ஏழாம் தந்திரம் - 31. போதன்


பண் :

பாடல் எண் : 1

சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

பொழிப்புரை :

`சீவன்` எனவும், `சிவன்` எனவும் வேறு வேறாய்த் தனித்து எக்காலத்தும் இல்லை, உடலும், உயிரும் போல என்றும் ஒன்றியே நிற்கும். அவ்வாறிருந்தும் சீவன் சிவனை அறிந்ததில்லை. ஏன்? பாசங்கள் சீவனது அறிவை மறைத்து நிற்கின்றன. (அம்மறைப்பு நீங்கிச்) சீவன் சிவனை அறியுமாயின் அது சீவனாய் இராது, சிவமாகவே இருக்கும்.

குறிப்புரை :

எனவே, `சார்ந்ததன் வண்ணம் ஆதல் உயிரினது இயல்பு` என்பது பெறப்படுகின்றது. அநாதி முதலே பாசத்தைச் சார்ந்து பாசமாய் நிற்கின்ற உயிர், சிவத்தைச் சாருமாயின் சிவமாயே நிற்பதாகும். அந்நிலையில் அது `போதன்` எனப்படும்.
`ஆவர்` என்னாது ``ஆயிட்டிருப்பர்`` என்றதனால், `அதுவே உயிர் அடையும் முடிநிலைப்பயன்` என்பது விளங்கிற்று. `இத்தகைய பெருநிலைக்கு உரியதாகிய உயிர் அநாதியே இழிநிலையை எய்தியதும், பின்னரும் அந்நிலையை உணராது அதிலே இருத்தலும் வருந்தத் தக்கன` என அதன் இழிபு குறித்தற்கு இழித்தற் குறிப்பில் வரும் பன்மையால், ``சீவனார்`` என்றார். `அவருக்கு உண்மையிலே பெரியோனாகிய சிவனை அறிதல் எளிதன்று` என்றற்கு, ``சிவனார்`` என்றார். ``இல்லை`` என்பதன்பின் `ஆயினும்` என்பது வருவிக்க.
சீவன் சிவனை அறிதல் தனது அறிவினுள்ளேயாகும். அது `சிவன் நான்` எனப் பாவிக்கும் சிவோகம் பாவனையாம்.
``யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால்,
உன்னை `நான்` என்று பாவிக்கின்
அத்துவித மார்க்கம் உறலாம்``
என அருளிய தாயுமான அடிகள் வாக்கும், (``எங்கும் நிறைகின்ற சிவம்``)
``... ... ... ... நற்கமலை
ஊரிற் குறுகினேன்; ஓர்மாத் திரைஅளவென்
பேரிற் குறுகினேன் பின்``
என்னும் குமரருபர அடிகள் வாக்கும். (பண்டார மும்மணிக்கோவை, 24) இங்கு நினைவு கூரற்பாலன. இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி கொண்டது.
இதனால், `பசு` எனப்படுகின்ற சீவன் `போதன்` ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பஃறலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாமே.

பொழிப்புரை :

எண்குணங்களையுடைய கூத்தப்பிரான், மனத்தை விளக்காகக் கொண்டு பொருள்களை அறிந்து வருகின்ற, நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம், படந்தோறும் மணியாகிய விளக்கினையுடைய பலதலைப் பாம்புபோலவும், இரவிலும் பல விளக்குக்களை ஏற்றி வைத்துக் கொண்டு பொருள்களைக் காவல் செய்கின்ற கண்காணி போலவும் இருக்கின்றான்.

குறிப்புரை :

எனவே `சீவனார் ஒரு பொழுதும் சிவனாரை அறியா விடினும், சிவனார் சீவனாரை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருக்கின்றார்` என்பதாம். `ஆகவே அவரை அறியச் சீவனார் ஆவன செய்தல் வேண்டும்` என்றபடி. `சிவன் இயல்பாகவே பாசங்கள் இன்மை, இயற்கையுணர்வு, முற்றுணர்வு என்னும் குணங்களை உடையன் ஆதலின் அவன் தனக்கு அறிவிக்கும் துணையை வேண்டாது தானே எல்லாவற்றையும் அறிவான்` என்றற்கு, ``குண விளக்காகிய கூத்தப்பிரான்`` என்றும், வேறொரு விளக்கை வேண்டாது தனது மணிகளாகிய விளக்கினாலே விளக்கத்தைத் தரும் பல தலைப் பாம்பு போல உயிர்கட்குத் தான் அறிவைத் தருகின்றான்` என்றும், `உயிர்களை இமைப்பொழுதும் நீங்காது காண்கின்ற கண் காணியாய் உள்ளான்` என்றும் கூறினார். ``மன்னுயிர்க்கு`` என்னும் நான்கன் உருபு, `கரும்பிற்கு வேலி` என்பது போல, அதற்கு வினை யுடைமைப் பொருளில் வந்தது. `தான் தோன்றி` என்பது `தானே தோன்றுதலையுடையவன்` எனப்பொருள் தருதல் போல, `கண் காணி` என்பது `கண் காணுதலையுடையவன்` எனப் பொருள் தந்தது. ``ஆகும்`` என்பதை நாகத்திற்கும் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிவன் சீவனை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருத்தலால் உரிய பொழுதில் அவன் சீவனுக்கு வெளிப்பட்டு அருளச் சீவன் என்பது போதனாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தான்ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தான்ஆய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

பொழிப்புரை :

சிவன் அறியாமையோடு விரவாது அறிவாயே இருப்பவன். அவன் சீவன்களின் அறிவில் பொருந்திச் சீவர்கள் அறிவனவற்றையெல்லாம் தான் உடனாய்நின்று அறிவன். அதனால் அவன் சீவன்களாகியும் இருப்பான். ஆகையால் இந்நிலையை உணர்கின்ற சீவன் தானும் அச்சிவனேயாய் நிற்கும் ஆதலால், அத்தகைய சீவனே யாதும் அறியாத இருள் நிலையும், பொறிகளின் வழிப்பட்டு உலகை ஏகதேசமாய் அறிகின்ற மருள் நிலையும் ஆகிய இவற்றினின்றும் நீங்கிச் சிவனைப் போல எங்கும் வியாபகமாய் நின்று அறியும் நிலையை எய்தி, `போதன்` எனப்படுவதாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. பின் இரண்டு அடிகளால் சீவன் வியாபக நிலையை எய்திப் போதனாவதற் குரிய இயைபு கூறப்பட்டது. அவற்றுள் ``அறிவாய் அறிவன், சீவனு மாகும்`` என்னும் பயனிலைகட்கு, `சிவன் என்னும் எழுவாய் வருவிக்க. ``சீவனும் ஆகும்`` என்றதனால், `அவ்வாறு ஆகின்றவன் சிவன்` என்பது தானே அமைந்தது. அலவன், கலுழன், கடுவன் முதலியன போல, `சீவன்` என்பது அஃறிணைப் பெயர். அவைகளைச் சுட்டிய ``அவற்றினுள்`` என்பது செய்யுளாகலின் முன் வந்தது. வேறு தொடராய் நிற்றலால் ``நீங்கியவன், போதன்`` என்பன திணை வழு ஆகாமை அறிக.
இதனால், சீவன் போதனாதற்குரிய இயையும், போதனார் நிலையது இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.

பொழிப்புரை :

`தத்துவங்கள் சடம்` என்று அறியாமல், அவை களையே யானாக மயங்கிக் கிடந்த எனக்குச் சிவபிரான் தனது அருளைப் பற்றி நின்று அவ்வுண்மையை நான் உணர்ந்தபின் அவ்வாறு உணர்த்திய அவன் தத்துவங்கட்கு அப்பாற்பட்டு நிற்றலையும் உணர்ந்தேன்.

குறிப்புரை :

அதற்கு முன்னே, `நான் தத்துவங்களின் வேறானவன்` என்பதை உணர்ந்தமை சொல்லவேண்டாவாயிற்று. இவ்வாற்றால் `பாசம், பசு, பதி` என்னும் முப்பொருளின் இயல்புகளை உணர்ந்தமை போந்தது. `இவ்வாறு உணரும் பொழுதே சீவன் போதனாம்` என்பது குறிப்பு.
அருளால் அறிதல், அருள்வழியாக அறிதலாம். அருளே `பதிஞானம்` எனப்படுகின்றது. பாசஞான பசுஞானங்களின் நீங்கிப் பதிஞானத்தைப் பெற்று அது வழியாக எல்லாவற்றையும் அறிந்த வழியே உண்மை இனிது விளங்குவதாகும்.
``அருளால் எவையும் பார் என்றான்; அதை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி``
என்றருளிய தாயுமான அடிகள் (ஆனந்தக் களிப்பு) வாக்கையும் நோக்குக.
``ஆறாறு`` என்பது தொகைக் குறிப்பாய் அத்துணையான தத்துவங்களை உணர்த்திற்று. சொற்பொருட் பின் வருநிலையணி.
இதனால், `போதமாவது இஃது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சிவமா கியஅருள் நின்றறிந் தோரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவதறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.

பொழிப்புரை :

பிற ஆகமங்களிலன்றிச் சைவாகமங்களில் சொல்லப்படுகின்ற தத்துவங்களின் உயர்வை உணர்ந்து அவற்றைத் தெளியமாட்டாதவர் சிவமுதற் பொருளையும், அதனது ஆற்றலின் சிறப்பையும் உணர்ந்து அதிலே பழகியறியார். அதனால் அவர் உயிர் பஞ்ச மலங்களால் போதம் இழந்து நிற்றலையும் உணர மாட்டார். பிற பிற சமய நூல்களில் எல்லாம் சொல்லப்படுகின்ற தவங்களைச் செய்து, தாம் அடையவேண்டிய பயனை அடையாது இளைக்கின்றவ ராகின்றனர்.

குறிப்புரை :

``சிவமாகிய அருள்`` என்றதனை இரட்டுற மொழிந்து, `சிவம்தான் அதுவாகிய அருள்` என்றும், தான் சிவமே ஆகிய அருள்` என்றும் இரு பொருள் கொள்க. கொள்ளவே சிவமே அருளாயும், அருளே சிவமாயும் நிற்றல் பெறப்படும். ``அறிந்து ஓரார்`` என்பதனை, `ஓர்ந்து அறியார்` என மாற்றியுரைக்க. இந்நிலை சைவ தத்துவத்தை உணர்ந்தார்க்கல்லது. `ஏனையோர்க்கு உணரவாராது` என்பதே முதல் அடியால் கூறப்பட்டது.
ஆன்ம லாபத்தை அடையவொட்டாமல் ஆன்மாவைத் தடுப்பனவாகிய மலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி - என ஐந்து உளவாதலையும் அவர் அறியமாட்டார். அதனால் அவற்றை நீக்குமாற்றினையும் அறிந்து அவ்வழியில் முயலார். பிற சமயங்களில் சொல்லப் பெறுகின்ற தவங்கள் சிவ ஞானத்தைப் பயவா ஆதலின் அவற்றைச் செய்வோர் சிவனது திருவருளை அடைதலாகிய தலையாகிய பயனை எய்தாது பிறவிக் குழியினின்றும் ஏறமாட்டாதவராவர் என்பதாம். ``தலைப்பறிகின்றார் என்றது தலைப்பறியை எய்துகின்றார் எந்றபடி. தலைப்பறி - தலைபோலும் முடிநிலைப் பயனை இழத்தல். நவம் - புதுமை. அது பிற நூல்களில் காணப்பபடாத சிறப்பினைக் குறித்தது. ஈற்றடியை முதலில் வைத்துப் பொருள் கொள்க.
இதனால், போதராகாதாரது இயல்பு கூறும் எதிர் மறை முகத்தால் போதன் ஆமாறும், அதன் உயர்வும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார்
நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான்
நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

பொழிப்புரை :

நாளும் நாளும் தம்பால் நிகழ்வன யாவும் சிவ பெருமான் நிகழ்த்துவிக்க நிகழ்வனவே யாதலையும் ஊன்றியுணரார்; அங்ஙனம் அவன் நிகழ்த்துவித்தல் தாம் செய்த வினையின் பயன்களைத் தமக்குத் தனது அருள் காரணமாக ஊட்டுவித்தலே யாதலையும் கேட்டல் சிந்தித்தல்களின்வழி எண்ணிப்பாரார். சிவன் தனது அருளைத் தான் நேரே வழங்குதல் மேற்சொல்லிய உண்மைகளை ஆசிரியரது அருளால் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர் கட்கே என்பதையும் எண்ணமாட்டார். யார் எனில், நாள்தோறும் முன் மந்திரத்தில் கூறிய ஐம்பாசங்களின் வழியே உழைத்து நாட்களைக் கழிக்கின்றவர் என்க.

குறிப்புரை :

``நல்லோர்`` என்பதற்கு, `கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர்` என மாதவச் சிவஞான யோகிகள் உரைத்ததனை (சிவஞான போதம், மங்கல வாழ்த்து) உன்னுக. சொற்பொருட் பின்வரு நிலையணி.
இதனுள், \\\"வினை`` என்றது ஐம்புல நுகர்ச்சிக்கு ஆவனவற்றைத் தேடலும், அவற்றை நுகர்தலுமே யாகலின் அதனை வெறுத்துக் கூறியதனால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.
சிற்பி