ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு


பண் :

பாடல் எண் : 1

இருபத மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

பொழிப்புரை :

`நாள்` என்பது, `இரவு, பகல்` என்னும் இரு நிலைகளை உடையது. `பிறப்பு` என்பது, `உயிர், உடல்` என்னும் இரண்டின் கூட்டம். அவைபோலச் சிவனது திருவருட்பேறாவது, துறவும், நோன்பும் ஆகிய இரண்டின் நிகழ்ச்சியாகும். இனி அந் நிகழ்ச்சிக்குப் பயனாவது உயிர்க்குயிராய் உள்ள அந்த இன்பத்தை அறிந்து நுகர்தலேயாம்.

குறிப்புரை :

``இருபதமாவது`` என்னும் பயனிலைக்கு `நள், என்னும் எழுவாய் தோன்றாது நின்றது. ``இரவும் பகலும்`` என்பதனைப் பயனிலையாக்கின் `இருபதமாவன` என்பது பாடமாதல் வேண்டும். ``ஆவது`` என்பது முன், பின் இரண்டிடத்தும் இயையாது.
``அது`` நான்கும் பகுதிப் பொருள் விகுதிகள். காட்சிப் பொருளாதல் பற்றிப் பிறப்பை ``உரு`` என்றார். முதல் இரண்டு அடிகளும் எடுத்துக் காட்டுவமையாய் நின்றன.
அருட்கு அடையாளமாவதனை, `அருள்` என்று உபசரித்தார். துறவறமே சிறப்புடை அறமாதல் பற்றி ``அந்தணர் என்போர் அறவோர்``l எனத் துறவறத்தோரே ``அறவோர்`` எனப்பட்டாற் போலத் துறவறத்தையே நாயனார் இங்கு `அறம்` என்றார். அஃதாவது, `உயிர்ச் சார்பு, பொருட் சார்பு` என்பவற்றுள் யாதொன்றின் மேலும் பற்றுச் செய்யாமை. தவமாவன சரியை கிரியா யோகம் இவை பலவும் நிகழ் தலை `நிகழ்ச்சி` என ஒன்றாய் அடக்கி, ``அருளதுவாவது`` என்றார். பயன் ``பொருள்`` எனப்பட்டது. `சத்திநிபாதம் வரப்பெற்றோரது நிலை இவ்வாறாம்` என்பது கூறமுகத்தானே அது பெற்றோரும், பெறாதோரும் தம் தம் நிலையை உணர்ந்து மகிழ்ச்சியும் வருத்தமும் கொண்டு. மேல் செய்யத்தக்கதின் முயலுமாறு கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 2

காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.

பொழிப்புரை :

(சிவனை உயிர்கள் அனாதியில் ஒராற்றானும் உணர்தல் இல்லை.) பின்பு உலகியல் உணர்வானே ஏனைப் பொருள்களைக் காண்டல், கருதல், தீண்டல், பற்றுதல் இவற்றைச் செய்தல் செய்து பெறுதல் போல அவனை அவ்வுயிர் பெற முயன்றால், அவனும் அவ்வகையினால் எல்லாம் அவற்றால் எய்துதற்கு அறி யனாய், அவற்றிற்கு மிகத் தொலைவில் உள்ளவனாகியே நிற்பான். பின்பு ஒரு காலத்தில் அவனே விருப்பத்தை உடையவனாகிப் புறத்தே விளங்கும் இல்லக விளக்குப்போலும் 3 தன்மையுடன் அகத்தில் தானே நல்லக விளக்காய் நீங்காது நிற்றலால், அவ்விடத்துள்ள அறியாமையாகிய இருள் அற்றொழியா நின்றது.

குறிப்புரை :

என இதனையும், இனி வருகின்ற மந்திரங்களையும் திருவருள் வாய்க்கப் பெற்றார் அதனை உணர்ந்து மகிழ்ந்தெடுத்துக் கூறுவனவாக வைத்துரைக்க.
``நந்தியும்`` என்னும் உம்மை இறந்தது தழுவி நிற்றலால், அதனால் தழுவப்பட்ட பொருள் வருவிக்கப்பட்டது. `விளக்கொளி` என்றது அதுபோலும் தன்மையை. ஆன் உருபு `கைப்பொருளொடு வந்தான்` என்பதில் உள்ளது போலும் ஒடு உருபின் பொருளில் வந்தது. `நெஞ்சத்துக்கண்` என ஏழாவது விரிக்க. ஈண்டுதல் - செறிதல். அது நீங்காது நிற்றலைக் குறித்தது. ``கிடந்து`` இரண்டில் பின்னது, `கிடத்தலால்` எனப்பொருள் தந்து நின்றது. ஆம். ஏ அசைகள்,
இதனால், சிவன் அனாதியில் உயிர்கள் பக்குவமின்றி நிற்றலால் அரியனாயினும் பக்குவம் எய்தி காலத்தில் எளியனாய் விளங்கும் அவனது அருள் நிலை போற்றியுரைக்கப்பட்டது. `அவ்வருட் பதிவானே முன்னை மந்திரத்துக் கூறிய அறமும், தவமும் தாமே நிகழும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு நிற்கும் நல்லக விளக்கை நோக்கும் நோக்கத்தால் முதற்கண் `யான்` என்றும், `எனது` என்றும் உயிர்மயங்குமாறு அதனோடு ஒற்றுமைப் பட்டு நின்ற உலகம், உண்மையில் அன்னவாகாது அதனின் வேறாய் அதன் அறிவினுள்ளே தோன்றும் அதன்பின் எல்லாவற்றிற்கும் தன்னையும், பிறரையுமே முதல்வராகக் கருதும் சீவபோதத்திற்குக் காரணமான மல இருள் நீங்க, `எல்லாம் அவனே` என்னும் சிவபோதம் நிலைத்து நிற்கும். அச்சிவபோதத்தின் வழிச் சிவனையே நாடுதல் ஒழிந்து மீட்டும் தனது அறிவாற்றலைப் பற்றாக நாடின், பெத்தான்மாக்களை அவர்களது அறிவிச்சை செயல்களைச் செயற்படுத்தி ஆள்கின்ற காரணக் கடவுளராம் நிலை எய்துவதாகும்.

குறிப்புரை :

`அந்நிலை எய்தும்படி சிந்தையை நாடச் செய்வது மலத்தின் வாசனை` என்பது கருத்து, எனவே, அவ்வாசனையும் நீங்கின் சிவானந்தானுபூதி உண்டாதல் பெறப்படும். `சிவானந்தானு பூதி நிலையே பரமுத்தி` எனவும், காரணக் கடவுளராய் நிற்றல் இலய போக அதிகார முத்திகள் எனவும் உணர்க.
குறிப்பு: நோக்கு, அஃது அதிகார இயைபால் அகவிளக்கை நோக்கும் நோக்கின்மேல் நின்றது, ``குறிப்பினின்`` எனச் சிறுபான்மை `இன்` என் உருபு இன் சாரியை பெற்றது. வெறுப்பு இருளாவது உண்மைத் தலைவனை விரும்பாது விடுத்துத் தம் கள்ளத் தலைமையையே விரும்புதற்குக் காரணமாகிய அறியாமை. விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன்; இறைவன். விகிர்தனது போதத்தை ``விகிர்தன்`` என உபசரித்தார். உம்மை, உயர்வு சிறப்பு. செறிப்புறு சிந்தை - சார்ந்த பொருள்தோறும் அது அதுவாய் அழுந்தி நிற்கின்ற ஆன்ம அறிவு. சிக்கென - உறுதியாக. `அறிவிப்பு` என்பது இடைக் குறைந்து ``அறிப்பு`` என நின்றது. அறிவித்தலையே கூறினாராயினும் இனம் பற்றி இச் சிறப்பித்தலும், செய்வித்தலும் கொள்ளப்படும். காரணக் கடவுள ராவார்க்கு அவர் செய்த புண்ணியத்தானே ஆன்மாக்களது அறி விச்சை செயல்ளைச் செயற்படுத்தும் ஆற்றலைச் சிவன் அளித் தருள்வன் என்க. பரமுத்தியை விரும்புவோர் இதனை விரும்பாமையை,
``ஐந்தொழிலும் காரணர்க ளாத்தொழிலும் போகம்நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக`` *
என்பதனான் அறிக.
இதனால் திருவருட் பேற்றினை முற்றப் பெறவே மேலோருள் மேலோர் விரும்புதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி யான்எங்கள் பிஞ்ஞகன் எம்மிறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாம்எனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவன் எம்மை விட்டு ஒரு போதும் நீங்கியதில்லை. அதனை அனுபவமாக உணர்ந்த அனுபூதி மான்களது அறிவுரையை `இதுவே மநக்குத்துணையாவது` என்று பற்றி உணரவல்லவன் எவனோ அவனே பொரும்பொருள் தன்மையைத் தான் பெற வல்லவனாவன். அதனை முன்பே உணர்ந்து ஒழுகாமையால் பல காலங்கள் வீணாகவே கழிந்தன.

குறிப்புரை :

`என்றாலும் இப்பொழுதாயினும் அவ்வாறு உணர்ந்து ஒழுகத் திருவருள் கிடைத்தது தவப் பயன்` என்பது குறிப்பெச்சம்.
பிஞ்ஞகம் - தலைக்கோலம். பிறை, பாம்பு, கங்கை, கொன்றை மாலை முதலிய பலவகைப்பட்ட தலைக்கோலமும், சடை முடியும் சிவபிரானுக் கல்லது பிறர்க்கு இன்மையால் சிவபிரான் `பிஞ்ஞகன்` எனப்படுகின்றான். அவனே இறைவனாதலைக் குறித்தற்கு, ``பிஞ்ஞகன் எம்மிறை`` என்றார். முதல் அடியை ஈற்றில் வைத்துரைக்க.
இதனால், `சிவனை அவனது அருளைத் துணையாகப் பற்றியே அறிய இயலும்` என்பதும், `அதனை அவ்வாறு அவனை அடைந்தோரது அருளுரையே உணர்த்தும்` என்பதும், `அவ்வருளுரையைத் தெளிதற்கும் சிவனது அருள் வேண்டும்` என்பதும் கூறப்பட்டன. அடைந்தோரது அருளுரைகள் அங்ஙனம் உண்ர்த்துதலை,
``அவன் அருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வணத்தன்
இவன் இறைவன் என்றெழுத்திக் காட்டொணாதே`` *
என்பது முதலியவற்றான் உணர்க.

பண் :

பாடல் எண் : 5

தானே அழியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல்
ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே அனையன்நம் தேவர் பிரானே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியபடி ஆர்ந்தறிந்தார் அறிவை துணையாகச் சார்ந்தறிந்தமையால் உள்ளமேயன்றி உடம்பும் உருகுமாறு ஞானமே வடிவாய் நிற்கும். சிவமுதற்பொருளை உணர்ந்த பின் அம் முதல்வன் தேன்போல இனியனாய்த் தெவிட்டாது நின்றான். இந் நிலையில் சஞ்சித வினைகள் கெட்டொழிதலன்றி அவற்றிற்கு வேறு வழியில்லை. அங்ஙனம் அவை கெட்ட பின்பு யான் அவற்றை நுகர் வோனாதலும், சிவன் அவற்றை எனக்குக் கூட்டி நுகர்விப்போ னாதலும் ஆகிய நிலைமைகள் எங்ஙனம் உளவாகும்! உளவதால் இல்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி யுரைக்க. தம்மியல் பால் தாம் அழியற்பாலனவாதல் பற்றி, ``தானே அழியும்`` என்றார். எனினும், `அவை பயனிலவாயினமை பற்றி முதல்வன் அழித் தொழிப்பன்` என்பதே கருத்து. `பக்குவம் எய்திய உயிரை அவைகளால் முன்னர்ச் செய்யப்பட்டுக் குவிந்து கிடந்த சஞ்சித வினைகள் சென்று பற்றமாட்டா` என்பதைத் திருவள்ளுவரும்,
``சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்`` *
என அருளிச் செய்தார். உணர்வுடையதனை, உணர்வு என்றே உபசரித்தார். அது தேவர் பிரானேயாயினும், `மெய்ப்பொருளது `இயல்பு அது` என்றற்கு வேறு போலக் கூறினார்.
``தானே`` என்றது பன்மை யொருமை மயக்கம். பக்குவம் வந்த உயிர்களது சஞ்சித வினைகள் வாளா அழிக்கப்படுதல், துறவு பூண்டோர் சந்ததியும் இலராயின் அவர், முன்பு எழுதித் தந்த கடன் பத்திரம் அழிக்கப்படுதல் போல்வது என்க.
``யானேதும் பிறப்பஞ்சேன்; இறப்பதனுக் கென்கடவேன்!`` *
என்றதும் இந்நிலையில் நின்றேயாம்.
``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை, எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்``l
என்றது காண்க.
``நானே`` என்னும் ஏகாரம், `இன்றியமையாது அறியற் பாலன் யானே; பிறரல்லர்` என்பது உணர்த்தி நின்றது. `அங்ஙனமாக, நந்தி அரியுங்கொல்` என்க. ``கொல்``, இங்கு எதிர் மறைப் பொருட்டாய் நின்றது. ஊட்டுவித்தலும், உண்டலும் அறிந்தன்றி யாகாமையின் அவற்றை அறிதலின் மேல்வைத்துக் கூறினார்.
இதனால், திருவருட் பேற்றால் இன்பமாகிய பயன் விளைந்தபின் மீட்டும் துன்பம் இன்றாதல் கூறப்பட்டது. அதனால், இவ்வின்பம் நிலையான இன்பமாதல் விளங்கிற்று.

பண் :

பாடல் எண் : 6

நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை
வானறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறி யான்பின்னை யார்அறி வாரே

பொழிப்புரை :

என்னுள் இருக்கின்ற இறைவனை அறிய வேண்டி யவன் யானே யன்றோ! (அந்நிலை இன்று யான் கைவரப் பெற்றேன்.) வானுலகம் ஒன்றையே அறிந்து நிற்கும் வானவர் அந்த அறிவால் தம்முள் இருக்கும் இறைவனை அறியாது மயங்குவாராயினர். ஒவ்வொருவனும் தனது உடம்பின் இயல்பையும், அந்த உடம்பினுள் உள்ள உயிரையும், அந்த உயிருக்குள் உயிராய் நின்று அதற்கு அறிவைத் தருகின்ற உள்ளொளியாகிய இறைவனையும் அறிந்து அவ்வாற்றால் பயன்பெற வேண்டியவன் அவனேயாய் இருக்க அவனவனும் அதனைச் செய்யாது கிடப்பானாயின் அவனுக்காக மேற்கூறியவைகளை யார் அறிவார்!

குறிப்புரை :

`திருவருட் பேறில்லாமையால் அவரெல்லாம் அங்ஙனம் மயங்கிக் கிடப்பர்` என்பது கருத்து.
`ஈசனை அறிந்து இருக்கின்ற நானன்றே` என மாற்றியுரைக்க. இருக்கின்றது - `இருக்க வேண்டுவது` இது தொழிற்பெயராய், அத்தொழிலுடையதனை உணர்த்திற்று. ஊன் - உடம்பு; ஆகுபெயர். அதனைக் கூறவே, அதனுள் நின்ற உயிரும் கொள்ளப்பட்டது.
இதனால், திருவருட் பெறில்லாதாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார்
அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.

பொழிப்புரை :

திருவருளின் பெருவியாபகம், அஃது அதனைப் பெற்றார்க்குப் பேரின்பம் விளைத்தல், காரணக் கடவுளது தொழில்கள் எல்லாவற்றிற்கும் அதுவே முதலாதல், அனைத்தையும் அது முற்றுற அறிதல் ஆகியவற்றை எல்லாம் அதனைப் பெற்றோர் அறிதலன்றிப் பெறாதார் சிறிதும் அறியமாட்டார்.

குறிப்புரை :

`பெற்றார், பெறாதார்` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தின. `இவ்வுண்மையை யாமும் இப்பொழுதுதான் அறிந்தோம்` என்பது குறிப்பு. `நுகர` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அமுதானத்திற்கு, `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. அடிநிலையை, ``அதிசூக்கம்`` என்றார்.
இதனால், திருருட் பேற்றின் பின் அதனது இயல்பு விளங்குமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்(டு)
அறிவது வாக்கி அடியருள் நல்கும்
செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.

பொழிப்புரை :

உயிர் அறிவுடையதாயினும் அவ்வறிவு ஆணவத்தால் தடுக்கப்பட்டமையின் அத்தடையை நீக்கி அஃது அறிவை அடையும்படி தொடுத்துப் பின்பு அவ்வறிவு பொறிகளின் வழிச் சென்று புலன்களை விரும்பிப் பாச அறிவாகும்படி செய்து, அவ்விடத்து அவ்வறிவு தான் விரும்பும் புலன்களை நுகர்தற்கு உடனாய் நின்று, பின்பு பாச அறிவாய் நின்ற அதனைப் பதியறிவாகச் செய்து, அவ்வாற்றால் பதிநிலையை எய்திய அடியார் குழாத்துள் இருக்க அருளுவதாகிய திருவருளை எய்தி அதுவே பற்றாக நின்றவரே சிவமாம் தன்மைப் பெருவாழ்வை எய்தினார்.

குறிப்புரை :

`பிறரெல்லாம் யாதும் இல்லா ஏழையராய் அலமரு கின்றார்` என்றபடி. `திருவருளே கேவல நிலையிற் கிடந்த ஆன் மாக் களைச் சகல நிலையிற் கொணர்ந்து, பின்பு சுத்த நிலையில் சேர்ப்பது` என அதனது உதவியை வகுத்தருளிச் செய்துமுகந்தான் அதனை உணரும் உணர்விலார் பயன் பெறாராதலை வலியுறுத்தியவாறு.
`அறிவில் அறிவு நணுக நல்கி` என்க. இரண்டிடத்திலும், ``அறிவது`` என்னும் அது, பகுதிப் பொருள் விகுதி. செறிவு - எப்பொருளிலும் நிறைதல். அஃது ஆகுபெயராய் அதனையுடைய திருவருளைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு)
அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு)
அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி அகம்புகுந் தானே

பொழிப்புரை :

யான் எம்பெருமானது திருவருளாற்றான் பிறந்தேன்; வளர்ந்தேன்; இறந்தேன். உலகம் ஒடுங்கிக் கிடந்த பொழுது யான் ஓய்வாக இருந்தேன்; மீட்டும் உலகம் தோன்றிய பொழுதும் பிறந்து வாழவே விரும்பினேன். இவ்வாறு முடிவின்றிச் சுழன்று வந்த யான் அவனது அருளே வடிவாகி நின்ற அந்த இறுதிக்காலத்தில் அப்பெருமான் எனக்கு எல்லையில் இன்பத்தை வழங்கி என் உள்ளத்தில் நீங்காது நின்றான் எல்லாம் அவனது அருளாலேதான் நிகழ்ந்தன.

குறிப்புரை :

`எல்லா உயிர்கட்கும் இவ்வாறுதான்; ஆயினும் அவ்வுயிர்கள் இவற்றை `என்னைப்போல முடிவில்தான் உணரும்` என்பது கருத்து. ``அருள்`` என யாண்டும் பொதுப்படவே ஓதினா ராயினும், `முதற்றொட்டு` ``மறைந்திட்டு`` என்பது காறும் கூறிய அருள் திருகுநிலை அருள் எனவும், `ஏனைய நேர்நிலை அருள் அறக் கருணை. முன்னது `திரோதான சத்தி` எனப்பட, பின்னதே `அருட் சத்தி` எனப்படும். `அருளின்` என்பதைப் பிறவற்றிற்கும் கூட்டுக.
`அருளான ஆனந்தத்து` என்பது பாடம் அன்று.
இதன் பின்னர்ப் பதிப்புக்களில் காணப்படும். ``அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி`` என்னும் பாடல் இடைச்செருகல்.

பண் :

பாடல் எண் : 10

பாசத்தில் இட்ட(து) அருள் அந்தப் பாசத்தில்
நேசத்தை விட்ட(து) அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே.

பொழிப்புரை :

என்னை எனது இயற்கைப் பாசம் தனது சத்தி கெடுதற்பொருட்டுச் செயற்கைப் பாகத்தில் இட்டுத் துன்புறுத்தியதும் திருவருளே (இது திரோதனகரியாய் நின்ற நிலை) இயற்பாசம் சத்தி கெட்ட பின்னர் யான் அச்செயற் கைப்பாசங்களையே மேலும், மேலும் விரும்பிய விருப்பத்தை விடச்செய்ததும் திருவருளே. பாசத் தொடர்பினால் மெய்ப்பொருளை அணுகக் கூசிய கூச்சம் நீங்கி அம் மெய்ப்பொருளை அடைந்து, அதனானே துன்பக் கடலினின்றும் கரை யேற்றுவித்ததும் திருவருளே, துன்பக் கடலினின்றும் கரையேறிய பொழுது விளைந்த எல்லையில்லாத இன்பத்தில் அவ்வின்பம் ஒன்றுமே தோன்றத்தான் தோன்றாது மறைந்ததும் திருவருளே.

குறிப்புரை :

`அதற்கு யான் செய்யும் கைம்மாறு யாதுளது` என்பது குறிப்பெச்சம். அதனைப் புலப்படுத்தற்கே மேற்போந்தவற்றை மீள அனுவதித்தார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். `விடுவித்தது` என்பதில் விவ்விகுதி தொகுத்தலாயிற்று. கூச, முதனிலைத் தொழிற் பெயர். ``முத்தி`` என்பதன்பின், `கூட்டுவித்தது` என்பது சொல் லெச்சமாய் எஞ்சிநின்றது. நேசம் - அன்பு. அன்பினால் விளை வதாகிய இன்பத்தை `அன்பு` என உபசரித்துக் கூறினார். `நேசத்துக் கண்` என ஏழாவது விரிக்க. இன்பத்திற் சேர்த்தது அருளேயாயினும் அது புலப்படினும் அனுபவம் நிகழாமைபற்றி அது தோன்றாது மறைந்து நின்றது என்க. அருள்நிலை துரியமேயாக, ஆனந்த நிலை துரியாதீதம் ஆதல் அறிக.
இதனால், திருவருள் பெற்றார் அத்திருவருளின் நன்றியை உணருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் l அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்.

குறிப்புரை :

`எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. ``நந்தி``, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.
``மாதவன்`` என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.
``இறைவனாவான் அறவாழி அந்தணன்`` 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் - மேலே உள்ளவன்; அபரன் - கீழே உள்ளவன்.
இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயஹ்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.

பண் :

பாடல் எண் : 12

அகம்புகுந் தான்அடி யேற்கரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அரு ளில்லோர்க்(கு)
அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தால்நந்தி ஆனந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன் உயிர்களது அறிவினுள்ளே அருளை நிறைவித்து, அதனால் இன்பத்தைப் பெருக்கி விளக்கமுற்று நின்றால் இன்பப் பொருளாய் அனுபவப்படுவான். அதனால் அடியேனுக்கு அவன் அங்ஙனம் அருளை வழங்கினமையால் கருவிகளின் வழியாக அன்றி, நேரே தலைப்பட்டுணரும் பொருளாயினான். ஆகவே, அருள் வழங்கப் பெறாதாரது அறிவினுள்ளும் இருப்பினும் அவர்கட்கு அவன் அங்ஙனம் உணரும் பொருளாதல் இல்லை.

குறிப்புரை :

`அருளில்லார்க்குத் தெரியான்` என்றமையால், `அருள் பெற்ற எனக்குத் தெரிந்தான்` என்பது பெறப்பட்டது. அதனால் முதற்கண் ``புகுந்தான்`` என்றதற்கு, `புகுந்து தெரிந்தான்` என்பது பொருளாயிற்று.
`நந்தி அகம்புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாய் அகம்புகுந்தால் ஆனந்தியாம்; அதனால் அடியேற்கு அருளால் அகம்புகுந்து அருளில்லோர்க்கு அகம்புகுந்தும் தெரியான்` எனக் கொண்டு கூட்டி யுரைக்க.
`சிவம்` என்பதற்குப் பல பொருள் உண்டு, இங்கு அது `தூய தன்மை` என்னும் பொருட்டாய், `மறையாது விளங்கி நிற்பது` எனப் பொருள் தந்தது. எல்லா உயிர்களிலும் சிவன் கலந்திருப்பினும் உலகரது அறிவில் அவரவர் துணியும் பொருளாயும், சரியை முதலிய மூன்றில் நின்றார்க்கு உருவம், அருவுருவம், அருவம் என்னும் திரு மேனியனாயும், ஞானத்தில் கேள்வி முதலிய மூன்றில் நின்றார்க்கு ஆசிரியர் அறிவுறுத்த சொற்பொருள் அளவாயும் விளங்கி, நிட்டையில் நின்றார்க்கே தான் உண்மையாய் விளங்குவன். உண்மையாய் விளங்கும்பொழுதே இன்பமாய் விளைவான். அதனையே, ``நந்தி, அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கிச் சிவமாய் அகம் புந்தால் ஆனந்தியாம்`` என்றார். ஆகவே முன்னர் அகம்புகுதல் தொடக்கமும், பின்னர் அகம் புகுதல் முடிவும் ஆயின. புகுதல் புது வதன்றாயினும் விளங்குதல் புதிதாதல் பற்றி. ``புகுந்து`` எனவும், ``புகுந்தால்`` எனவும் கூறினார், ஆனந்தி - இன்ப வடிவினன். `முன்னை நிலை பெத்தம்` எனவும் `பின்னை நிலை முத்தி` எனவும் உணர்க.
இதனால், திருவருட் பேற்றின் முடிநிலை இயல்பு விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆயும் அறிவோ டறியாத மாமாயை
ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள்
ஆய பலஇந் திரிய மவற்றுடன்
ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.

பொழிப்புரை :

`பெத்த நிலையில் உள்ள உயிர்களிடத்தும் திரு வருள் உளதாயினும் அது நேர்நிலை யன்று` என மேற்கூறிய இயை பானே, அஃது அத்திருகல் நிலையில் நின்று செய்வனவற்றை இங்கு நின்றும் விரிக்கின்றார்.
மாயா காரியங்களைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து அறிந்து வரும் அறிவும், அக்கருவிகளும், அக்கருவிகளின் வழிப் புலன்களை ஆன்ம அறிவை அடையச் செய்கின்ற ஐந்து பூதங்களும் அப்புலன்களை நேராகவும், பிறவற்றின் வழியாகவும் கவர்கின்ற புற, அகப் பொறிகளும் ஆகிய அனைத்தும் திருவருளின் செயலால் ஆவனவேயாம்.

குறிப்புரை :

``ஆயும் அறிவு`` என்றே ஓதினாராயினும் `அறிவு ஆராயும் ஆராய்ச்சியும்` என்பதே கருத்து. `கருவிகள் தலைக்கூடிய வழியும் திருவருள் இன்றி ஆன்ம அறிவு தனித்து நின்று ஒன்றையும் அறியமாட்டாது` என்பதனைச் சிவஞானபோத ஐந்தாம் சூத்திரத்தால் அறிக. `கருவிகள் சடம்` என்றற்கு அதனை அவற்றது முதல்மேல் வைத்து ``அறியாத மாமாயை`` என்றார். இதனுள் `மா` என்னும் அடை பிறிதின் இயைபு நீங்காது பொதுவில் இயைபின்மை மாத்திரை நீக்கி, மாயையின் வியாபகத்தை உணர்த்தி நின்றது. ஞானேந்திரிய விடயங்கள் பூதங்களின் குணமும், கன்மேந்திரிய விடயங்கள் அவற்றின் செயலும் ஆதல் பற்றி ``அடைக்குகம் ஐம்பூதங்கள்`` என்றும் கூறினார். `அனைத்தும் அவ்வருட் செய்கையே ஆம்` என மாற்றியுரைக்க. அவ்வருள் - மேற்கூறிய திருவருள்.
இதனால், திருவருள் திரோதனகரியாய் நின்றே அனைத்துலகையும் ஆக்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அருளே சகலமும் ஆய பௌதிகம்
அருளே சராசரம் ஆய மலமே
இருளே வெளியே எனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் சகல நிலையை எய்துதற்குக் காரண மான பூதகாரியமாகிய சடப்பொருள்களும், சரமும் அசரமுமாய் உள்ள உயிர் வகைகளும் ஆகிய எல்லாம் திருவருளாலே ஆவனதாம். சிவனும் உயிர்களின் பொருட்டுத் திருமேனி கொள்ளுங்கால் திருவருளால் தான் அவற்றை உடையவன் ஆவான். இன்னும் அவன் ஆன்மாக்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்குதலும், பின்பு அதனை நீக்கி மெய்யுணர்வைத் தருதலும் திருவருளாலேதான். ஆகவே, திருவருள் இல்லையேல் ஒன்றும் இல்லையாம்.

குறிப்புரை :

`அங்ஙனம் ஆனபொழுது சிவனை வழிபட்டுப் பயன் பெறுதல் என்பது திருவருள் இன்றி எங்ஙனம் இயலும்` என்பது குறிப்பெச்சம். இக்குறிப்புப் பொருளை உணர்த்துதற் பொருட்டே இம்மந்திரத்திற் போந்த அனைத்தையும் அனுவதித்துக் கூறினார்.
இருள் - அஞ்ஞானம்; அதன் காரணம் மலம். வெளி - ஒளி; மெய்ஞ் ஞானம். `ஈசன், எங்கும் மலமே, இருளே, வெளியே எனும்` என மாற்றி, ``சகளத்தன்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. இத் தொடரில் உள்ள ஏகாரங்கள் எண்ணிடைச் சொல். எனும் - என நிற்கும். சகளம் - உருவத்திருமேனி. ``இன்று`` என்னும் பயனிலைக்கு `ஒன்றும்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
முதல் அடியிலும், `பவுதிகமாய சகலமும் அருளே` என மாற்றிக்கொள்க. சகலத்திற்குக் காரணமாவனவற்றை, ``சகலம்`` என்றார். சகல நிலையில் வலுப்பெற்று நிற்பன பூதகாரியங்களே யாதலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். `சகளத்தன்` என்றது அந்நிலைமையை. நிட்களம், நிட்கள சகளம் ஆகியவையும் இங்கும் பொதுப்பட, ``சகளம்`` எனப்பட்டன.
இதனால் திருவருள் இன்றி ஒன்றும் இயலாமை வலியுறுத்தப்பட்டது,

பண் :

பாடல் எண் : 15

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவமசை யாகி நடிப்பவன் தானே.

பொழிப்புரை :

சிவம் முதலாக உள்ள நவந்தரு பேதங்களாய் நிற்கும் சிவன் அங்ஙனம் நிற்றலும் திருவருளாலேதான்.

குறிப்புரை :

நவந்தரு பேதங்களாவன இவை என்பது மேல் `சிவலிங்கம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டது. அவ்விடத்தில் சிவலிங்கம் அனைத்துத் திருமேனிகளாயும் நிற்றலை விளக்குதற்கும், இங்குத் திருமேனி நிலைகள் அவை என்பதை விளக்குதற்கும் இவை கூறப்பட்டன. பின்னரும் ஓரோர்காரணம் பற்றி இவற்றை எடுத்துக் கூறுவார்.
இவை `சொரூபமன்றித் தடத்தமே` என்றற்கு `நடிப்பவன்` என்றார். சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், சிவன் அருளாற் கொள்ளும் திருமேனிகளின் வகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.

பொழிப்புரை :

திருவருளாகிய கண் வாய்க்கப்பெறாதார்க்கு சிவமாகிய நுண்பொருளின் இருப்புத் தோன்றாது. உலகமாகிய பருப் பொருள்களின் விசித்திரங்களே தோன்றும். திருவருளாகிய கண் வாய்க்கப் பெற்றோர்க்கு, சிவனது இருப்பு மட்டுமன்றி அவனேயும் புலப்பட்டுத் தோன்றுவான். இவை எவைபோலும் எனின், ஒளி யில்லாத கண்ணை உடையவர்க்குப் பகலவனது ஒளிதானும் தோன்றாது இருள் மட்டுமே தோன்றுதலும், ஒளியுடைய கண் ணுடையார்க்கு அவனது ஒளிப்பரப்பேயன்றி அவனேயும் தோன்றுதல் போல்வனவாம்.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை. `இருப்புத் தானும் அறிய வாராது` என்றற்கு, ``அரும் பொருள்`` என்றார். சிவனது இருப்பும், இரவியினது ஒளியும் அவை பற்றி நிற்கும் பொருள்களின் பன்மை பற்றிப் பன்மையாக ஓதப்பட்டன. அதனானே எண்பொருள், இருள் இவை மட்டுமே தோன்றுதல் பெறப்பட்டது. இருட்கண் - இருளை மட்டுமே உணரும் கண். ``இரவியும்`` என்னும் உம்மை இழிவு சிறப் பாகலின், ``இரவி`` என்றது ஆகுபெயராய் அதன் ஒளியைக் குறித்தது. தெருள் - ஒளி. எங்கும் உள்ள ஒளி முழுதும் தோன்றுதலால் அதனானே அவ்வொளிக்கு முதலாகிய இரவியும் தோன்றுதல் பெறப்பட்டது.
இதனால், அருளில்லார்க்கு சிவம் தோன்றாது உலகமே தோன்றுதல் உவமையில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமானே எங்கணும் வியாபகனாய், ஐந் தொழிலையும் செய்யும் முதல்வனாயினும் அவன் அவன் அத்தன்மையனாய் நிற்றற்குக் காரணமாயிருப்பது அருளாயும், எல்லையின்றி விரிவதாயும், அனைத்தும் வல்லதாயும் அவனிடத்து உள்ள ஆற்றலேயாம்.

குறிப்புரை :

இங்கு, ``தான்`` எனப் பன்முறையானும் கூறியது இங்கு அதிகாரப்பட்டுள்ள அருளையேயாம். வியாபித்தலைவன் - வியாபி யாய தலைவன். படைத்தல் முதல் வியாபித்தல், தலைவனாதல் ஈறாக உள்ள அவை அனைத்திற்கும் ஏதுவாய் நிற்பதனை அவையாகவே உபசரித்துக் கூறினார். இதுவும் சொற்பொருட் பின் வருநிலையணி.
இதனால் `திருவருளாவது` இங்குக் கூறிய அனைத்துத் தன்மைகளையும் உடைய சத்தியே, என்பது கூறப்பட்டது. ``அருள் உண்டாம் ஈசற்கு; அது சத்தி; அன்றே`` என்பது சிவஞான போதமும்,* ``அருளது சத்தியாகும் அரன்றனக்கு`` என்பது சிவஞான சித்தியும் சூ. 5. 9. ஆகும்.

பண் :

பாடல் எண் : 18

தலையான நான்கும் தனதரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும்
தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.

பொழிப்புரை :

(மேல், `ஞான லிங்க` அதிகாரத்தில் ``நாலன கீழ`` என்னும் மந்திரத்தில் சிவன்மேல் வைத்துக் கூறிய மூவகைத் தடத்தத் திருமேனிகளையும், அவற்றைக் கடந்த சொரூப நிலையையும் இம்மந்திரத்தில் திருவருளாகிய சத்திமேல் வைத்துக் கூறினார் என்க.)

குறிப்புரை :

`திருவருளாகிய சத்திதானே சிவன்` என்பதை உணர்த்துதல் இதற்குப் பயன் என்க. அங்கு, ``பரசிவன்`` என உயர்திணை வாய்பாட்டானும், இங்கு, `அல்லது ஒன்றே` என அஃறிணை வாய்பாட்டானும் வாய்பாடு வேறு படுத்து ஓதிய நுட்பம் ஓர்ந்துணரற்பாற்று.

பண் :

பாடல் எண் : 19

ஒன்றது பாலே உலப்பிலி தான்ஆகி
நின்றது தன்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல தாகும் துணையென்ன
நின்றது தான்விளையாட்(டு) என்னுள் நேயமே.

பொழிப்புரை :

எனது உள்ளத்தில் என் அன்பேயாய் நிற்கின்ற சிவம் தன்போல்வது பிறிதுபொருள் இல்லாது தனி ஓர் அறிவுப் பொருளாய் இருத்தலால் அழிவற்று, என்றும் உள்ளதாகின்றது. அஃது அங்ஙனம் ஒன்றேயாயினும் தன்னைப்போல் அறிவுடையனவாயும், அழிவில்லன வாயும் உள்ள எண்ணற்ற உயிர்க்கும் உள்ளுயிராய் நிற்றலால் பலவாகவும் ஆகின்றது, அங்ஙனம் ஆயினும் அவ்வுயிரின் தன்மயைத் தான் அடையாமல் தான் வேறு பொருளாகவே உள்ளது. இனி, ``அதன் விளையாட்டு`` எனப்படுவது, அஃது உயிர்களோடு பெத்தம், முத்தி இருநிலையிலும் உடனாய் நின்று, எஞ்ஞான்றும் அவற்றிற்கு அவ்வப்பொழுது ஆவனவற்றைச் செய்து உதுவுவதே யாகும்.

குறிப்புரை :

``தானே படைத்திடும்`` என மேல் வந்த மந்திரத்தில் ``வியாபி`` என்ற நிலையில் சுத்தி, ``சத்தி`` என்றே பொதுவாகச் சொல்லப் படும் அது படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் பொழுது ஆரணி, செனனி, இரோதயத்திரி - முதலியனவாகச் சொல்லப்படும். அவற்றுள் ``உயிர்க்குயிராய் நிலைதுன்றி`` என்றதனால், `சத்தி` என்னும் பொதுநிலையையும் ``துணை என்ன நின்றது`` என்றதனால் ஆரணி முதலாக நிற்கும், சிறப்பு நிலையையும் கூறினார். முதல்வன் செய்யும் தொழில்களை `விளையாட்டு` எனக் கூறுதற்குப் பொருள் `ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு விளை யாட்டு` என்பது போல, `வருத்த மின்றி எளிதில் செய்தல்` என்பதே யன்றி, `சிறியார் விளையாடும் விளையாட்டுப் போலக் குறிக்கோள் யாதும் இல்லது` என்பதன்று.
``முதற்பொருள், முதலில் ஒன்றாய் இருந்தது; பின்பு அஃது யான் பலவாக ஆவேனாக எனக் கருதியது`` எனவரும் உபநிடதப் பொருளும் திருவருளைப் பற்றியதேயாதலை இங்கு இவற்றால் உணர்த்தியவாறு. இனி முதல்வன் செயலை `விளையாட்டு` எனச் சில இடங்களில் கூறப்படுதலையும் இங்குக் குறித்தார் என்க.
அன்பே சிவமாதல் பற்றி அதனை, ``என்னுள் நேயம்`` என்றார். `என்னுள் நேயம்தான் உலப்பிலியாகி நின்றது; உயிர்க் குயிராய் நிலைதுன்றி, அவை யல்லதாகும்` எனவும், `விளையாட்டுத் துணை என்ன நின்றதுதான்` எனவும் இருதொடராக இயைத்து முடிக்க. சடமாயும், பலவாயும் உள்ள பொருள்கள் யாவும் அழிவன ஆதலின் அத்தன்மைக்கு முழுதும் வேறுபட்டதென்றற்கு, `ஒன்று அதுவாலே` என்றார் ஆகலின், அஃது அறிவாய் நிற்றலும், உடன் கொள்ளப் பட்டது. `அதனாலே` என ஓதற்பாலதனை, ``அதுவாலே`` என ஓதினார்; `ஒன்றாய் நிற்கும் அத்தன்மையினாலே` என்க.
`முதற்பொருள் இவ்வாறெல்லாம் சிறந்து நிற்றற்குக் காரணம் திருவருளாகிய அத்தன்மையினாலே` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 20

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ(டு)
ஆய்அக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போய்அக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

பொழிப்புரை :

முழுதும் திருவருளிலே பொருந்தி நிற்கின்ற சுத்த சிவன் அந்தத் திருவருள் காரணமாகச் சத்தியோடு கூடிச் சத்தனாய் நின்று, பின்பு சுத்தமாயையுள் பொருந்தி முதற்கண் நாத தத்துவத்தைத் தோற்றுவித்து, அத்தத்துவம் பற்றுக்கோடாக சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும், அந்த வாக்கு முதலிய அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்கும் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளையும் தோற்றுவித்துப் பின்பு விந்து தத்துவத்தைத் தோற்றுவித்த பின்னரே உலகம் முழுதும் முறைப்படி தோன்றும்.

குறிப்புரை :

`இங்ஙனமான அனைத்திற்கும் திருவருளே காரணம்` என்பது குறிப்பெச்சம். ``நேயம்`` என்றது திருவருளை. `சுத்த சிவன்` என்பார் ``நின்மலன்`` என்றார். அவன் சொரூப சிவன். அவனே உலகத்தை நோக்க விரும்பும்பொழுது சத்தியாலே நோக்குவன் ஆதலின், ``சத்தியோடு ஆய்`` என்றார். ``அடைந்திட்டு`` எனவும் ``புணர்ந்திட்டு`` எனவும் கூறினார். `விந்து தத்துவம் காரியமே யாயினும் பிற எல்லாவற்றிற்கும் அது காரணம்` என்பார். ``வீயத்தகா விந்து`` என்றார். வீதல் - அழிதல். விளைதலுக்கு `உலகம்` என்னும் வினைமுதல் வருவித்துக்கொள்க. `பல்வேறு வகைப்பட்ட உலகங் களின் பல்வேறு வகையான தோற்றமும், ஒடுக்கமும் திருவருள் காரணமாகவே நிகழும். என்றற்கு, உலகத் தோற்ற முறையைச் சிறிது வகுத்துக் கூறினார்.
இதனால், திருவருளின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.

பொழிப்புரை :

எல்லாக் காரியங்களின் தோற்றத்திற்கும் முதலாய் நிற்கின்ற பரவிந்துவே, பிற எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி வியாபகமாய் நிற்கும். அது மல கன்மங்களோடு விரவுதல் இன்றித் தூயதாயும் உள்ளது. அதனால் அது `மகாமாயை` எனவும் படுகின்றது. அஃது அபர முத்தர்களாகிய மந்திர மகேசுரர், அணுசதா சிவர் முதலியோருடைய தனு கரணங்களாகவும், சத்த கோடி மகா மந்திரங்களாகவும், வேத சிவாகமங்களாகவும் மேற்கூறியோருடன் மற்றும் விஞ்ஞான கலர்களும் வாழும் அளவற்ற அண்டங்களாயும் விளைந்து பயன்படும்.

குறிப்புரை :

``பரவிந்து என்பது, `காரிய விந்துக்களுக்கு மேலாய் நிற்கும் விந்து`` எனப் பொருள் தந்து காரணப் பெயராய்ச் சுத்த மாயையைக் குறித்தது. அதனையே சிவன் தான் நேரே தொழிற் படுத்துதலின் அதன் இயல்பை விரித்தார். `அதனால் சத்தியது பெருமை விளங்கும்` என்பது பற்றி, சுத்த மாயைக்குக் கீழ் உள்ள அசுத்த மாயையைச் சிவன் தனது ஏவல் வழி நிற்கும் அனந்தேசுரரைக் கொண்டும், பிரகிருதி மாயையை அவரது ஏவல்வழிச் சீகண்ட ருத்திரரைக் கொண்டும் செயர்படுத்துவன்.
``தேவர்`` என்றது ஏற்புழிக் கோடலால் மேற்கூயோரைக் குறித்து, ஆகுபெயராய் அவரது தனு கரணங்களை உணர்த்திற்று. சிவாகமமும் வேதம் எனப்படும்.
இதனால் சுத்த மாயையினது சிறப்புக் கூறும் முகத்தால் திருவருளது ஆற்றற் பெருமை கூறப்பட்டது.
முன் அதிகாரத்தில் திருவருளின் இயல்பினை அதனைப் பெற்றார் உணருமாறெல்லாம் கூறிய நாயனார், அதனுள் திருவருள் மறைத்தலைச் செய்து இருளாயும் நிற்றல் கூறப்பட்டமையால் அஃது அதற்குச் செயற்கையேயாக, அதன் இயல்பு ஒளியேயாதலை அச்சிறப்புப் பற்றி இவ்வதிகாரத்தில் வேறெடுத்து ஒன்பது மந்திரங்களால் உணர்த்துகின்றார்.
சிற்பி