ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்


பண் :

பாடல் எண் : 1

உன்னு மளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

சிவன் தன்னை நினைப்பவரையே தான் நினைப் பான். பல பொருள்களையும் சொல்லுகின்ற வேதங்கள் பிறரைப்போல அல்லது தன்னைப் பலவிடத்தும் பெரும்பான்மை எடுத்துச் சொல்ல நிற்பவன். என் உள்ளே என்றும் ஒளிகுறையாத விளக்காய் உள்ளவன். `அவன் உயிர்களிடத்து அன்னப் புள்ளாய் இருக்கின்றான்` என்னும் அரிய உண்மையினை நான் திருவருளால் அறியப்பெற்றேன்.

குறிப்புரை :

அன்னப் பறவைக்கு, `அம்சம்` என்பதும் ஒரு பெயர் அதனால் அம்ச மந்திரத்தை `அன்னம்` எனக் குழூஉக்குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்ச மந்திரமே பிராணனை இயக்குவது. அஃது `அசபை எனப்படும். அதனை நாயனார் நான்காந் தந்திரத் தொடக்கத்திலே கூறினார். சிவனது சத்தியே அம்ச மந்திரத்தை இடமாகக் கொண்டிருந்து பிராணனை இயக்குகின்றது ஆதலின் அவ்வுண்மையைத் திருவருளால் உணர்ந்த நான் பிராணனோடு கூடிப் பிராணமயனாய் நிற்கும்பொழுதும் சிவனை மறக்கிலேன் என்றபடி,
``என்னில் ஆரும் எனக்கினி யார்இலை;
என்னி லும்இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` *
என்றருளிச் செய்ததும் காண்க. புறம்போந்து பின் உட்புகுதல் பிராணனின் இயல்பாதலை நினைக்க. முதல் மூன்று அடிகளிற் கூறியன அவன் அன்னமயன் ஆதலை வலியுறுத்தும் குறிப்பின. ``அறிந்துகொண்டேனே`` என்னும் சொல்லியல்பால், `திருவருளால்` என்னும் இசையெச்சம் பெறப்பட்டது.
இதனால், பசு பிராணனாம் முறைமை கூறுங்கால் அந் நிலையும் சிவனருளால் உளதாதலை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.

பொழிப்புரை :

இங்கு ``ஆறு`` என்றது பிராணன் இயங்கும் வழி யினை. ``அதன் கரையில் உள்ள இரு அன்னங்கள்`` என்றது, அந்தப் பிராணனை ஒட்டி நிற்கின்ற `சிவன், சீவன்` என்னும் இருவரையும். அவ்வன்னம் இரண்டும் என்றும் இணைந்து நிற்றலி னின்றும் நீங்கித் தனித்தனியே பிரிதல் இல்லை. அவற்றுள் ஒன்று அறிவுமிக்கது. ஆதலின் அது தனியே பிரிந்து நிற்பினும் யாதொன் றினை இழத்தல் இன்றி, இனிது வாழும். மற்றொன்று அறிவு குறைந்தது ஆதலால் அது பிரிந்து தனி நிற்பின் எந்தப் பயனையும் பெறாது துன்பத்தில் ஆழும் என்றது சிவ சீவர்களது இயல்பினை விளக்கியதாம்.

குறிப்புரை :

``அழகிய சிறகையுடைய இரு பறவைகள் இணை பிரியாதவை; ஒரு மரத்தில் வாழ்கின்றன. அவற்றுள் ஒன்று அம் மரத்தின் பழத்தை உண்கின்றது. மற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கின்றது`` என்னும் உபநிடதப் பொருள் இங்கு ஒப்பிடத்தக்கது. l
மூன்றாம் அடியில், `தனி நிலை` என்பது எதுகை நோக்கி, ``தன்னிலை`` என விகாரமாயிற்று. ``தன்னந் தனிநிலை தனி ஒன்று`` என்றதனை, `தனி ஒன்று தன்னந் தனி நிலையையுடையது` என மாற்றிப் பயனிலை வருவித்து உரைக்க. `உடையது` என்பது `உடையதாதல் இயலும்` என்பதாம். ``பின்னர்`` என்பது, `மற்றொன்று` என்றபடி. மற்றொன்றாகிய மட அன்னம் அது என்றக்கால் பேறு அணுகாது` என இயைக்க. மடமை - அறியாமை; `சிற்றறிவு` என்பதாம். அது என்றல் - வேறொன்றாகிய `அந்த அன்னத்தைப் போல நானும் தனித்திருப்பேன்` என்று நினைத்தல்.
இதனால், பிராணனாய் நிற்கும் பசு தான் பதியை விட்டுத் தனிநிற்றல் ஆகாமை விளக்கப்பட்டது.
சிற்பி