ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை


பண் :

பாடல் எண் : 1

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.

பொழிப்புரை :

ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். எனவே அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும். ஆயினும் அவ்வாறின்றி ஒரு சாணுக்குமேல் கூடுதலாக ஒரு முழ ஆழம் உள்ளது. (குளம் - முகம். ஆழம் கழுத்திற்குக் கீழ் மூலாதாரம் வரை உள்ள இடம்.) மேற்குறித்த குளத்தில் ஐந்து கொடிய மீன்கள் உள்ளன. (அவை அந்நீர் வாழ் உயிரை அமைதியாக வாழ விடாமல் அலைக்கழிப்பன. மீன்கள், (ஐம்பொறிகள்) இந்த நிலைமை எமக்குந்தான் உள்ளது. இதனை அறிந்த ஓர் வலைஞன் எம்மிடத்தில் இரக்கங்கொண்டு வலையைக் கொணர்ந்து வீசினான். மீன்கள் தப்ப முடியாமல் அவ்வலையில் அகப்பட, வலைஞன் அவைகளைத் தான் எடுத்துக் கொண்டான். (சிவன் கருணை கூர்ந்து தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்.) அதனால் யாம் துயர் ஒழிந்தோம்.

குறிப்புரை :

எனவே, ஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்றதாயிற்று. ``வட்டம்`` என்பதன் பின் `ஆய்` என்பது வருவிக்க. ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் ஆகையால் அதனையே மனித உயிர்க்கு இட மாகக் கூறினார். எனினும் ஏனைய பகுதிகளை, `குட்டம்` என்பதனால் தழுவினார். குட்டம் - ஆழம். `பரதவன்` என்பது இடைக் குறைந்து நின்றது. அவனது சிறப்புணர்த்தும் `ஓர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `இடுதல்` அதன் காரியம் தோன்ற நின்றது. ஏதம் - துன்பம்.
இதனால், `ஐந்திரியங்களை அடக்கும் முறைகளுள் நேரிதாவது` இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறுமவன் றானே அமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.

பொழிப்புரை :

நாம் நடத்தினால் நடந்து, கிடத்தினால் கிடப் பதாகிய உடம்பை நம் விருப்பத்தின் படியே நடத்திட ஒட்டாது, அதினின்றும் எழுகின்ற ஐந்து இந்திரியங்களும் கிளர்ச்சி செய் கின்றன. அக்கிளர்ச்சியை அடக்குபவனே மனிதருள் தேவனாவான். அவ்வாறின்றி, அக்கிளர்ச்சியின் வழிப்பட்டு நமது உடம்பாகிய ஒரு மாமிச பிண்டத்துடன் இன்னொரு மாமிச பிண்டத்தை அணைத்து இன்பம் அடைய விரும்புவனவாய் உள்ளன தமது மனங்கள். அந்த மனத்தின் வழியே நாம் நடந்து கொண்டிருந்தால் நமது உடம்புகள் அவற்றிற்கு வரையறுத்த நாள் வரையில் நடந்து பின்பு வீழ்ந்துவிடும்.

குறிப்புரை :

`பின்பு நாம் பெறுவது யாது` என்பது குறிப்பெச்சம். `எனவே, உடம்பு நடக்கும் காலத்திலே மனத்தை அடக்கி அது வழியாக இந்திரியங்களையும் அடக்கிப் பயன் எய்துதல் வேண்டும்` என்பதாம். `அப்பயன் அமரராதல்` என்பது கூறப்பட்டது. ``அடக்கம் அமரருள் உய்க்கும்`` (திருக்குறள், 121) என்று அருளினமை காண்க. உயிருள்ள உடம்பை ``விடக்கு`` என்றார், அதனது இழிவு தோன்றுதற்கு எனவே, `அதனால் வரும் இன்பம் அருவருப்புடையது` என்பதாம். விடக்கு, மாமிசம். மற்றொரு விடக்காவது ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாம், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களையும் ஒருங்கேயுடைத்தாயது இணை விழைச்சு இன்பமாகலின், அதனையே விலக்கினார். விலக்கவே ஏனை இன்பங்கள் தாமே விலக்குண்டன. ``சிந்தை`` என்பதற்குப் பின், `பின்` என்பது வருவிக்க. ``நடக்கும்`` என்னும் பயனிலையை இறுதியிற் கூட்டி, அதற்கு `அவ்விடக்கு` என எழுவாய் வருவிக்க. ``நடக்கு மளவும்`` என்பதற்கு உண்மைக் காரணமாகாத உயிர்ப்பினை எழுவாயாக இயைபின்றி வருவிப்பாரும் உளர்.
இதனால், `உடம்புள்ள பொழுதே இந்திரியங்களை அடக்கி உயர்நிலை பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :

`ஐம்பொறிகளையும் அடக்குதல்` என்பதற்கு, `அவற்றைக் கெடுத்தல்` எனப்பொருள் செய்து, `அவற்றை அடக்கு, அடக்கு` என மாணாக்கர்க்கு வலியுறுத்திக் கூறும் ஆசிரியர் உண்மை ஞானாசிரியர் ஆகார். ஏனெனில் அவ்வாறு அடக்கி உயர்நிலை பெற்றவர் வானுலகத்திலும் இல்லை. அதற்குக் காரணம் ஐம் பொறிகளைக் கெடுத்தொழித்தால் அவற்றால் அறிந்துவருகின்ற ஆன்மா அறிவற்ற சடம்போல் ஆகிவிடும். அதனையறிந்து யான் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே பெறுகின்ற ஞானத்தை அறிந்தேன்.

குறிப்புரை :

அந்த ஞானமாவது அவற்றை மனம் சென்றவழிச் செல்லவிடாது, அருளாசிரியர் அறிவுறுத்திய வழியிற் செல்லச் செய்தலாம். அருளாசிரியர் அறிவுறுத்தல் பின்வருமாறு அமையும்.
``ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே``-தி.2 ப,44 பா.4
`` ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே`` -தி.2 ப,44 பா.7
``ஆமாத்துர் அம்மானைக்
கேளாச்செவியெல்லாம் கேளாச் செவிகளே``-தி.2 ப,44 பா.8
``கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை`` -தி.4 ப,9 பா.2
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப,9 பா.3
``வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்`` -தி.4 ப,9 பா.5
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணியாய் வந்தது.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்குதல் பற்றிய தவறாம் முறைமையை விலக்கி, நேரிய முறைமை தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஐந்திந்திரியங்களாகிய மத யானைகள் தறியில் கட்டுண்ணாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல் புடையன. அதையறிந்து நான் அவைகளை அடக்கி நேரிய வழியில் செலுத்துதற் பொருட்டு ஞானமாகிய அங்குசத்தைப் பயன் படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமான உணவை அளவு கடந்து உண்டு, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.

குறிப்புரை :

`அந்நிலை சொல்லுக் கடங்காது` என்பது குறிப் பெச்சம். `ஐந்திந்திரியமாகிய வேழம்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. இல்லையேல், `வேழம் எனப்பட்டன யாவை` என்பது விளங்காமை யறிக. ``உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்`` (திருக்குறள், 24) என இவ்வாறு வருதலே மரபாகலின், அறிவென்னும் கோட்டையை வைத்தேன் என்பது பாடமாகாது. `அறிவென்னும் தோட்டியை வைத்தேன்` என்பதே பாடம் என்க. அறிவு, ஞானாசிரியரால் அருளப் பட்ட அறிவென்க. அந்த அறிவு முதிர்ந்து முறுகாமையால் கூர்மை செய்யப் பெறாத தோட்டிபோல் ஆய்விட, யானைகள் அதற்கு அடங்காது ஓடின என்க. இவ் யானைகட்கு உணவாவன அவற்றிற்குரிய புலன்கள். அவற்றை உண்ணுந்தோறும் அவாவே மேன்மேல் எழுதலால் ``கொழுத்தன`` என்றார். பின் வந்த ``வேழம்`` என்பது, `அவை` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பெருங்கேடு மண்டி`` என்பதைப் பின்வந்த ``வேழம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கேடு`` என்றது கேடு பயக்கும் குணத்தை. பாட்டின் இறுதியில், `பெரிது` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `அருளாசிரியர் அறிவுறுத்தவழியால் ஐந்திந் திரியங்களை அடக்க மாட்டாது புறக்கணிப்பாய் இருப்பின் அவற்றால் பெருங்கேடு விளையும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

பொழிப்புரை :

இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கி யிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.

குறிப்புரை :

``ஐந்து`` என்பன தொகைக் குறிப்பு, அவை முன்னை மந்திரங்களின் தொடர்ச்சியால் `யானை` எனப் பொருள் தந்து, உருவக வகையால் இந்திரியங்களை உணர்த்தின. ``அகலிடம்`` என்றது ஆகுபெயரால், உலகியல் எனப் பொருள் தந்து அறத்தை உணர்த்திற்று. பின்னர் ``தவம்`` என வருதலால் அறம் இல்லறமாயிற்று. பதம் - பதவி. அருள் - சிவஞானம். `இவை யாவும் பொறியடக்கம் இல்லாத பொழுது விளையா` என்றற்கு, பொறியடக்கத்தையே இவையாக உபசரித்துக் கூறினார். `இல்லின்கண்` என ஏழாவது விரிக்க. முன்மந்திரத்தில் ``அறிவென்னும் தோட்டி`` என்றதனால், இங்கு ``இல்`` எனப்பட்டதும் அஃதேயாதல் விளங்கும். இங்கும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், எல்லா நன்மைகட்கும் இந்திரிய அடக்கம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

`உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின்மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற் றொன்றின்மேல் தாவி அதனைப் பற்றிக்கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓடவிடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாகும். `இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.

குறிப்புரை :

பிதற்றுவது வாய் ஆதலின், அதற்கு ஏற்புடைய `நூல்` என்பது கொள்ளப்பட்டது. நினைதல் அவற்றின் பொருளையேயாம். ``பேய்த்தேர்`` என்பதன் பின் `ஆதலை` என ஆக்கமும் உருபும் விரித்து முதற்கண்வைத்து உரைக்க. ``விரித்த பொருள்`` எனப் பின்னர் வருதலின், `பேய்த்தேராவனவும் அவையேயாதல் தெளிவு. `பிரபஞ்சம்` என்பது `விரிவுடையது` என்னும் பொருளதாதலின் அது பற்றி, ``விரித்தபொருள்`` என்றார். ``பொருள்`` என்றது அவைபற்றிய உணர்வை. ஏனெனில் பெருக்கில் பெருகுவதும், சுருக்கில் சுருங்குவதும் அதுவேயாகலின்.
இதனால், `இந்திரிய அடக்கமாவது மன அடக்கமே` என அதன் உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.

பொழிப்புரை :

இன்பத்தை நுகர்ந்து இனிதே வாழ்தற்கு உரியன வாகிய உயிர்கள் அவ்வாறின்றித் துன்பத்திற் கிடந்து துயர் உறுதலை அறிந்து அவை அத்துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய வழியை அமைத்துக் கொடுத்து, அதனாலே உறவாதற்குப் பொருந்தியவன் தானேயாய் நிற்கின்ற இறைவனைப் புகழ்ந்து போற்றி அதனால் தானும் என்றும் அழியாப் புகழைப் பெறுகின்ற அறிவன், ஐம்பொறிக ளாகிய பாம்புகள் ஐந்தும் தாம் படம் எடுத்து ஆடுகின்ற ஆட்டத்தை விடுத்துத் தமது புற்றிலே சென்று அடங்கிக் கிடக்கும்படி அடக்கி விடுவானாயின், அதன்பின், அவனும் துளையை உடைய அந்தப் புற்றுவழியாகவே இன்பம் பெற்று அமைதியை அடைவான்.

குறிப்புரை :

உயிருக்கு, ``இன்னுயிர்`` எனப் புணர்த்த அடை கருத்துடை அடை. அதனை முதற்கண்கூட்டி யுரைக்க. ``வழி`` எனப் பின்னர் வருதலின் முன்னர் வாளா, ``வைத்த`` என்றார் ஆகலின், அதனை முன்னரும் கூட்டி `வழி வைத்த ஈசனை` என்க. `ஈசனைப் புகழும் புகழோன்` என ஒருசொல் வருவித்து முடிக்க. கிளைக்கு ஒன்றுதல் - சுற்றம் ஆதற்குப் பொருந்துதல். ``அளைக்கு`` என்பது, `அளைக்கண்` என்பதன் மயக்கம். `கேடில் புகழோன் நாகம் அஞ்சு அளைக்கண் ஒன்ற ஆடல் ஒடுக்கத் தூங்கும், எனக் கூட்டி முடிக்க. `தூங்கும்` எனச் செய்யும் என் முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ``வழி`` என்றதும், ``அளை`` என்றதும் சுழுமுனையை என்பது தோன்றுதற் பொருட்டு, ``துளைக்கொண்டது அவ்வழி`` என்றார். `அவ்வழியானே` என உருபும், தேற்றேகாரமும் விரிக்க. வினையொடு தொகும் மூன்றாவதன் தொகையிலும் சிறுபான்மை வல்லினம் மிகாது. இனி, `அவ்வழித் தூங்கும்` எனப் பாடம் ஓதுதலும் பொருந்தும். படைத்தல் - உண்டாக்கிக் கொள்ளுதல். ``படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும் - உடைப்பெருஞ் செல்வராயினும்``(புறநானுறு, 188) என்றது காண்க. மேல், `ஐந்திந்திரியங்கட்கு இடமாவது ஆன்ம அறிவு` எனக்கூறி, இங்கு, `அவற்றிற்கும் இடம் சுழுமுனை நாடி` என்றது, ``நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே` (புறநானுறு, 186) என்றதில், நெல் நீர்போல நேரே உணவாகாதாயினும், வழிமுறையால் உணவாதல் பற்றிப் பான்மை வழக்கமாகக் கூறியது போல, யோகப் பயிற்சியால் வழிமுறையில் இடமாதல் பற்றிக் கூறியதாகலின் முரணில்லை என்க. யோகி தூங்குதற்கு இடமும் அதுவாகக் கூறியதும் அன்னதே.
இதனால், வாசியோகமும் ஐந்திந்திரியமும் அடக்குதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

பொழிப்புரை :

பூத காரியங்களாகிய ஐம்புலப் பொருள்கள்மேல் மதங்கொண்டு செல்கின்ற ஐந்து இந்திரியங்களாகிய யானைகளை அவற்றின் வழியே செல்கின்ற உயிரினது அறிவு, தான் அடையத் தக்க தாகிய திருவடி ஞானமாகிய தறியை அடைந்து அதன்கண் கட்டிவிட, அதனைக் கண்டு, அறிவர் பலரும் அறிந்து அடைகின்ற அருளானந் தத்தை இறைவன் தருவானாயின், அதுவே, யாவரும் மேற்கொள்ளத் தக்க முதல் நூல் விதியின் பயனாகும்.

குறிப்புரை :

``பூதங்கள்`` கருவியாகு பெயர். `பூதங்களின் மேல் பாய்ந்தனவாகிய ஐந்தினையும் ஞானத் தறியினில் பூட்டிட்டு, அருள் செய்யில் அதுவே மேலை விதி` என இயைத்துப் பொருள் கொள்க. ``ஐந்து`` என்பது தொகைக் குறிப்பாய் ஐந்து இந்திரியங்களைக் குறித்தது. படர்தல் - செல்லுதல். ``ஒளி`` என்றது ஆன்ம அறிவை. சார்ந்திடும் - சாரத் தக்க. ஞானத்தை, ``தறி`` என்றதற்கு ஏற்ப இந்திரியங்களை `யானை` என்னாதது ஏகதேச உருவகம். `ஒரு கம்பத்திலே இரண்டு யானைகள் கட்டப்படுதல் கூடாது` என்பது உலகியல். அதற்கு மாறாக `ஒரு தறியில் ஐந்து யானைகளைக் கட்டல் வேண்டும்` என்றதனால், இத்தறி உலகத்தில் இல்லாததோர் அதிசயத் தறியாயிற்று. `பூட்டியிட்டு` என்பது குறைந்து நின்றது. அதனை, `பூட்டி யிட` எனத் திரித்துக் கொள்க. `ஆய்தல்` என்னும் பயனிலைக்கு `இறைவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. வேய்தல் - தலையிற் சூடிக் கொள்ளுதல். அஃது இங்கு மேற்கொள்ளுதலைக் குறித்தது. விதியின் பயனை, ``விதி`` என்றது ஆகுபெயர். தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், ஐந்து இந்திரியங்களை அடக்கும் முறையும், அடக்கினால் விளையும் பயனும் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.

பொழிப்புரை :

உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல் களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம் மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில் களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும்.

குறிப்புரை :

``படர்க்கின்ற`` என்பதில் உள்ள ககர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது. `சிந்தையைப் பைய ஒடுக்குமாறு எவ்வாறு` என்பதற்கு விடை மூன்றாம் அடியில் தரப்பட்டது. ஆகவே, `சிந்தை குறிவழி நோக்கி ஒடுங்குமாறு பைய ஒடுக்கி ஆம்` என வினை முடிபு செய்தல் கருத்தாயிற்று. `குறியல்லாததனைக் குறியாகக் கொண்ட சிந்தை உண்மையைக் குறியை நோக்கில்` என்பது மூன்றாம் அடியில் கூறப்பட்டபொருள். குறி- குறிக்கோள். உண்மைக் குறி, சிவன். `கோயில்` எனப்பின்னர் வருதலின், ``வடக்கு, தெற்கு`` என்பனவும் ஆகுபெயராய் அத்திசையில் உள்ள கோயில்களையே குறித்தன. ``வடக் கொடுதெற்கு`` என்றது, `நிலம் முழுதும்` என்றபடி. `அனைத்துக் கோயில்களும் மனக்கோயிலாகவே அமையும்` என்றது, `அவற்றில் எல்லாம் சென்று வழிபடுவார்க்கு அளிக்கும் பயன்களையெல்லாம் சிவன் இவர்க்கு இருந்த இடத்தில்தானே அளிப்பான்`` என்றதாம்.
c

பண் :

பாடல் எண் : 10

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.

பொழிப்புரை :

வாழ்நாளில் கழிவன சில நாழிகைகள் போலத் தோன்றுகின்றன. ஆயினும் அவை உண்மையில் சிலவும், பலவுமான நாட்களாய் விடுகின்றன. நெடுங்காலம் நிற்பதுபோலத் தோன்றுகின்ற உடம்பு நீர்மேல் எழுத்துப்போல விரைய மறைவதாகின்றது. இதனை உணர்ந்து, `அறிவுடையேம்` என உங்களை நீங்களே மதித்துக் கொள் கின்ற உலகீர், இளமையிற்றானே ஐம்புல ஆசையை வென்று, அப்புலன்களுக்குச் சார்பாய் உள்ள பொருள்களைத் துறந்து விடுங்கள். இல்லையேல், அவ்வாசையால் விளையும் வினைகள் மலைபோல வந்துவிழும்; அவைகளைத் தாங்க இயலாது.

குறிப்புரை :

``சென்றன`` என்பதைப் பின்னரும் கூட்டுக. பிற பொருள்களைப் பற்றுதற்குக் கருவி உடம்பாதலின் அதன் நிலை யாமையே முதற்கண் உணரத்தக்கது ஆகலின், ``பொருள்`` என்றது அதனையே குறித்தது.நீர்மேல் எழுத்து ஒத்து ``நின்றது`` என்றது, `என்றும் நிற்பதாக நினைக்கப்படுகின்ற உடம்பு. நிற்கும் நிலை நீர்மேல் எழுத்து நிற்பது போன்றதுதான் என்றபடி. எனவே, நிலையில்லாததனை, ``நின்றது`` என இகழ்ச்சியாகக் கூறியதாம். ``குன்று`` என்பது உவமையாகு பெயராய், அதுபோலும் வினைக்கூட்டத்தைக் குறித்தது. அதில் - அந்நேரத்தில். ஏகாரம், எதிர்மறை வினாவாய் வந்தது.
இதனால், `அறிவுடையராயினார் ஐந்திந்திரியங்களை இளமைக் கண்ணே அடக்கி நலம்பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.

பொழிப்புரை :

சிவனது திருமேனியைத் துதிக்குமாற்றால் பருப் பொருள்களாய் உள்ள அவைகளைச் சார்ந்துள்ள புலன்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச்செலவினின்றும், மீட்டு, மீண்டும் அதனையே துதி. அங்ஙனம் துதித்தால், அப்பெருமானை அவனது ஆனந்தத்தைப் பொழிகின்ற மனத்திலே ஒன்றியிருக்கச் செய்தலும் கூடும்.

குறிப்புரை :

`புனிதன் திருமேனியைப் போற்றிசைத்துப் புலன் ஐந்தும் புத்தியால் மீட்டுப் போற்றிசெய்` என்க. பருப்பொருள்மேல் செல்கின்ற மனத்தைப் பருப்பொருள் வழியாகவே மீட்டலும், நிலை நிறுத்தலும் வேண்டும் என்பது பற்றி, `திருமேனியைப் போற்றி செய்து மீட்டுப் போற்றி செய்` என்றார். ``புத்தியால்`` என்றது, `இஃதே அறிவாம்` என்றபடி. ஊற்றுகை - ஊற்றுதல்; பொழிதல், தொழிற் பெயர். இதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஊற்றுகை உள்ளம் - ஊற்றுதற்கு இடமாய் உள்ள உள்ளம். உம்மை, சிறப்பும்மை.
இதனால், `திருமேனி வழிபாடு இந்திரிய அடக்கத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.

பொழிப்புரை :

சிவபெருமானது உருவத் திருமேனியினுள்ளே படிந்து நிற்றற்குரிய மனத்தை அங்ஙனம் நிற்க ஒட்டாமல் நச்சரித்துப் பெயர்க்கின்ற ஐம்புலன்களாகிய குறும்பரது தீச்செயலை உலகவர் யாரும் உணர்வதில்லை. அதனால் அங்ஙனம் உணராத நிலையில் இருந்து கொண்டே கவலையின்றி ஒருவரோடொருவர் நகையாடிச் சிலவும் பலவுமாகிய பேச்சுக்களைப் பேசி அவர் பொழுது போக்குவாரேயானால் அவரது செயல் தனது நிலையான இயற்கைப் பொலிவுடன் விளங்கத் தக்கதாகிய மலையை நிலையாது நீங்கும் அழகையுடைய மேகங்கள் வந்து சூழ்ந்து மறைத்தல் போல்வதாகும்.

குறிப்புரை :

தரித்தல் - நிலையாக நிற்றல். `சகளத்தினுள்ளே தரிக்கின்ற நெஞ்சத்தை அரிக்கின்ற ஐவர்` ``பேசில்`` - என்றது, `பேசுகின்றனர்` என்பதை அனுவாத முகத்தாற் குறித்தது. வரி - அழகு. மேகத்தின் அழகு சிறிது பொழுதில் அழியக்கூடியது. `அதனால் சூழப் பட்டது` என்றதனால், மலையினது அழகு நிலைத்து நிற்பதாதல் குறிக்கப்பட்டது. `உயிர் சிவத்தில் அழுந்திப்பெறும் அழகு இயற்கை யானது; ஆதலின் அஃது அழியாது` என்பதையும், `ஐம்புலன்களின் மேல் சென்று பெறும் அழகு செயற்கையாதலின் அது சிறிது பொழுதில் அழியும்` என்பதனையும் குறித்தவாறு. ``மைசூழ்வரை யாம்`` என்றாரேனும், `மை வரையைச் சூழ்தலாம்` என்றலே கருத்து என்க.
இதனால், சிவனது உருவத் திருமேனியை இடைவிடாது நினைத்தலே ஐந்திந்திரியங்களை அடக்கும் முறையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

பொழிப்புரை :

`ஐந்திந்திரியங்களை அடக்குதல் நம்மால் ஆகிற காரியம் அன்று` என இளைத்து, அதனைக் கைவிடுதற்குக் காரணம் சிறிதும் இல்லை. ஏனெனில், ஐந்திந்திரியங்களின் அவாவிற்குக் காரணமான நிலையற்ற பொருள்களில் பொருந்தியுள்ள புலன்களும் ஐந்திற்குமேல் இல்லை. அந்த ஐந்தையும் அடக்குதற்குச் செய்யத் தக்க உபாயமும் ஒன்றே ஒன்றுதான். அஃது ஒருபொழுதும் நம்மை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாது, எப்பொழுதும் நம் உள்ளத்திலேயே வீற்றிருக்கின்ற சிவனை நல்ல இசைப் பாடல்களால் துதிப்பதுதான். ஆகவே, அதனைச் செய்து இந்திரியங்களை அடக்கி, இன்பம் எய்துங்கள்.

குறிப்புரை :

கைவிடுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது. ``ஒன்று`` என்றது `சிறிது` என்னும் பொருட்டாய் அவ்வளவிற்றான காரணத்தைக் குறித்தது. `துதித்தலுக்கு இயற்பாக்களிலும் இசைப் பாடல்களே சிறந்தன` என்றற்கு, ``இசையினால் ஏத்துமின்`` என்றார். ``அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே`` என அப்பரும் அருளிச் செய்தார். (தி.4 ப.77 பா.3) ஒருவர் ஒரு செயல் அன்றிப் பல செயல் செய்தல் உலகியலாய் இருக்க, `ஐவர் ஐந்து செயலே செய்பவராகின்றனர்` என அவரது மெலிவு உணர்தற்கு, ``ஐவருடைய அவாவினில் தோன்றிய புலன்களும் ஐந்தே`` எனவும், `அவரை வெல்லுதற்குரிய உபாயமும் ஒன்றே; அதுவும் எளிதானதே` என்றற்கு, ``கருத்தினுள் எய்தியவனை ஏத்துமின்`` எனவும் அருளிச் செய்தார்.
கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள நீர்உள;
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே.
எனப் பிற இடங்களிலும் இங்ஙனம் எளிமையை உணர்த்துதல் காண்க. ஐந்திந்திரியங்களை, ``ஐவர்`` என்றதுபோலப் பொய்ப்பொருள்களை அஃதாவது நிலையாத பொருள்களை, ``பொய்வர்`` என்றார். ``ஐவர்`` என்பதிற்போல, ``பொய்வர்`` என்பதிலும் வகரமெய் பெயர் இடை நிலையாய் வந்தது. ``உடைய`` இரண்டும் குறிப்புப் பெயரெச்சங்கள். முன்னதனை, `ஆறாவதன் சொல்லுருபு` என்றலுமாம்.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்கும் முறை அதனது எளிமை கூறி, `அதனால் அதனைத் தப்பாது செய்து பயன் பெறுங்கள்` என வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
சிற்பி