ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்


பண் :

பாடல் எண் : 1

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து)
அந்த அபர பரநாத மாகியே
வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து)
உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.

பொழிப்புரை :

சுத்த மாயையின் ஒருகூறு சிவனது சத்தியால் உலகத் தோற்றம் நிகழத்ற்குக் காரணமாகப் பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் பக்குவப்படுத்தப்பட்ட பகுதி, `மேற்பகுதியும் கீழ்ப் பகுதியும்` என இரண்டு பகுதியாய் விரியும். அவை முறையே `பரவிந்து` என்றும், `அபரவிந்து` என்றும் பெயர் பெறும். அவற்றினின்றும் முறையே சொல்லுலகத்தின் அதிசூக்கும நிலையாகிய பரநாதமும், சூக்கும நிலையாகிய அபர நாதமும் தோன்றும். (இவையே அதிசூக்குமை வாக்கும், சூக்குமை வாக்கும் ஆகும்.) பின்பு அவற்றினின்றும் வைகரி முதலிய வாக்கு வடிவமான சொல்லுலகத்தையும், `கலை, தத்துவம், புவனம்` என்னும் அத்துவாக்களையும் சிவன் தோற்றுவித்து, அவை வழியாக ஆன்ம அறிவினிடத்தே அருணோதயம் போன்ற ஒளியை விளங்கச் செய்வான்.

குறிப்புரை :

கலை, `சாந்திய தீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என முறையே ஒன்றன்பின் ஒன்றாய் ஐந்தாகி விரியும். ஏனை ஐந்து அத்துவாக்களும் இந்த, `கலை` என்னும் அத்துவாவில் அடங்கும். அவையாவன `வன்னம், பதம், மந்திரம்` என்னும் சொல் வகையும். `தத்துவம், புவனம்` என்னும் பொருள் வகையுமாம். பரம் - சிவன், `பரம் கலையாதி வைத்து உள்ளத்து அருணோதயம் என உந்தும்` என முடிக்க. செய்யுள் நோக்கி அபரங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால், உலகத்தோற்ற முறை ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு)
உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.

பொழிப்புரை :

ஆன்ம அறிவில் அருணோதயம் போலத் தோன்று வதாக முன் மந்திரத்திற் குறித்த விளக்கத்திற்குக் காரணமான எழுத் தோசை, `பர நாதத்தின் காரியம்` என ஆகமங்களில் சொல்லப் படுதலால், அந்தப் பரநாதத்திற்குக் காரணமாக மேற்குறிக்கப்பட்ட அந்தப் பரவிந்துவிலிருந்தே வைகரி முதலியவாக்குக்களால் நிவிர்த்தி முதலிய ஐங்கலைகளிலும் அறிவு விளக்கம் சிவனால் உண்டாவதாகும்.

குறிப்புரை :

உள்ளம் - ஆன்ம அறிவு. `அருணோதயத்திற்கு` என நான்காவது விரிக்க. `வள்ளலால்` என மூன்றாவது விரித்து, அதனை ``ஒன்றும்`` என்பதனோடு முடிக்க. ``பர விந்து வாக்கு`` என்பது, பர விந்துவினின்றும் தோன்றும் வாக்கு` என ஐந்தாம் வேற்றுமைத் தொகை. இங்கும், `வாக்கால்` என உருபு விரிக்க. `ஐங்கலைக்கும் ஒன்றும் உதயம் உள்ளன` என மாறிக்கூட்டுக. உதயம் - ஒளித் தோற்றம். கலைகளின் பன்மைபற்றி உயத்தையும் பன்மையாகக் கூறினார். ``வைகரி யாதி`` என்றது ஒடுக்கமுறை பற்றி. இவற்றிற்குப் பரவிந்து பரம்பரையால் காரணமாகும் என்க.
`தூல வைகரி` சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குக்கள் முறையே `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் நின்று ஆங்காங்குள்ள உயிர்கட்கு உணர்வைப் பிறப்பிக்கும் என்பதை,
``நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாக`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளானும் உணர்க.
இதனால், சொல்லுலகம் அனைத்திற்கும் `விந்து` எனப்படும் சுத்த மாயையே காரணமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.

பொழிப்புரை :

`தேவர்கள் தம் தம் பதவி விருப்பத்தால் விரும்பு கின்ற முழுமுதற் கடவுளாவான் பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற நூற்றெட்டு உருத்திரர்கட்கும் தலைவன்` என்றும், `பொது வாக - மும்மூர்த்திகள் என்று யாவராலும் சொல்லப்படுகின்ற - அயன், அரி, அரன் - என்பவர்கட்குத் தலைவன்` என்றும் தொன்மையாக பலர் சொல்லிவர, `முதற்கடவுள் அவ்வளவில் நில்லாது மேற்குறித்த மூவர்க்கும் மேலாய் நான்காமவனாய் உள்ள மகேசுரனை உள்ளிட்ட நால்வர்க்கும் தலைவனாவான்` எனச் சமயக் கணக்குக்களைக் கடந்து நிற்கின்ற உண்மை நூல்கள் உண்மையைச் சொல்லா நிற்கும் என உயர்ந்தோர் கூறுவர்.

குறிப்புரை :

இஃது, `ஐந்தொழிற்கும் முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே பரம்பொருள் எனக்கூறியது. `பத்துத் திசை உதயம் செய்யும் தேவர்` என மாற்றி வைத்து உரைக்க. பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற உருத்திரர் இவர். இவர் என்பதைச் சிவஞான போதம் பேருரையிலும் காணலாம். 3 ``முன்னொரு காலத்து`` என்றது பழைமை குறித்தவாறு. அப்பழைமையாவது சைவாகமங்களை உணராத உலகரது காலங்களாம். `முன் ஒரு காலத்து என` என முன்னே கூட்டிமுடிக்க. ``நடு`` என்றது அப்பாற்பட்ட நிலை அஃது ஆகு பெயராய் அந்நூல்களைக் குறித்தது; வாய் - உண்மை. ``விண்ணவர் மேவு பிரான்`` என்பதை முதலில் எழுவாயாக வைத்து, அதனை, ``பிரான், பிரான்`` என்னும் பயனிலைகளோடு முடிக்க.
இதனால், `முன் மந்திரங்களில், ``பரம்`` என்றும், ``வள்ளல்`` என்றும் குறிக்கப்பட்ட முதற் கடவுளாவான் இவன்`` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.

பொழிப்புரை :

முன்மந்திரத்திற் கூறியவாறு சதாசிவ மூர்த்தியாய் நின்று ஐந்தொழில் நடாத்தும் முதல்வன் அவ்வாறு தொழில்புரிய நிற்பதற்கு முன்பே என்னை இயல்பாகவே பற்றி நிற்கின்ற, வெறுக்கத் தக்க அக இருளை நீக்குதற் பொருட்டு என் உயிருக்கு உயிராய்க் கலந்து நின்று, அதன் பின்பு தொழில் புரிய எழுந்தான்.

குறிப்புரை :

நந்தி - சிவபெருமான். ``பொய்யிலன்`` முதலிய குறிப்பு வினைப் பெயர்கள் பலவும் அவனையே குறித்து நின்றன. பொய் - பொய்போலத் தோன்றுகின்ற அறியாமை. மெய். உள்ளதாய்த் தோன்றுகின்ற அறிவு. புவனங்கள் ``புவனா`` எனப் பெண்பாலாகச் சொல்லப்பட்டன. மையிருள் - மை போல்வதாகிய இருள். கண்ணிற்குப் புலனாவது போலத் தோற்றுகின்ற இருள். இஃது உலகை மறைக்கும் புற இருள் மனமொழி மெய்களால் செய்யப்படும் இருள்; வினை இருளாகிய மலம் காரணமாக விளைவதனை ``இருள்`` என்றார். ``இருள்சேர் இருவினை`` * என்றது காண்க. `இவ்விருளை நீக்கும் திருமுச்சுடர்கட்கு இல்லை` என்பதை நினைவூட்டுதற்கு அவற்றின் இயல்பை எடுத்துக் கூறினார். திரு - மேன்மை; சத்தி கைத்தல் - வெறுத்தல், பின்பு ``எழுந்தான்`` எனக் கூறியதனால், `கலந்தமை அதற்கு முன்னே` என்பது பெறப்பட்டது இந்நிலை, `அனாதி` எனப்படும். ``என்`` என நாயனார் தம் நிலையையே கூறினா ராயினும் அஃது அனைத்துயிர்களின் நிலையையும் பற்றியதேயாகும்.
இதனால், முதல்வன் அனாதியே உயிர்களில் உள்ளுயிராய்க் கலந்து நிற்றல் கூறப்பட்டது. அவ்வாறு கலந்து நிற்றலானே, `அவை களின் இருளை நீக்குதல் வேண்டும்` என்னும் இரக்கமும், அது பற்றிச் செய்யப்படும் தொழில்களும் முதல்வனுக்கு உளவாயின என்க.

பண் :

பாடல் எண் : 5

தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி யூறல்
கனிச்சுட ராய கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி உயிர்களது இருளை நீக்கவேண்டி அவற்றினுள்ளே உள்ள சிவனது, `திரு` எனப்பட்ட ஒப்பற்ற ஒளி தாக்கிப் பரவுதலால் அவ்விடத்துள்ள இருளாகிய மலம் நீங்கும். அது நீங்கினால் அந்த ஒளிக்கு மேலே உள்ள சிவமாகிய அரிய கனியின் சாறு அக்கனியினின்று வெளிப்பட்டு ஒழுகி இனிக்கும் அப்பொழுது ஊழிக் காலத்தும் அழியாத ஒளியினதாய் விளங்கும் கயிலாய மலைமேல் சிவன் நண்ணிப் பேரொளியுடன் திருமேனி கொண்டு வீற்றிருக்கும் காரணமும் விளங்கும்.

குறிப்புரை :

எற்றுதல் - தாக்குதல். தாவுதல் - பரவுதல் `தாய்` என்பது, `தாவ` என்பதன் திரிபு. இவ்வாறன்றி, `நீக்க`, எனப் பாடம் கொள்ளுதலும் ஆம். ``அண்ணித்திடும்`` என்பது திரிந்ததும், `கன்னி` என்பது இடைக் குறைந்ததும் எதுகை நோக்கியாம். சிவத்தை, `ஈசன் எனுங்கனி`` * என அப்பர் அருளிச்செய்ததும் இங்கு நோக்கத்தக்கது. கன்னி - அழியாமை. ``ஊழிதோறூழி மற்றும் உயர் பொன்னொடித் தான் மலை``* என அருளினமை காண்க. வண்ணம் - வகை; காரணம் ``ஆம்`` என்றது, `விளங்கும்` என்றபடி. `கயிலையில் ஈசன் உருவத் திருமேனியுடன் வீற்றிருத்தல் நிலவுலகத்து உயிர்களை உய்வித்தற் பொருட்டு என்னும் உண்மை அனுபவமாய்த் தோன்றும்` என்பதாம்.
இதனால், முதல்வன் உயிர்க்குயிராய்க் கலந்து நின்று செய்யும் பேருதவி விளக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசைஒளி யாயிடும்
ஆரறி வார்அது நாயகம் ஆமே.

பொழிப்புரை :

உயிர்களது அறிவினுள்ளே நுண்ணறிவாய் நிறைந்து நிற்கின்ற ஒரு பெரிய ஒளி, தடையின்றி எங்கும் போய் வருகின்ற பகலவனது தேர் செல்லாத இடத்தில் அங்குள்ள இருளை நீக்குகின்ற ஒளியாய் இருக்கும். இம்மறை பொருளை உணரும் அறிவுடையோர் யாவர்? எவரேனும் இருப்பாராயின் அவரது அறிவே தலைமை சான்ற அறிவாகும்.

குறிப்புரை :

நேர்மை - நுண்மை. ``அவர் நின்றதோர் நேர்மையும்`` என்று அருளியது காண்க. திசை - இடம். பகலவன் தேர் செல்லாத இடம் உயிரினது அறிவு. மேலேயும், ``மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு`` என்றது காண்க.
இதனால் முன் மந்திரங்களில் கூறப்பட்ட சிவனது நுண்ணிலை அறிதற்கரிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும்
சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

பொழிப்புரை :

அண்டத்தில் ஒரு வட்ட வடிவினனாய்க் காணப் படுகின்ற ஆதித்தன் உலகில் எட்டுத் திக்கிலும் சென்று அலமருவார்க்கு அவர் சென்ற இடத்தில் எல்லாம் காணப்பட்டு ஒளியை வழங்குவான். வெளியில் அங்ஙனம் அலமரும் நிலையை விட்டு முன் மந்திரத்தில் கூறிய நுண்ணிறிவை அறிந்து அகத்தே நோக்குபவர்க்கு அவன் உட்பினுள் காண்கின்ற பல இடத்திலும் விளங்கி ஒளிதருகின்றவன் ஆவான்.

குறிப்புரை :

`புறநோக்கு உடையவர்க்கு அண்ட ஆதித்தனே ஆதித்தன் ஆவதுபோல அகநோக்கு உடையவர்கட்குச் சிவனே ஆதித்தனாய்த் தோன்றுவான்` என்றபடி. `என் தாய் என் சிற்றன்னை யாயினாள்` என்று ஒருவன் சொல்வானாயின் அச்சொல்லில் `ஆயினாள்` என்பது `தாய்க்கு உரிய இடத்தைச் சிற்றன்னை பற்றி நிற்கின்றாள்` என்பதே பொருள் ஆதல் போலவே `ஆதித்தன் கதிரொளியான்` என்பதற்குப் பொருள் கொள்க. `கண்ட இடம், சென்ற இடம், நின்ற இடம்`` என்பவற்றில் பெயரெச்சத்து அகரங்கள் தொகுத் தலாயின. ``கண்ட இடம்`` என்றது ஆறு ஆதாரங்களை. ``உள்ளே`` என்பதன் பின் `காணப்படும்` என ஒரு சொல் வருவிக்க. ``உள்ளே காணப்படும் கதிரொளி`` என்றதுமுன் மந்திரத்திற் கூறப்பட்ட நேரறிவை, ``சென்றிடத்து`` என்பதனை முதலிலும், ``நிலை`` என் பதனை ``வரும்`` என்பதன் பின்னும் கூட்டுக. `மழை நின்றது` என்றல் போல `நிற்றல்` இங்கு ஒழிதலைக் குறித்தது. ``நின்றிடத்துக் கதிரொளி யாயிடும்`` என்றதனால், `சென்ற இடத்தே மகிழ்ந்தெழுதல் நில்லா தவர்க்கு` என்பது பெறப்பட்டது. முதலடி இன எதுகை.
இதனால், அகநோக்குடையார்க்குச் சிவன் உள்ளொலியாய் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாவிகண் நாசி நயன நடுவினும்
தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

கொப்பூழ், கண், மூக்கு, புருவநடு, தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேல் என்னும் ஐந்திடங்களிலும் தோன்றி ஒளி வீசுகின்ற அந்த ஆதித்தனைத் தேவர்கள், `உருத்திரன், மால், அயன்` என்னும் மும்மூர்த்திகளாக அறிந்து இன்புற்றிருக்கின்றனர்.

குறிப்புரை :

`சிவனே தனது திகார சத்தியால் மும்மூர்த்திகளைக் காரணக் கடவுளராகச் செய்து உலகை நடத்துவிக்கின்றான்` என்றபடி. தொடக்கத்திலும்,
``அவனை யொழிய அமரரும் இல்லை,
... ... ... அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை``
என்று அருளிச்செய்தார். மூலாதார சுவாதிட்டானங்களில் ஒளி சிறிதாய் விளங்கலின் அவற்றிற்கு, மேற்பட்ட இடங்களையே கூறினார். எல்லாவற்றிற்கும் முதலான பிராணன் இயங்குவது மூக்கு வழியாக ஆதலின் அதனையும் கூறினார். ``நயனம்`` என்றது ஆகு பெயராய்ப் புருவங்களை உணர்த்திற்று.
இதனால், சிவாதித் தனது சிறப்புணர்த்தி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
`இவ்வதிகாரத்தில் சொல்லப்பட்ட உண்மைகளை உணரும் உணர்வே ஞானித்தனாம்` என்பது கருத்து.
சிற்பி