ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை


பண் :

பாடல் எண் : 1

திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

பொழிப்புரை :

`இடம்` என்று சொல்லப்படுவன எவையாயினும் அவை எல்லாவற்றையும் தனது உடைமையாக உடைய ஒப்பற்ற ஒரு தனிமுதற் கடவுளை உணருமாறெல்லாம் உணர்ந்து, அவ்வுணர்வினை மயக்கத்தால் குறைத்துப் பேசுபவரது மயக்கத்தை தனது அனுபவ மொழிகளாற் போக்குகின்ற சீரடியான் ஒருவனே ஒரு நாட்டில் இருப்பினும் அந்த நாட்டின்மேல் பகைமை கொள்வார் எவரும் இலராவர். அங்குப் பருவமழை பொய்யாது பெய்யும். எந்த ஓர் இல்லத்திலும் செல்வம் குறைதலோ, அல்லது செல்வம் தீர்ந்து வறுமை உண்டாதலோ நிகழாது.

குறிப்புரை :

ஏனைத் தேவரெல்லாம் சில உலகத்தளவிலே அதிகாரம் உடையராக, ``எல்லா உலகமும் ஆனாய் நீயே`` (தி.6) என்றருளிச் செய்தபடி அனைத்துலகங்களிலும் நிறைந்து அவற்றைத் தான் விரும்பியபடி இயக்குபவன் சிவன் ஒருவனே யாகலின், அவனை, ``திகைக்குரியான் ஒரு தேவன்`` எனவும், காரண காரிய முறையில் உறுதிப்பட விளக்குதல் பற்றி ``வாதி`` எனவும் கூறினார். திகை - திசை; இடம். ஒருவாதியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்த லாயிற்று. ``பார்`` என்றது இங்கு விளைநிலத்தை. நாட்டினை ``உலகு`` என்றார். ``அவ்வுலகுக்கு`` என்பதை மூன்றாம் அடியின் முதலில் கூட்டியுரைக்க.
இதனால், `சிவனடியார் உள்ள நாடு யாதொரு குறையும் இன்றி நலம் மிக்கதாகும்` என்பது கூறப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``அவ்வுலகத்தே`` என்னும் பாடல், தந்திரம 6இல், ``அருளுடைமையின் ஞானம் வருதல்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 2

கொண்ட குழியும் குலவரை யுச்சியும்
அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும்
உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.

பொழிப்புரை :

நிலத்தைத் தன்னகத்துக் கொண்ட கடல்களும், நிலத்தை நிலைபெறுத்துகின்ற எட்டுக் குலமலைகளின் சிகரங்களும், வானுலகமும், வானுலகத்திலுள்ள தேவர்களும், அத்தேவர்களுக்கு முதல்வனாகிய இந்திரனும் மற்றும் திசைக்காவலரும் ஆகிய அனைத்தும், அனைவரும் வந்து எனது கையிலும் அடங்கியுள்ளன, உள்ளனர் என்றால், இனி நாங்கள் எந்த இடர்ப்பாட்டிலும் அகப்படாமல் அவற்றினின்றும் தப்பிவிட்டோமன்றோ!

குறிப்புரை :

`கொண்ட குறி` என்பது பாடமன்று. கடலுக்கு `ஆழி` என்னும் பெயருண்மை பற்றி, ``குழி`` என்றார். `நாங்கள்` என்றது அடியார் அனைவரையும். ``என் கைத்தலத்திலும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `அடியவருள் கடைப்பட்ட என்கையிலும் உள்ளன என்றால் பிற அடியவர் கையில் இருத்தல் சொல்ல வேண்டுமோ` என்பதாம். அவை எம் வசத்தன அல்லது, யாம் அவற்றது வசத்தினேம் அல்லேம்` என்றபடி. `எல்லாப் பொருள்களும் சிவன் வசத்தின ஆதலின் அவை அவன் அடியார் வசத்தினவாம் என்றபடி.
தாமடங்க இந்தத் தலமடங்கும்; தாபதர்கள்
தாமுணரின் இந்தத் தலமுணரும் - தாமுனியின்
பூமடந்தை நில்லாள்; புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து. -திருக்களிற்றுப்படியார், 68
எனவும்,
அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகம் ஆளற் குரியர். -தி.12 திருக்கூட்டச்சிறப்பு, 3
எனவும் அருளிச் செய்தல் காண்க.
இதனால், `சிவனடியாரை உலகம் வாதியாமையே யன்றி அவர் வேண்டியவாறுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

இதனால், `மேற்சொல்லியவாறு எல்லாப் பொருள்களும் சிவனடியார் வசத்தன ஆதற்குக் காரணம் சிவன் அவர்கள் உள்ளத்தில் வீற்றிருத்தலேயாகும்` என மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.
``தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன்; நாம்தொழும் தன்மையான்``
-தி.12 திருமலைச் சிறப்பு, 19
என்றது காண்க. காரணங் கூறுவார் மேற்கூறிய காரியங்களையும் அனுவதித்து உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

பொழிப்புரை :

இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

குறிப்புரை :

`அத்தகைய பேரறிவை உடையவர்கள் சிவனடியார்கள்` என்றபடி. ``பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன்`` என்பதை ``அண்ணல்`` என்பதன் பின்னர்க்கூட்டி, `அப்பெருமையை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்`` என்றது, `விளக்கும் துணையுள்ள பொழுதன்றித் தானே விளங்கமாட்டாத உயிரினது அறிவு போலாது, தானே விளங்கி நிற்கும் அறிவை யுடையவன்` என்பதைக் குறித்தவாறு.
ஒருவராலும் அறியொணாதவனை அடியராயினார் மட்டும் அறிந்தது எவ்வாறெனின், ``ஒருவர்`` என்றது, பதியாகிய அவனது ஞானத்தைப் பெறாது, பாசஞான பசுஞானங்களை மட்டுமே யுடையவருள் ஒருவரையே ஆதலானும், அவருள் ஒருவராய் நில்லாது பதி ஞானத்தைப் பெற்றவரே அடியவராகலானும் அவை தம்முள் முரணாகா என்க. மூடம் உடையதனை ``மூடம்`` என்றது பான்மை வழக்கு. ``அறியொணா`` என்னும் பெயரெச்ச மறையும், ``காணும்`` ``கேட்டிடும்`` என்னும் பெயரெச்சங்களும் அடுக்கி, ``அண்ணல்`` என்னும் ஒருபெயர் கொண்டன. மூப்பு - முதிர்ச்சி; உயர்வு.
இதனால், `உண்டு, பூசி, உடுக்குமாற்றால் அடியவர் உலகரோடு ஒத்தாராயினும், அவர் உலகரின் வேறாய உயர் நிலையினர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாளம்
மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் பிறரைப் போலவே தாமும் மயக்க உலகத்தில் வாழ்வராயினும் அவ்வுலகம் மயக்குகின்ற மயக்கத்துட் படாது தெளிந்த உணர்வோடே வாழ்வர். உடம்பு நீங்கிய பின்னும் பிறரைப் போல மயக்க உலகங்களில் உழலாமல் சிவன் உலகத்தை அடைந்து அதன்கண் சில புவனங்கட்குத் தலைவராயும் விளங்குவர். அவையேயன்றித் தாமும் சிவனைப் போலவே எல்லா உலகங்களும் தம்முள் வியாப்பியமாய் அடங்கத் தாம் அவற்றைத் தம்முள் அடக்கி வியாபகமாயும் நிற்பர்.

குறிப்புரை :

`ஆகவே அவர்களை எளியராக எண்ணற்க` என்பதாம். ``இயங்கும்`` என்பதனை, `தாம் இயங்கும்` எனக் கொள்க. ``செல்வர்`` என்றது `வாழ்வர்` என்றபடி, ``வான்`` இங்குச் சுத்த மாயா வெளியைக் குறித்தது. அவ்வெளியே தடத்த சிவனுக்கு இடமாதல் அறிக. பின்னிரண்டடிகள், `சிவனது இயல்பாக நன்கறியப்பட்ட வற்றை இவர்களும் உடையர்` என்பதைக் குறித்தது. சிவனது இயல்பு.
``பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 17
எனவும்,
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவிற் பாதளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
எனவும் விளங்கிக் கிடந்தமை காண்க. போது - திருவடி மலர். ``பகிரண்டம்`` என்றது, `அண்டங்கள் அனைத்திற்கும் வெளியே உள்ள இடம்` என்றபடி. அதுவெற்ற வெளியாகலின், ``மயங்காப் பகிரண்டம்`` என்றார். மயங்குதல், பல பொருள்கள் ஒன்றோடொன்று விரவுதல்.
இதனால், சிவனடியாரை நம்மனோருள் சிலராக வைத்து எளியராக மதித்தல் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

பொழிப்புரை :

புறநிலையிற் செல்லாது அகநிலையிற் சென்று அங்குள்ள இறைவனை அறிகின்ற அறிவு `நான்` என்னும் முனைப்பு அடங்கி நிற்றலை அனுபவத்தில் யாம் கண்டோம். அதனால் அந்த அறிவு மாயா காரியங்கைள ஒழித்து அவற்றினின்றும் நீங்கித் தூய்மை யுறுகின்றது. ஆகவே, அகநிலையிலே நிற்கின்ற நம் பெருமானை அவ்விடத்திற் காண்கின்ற அகநிலையறிவைப் பெற்றவர்கள் துன்பத்தை அடைய மாட்டார்கள்.

குறிப்புரை :

மூன்றாம்அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``நெஞ்சம்`` என்றது அறிவை. அறிவது அறிவேயன்றி நெஞ்சம் ஆகாமை யறிக. ``அகம்படி`` மூன்றனுள் முதல் இரண்டும் `அகநிலை` எனப் பொருள் தந்தன. முதற்கண் நின்ற ``அகம்`` `உள்` என்னும் பொருளையும், ஈற்றில் நின்ற ``அகம்``, `நான்` என்னும் பொருளையும் உடையன. முதற்கண் நின்ற `படிதல்`, பொருந்துதல். ஈற்றில் நின்ற `படிதல்`, ஆழ்தல். ``கண்டாம்`` தன்மைப் பன்மை வினைமுற்று. ``கண்டவர்`` என்றது `அறிந்தவர்` என்றபடி.
``அழிக்கல்``, இங்கு வெல்லுதல். அஃதாவது அவற்றின் நீங்குதல், அசுத்த மாயா காரியங்களை, `பூதம், தன்மாத்திரை, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், புருடன், கஞ்சுகம், மாயை` - என இங்ஙனம் தொகுத்தெண்ணி, எட்டாதல் அறிக. இனி ``எட்டுத் தத்துவங்களால் ஆகிய நுண்ணுடம்பு`` எனவும் ஆம். இவற்றின் நீங்கினோரே முத்தராதல் அறிக. எனவே, `இந்நிலை அடைந்தோர் பிறவித் துன்பத்தை எய்துமாறு இல்லையாகலின், சிவனடியாராவார் இத்தன்மையுடைய முத்தரே` எனக் கூறினார்.
இதனால், சிவனடியார் பெத்தருட் சிலராகாது, முத்தரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.

பொழிப்புரை :

கடந்த காலத்தில் நிகழ்ந்துபோன அந்தச் செயல் களும், இப்பொழுது கடந்து கொண்டிருக்கின்ற காலத்தில் நிகழ்கின்ற இந்தச் செயல்களும், இவற்றைச் செய்விக்கின்ற முதல்வனும், அவன் செய்விக்கின்றபடி யான் செய்யும் பொழுது அதற்குத் துணையாய் உடன் நிற்கின்ற அன்புள்ள துணைவனும் ஆகிய எல்லாமாய் உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவனை நான் எனக்கு வருகின்ற பழியாயும், புகழாயும் விளைகின்ற அனைத்துப் பொருள்களுமாக உணர்கின்ற உணர்ச்சியோடே எனது உயிர் போய்க்கொண்டிருக்கின்றது. அதனால், எனது உடல் வழியாக நிகழும் முயற்சிகள் அனைத்தையும் அப்பெருமான் தனது முயற்சியாகவே ஏற்றுக் கொள்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் அறம் பாவங்கட்கு யான் யாதும் கடமைப் பட்டவனல்லேன்` என்பதாம். ``கழிவு, அழிவு`` என்னும் தொழிற் பெயர்கள் முறையே இறந்தகால நிகழ்கால நிகழ்ச்சிகளின் மேல் நின்றன. அந்நிகழ்ச்சிகள் அக்காலத்துப் பிறப்பின் வழியன என்பது வெளிப்படை. `இனி அடுத்து வருவதொரு பிறவி தமக்கு இல்லை` என்பது நாயனாரது துணிபாகலின் எதிர்காலம் பற்றிக் கூறாராயினார், முதல்வனை ``முதல்`` என்றது பான்மை வழக்கு. ``அழிவும்`` என்பதனை, ``கழிவும்`` என்பதன் பின் கூட்டியுரைக்க. ``அது`` என்னும் பகுதிப்பொருள் விகுதியை, `அழிவதுவும்` என மாற்றி வைத்து உரைக்க. `புகழுமாய், முற்றுமாக` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத்தலாயின, `முற்றுமாகக் கொண்டு` `எனது உழவு` என வருவித்துக் கொள்க. சீவன் முத்தராயினார் `எல்லாம் அவனே` என்று எதனைச் செய்யினும் தம் செயலற்று அவன் செயலாகச் செய்வர் ஆதலின், அவர், ``பாதகத்தைச் செய்திடினும் சிவன் அதனைப் பணியாக்கி விடுவன்`` (சிவஞானசித்தியார், சூ. 10-1) ஆதலின், ``உழவு கொண்டான்`` என்றார். இத்தகைய சீவன் முத்தரே `அடியார்` எனப்படுகின்றனர் என்க.
இதனால், அடியாரது சீவன் முத்திநிலை தம்மேல் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

பொழிப்புரை :

எனக்குத் தாயாகியவளும், தந்தையாகியவனும் நான் பிறப்பதற்கு முன்பே தங்களைச் சிவனுக்கு அடிமை` என்று எழுதிக் கொடுத்த ஆளோலையை வைத்துத்தான் ஈரேழுலகங்களை யும் ஒக்கப் படைத்தவனாகிய பிரமதேவன் என்னைப் படைக்கும் பொழுது எனது தலையில், `இவன் சிவனுக்கு அடிமை` என்று எழுதினான். `அந்த எழுத்துப் பொய்யானதன்று, மெய்யானதே` என நிலை நாட்டுபவனாகவே காப்போனாகிய திருமால் அமைந்தான்.

குறிப்புரை :

`என் தாயொடு ஆவணம்` என்றது, `யான் பிறந்த குடியில் யான் மட்டுமே சிவனடியானல்லேன்; என்தந்தை தாய் ஆகியோரே சிவனடியார்தாம்` என்றும், `அதனால் யான் பிறப்பிலே சிவனடியான்` என்றும் கூறியவாறு. இவ்வாறான வாய்ப்புடையவர் களையே `பழவடியார்` என்றும், தாம் மட்டுமே தொடக்கத்திலே யாதல், இடையிலேயாதல் அடியாராயினாரை, `புத்தடியார்` என்றும் கூறுவர். நம்பியாரூரர் பழவடியாரேயாயினும் `யான் ஆளல்லேன்` என வன்மை பேசினமை பற்றி அவரை ஏயர்கோன்கலிக்காமர்,
எம்பிரான் எந்தை தந்தை தந்தைஎன் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னைநின் றீருஞ்சூலை
வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து.
-தி.12 ஏயர்கோன். 392
எனப் புத்தடியாராகக் கூறினமை காண்க. வம்பு - புதுமை.
நாயனார் தம் தாய் தந்தையரையே குறித்தாராயினும் `இருமரபும் சிவனுக்கு ஏழேழ் பிறவியும் ஆட்பட்ட மரபு` என்பதைக் குறித்தமை காண்க. ``ஏழ் ஏழ் பிறவி`` என்பது, `எழுவகைப் பிறப்பில் வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பு` என்றவாறு,
புத்தடியாரினும் பழவடியார்க்கு ஒரு சிறப்புண்மையை இதனாற் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 9

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.

பொழிப்புரை :

`சிவனே நமக்கு எல்லாப் பொருளும்` எனத் துணிந்தவரது உள்ளத்தில் ஒன்றி உறைபவனும், அங்ஙனம் துணிந்த படியே மனமொழி மெய்களால் தன்னை வழிபட்டு ஒழுகு வசத்தனாய் நின்று அருள்புரிகின்றவனும் ஆகிய, அழகிதாய் அருள் நிறைந்த திரு வுள்ளத்தினையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானைப் பல் காலும் நினைக்கின்ற ஒருவர்க்கு அவனை விடுதல் கூடுமோ! (கூடாது)

குறிப்புரை :

`அகம் படி` என்பது `அகத்துப் பொருந்துதல்` என்னும் பொருட்டாய் அகமாகிய இடத்தைக் குறித்தது. `சிவன் தன் அடியவர் வசத்தனாய் அவர் வேண்டியவாறெல்லாம் அருளுதல் அருள் காரணமாக அன்றி வேறில்லை` என்றற்கு ``அணிந்து ஆர்அகம்படி ஆதிப்பிரான்`` என்றார். ``உறையும், ஒழுகும்`` என்னும் பெய ரெச்சங்கள், ``அணிந்தா ரகம்படி ஆதிப்பிரான்`` என்னும் தொகைச் சொல்லில், ``ஆதிப்பிரான்`` என்பதனோடு முடிந்தன. `தேனை உண்டறியாதவர் அதனை உண்டு சுவை கண்டபின் விடாமைபோலச் சிவனது அருளின்பத்தை அறியாதார் அதனை அறிந்து நுகர்ந்தபின் விடமாட்டார்` என்பார், ``கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே`` என்றார். `கணித்தார்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``
தி.12 கண்ணப்பர்., 174
என்ற திருத்தொண்டர் புராணத்தையும் காண்க. கணித்தல், பலகால் நினைத்தல்.
இதனால், `சிவனடியார் சிவானந்தத்தைத் தெவிட்டாது நுகர்ந்து திளைப்பவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

பொழிப்புரை :

தேவர்கள் தம் தலையால் தனது திருவடிமேல் வணங்குகின்ற, தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தனக்கு உண்மையான தொண்டினைச் சிலர் செய்ய அதற்குப் பயனாக அவரைத் தேவர்கள் தம் தலைமேல் வைத்துப் போற்றும்படி வைத்தான். அதற்குமேல் அவன் அவரை முக்குணங்களும், கன்மமும், ஆணவமும் இல்லாத ஒளிமயமான மேல் உலகத்தை ஆள்கின்ற பயனையும் கூட்டுவிப்பான்.

குறிப்புரை :

எனவே, `சிவனடியார்கள் அத்துணை உயர்ந்தவர்கள்` என்பதாம். `தலையால்` என உருபு விரித்து, ``மிை\\\\u2970?`` என்பதற்கு, `திருவடி மிை\\\\u2970?` என உரைக்க. `மிலைய, இசைய` என்னும் செயவெனெச்ச ஈறுகள் தொகுத்தலாயின. `மிலைய` எனவே, `தலைமேல்` என்பது தானே விளங்கிற்று. ``மெய்ப் பணி செய்ய`` என்பதை, ``நந்தி`` என்பதன் பின்னர்க்கூட்டி யுரைக்க. புலை - கீழ்மை. அஃது அவற்றை உடையவற்றைக் குறித்தது. `புலை நீங்கிய மிசையுலகு` என்க. ``பொன்`` என்றது ஒளியென்றவாறு. மேலே உள்ள ஒளியுலகாவது சிவனுலகு. பலம் - பயன். வேறு தொடராய் நிற்றலின் மீட்டும் ``படர்சடையோன்`` என்றார்.
இதனால், `சிவனடியார்கள் தேவரால் வணங்கப்படுபவராய்ச் சிவலோகத்தை ஆளும் பெருமையுடையவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கூட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.

பொழிப்புரை :

ஒன்றும் அறியாத இளமைப் பருவத்திற்றானே சிவனடியார்களை அவரது வேடத்தால் அறிந்து மகிழ்ச்சியுற்றதே சிவனுக்கு உண்மை அடிமைத் தன்மையாகும். அதன் பின் அவர்கள் செல்லும் செலவைத் தவிர்ந்த அவர்களது திருவடிகளை விளக்கிய நீரினைத் தலையில் தெளித்துக் கொள்ளுதலே அங்ஙனம் செய்வார்க்குப் பெரிய தவமாகும்.

குறிப்புரை :

இளமையிலே அடியார் பத்தி தோன்றுதல் முன்னைத் தவத்தினாலாம். காரைக்காலம்மையார் வண்டல் பயிலும் பொழுதே தொண்டர் வரின் தொழுதமையை (தி.12 காரைக்காலம்யார்., 5) நினைக. ``நடப்பார் மறிந்த புனல்`` என்றதனால், `திருவடிகளை விளக்கிய நீர்` என்பது விளங்கிற்று. மறி - மறிதல்; தவிர்தல். முதனிலைத் தொழிற் பெயர். `மறிதலில் பொருந்திய நீர்` என்க.
இதனால், அடியவரை வழிபடுவாரது சிறப்புணர்த்து முகத்தால் அவரது பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பாற் பெருமை இலயம தாமே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்திற் கூறியவாறு இளமையிலே அடியார் பத்தியிற் சிறந்த ஒருவனை அடைந்து அன்பு செய்பவர்கள் சிவனையே அடையவும் வல்லாராவர். இன்னும் அவரிடத்தில் சிவனையே வழிபடும் ஒருவனது பெருமை அடங்கி விடுவதாகும்.

குறிப்புரை :

`சிவனுக்கு அடியாராயினாரும் அவன் அடியார்க்கு அடியாராகாவிடின் சிறந்தவராகார்` என்பதாம். அதனாலன்றோ, சிவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட நம்பியாரூரர் பின்பு அடியாரது திருக்கூட்டத்தைக் கண்டு, ``இவர்க்கு யான் அடியேனாகப் - பண்ணு நாள் எந்நாள்`` (தி.12 தடுத்தாட் கொண்டது., 189) என இறைவனை நினைத்து எண்ணினார். முன்னை மந் திரத்திற் கூறினமை பற்றி அடியார்க்கடியனை ``அவன்`` என்றமையால், பின்னர் ``இவன்`` என்றது, பின்னர்க் கூறிய சிவன் பால் அணுகுதல் செய்தவனைக் குறித்தது. `நாடும் அடியார்கண்` என ஏழாவது விரிக்க.
இதனால், `சிவனுக்கு அடியாராயினாரும் அவன் அடியார்க்கு அடியாராதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது. திருத்தொண்டத் தொகை அடியார்க்கு அடியாராதலையேயன்றி, அடியார்க்கு அடியாராதலையும் குறித்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 13

முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

பொழிப்புரை :

பதினெண்கணங்களாக வகுத்துச் சொல்லப் படுகின்ற தேவ சாதியர் பலரும் முன்னே நல்வினைகள் பலவற்றைச் செய்து அந்நிலையை அடைந்தார்கள். அதன்பின்பு அந்நிலையில் இருக்க விரும்பாமல் சிவன்பால் அன்பு செலுத்தியுய்தற்கு இந் நிலவுலகத்தில் வருவார்கள். அவ்வாறு வந்து அவர் சிவனை வழி படுகின்ற இடம் எட்டுத் திசையிலும் பன்னிரு காதப் பரப்பிற்குச் சிவ லோகமாகும்படி அவர்களது ஞானம் செய்யும்.

குறிப்புரை :

`பதினெண்கணம்` என்பதை முதற் குறையாக ``எண் கணம்`` என்றார். `பதினெண் கணங்களாவார் இவர்` என்பதைப் புற நானூற்றுக் கடவுள் வாழ்த்தின் பழைய உரையிற் காண்க. `எண்கணங் களும் முன் இருந்தார்` என மாற்றியுரைக்க. ``இருந்தார்`` என்றது அந் நிலையினராய் இருந்தார் என்றபடி. ``முன்`` என்றதனால் `பின்` என்பது பெறப்பட்டது. எண் - எண்ணம்; விருப்பம். இறந்து - நீங்கி, எனவே, `சுவர்க்கலோக இன்பம் அபக்குவர்க்கே இனிக்கும் என்பதும், `அவர்க்கும் பக்குவம் வந்தபொழுது உவர்த்துவிடும்` என்பதும் பெறப்படும். ``கொன்றைத் - தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொரு ளலவே`` (தி.2 ப.41 பா.7) என்றருளியமை காண்க. ``பன்னிரு காதம்`` என்றது மிகுதி கூறியவாறு. சிவலோகமாகச் செய்தலாவது, மக்களைச் சிவபத்தியிற் சிறந்தவராக்கல்.
இதனால், தேவரியல்பு கூறும் முகத்தால் அடியாரது பெருமை உணர்த்தப்பட்டது. இதனானே, `அடியாருள் முற்பிறப்பில் தேவராய் இருந்தோரும் உளர் என அறிக` என்றதுமாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோக மின்றி அறிவோருண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோக மின்றிப் பரகதி யாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``சிவம்`` என்பதை ஞானிக்கும் கூட்டுக. யோகமாவது `ஒன்றுதல்` ஆதலால், அவயோகம், பயனில் பொருளோடு ஒன்று தலாம். அறிவோர் - ஞானிகள். `அறிவோர் வருகை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்துக் கொள்க. வருகை, அவதாரத்தையும் குறிக்கும். நவம் - புதுமை; அதிசயம். `அதிசயங்களை நிகழ்த்துதல் பலர்க்குக் கூடும்` என்க. காணும் - காணப்படும். பவயோகம் - பிறப்பில் சேர்தல்.
இதனால் அடியாரது பெருமைகளுள் மிக்கன சில எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

பொழிப்புரை :

பிரமன், விட்டுணு, பிறதேவர் ஆகியோ ரெல்லாம் தாம் தாம் செய்யும் அதிகாரத்தைத் தமது ஆற்றலால் அமைந் தனவாகவே கருதி மயங்குவாரல்லது, `இவை பரம்பொருளாகிய சிவனது ஆணையின்வழி நமக்கு அமைந்தன, என்று உணர மாட்டார்கள் (அதனால் அவர்கள் மெய்யடியாராதல் இல்லை) அந் நிலையில், `நமக்குக் கிடைத்த நலங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவனது அருளால் கிடைத்தன` எனச் சிவனுக்கு மெய்யடியா ராயினாரே உணர்வார்கள்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளில் `உணர்வான், உணர்வார்` என்பன பாடம் ஆகாமை அறிந்துகொள்க. மேல் - மேலான பொருள், என்றது அதன் அருளை. மிகு ஞாலம் - வானுலகம். பிரமனாதியோர் சில வேளைகளில். `எமக்கு உள்ள நலம் சிவனருளால் வந்தது எனக் கூறினாராயினும் அது முகமனுரையேயன்றி, மெய்யுரையன்று` என்க.
இதனால், அயன் மால் முதலியோரினும் அடியார் உயர்ந்தோராதல் கூறப்பட்டது.
சிற்பி