ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்


பண் :

பாடல் எண் : 1

நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.

பொழிப்புரை :

நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பும் நீங்குதற் பொருட்டு நல்லோர் தங்கள் உள்ளங்களை அவற்றிற்கு ஏற்பப் பொருந்திய முத்திரைகளாகிய பல வகைப்பட்ட மொழிகளிலே பொருத்தி, அவ்வாற்றால் பரம்பொருளாகிய சிவனடிமேல் செல்லும் படி செலுத்தினால், உலக ஆரவாரங்கள் அடங்கி, மேலான வீடுபேறு உண்டாகும்.

குறிப்புரை :

``நால், ஆறு`` என்பன தொகைக் குறிப்பாய் அத்துணையான தோற்றங்களையும், பிறப்புக்களையும் குறித்தன. `நாலாகிய ஏழ்` எனவும், `முத்திரையாகிய மோன மொழி` எனவும் விரிக்க. முத்திரைகள் வாய்திறந்து பேசாமலே கருத்தை விளக்குதலால் அவற்றை ``மோன மொழி`` என்றார். பதிவித்து உய்த்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``உள்ளம்`` என்றது, அதன் கண் எழும் கருத்துக்களை. ``பதிவித்து`` என்றது, `வாய்திறவாமல்` எனவும், கருத்துக்கள் `அவத்தின் பாலவாகாது, சிவத்தின் பாலவே ஆகல் வேண்டும்` எனவும் கூறியவாறு. மேலான வடு பரமுத்தி.
இதனால், முத்திரைகளது பயன் கூறுமுகத்தால் அவை அடியவர்க்கு வேண்டப்படுதல் கூறப்பட்டது. வாய்திறவாமையை வேண்டியது, `அதனால் உலகியல் தொடர்பு குன்றுதல் பற்றி` என்பதனை, ``கோலாகலம் கெட்டு`` என்பதனால் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி,
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி, கேசரி உண்மை
பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.

பொழிப்புரை :

அரிய சொற்களையே உரைப்பதாயினும் அதனையும் துரிய நிலையில் நிற்குங்கால் எழாமல் அடங்கியிருக்கச் செய்து நின்ற `சாம்பவி, கேசரி` என்னும் இரண்டு முத்தரைகளே முத்துரியங்களும் செறிந்திருக்கும் இடமாய்` உலகியலினின்றும் நீங்குதற்கும், உண்மை ஞானம் பெருகுதற்கும் ஏதுவாய முத்திரைகளாம்.

குறிப்புரை :

முத்துரியங்களை அடுத்த தந்திரத்தில் காண்க. அரிய உரை ... ... கேசரி`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. தாரம் - நாக்கு. ``அங்கே`` என்றது முன்னர்ப்போந்த துரிய நிலையை. பிறழ்தல் - நீங்குதல் உலகியலினின்று.
இதனால், `முத்திரைகள் பலவற்றுள் சிறப்புடையன இரண்டு` என அவை எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம்
ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை;
ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி;
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.

பொழிப்புரை :

சாம்பவி முத்திரையாவது தனது கண்களைச் சிவனது கண்களாகப் பாவித்துக்கொண்டு, நோக்குவன எவற்றையும் அந்தப் பாவனையோடே நோக்குதலாம். இதனால் உலகப் பொருள்கள் மாயையாகாது அருள்மயமாக, தனது ஞானேச்சாக் கிரியைகளும் சிவனது ஞானேச்சாக் கிரியைகளில் அடங்கி நிற்கும். இனித் தன்னைச் சிவனாகப் பாவித்து வணங்குவோரையும் அருளே தனுவாய் நின்று சிவமாகச் செய்யும்.
இனிக் கேசரி முத்திரையாவது, பிறப்பில்லாமைக்கு ஏது வாகிய சின்முத்திரைக் கையுடன் பிரணவ யோகத்தில் பயில்வதாகிய ஞானயோக நிலையாம். இவை இரண்டுமே நாம் நாள்தோறும் பயில்கின்ற சிவஞான முத்திரைகளாகும்.

குறிப்புரை :

பிறவியை அறுப்பது திருவடி ஞானமேயாகையால் அதனை, ``ஆம் பவம் இல்லா அருள்`` என்றார். அருட்பாணி - அருளைக் குறிக்கின்ற கை. `முத்திரையோடு` என உருபு விரிக்க. திருவடியுணர்வைக் குறிப்பது சின்முத்திரை ஒன்றேயாதல் அறிக.
இதனால், மேல் பெயர் கூறப்பட்ட இரு முத்திரைகளின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்;
ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால்
ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

பொழிப்புரை :

`ஆதாரம், நிராதாரம், மீதானம்` என்பன எல்லாம் வரையறைப்பட்ட இடங்களேயாதலின் அவ்விடங்களில் எல்லாம் விளங்குபவன் தடத்த சிவனே. (ஆகவே யோகம் முழுவதிலும் விளங்குபவன் தடத்த சிவனே. அதனால் யோக முத்திரைகள் யாவும் பதமுத்தி அபரமுத்திகளையே தரும்.) ஞானத்தில் சொரூப சிவன் விளங்குதலால் தடத்த சிவனின் வேறாகிய சொரூப சிவனைக் குறிக்கின்ற சின்முத்திரையே முத்திகளிலெல்லாம் முடிந்த முத்தியாகிய பரமுத்தியைத் தரும் முத்திரையாகும்.

குறிப்புரை :

போக சிவனாகிய சதாசிவனுக்குமேல் இலய சிவ னாகிய அருவ சிவன் உளனாயினும், `தடத்த சிவன்` என்பது இனிது விளங்குதற்பொருட்டுச் சதாசிவனையே குறித்தார். ``நற்சிவம்`` என்றது, `சொரூப சிவன்` என்றபடி. மோன முத்திரை - ஞான முத்திரை. அஃதாவது சின்முத்திரை. முத்த அந்த முத்தி - முத்திகளில் இறுதியான முத்தி, முத்தியைத் தருவதை ``முத்தி`` எனப் பான்மை வழக்காற் கூறினார். யோகத்தில் கைச்செய்கையேயன்றி, உடல் அமைப்புக்களும், அஃதாவது ஆசன வகைகளும் முத்திரை எனப்படும்.
இதனால், `யோகிகளினினும் சிறந்த ஞானிகளாகிய அடியவர் கொள்ளத் தக்கது சின்முத்திரையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்;
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்;
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே
ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.

பொழிப்புரை :

வாக்கு, மனம் என்னும் இரண்டும் வாளா இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அதைவிடுத்து, மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது வாளா இருத்தல்தான் மௌனம்` எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன விரதிகளாகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற அந்த வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?

குறிப்புரை :

`அறிந்து வாக்கும், மனமும் மௌனமாய், மோன முத்திரையுடன் இருப்போர் அரியர்` என்பது குறிப்பெச்சம். ``இரண்டும்`` என்றது, `இரண்டன் மௌனமும்` என்றபடி.
இதனால், `மோன முத்திரையுடையார் இன்ன நிலையின ராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்;
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை :

யோகம் கைவந்தமைக்கு அடையாளம் அட்டமா சித்திகள் வாய்ந்தமையாகும். அதுபோல இறைவனின் வேறாகது ஒன்றாகிய அனுபவ ஞானம் கைவந்தமைக்கு அடையாளத்தை ஆராயுமிடத்து மிக்க தகுதி வாய்ந்ததான வேதத்திற் சொல்லப்பட்ட கேசரியாகிய சாம்பவி முத்தரை யோடு கூடிய கேசரி முத்திரையே யாகும். யோக நூலினும் கேசரி முத்திரை சொல்லப்பட்டதாயினும் அஃது யோக கேசரி முத்திரையாம் .

குறிப்புரை :

ஆக்கம், இங்கு மிகுதி குறித்து நின்றது `மிக்க தகுதி யுடைய வேதம்` என்றது. ஞான காண்டமாகிய உபநிடதங்களை. அவற்றுட் கூறப்படும் கேசரி முத்திரை. `சாம்பவி முத்திரையோடு கூடிய கேசரி முத்திரை` என்றும், `யோக நாலுட் கூறப்படும் கேசரி முத்திரை தனியாகச் சொல்லப்படும் கேசரி முத்திரை` என்றும் உணர்த்தற் பொருட்டு முறையே ``கேசரி சாம்பவி`` என்றும் ``கேசரி`` என்றும் கூறினார். ஆகவே, ``சாம்பவி`` என்றது, சாம்பவியோடு கூடியது` என்றதாம். யோக கேசரி மூன்றாம் தந்திரத்துள் கேசரி யோகம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாம். இதனானே, `உபநிடதங்களிற் கூறப்படும் யோகம் ஞானயோகமே` என்பதும் பெறப்படும்.
இதனால், கேசரி முத்திரை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

யோகிஎண் சித்தி அருளொளி வாதனை;
போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி;
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை :

யோகி பெறும் அட்டமா சித்திகள் தருவருளால் கிடைப்பனவாயினும் அதுவும் ஒருவகைப் பந்தமே இனிப் போகியாய் இருப்பவன். `நல்ல புத்திமான்` என மதிக்கப்படுவானாயின் அவன் அறம் முதலிய மூன்று புருடார்த்தத்தைப் பெறும் நன்னெறியில் நிற் பவனேயாவான். ஆறு ஆதாரங்களையும் நன்கு தரிசித்தவன் திருவருள் நெறியைத் தலைப்பட்டவனாவன். ஆகவே ஞானி ஒருவனே ஒப்பற்ற முதற்பொருளை உணர்ந்து அதன்பால் உள்ள பேரின்பத்தவனைப் பெற்றவனாவன்.

குறிப்புரை :

`அத்தகையோனுக்கு உரியனவே சாம்பவியோடு, கூடிய கேசரி முத்திரை என்பது முன்மந்திரத்தினின்றும் வந்தியையும் ஞானியது பெருமையை விளக்குவார் ஏனையோர் நிலைகளை உடன் வைத்துக் கூறினார்.
இதனால், ஞானகேசரி முத்திரையின் சிறப்புப் பிற வற்றோடு ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்;
அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே.

பொழிப்புரை :

பன்னிரு கலைப் பிராசாதமே பதினாறு கலைப் பிராசாதமாய் விரியும். அதனால் அவை இரண்டும் தம்மில் வேறாவன அல்ல. விரிவில் பதினாறாகின்ற அந்தப் பிராசாத யோகமே உலகியலிற் செல்லும் அவாவை அடியோடு அறுக்கும். அதனால் அந்தப் பிராசாத யோகங்களே அவா முற்ற நீங்குதற்கு ஏதுவாகிய `வேதாந்த யோகம்` சித்தாந்த யோகம்` என்றும் சொல்லப்படும். அவற்றை மிக விருப்பத் தோடு செய்தலே சைவத்துள்ளும் மேலான சைவ நெறியாம்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட பிராசாத வகைகள் மூன்றாம் தந்திரத்து, `கலைநிலை` என்னும் அதிகார விளக்கத்தில்* விரித்து விளக்கப்பட்டிருத்தல் காண்க. ``என்``, `எனல்` என்னும் பொருட்டாய முதனிலைத் தொழிற்பெயர். `அவா அறு வகை ஈரை ஆறு அங்கமும்` என மாற்றிவைத்து உரைக்க. `தவாது` என்னும் எதிர்மறை வினை யெச்சத்தின் இறுதி எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. ``தன்மை`` என்றது அதிகாரப்பட்டுவருகின்ற யோகத்தினைப் `பிற யோகங்கள் எல்லாம் வேத யோகமாக இவை வேதாந்த யோகமாம்` எனவும், வேதாந்தத் தெளிவே சித்தாந்தம் ஆகையால், `அதுவே சித்தாந்த யோகமாம்` எனவும் கூறினமை காண்க. `நவ` என்பதன் இறுதி எதுகை நோக்கி நீட்டல் பெற்றது. நவம் புதுமை. அது புதுமை மேற் செல்லும் விருப்பத்தைக் குறித்தது. அவ்விடத்து ``அகம்`` என்றது மனத்தை.
இதனால், `ஞான கேசரி முத்திரையைக் கொள்ளதற்கு உரியவர் ஞானயோகமாகிய பிராசாத யோகம் செய்பவரே` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை;
ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை;
தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை;
காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.

பொழிப்புரை :

`மோன முத்திரை` எனப்படுவதாகிய ஞான கேசரி முத்திரையே உணர்வைச் சிவத்தில் நிறுத்தும் முத்திரையும், சிவா னந்தத்தைப் பெருகச் செய்யும் முத்திரையும் சித்தாந்த முத்திரையும், சிவன் சீவனைச் சதா நோக்கிக் கொண்டிருக்கும் முத்திரையும் ஆகும். அதனால் அதுவே சீவன் முத்தர்க்கும், சீவன் முத்தராய் ஆசிரியத் தன்மையை உடையவர்க்கும் ஏற்புடைய முத்திரையாம். அதுபற்றிப் பல சைவங்களும் அதனையே சிறந்த முத்திரையாகக் கண்டன.

குறிப்புரை :

``முத்தர்க்கு முத்திரை, நாதர்க்கு முத்திரை` என்ப வற்றை, ``கண்ட சமயமே`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``முத்திரை`` பலவற்றுள் முதற்கண் நின்றது எழுவாய்; ஏனைய பயனிலை. `தேன்` என்னும் பெயர், `இனிமை` என்னும் பொருட்டாக, அதனடியாக, `தேனித்தல்` என்னும் வினைச்சொல் பிறந்தது. மேற் பார்வை பார்த்தலை, `கண்காணித்தல்` என்பர். அதனை முதற் குறைத்து, ``காணிக்கும்`` என்றார். அடியவரைக் கண்காணிப்பவன் சிவனேயாதல் வெளிப்படை. ``காணிக்கும்`` என்து இன எதுகை யாயிற்று. `கண்டன` என்னும் முற்றுச்சொல் `அன்` பெறாது ``கண்ட`` என நின்றது. ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவ சமயத்தையே குறித்தது. சைவத்தை நாயனாரே ஐந்தாம் தந்திரத்தில் பல வகையாகப் பிரித்துணர்த்தினமை அறிக.
இதனால், ஞான கேசரி முத்திரையே, முத்திரைகளுள் தலையாவது என்பது பலவற்றாலும் வலியுறுத்தி, ஒருவாறு முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்;
மேனெறி கண்டது வெண்மதி மேதினி,
நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே.

பொழிப்புரை :

தூய நெறியாகிய யோக முறை கைவந்து உண்மையைக் கண்ட அடையாளம், புருவ நடுவில் தோன்றுகின்ற முடி நிலை ஆதாரமாய்க் காணப்பட்டு, மேருமலையின் உச்சியை அடைந்தது போலத் தோன்றும். எனினும் அதுவே முடிநிலையாகாது, அதற்கு மேலேயுள்ள ஏழாந்தானத்திற் சென்றவர் கண்டது சந்திர மண்டலமாம். ஒருவன் அதற்குமேலும் செல்வானாயின், சத்தி சிவ நெறிகளைக் கண்டு மலம் நீங்கிய தூய உணர்வினனாவன்.

குறிப்புரை :

`அந்நிலையை அடைவிப்பது மேற்கூறிய பிராசாத யோக நெறியாகிய ஞான கேசரி முத்திரையேயாம்` என்பது குறிப்பெச்சம்.
``நெறி`` நான்கனுள் ஈற்றில் உள்ளதில் இரண்டனுருபும், ஏனையவற்றில் மூன்றனுருபும் விரிக்க. பூ - பூமி; நிலம் - ஆதாரம். நகம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. மேதினி - மண்டலம். நீள் நெறி - உயர் நெறி. ``நீணெறி`` என்பது இன எதுகை.
இதனால், கேசரி முத்திரைபற்றிக் கூறப்பட்ட ஞான யோகத்தின் சிறப்புணர்த்து முகத்தானே அம்முத்திரையினது சிறப்புணர்த்தி முடிக்கப்பட்டது.
சிற்பி