ஏழாம் தந்திரம் - 30. பசு


பண் :

பாடல் எண் : 1

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

பொழிப்புரை :

கருவுறும் பருவம் வாயாத இளம் பசுக்கள் இனச் சார்பால் கதற மட்டும் தெரிந்து கொண்டு, கன்றை ஈன்ற பசுக்கள் தம் கன்றினை அழைக்கக் கதறுவதுபோலத் தாமும் கதறித் திரியும். கன்றை ஈனாது கருவுற்று மட்டும் உள்ள பசுக்கள் தமக்குரிய புல்லை விடுத்து மனிதர்க்கு உயிர பயிரில் சென்று மேயாதபடி அதன்தலைவன் புல்வெளியில் ஓரிடத்தில் முளையடித்து நீண்ட கயிற்றால் கட்டி வைக்க, அக்கயிற்றின் அளவிற்கு அவை கட்டில்லாதது போலத் தம் விருப்பப்படி சென்று புல்லை மேயும். எனினும் கன்றை ஈன்று தாய்மையை எய்திய பசுக்களே ஒன்று ஒரு குடம்போல நிரம்பப் பால் பொழியும் பசுக்களாகும். அவை தவிர மேற்சொன்ன மற்ற இருவகைப் பசுக்களும் பயன்படாத பசுக்களாகவே இருக்கும்.

குறிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி, ``கற்ற பசுக்கள்`` என்பதனால், நூலை மட்டும் கற்றுப் பரிபாகம் இன்மையால் அந்நூலை மட்டும் இளஞ் சிறார் காதற் பாட்டுக்களைப் பாடி அவற்றிற்கேற்ப நடித்தல் போலப் படித்துப் பொருள் விரிக்கின்றவர் குறிக்கப்பட்டனர். ``கதறித் திரி யினும்`` எனப்பின்னர் வருதலால், ``கற்ற`` என்றது, கதறக் கற்றதனையே குறித்தது. பசுக்கள் வாயொலி செய்தலை, `கதறல்` என்றல் மரபு.
கொற்றம் - வெற்றி. பசுக்களுக்கு வெற்றியாவது மலட்டுத் தன்மையின்றிக் கருவுறுதல். `கொற்றப் பசுக்கள்` என்னு சந்தி ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. குறி - முளை. கட்டி - கட்டப் பட்டு. `குறியில் கட்டி` என உருபு விரிக்க. `கருவுற்றுக் குறியில் கட்டப் பட்டு மேயும் பசுக்கள்` என்றதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்திக்கும் நிலையில் உள்ளவர் குறிக்கப்பட்டனர். அவரைப் பொய்ந்நெறியில் சென்று இரண்டும் கெட்டவர் ஆகாதபடி ஆசிரியர் தம் ஆணைவழி நிற்பித்தலே, `குறி கட்டி மேய்தல்` என்பதனஆல் குறிக்கப்பட்டது. எனவே ``கொற்றம்`` என்றது ஆசிரியரால் ஆட்கொள்ளப் பட்டமையைக் குறித்ததாம்.
``உற்ற`` என்பதற்கு, `கன்றை` என்பது வருவித்து, `கன்றை உற்ற பசுக்கள் என்க. `தாய்மை எய்துதல்` என்பதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்த பின்பு தெளிதலையும், நிட்டை கூடுதலையும் உடையராதலைக் குறித்தது.
``பால்`` என்றதனால், பரஞானம், அஃதாவது அனுபவஞானம் குறிக்கப்பட்டது. ``ஒருகுடம் பால்`` என்றதனால் `நிறைந்த ஞானம்` என்பது குறிக்கப்பட்டது.
போதுதல் - வெளிவருதல்; பொழிதல் எனவே தெளிவும், நிட்டையும் உடையவரது ஞான நிலை அயலார்க்கும் இனிது விளங்குதல் பெறப்பட்டது.
வறள் - வறட்சி; பால் சிறிதும் சுரவாமை. மலட்டுப் பசுக்களும் கதறித் திரிவனவற்றுள் அடங்கின.
இதனால், `சீவர்கட்குப் பசுத்துவம் மலபரிபாகம் காரணமாக இருவினை யொப்புச் சத்தி நிபாதமும் வாய்க்கப்பெற்று, ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்தலேயன்றித் தெளிவும், நிட்டையும் எய்துதலானே நீங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே.

பொழிப்புரை :

காப்பாருமின்றி, மேய்ப்பாருமின்றி, கறப்பாரு மின்றித் தம் விருப்பம்போல் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுப் பசுப்போன்ற மக்களை எப்படித் திருத்த முடியும். (அவர் யாருக்கும் அடங்குபவரல்லர்.) அவர் தாமே தமது இழிநிலையை உணர்ந்து ஆசிரியரை அடைக்கலமாக அடைவாராயின் அவரை ஆசிரியர் கல்லில் நார் உரிப்பதுபோலவும், கல்லைப் பிசைந்து கனியாக்குதல் போலவும்* தமது திருவருள் திறத்தால் அவரது நிலையினின்றும் நீக்கிச் சீர்செய்து, அவர் சீர்ப்பட்டமையை நன்குணர்ந்து சிவமாக்கிய பின்பல்லது அதற்கு முன் காடும், மேடும், கல்லும், முள்ளுமாய்க் கிடக்கின்ற நிலம் போன்றுள்ள அவரது மனம் உணர வேண்டியவற்றை உணராது.

குறிப்புரை :

``மேயும்`` என்றது `தம் விருப்பப்படி சென்று மேயும்` என்றபடி. `அவ்வாறு மேயும் பசுக்கள்` என்றதனால் `அவை காட்டுப் பசுக்கள்` என்பது விளங்கிற்று. ``பசுக்கள்`` என்றது உவமையாகு பெயராய், பசுக்கள்போல் உயிரைக் குறித்தது. இறுதியில் வைக்கற் பாலதாகிய ``இறைவனடி கூட்டி`` என்பதைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``செய்`` என்பது உவம உருபு. ``குறிப்பு`` என்பது ஆகு பெயராய்க் குறிக்கப்படும் பொருளை உணர்த்திற்று.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய பொருள் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப்பட்டது.
சிற்பி