ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்


பண் :

பாடல் எண் : 1

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.

பொழிப்புரை :

சிவன் அகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அனைத்துப் பொருளுமாய் நிற்பான். உகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அப்பொருள்களைச் செயற்படுத்தி நிற்பான். அதனால் அந்த இருகலைகளை உணரின் அந்த உணர்வுதானே சிவனது வடிவமாகும்.

குறிப்புரை :

பிரணவ கலைகளில் பருநிலையை உடையன அகார கலை, உகார கலைகளேயாதலின், அவற்றை உணரும் உணர்வே முதற்கண் இலிங்கமாய் நிற்கும்` எனக் கூறினார், ``நிற்கும்`` என்பவற்றிற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க. உயிர்ப்பு - செயற்பாடு. எய்தல் - நிகழ்த்தல். சொல்லோடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி, மந்திர கலையையே பொருளாக ஓதினார்.
இதனால் மந்திர உணர்வே இலிங்கமாமாமறு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற தெய்வமும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதிபீடம் நாதமே
போதா இலிங்கப் புணர்ச்சிய தாமே.

பொழிப்புரை :

தனக்குக் கீழ் உள்ள அகாரம் முதலிய எழுத்துக்களை நோக்க அவற்றைத் தாங்கிநிற்கின்ற ஆதாரமாயும், தனக்கு மேல் உள்ள நாதத்தை நோக்க அதன்கண் பொருந்தியுள்ள ஆதேயமாயும் உள்ள விந்துவும், மேதை முதலிய அனைத்துக் கலைகட்கும் முதலாய் உள்ள நாதமும் முறையே ஒன்றின்மேல் ஒன்றாய் விளங்கி நிற்கும். அதனால், அவற்றுள் விந்துவே ஆதாரமாகின்ற பீடமாயும் நாதமே அந்தப் பீடத்தின்பால், வந்து இலிங்கத்தின் சேர்க்கையாயும் இயைந்து நிற்கும்.

குறிப்புரை :

மேதாதி நாதம், `மேதை முதலியவற்றிற்கு முதலாகிய நாதம்` என நான்காவதன் தொகையாய் நின்றது. `விந்து அதி ஆதார பீடம்` என மொழிமாற்றிக் கொள்க. ``விந்து, நாதம்`` - என்றது, அவற்றால் உளவாகும் உணர்வுகளையே என்க.
இதனால், மந்திர உணர்வே இலிங்கமாமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரந் தானே.

பொழிப்புரை :

(மேற்கூறிய விந்து நாதங்கள் முறையே சத்தி சிவவடிவாகும் ஆதலால்,) அவ்விரண்டும் ஒன்றாய் இயைந்த நிலையே புறத்தில் உள்ள தாபர சங்கமங்களும், சாதாக்கிய தத்துவத்தில் விளங்கும் சதாசிவ மூர்த்தியும் ஆகும். இனி சிவ வடிவம் யாதாயினும் அது சத்தி, சிவம் இரண்டும் இயைந்த வடிவமேயாகும்.

குறிப்புரை :

தாபரம் - திருக்கோயிலில் உள்ள திருவுருவங்கள். சங்கமம், அடியார்கள். ஈற்றில் நின்ற ``தாபரம்`` என்பது இலிங்கத்தின் பரியாயப் பெயராய்ச் சிவவடிவை உணர்த்திற்று. எவ்வடிவமும் `சத்தி சிவக்கூட்டே` என்றதனால், உணர்வாகிய வடிவமும் அன்னதேயாதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம்
பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தான்நேர் எழுந்த அகாரம தாமே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்ற, பூவொடு கூடிய கொடிபோலும் சத்தியுடன் சிவன் ஆன்ம சிற்சத்தியை நேரே பற்றி அதற்குப் பொருள் தருகின்ற நாதமே தன் வடிவாகக் கொண்டு ஆன் மாவின் உணர்வில் விளங்குவான். அதனால் அந்த நாதத்தின் காரிய மாய் ஆகாயத்தின் ஒலியால் விளங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் பொருந்தியுள்ள இடத்தில் அடியவன் அடியார்களுக்கு நேரே விளங்கி நிற்கும் சிவசோதியைக் காண இயலும்.

குறிப்புரை :

`ஆதலால் அந்த ஐம்பது எழுத்துக்களையும் இலிங்கமாக வைத்துத் தியானிக்க` என்பது குறிப்பெச்சம். அத்து வாக்களுள் ஏனை ஐந்து கலைகளில் அடக்கம் ஆதல் வெளிப்படை ஆதலின், அவற்றுள் மந்திராத்துவா அக்கலைகளில் அடங்கி நிற்கும் முறையும் வெளிப்படை. ஆகவே நிவிர்த்தி பிரதிட்டா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் ஆதார பீடமாகவும், வித்தியா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் நடுக்கண்டமாகவும் சாந்தி கலையில் உள்ள எழுத்துக்கள் பீடமாகவும், சாந்திய தீத கலையில் உள்ள எழுத்துக்கள் இலிங்கமாகவும் நிற்றல் போதரும்.
இம்மந்திரத்தை மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``அமர்ந்திடம்`` - என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. ``தான்`` இரண்டில் முன்னது வழிபடுபவனையும், பின்னது வழிபடப்பட்டு சிவனையும் குறித்தன. நாதத்தை, `அகாரம்` என்றலும், விந்துவை உகாரம் என்றலும் வழக்கு. அதனால், `சத்தி உகாரமாய் நிற்க` என்பது இங்கு ஆற்றலால் பெறப்படும்.
நிவிர்த்தி கலையுட்பட்ட நம்மனோர்க்கு எழுத்தோசைகள் ஆகாயத்தின் குணமாகிய இசையோசையாம் உபாதியோடு கூடியன்றிப் புலனாகாமையின் அவற்றை, ``வான் நேர் எழுகின்ற ஐம்பது`` என்றார்.
இதனால் அக்கர உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.

பொழிப்புரை :

சத்தி சிவங்கட்கு வடிவமாய் நிற்கின்ற விந்து நாதங்களின் வடிவமே இலிங்க வடிவம். அவற்றுள் விந்துவே பீடமாயும், நாதமே இலிங்கமாயும் நிற்கும். அந்த விந்து நாதங்களை முதலாகக் கொண்டு தோன்றிய `சிவன் சத்தி, சதாசிவன், மகேசுரன், வித்தியேசுர` என்னும் முதல்வர் ஐவரும் முறையே, சிவம், சத்தி, சதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் சுத்த தத்துவம் ஐந்தையும் தோற்றுவிப்பார்கள்.

குறிப்புரை :

சிவன் முதலிய ஐவரே உண்மைக் கருத்தாக்களாக ஏனை, `அனந்த தேவர், சீகண்டர், மால், அயன்` முதலியோர் உபசார கருத்தாக்களேயாதலின், `அவரும், அவர்தம் செயல்களும் இவ் வுண்மைக் கருத்தாக்களாலே உள ஆவன` என்பது பெறப்படும். படவே, `அக்கருத்தாக்கள் ஐவரும் விந்து நாதங்களை முதலாகக் கொண்டவர் ஆதலின், அவ்விந்து நாதங்கள் இன்றி உலகம் இல்லை` என்றதனால், அவ்விந்து நாதங்களின் வடிவாகிய இலிங்கம் உலக முதலாகும்` என்றதாயிற்று `இவ்வாறு இலிங்க வடிவின் உண்மையை உணரும் உணர்வே ஆத்தும லிங்கம்` என்பது கூறப்பட்டது.
`விந்து; நாதம்` என்பன பரவிந்து பரநாதங்களையும் அபர விந்து அபர நாதங்களையும் ஏற்ற பெற்றியான் உணர்த்தி நிற்கும் ஆதலின், இங்கு அவை பரவிந்து பரநாதங்களை உணர்த்தின. அவை முடிநிலை முதலாய் நிற்றலின் அவற்றை ஒழித்து, அபர நாதம் முதலாகவே தத்துவங்கள் எண்ணப்படுகின்றன. அபர நாத மூர்த்தியே, `சிவன்` என்றும், அபர விந்து மூர்த்தியே `சத்தி` என்றும் சொல்லப் படுகின்றனர். அம்மூர்த்திகட்கு இடமாய் நிற்கும் தத்துவங்களே, `சிவதத்துவம், சத்தி தத்துவம்` - எனப்படுகின்றன. ``இலிங்கம்`` இரண்டினில் முன்னது பொதுவாக இலிங்க வடிவினையும், பின்னது சிறப்பாகப் பிழம்பினையும் குறித்தன.
முதல்வர் ஐவரையும் ``கரு ஐந்து`` என அஃறிணை வாய்பாட்டாற் கூறினார். கடவுளரை எத்திணை வாய்பாட்டிலும் கூறுதல் வழக்காதலின் ``தெய்வமாய்`` என்பதன்பின், `கொண்டு` என ஒருசொல் எஞ்சிநின்றது.
இதனால், `இலிங்க வடிவம் உலக முதலின் வடிவம் என உணரும் உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

அருளே திருமேனியாகக் கொள்ளும் சிவனது திருவடியாகிய இலிங்கத்தில் பீடம் ஆன்மதத்துவமும், நடுக் கண்டம் வித்தியா தத்துவமும், கண்டத்திற்குமேல் உள்ள பகுதி சிவதத்துவமும் ஆகும். அந்த வகையினதாகிய இலிங்க மூர்த்திமான் சதாசிவராவர்.

குறிப்புரை :

இதனுள் ``சத்தி`` என்றது, `அருள்` என்றபடி. முன்னர் ``ஆன்மா`` என்றது ஆன்ம தத்துவத்தையும், பின்னர் ``ஆன்மா`` என்றது மூர்த்திமானையுமாகும். முப்பத்தாறு `தத்துவங்களும் கூடிய கூட்டம் இலிங்க வடிவாம்` என்றதனால் அத்தத்துவங்களால் விளங்குகின்ற ஆன்ம உணர்வும் சிவனுக்கு இலிங்கத் திருமேனியாய் நிற்றல் கூறப்பட்டது. படவே, அவ்வுண்மையை உணராதவர்க்கு அவரது உணர்வு பாசமாயும், உணர்வார்க்கு அவரது உணர்வு சிவமாயும் நிற்கும் என்க.

பண் :

பாடல் எண் : 7

மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந் தின்பம் பொகின்ற போது
நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும்
இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.

பொழிப்புரை :

மனத்தின் தொழிற்பாடு நிகழ்தலால் நடை பெறுகின்ற என்னுடைய உயிர் வாழ்க்கையில் அந்த மனம் உலக இன்பத்தையே மிகுவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையின் இடையே சிவனது திருவருள் புகுந்து செயலாற்றத் தொடங்கின மையால், அந்த மனமும் முன்னை நிலையை விடுத்து, என்னையும், என் தலைவனையும் நினைவதாயிற்று. சிவன் எனது உடம்பையே தனது இல்லமாகக் கொண்டு என்னை ஆட்கொண்டது இம் முறைமையினாலாம்.

குறிப்புரை :

எனவே, `எனது உயிர் ஆத்தும லிங்கமானது இவ் வாற்றால்` என்றபடி. ``புகுந்து`` நான்கில் முதலாவதும், மூன்றாவதும் `புகுதலால்` என்பதன் திரிபு. ``நலம்`` என்றது. திருவருளை, ``நாடும்`` என்னும் பயனிலைக்கு எழுவாய், `அம்மனம்` என வருவிக்க. இல்லம், ``இலம்`` என இடைக் குறைந்து நின்றது. `இல்லமாகப் புகுந்து` என ஆக்கம் வருவிக்க.
இதன் பின்னிரண்டு அடிகள் உயிர் எதுகை பெற்றன.

பண் :

பாடல் எண் : 8

பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்அடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்துறைந் தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு என்னை ஆட்கொண்டபின் இறை யியல்பு அனைத்தையும் உடைய சிவன் எனது உயிரையேதான் இருக்கும் இடமாகக் கொண்டான்.

குறிப்புரை :

`அதனால் எனது உயிர் ஆத்தும லிங்கமாயிற்று` என்பது குறிப்பெச்சம். பரன் + அபரன் = பராபரன். `மேலும், கீழுமாய் நிற்பவன்` என்பது பொருள். ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க`` - எனத் திருவாசகத்துள்ளும் வந்தது. (தி.8 திருவண்டப்பகுதி, 50) `இவ்வாற்றால் என் உயிரையும் இடமாகக் கொள்ளுதல் அவனுக்கு இயல்பாயிற்று` என்றபடி. எந்தை - அடைந்தவர் மேல் தந்தை போலும் அருள் உடையவன். மதி சூடுதல் சார்ந்தாரைக் காப்பவன் ஆதலைக் குறிப்பது. ``தராபரன்`` என்றது மக்களை ஆட்கொள்ளுதலையும், ``தேவர்கள் மன்னும்`` என்றது தேவர்களை ஆட்கொள்ளுதலையும் குறித்தவாறு. `அடியார்களது மனத்திலும், சிரத்திலும் வீற்றிருப்பவன் எனது மனத்திலும் நீங்காது இருப்பவன் ஆயினான்` என்பது அவனது பேரருளை வியந்தவாறு. `சிரபரன்` என்பது எதுகை நோக்கி நீண்டது. இங்கு உள்ள ``பரன்`` என்பதை, ``கோயில்`` என்பதனோடும் கூட்டுக. ``மன்னும்`` என்பது முற்று. `மராமரன் போல மன்னி உறைந்தான்` என்க. மரன் - மரம். மரங்களில் மிக்க வயிரம் உடையது மராமரம் ஆதலின், அஃது அகலாது இருத்தற்கு உவமையாயிற்று.

பண் :

பாடல் எண் : 9

பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம்
குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.

பொழிப்புரை :

`பசு` எனப்படுகின்ற எனது மனத்தைப் பசுமனமாய் இல்லாது திருந்தப்பண்ணி அதனைத் தனக்குக் கோயிலாகக் கொண்ட தலைவன் சிவனேயாகும். அவனை, அங்ஙனம் பசுக்களைத் திருத்தி ஆட்கொள்கின்ற தலைவன் அல்லன்` என்றும், `ஆம்` என்றும் இங்ஙனம் ஐயுற்று உலகம் பிணங்குமாயின் அது பேதையுலகமேயாகும்.

குறிப்புரை :

பின்னிரண்டடிடகள், சிவனைச் சிறப்பு வகையால் விளக்குகின்றன. அதனால், முன்னர் ``ஈசன்`` என்று பொதுமையிற் குறித்ததாம். `செஞ்சடைப் புண்ணியன்` என இயையும். `புண்ணியன் - புண்ணியத்தை வடிவாக உடையவனும், அதன் பயனாகின்றவனும்` என்க. தவம் செய்வார் கோடைக் காலத்தில் ஐந்தீ நாப்பண் நிற்றலும், மாரிக்காலத்தில் நீர்நிலையுள் நிற்றலும் செய்வர் ஆதலின் ``அங்கியும் நீரும் பொரா நின்றவர்`` - என்றார். பொருதல், தாக்கப்படுதலும், பொறுத்து நிற்றலும் என்னும் இரண்டனையும் குறித்தது. ``செய் அப் புண்ணியம்`` என விதத்து ஓதினமையால் இங்கு, ``புண்ணியம்`` என்றது இறைவனை நோக்கிச் செய்யும் தவத்தையாயிற்று. பேதைமை உடையவனைப் `பேதை` என்றல் பான்மை வழக்கு. அஃது இங்கு அஃறிணைக்கண் வந்தது. குரால் - பசு.
இதனால், உயிர் சிவனுக்கு வடிவாய் நிற்றலன்றிப் பிற தேவர்க்கு வடிவாய் நில்லாமை கூறும் முகத்தால், ஆத்தும லிங்கத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று
சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை
ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே.

பொழிப்புரை :

உலகர் ஏனைத் தேவர்களை முதல்வராக நினைந்து தாம்கொண்ட கடவுளை `அவன் ஓரிடத்தில் நின்றான், இருந்தான்` என இவ்வாறான வடிவங்களைப் பல இடங்களில் சென்று கண்டு துதிப்பார்கள். நான் சிவபெருமானை, `என் உயிராகிய வடிவத்தில் என்றும் இருக்கின்றான்` என்று நிலையாக நின்று துதிப்பேன்.

குறிப்புரை :

`தேவர்களை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. சிவபெருமானுக்குக் கிடந்த கோலம் ஓரிடத்தும் கூறப் படாமையால், ``தேவர்கள்`` என்பதனை எழுவாய் வேற்றுமையாகக் கொள்ளுதல் பொருந்துவதன்று. சிவபெருமானைச் சுட்டி நின்ற அவன் என்பது `முதற்கடவுள்` எனப் பொருள் தந்து நின்றது. முதற்கண் நின்ற ``என்று என்று`` என்றது, `இங்ஙனம் பலவாறாக` என்றபடி. `என்று` என ஒரு சொல்லாகப் பாடம் ஓதின் வெண்டளை பிழைத்தலை அறிக.
ஏனைத் தேவர்கள் உருவ மேனியைத் தவிர, `அருவுருவம், அருவம்` என்னும் மேனிகளை உடையர் ஆகாமையால், இலிங்க வடிவினராகக் கூறப்பட்டிலர். அதனால் அவர் ஆத்தும லிங்கத்தில் நிற்றலும் இல்லை` என இவ்வழிபாடு சிவநெறி நிற்பார்க்கே உரித்தாதல் கூறப்பட்டது.
சிற்பி