ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்


பண் :

பாடல் எண் : 1

வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.

பொழிப்புரை :

மக்கள் தமக்கு வரையறுக்கப்பட்டு அமைந்த வாழ் நாள் இத்துணையது என்று அறியமாட்டாதவராய் அன்றாடம் உண்டு வாழ்வதேயன்றி, அடுத்துவரும் ஆண்டிற்கும் உணவின் பொருட்டான முயற்சிகளை ஓயாமற் செய்வதிலேயே மனம் அமைதியுற்று விடுகின்றனர். இஃது அவர் பிரார்த்த வினைவிளைவாகிய துன்ப நிலையே என்பதையும் அவர் சிறிதும் அறிவதில்லை. இந்தப் பொய்யான இன்பத்திலே அவர் வீழ்ந்து கெடுதல் ஓங்கி எரியும் விளக்கை இனிய உணவென்று கருதிச்சென்று அதில் வீழ்ந்து மடிகின்ற விட்டிற் பூச்சியின் செயலோடு ஒப்பதாகும். அந்தோ? இஃது அவர் ஓர் அறியாமை இருந்தவாறு!.

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். நாற்றுதல் - நாற்றங்காலில் நாற்றுவிடுதல். ஒளி, ஆகுபெயர். விட்டிலை ஒப்புமைபற்றி, `ஈயல்` என்றார். இதன் ஈற்றடியில் காணப்படும் பாட வேறுபாடுகள் சில.
இஃது யாக்கை நிலையாமையை அறியாது உழலுதல் நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 2

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

பொழிப்புரை :

நாள்கள் மிக விரைவாக வந்து வந்து போவதை அறிந்திருந்தும் பலர் அந்நாள்களை வாது செய்வதிலே கழித்து விடு கின்றனர். ஒழுக்கத்தில் நில்லாமல் வாதுசெய்வதனால் அவர் என்ன பயனை அடையப் போகின்றனர்! ஒரு பயனும் இல்லை. ஒழுக்கத்தில் நின்றும், இறைவன் திருவடியை வணங்கியும் வருவராயின் நாளடைவில் இறையன்பு தோன்றி வளர அவனை அவர்நேரே அறிந்து இன்புறுவர். அதனை அவர் அறிகின்றாரில்லையே!

குறிப்புரை :

``வாது`` எனப் பொதுப்படக் கூறினமையால் உலகியல் பற்றிய வாது, மெய்ந்நெறி பற்றிய வாது என்னும் இரண்டும் கொள்ளப் படும். அதுபின்னர் ``நீதியில் நின்று`` எனவும், ``நின்மலன் தாள் பணிந்து`` எனவும் கூறியதனாலும் விளங்கும். முன்னர் அவ் விரண்டையும் கூறினமையால், பின்னர் ``ஆதியை`` என எடுத் தோதினார். ``நின்றும், பணிந்தும்`` என்னும் வினையெச்சங்கள், ``அறியகில்லார்கள்`` என்பதில் உள்ள அறிதல் வினையோடு முடிந்தது. ஆகவே, ``அறியகில்லார்கள்`` என்பது `அறிதலைச் செய்ய கில்லார்` எனப் பொருள் தந்தது.
இது, மேற்கூறிய வினைத்துயரை அறிந்து அதனினின்றும் நீங்கும் வழியை எடுத்தோதி அதனை மனிதப் பிறப்பை எய்தியும் பெறாது கெடுகின்றவரது கேடு நோக்கி இரங்கியவாறு,
``பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்``
எனப் பின்னரும் இரங்குவார்.

பண் :

பாடல் எண் : 3

கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி
உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

நெல்லைக் கடனாகவேனும் வாங்கிக் குற்றி, குற்றிய அரிசியைக் கொண்டு ஒரு சாண் வயிற்றினுள் இருக்கும் சிறு கருவி களின் வேகத்தைத் தணிக்கும் முகத்தால் உடம்பைப் பாது காக்கின்றவர்களும் தங்களை `உயிர்` என்று சொல்லிக்கொண்டு திரி கின்றார்கள். அவ்வாறு திரிகின்றவர் தம்மைப்போன்றோர் பலரது உடம்புகளும் முடிவில், மலைச்சாரலில் பற்றி எரிகின்ற தீப்போன்ற பெரிய தீயை உடைய முருட்டணையில் ஏறிப் பின் அதினின்றும் இறங் காமல் அதனையே இடமாகக்கொண்டு கிடந்து ஒழிந்துபோதலைப் பல முறை கண்டிருந்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்துதல் இல்லை.

குறிப்புரை :

இவரை, `உயிர்` என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும் என்பது குறிப்பெச்சம். ``உயிரா`` என்பது பாடமாயின், `உயிர்த்து`, அஃதாவது `மூச்சுவிட்டுச் சீவித்து` என உரைக்க. இறுதியில், `அறியார்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது. கடனாகவும், என்னும் ஆக்கச் சொல்லும், உம்மையும் தொகுத்தலாயின. குற்று, `குறு` என்பது அடியாக வந்த வினையெச்சம். அவ்வெச்சம் இக்காலத்தில் `குற்றி` என வழங்குகின்றது. குறுதல் - உரலில் இட்டு உலக்கையால் குற்றுதல். குத்துதல் - கையை முட்டியாகப் பிடித்துக் குத்துதல். இவ் வேறுபாடு உணரத் தக்கது. கை - சிறுமை. கையர், உடலார் - என்பன இழிவு நோக்கி உயர்திணையாகக் கூறப்பட்டன.
இது ``நாடாமை, நாணின்மை, நாரின்மை, யாதொன்றும் பேணாமை`` என்னும் பேதையார் தொழில்களில் நாடாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 4

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

பொழிப்புரை :

தனக்கு உண்மையிடமாகிய திருக்கயிலையின் பாங்கர் நிலவுலகத்து மக்கள் பொருட்டாகத்தான் நிலைநிறுத்திய கல்லால மர நிழலின்கண் இருந்து சிவன் படைப்புக் காலத்திலே முனிவர் நால்வர்க்கு அவர் விரும்பிய உடனே அருளிச் செய்த முதல் மொழிகள் அம்முனிவரிடமிருந்து நல்லோரால் வழிவழியாகப் பெறப் பட்டு உலகில் வழங்கா நிற்கவும் அவற்றைக் கேளாது பழித்து ஒதுக்கத் தக்கனவாகச் சிற்றறிவுடையரால் சொல்லப்பட்டு வழங்கும் மொழிகளைக் கேட்டு நிற்போர் அக்கேள்வியின் பயனாகத் தமது வன்மையையே மெய்ம்மையாகத் துணிந்து இடர்ப்படுகின்றார்களே!. இஃதென்ன அறியாமை!.

குறிப்புரை :

`மறைகள்` எனப்படும் முதல்நூல்கள் நான்கு - என்பதும், அவற்றைப் படைப்புக்காலத்தில் சிவபிரான் கல்லால மர நிழலின்கண் எழுந்தருளியிருந்து முனிவர் நால்வருக்கு அருளிச் செய்தான் - என்பதும், அந்நான்கு மறைகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்துவன என்பதும் தேவார திருவாசகங்களாகிய திருமுறைகளில் பல இடங்களில் பரவலாகவே சொல்லப்படுகின்றன. அவற்றுள் சிவன் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நால்வர்க்கு முதல் மொழி யாகச் சிலவற்றை மொழிந்தது ஒன்று மட்டும் இம்மந்திரத்தில் சொல்லப் பட்டது. மேற் கூறிய மறைகள் பற்றிய செய்திகளுள் ஒன்றேனும் இன்று வழங்கும் இருக்கு முதலிய ஆரிய நால் வேதங்களுக்கு ஆரியத்துள் ஓரிடத்தும் சொல்லப் படாமையாலும் இவ்வேதங்கள் நான்கும் அறம் முதலிய நாற்பொருள் பற்றிக் கூறாமையாலும் திருமுறைகளில் சொல்லப்பட்ட அம்மறைகள் இருக்கு முதலிய ஆரிய வேதங்கள் அல்ல என்பது தெளிவாதலால் அம்மறைகள் தமிழால் ஆயவையாய், விளங்கியிருந்து பின்னர் மறைந்தனவாகும் என்பர் ஆராய்ச்சியாளர். நீதிநூல் செய்த, ஔவையார் ``தேவர்குறளும்`` (நல்வழி) எனத் தொடங்கும் வெண் பாவில், ``திருநான்மறை`` என்றது திருமுறை களில் மேற்காட்டிய வாறாகச் சொல்லப்படும் தமிழ் மறைகளையே - எனவும், அஃது அவ்வெண்பாவில் குறிப்பிடப்பட்ட நூல்கள் யாவும் தமிழ் நூலாகவே இருத்தல் பற்றியும் அறியப்படும் - எனவும் நிலை நாட்டியவரும் உண்டு. (திரு. கா. சுப்பிரமணியபிள்ளை, எம். ஏ., எம். எம். எல்., திருநான்மறை விளக்கம்).
பரம் - மேன்மை. அது காலத்தால் அனைத்திற்கும் முன்னாக வெளிப்பட்ட மொழிகளைக் குறித்தது. பிறமொழிகளை, ``பழி மொழி`` என்றதனால், `இம்முன் மொழிகள் புகழ்மொழி` என்பது, பெறப்பட்டது. இருக்கு முதலியஆரிய நால்வேதங்களை ஆன்றோர் முன்மொழிகளாகத் தழுவிக் கொண்டமையால், ``பழிமொழி`` என்றது அவற்றிற்கு மாறாக எழுந்த நூல்களையேயாம். அவை உலகாயத சமண பௌத்த சமய நூல்களாம். அவை முற்றிலும் வேதத்திற்கு மாறாவன. வாமம், பாசுபதம், காளாமுகம் முதலிய சமயங்களின் நூல்கள் வேதத்திற்கு ஒருபுடை மாறா வனவாம். உண்மை நூல்கள், `சிவனது ஆற்றலே மெய்ம்மை` எனக்கூற, ஏனைய நூல்கள் அவ்வாறு கூறாமையால், அவற்றின்வழி நிற்போர் உயிர்களாகிய தமது ஆற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் பற்றி, ``உரம் தன்மையாக ஒருங்கிநின்றார்களே`` என்றார். உயிர்களின் ஆற்றல் உலகியலிற்றானே சிலவற்றிற் செல்லமாட்டாமை கண் கூடாகவும் அவ் வாற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் அறியாமை என்பது கருத்து. `ஏனைய எவ்வாறாயினும், இத்தன்மையோர் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கார்` என்பதே இங்குக் கருதப்பட்டது.
இது, ``நெறியல்லா நெறிதன்னை நெறியாக``க் (தி.8 அச்சோப்பதிகம்) கொள்வாரை நோக்கி இரங்கியவாறு. இவர்
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறிய சரண் ஆதல் திண்ணம்`` -தி.4 ப.11 பா.9
என்பதை அறியார்.

பண் :

பாடல் எண் : 5

நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

அனைத்திற்கும் முதல்வனாகிய எங்கள் சிவ பெருமான் உலகியலில் நிலைத்த புகழையும், நிரம்பிய மேலான தவத்தையும், அதன் பயனாகிய உண்மை ஞானத்தையும் தன்னை யடைந்த அடியார்களுக்கே அளித்தருள்வான் ஆகையால், உலகர் அவற்றை இழத்தற்குக் காரணம் அவ்வடியவரோடு மாறுபட்டு, `அது கடவுள், இது கடவுள்` எனத் தத்தமக்கு எட்டிய பொருள்களைத் தனித்தனி கூறித் தம்முள் கலாய்த்துக்கொண்டு, ஞானம் குறை கையாலேயாம். இஃது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``நிறைதவத் துண்மையும்`` என்ற அனுவாதத் தானே நிறைதவத்தை நல்குதலும் பெறப்பட்டது. அன்றுதல் - மாறுபடுதல்; ``அன்றினார் புரமெரித்தார்க்கு`` (தி.12 பூசலார். பு.1) என்றது காண்க. சிலர் நிலம், நீர், தீ முதலிய சடப் பொருள்களையே தெய்வமாகக் கூறுதல் பற்றி, ``அது, இது`` என அஃறிணையாற் கூறினார்.
இது, மேற்கூறிய பழிமொழியாளர் மெய்ப்பொருளை யுணராது தாம்தாம் கொண்டதே கொண்டு வாதிட்டு ஒழிதலை நோக்கி இரங்கியவாறு. இவரை நோக்கியே யன்றோ,
``... ... ... ... மற்றோர் தேவர் எத்தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே`` -தி.8 அச்சப்பத்து
என்று அருளிச் செய்தார். ``சலமிலன் சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` (தி.4 ப.11 பா.6) என்று அருளிச் செய்ததும் காண்க.

பண் :

பாடல் எண் : 6

இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந்
தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

பொழிப்புரை :

மக்கள் யாவரும் பிறக்கும்பொழுதே இன்பத்தில் பிறந்து, வளரும் பொழுதும் இன்பத்திலே வளர்ந்து இன்பத்திலே திளைக்கின்றவர்களே யாயினும் சிலர் இதனையறியாது தாங்கள் துன்பத்திலே மூழ்கியிருப்பதாகக் கருதிக்கொண்டு அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியாக, `உணவு` என்றும், `உடை` என்றும் அவாவி, அவற்றைப் பெறவேண்டி அல்லற்பட்டு, அவ்வல்லலை விட்டு நீங்க நினையாமல் அதிலேயே செயலற்றிருக்கின்றார்கள்; இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதே யாகலின் அந்தப் பந்தம் பின் வீடு பெறுதற்கு வழியாகும் என்பதே உண்மையாதலின், அவ்வுண்மையை உணர்வார்க்குப் பந்தமும் இன்ப முடையதாயே அமைதல் பற்றி, `இன்பத்துளே பிறந்து, இன்பத்திலே வளர்ந்து, இன்பத்துளே திளைத்து`` எனவும், இவ்வுண்மையை உணராமையாலேதான் வாழ்க்கை துன்ப மயமாகின்றது என்பது பற்றி, ``சோறொடு கூறையென் துன்பத்துளே நின்று`` எனவும், இவ் வறி யாமையுடையார்க்கு அவர் கருத்தாலும், செயலாலும் உண்டாக்கிக் கொள்கின்ற துன்பத்தினின்றும் நீங்கும் வாயில் இல்லாமைபற்றி, ``தூங்குகின்றார்களே` என்றும் கூறினார். `அனைத்தும் திருவருட் செய லாதலின் அவை இன்பமயமேயாம். ஆயினும் அவற்றை அவ்வாறு உணராதார்க்கு அவை அனைத்தும் துன்பமேயாம்` என்பது கருத்து.
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப் பகுதி, அடி, 52
என்பது முதலிய திருமொழிகளால், வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதேயாதல் விளங்கும். மற்றும் இதுபற்றிய விளக்கங்கள் சாத்திரங்களில் பெறப்படும். இங்குக் கூறப்பட்ட இம்மக்களை நோக்கியே,
பால்ஆழி மீன் ஆளும் பான்மைத்(து) அருள் உயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து. -திருவருட்பயன், 34
எனச் சாத்திரத்தில் கூறப்பட்டது. உண்மையுணர்வார்க்கு, ``பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`` (திருவுந்தியார், 53) என்றது அறிக. துன்புறுவோர் பலராயினும் ``சிலர்`` என்றது, அவர்தம் அறியாமையது சிறுமை பற்றி வந்த இழித்தற் குறிப்பு.
இதனால், உண்மையுணர மாட்டாத அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 7

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

பொழிப்புரை :

பெறுதற்கரிய பிராணிகள் ஞானத்தையும், அது வழியாக வீட்டையும் பெற இயலாத பிராணிகள். அவை மக்களை யொழித்து ஏனைய உயிர்கள். அவைகளால் பெறுதற்கரிய பேறு இறைவன் திருவடி. ``பெறார் பேறிழந்தார்`` என்க,
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

``அரிய`` என்னும் பெயரெச்சக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது வினைமுதற்பெயர் கொண்டது. ஏனைய செயப்படு பொருட் பெயர் கொண்டன. இறைவன் திருவடிப் பேற்றை `ஏனை உயிர்கள் பெற இயலாத பேறு` என்றமையால், `மக்கட் பிறவியைப் பெற்றும் அப்பேற்றைப் பெற நினையாதவர்கள் மக்களாகாது, ஏனை உயிர்களேயாவர்` என்பது கருத்தாயிற்று.
இதனால், கிடைத்த சாதனத்தின் அருமையை அறியாது அதனை வீண்படுத்துகின்ற அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 8

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

பொழிப்புரை :

யாவரிடத்தும் நட்பையே பாராட்டும் மனமும், எச் செயலிலும் சோர்வடையாத ஊக்கமும், கிளைஞர் எல்லோரிடத்திலும் செல்லுகின்ற ஈரமும் குறைவின்றியிருத்தலால் தாமும், பிறரும் `இது மிக நல்லதாகிய பருவம்` என மகிழ்ச்சியுறுவதாகிய இளமைப் பருவத்திலே அந்நல்லவற்றை யெல்லாம் உமையொருபாகனுக்குப் பணி செய்வதில் பயன்படுத்தாது, அவனது இன்பத்தைப் பெறாமல் மறந்து, அந்நல்லனவெல்லாம் விரையக் கெடுதற்கு ஏதுவாகிய சிற்றின்பச் செயலிலே சிலர் ஈடுபட்டு ஒழிகின்றார்களே; ஈதென்ன அறியாமை!

குறிப்புரை :

`ஈதென்ன அறியாமை` என்பது குறிப்பெச்சம். `இன்புறு காலம் இளமைக் காலமே` என்பது தோன்ற முன்னரே ஊக்கத்தினை, அதனைத் தருகின்ற இளமையாக உபசரித்துக் கூறினார். ஆர்வம் - பேரன்பு. `அது நட்பைத் தரும்` என்பதனை,
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. -திருக்குறள், 74
என்பதனால் அறிக. `மக்கள் மனம் அவரது இளமைக் காலத்திலே தூயதாகவே இருந்து, நாள் செல்லச் செல்ல உலகச் சூழலில் படிந்து படிந்து மாசேறிவிடுகின்றது` என்பது பொதுவான ஓர் உலக வழக்கு. அஃதே பற்றி இளமைப் பருவத்தை ``நல்ல என்று இன்புறுகாலம்`` என்றார். ஈற்றடி முதலில், `உமாதவன்` என வரற்பாலதாகிய உகரம் தொடைநோக்கி, மூன்றாம் அடியின் இறுதிக்கண் வகையுளியாய் நின்றது. ``நின்று மறந்தொழிந்தார்களே`` என்றலே கருத்தென்க. ஈற்றடி உயிரெதுகை.
இதனால் கனியிருக்கக் காய் கவர்ந்து கெடுதல் போல்வதோர் மயக்கம் நோக்கி இறங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 9

இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு
அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய உமாதவனாகிய சிவன் தன் அடியவர் முன் புறத்தே தோன்றிக் காட்சி வழங்குமிடத்துக் காலையில் தோன்றுகின்ற இளஞாயிற்றைப் போலும் உருவுடையனாய் விளங்குவான். [அது ``காலையே போன்றிலங்கும் மேனி`` (தி.11) என்பது முதலிய திருமொழிகளான் உணரப்படும்] இனி அவர்க்கு இவ்வாறு புறத்துத் தோன்றுதல் போலவே அகத்துத் தோன்றுங்கால் உள்ளக் கமலத்தை இடமாகக்கொண்டு என்றும் இருப்பவனாய் விளங்குவான். இவ்விரண்டும் இன்றிக் கரந்து நின்று அருள்புரியுமிடத்துச் சிறிதும், பெரிதுமாய தீப்பிழம்புகளின் உள்ளிருந்து அருள்புரிவான். [இவ் வுண்மைகள் எல்லாம் அவனை அறிந்து இன்புறும் பெரியோரை அடுத்துக் கேட்பின் விளங்கும்]. அவ்வாறு கேட்டுணராது நாளை வீணாகக் கழிக்கின்றோமே; இஃது அறியாமையன்றோ!

குறிப்புரை :

பரிசு - தன்மை. அண்மையிடத்தனாய் வெளிப்படும் நிலைகளை ``இப்பரிசு`` எனவும், வெளிப்படாது சேயனாய் நிற்கும் நிலையை ``அப்பரிசு`` எனவும் கூறினார். இவ்விடங்களில் `பரிசின் கண்` என ஏழாவதும், ``மெய்ப்பரிசு`` என்பதில் இரண்டாவதும் விரிக்க, பிறரது அறியாமையைப் புலப்படுத்தக் கருதினவன் அவர் உடன்படுமாற்றால் தம்மையும் அவரோடு உளப்படுத்திக் கூறினார்.
செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு. -திருக்களிற்றுப் படியார், 61
எனப் பிறரிடத்தும் இவ்வாறு வருதல் காண்க. ``அம்மானை ஈசனை`` என்பவற்றோடு இயைய, ``உரு`` என்பதைனயும், `உருவனை` என்க.
இதனால், ஞானம் இல்லாதார் அஃது உடையாரை அடைந்து அதனைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு பெறாதிருக்கும் புறக்கணிப்பு நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 10

கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.

பொழிப்புரை :

சிலர் பெரியோரைக் குரவராக அடுத்து உண்மையைக் கேட்டுணர்ந்தாராயினும் அவர் தங்கட்கு ஒருதலைப் பட உணர்த்திய குறிக்கோளை அங்ஙனமே உணர்ந்து அடைய மாட்டார். `அடைய வேண்டும்` என நினைக்கவும் மாட்டார். குரவர் தம்மை மலம் கழுவித் தூயராகச் செய்த செயலின் அருமையை அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடவும் மாட்டார். ஆயினும் பிறர் தம்மை மதிக்கும்வண்ணம் இனிமை உண்டாகப் பேசுவர். அப்பேச்சுக்கு ஏற்றவாறு நடிக்கவும் வல்லவராவர். அவர் அடையும் பயன்தான் எதுவோ!

குறிப்புரை :

`யாதொன்றும் இல்லை` என்றபடி, ``அவன்`` என்றது ஆசிரியனை. `செய்த பரிசறிந்து பாடகில்லார்` எனக் கூட்டுக. ``நயம் பேசித்திரிவர்கள்`` ``ஆடவல்லார்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. ஆடுதல், இங்கு நாடக மாத்திரையால் நடித்தலின்மேற்று.
இதனால், பெற்றதனைப் பேணிப் பயன்கொள்ளாமையாகிய பேதைமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 11

நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமானை, `ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து அங்கு ஒளிவிட்டும் விளங்குகின்ற அணையா விளக்கு` என்றும், `உயிர்கட்கெல்லாம் உண்மையான முதற் கடவுள்` என்றும் உணர்ந்து நாள்தோறும் வழிபடுங்கள். இறக்குமளவும் வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித் திருப்பின் உங்களுடைய ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த அத்தன்மையை உடைய யானைகளாய் விடும்.

குறிப்புரை :

அஃதாவது, `அவை நும்வழிப்படாது தம் வழியிலே உங்களைக் கொண்டு சென்று அலைக்கழிக்கும்` என்பதாம். நெடுமை, காலம் பற்றி வந்தது. ``நாதனை`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. ``நம்`` என்றது உயிர்கள் அனைத்தையும் ஒரு பெற்றியவாகத் தம்மோடு உளப்படுத்தி எண்ணுதலை. ``நாதன்`` என்றது சொல்லு வாரது குறிப்பால் சிவனை உணர்த்திற்று. செம்பிரான் நேர்க்கடவுள்; உண்மைக் கடவுள். ``தொழுமின்`` என்பதை ``நாடொறும்`` என்பத னோடும் கூட்டுக. `அஞ்சும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அஞ்சும்ஆம்` என இயையும். ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஓர்`` என்றது தன்மையைக் குறித்தது.
இதனால், ஐம்பொறியால் ஆட்டுண்டலின் நின்று நீங்கும் வழியறியாது அல்லலுறுவாரை நோக்கிஅவர் மேல் எழுந்த இரக்கத்தால் அவர்க்கு அவ்வல்லலின் நின்று நீங்கும் வழி கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 12

மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை
ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.

பொழிப்புரை :

விலங்குகள், மக்கள், தேவர்கள், பறவைகள், மற்றும் இவர்கள்போல் உள்ள இனத்தவர் ஆகியோரில் ஓரினத்தவரும் சிவபிரானிடத்தில் அன்பு வைத்து, அதனை மேலும் மேலும் பெருக்கி வழிபடாமையில்லை. அதனை அறிந்தவர்கள் அப்பெருமானது திரு வருளைப் பெறுதற்குரிய பெரிய தவத்தைச் செய்து, அதன் பயனாக விளைந்த அன்பினால் சிவபெருமானைக் கண்டால் இனிய பாலைப் போலப் பருகிவிடுவார் போல்வார்; `அவன் வெளிப்படும் இடம் எது` என்று தேடிப்பல திசைகளிலும் ஓடுவர். அதனால், தாம் மண்ணில் மக்களாய்ப் பிறந்த பயனை எய்துவர்.

குறிப்புரை :

`அறிவிலார் அங்ஙனமின்றி வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவர்` (தி.5 ப.90 பா.3) என்பதாம். எழுவகைப் பிறவியுள் உயர்ந்தது, தெய்வப் பிறப்பு ஆதலின் அதனை எய்தினோரை, ``மிக்கோர்`` என்றார். வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அர்ச்சிப்பர்`` (சிவஞான சித்தியார், சூ. 2,91) என்பது சாத்திரம். இவையெல்லாம் புராணங்களில் மிகவெளிப்படை. ``ஒருவர்`` என்பதில் ஒன்று இனத்தைக் குறித்தது. `ஒருவரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அன்பு வைத்துச் செய்து` என மாற்றி உரைக்க, ``உன்னாதது`` என்றது எதிர்மறைத் தொழிற் பெயர். அதனை உணர்ந்தோர் மாதவம் செய்து பருகுதல் முதலியவற்றைச் செய்வர்` என்க. அன்பால் பிறரை இறுகத் தழுவிக் கொள்ளுதலே, பருகுதல் போல்வதாகக் கூறும் மரபினை, ``பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை - பெருகலிற் குன்றலினிது`` (திருக்குறள், 811) என்னும் திருக்குறளாலும் அறிக. `தேடி ஓடுதலும் அன்புடையாரது செயல்` என்பதனை,
``... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் னெவ்விடத்தான்,
எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன்`` -தி.8 நீத்தல் விண்ணப்பம், 45
என்று அருளிச் செய்தவாற்றானும் அறிக.
இதனால், அறிவுடையாரது செயலை விதந்து கூறும் முகத்தால் அறிவிலாரது நிலைமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 13

நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை
ஆதி அயனென் றமரர் பிரானென்று
நாதியே வைத்தது நாடுகின் றேனே

பொழிப்புரை :

அற உணர்வு இல்லாதார் பொன்னைப் பெற்றால் அதனது பயனை யறிந்து அப்பயனை எய்தாது பொன்னை வாளா வைத்திருந்தே இறந்தது போலச் சிலர் சிவனை அறிந்தும் அவனால் அடையத் தக்க பயனை அறிந்து அம்முறையில் அவனை வழிபட்டு அப்பயனைப் பெறுகின்றவர் யாரும் இல்லை. ஆயினும் யான் உலகத்தைச் செயற்படுத்துதற்கு, `படைப்புக் கடவுளாகிய பிரமன்` என்றும், மற்றும் `தேவேந்திரன்` என்றும் இப்படிப் பல தேவரைத் தக்க வாறு சிவன் நியமித்திருக்கின்ற பெருஞ்செயலை நினைந்து அவனால் அடையத்தக்க பயனை அடைகின்றேன்.

குறிப்புரை :

`பிற தேவரால் அடைவிக்க முடியாது சிவன் ஒருவனாலே அடைவிக்கப்படும் பிறவி நீக்கம். அஃது அயன் முதலிய தேவர் பலரையும் அவனே படைத்து அவரவர் அதிகாரத்தில் நியமித் திருத்தலால் விளங்கும்` என்பது பின்னிரண்டடிகளால் குறிப்பால் உணர்த்தப்பட்ட கருத்து. அப்பயனைப் பெறாதோர் சிவனை உணர்ந்தும் உணராதவரேயாதல் பற்றி அவரது செயலுக்கு நீதியிலார் பொன்பெற்ற செயலை உவமையாகக் கூறினார்.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு. -திருக்குறள், 760
என்பதனால் பொன் அறத்தையும், இன்பத்தையும் எளிதின் எய்துதற்கு வழியாதல் அறிக. ``பெற்ற பொன்போல்`` எனப்பொருளுவமம் போலக் கூறினாராயினும், `பொன் பெற்றது போல` எனத் தொழிலுவுமமாகக் கூறுதலே கருத்தென்க. ``சோதி`` என்றது அறிவை. அதனால் தொடர்தலாவது அவனால் பெறும் பயனை அறிந்து அவனைப் பற்றுதல். அறிதல் அதன் காரியமாகிய வழிபடுதலையும், நாடுதல், அதன் காரியமாகிய உண்மை யுணர்தலையும் குறித்து நின்றன. `நாடி` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.
இதனால், சிவனை உணர்ந்தவரும் அவன்பால் வீடு பேற்றினை வேண்டாது, உலகப்பயனை வேண்டி அவற்றை மட்டுமே அடைதல் இரங்கத் தக்கது என்பது கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 14

இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

பொழிப்புரை :

வண்டுகள்தாம் இன்புற வேண்டும் என்றுதான் மிகுந்த தேன் உள்ள மலர்களை அறிந்து அவற்றினுட்புகுந்து கிண்டிச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து மிகுந்த தேனைச் சேர்க்கின்றன. ஆயினும் அத்தேனில் ஒருசிறிதையும் அவை பருகுவதில்லை. அதனை எண்ணிப் பாராதவர்களாய், அவற்றினும் கீழ்மையராக, தானாகவே வாயில் ஒழுகுவதும், எவ்வுலகத்திலும் கிடைத்தற்கரியதும் ஆகிய தேனை மக்களில் ஒருவரும் அறிந்து பருகுகின்றார்களில்லை. ஆயினும் யான் அவர்களைப்போல அத்தேனை நுகராமல் விட்டு வருந்தமாட்டேன்.

குறிப்புரை :

`வண்டுகளின் பெற்றிமையை எண்ணிப்பார்ப்பார் களாயின் தாமும் அவை செய்யும் தவற்றினைச் செய்யமாட்டார்கள்` என்பார், ``வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்`` என்றார். சிவம் தானே தனது கருணையால் உயிர்களுக்குத் தன் இன்பத்தை வழங்குதல் பற்றி, ``வாய்புகுதேன்`` என்றும், அது வழங்கும் அவ்வின்பம்போலும் பிறிதின்பம் வேறின்மையின், ``அருந்தேன்`` என்றும் கூறினார் `நுகராது வருந்தேன்` என மாற்றிவைத் துரைக்க.
இதனால், சிவனால் தரப்படும் பேரின்பத்த சிறப்பைக் கூறி, அதனைப் பெறாது இழப்போரது அறியாமைக்கு இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 15

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

பொழிப்புரை :

தன்னிடத்துச் செலுத்துகின்ற அன்பு உடையாரது அன்பிலே விளங்கி நிற்பவனும், தேவர்கட்கும் தேவனுமாய் உள்ள ஒருவனே அனைத்துயிர்கட்கும் ஒப்பற்ற தலைவன். அடங்காது ஓடுகின்ற மனத்தை வருத்தியாயினும் அடக்கி அவனை நினைந்து நில்லாமையால் பலர் அவனைப் பெறத் தவறுகின்றார்கள். அதனால் அவர்களது காலங்கள் உண்மையை உணராமலே கழிந்தொழியும்.

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். முதலடியை ஈற்றில் வைத்துரைக்க. துணிவு பற்றி எதிர்காலம் ``கழிந்தன`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. அருத்தி - அன்பு. அமராபதி - தேவர் உலகம். அஃது ஆகுபெயராய்த் தேவரை உணர்த்தி நின்றது. ``உள்ளான்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் எழுவாயாய் நின்றது. ``உயிர்க்கெல்லாம்`` என்பதன் பின்னும் ``ஒருத்தன்`` என்பதைக் கூட்டி மேற்குறித்த எழுவாய்க்குப் பயனிலையாக்கி முடிக்க.
இதனால், மனத்தால் அன்புசெயற்பால பொருளில் அன்பைச் செலுத்தாது, பிறபொருளில் அன்பு செலுத்தி நிற்கும் அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 16

குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

பொழிப்புரை :

உலகீர், உங்களுக்கு இவ்வுடம்போடு கூடி வாழ்தற்கு வரையறுத்த நாள்கள் யாவும் தவம் செய்யாமையால் அவமே கழிந்தொழிந்தன. ஆகவே, உங்களை இவ்வுடம்பினின்றும் பிரித்தெடுத்துக் கொண்டு துள்ளி ஓடுபவனாகிய கூற்றுவனும் வந்துவிட்டான். இப்போது நடுங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் அமைதியுற வேண்டின் கொதிக்கின்ற கூழில் கையை யிடாமல் அகப்பையை இட்டு அள்ளி ஆற்றி உண்பதுபோலும் செயலைச் செய்தலே தக்கது.

குறிப்புரை :

``சார்வாய்க் கழிந்த`` என்றாராயினும், `கழிந்து சார் வாயிற்று` என்றலே கருத்தென்க. கழிந்து, செயவெனெச்சத் திரிபு. தெளிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. சார்வு - நெருங்குதல். ``துடுப்பிடல்`` என்பது, அதுபோலும் செயலைச் செய்தலைக் குறித்தது. கொதிக்கின்ற கூழ், கூற்றுவனால் கணக்கிட்டுக் கொள்கின்ற நாட்கள். கையிடுதல், அதனையறியாது தம் வயத்தன வாகக் கருதிக்கொண்டு அவற்றைத் தவத்தில் அல்லாமல் அவத்தில் கழித்தல். துடுப்பிடுதல் - சில நாட்களையாயினும் தவத்தில் கழித்தல். ஆம் - பொருந்தும் - ஏகாரம் ஈற்றசை.
இதனால், கூற்றத்தைக் கடத்தற்குரிய செயலில் நாளைக் கழியாமல், கூற்றத்தால் அடர்த்தற்குரிய வகையில் கழித்தலை நோக்கி இரங்கியவாறு,

பண் :

பாடல் எண் : 17

கரையரு காறாக் கழனி விளைந்தது
திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரையரு கூறிய மாதவம் நோக்கின்
நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.

பொழிப்புரை :

ஆற்றங் கரையை அடுத்து ஒரு கழனி உண்டு. அதில் உண்டாகின்ற விளைவை உடையவன் பெறுதல் அரிது ஏனெனில், ஆற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் பெருகி வந்து விளைவை அழித்துவிடும். அதனை உணர்ந்து நீவிர் விழிப்பாய் இருந்து வெள்ளம் பெருகி வருவதற்கு முன்னே விளைவிற்குப் பாதுகாப்புச் செய்து விளைவின் பயனை எய்துங்கள். [இஃது ஒட்டணி. ஆறு - வினைவிளைவின் தொடர்ச்சி. ஆற்றங்கரை - அத்தொடர்ச்சியைச் சார்ந்திருக்கின்ற உடம்பு. கழனி - உடம்பில் உள்ள உயிர்; என்றது அதன் உணர்வை, அதில் விளைவது சிவபுண்ணியத்தின் பயனாக விளங்கிய சிவஞானம், அதனை எப்பொழுதும் வந்து அழிக்க இருப்பது உயிருணர்வை வேறுபடுத்தும் வினைவிளைவு. அருகாமுன்னம் - நெருங்குதற்குமுன்னே, இவற்றை இங்ஙனம் அணிவகையால் உணர்த்திய பின்பு அப்பயனைப் பெறுமாற்றைப் பின்னிரண்டடிகளால் நேராகவே உணர்த்தினார். அஃதாவது] மலைமுழை முதலிய தனியிடங்களில் இருந்து செய்வதனால் வளர்ந்து முதிர்கின்ற தவத்தில் உணர்வு செல்லுமாயின் நரை, திரை, மூப்பு இவற்றோடுகூடி வருகின்ற நாட்கள் உங்கட்கு இல்லையாகும்.

குறிப்புரை :

`ஆகையால் அத்தவத்தில் உணர்வைச் செலுத்தி உணர்வு திரியாது நின்று சிவஞானத்தை முற்றப்பெற்றுப் பயன் அடையுங்கள்` என்பதாம். ``கரையருகு ஆறா`` என்பதனை, `ஆறுகரை அருகா` எனமாற்றி உரைக்க. இங்ஙனம் மாறி நின்றமையால், `ஆறு` என்பது ஒற்று இரட்டுதலும் அம்முப் பெறுதலும் இல்லையாயிற்று. ``தவம்`` என்றதும் சிவபுண்ணியத்தையே யாகலின், அது கேட்டற்குப் பின் விடாது நிகழும் சிந்தித்தல் தெளிதல்களாகிய ஞானத்திற் கிரியை ஞானத்தில் யோகம் இவற்றைக் குறித்து நின்றன. இந்நிலையுடையோர் சிவயோகத்தையும் உடையராவர் ஆதலின் அவர்க்கு நரை திரை மூப்புக்கள் இலவாதல் அறிக.
இதனால், ஞானத்தை எய்தினோரும் பார்க்காமல் அதனை இழத்தலை நோக்கி யிரங்கி அவர் அவ்வாறு அதனை இழவாதிருக்க அறிவுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 18

வரவறி வானை மயங்கிருள் ஞாலத்
திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி

பொழிப்புரை :

பகலும், இரவும்கலந்து நிற்கின்ற உலகத்தில் உயிர்கள் தோன்றுதல், மறைதல் ஆகியவற்றின் வழிமுறைகள் முழுவதையும் நன்குணர்ந்து அவைகளை ஏற்றபெற்றியால் செய்விக் கின்றவனும், முடிவில் அவ்வுயிர்கள் இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கும்படி வைத்து அவைகட்கு என்றும் விளக்கத்தைத் தந்தும் விளங்கியும் நிற்கின்ற, சுடர்விடுகின்ற பெருவிளக்காய் உள்ளவனும் ஆகிய சிவபெருமானை, `நுண்ணறிவாளர் திரிபின்றி உணர்கின்ற ஒப்பற்ற முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து அவனை அடைந்து உய்ய அறியாமையால் பலர்வேறு வேறு தெய்வங்களை முதற் கடவுளாகக் கருதி இடருள் அழுந்துதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``மயங்கிருள் ஞாலத்து`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்றியைந்தது. மயங்குதல் - கலத்தல். ``இருள்`` என்றதனால் `ஒளி` என்பது போந்தது. மேல் உலகம் ஒளியுலகமும், கீழ் உலகம் இருள் உலகமும், இடையுலகமும் இரண்டையும் உடைய உலகமும் ஆதலின் ``மயங்கிருள் ஞாலம்`` என்றது இடையுலகத்தை யாயிற்று ஏனை இரண்டும் போக பூமியும், இதுவே கரும பூமியும் ஆதலின் உயிர்கள் இவ்வுலகத்துத் தோன்றுதல் மறைதல்களையே குறித்தார். வரவு தோற்றமாதல் வெளிப்படை. இரவு, இருள் ஆதலின் அஃது அறிவைத் தரும் தேகத்தை விட்டு அறியாமையிற் செல்வதாகிய இறப்பைக் குறித்தது. ``எழும்`` என்ற விதப்பு, எஞ்ஞான்றும் மறைதல் இன்றி விளங்கியே நிற்றலைக் குறித்தது. அதுவே அருள்வெளி என்க. அர அறிவு - அரம் போலும் கூரிய அறிவு. ``அரம் போலும் கூர்மைய ரேனும்`` (திருக்குறள், 997) என்றதும் காண்க. முன் தெய்வம் - நினைக்கின்ற கடவுள்; வினைத்தொகை. ஒரு தெய்வம் - ஒப்பற்ற தெய்வம். ``மேல்`` என்றது `வேறு` என்னும் பொருட்டு ஆக்கம் வருவிக்கப்படும். ``வைத்து`` என்றது, அதனால் இடர்ப்படுதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. `இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், இன்றியமையாது அறியற்பாலதனை அறிந்து பயன்பெறாது மயங்கி இடர்ப்படுவாரது மயக்கம் நோக்கி இரங்குதலைச் செய்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
சிற்பி