ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்


பண் :

பாடல் எண் : 1

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே.

பொழிப்புரை :

(சூரியன் முதலாகக் காணப்படுகின்ற அனைத்து ஒளிப் பொருள்களின் ஒளியும் சிவனது ஒளியேயன்றி, அவற்றினுடையன அல்ல. அஃது எங்ஙனம் எனின்,) சூரியன் நாள்தோறும் மகாமேரு மலையை வலம் வருதல் தெளிவு. ஏனைத் தேவர்கள் அவ்வாறு வலம் வருதலைப் பலர் அறியாராயினும் யோகியரும், ஞானியரும் அதனை நன்கறிவர். `அவர் வலம்வருதல் எதன்பொருட்டு` எனின், எங்கட்கு விள்ககாகி நின்று பயன் தருகின்ற சிவனாகிய கடவுளின் திருவடி ஒளிகள் தங்களிடத்துப் பொருந்தி விளங்குதற் பொருட்டேயாம். வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் தவத்தால்l ஆகலின் அவர் அதனைச் செய்கின்றனர்.

குறிப்புரை :

பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `தேவர்` என்பதற்கு `ஒளியுடம் புடையவர்` என்பதே பொருள். அது சூரியனிடத்தே இனிது விளங்கு தலால், `அவன் முதலாக` என்றார். தேவர் அனைவரையும் கூறினமையால், திங்கள், வியாழன், வெள்ளி முதலிய கோள்களை யும், மற்றும் நாண்மீன் விண்மீன்களையும் வேறு வேறெடுத்துக் கூறல் வேண்டாதாயிற்று. மஞ்சு - மேகம். ``காரணம்``, `நிமித்தம்` என்னும் பொருட்டாய் நின்றது. ``எம் சுடர்`` என்றது, நாயனார் தம்கூற்றாக் கூறியது. திருவடி சத்தியாகலின் அதனையே சிவன் ஒளியாகக் கூறினார். மகாமேருமலை சிவன் எழுந்தருளியிருக்கின்ற கயிலையைத் தன்னிடத்தில் உடையது. வணங்குதலையே ``தவம்`` என்றமையால் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பதிற்போல்,
``நாயகன் கண்ண யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றிக்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பின்
தேயமார் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசது`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக.
இதனால் ஆதித்தன் சிவனொளியைப் பெற்று விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம்
புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற ஓங்கும்
பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.

பொழிப்புரை :

ஆதித்தனாலே உலகுயிர்கள் இறைவாது வாழ்தலால், அவன் காத்தற் கடவுளாகிய மாயோனாக ``சூரிய நாராயணன்`` என்று சொல்லப்படுகின்றான். அதனால் அவனே எல்லா உயிர்கட்கும் புகலிடமாகின்ற முதற்கடவுளும் ஆகின்றான். இன்னும் உயிர்கள் நால்வகை யோனிகளுள் கருவாகித் தோன்றுதலும் ஆதித்த னாலே யாகலின் அவனே அனைத்துயிர்கட்கும் முதலுமாவான்.

குறிப்புரை :

``ஏழுலகும் உற`` என்றது, `நால்வகை யோனியுட் பட்ட அனைத்துயிர்களும் தோன்ற` என்றபடி. ஏழுலகும் இகலற ஓங்குதலாவது, ``ஆதித்தனாலேதான் அனைத்து உயிர்களின் பிறப்பும், வாழ்வும் அமைகின்றன` என்பதை யாவரும் ஒருமுகமாக உடன்பட்டுப் போற்றப்படுதல். ஆதித்தனை, ``பலர்புகழ் ஞாயிறு``3 என ஆன்றோர் புகழ்ந்தவை அறிக. ``ஆதியும்`` - என்னும் உம்மை உயர்வு சிறப்பும்மை. `அனைத்துலகங்களிலும் ஆதித்தர் உளர்` என்பதை இங்கு நினைக்க.
இதனால், ஆதித்தன் உயிர்கட்குத் தோற்றமும், நிலையுமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஆதித்தனை ஆயிர நாமங்கள் விண்ணவர் சொல்லி வேண்டினாலும், வேதியர்சொல்லி வேண்டினாலும் அவையெல்லாம் சிவபிரானிடத்தில் அன்புதோன்றி முதிர்வதற்கு வழியாகவே அமையும். ஏனெனில், ஆதித்த மண்டலத்தின் ஒளிக்குள் ஒளியாய்ச் சிவபிரானே நிற்றலால்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``நிற்கும்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க. அப்பயனிலையின் பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. சிவபிரானது அட்ட மூர்த்தங்களில் ஆதித்தனும் ஒன்றாகலின் ``சோதியினுள்ளே சுடரொளியாய் நிற்கும்`` என்றும், அதனை அறியாது ஆதித்தனையே வழிபடுபவர்க்கும்,
``யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்`` l
என்றடி பயன் தருபவன் சிவபெருமானே யாகலின், `அவன் அவர்க்குத் தன்னை உணரும் உணர்வைச் சிறிது சிறிதாக விளங்கச் செய்வன்` என்பது பற்றி, ``ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே`` என்றும் கூறினார்.
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரன்உரு அல்லனோ`` *
என்று அருளிச் செய்ததை காண்க. சிவநெறியாளர் சூரியனை நேரே கண்டு வணங்கும்பொழுது அவனது ஒளிமண்டலத்தில் சதாசிவ மூர்த்தி எழுந்தருளி யிருத்தலை நினைன்தே வணங்குவர். சிவபிரானே ஆதித்தனாய் நின்றும் உலகிற்கு உதவுதல் பற்றியும், அவ்வுதவியின் முதன்மை பற்றியும் சிவபூசையில் முதற்கண் சூரியபூசை விதிக்கப் பட்டுள்ளது. அவ்விடத்துச் சூரியன் சிவ சூரியனாகவே பூசிக்கப் படுவான்.
``காண்பவன் சிவனே யானால்
அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்``l
என்றது காண்க. `ஆதித்தனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. வேதியர் பூதராய்க் காட்சிப்படுதல் பற்றி முன்னர்க் கூறினார். ``நாமங்கள்`` என்பதனோடு இனிதியைய, ``விண்ணவர் சொல்லினும்`` என்பது முன்னர்க் கூட்டியுரைக்கப்பட்டது. `வேண்டுதல், சொல்லுதல்` என்பவற்றை ஏனையோர்க்கும் கூட்டுக.
இதனால், ஆதித்த வழிபாடும் ஓராற்றால் சிவ வழிபாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

பொழிப்புரை :

ஆதித்தனே உலகிற்கு அப்பனாய் இருப்பன்; அம்மையாய் இருப்பன். சுகத்தைத் தருபவனாய் இருப்பன். இனிச் சந்திரனாய்க் குளிர்ந்த ஒளியைத் தருகின்றவனும் இவனே.

குறிப்புரை :

இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இப்பனாய் நிற்றல் கதிரவனாய் நின்றும் என்க. இந்த இருநிலைகளும் சிவம் சத்தி நிலைகட்கு உவமையாகச் சொல்லப்படுமாறு உணர்க. தத்துவம் அடிநிலை உண்மையாதலின் அது தோற்றத்திற்கு முதலாகிய அப்பனைக் குறித்தது. அதனால், ``தையல்`` என்றதும், `அம்மை` என்றதாயிற்று. ``சம்பு`` என்பது `இன்பத்தைத் தோற்றுவிப்பவன்` எனக் காரணக் குறியாய் நின்றது. சூரியனது ஒளியையே சந்திரன் பெற்றுத் தண்சுடராய் நிற்குமாறு அறிக.
இதனால், அண்டாதித்தனது பெருமை பலபடியாக வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வலயம்முக் கோணம்வட் டம்அறு கோணம்
துலைஇரு வட்டம்துய் யவ்வித ழெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா
மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.

பொழிப்புரை :

சதுரம், வட்டம், முக்கோணம் அறுகோணம், துலாக் கோல், இருவட்டம் - என இவ்வாறு மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களில் அமைந்த பீடங்களில் ஒவ்வொன்றின் மேலும் எட்டிதழ்த் தாமரையில் ஆதித்தன் அசையும் வட்டமாய் உள்ள பதினாறிதழ்களையுடைய தாமரை மலர்போல மாறுபாடின்றி விளங்கினான்.

குறிப்புரை :

`ஆகவே, அவனை அவ்விடங்களிலெல்லாம் அவ்வாறு கண்டு வழிபடுக` என்பது குறிப்பெச்சம். அசைதல் ஒளிவீசுதலைப் புலப்படுத்துக. ``வட்டம்`` எனப்பின்னர் வருதலால், முன்னர் `வலயம்` என்றது சதுரமேயாயிற்று. செய்யுள் நோக்கி முக்கோணம் முன் வைக்கப்பட்டது. ``இரு வட்டம்`` என்பதன்பின் `இவற்றின் மேல்` என்பது வருவிக்க. வட்டத்தில் - வட்டம் போல, `ஈரெட்டிதழாக` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. இவ்விதழ்கள் கதிர்வடிவினைக் காட்டும்.
இதனால், ஆதித்தனை அகத்தும், புறத்தும் வழிபடும் முறைகளுள் அகத்து வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில்
சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங்
கேத மறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.

பொழிப்புரை :

ஆதித்தனுக்கு மிகச்சிறந்த இடமாகிய முக்கோண மண்டலத்தில் அவன் மிக்க ஒளியுடையவனாய் விளங்குவான். அவன் மூலாதாரத்தினின்றும் நான்காவதாகிய இருதயத்தை அளாவி ஓங்குவானாயின் முன் மந்திரத்தில் சொல்லப்பட்ட பதினாறு இதழ் வடிவம் அப்பால் விசுத்தியை அடைந்து அங்குள்ள பதினாறு இதழ்களில் ஒன்றி ஒளிர்வான்.

குறிப்புரை :

`அவன் அவ்வாறாகும் வரையில் அவனை வழிபடல் வேண்டும்` என்பது கருத்து. சோதித்து - ஒளியை உடைத்தாய பொருளாய், ஆக்கம் வருவிக்க. குணத்தை, ``கேணி`` என்றார். `தாமரை பூத்தற்கு இடமாகிய குளம் போல்வது` என்பதாம். பின்வந்த ``சூரியன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது; எட்டுதல் - அளாவுதல் ``தன்`` என்றது முன்னர்க் கூறிய கேணியை, ஈரெட்டு, அங்குள்ள தாமரையிதழ். சோடகம் ஆதித்தனது கதிர்நிலை. தான், அசை. `தன் ஈரெட்டில் சோடசம் சோதியே` என இயைத்துக்கொள்க.
இதனால், `ஆதித்தனை அகத்தில் மிக வழிபடல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்ககி லீரே.

பொழிப்புரை :

ஆதித்தன் இருண்ட பொழுது அவனோடு உலகமும் இருண்டுவிட்டது. வேறுபட்ட நான்கு வேதங்களின் மொழிகளும் வெறும் பிதற்றலாய்ப் பயனற்றுப்போயின. அவ் வாறாகவும் `ஆதித்தனுக்குள்ளே சிவசத்தி நின்றே உலகிற்கு ஒளியைத் தருகின்றாள்` எனக் கூறுகின்ற வேத மொழியின் பொருளை, நீவிர் உணரமாட்டீர்.

குறிப்புரை :

`ஆதித்தன் இருண்டது சத்தி சிவனது கண்ணைப் புதைத்த பொழுது` என்பது வெளிப்படையாகலின் அதனைக் கூறா தொழிந்தார். `கழிந்தது` என்பது பன்மை யொருமை மயக்கம். வேதமொழி பயன்படாமை அதன்படியான செயல்கள் நிகழாமை யாலாம். ``சோதி`` என்றது ஆதித்தனை.
இதனால், `ஆதித்தனை வழிபடுதல் சிவ சத்தியை வழி படுதலேயாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

பொழிப்புரை :

ஆதித்தன்மேல் எழுந்துவருகின்ற வழி நிலத்திற்குக் கீழே யாருக்கும் அறிய ஒண்ணாத அரும்பொருளாய் உள்ளது. (ஆதலின் அதனை அறிய முயல வேண்டுவதின்று.) இனிக் கண்ணிற்கு நன்கு புலனாயினும் யாராலும் அணுகிப் பற்ற இயலாத ஆதித்தன் புறப்பட்டுத் தோன்றுதல் நீருக்கும், தீக்கும் நடுவேயாகும்.

குறிப்புரை :

ஆதலின் அது முதலாக அவனைக் காண்க என்பதாம். இஃது ஆதித்தன் புறத்தும், அகத்தும் நிற்றலாகிய இரண்டிற்கும் பொருந்தக் கூறியதாம். மாலையில் மறைந்த ஆதித்தன் காலையில் புறப்படும்பொழுது நிலத்திற்குக் கீழ் நின்று புறப்படுதலால் அவ்விடம் நிலத்தின்கண் உள்ளவரால் அறிய இயலாதாம். இனி அவன் புறப்படும்பொழுது கடல் நீரைக் கிழித்துக்கொண்டு வடவா முகாக்கினி உள்ள இடத்திற்கு வேறான இடத்திற் புறப்படுவான். அப்பொழுதும் அவனை யாரும் கண்ணால் காணலாமன்றி, அருகில் சென்று கையால் பற்ற இயலாது. இஃது அவன் புறத்து நிற்கும் நிலை. இனி அகத்தில் ``பார்`` என்றது, பூமியின் அடையாள வடிவமாகிய சதுரத்தைத் தனது வடிவமாக உடைய மூலாதாரத்தை. அதற்கும் கீழே ஆதித்தன் முக நுண்ணிலையில் நிற்றலால் அஃது யாராலும் அறியப் படாதாம். ``நீர்`` என்றது சிறுநீர் தங்கும் இடமாகிய மணிபூரகத்தை. ``தீ`` என்றது; பிராணவாயுவின் கும்பகத்தால் மூளத்தக்க அக்கினியை உடைய மூலாதாரத்தை - இவ்விரண்டிற்கும் நடுவாவது சுவாதிட் டானம். அங்கு நுண்ணியனாய்ப் புலப்படுதலின் அதனை அவன் உதிக்கும் இடமாகக் கூறினார் எனினும் அவனை நன்கு புலப்படக் காணுதல் மேல், ``ஆன முக்கோணத்தில்`` எனக் கூறியது முதலிய இடங்களிலேயாம். `இவ்விரு நிலையிலும் ஆதித்தனைப் பிடிக்க முயலாமல் கண்ணால் கண்டு வணங்குங்கள்` என்றபடி.
இதனால், ஆதித்தனால் பயன்பெறும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.

பொழிப்புரை :

ஆதித்தன் நிலத்தைப் பிளந்து கொண்டு அதன் கீழேயும் ஓடுகின்றான். பின்பு மேலே வந்து ஆகாயத்தைப் பிளந்துகொண்டு எங்கும் ஒளிமயமாகவும் செய்கின்றான். மற்றும் உயிர்களின் கண்களைத் துளைத்து அவற்றுள்ளேயும் புகுந்து இருளை ஓட்டி மகிழ்ச்சியைத் தருகின்றான். அந்த இன்பத்தை நினைத்தல் கடமையாகலின் அக்கடமையில் வழுவாது நின்று அவனைத் தியானித்தற்கும் அவன் உடன்பட்டு நிற்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், அவனை வழிபடாதொழியின் அஃது உயிர்கட்குக் குற்றமாம்` என்பது கருத்து. `ஆதித்தனது உதவியை முதலிற் பெற்றே பின்பு உயிர்கள் எந்தச் செயலையும் செய்ய இயலும் ஆதலின், அதுபற்றி அவனை வழிபடுதல் முதற்கண் செய்யத் தக்கது` என்றற்கு அவனது செயலை இங்ஙனம் வகுத்துக் கூறினார். இதுவும் ஆதித்தனது புறநிலை அகநிலை இரண்டிற்கும் பொருந்தக் கூறியதேயாம். அவற்றுள் புறநிலைப் பொருள் வெளிப்படை. அதனுள் ``விண்``, வெட்டவெளி. அகநிலையில் மண், மேற்கூறிய வாறு மூலாதாரம். விண், அது முதலாக மேன்மேல் உள்ள ஆதாரங்கள். கண், மனக்கண். ``களி தந்த`` என்றதனால், களி தருதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. ``ஆனந்தம் எண்ணும்`` என்றது, அது பற்றி அவனை எண்ணும் காரியத்தை உணர்த்தி நின்றது.
இதனால், ஆதித்தனது உதவி இன்றியமையா முதல் உதவியாதல் கூறும் முகத்தால், அவனை முதற்கண் வழிபடுதல் கடப்பாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பாரை யிடந்து பகலோன் வரும்வழி
யாரு மறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்று
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

ஆதித்தன் நிலத்திற்குக் கீழிருந்து அதனைப் பிளந்து கொண்டு மேலே எழுவது போலத் தோற்றுகின்ற அந்த வழியின் உண்மையை, தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கு உரிய நூலை மட்டுமே உணர்ந்தவர்களில் ஒருவரும் அறியமாட்டார். (அதனை அவ்வாறே கொள்வர். உண்மையில் அது புறநிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு மூலா தாரத்திற்குக் கீழ் நின்றுமேல் எழுதலும் ஆகும்.) இனி அவ்வாதித்தின் விண்ணில் காணப்படும் பொழுது அவன் சிவபிரான் எழுந்தருளி யிருக்கின்ற மகாமேரு மலையை வலம் வருகின்றான் என்றே கொள்வர். (உண்மையில் அதுவும் புற நிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு வீணாத் தண்டைச் சூழ்ந்து ஒளிர்வதுமேயாகும்.) கோள்களின் இயக்கம் பற்றியும், பிராணா யாமம் பற்றியும் இனிது விளங்கக் கூறும் நூல்களின் வழி அவற்றை உணர்ந்த ஒரு சிலரே மேற்கூறிய உண்மைகளை உணர்ந்திருந்தனர்.

குறிப்புரை :

தீரன் - உலகை ஆக்கவும், அழிக்கவும் வல்ல ஆற்ற லுடையவன்; சிவபிரான், ஊர் - ஊர்தல், முதனிலைத் தொழிற்பெயர். கிணற்றுத் தவளைபோல் இல்லாமல் வெளியே பல ஊர்களையும் சுற்றினவர்` என்பது நயம். கிணறு போல்வன பருப்பொருளைக் கூறும் நூல்கள். ஆதித்தனது புறநிலையையும் உண்மையாக ஒரு சில பேரறிவாளரே அறிந்திருந்தமை இம்மந்திரத்தால் விளங்குகின்றது.
இதனால், ஆதித்தனது நிலையின் அருமையை உணர்த்தும் முகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.
சிற்பி