ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி


பண் :

பாடல் எண் : 1

விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

பொழிப்புரை :

அடியவர்கட்கு உலக உழவரின் வேறான விதைக் கூடை உண்டு; வேலி நிலம் உண்டு. அதனால் அவர் பசிக்குமுன்பே அவரது உழவுத்தொழில் அவர்கட்குப் பயனைத் தந்து விடுகின்றது. ஆகவே, `பசி வந்து வருத்துமோ` என்னும் அச்சம் இல்லாமல் அதற்கு முன்பே அவர்கள் அறுவடை செய்து பசியின்றி உண்கின்றார்கள். அது மாட்டாதவர்களே வயிறு வளர்க்கும் விருப்பத்தால் பலரிடம் சென்று இரந்து உயிர் வாழ்கின்றனர்.

குறிப்புரை :

ஆகவே, `அவர் அன்பர் விரும்பியளிக்கும் தானத்தை யேற்று உண்ணுதல் சோம்பலால் மானங்கெடாது வாழமாட்டாது மானம் இழந்து பிறரிடம் சென்று இரப்பவரது இரவன்று` என்பதாம்.
உருவக வகையால் ``விதைக்கூடை`` என்பது சுழுமுனை நாடியையும், `வேலி நிலம்` என்பது சந்திர மண்டலத்தையும் அதில் உண்டாகும் விளைவு விந்துத்தானத்து அமிழ்தத்தையும் உணர்த்தின. விச்சுக் கலம் - விதைக் கூடை. ``உச்சிக்கு முன்னே`` என்பது சிலேடை வகையால் `பசிக்கும் முன்னே` என்றும், சந்திர மண்டலத்துக்கு முன்னே உள்ள விந்துத் தானமாகிய ஆஞ்ஞையையும் குறித்தன. ``மாட்டாதார்`` என்றதால் அடியவர் மாட்டுவராதல் விளங்கிற்று. `யோகத்தால் காயசித்தி பெற்று நெடுங்காலம் வாழ வல்லவர் அன்பர் செய்யும் வழிபாட்டினை ஏற்றலைச் சோம்பலால் வறுமை யுற்று இரப்பவர் செயலோடு ஒத்ததாக எண்ணுதல் அறியாமை` என்றபடி.
இதனால், `அடியவர் பிச்சை யேற்றல் இரத்தலன்று` என்பது காரணத்துடன் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிரமனது தலை ஓட்டினையே கலமாகக் கொண்டு எங்கும் சென்று பிச்சையேற்றான். ஏன்? இயல்பாக அறம் செய்யாதவரும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலாகிய செயல் வாய்த்து அறம் பெறுதற் பொருட்டு. இன்னும் அஃதேயன்றி, `தானே பரம்பொருள்` என்பதை விளக்குதற்கும்.

குறிப்புரை :

`எனவே, அவன் அடியார் பிச்சையேற்றலும் அத் தன்மைத்தேயாம்` என்பது குறிப்பெச்சம். தாருகாவன இருடிகள் கருமப்பிரம வாதிகளாய், `கடவுள் இல்லை` என்னும் மயக்க உணர்வினராய்த் தம்மனைவியர்க்கும் அக்கொள்கையினையே போதித்துவர அவர்கட்கு அம்மயக்கத்தப் போக்கி, `பரம்பொருள் ஒன்று உண்டு` என்பதையும், `அப்பரம்பொருள் தானே` என்பதையும், அவர்கட்குத் தெளிவிக்கவே சிவபிரான் திருமாலை மோகினியாகச் செய்து இருடியர்பால் அனுப்பித் தான் பிச்சைப்பெருமானாய் இருடியர்தம் பத்தினிமார் முன் சென்றான். ஆகலின் அதனையே இம்மந்திரத்தின் பின்னிரண்டடிகளில் குறித்தார். பிச்சைப் பெருமானாய்ச் சென்றது, `பரம் பொருள் ஒன்று உண்டு` என்பதை உணர்த்துதற்கும், பிரம கபாலத்தை ஏந்திச்சென்றது, `அப்பரம் பொருள் தானே` என்பதை உணர்த்தற்கும் ஆதலின் ``பிரமன் சிரங்காட்டி`` என மீளவும் அனுவதித்துக் கூறினார். முதற்கண் ``பிரமன் தலைதன்னில்`` என்றது, `தானை பரம்பொருள்` என அகங்கரித்துப் பேசிய பிரமன் தலையிழந்தான் என்பதை உணர்த்து முகத்தால், `சீவர்கள் தாங்களே எல்லாவற்றுக்கும் தலைவர் என எண்ணுதல் பிழை என்பதைக் குறித்தற்கு. இரண்டாவது அடியை, `பிரியாள் அறம் செய்ய` எனவும் பாடம் ஓதுவர். அது முன்னிரண்டடிகளை வெற்றெனத் தொடுத்தல் ஆக்குமாறு அறிக.
இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. `அது` நான்கும் பகுதிப் பொருள் விகுதி. ``பிரான்`` என்பதை முன்னும் கூட்டுக. பிரிதல் - மேற்கொள்ளாதொழிதல்.
இதனால், சிவன் அடியார்கள் பிச்சை யேற்றல் சிவன் பிச்சையேற்றலை நினைப்பித்து, அதன் பயனை யெல்லாம் விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

பொழிப்புரை :

சிவபெருமானை உலக முதல்வனாக உணரா தவர்கள் அவன் இரத்தலை மட்டுமே நோக்கி அது பற்றி இகழ்ந் தொழிவர். அவர்கள் போலன்றி அவனை உலக முதல்வனாக உணர் பவர், `சிவன் ஏன் இரக்கவேண்டும்`என ஆழ்ந்து நோக்குவர். அங் ஙனம் நோக்குவார்க்கு, `அவன் அடியவர் உலகியலில் ஈடுபடாது பசி நீங்குதல் மாத்திரைக்குத்தன் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் நோக்குத் தப்பாது நிறைவெய்துதற் பொருட்டாம்` என்பது விளங்கும்.

குறிப்புரை :

எனவே, `சிவனடியார் இரத்தலைச் செய்தல் திருவருள் வழி நிகழ்வதாம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான் புகலே புகலாக
அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே

பொழிப்புரை :

அடியவர்களே! கருடனுக்கு அஞ்சிய பாம்புகளே சிவனையே அடைக்கலமாக அடைந்து அதனால், ஏன் கருடா சுகமா? என்று கேட்கும் அளவிற்கு அச்சமின்றி யிருக்கின்றன என்றால், `சிவன் தன்னை அடைந்தவர்களது இன்னலை எண்ணுவ தில்லை` என்றல் கூடுமோ! கூடாது. உண்மையில் அவன் நல்லவர் கட்கு இன்பத்தை அலைவீசும் கடலைப்போல மிகத்தருவதற் காகவே இருக்கின்றான். இன்னும் அவர்கட்கு அவன் தன்னையே கொடுத்துவிடுவான். ஆகையால், அவன் ஒரு காலத்தில் தலையோட்டிலே எங்கும் சென்று இரந்தானாயினும், எப்பொழுதும் தேவரும், மூவரும், யாவரும் தன்பால் வந்து வணங்கி நலம்பெற இருத்தல்போலவே நீங்களும் பலரது இல்லங்களைத் தேடிச்சென்று இரவாது இருங்கள்.

குறிப்புரை :

`அவன் உங்களைத் தேடி உணவு வரும்படிச் செய்வான்` என்பது குறிப்பெச்சம். ``புகலே புகலாக`` என்பது முதலியவற்றை ஈசன் என்பதற்கு முன்னர்க்கூட்டி, ``வர இருந்தான் வழிநின்றிடும்`` என்பதனை இறுதியில் வைத்துரைக்க. `இன்பம் அலைபொர என, பொருதற்கு வினைமுதல் வருவிக்க. அவ்வாறே ``வர`` என்பதற்கும் வினைமுதல் வருவித்துக் கொள்க. ``வழி நின்றிடும்`` என்றது, `அவனைப் போலவே இரும்` என்றபடி.
இதனால், `முன்மந்திரங்களிற் கூறியவாறு அடியவர் பிச்சையேற்றல் ஏற்புடைத்தாயினும், இருந்த இடத்திலிருந்தே ஏற்றல் சிறப்புடைத்து` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 5

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் தாம் எடுத்த உடம்பிலே உள்ளா ராயினும் அதன்கண் இல்லாதவரேயாவர். அஃது எங்ஙனம் எனின் அவ்வுடம்பில் உளதாகின்ற பசி, அவா, சினம் என்பவை தம்மை வெல்லும் அளவிற்கு மிகார். ஆதலின், இன்னும் அவர்கள் இந்திரன், மால், பிரமன் முதலியோர் உலகத்திலும், சிவலோகத்திலுங்கூட அங்குள்ள போகங்களை நுகர்ந்து வாழார். மற்றுச் சிவனது திருவடி நிழலில் தலைக்கூடுதல் ஒன்றனையே செய்வார்கள்.

குறிப்புரை :

`அதனால் பிச்சை ஏற்றலையும் செய்யார்` என்பது குறிப்பெச்சம். `சிவனடியார் சரீரத்திடைத் தங்கார்` என மாற்றி முதலில் வைத்துரைக்க. ``தங்கார்`` என்றது, எதிர்மறை வினைப்பெயர். ``பொங்கார்``, என்பதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இதனால், `சிவனடியார்கட்குப் பிச்சையும் மிகையேயாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார்
ஐயம் புகாமல் இருந்த தவசியர்
வையக மெல்லாம் வரஇருந் தாரே.

பொழிப்புரை :

இருந்த இடத்திலேயிருக்கும் யோகிகள் வறியவர் இரக்கும் இரவிற்குத் தாம் செல்லாமல், உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தம்பால் வந்து தம்மை வழிபடும்படி இருப்பார்கள். அங்ஙனமாயின், `ஞானத்தில் மிகுந்தவர் இரத்தலைச் செய்யார்` என்பது சொல்ல வேண்டுமோ!

குறிப்புரை :

`கையகம் நீண்டார் கடைத்தலைக்கே செல்வர்` என்பது பாடமன்று. மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `அகங்கை` எனப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய் வருவது இங்கு நேரே ``கையகம்`` என்றே வந்தது. மௌனம் உடையாரை, `வாய் திறவார்` என்றல்போல, இரவாத வரை. ``கையகம் நீட்டார்`` என்றார், `வாயிற்படி` எனப் பொருள் தரும், கடைத்தலை என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப் பன்மையாய் நின்றது. ஐயம் வறியோர் இரவும், பிச்சை உயர்ந்தோர் ஏற்கும் தானமும் ஆதல் அறிக.
இதனால், சிவனடியார் எஞ்ஞான்றும் இரவார் என்பது கூறி முடிக்கப்பட்டது. இறுதி மூன்று மந்திரங்களும் சிவனடியாருள் அதிதீவிர நிலை உடையாரது செயலே கூறப்பட்டது.
சிற்பி