ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்


பண் :

பாடல் எண் : 1

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

பொழிப்புரை :

உயிர்கள் உடம்போடு கூடிநிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் அவ் வுயிர்களில் அழுந்தப் பொருந்தியுள்ள சிவன் அவற்றின் உடம்பில் உள்ள ஆதாரங்களில் நீக்கமின்றி நிற்கின்றான். பிராணவாயு இடநாடி வல நாடிகளை ஒழித்து நடுநாடி வழியாக ஓடினால் அஃது ஆதித்தனைப் போல ஒளியுடையதாய்க் காணப்படும். அந்த ஒளியில் சிவன் மும்மலங்களை ஒழித்து, உயிர்களின் தற்போதத்தையும் அடக்கி, அவற்றின் அறிவுக்கறிவாய் விளங்குவான்.

குறிப்புரை :

`ஆகவே, நடு நாடி வழியே ஓடும் பிராணனே பிண்டாதித்தனாம்` - என்றபடி. `வல நாடி வழியாக ஓடும் பிராணனைப் பொதுவாக `ஆதித்தன்` என வழங்குதல் மரபாயினும் அஃது உண்மையில் ஆதித்தனாய்ப் பயன் தருதல் நடுநாடி வழியே ஓடும் பொழுதுதான்` என்பது கருத்து. உலகப் பொருள் உள் புறத்தல் புலப்பட்டு விளங்குதல் அண்டாதித்தனால் ஆதல் போல, உயிர்ப்பொருளாகிய சிவம் அக்தில் புலப்பட்டு விளங்குதல் நடு நாடி வழியாக ஓடும் பிராணனால் ஆதலின் அது பிண்டாதித்தனாதல் விளங்கும்` என்றற்குச் சிவனது அகநிலையை இங்கு வகுத்துக் கூறினார். `நின்றால்` முதலியன ``நின்று`` முதலியவாகத் திரிந்தன. ``கருத்து`` என்றது ஆதாரங்களை. மலங்கள் கொன்று வென்று விளங்கும்` என்பதை இறுதியிற் கூட்டி, அதற்கு `அந்நந்தி` என்னும் எழுவாயையும், ஓடுதற்கு. `பிராணன்` என்னும் வினைமுதலையும் வருவிக்க. `சுடராய்` என்பதில் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. ``காணும்`` என்றது, `காணப்படும்` என்றபடி.
இதனால், `பிண்டாதித்தனாவது இது` என்பது உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதித்தன் ஓடி அடங்கும் இடம்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே அடங்குகின் றாரே.

பொழிப்புரை :

`பிண்டாதித்தன்` என மேற்கூறிய பிராணன் ஓடுமளவும் ஓடி ஒடுங்கி நிற்கும் இடத்தை `இது` என உணர்ந்து அவ்விடத்திலே நின்று பயன்பெற வல்லவரே தம்மை அண்டாதித்தன் இயக்கத்திற்கு வேறாய்ப் பிண்டாதித்தன் இயக்கத்தின் வழிபட்டவராக உணர்ந்து அவ்வியக்கத்தால் நீண்டகாலம் இவ்வுலகில் வாழ்வர். உலகம் இவ்வியல்பின் வேறுபட்டுத் தான் அறிந்ததையே அறிவாக நாட்டித் தான் வல்ல வற்றை ஓயாது கூறும். அக்கூற்றினைத் தெளிந்தோர் எல்லாம் அந்த அண்ட ஆதித்தனது இயக்கத்திற்கு உட்பட்டு விரைவில் மாய்பவரேயாவர்.

குறிப்புரை :

முதல் ஆதித்தன் `பிண்டாவதித்தன்` என்பது ``ஓடி யடங்கும்`` என்றதனால் விளங்கிற்று. அடங்கும் இடம் ஆஞ்ஞை அவ் விடத்திலே நின்று சாதிக்கலாவது. மேல் சந்திர மண்டலத்தினின்றும் அமுதம் ஊற்றெழப்பண்ணுதல். ``உணர்ந்தவர்`` என்றது அதன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ``எல்லாம்`` என்பதன்பின் `கேட்கின்றவர்` என ஒரு சொல்லைச் சொல்லெச்சமாக வருவிக்க. முன்னை ஆதித்தன் `பிண்டாதித்தன்` ஆயினமையின் பின்னது அண்டாதித்தன் ஆயிற்று.
இதனால், பிண்டாதித்தனை உணர்ந்து சாதித்தலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்(கு)
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை :

[இம் மந்திரம் அண்டாதித்தன், பிண்டாதித்தன் இருவர்க்கும் பொருந்தக் கூறியது.]
அண்டாதித்தன் கீழ் நின்றும் ஊடுருவி மேலே புறப்பட்டு உலகைச் சுற்றிச் சென்று, முடிவில் ஒடுங்கி நிற்பது உலக முதல்வ னாகிய சிவனிடத்திலாகும். அவ்வாறே பிண்டாதித்தனும் மூலா தாரத்திற்குக் கீழ் நின்றும் உருவி மூலாதாரத்திலே வெளிப்பட்டு மேலே ஏனை ஆதாரங்களையும் கடந்து, முடிவில் ஒடுங்கி நிற்பது ஆஞ்ஞை யில் உள்ள சதாசிவ மூர்த்தியினடத்தி லாகும். ஆகவே எவ்வகை யிலும் உயிர்கட்குப் புகலிடமாகின்றவன் சிவனேயாவன். ஆயினும் இவ்வுண்மையை அறிபவர் உலகில் இல்லை. அறிபவர் எவரேனும் இருப்பின், எனது உள்ளத்தில் உள்ள அன்பு அவரிடமே சென்று உருகி நிற்கும்.

குறிப்புரை :

`ஆதித்தன்` என்பது முதற்கண் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உருவிப் புறப்படுதல் மேல், ``பாரையிடந்து`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டது.
இதனால், ஆதித்த ஞானத்தால் விளையும் பயன் கூறப்பட்டது.
சிற்பி