ஏழாம் தந்திரம் - 10.அருளொளி


பண் :

பாடல் எண் : 1

அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.

பொழிப்புரை :

திருவருளைப் பெற்று அதனானே அதன் இயல்பை உணர்ந்து அதிலே அழுந்தாதவர்கள் அத்திரு வருளோடு இயைந்து ஒழுகும் ஒழுக்கத்தில் நில்லார், அங்ஙனம் நில்லாமையால் அவர் ஐம் பாசங்களினின்றும் நீங்கதலும் இல்லை. பாசங்களின் நீங்காமையால் அவர் திருவருளின் பெருமையை அறிந்து அதனை அடைய முயல மாட்டார். திருவருளைப் பெற்றோர் தமது வினைப்பிறப்பே அருட் பிறப்பாகப் பெற்று, திருவருளின் பெருமை அறிந்து அதில் அழுந்துதலும் செய்வர்.

குறிப்புரை :

எனவே, திருவருள் ஒளியேயாதல் உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் விளங்கும் என்பதாம்.
`அருளின் வேறு பிறப்பாகப் பிறந்திட்டு` என்க. இறைவன் குருவாய் நின்று திருவருளை வழங்கப் பெற்றோர் முன்னைப் பிறப்பை மாற்றி வேறு பிறப்பாய்ப் பிறந்தவர் எனச் சொல்லப் படுதல் பலரும் அறிந்தது. முன்னர் ``அறிந்து, என்றமையால் பின்னர் ``அறிவார்`` என்றது அழுந்தியறிதலைக் குறித்தது.
இதனால், திருவருள் ஒளியேயாதல் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

பொழிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடைய சிவன், இனிப் பிறந்து உலகின்கண் வாராது என்றும் ஒருபடித்தாய் இருத்தற்குரிய வழியை எனக்குத் தந்தமையால் பெரியரிற் பெரியன் ஆகின்றான்; அந்நிலையில் அதுவெறும் வறுநிலையாய் இல்லாது உண்ண உண்ணத் தெவிட்டாத இனிக்கின்ற இன்பத்தை வழங்கினமையால் அவன் ஆனந்தமயன் ஆகின்றன். அவன் தனது அளவில்லாத பெருமை காரணமாக அளவற்ற பெயர்களை உடையன். அவற்றுள் எந்தப் பெயரையேனும் சொல்லி அதன் பொருளை உணரும் முகத்தால் அவனது திருவருளால் விளைகின் மேற்கூறிய இன்பக்கடலில் எஞ்ஞான்றும் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள்செய்தான்.

குறிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடையவனை `நந்தி` என்னும் பெயராகக் கூறியது ஆகுபெயர். அதனைப் பின்னும் கூறியது சொற் பொருட் பின்வருநிலை. `தந்தான்; அதனால் மாநந்தி` எனக் கூறற்பால வற்றை இவ்வாறு கூறியது உடம்பொடு புணர்த்தல். ``பேர் நந்தி`` என்னும் எழுவாய்கட்கு, ``மாநந்தி ஆனந்தி`` என்பன பயனிலையாயின.
``ஆயிரம்`` என்பது அளவின்மை குறித்தது. எல்லாப் பெயரும் அவனது திருவருளின் பெருமையையே உணர்த்தலின் `எந்தப் பெயரினாலும் அருட்கடலில் ஆடலாம்` என்றார். அப் பெயர்கள் சிவன், சங்கரன், சம்பு, மயற்கரன், மயோபு, உருத்திரன் முதலியன. அவற்றது பொருள்களை அறிந்துகொள்க. ``பேர் ஒன்று`` என்பது, தலைமை பற்றி, சிவன் - என்பதையே குறித்தது எனவும் உரைப்பர்.
இதனால், `திருவருள் இருளாய்த் துன்பத்தைத் தருவதாகாது ஒளியாய், இருளை நீக்கி எல்லையில் இன்பத்தை வழங்குவதே` என்பது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.

பொழிப்புரை :

திருவருளை நிரம்பப் பெறாத நிலையில் யான் அவனது உண்மை நிலையை எனக்கு இயன்றவகையில் ஆடுதல், பாடுதல் முதலியன செய்து அறிய முயன்றேன். அதன் பயனாக அவனது அருளை நிரம்பப் பெற்றமையால், அவன் என் அறிவால் நோக்காது அவன் அருளால் நோக்கும் முறையை உணர்த்தி, அவ்வாறு நோக்கிய பொழுது அவன் என்னின் வேறாகாது என்னுள்ளே விளங்கினான்.

குறிப்புரை :

எனவே, `உயிர் இறைவனைத் தன்னின் வேறாகப் புறத்தே காண முயலும் நிலையெல்லாம் திருவருளை முற்றப் பெறாத நிலை` என்பதும், `முற்றப் பெற்ற நிலையில் அஃது இறைவனைத் தன்னுள்ளே கண்டு களிக்கும்` என்பதும் விளக்கியவாறு. காண முயன்ற முயற்சியைக் கண்டதாகக் கூறியது, `அம்மி துணையாக ஆற்றைக் கடந்தான் மூழ்கினான்` என்பது போலக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறிய, உபசார வழக்கு. முதல் தொடரில் செயப்படு பொருளும் கருவியும் பயனிலைக்குப் பின்னே நின்றன. `கூடிய வாற்றால்` என உருபு விரிக்க. உற்று - உற்றதனால். `தன் அருளை உற்றதனால் அவன் வந்து நின்றான்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், திருவருள் முதற்கண் சிற்றொளியாய்த் தோன்றிப் பின் பேரொளியைத் திகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயா படலம் எனப்பண்ணி
`அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

பொழிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடையவனாகிய சிவன், யான் தொன்று தொட்டு என்னைப் பொருந்தி வந்தனு கரண புவன போகங்களும், அவற்றிற்கு நிமித்தமாய் அநாதியே என்னைப் பற்றி நின்ற ஆணவமும் என்னோடு என்றும் இயற்கையாய் நீங்காது நிற்கும் குணங்களாகாது, ஒரு காலத்தில் விட்டு நீங்கும் குற்றத் தொகுதியே ஆதலை உணரச் செய்து, `அக்குற்றங்கள் அனைத்தினின்றும் நீங்கி இது பொழுது நீ தூயையாய் நிற்றலையும் பார்` என்று காட்டினான். அதனால் நான் மாயா காரியங்களால் பெற்ற பாச அறிவை நீக்கினேன்; அவனது அருள் வழியிலே நின்றேன்.

குறிப்புரை :

`இங்ஙனம் ஆதலின், திருவருள் இருளாய்க் குற்றங்களின் வீழ்த்துவதாவது, ஒளியாய் அவற்றினின்றும் மீட்பதே என்பது தெளிவாகின்றதன்றோ` என்பது கருத்து. ``மாயை`` என்பது இங்கு, நீடு நில்லாது விரைய மறைதலைக் குறித்தது. ஒரு பொருட்கு அதனை விட்டு என்றும் நீங்காததே `அதன் குணம்` என்றும், ஒரு காலத்தில் அதனை விட்டு நீங்குவது `அதற்குக் குற்றம்` என்றும் சொல்லப்படும். ``என`` என்பது `என்று உணர` என்றவாறு.
``என்று அடி வைத்தான், என்பதை, `அடி வைத்து என்றான்`` எனப் பின் முன்னாக மாற்றி வைத்து உரைக்க. அடியைச் சென்னி மேல் வைத்தல் அருளை வழங்குதற்கு அடையாளம். திருவடி அருளே யாதலின், அதனைப் பணிதலாவது அதன்வழி நிற்றலேயாம்.
இதனால், திருவருள் ஒளியேயாதல் வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.

பொழிப்புரை :

பாசஞான பசுஞானங்களாய்த் திரிபு கொள்கின்ற மருளில் பொருந்திய உயிரின் உணர்வாகிய திரியில் பதிஞானமாகிய திருவருள் என்னும் சுடரைக் கொளுத்தி அஃது எரிந்து வீசுகின்ற ஒளியினால் எல்லாப் பொருட்கும் இடம் தந்து வியாபகமாய் நிற்கின்ற ஆகாயம் போன்று எல்லையற்று நிற்கும் சிவத்தைத் தரிசியுங்கள். அப்பொழுது அந்தத் திருவருளின் ஒளியில் பாசம் காரணமாக முன்பு உளவாகிய துன்பங்கள் யாவும் முழுதுமாக அற்றொழியும். இவ்வாறு பசுஞானமாகிய அறிவைப் பதிஞானமாய் விளங்கச் செய்கின்ற திருவருளாகிய விளக்கைப் பெற்றவர்களே அந்த விளக்கினுள்ளே விளங்கும் மற்றொரு விளக்காய் விளங்குவார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரத்தின் பொருள்,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிர்எனும் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பர் காளை தாதை கழலடி காண லாமே``
- திருமுறை - 4-75-4.
என்னும் அப்பர் திருமொழியில் அமைந்து விளங்குதல் காண்க. இதனுள், \\\"விளக்கு`` என்பனவும், \\\"வெளி`` என்பதும் உருவகங்கள். விளக்கில் விளங்கும் விளக்காவது, பெருவிளக்கின் ஒளியினுள் தனது ஒளிவேறு தோன்றாது அடங்கி விளங்க இருக்கும் சிறுவிளக்கு. இதனை, `பகலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு` எனவும் கூறலாம். தாம், ஏ அசைகள்.
இதனால், `திருவருள் ஒளியாய் நின்று பயன் தருமாறெல்லாம் உணர்ந்து அதனாற் பயன்கொள்க` என்பது விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள்
ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.

பொழிப்புரை :

`ஒளி, இருள்` என்றும் இரண்டில் எதுவும் எக் காலத்திலும் அழிந்தொழிவதில்லை. (ஒளி வரும் பொழுது இருள் அடங்கியிருக்குமேயன்றி அழிந்து போவதில்லை. அஃது ஒளி நீங்கியபொழுது மீட்டும் இருள் வருதலைக் கொண்டு அறிந்துக் கொள்ளப்படும். இந்நிலையில்,) நீங்காது நிற்கும் ஒளியோடு கூடிய கண்ணிற்கே ஒருஞான்றும் இருளோடு கூடும் நிலை வாராது ஒளி யாகவே விளங்கும் நிலை உளதாகும். ஆகவே, ஒளியோடு கூடும் பொழுது ஒளியாயும், இருளோடு கூடும்பொழுது இருளாயும் நிற்கின்ற கண்போல்வது ஆன்மா. அஃதாவது கண் ஒளிப் பொருளுமன்று; இருட்பொருளுமன்று; அவ்விரண்டினும் வேறு. ஆயினும் ஒளியோடு கூடியபொழுது ஒளியாயும், இருளோடு கூடி யிருளாயும் நிற்கும். அது போல ஆன்மாப் பதியும் அன்று; பாசமும் அன்று. அவ்விரண்டினும் வேறு. ஆயினும் பதியோடு கூடிய பொழுது பதியாயும், பாசத்தோடு கூடியபொழுது பாசமாயும் நிற்கும். ஒளிவந்தபொழுதும் இருள் அழிவ தில்லை. ஆயினும் ஒளியின்முன் இருள்தோன்றாது அடங்கியிருக்கும். ஒளிவருவதும், போவதுமாய் இருப்பின்கண் ஒளியாயும், இருளாயும் வேறு வேறு நிலைகளை அடையும். வந்த ஒளி பின் நீங்காது நிற்பின் கண் அவ்வொளியேயாய்ப் பின் இருளாக மாறாது. அதுபோல, மாயா கருவிகள் வந்து கூடுவனவும், பிரிவனவுமாகிய புற ஒளிகளாகும். அதனால் அவற்றோடு கூடிய உயர் அறிவாயும், அறியாமையாயும் மாறி மாறி நிற்கும். திருவருளாகிய ஒளிவந்த பின் நீங்காதே நிற்கும் அகவொளியாகும். அதனால் அதனோடு கூடிய உயிர் பின்பு ஒரு ஞான்றும் இருளாகாது ஒளியேயாய்ச் சிவமாய் விளங்கும்.

குறிப்புரை :

இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகள் ஒட்டணியாய் நிற்றலின், இதன் பொருள் இவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. ``ஒளியும் ஒழியாது`` என இறந்து தழுவிய எச்ச உம்மை கொடுத்துக் கூறியதனால், இரண்டாம் அடியின் முதலில் உள்ள ஒளி, `ஒழியா ஒளி` என்பது பெறப்பட்டது. ஒழியா ஒளியாவது இயற்கைப் பேரொளி யாகிய ஞாயிற்றின் ஒளி. திருவருளின் இயல்பிற்கு அதனினும் சிறந்த உவமையின்மையால் அஃது அழியா ஒளியாக உபசரிக்கப் படுகின்றது. ஒழியும் ஒளி பல இல்லங்களிற் பலரால் ஏற்றியும், அணைத்தும் வைக்கும் விளக்கொளி. திருவருள் ஞாயிறு போன்றதும், மாயா கருவிகள் விளக்குப் போல்வனவுமாகும். மாயா கருவிகளால் பெறும் அறிவு பாச அறிவே ஆகையால், அது நீக்கத்தக்கதாயிற்று. ``அறியாமை அறிவகற்றி``l என்னும் சித்தியாரிலும், ``செறி வற்றுலகோ டுரைசிந் தையுமற்று - அறிவற்று அறியா மையும் அற்றதுவே``3 என்னும் கந்தர் அனுபூதியிலும் ``அறிவு`` என்றது, நீக்கத் தக்கதாகிய பாச அறிவையேயாகும்.
ஒளியில் நின்றோரது கண்ணின் இயல்பை அதனையுடையார் மேல் ஏற்றிக் கூறினார். ``உயிர்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டி, ``உள்`` என்பதை ஒளியோடு இயைத்து, உயிர் ஒளி இருள் கண்ட கண்போல வேறாய், உள் ஒளியால் உள் இருள் நீங்கிச் சிவமாம்` என முடிக்க. திருவருளை ``உள் ஒளி`` என்றதனால் கருவிகளாகி ஒளிவெளி ஒளியாயிற்று. வெளியாவது உயிருக்கு வேறாய் நிற்பது.
இதனால், திருவருள் பாச ஒளிபோலப் புறமாய் நிலையாத தாகாது, அகமாய் நிலைபெற்று நிற்கும் சிறப்புடைய ஒளியாதல் கூறப்பட்டது. இம்மந்திரத்தின் முதலடிப் பொருள், ``ஒளிக்கும், இருளுக்கும் ஒன்றேயிடம்; ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும்; எனினும் இருள் அடராது`` * எனக் கொடிக்கவியிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த
திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.

பொழிப்புரை :

சிவன் தனது திருவுளப் பாங்கிற்கு மாறான வழியில் சென்று உழன்று கொண்டிருந்த என்னை அதற்குக் காரணமான அறியாமையைத் தனது திருவடிகளை என் சென்னி மேல் சூட்டு மாற்றால் போக்கி ஆட்கொண்டு, அதனால் தூய்மை பெற்ற எனது உள்ளத்திலே அவன் நீங்காது புகுந்து நிற்குமாற்றால் யான் அவனது அருளேயாய் நிற்கச் செய்து, அதனால், எனது இயற்கையை எய்திய எனக்கு அவனது அரிய இன்பத்தை அவன் தந்தவாறு எவ்வாறு என எண்ணி யான் ஒன்றும் தோன்றாது நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஏகாரங்கள் மூன்றும் அவற்றுக்கு எதிரானவற்றி னின்றும் பிரித்து நிற்றலால் பிரிநிலைகள். ``சூட்டி`` என்பதன் பின் `ஆட்கொண்டு` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. நிறம் - மார்பு; அஃது ஆகுபெயராய் நெஞ்சத்தைக் குறித்தது. அறிவை நெஞ்சமாக - உள்ளமாகக் கூறுதல் வழக்கு. ``நின்மலர்`` என்றது அதன் பயனாகிய ஞானத்தை உணர்த்தி நின்றது. இயற்கையை `தருமம்` என வழங்கும் வடமொழி வழக்கே பற்றி இவரும் ``அறம்`` என்றார். தித்திப்பதாகிய பால் அதன் இயற்கைக்கு மாறாகக் கசப்பது, நாவில் சேர்ந்த `பித்தம்` என்னும் செயற்கையாலேயாம். அந்தச் செயற்கை நீங்கிய பொழுது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல உறவுப் பொருளாகிய திருவருள் பகைப்பொருளாக உயிருக்குத் தோன்றுதல், அவ்வுயிரை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையாலேயாம். அச்செயற்கை நீங்கியபொழுது திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும் இதனை உமாபதி தேவர்,
``தித்திக்கும் பால்தானும் கைக்கும்; திருந்திடும்நாப்
பித்தத்தில் தான்தவிர்ந்த பின்``*
என விளக்கினார். அம்முறையிலே இங்கு நாயனார் ``அறமே புகுந்த எனக்கு`` என்றார். `புகுந்க` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பால் தித்தித்தலும், திருவருள் உறவுப் பொரு ளாதலும், செயற்கை காரணமாக முன்பு வேறுபட்டிருந்து, பின்பு விளங்குதலால் செயற்கைபோலச் சொல்லப்படுதல் பற்றி, ``புகுந்த என்னை`` என்றார். இயற்கைத் தன்மையே `குணம்` என்றும், செயற்கைத் தன்மை `குற்றம்` என்றும் சொல்லப்படும். குற்றத்தை வடமொழியாளர், `உபாதி` என்பர்.
திறம் - வகை. அது காரணத்தின்மேல் நின்றது. உயிர்களைச் சிவன் தானாகச் செய்தற்குக் காரணம் அவனுக்குள்ள அருளேயன்றிப் பிறிதின்மையை விளக்குவார், ``திறம் ஏது என்று எண்ணித் திகைத் திருந்தேன்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாய் நின்று செய்வன எல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

பொழிப்புரை :

பக்குவம் எய்தியபொழுது ஆணவ மலம் நீங்கத் திருவருட் பதிவு உயிரினிடத்து நிகழும். அப்பொழுது தான் உயிர் தன்னையும், தலைவனையும் உணரும் நிலையைப் பெறும். அப்பேற்றால் அது திருவருளாகிய பரவெளியிற் சென்று, அதன்கண் விளங்குகின்ற சிவத்தைப் புகலாக அடையும். அவ்வாறு அடைந்து நிற்றலே உயிர்பெறும் முடிநிலப் பேறாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``பின்னைச் சிவகதியாம்`` என்பதை இறுதியில் வைக்க. மருள் - மயக்க உணர்வு. அஃது ஆணவ மலத்தால் நிகழ்வன. ``நீங்க`` என்னும் செயவெனெச்சம் நிகழ்காலத்தில் வந்து உடனிலையாய் நின்றது. ``புகுந்தானை`` என்ற அனுவாதத்தால் அவன் புகுந்தமை முன்பே பெறப்பட்டது. சிவன் தனது அருளி வழியே புகுவன் ஆகலின் அவன் புகுந்தமை கூறவே அவனது அருள் புகுந்தமைதானே பெறப்பட்டது. தன்னை உணர்ந்த வழியே தலைவனை உணர்தல் கூடுமாகலின் தலைவனை உணர்தல் கூறவே தன்னை உணர்தலும் பெறப்பட்டது. உறு, துணைவினை. ``தெருளும், ஒன்றும், ஒன்றும்`` என்னும் பயனிலைகட்கு `உயிர்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. ஒன்றுதல் - பொருந்துதல். செய்யுள் நோக்கி, ``பொருளது என்ற புகலிடம்`` என்றாராயினும், `புகலிடம் என்ற பொருள்` என்றலே கருத்தென்க. எல்லாம் பொருளேயாயினும் உண்மையில் `பொருள்` எனப்படுவது மெய்ப்பொருளேயாதல் பற்றி அதனையே இங்கு, ``பொருள்`` என்றார். ``அது`` மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள். `அதுவே சிவகதி` என்றற்கு, ``பின்னைச் சிவகதியாம்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாதல், அதனைப் பெற்றார் பெறும் பேறுபற்றி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை
வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர்
தேறணி யாம்இது செப்பவல் லீரே.

பொழிப்புரை :

உலகீர், திருவருளை உள்ளவாறு நீர் உணர்ந்தீ ராயின், சிவனை யொழித்து ஒழிந்த தெய்வங்களுள் எதுவாயினும் அது பல்கால் பிறந்து வாழ்ந்து இறந்தமையை வேதாகம புராணங்களைச் சான்று காட்டிப் பலர்க்கும் விளக்கிக் கூறுங்கள். அங்ஙனம் கூறுமாற்றால் அவர்கள் வேறு எந்தத் தெய்வத்தையும் அதனிடத்து மெய்ப்பொருள் தன்மையை ஏற்றி மயங்கும் மயக்கத்தை நீக்குங்கள். இவ்வாறு செய்தலே பருந்துகள் கூட்டமாகக் கூடி உண்ணத்தகும் இவ்வுடல் அங்ஙனம் ஆகும்படி கீழே வீழ்ந்த காலத்தில் அரிய உயிர்தான் தனது உண்மை நிலையைத் தெரிந்து உய்யும் வழியாகும். ஆயினும், இவ்வாறு செய்ய நீர் மாட்டுவீரோ?

குறிப்புரை :

``செய்ய மாட்டுதல் அரிது`` என்றபடி,
``நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்;
ஈறி லாலதவன் ஈசன் ஒருவனே`` *
``எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேம்; நம் சோணேசா - இல்லில்
பிறந்தகதை யும்கேளேம்; பேருலகில் வாழ்ந்து,(உ)ண்டு
இறந்தகதை யும்கேட் டிலேம்`` *
``தாமோ தரன் முதலோர் சாதல்நூல் சாற்றுவதும்
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே`` 8
ஏனைய தேவர் பலரும் பிறத்தல், பின்பு உண்டு வளர்ந்து வாழ்தல், பின்பு இறத்தல் ஆகிய இவைகளை உடையவராதற்கு வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவை அனைத்தும் சான்றா இருக்கவும் அவரது அருள்களை, `திருவருள்` என்றல் மயக்க உணர்வேயாம் என்பதும், உண்மையுணர்வைப் பெற்றார் தாம் `சிவனது அருளே திருவருள்` என உணர்தலோடு பிறர்க்கும் அதனை உணர்த்தற்பாலர் என்பதும் கருத்து.
இதனால் `ஒளியாகிய திருவருளாவது சிவனது அருளே` என்பது முடித்துக் கூறப்பட்டது.
சிற்பி