வழிநின்று அதற்குத் துணைபுரிவர். அந்த முறையில்தான் அந்த ஐம்புல வேடரை அவர் குறும்பை அடக்கி ஆளுதற்குரிய தலைவனாகிய மனம் அவர் வழிப்படுதலை விட்டு என்வழிப்பட்டது. அதனால், `அந்த உடம்பாகிய இல்லத்தைச் சிவன் தன் இல்லமாக ஏற்றுக்கொண்டு என்னை ஆட்கொள்ளுதற்கு அதன்கண் வந்து வீற்றிருக்கின்றான்` என்று உணர்கின்றேன்.

குறிப்புரை :

முன் இரண்டடிகளில் பொது முறைமையைக் கூறி, அஃதே பற்றித் தாம் எய்திய பயனைப் பின் இரண்டடிகளில் விளக்கினார்.
`கோயில் கொண்ட` - என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. இதில் உள்ள இறந்த காலம் எதிர்காலத்தது, `நாளைக் கூற்றுவன் வந்தான், என் செய்வை` என்பது போல ``வாயில்`` என்பதன் பின் ஆக்கச் சொல் வருவிக்க. இதன் பின் உள்ள கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல்; உடன்படுதல்.
``தாய் இல் கொண்டாற்போல்`` என்றது, `அயலார் மனைகளில் மாறி மாறிச் சென்று ஒதுக்கிருந்தவன், தன் முன்னோர் கட்டி வைத்துத் தனக்கு உரித்தாகிய இல்லத்தை அடைந்து நிலைத்தாற் போல` என்றபடி. அகரச் சுட்டுச் செய்யுளில் நீண்டு நின்றது; `அவ்வில்` என்றது, உடம்பாகிய இல்லத்தை.
இதனால், பிண்டலிங்க வழிபாட்டினால் புலன் அடக்கம் உண்டாக, இறையருள் கைகூடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.

பொழிப்புரை :

எங்கள் பெரும்பெருமான் மக்கள் உடம்பைக் கோயிலாக் கொண்ட நிலையில் புழைக்கடையாகிய மூலாதாரத்தை யும், அதற்குமேல் குய்யத்திற்கு அணித்தாயுள்ள சுவாதிட்டானத்தை யும் தன்னை அக்கோயிலிலே காண்பதற்குரிய வழிகளாகக் கொண்டும், உடம்பின் உள்ளே உள்ள நாடிகளில் தலையானவையாம் பத்து நாடிகளின் செயற்பாடுகளை அக்கோயிலில் நிகழும் வழி பாட்டுச் செயல்களாக ஏற்றும் விளங்குதல் செய்து, அதனால் புலன்கள் ஐந்தனையும் அடங்கப் பண்ணி, அவ்வுடம்பையே தான் மக்கள் உயிர்க்கு அருள் பண்ணும் வாயிலாகக் கொண்டிருக்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் மக்கள் உடம்பு அவன் விளங்கி நிற்கின்ற இலிங்கமும் ஆகின்றது` என்பது குறிப்பெச்சம். ``அடி`` இரண்டும் `மூலம்` என்னும் பொருளைத் தந்தன.
பிறகிடுதல் - புறங்காட்டுதல்; தோல்வியுறுதல். `பிறகிடு வித்து` என்பதில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது.
யோக முறையில் சிவனை உடம்பினுள்ளே காணுதல் அநுபவமாதல் பற்றி, மக்கள் உடம்பு அவனது இலிங்கமாதற்குத் தடையின்மை இதனால் கூறப்பட்டது.
சிற்பி