ஏழாம் தந்திரம் - 28. புருடன்


பண் :

பாடல் எண் : 1

வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

பொழிப்புரை :

தோன்றியழிகின்ற வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல்லுலகங்களையும். மற்றும் பொருளுலகங்களையும், அவைகளைப் பற்றி நின்று `புருடன், உருத்திரன், சிவன்` என உயிர்கள் அடையும் நிலையற்ற வேறுபாடுகளையும் தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான முதல்வன் சிவபெருமானே. இவ்வமைப்பு அனாதியே அமைந்த அமைப்பாகும்.

குறிப்புரை :

`மாய், ஆ` என்னும் முதனிலைகள் அடுக்கி, `மலம்` என்னும் பெயரோடு வினைத்தொகையாய்த் தொக்கன. அந்நிலைமை தாப்பிசைவாய், முன்னர் ``வைகரியாதி`` என்பதனோடும் இயையும். மாய்ந்து ஆகின்ற மலங்களாவன மாயேயங்கள். ``ஆதி`` என்றதனால் கன்மமும் தழுவப்பட்டது. கருவியின்றிக் கன்மம் நிகழாது ஆகையால் அக்கருவியைப் படைத்துக் கொடுத்தல் பற்றி, `கன்மத்தைச் செய்பவனும் சிவனே` எனக் கூறினார்.
உயிர் முப்பத்தாறு தத்துவங்களையும் பற்றி நிற்கும்பொழுது `புருடன்` என்னும் நிலையையும், ஆன்ம தத்துவத்தை ஒழித்து, ஏனைப் பன்னிரண்டு தத்துவத்தளவில் நிற்குமிடத்து `உருத்திரன்` என்னும் நிலையையும், அவற்றுள்ளும் வித்தியா தத்துவங்களை ஒழித்து, ஏனைச் சிவ தத்துவத்தளவில் பற்றி நிற்கும் பொவுது `சிவன்` என்னும் நிலையையும் அடையும். இவ்வாற்றானே `மூவுலகம்` என்பன சிவநெறியில் புருடலோகம், உருத்திர லோகம், சிவலோகம்` என்பனவே யாகின்றன. அட்ட வித்தியேசுரர், சுத்த கோடி மகா மந்திரேசுரர். அணு சதாசிவர் என்போர் யாவரும் `சிவர்` என்னும் வகையினரேயாவர்.
கரி - சான்று; இங்கு வினை முதலாந் தன்மையைக் குறித்தது. பொய் கரி - பொய்க்கும் கரி, மெய்கரி - மெய்க்கும் கரி, `பொய், மெய்` என்பன நிலையாமை, நிலைத்தல் இவற்றைக் குறித்தன. நடுவண் நின்ற ``கரி`` என்பது கருவியை வினைமுதல் போலக் கூறியது. விசேடம் - சிறப்பியல்பு. சிவனது சிறப்பியல்பு அவனது சத்தி. இங்கு அமைப்பாவது செய்வோனும், செய்யப்படுவனவுமாய் நின்ற இயல்பு `செய்தது` என்பது, `செய்யப்பட்டது` என்னும் பொருட்டாய்ச் செய்யாததைச் செய்ததுபோலக் கூறும் இலக்கணை வழக்காய் நின்றது.
இதனால், உயிர், `தான் புருடனாய் நிற்றல் முதலிய நிலைமை களும் சிவனால் ஆவன்` என்பதை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு)
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு)
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

பொழிப்புரை :

ஆணவ பந்தத்தால் தனது வியாபக நிலையை இழந்து அணுத்தன்மை எய்த நிற்கின்ற உயிரை அணுவிலும் பல கூற்றில் ஒரு கூற்றளவினதாகப் பாவித்து, `அணுவுக்கும் அணு` எனப்படுகின்ற நுண்ணியனாகிய சிவனை அணுக வல்லவர்கட்கே அவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

இரண்டாம் அடி ஒழிந்த ஏனைய அடிகளில் உள்ள ``இல்`` உறழ் பொருளின்கண் வந்த ஐந்தனுருபுகள். `அணோ ரணியாந்`` என்னும் கடோபநிடத வாக்கியம் இங்கு நினைக்கத்தக்கது. இவ்வடிகளில் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இரண்டாம் அடியை `அணுவை அணுவில் ஆயிரங் கூறிட்டு` என மாற்றி, முதலில் வைத்து உரைக்க. `நுண் பொருளாய் உள்ள சிவனைத் தம்மை நுண் பொருளாகப் பாவிக்கும் பாவனையாலே தான் அடைய முடியும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
``கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயின் கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட
இருபொருளு மன்றியே இன்னதிது என்னா(து)
ஒருபொருளே யாய்இருக்கும் உற்று``
- திருக்களிற்றுப்படியார் - 24
என்பதிலும் இம்முறை கூறப்பட்டது அறிக.
இது முன் மந்திரத்து உரையிற் கூறிய எல்லா நிலைகட்கும் பொதுவாதலை அறிந்து கொள்க.
இதனால், மேற்கூறிய `புருடன்` முதலிய அனைத்து நிலைகளிலும் உயிர் சிவனைப் பொருந்தி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.

பொழிப்புரை :

சிவனது திருவருளாகிய ஒளியினை ஆன்மா, பல கிளைகளும் விழுதுகளுமாய் விரிவடையும் ஆற்றலைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆலம் விதைபோலத் தன்னுள் அடக்குமாற்றால் தன்னை அச்சிவத்திற்கு ஏற்ற தூய இடமாகச் செய்யுமானால், அந்தத் திருவருள் ஒளி துணையாக, துன்பத்தையே தனது இயல்பாகக் கொண்ட ஆணவமாகிய இருளை ஓட்டி, அம்பலத்தில் ஞான நடனத்தைச் செய்கின்ற அப்பெருமான் தரக் கருதும் நல்வழியைத் தான் உணரும் வாய்ப்பு உண்டாகும்.

குறிப்புரை :

படர் - படர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். அணு - ஆன்மா. ``அணுவினை`` எனப்பின்னர்க் கூறினாராயினும், `சுடரை அணு தன்னுட் கொண்டு தன்னைத் தூவழி செய்ய` எனக்கூறுதலே கருத்தாதல் உணர்க. `ஓட்டி, நாடல்` என்னும் பயனிலைகட்கு, `தான்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது.
இதனால், மேற்கூறிய முறை உவமை காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்ற கலப்ப துணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்
தணிவற நின்றனன் சராசரந் தானே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், `உயிர் ஆலம் விதைபோலவும், சிவன் அவ்விதையில் அடங்கியுள்ள கிளை முதலியன போலவும் ஆதல் வேண்டும்` என்றது ஒருபுடை உவமையேயன்றி, முற்றுவமை யன்று. மற்று, உண்மை நிலையாது` எனின், `உயிர் மேல்; சிவன் உள்` என்றாயினும், `சிவன்மேல்; உயிர் உள்` என்றாயினும் ஒருபடித்தாக வரையறுத்தல் கூடாதபடி, புறவேற்றுமையே யன்றி, அகவேற்றுமை தானும் இன்றி ஒன்றி நிற்கின்ற கலப்பே உண்மை நிலையாகும். இவ்வுண்மையை உணர்வார் ஒருவரும் இல்லை. இனித் தன்னொப் பில்லாத் தனிப்பெரும் பொருளாகிய சிவன் எல்லாப்பொருளிலும் ஒரு படித்தாக நீக்கமின்றி நிறைந்து நிற்கின் இயங்குவனவும், நிற்பனவு மாய்க் காணப்படுகின்ற உயிர்கள் பலவும் அவனிடத்தில் தத்தமக்கு இயலும் முறையில் கலந்து நிற்கின்றன.

குறிப்புரை :

முதல் அடியின் ஈற்றில், `போல` என்பது விரிக்க. கணு - மூங்கிற் கணுவும், கரும்புக் கணுவும். அவை அக வேற்றுமைக்கு உவமையாகக் கூறப்பட்டன. ``இணையிலி`` என்றதனால் அவனது பெருநிலை குறிக்கப்பட்டது. `ஈசன் இணையிலி` என வேறு தொடராக்கி, அதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. தணிவு - நீக்கம். சிவனது பெருநிலை கூறியதனானே உயிர்களது சிறு நிலை பெறுவிக்கப்பட்டது. `இல்லம் முறையில்` என்பது இசையெச்சமாய் நின்றது. தான் - சிவன். `தான் ஆம்` - என்க.
இதனால், மேற்கூறிய உவமையால் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
சிற்பி