ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்


பண் :

பாடல் எண் : 1

உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
கதியிற் கரணம் கலைவை கரியே.

பொழிப்புரை :

முழுப்படைப்புக் காலத்தில் முதற்கண் சுத்த மாயா காரியங்களே தோன்றும். அக்காரியம் வாக்குகளும், இறைவனது நவந்தரு பேதங்கட்கும் இடமாய் நிற்கும் சுத்த தத்துவங்களும் ஆகும். நவந்தரு பேதங்களை ஒடுக்க முறையில் வைத்து எண்ணினால் பிரமன் முதலியனவாக அமையும். புண்ணியம் காரணமாக இறைவனது அதிகார சத்தி பதிதலால் அப்பெயர் பெற்று நிற்கும் அணுபக்கத் தினரும் உளர். அது நிற்க. வேறு பிரமனாதியர்க்கும், மற்றும் நால்வகை வாக்கிற்கும், அனைத்துப் பொருள்கட்கும் இடமாய் நிற்பன பஞ்சகலைகள்.

குறிப்புரை :

`அந்தப் பஞ்ச கலைகளும் சுத்த மாயையினின்றே தோன்றும்` என்பது கருத்து. குண்டலியாவது எழுத்தோசையாகிய நாதமேயாம். குடிலையில்` என்பது, ``குடிலில் எனக் குறைந்து நின்றது. `விந்து, குடிலை என்பன ஒருபொருட் சொற்கள் எனினும் சில இடங்களில் குடிலை என்பது ஆகுபெயராய் அதன் காரியமாகிய வாக்குகளை உணர்த்தும். கதி - காரிய நிகழ்ச்சி. அதிகரணம் என்பது `கரணம்` எனக் குறைந்து நின்றது. அதிகரணம் - நிலைக்களம், குண்டலி` என்றது சூக்குமமாகிய காரண நிலையாகலின் பின்னர்த் தூல மாகிய வைகரியை வேறு கூறினார். ``வைகரி`` என்றது உபலக்கணம் ஆதலின் ஏனை மத்திமை பைசந்திகளும் கொள்ளப்படும். `கரணம் கலை` என்றதின் பின் `அவற்றில் வைகரி முதலியன நிற்கும் என உரைக்க. இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகளில் தோன்றும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. சுத்த தத்துவங்கள் ஐந்து எனப்படினும் அவை அனைத்தும் சிவ சத்தி பேதங்கட்கு இடமாகு மாற்றானே ஐந்தாய் நிற்றலின் நவந்தரு பேதங்களுள் பரநாத பரவிந்துக்கள், `அரன் அரி அயன்` என்பன ஆகிய பேதங்கட்கு உரிய அதிகரணங் களையும் வேறு வைத்து எண்ணி `வயிந்தவம் ஒன்பான்` என்றார். வயிந்தவம் - விந்துவின் காரியம். `அரன், அரி, அயன்` என்பவர் கட்குச் சுத்த வித்தையிலும், பரநாத பரவிந்துக்களுக்கு அபரநாத அபர விந்துக்களிலும் களம் உண்டு என்க. ``விதியிற் பிரமாதிகள் மிகு சத்தி`` என்றது பிராகிருதராய் நிற்கும் மூர்த்திகளை மேற்கூறப்பட்டவரோடு வைத்து மயங்காமைப் பொருட்டு, இடைப்பிறவரலாகக் கூறினார். `விதியின், மிகு சத்தியால் பிரமாதிகள் ஆவர்` என்க. விதி - புண்ணியம்.
``விரைக்கம லத்தோன் மாலும் ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே``
எனவும்,
``அயன்றனை ஆதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்``
எனவும் சிவஞான சித்தி (சூத்திரம் -2-34,60) கூறுதல் காண்க.
நவந்தரு பேதங்கள் `திருவருள் வைப்பு` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டன.
இதனால் சுத்த மாயையாகிய விந்துவின் காரியங்கள் ஓராற்றல் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும்
செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும்
செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம்
செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.

பொழிப்புரை :

நவந்தரு பேதங்களில் நாதங்களும், விந்துக்களும் முறையே சிவமும், சத்தியும் ஆதலால் சிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூற்று நிலைகளுள் அதிகார நிலையாகிய மகேசுரனது பேதங்கள் இருபத்தைந்தினையும் `சத்தியின் காரியங்கள்` என்றும், நவந்தரு பேதங்களில் விந்து, சத்தி இவை யொழிந்த ஏழும், குணமூர்த்திகள் மூவரும் ஆகப் பதின்மரும் நாயக, நாயகி பாவத்தில் நாயகர்கள் ஆதலால் அவர்களையே, `சிவ பேதங்கள்` என்றும் ஒருவாறு கூறலாம். இனி அந்தச் சத்தி சிவங்கள் ``சகுணம், சமலம், நின்மலம், ஆனந்தம்`` என்னும் காரணத்தால் நான்காகின்ற மாயையின் வகை மூன்றினின்றும் முப்பத்தாறு தத்துவங்களையும் வகைப்படத் தோற்றுவிக்கும்.

குறிப்புரை :

``செய்திடும்`` நான்கில் முதல் இரண்டையும் `அங்ஙன மாகச் செய்யும்` என்னும் பொருளையுடைய முற்றாக்கி, திறன் என்னும் எழுவாய்கட்குப் பயனிலைகளாக்குக. மூன்றாவதனைப் பெயரெச்சமாக்கி, அதனை ``அவை`` என்பதனோடு முடிக்க. மற்று - வினை மாற்று. `அவை, ஈரிரண்டினின்றும் தத்துவங்களைத் திறம் செய்திடும்` என இயைக்க.
இதனால், சுத்த மாயையாகிய விந்துவில் நிற்கும் சத்தி சிவங்களின் செயல்கள் ஒருவாறு வகுத்துரைக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

வந்திடு பேத மெலாம் பரவிந்து
தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை
உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

பொழிப்புரை :

மாயா காரியங்களாய் உள்ள பலவற்றிற்கும் காரணமாய் நிற்பது `பரவிந்து` என்னும் தத்துவம். அது சுத்த மாயையின் காரியமே எனினும் அதன்கண்ணே `அபர வாகீசுவரி, பரவாகீசுவரி`, அனைத்து மந்திரங்களையும் செலுத்துகின்ற பிரணவம், அதன வடிவமாகிய குண்டலி என்னும் நான்கும் பொருந்தி விளங்கும்.

குறிப்புரை :

பரவிந்து `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளது. அதற்குமேல் பரநாதம் இருக்கும். அஃது இங்குக் குறிப்பிடப்பட வில்லை. `பரை` என்றது பரவாகீசுவரியை ஆகையால், வாளா, ``வாகீசி`` என்றது அபர வாகீசுவரியையாயிற்று. `பிரணவந்தானே குண்டலியாம்` என்றற்கு ``ஓமுறு குண்டலி`` என்றார். அங்ஙன மாயினும் அஃது அப்பெயரால் யோகத்தில் சிறப்பாக உன்னப்படுதல் பற்றி அதனை வேறாகக் கூறினார். அபர வாகீசுவரியும், பிரணவமும் அபர விந்துவில் விளங்குமாயினும் அவையும் காரண நிலையில் சூக் குமமாய்ப் பரவிந்துவில் விளங்குதலை, ``மேவா விளங்கும்`` என்றார். முன்னர், `பரவிந்து` என்றதனால், பின்னர் ``விந்து`` என்றதும் அதுவேயாயிற்று. ஆகவே பின்னர் ``விந்து`` என்றது, `அவ்விந்து` என்றதாயிற்று.
இதனாலும் விந்துற்பனங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதி உளமந்த மாமே.

பொழிப்புரை :

நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் பஞ்சகலைகளில் முறையே பொருந்தி நிற்கின்ற அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் - என்னும் சூக்கும பஞ்சாக்கரங்கள் முறையே மனம் முதலாகப் புருடன் ஈறாக உள்ள கருவிகளைச் செலுத்தி நிற்கும்.

குறிப்புரை :

``நிவிர்த்தாதி மேவு`` என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை. ``அகராதி, நாதாந்தம்`` என்பவற்றையும் அகரமாகிய ஆதியும், நாதமாகிய அந்தமும் எனச் செவ்வெண்ணாக்குக. உளம் - புருடன், அகாரம் முதலிய ஐந்தும் முறையே தூல வைகரி, சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் ஐவகை வாக்குக்களைக் குறிப்பன. அவை முறையே, அகங்காரம், புத்தி, மனம், சித்தம் என்னும் அந்தத் கரணங்கைளயும், புருடனையும் செலுத்தும் - என்பதையும், அதனாலேதான் உயிர்கட்குச் சவிகற்ப உணர்வு உண்டா கின்றது - என்பதையும் சிவஞான போதத்து முதலதி கரணத்தில் காண்க. ``மனாதி`` என்றது `அந்தக் கரணம் எனப் பொதுப் பொருள் தந்தது. அவற்றைச் செலுத்துவனவற்றை அவையேயாக உபசரித்தார்.
பிரதிட்டையாதி கலைகளில் இயற்கையாய் நிற்கின்ற உகாரம் முதலிய நான்கும் உபாதி (கலப்பு) வசத்தால் கீழ்க்கீழ்க் கலைகளிலும் பொருந்தும் என்க.
அகரம் முதலிய ஐந்தும் பிரணவத்தின் கூறுகள் (கலைகள்) ஆகும்.
இதனால் சுத்தமாயை தனது காரியமாகிய நாதம் முதலியவை வாயிலாக உயிர்கட்குச் சவிகற்ப உணர்வைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அந்தமு மாதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாகு மந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.

பொழிப்புரை :

முதல்வன் உலகத்திற்கு முதலும், முடிவுமாகி, அதனுள் எங்கும் நிறைந்து நிற்கும் முறைமையால் பல தொகுதிகளாய் நிற்கும் காரண காரியப் பொருள்களைத் தோற்றுவித்து, அவன் ஐந் தொழில் செய்ய முதற்கருவியாய் நிற்பது விந்துவாகிய சுத்த மாயையே.

குறிப்புரை :

மாயையினின்றும் தோன்றும் தத்துவங்களில் சில தம்மினின்றும் பிற தத்துவ தாத்துவிகங்கள் தோன்றுதற்குக் காரண மாகவும், அவ்வாறன்றிக் காரியமேயாகவும் நிற்றல் பற்றி, ``கந்தம தாகிய காரண காரியம்`` என்றார். கந்தம் - கூட்டம்; தொகுதி. மாயை காரியப் படுதல் முதல்வனது சந்நிதியின்றி அமையாமை பற்றி, `வியா பியாய நெறியால் செய்யும் வீயம்` என்றார். `நெறியால்` என உருபு விரிக்க. முதற்கருவியாகும் சிறப்பு நோக்கி,``ஐங்கருமமும்தான் செய்யும்`` என அதனையே வினைமுதல்போலக் கூறினார். வீயம், `பீசம்` என்பதன் திரிபு. பீசம் - விதை; என்றது முதற்காரணத்தை.
இதனால் முதற்காரணமாகிய விந்து முதல்வனது சந்நிதி யானே காரியப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புற மாகுமே.

பொழிப்புரை :

அனைத்திற்கும் முதற் காரணமாகிய சுத்த மாயை யின் ஆற்றலால் அனைத்திற்கும் வியாபகமாகிய நிவிர்த்தி முதலிய கலைகளும், அவற்றுள் அடங்கி நிற்கும் புவனங்களும் விரிந்து நிற்க, காரிய மாயையாகிய மூலப் பிரகிருதியினின்றும் பௌதிக சரீரத்திற்குக் காரணமாகிய ஐம்பூதங்களும் தோன்ற, சுத்தமாயை அவை அனைத்திலும் உள்ளும், புறம்புமாய் நிறைந்து நிற்கும்.

குறிப்புரை :

நிவிர்த்தி முதலிய கலைகள் பிறவற்றிற்கு வியாபக மாதலல்லது தாம் வேறொன்றில் வியாப்பியம் ஆகாமை பற்றி அவற்றை, `அகண்டம்` என்றார். ``பாரிப்ப`` என்பது இங்குத் தன் வினையாய் நின்றது. சாங்கியர், `காரணம்` எனக்கூறும் மூலப் பிரகிருதி உண்மையில் `கலை` என்னும் தத்துவத்தின் காரியமேயாதல் தோன்ற அதனை, ``காரிய மாயை`` என்றார். பிரகிருதி காரியங்களில் சிறப்பாக அறியப்படுவன ஐம்பூதங்களேயாதல் பற்றி அவற்றையே எடுத்துக்கூறினார்.
இதனால், சுத்த மாயை அனைத்துலகங்களிலும் வியாபித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புறமக மெங்கும் புகுந்தொளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாத மாய்உள்
திறனொடு வீடளிக் கும்செயல் கொண்டே.

பொழிப்புரை :

பிண்டத்தில் கரு உற்பத்திக் காரணமாய் ஆண் உடலில் வெண்ணிறம் உடைமை பற்றி, `சுக்கிலம்` எனப்படுகின்ற தாது `விந்து` எனப்பெயர் பெற்றதனை அண்டத்தில் புறம், அகம் என்னும் வேறுபாடின்றி எவ்விடத்தும் வியாபகமாய் நிற்கும் காரணப் பொருளாகிய `சுத்த மாயை` என்றே கொள்ளுதல் வேண்டும். (நாதத்தின் காரியத்தை `விந்து` என்னும் தத்துவமாகக் கொள்ள லாகாது` - என்பதாம்.) இனப் பெண்ணுடலில் செந்நிறம் உடைமை பற்றி, சோணிதம்` எனப்படுகின்ற தாது, காரியப் பொருளாகிய நாதம்` எனத் தக்கதாகும். ஆகவே அவை முறையே முதல்வனாகிய சிவனது கூறும், அவனுக்குத் துணைவியாகிய சத்தியது கூறுமேயாகும், (அவ்வாறில்லை யேல் அவை உயிர்க்கு இன்றியமையாக் கருவிகளாகிய தனு கரணங் களைத் தோற்றுவித்தல் இயலாது என்பதாம்.) அவை அங்ஙனமாய்த் தனுகரணங்களைத் தோற்றுவித்து உயிர்கட்கு மன உறுதியுடன் செய்யும் ஞானச் செய்தி வாயிலாக வீட்டைத் தருவனவாம்.

குறிப்புரை :

சுக்கில சோணிதங்கள் காரண காரியங்கள் அல்ல வாயினும் முதல்நிலையும், வழிநிலையும் ஆதல்பற்றி அவ்வாறு கூறினார். ``பாதம்`` என்றது, `கூறு என்றபடி, `பாகம்` எனப்பாடம் கொள்ளுதலும் பொருந்தும். `வெண்மை நிறமது விந்து; செம்மை நாதம்` என மாற்றிவைத்துரைக்க, நிறம், செம்மை இவை ஆகுபெயர்கள்.
இதனால், `விந்து நாதங்கள் அண்டத்திற்கன்றிப் பிண்டத் திற்குக் காரணம் அல்ல என மயங்கற்க; சிவம் சத்திகளது கூறுகளின் தொடர்பால் அவை பிண்டத்திற்கும் காரணமாதல் தெளிவு` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற
நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின்
கண்ட கலாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.

பொழிப்புரை :

உயிர்களை மேற்கூறியவாறு அண்டத்தையே யன்றிப் பிண்டத்தையும் ஆட்கொள்கின்ற விந்து பரம்பொருளைப் போலவே மல கன்மங்களோடு விரவுதலின்றித் தூயதாய், ஆயினும் நூலும் மண்ணும், ஆடையும் குடமுமாய்க் காரியப்படுதல் போலக் காரியப்படுவதாய், காரண ரூபத்தில் என்றும் அழிவின்றி, கலை முதலிய தத்துவங்களின் காரியமாய் உள்ள அனைத்து அண்டங் களிலும் அவையேயாய்க் கலந்து பெருமாயையாய் உள்ளது.

குறிப்புரை :

பெருமையாவது அனைத்துப் பொருட்கும் வியாபகமாய் அவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றல், அதுபற்றியே சுத்த மாயை `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் சொல்லப்படுகின்றது என்பதாம். ஊர்த்துவம், மேல். அசுத்த மாயை `அதோ மாயை` எனப்படும்.
`சுத்த மாயையின் காரியம் விருத்தியேயன்றிப் பரிணாம மன்று` என்பது, ``படம் குடிலாய் நிலை நிற்றலின்`` என்பதனால் கூறப்பட்டது. ``செயல் பரிணாமமன்று; புகழ்ந்திடும் விருத்தியாகும், படம் குடிலானாற் போல`` எனச் சிவஞான சித்தியிலும் (முதற் சூத்திரம், 24) சொல்லப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.
இதனால் சுத்த மாயையினது பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேயுள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.

பொழிப்புரை :

`அது` எனச் சேய்மையாதாகச் சுட்டிச் சொல்லப் படுகின்ற மகாமாயையாகிய அந்த விந்துவிலே நின்று, அதனை அடைந்தவர்க்கு இனிப்பவனாகிய சிவன், `இது` என அண்மையாகச் சுட்டிச் சொல்லப்படுகின்ற சுக்கிலமாகிய இந்த விந்துவிலும் நின்று உயிர்களைப் பிறப்பித்துப் பின் வீடடையச் செய்தலை உணரும் உணர்வுடையார் உலகத்து அரியர், ஆயினும், மகாமாயையையே தனக்கு உடமாகக் கொண்டு விளங்குகின்ற அந்தப்பெருமான், நீரால் உண்டாக்கின்ற உணவுப்பொருளில் தங்கிப் பின் கருவுற்பத்திக்கு யாவரிடத்தும் பொதுவாய் உள்ள காரணமாகின்ற விந்துவிலும் இருக்கும் புண்ணியன் ஆகின்றான்.

குறிப்புரை :

இதனுள் ``விந்து`` என்றன `முதற்காரணம்` என்றவாறு. ``தானே`` என்பதை, ``உணரார்`` என்பதற்குப் பின் எடுத்துக்கொண்டு உரைக்க. சுவையைச் சிறப்புக் குணமாக உடைமை பற்றி நீரை ``மது`` என்றார். மலர்தல், விருத்திப்படுதல். சூக்கும தேகியாய் நிற்கும் உயிர் முதற்கண் பயிர்களில் தங்கியே பின்னர் உணவாய் ஆண் உடம்பிற் செல்லுதலைப் பஞ்சாகினி வித்தை பற்றி அறிக. தாவரங்களிலிருந்து உண்டாகும் உணவுப் பொருளால் ஆனதே தூலசரீரம். (பருவுடம்பு) அதனால் அஃது `அன்னமய கோசம்` எனப்படுகின்றது. அதன் சிறப்பு, `தைத்திரீயம்` என்னும் உபநிடதத்தில் சொல்லப்பட்டது. சிவனுக்கு இடமான சிவதத்துவங்கள் சுத்த மாயாகாரியம் ஆதல் பற்றியும், அதன்கண் உள்ள புவனங்கள் முத்தியுலகங்கள் ஆதல் பற்றியும் சிவனை, ``அதுவித்திலே நின்று அங்கு அண்ணிக்கும் நந்தி`` என்றார்.
இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து அண்டத்திற்குக் காரணமாயுள்ள விந்துவோடொப்பதாய், சிவனுக்கு இடமாகும் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.

பொழிப்புரை :

முளை விதையில்தான் உள்ளது. என்றாலும் அது விதை தனியேயிருக்கும்பொழுது தோன்றாது. நிலத்தில் விதைத்தால் தான் தோன்றும். `வித்தில் முளை உள்ளது` என்றால், அது `குடத்தில் நீர் உள்ளது` என்பது போல்வதன்று. அஃதாவது இடமும், இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியின் உடம்பும், அதினின்றும் வெளிவருகின்ற நூலும் போலக் காரண காரிய இயைபுடையனவாம். அது போன்றதே சிவன் உலகத்தைத் தோற்றுவிக்கின்ற முறையும்.

குறிப்புரை :

`அதனை அறிந்துகொள்` என்பது குறிப்பெச்சம். எனவே, இம்மந்திரத்தை ஒட்டணியாகக் கொண்டு பொருளை உய்த் துணர்ந்து கொள்ளல் செயற்பாலதாம். அங்ஙனம் கொள்ளுமாறு:- `மாயையில்தான் உலகம் உள்ளது. என்றாலும் அந்த மாயை சிவனது சங்கற்பத்தில் பொருந்தினால் அதினின்றும் உலகம் தோன்றும். `மாயையில் உலகம் உள்ளது` என்றால் அஃது இடமும் இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியினது உடம்பும், அதனுள்ளியிருந்து வெளிப்படுகின்ற நூலும் போலக் காரணகாரிய இயைபுடையனவாம்` என்பது. இங்ஙனம் கூறியதனால், சிலந்தியினது உடம்பினுள் நூல் உள்ளதாயினும் அவ்வுடம்பைத் தாங்கி நிற்கின்ற உயிர் அந்நூலை வெளிப்படுத்தினாலன்றி வெளிப்படாமை போல் மாயையைத் தாங்கி நிற்கின்ற சிவசத்தி அதினின்றும் உலகத்தைத் தோற்றுவித்தாலன்றித் தோன்றாது என்பது விளங்கும்.
``வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்``
என்னும் சிவஞான போதமும் (சூத்திரம், 1 அதிகரணம், 2) இங்கு நினைக்கத்தக்கது.
இரண்டாம் அடியில் உள்ள ``வித்தினில்`` என்பது வேண்டா வழிப் பெற்ற இன்சாரியையுடன் வந்த, `செயின்` என்னும் வினை யெச்சம். `வித்தினில் முளை குடத்துள் நீர்போல நிற்பின் யாவரும் எளிதில் வெளிப்படுத்துதல் கூடும். இஃது அன்னதன்று ஆகலின் நிலத்தாலன்றி இயலாது` என உவமைக்கண் பொருளிலும் அவ்வாறு கொள்க. `மாயையாகிய விந்துவிற்குச் சொல்லியது சுக்கிலமாகிய விந்துவிற்கும் பொருந்தும்` என்பது கருத்து.
இதனால், அண்டபிண்டங்களாகிய உலகம் சிவனது சங்கற்பத்தாலன்றி உற்பத்தி கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

பொழிப்புரை :

பலவகையாக உண்ணப்பட்ட உணவுகள் மூன்று கூறுபடும். ஒரு கூறு உடம்பாய்ப் பரிணமிக்கும். மற்றொரு கூறு மனத்தின் தன்மையாய் அமையும். இன்னொரு கூறு மலமாகிக் கழிந்தொழியும். உணவால் திருத்தம் உறுகின்ற உடம்பும், மனமும் சேர்ந்து முன்னாட்களில் காரண நிலையில் `சாரம்` என்பதாய் இருக்கும்.

குறிப்புரை :

``உடம்பு`` என்றது அதன்கண் உள்ள குருதி, முதலிய தாதுக்களையும், ``மனம்`` என்றது அதனது நினைவையுமாகும். தாயின் முலைப்பாலுக்கு அவளது உடம்பில் உள்ள குருதி முதலி யனவும், குழவியிடத்துள்ள அன்பும் காரணமாதல் போல்வதே உடம்பில் உள்ள குருதி, ஊன், நிணம் முதலிய தாதுக்கள் சாரமாதற்குக் காரணம் ஆதல்.
இதனால், மேல், ``மது வித்திலே மலர் அன்னமதாகி`` என்றது இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இரதம் முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளருங்கா யத்திலே.

பொழிப்புரை :

மேல் சொல்லப்பட்ட `சாரம்` என்பது உட்பட ஏழ் தாதுக்களில் மூன்றிலிருந்து சில நாட்களில் புல் நுனியிற் பனியளவான துளிகள் பல உருவாகும். அந்தத் துளிகளே பிண்ட உற்பத்திக்குக் காரணமான `விந்து` எனக் குறிப்பிட்டுக் கூறப்படுகின்றன. அவை இருபத்தொரு நாள் வரையில் உடம்பினுள் அந்த நிலையிலே முதிர்ந்து வரும்.

குறிப்புரை :

தாது - மூலப்பொருள் `ஏழ் தாதுக்களில்` - என ஏழாம் உருபு விரித்துரைக்க. உடம்பிற்கு மூலமான ஏழு பொருள்களாவன மேற்கூறிய சாரம், குருதி, என்பு, தோல், ஊன், நிணம், சுக்கிலம் - என்பன. இவற்றின் நிலைபேற்றிற்கு ஒன்றிற்கு மற்றொன்று காரண மாகவேயிருக்கும். காரண நிலையில் `சுக்கிலம்` எனப்படுவதே காரிய நிலையில் `விந்து` என வேறுபட்டு நிற்கும் என்பது இங்கு அறிதற் குரியது இருபத்தொரு நாட்களுக்குப் பின் விந்து வேறொன்றாய் மாறும் என்பதும் இங்கு உணரத்தக்கது.
இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து உண்டாகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக்
காயத்து டன்மன மாகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு முன் இருபத்தொரு நாள் வரையில் முதிர்ந்து வந்த விந்துக்கள் பின் இருபத்தொரு நாட்கள் வரையில் மனத்தின் வழிப்பட்டு நிற்கும். `சத்தி நிபாதரும், உலகரும்` எனமக்கள் இருதிறத்ததராதலின் அவருள் சத்திநிபாதர் மனம் சிவன் பஞ்சமூர்த்திகளாய் விளங்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலா ரூபமாய் நிற்கும் சுத்த மாயையை நோக்கிச் செல்லுமாகலின் அவர் காம வசப்பட்டு விந்துவை வெளியே வீழ்ந்தொழிய விடாமையின் அவை அவரை விட்டு நீங்கா. (அவரது மனம் பஞ்ச கலைகளை நோக்கிச் செல்கின்ற செலவிற்கு அவை வலிமை தந்து நிற்கும் என்பதாம். அவரொழிந்த ஏனை உலகர் சிறிதுபோதிலே நிலையின்றி ஒழிவதாகிய காம இன்பத்திலே செல்பவர் ஆதலின் அவர் மனம் அங்ஙனம் சென்ற பொழுது அவரது விந்துக்களும் அதனுடன் சென்று வெளியே வீழ்ந்து அழிந்தொழியும்.

குறிப்புரை :

`கலந்திட்டு ஆகும்` `நீங்கா அழியும்` என்னும் பயனிலைகட்கு மேலை மந்திரத்தில் உள்ள ``மருவிய விந்து`` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``ஏழ் மூன்று நாளில்`` என்பதைப் பின்னும் `காயத்துடன்` என்பதோடும் கூட்டுக. ``கலா விந்து நேயம்`` என்றதை, `சிவ பத்தி, அடியார் பத்தி` என்பன போலக் கொள்க. ``விடாமையின்`` என்பதற்குமுன் `அவர்` என்பது வருவித்து `விடாமையின்`` என முடிக்க. மாயம், நிலையாமை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய இன்பத்தைக் குறித்தது. `தலைவி தலைவனோடிறந்தாள்` என்பதிற்போல, ``மனத்தோடழியும்`` என்பதில் ஓடுருபு உயர்பொருளொடு வந்தது. மனம் அழிதலாவது, தமது செலவால் விளையும் துன்பத்தால் வருந்ததுதல்.
இதனால், பிண்டத்திற்குக் காரணமாகிய விந்து அதனையுடைய மக்களது இயல்பிற்கேற்ப நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.

பொழிப்புரை :

உலகர் தாம் செல்கின்ற போக நெறியால் அழிந் தொழிகின்ற விந்துவினது ஆற்றலை, `இவ்வளவினது` என்று அறிய மாட்டார்கள். அதனால் கீழ்நோக்கி வீழும் இயல்புடைய அந்த விந்துவை அவ்வாறு வீழாது உள்ளே நிறுத்திக் காக்கும் வழியைப்பற்றி அவர்கள் எண்ணுவதும் இல்லை. அழிவைத் தனது இயல்பாக உடைய உடம்பினுள்ளே தங்கியிருந்து, அவ்வுடம்பால் உண்டாகின்ற பல இடுக்கண்களால் துன்பமுற்று மெலிகின்றவர்கள் தாம் பெற்றுள்ள பொருள்கள் அழியுந்தன்மை உடையவாதலை அறிந்து, அவ்வழியுந் தன்மையை நீக்கிக்கொள்ள மாட்டார்கள்.

குறிப்புரை :

எனவே, `அதனை நீக்கிக் கொள்ள வழி உண்டு` என வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``அளவு`` என்றது ஆற்றலின் அளவை. ஒரு துளிவிந்துவிற்குப் பல துளி சுக்கிலத்தின் ஆற்றலும் ஒரு துளிச் சுக்கிலத்திற்குப் பல துளிக் குருதியின் ஆற்றலும், ஒரு துளிக் குருதிக்குப் பல துளி இரதத்தின் (சாரத்தின்) ஆற்றலும் உள்ளன என்பர். அதனால் அத்துணை ஆற்றலையுடைய விந்துவை இழப்பவர் தமது பேராற்றலை இழந்தவ ராகின்றனர். `உயிர்கள் கீழ் நோக்கி வீழும் விந்துவை உடையன; இறைவன் அவ்வாறன்றி மேல் நோக்கிச் செல்லும் விந்துவை உடையன்; அதனால்தான் அவன் தனது நெற்றிக்கண் வழியாக முருகனைத் தரமுடிந்தது` என்றும், `உயிர்களின் விந்துக்கள் நீர்த் தன்மையையுடையன; இறைவனது விந்து அவ்வாறன்றி நெருப்புத் தன்மையையுடையது; அதனால் தான் ஒருமுறை அவனது விந்துவை உண்ட தேவர்கள் ஆற்றமாட்டாத வெப்பு நோயை உடையராய் அலமந்தனர்` என்றும் கூறுவர்.
``ஊர்த்துவ ரேதம் விரூபாக்ஷம்``,
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மபுருஷம் க்ருஷ்ண பிங்கலம் I
ஊர்த்வ ரேதம் விரூபாக்ஷம் விச்வ ரூபாய வை நமோ நம: II
எனப் புருஷ சூக்தத்தில் வந்துள்ளது. சிவபிரானது விந்துவை உண்ட தேவர்கள் வெப்பு நோயால் வருந்தினமை காஞ்சிப் புராண சுரகரேசப் படலத்தில் சொல்லப்பட்டது. போகத்தை விட்டு யோகியராயினோரும் இந்நிலையை எய்துவர் என்பது யோக நூற் கொள்கை. இதனால் அவர்க்கு இளமையும், யாக்கையும் நிலையாமையின் நீங்கி நிலைபேறுடையனவாதலோடு, உடம்பு புதியதோர் ஒளியும், அழகும் பெற்று விளங்கும் என்பதும் அந்நூற் கொள்கை.
இவ்வாறு இவ்வதிகாரம் முடிக்கப்பட்டது.
சிற்பி