ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி


பண் :

பாடல் எண் : 1

உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``அசற்குருவாய்`` என்னும் பயனிலையை ``மூடன்`` முதலிய எல்லாவற்றோடும் தனித்தனி கூட்டுக. ``உணர்வு`` என்றது நல்லுணர்வை. `ஒன்று` இரண்டும் `சிறிது` என்னும் பொருளன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுக்கப்பட்டன. உண்மை - பொருள்களின் உண்மையியல்பு. `தத்துவம்` எனப்படுவது இதுவே. கணு - எல்லை, என்றது ஏகதேசத்தை. எனவே, `சற்குரவ ராவார் வேதாகமங்களை முற்ற உணர்ந்திருப்பர்` என்பது போந்தது. பரநிந்தை, புறங்கூறல். அணு - உயிர். அதற்கு இயற்கையாய் உள்ளது அறியாமை. அஃதாவது உணர்த்தினும் உணர மாட்டாமையாம். ``கொடிறும் பேதையும் கொண்டது விடா`` (தி.8 போற்றித் திருவகவல், 63) என்று அருளிச் செய்தது காண்க. `கூறப்பட்ட குற்றங்களுள் ஒன்றையே உடையராயினும் அவர் சற்குருவாகாது, அசற்குரு வேயாவர்` என்றற்கு `அசற்குருவாமே` என்பதனைத் தனித்தனி கூட்டிக் கொள்ள வைத்தார். அசத்தை உணர்த்துவோன் அசற்குரு.
இதனால், `அசற்குருவாவரிடத்துக் காணப்படும் குற்றங்கள் இவை` என்பது கூறி, அவர் `இன்னார்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.

பொழிப்புரை :

சற்குரவராதற்கு உரியன பலவற்றை உடையோரும் தமது உபதேசத்தை உணரும் தகுதியில்லாதோர்க்கு அவர் வழியாகப் பெறப்படும் சில பயன் கருதி அவரை விலக்கமாட்டாராய் அவர்க்கு உபதேசம் செய்வாராயின், அவரும் அறியற்பாலனவற்றை அறியாத அறிவிலிகளாய், அசற்குரவராய் விடுவர்.

குறிப்புரை :

மந்திரம் முத்தி நெறிக்குரிய மந்திரங்கள். தந்திரம், வேதாகமங்களில் உள்ள ஞானப் பகுதிகள். மாயோகம் - சிவயோகம். ஞானம் - சிவஞானம். இவ்விடத்து உள்ள உம்மையை ``மந்திரம்`` முதலியவற்றோடும் கூட்டுக. ``பந்தம், வீடு`` என்றது, உண்மைப் பந்தத்தையும், உண்மை வீட்டையுமேயாம். `தரிசித்துத் தெளிவி யாதோர்` என இயைக்க. இவ்வினையெச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `தரிசித்தும்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பார்ப்பவர் - அறியத்தக்கவர். `பார்ப்பவரை` என்னும் இரண்டன் உருபு உயர்திணைக்கண் தொகுக்கப்பட்டது. செய்யா - செய்து. ``ஊண்`` என்றது உபலக்கணம். ``அந்தகர்`` என்றது அகநோக்குப் பற்றி.
இதனால், `சற்குரவர்க்கு ஆகாததொன்றினை உடையராயின் சற்குரவரும், அசற்குரவராவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.

பொழிப்புரை :

`தக்கது இன்னது; தகாதது இன்னது` என உணரும் உணர்வில்லாதவன் மூடன்` என்பது உலகம் அறிந்தது. ஆயினும், அவ்வாறு அவற்றை அறிந்தும் காமம் முதலிய குற்றங்களின் நீங்கி, நல்லவற்றைப் பற்றியொழுகும் நல்லொழுக்கம் இல்லாதவன் அறிவுடையவன் ஆயினும் அதிமூடன் ஆவான். இனிக்குற்றங்களின் நீங்கி வல்லவற்றையே கடைப்பிடித்தொழுகும் நல்லொழுக்கம் உடையனாயினும் நல்லனவற்றை மதித்து உவந்து ஏற்கும் பண்பின்றி அவற்றை உணர்த்துவோரையும் இகழ்கின்ற கீழ்மக்கட்கு நல்லுபதேசத்தைச் செய்வானாயின் அவனும் அறிவிலியேயாவான். ஆகையால் அத்தகையோனும் சற்குருவாகாது, அசற்குருவாயாவன்.

குறிப்புரை :

கலதி - கீழ்மகன். ``ஆமாறு`` என்றதனானே அதன் மறுதலைப் பொருளும் போந்தது. நல்லன தீயனவற்றை அறிய மாட்டாதவன் மூடனாதல் இயல்பாகவே நன்கறியப்பட்டதாயினும், அவற்றை அறிந்தவனினும் அறிந்தவாற்றில் நிற்கமாட்டாதவன் அவனிலும் பெருமூடன் ஆதலை வலியுறுத்தி ஓதுதற் பொருட்டே இயல்பாக அறியப்பட்டதனை அனுவாதமாக எடுத்தோதினார்.
ஓதி யுணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையிற் பேதையார் இல். -திருக்குறள், 834
என அருளினமை காண்க.
`கலதிகட்கு ஆமாறு அறிவிப்பின் அது பயன்படாது ஆகலின், அஃது அரும்பொருளை அழிவு செய்ததாம்` என்பதை,
``அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்``-திருக்குறள், 720
எனவும், `ஆகவே, அவ்வாறு அறிவிப்பவன் அறிவிலியாவான்` என்பதை,
``காணாதாற் காட்டுவான் தான்காணான்`` -திருக்குறள், 849 எனவும் அருளிச்செய்தார் திருவள்ளுவர். கோமான் - தலைவன். இங்கு, `தலைவன்` என்றது ஞானத்திற்குத் தலைவனாகிய சற்குருவை. ``அசத்தாகுங் குரவனே`` என்றது, `அசற்குருவே` என்றபடி. சற்குருவினின்றும் பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை.
இதனால், மேலது பிற சிலவற்றோடு ஒருங்கு வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும்
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

பொழிப்புரை :

சற்குருவாவான் தன்னை அடைந்த மாணாக்க னிடத்தில் உள்ள குற்றங்களை முதலில் நல்லனவற்றைக் கூறும் முறையால் நீக்கி அதன் பின்பே ஞானத்தை உணர்த்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாமலே ஞானத்தை உணர்த்தினால் தனது ஆசிரியத் தன்மையுங் கெட்டுத் தனது செய்கையே தனக்குத் தீங்காய் முடியும். அதனால் நாட்டில் புல்லரே தலையெடுப்பர் ஆதலின் அரசு நல்லரசாய் இருப்பினும் அதற்கும் கேடு விளையும். நாடும் தீய நாடாகி விடும். இதனைப் படைப்புக் காலத்திற்றானே சிவன் தனது ஆகமங்களில் சொல்லி வைத்துள்ளான்.

குறிப்புரை :

கற்பு - கல்வி. அது பின்னர் அம்முப்பெற்று, ``கற்பம்`` என நின்றது. `கல்வியாகிய கல்வி` என்றது, ஆசிரியர் கற்பியாது அவர் தாமே கற்ற சொந்தக்கல்வி` எனக் குற்றங்களைக் குறித்துநின்றது. குணம்போலக் குற்றம் பிறர்கற்பிக்க வேண்டாதுதானே தோன்றி வளர்வதாதலை அறிக. பாவம் - தன்மை. தனக்குத் தீங்காதலாவது, உணர்த்தப்பெற்றோரால் நன்கு மதிக்கப்படாமையும், உலகரால் பழியும் அடைதல்.
இதனால், கலதிகட்கு ஆமாறு அறிவிப்போர் அடையும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே.

பொழிப்புரை :

குருடர் சிலர், வேறு சில குருடருடனே சேர்ந்து வழிச் செல்வார்களாயின் எல்லோருமாக `முன், பின்` என்பதின்றி ஒருங்கே குழியில் விழுவதைத் தவிர வேறு என்ன நிகழும்! ஆகையால், சில குருடர்கள் வேறுசில குருடர்களுக்கு `நாங்கள் உங்கட்கு வழிகாட்டு கின்றோம்` என்றுசொல்லி அவர்கள் கையில் கோலைக் கொடுத்துத் தாங்கள் அக்கோலைப் பற்றிக் கொண்டு முன்னே செல்வாராயின், முதலில் வழிகாட்டும் குருடர் பாழ்ங்குழியில் வீழ்வர். பின்பு அவர்களால் அழைத்துவரப்பட்ட அந்தக் குருடர்களும் அந்தக் குழியிலே வீழ்வார்கள், (அது தான் நிகழும்.)

குறிப்புரை :

``முன்பின் அறவே`` என்பது முதலாக உள்ளவற்றை முதலில் கொண்டு உரைக்க.
இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.
`அஞ்ஞானிகள் சிலர் தங்களைப் போலவே அஞ் ஞானிகளாய் உள்ள சிலரைக் குரவராக மதித்து அடைவார்களாயின் இருவரும் பிறவிக் குழியில் விழுவதைத் தவிர வீடுபேறாகிய கரையை அடையார்; அவருள்ளும் குரவராய் நின்றவரே முதலில் பிறவிக் குழியில் வீழ்வர்` என்பது இதனால் குறிக்கப்பட்ட பொருள்.
ஆதல் - ஒன்றாதல். ``ஆகில்`` எனப் பின்னர் வருதலின் நான்காம் அடியில் முதற்கண் நின்ற குருடர் `ஆகிய குருடர்` என்பது விளங்கிற்று. அதன்கண் வந்த உம்மை இறந்தது தழுவிய எச்சம். முன் தந்திரத்தில் போந்த ``குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்`` என்னும் மந்திரத்தை இதனோடு ஒப்பிடுக.
இதனால், அசற்குரவராயினார் பிறரையும் கெடுத்தல் கூறப்பட்டது.
சிற்பி