ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்


பண் :

பாடல் எண் : 1

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறறி யேனே.

பொழிப்புரை :

ஒலிக்கினஅற கடலை ஆடையாக உடைய நிலவட்டம், நீர், பல செயல்கட்கும் பயன்பட்டு நிற்கின்ற நெருப்பு, எங்கும் பரந்து செல்கின்ற காற்று, அனைத்தையும் தன்னுள் முறைப்பட அடக்கி நிற்கின்ற வானம் இவை அனைத்துமாய் அவற்றில் நிறைந்து நிற்கும் வகையில் உயர்ந்து சென்று, முடிவில் வானத்தையும் கடந்து உயர்ந்தோனாகிய சிவனை யான் உய்தி பெறுதற்கு, `ஒரு சிறு வடிவினனாகக் கண்டு வலம் வருதல் முதலிய வகையால் வழிபடுதல் எவ்வாறு` என அறிகின்றிலேன்.

குறிப்புரை :

வருகின்ற திருமந்திரத்துள் அங்ஙனம் வழிபடுமாற்றை அருளுகின்றார் ஆகலின், இங்கு, ``ஆறு அறியேன்`` என யாதுமத் அறியார்போலக் கூறினாராயினும், கீழ் உரைக்கப் படுகின்ற அதுவன்றிப் பிறிதோர் ஆறு அறியேன்` என்பதே கருத்தாகும். செய்யுள் நோக்கித் தீயைக் காற்றுக்குப் பின்னர் வைத்தார். `குவலயமும், வானும்` என்னும் எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. `வாறிவை` என்பது பாடமன்று. பூதங்களைக் கீழத் தொடங்கிக் கூறினா ராதலின், `நீண்டு`` என்றார். `வரைந்து` எதுகை நோக்கி வலித்தல் பெற்றது. வரைதல், எல்லை வகுத்தல். `அகண்ட மானவனைக் கண்டனாக்குதல் இயலாது` என்பதாம். இதனை, ``அசிந்தினாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு`` (சிவஞான போதம் - சூ. 12. கருத்துரை.)என்றார் மெய்கண்ட தேவர்.
இதனால் இலிங்கத்தாலன்றி இறைவனை அணுகலாகாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நீண்டகன்று வரம்பிலனாகிய சிவனை வரம்புட்படுத்து வழிபடும் வழி ஒன்று இந்நிலவுலகில் உண்டு. அஃது யாதெனின், அலைகளை வரிசையாக்கி அதனாலே கரையை அடைகின்ற கங்கையாற்றின் நீரையும், பூக்களையும் கையிலே கொண்டு, அவனது பெயர்கள் பலவற்றையும் சொல்லி ஆட்டியும், சாத்தியும் வழிபட்டு அவனை அங்ஙனம் வழிபடப்பட்ட அவ்வடிவத்தில் வைத்து உணர்தலேயாகும். அங்ஙனம் உணரவல்லார் உளராயின் அவ்வடிவைப் பொள்ளல் செய்து அதனை விட்டு அவன் வேறு எங்கும் போய்விட மாட்டான்.

குறிப்புரை :

`அதனுள் தானே இருந்து அருள் செய்வான்` என்பதாம். `இவ்வாறு அவன் தான் அருளிச் செய்த ஆகமங்களில் உரைத்துள்ளான்` என்பது கருத்து.
``தாபர சங்க மங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொன்டு மன்னுயிர்க் கருளை வைப்பான்`` *
என்றதும் இக்கருத்தினாலேயாகும்.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத் தருள`` *
என்று அருளிச் செய்தமை காண்க. `இஃதொழிய உயிர்கள் அவனை வழிபட்டு உய்யுமாறு வேறில்லையாதலின். அவற்றை இவ்வாற்றால் உய்வித்தல் வேண்டும் - என்னும் கருணை மிகுதியாலே அகண்டித னாகிய சிவன் இவ்வாறு கண்டிதனாய் நின்று அருள் புரிகின்றான்` என்னும் உண்மையைத் தெளிந்து கடைப்பிடிக்க - என்பதாம்.
``இங்கு`` என்றதனால், `இம்முறையைச் சிவன் நிலவுலகிலே தான் வைத்துள்ளான்` என்பது போந்தது.
இதனால், `அசிந்திதனாகிய இறைவனைச் சிந்தித்தனாகக் கண்டு வழிபடும் ஒரே முறையாவது இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றெனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
நன்றென் றடியிணை நான்அவ னைத்தொழ
வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற
அன்றென் றருள்செயும் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

`சிவபிரான் ஒருவனே ஒப்பற்ற தனிமுதற் பொருள்` என நான் உணர்ந்தேன். அதனால் `அவனை மேற்கூறியவாற்றால் `வழிபடுதல் ஒன்றே நன்னெறி` என உணர்ந்து வழிபடுந்தோறும் வழி படுந்தோறும் அவன் தனது பேரின்ப வெள்ளம் எனது ஐம்புலன்களில் அடங்காததாய் மிக்கெழுந்து என்பால் விளையப் பண்ணுதலை அப்பொழுது அப்பொழுதே செய்கின்றான்.

குறிப்புரை :

``எம் ஈசன்`` என்றது `சிவபிரான்` என்றவாறு. `ஒருவனையே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அடியிணை தொழுதல்` என்பது `வழிபடுதல்` என்னும் பொருளதாய் ஒரு சொல் நீர்மைப்பட்டு ``அவனை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. ஆதலின், `அவனை நான் அடியிணை தொழ` என மொழி மாற்றி யுரைக்க. வெல்லுதல், கிடத்தல், உறுதல் என்னும் தொழில்கட்கு இன்பமே வினைமுதல் என்க. `என்பால் உற அருள் செய்யும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `சிவனைப் பொது நீக்கி உணர்ந்து இலிங்கத்தில் கண்டு வழிபடல் வேண்டும்` என்பதும், அங்ஙனம் வழிபடுதலால் விளையும் பயன் இது என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன் தனது தடத்த நிலையில் `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சத்தி, சிவன், விந்து, நாதம் - என்னும் ஒன்பது நிலைகளில் நின்று உயிர்கட்கு அவன் நிலைகேற்ற பயனைத் தருவன் ஆகலின் அவை அனைத்துக்கும் பொதுக் குறி யாவது இலிங்கத் திருமேனியே. அதனால் அதனைப் பராசத்தியோடே நிற்கும் பரசிவனாகிய சொரூப சிவனது குறியாகவும் உணர்ந்து வழிபடல் வேண்டும்.

குறிப்புரை :

``மலர்ந்த`` என்றதனை இசை யெச்சத்தால் மாயோனது உந்திக் கமலம் மலர்ந்த` என விரித்துக் கொள்க. `மலர்ந்த` என்னும் பெயரெச்சம் `மலர்ந்ததனால் வெளிப்பட்ட` எனப் பொருள் தந்தது.
அயன், மால் முதலிய ஒன்பது நிலைகளும் ``நவந்தரு பேதம்`` எனப்படும். அதனை
``சிவம்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்றான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்
பவ்தரும்; அருவம்நால்; இங்(கு) உருவம்நால்; உபயம்ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்`` l
என்னும் சிவஞானசித்திச் செய்யுளால் உணரலாம். இவற்றை ``இங்ஙனம் ஒன்றின் ஒன்றாய்ப் பவம்தரும்`` - என்றமையால், `இம்முறை தோற்றமுறை` என்பது விளங்கிற்று. எனவே, இம்மந்திரத்தில் நாயனார் அயன் முதலாகக் கூறியது ஒடுக்க முறையாதல் வெளிப்படை.
``பரநாதம்`` - என்பதில் உள்ள ``பரம்`` என்பதை விந்துவிற்கும் கூட்டுக. பரநாத பரவிந்துக்களையே `சிவம், சத்தி` எனவும், சிவம் சத்திகளையே `நாதம், விந்து` எனவும் வழங்கும் வழக்கம் ஆகமங்களில் உண்மையால் மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அவ்வாறு கூறப்பட்டது.
நவந்தரு பேதங்களாய் நிற்கின்ற சிவன் தனது ஞானத்தால் தன்னை அவ்வந் நிலைகளில் உணர்ந்து வழிபடுவோரையும் அந் நிலையினராகச் செய்வன். அங்ஙனம் செய்யப்பட்ட அவர் அணுபக்க அயன், மால் முதலியோராவர். சிவன் அவ்வாறு நிற்கின்ற நிலைகள் சம்பு பக்கமாகும். `இம்மந்திரத்திற் கூறப்பட்டவை சம்பு பக்கம்` என்பது உணர்க.
மேற்கூறிய நவந்தரு பேதங்களில் மகேசுரனது பேதங்களாக இருபத்தைந்து வடிவங்களும், மற்றும் பல வடிவங்களும் உள. அவை யெல்லாம் `மாகேசுவர மூர்த்தங்கள்` எனப்பட்டு `மகேசுரன்` என்னும் ஒன்றிலே அடங்குவனவாம். ஆகவே, `மாகேசுர வடிவங்கள் ஒவ் வொன்றும் அவ்வவ் வடிவத்திற்கு மட்டுமே உரிய சிறப்புக் குறிகளாய் அவ்வளவில் மட்டுமே பயன் தருவனவாய் நிற்க, இலிங்க மூர்த்தம் ஒன்றே நவந்தரு பேதங்கட்கும் பொதுக் குறியாய் நின்று எல்லாப் பயன்களையும் தருவது` என்பது இம்மந்திரத்தால் உணர்த்தப் பட்டதாம். எப்பயன் கருதிச் சிவனை வழிபட்டோரும் அவனை இவ்விலிங்கத் திருமேனியிற்றானே வழிபட்டு அவ்வப் பயன்களைப் பெற்றமையைப் புராணங்கள் பலவாக விரித்து கூறும்.
இங்குக் கூறிய அயன், மால் முதலிய பலரும் சம்பு பக்கம் ஆதலால் சிவலிங்கத்தில் `இது பிரம பாகம், இது விட்டுணு பாகம்` என்றாற் போலச் சில இடங்களில் கூறப்படுவதும் சம்பு பக்கத்தை நோக்கியே என்பது உளங்கொளத் தக்கது.
இதனால் சிவலிங்கம் அனைத்து மூர்த்திகளாயும் நிற்கும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று)
ஆவி யெழுமள வன்றே உடல்உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகதி தானே.

பொழிப்புரை :

உயிரை உடம்பில் நிறுத்திச் செயற்பட்ச் செய்ய எழுந்த விருப்பத்தால் கீழ்நோக்கிக் கிடந்தும் மேல் நோக்கி எழுந்தும் விளங்குகின்ற குண்டலினி சத்தியோடு உயிர் பொருந்தி செயற்படும் வரையிலுமே உடல் நிலைபெற்றிருக்கும். அச்செயற்பாடு நின்றவுடன் உடல் நீங்கிவிடும். ஆகவே, உடல் உள்ளவரையும் உள்ளே விரும்பி ஈர்க்கப்படுவதும், வெளியே விடப்படுவதால் நீங்கிச் செல்வதும் ஆகிய மூச்சுக் காற்றினை அவ்வாற்றின் அடக்கி நடுநாடி வழியே செலுத்துமாற்றால் இதுகாறும் கூறிவந்த அண்ட லிங்கம் முதலிய அனைத்து இலிங்கங்களிலும் சிவனைப் பாவனை செய்து வழிபட்டால் மேலான கதி கிடைப்பதாகும்.

குறிப்புரை :

குண்டலினி சத்தி ஒடுங்கிக் கீழ்நோக்கிக் கிடத்தலால் உயிருக்குக் கீழான உணர்வுகளும், அஃது எழுச்சியுற்று மேல்நோக்கி இயங்குதலால் உயிருக்கு மேலான உணர்வுகளும் உடல் வழியாக நிகழும். அவற்றுள் சிறந்தது மேலான உணர்வேயாதலால் அஃதொன்றையே நாயனார் குறித்தருளினஆர். குண்டலினி சத்தி பொதுவாக எல்லோரிடத்திலும் உடம்பினுள் கீழ்நோக்கிக் கிடந்து துயில்வதாகச் சொல்லப்படுதல், அதனால் உண்டாக்கப்படும் உலகியல் உணர்வு உணர்வாகாமை பற்றியேயாம். துயிலுதல், இறத்தல் அன்று ஆதலின் அந்நிலையிலும் அஃது உயிருக்கு ஓர் உணர்வைத் தந்துகொணஅடுதான் இருக்கும். அங்ஙனம் தருகின்ற அதனையும் அந்தச் சத்தி கைவிடும்பொழுது உயிர் உடம்பைச் செயற் படுத்த மாட்டாது. அதனால் உடல் விழுந்துவிடும். அதுவே, `இறப்பு` எனப்படுகின்றது. `அத்தகைய இறப்பு நேர்வதற்குள் உயிர் சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்றற்கு, ``பாவித்து அடக்கிற் பரகதிதானே`` என்றார்.
``அன்றே`` என்பது, `அந்நாள் வரையிலுமே` எனப்பொருள் தந்தது. ``உடல் உற`` என அனுவாதமாகக் கூறிய அதனால், `உடல் உறும்` என்பதை முதலில் உரைத்துக்கொள்க.
``பாவித்து அடக்கின்`` என்பதை, `அடக்கிப் பாவிக்கின்` என முன்பின்னாக மாற்றி உரைக்க. பாவித்தற்குச் செயப்படுபொருள் அதிகார முறைமையால் வந்தியைந்தது.
`இலிங்க வழிபாட்டினையும் பிராணாயாமம் செய்து செய்தல் சிறப்புடையது` என்றற்கு, ``மேவப்படுவதும், விட்டு நிகழ்வதும் அடக்கிப் பாவிக்கின்`` என்றார். ``விட்டு`` என்பது, `விடுதலால்` எனப் பொருள் தந்தது.
இதனால், `சிவனை இதுகாறும் கூறிவந்த அனைத்து இலிங்கங்களிலும் வைத்து யோக முயற்சியுடன் வழிபடுதலே வீடடைதற்கு வழியாகும்` என முடித்துக் கூறப்பட்டது.
சிற்பி