எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்


பண் :

பாடல் எண் : 1

காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

பொழிப்புரை :

ஒரு பையில் பல பண்டங்களை அடைத்து வைத்தல் போல, யாவராலும் நன்கு அறியப்படும் உடம்பாகிய ஒரு பை ஒவ்வோர் உயிர்க்கும் கிடைத்திருத்தல் கண்கூடாக, அதன்கண் அடைக்கப்பட்டுள்ள பண்டங்களோ பல உள்ளன. (அவற்றை ஆராய் கின்றார் ஒருவரும் இல்லை) இனி, அந்தப் பை மாயம்போலக் கட்புல னாகி, விரைவில் மறைவதாகும். என்றாலும், அந்தப் பைக்குள்ளே மற்றொரு பையும் உண்டு; (அதனை அறிந்தோர் சிலரே.) யாவரும் அறிந்த அந்தப் பைக்குள் அதற்கு வேறாகிய ஒன்று உள்ளதோ, இல்லதோ` என ஐயுறுமாறு ஒளிந்து நிற்கின்ற உயிர் அதனை விட்டு வெளியே போய்விடுமானால், தோன்றியழிவதாகிய அந்த உடம்பு மண்ணோடு மண்ணாய்ப்போக, அதனை நிலையானதாகக் கருதி, அதனைத் தமக்கு உறவாகத் தெளிந்திருந்தோர் திகைப்புற்று நிற்கும் நிலை இரங்கத்தக்கதாகும்.

குறிப்புரை :

`காயப்பை` என்றது உருவகம், சரக்காவன. என்பு, தசை, நரம்பு, குருதி, கோழை முதலியனவற்றை, `சரக்கு` எனவே கூறியது சிறப்புருவகம். `காயப்பை ஒன்று` என்பதன் பின்னும் `உண்டு` என்பது எஞ்சி நின்று. ஈரிடத்தும் `மாய் அப்பை` எனப் பிரிக்க மாய்தல் கூறவே, தோன்றுதல் தானே பெறப்பட்டது. `மற்றும் ஓர் பை உண்டு` என்பதை உணர்த்தப்புக்கவர், `முற்கூறிய அந்தப் பையே அன்றி` என்றற்கு `மாய் அப்பை ஒன்றுண்டு` என அதனையே மீளச்சுட்டிக் கூறினார். முதற்கண் கூறிய பையை `மாயும் பை` என்றதனால், மற்றும் ஒன்றாகக் குறிக்கப்பட்ட பை, `மாயாப் பை` என்பது பெறப்பட்டது. மாயும் பை தூல உடம்பும், மாயாப் பை சூக்கும உடம்புமாம் என்க. உயிர்கட்கு அவ்வப்பொழுது வினைக்கீடாக விரைவில் மாறி மாறி வருவது தூலவுடம்பேயாதலும், நுண்ணுடம்பு அவ்வாறன்றி, உயிர் வீடுபெறும் வரையிலாவது, அல்லது உலகம் அழியும் வரையிலாவது உயிர்களோடு நீங்காது நிற்பது ஆதலும் அறிக. இங்ஙனமாகவே, பஞ்ச பேதங்களுள் `தூலம, சூக்குமம்` என்னும் இரு பேதங்களைக் குறிப்பிட்டு அவற்றது இயல்பு தொகுத்துக் கூறியவாறாயிற்று. என்பு, நரம்பு, குருதி முதலியவற்றின் கூட்டமே தூல தேகமாயினும், அவை அங்ஙனம் வெளித் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றித் தூல தேகத்தைப் பையாகவும், என்பு முதலியவற்றை அதனுள் அடைக்கப்பட்ட சரக்காவும் உருவகம் செய்தார். தூலதேகத்தைப் `பை` என்றமையால் அதனோடு ஒப்ப ஏனைய தேகங்களையும் `பை` என்றார். `ஆக` என்பது ஈறு குறைந்து நின்றது. `மற்றும் ஓர் பை உண்டு` என அறிவுறுத்தமையால், `உடம்பாவது கண் கூடாய்த் தோன்றி யழிகின்ற அஃது ஒன்றுமே போலும்` எனவும், `அது மாய்ந்தபொழுது உயிர் தனித்து நிற்பதுபோலும்` எனவும் மயங்காது, `தூல உடம்பு நீங்கிய பொழுது உயிர் சூக்கும உடம்பளவாய் நிற்கும்` எனவும், தூல உடம்பு உள்ளபொழுது அதனை உயிர் சூக்கும உடம்பு வழியாக இயக்கும்` எனவும் உணர்க - என உணர்த்தினமை காண்க. . ஈற்றில், `இரங்கத் தக்கது` என்பது அவாய் நிலையாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 2

அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்காக அமைத்துக் கொடுத்த, `தூலம், சூக்குமம்` என்னும் இருவகை உடம்புகளுள் (தூலஉடம்பின் இயல்பு பற்றி மேலே கூறினோம்) இனி அதுபோலப் புலால் நாற்றம் நாறுதல் இன்றியே உயிர்க்குப் பயன்படுகின்ற சூக்கும தேகத்தைப் பற்றிக் கூறுமிடத்துச் சத்தம் முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், அந்தக் கரண நான்கனுள் சித்தம் ஒழிந்த ஏனை மூன்றும் ஆக எட்டும் கூடிய தாகும். அதனால் அது, `புரியட்டகாயம்` என்றும் சொல்லப்படும்.

குறிப்புரை :

ஐவகை உடம்புகளில் மேற்கூறிய இரண்டு உடம்பின் இயல்பினையே கூறப் புகுந்தமை பற்றி, `அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்` என்றாரல்லது, `ஏனை உடம்புகள் அத்தனால் அமைக்கப் பட்டன அல்ல` என்றிலர் ஆகலின், அனைதுடம்புகளும் அத்தனால் அமைக்கப்பட்டன ஆதற்குத் தடையின்மை அறிக. `அனைத்தையும் ஆக்கி, அழிக்கும் அத்தன் ஒருவன் உளன்` என்பதை மேலெல்லாம் பல்லாற்றானும் தெளிவித்துப் போந்தமையால், இங்கு அதனை நினைப்பிக்கும் அளவில் `அத்தன் அமைத்த உடல்` என அனு வாதமாகக் கூறினார். வகையை `கூறு` என்றார். சத்தம் முதலிய ஐந்தும் சிறப்பு நிலை எய்தியவழியே செவி முதலிய பொறிகட்குப் புலனாகும். அப்பொழுது அவை `புலன்` என்றும், `விடயம்` என்றும் சொல்லப் பட்டு, ஆகாயம் முதலிய பூதங்களின் குணமாய் நிற்கும். அப்பொழுது அவை, தாத்துவிகங்களாம். அவை சிறப்புநிலை எய்தாது பொதுமை யில் நிற்கும்பொழுது பொறிகட்குப் புலனாகாது, புலனாகாது, ஆகாயம் முதலிய பூதங்கள் தோன்றுதற்குக் காரணமாய் நிற்கும். அப்பொழுதே அவை `தன்மாத்திரைகள்` எனப்படும். தன் மாத்திரைகள் தத்துவங்களாம். ஆகாயம் முதலிய பூதங்கட்குக் காரணம் ஆதல் பற்றித் தன்மாத்திரைகள் `சூக்கும பூதம்` என்றும் சொல்லப்படும்.
அந்தக்கரணங்கள் நான்கனுள் மேல் நிற்பதாகிய சித்தம் பரசரீரப் பகுதியாதலின், ஏனை மூன்றுமே சூக்கும சரீரப் பகுதியாம் என்க.
ஆகம பேதங்களின், `தாத்துவிகங்களே தூலசரீரம்; தத்துவங்கள் யாவும் சூக்கும சரீரம்` என்னும் ஒரு கருத்து உள்ள தாயினும் இங்கு நாயனார், `தன்மாத்திரை ஐந்தும், அந்தக்கரணம் மூன்றும் கூடியதே சூக்கும சரீரம்` எனத் தெளிவாகக் கூறினமையின், மேற்கூறிய ஒரு கருத்தை இங்கு நோக்க வேண்டுவதில்லை, `இங்குக் கூறப்பட்ட கருத்தே காலோத்தரம் முதலிய ஆகமங்களில் சொல்லப் பட்டது. என்றார் சிவஞான போத மாபாடியம் உடையார். l
`மனம்` என்பது கடைக் குறைந்து `மன்` என நின்றது,
இதனால், மேற்கூறிய இரு பேதங்களுள் `சூக்குமம்` எனப்பட்ட உடலின் இயல்பு வேறெடுத்து வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.

பொழிப்புரை :

எட்டுக் கருவிகள் கூடியதனால் `புரியட்ட காயம்` எனப்படும் உடம்பு - என மேற்கூறப்பட்ட சூக்கும சரீரத்திலிருந்தே மாபூதங்கள் ஐந்தும், இருவகை இந்திரியங்களும் தோன்றும். (எனவே, அப்பதினைந்தும் கூடியதே தூலசரீரமாம்.) இனித்தூல சரீரத்தில் உள்ள இருவகை இந்திரியங்களும், சூக்கும சரீரத்தில் உள்ள அந்தக்கரணங்கள் மூன்றும் `சரீரம்` எனப்பட்டாலும், உண்மையில் அவை கரணங்களேயாம்.
அறிவுக்குத் துணையாதல்பற்றி ஆன்மாவோடு பெரிதும் ஒற்றுமைப் பட்டு நிற்கின்ற அவற்றைக் கொண்டே சிவன் ஆன்மாவின் அறிவைப் புலன்களில் அகப்படுத்தி வைத்துப் பின்பு அப்புலன்க ளினின்றும் பிரித்துவிடுவான்.

குறிப்புரை :

`ஐந்து` என்றது மாபூதங்களையாதல் தெளிவு ஆகும்` என்பதனை `இந்திரியங்கள்` என்பதன் பின்னும் கூட்டுக. `இந் திரியங்கள்` எனப் பொதுப்படக் கூறியதனால் ஞானேந்திரியம், கன் மேந்திரியம் இரண்டும் கொள்ளப்படும். மாபூதங்கள் தன்மாத்திரை களிலிருந்தும், ஞானேந்திரியங்கள் அகங்காரத்தின் சாத்துவிகக் கூற்றி லிருந்தும், கன்மேந்திரியங்கள் அகங்காரத்தின் இராசதக் கூற்றி லிருந்தும் தோன்றுவனவாம். இங்ஙனம் தோன்றிய பதினைந்தனுள் மாபூதங்களே எலும்பு, தோல், தசை முதலியவனவாகப் பரிணமித்துத் தூலதேகமாக, இருவகை இந்திரியங்களும் பிறவாறு பரிணமியாது நிற்கும். ஆகவே, மாபூதங்களே உண்மையில் தேகம் ஆக, இருவகை இந்திரியங்கள் அத்தேகத்தின் நிற்றலால் ஒற்றுமை பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும், அந்தக் கரணங்களும் அவ்வாறு சூக்கும தேகத்தில் நிற்றல் பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும் உண்மையில் கரணங்களே என்பது உணர்த்தற்கு, `இந்திரியங்களும்` மூன்றும் கரணமாதாயிடும்` என்றார். இவ்வாறு `மூன்றும்` என்பத னோடு இயைதற் பொருட்டு, `ஆகும்` என்பதனை மீண்டும் கூறாது விடுத்தார். ஆகவே, `இந்திரியங்களும்` என்பதனை `இந்திரியங்களும் ஆகும்` எனவும் `இந்திரியங்களும் மூன்றும்` எனவும் இருமுறை ஓதி இயைத்துக் கொள்க. சூக்கும சரீரத்திலிருந்தே தூல சரீரம் தோன்றும் என்றற்கு, `எட்டினில் ஐந்து ஆகும்; இந்திரியங்களும் ஆகும்` என்றும், `தத்துவங்கள் யாவும் பொதுவாக, `தனு` என்று கூறப்பட்டாலும், அவற்றுட் சில உண்மையில் கரணங்களே` என்றற்கு, `இந்திரியங் களும் மூன்றும் கரணமதாகும்` என்றும், `அவற்றுள் அறிவுக் கரணங்களே வலியபந்தங்கள்` என்றற்கு, `ஒட்டியபாசத்து உணர்வது வாகவே கட்டிய` என்றும் கூறினார். கட்டிய - ஒன்று படுத்தப்பட்ட. காணும், முன்னிலை அசை. `அறிமின்` என்றும் ஆம்.
இதனால், `மேற்கூறிய என்பு முதலிய தாத்துவிகங்களே யன்றி, இருவகை இந்திரியங்களும், மாபூதங்களும் ஆகிய பதினைந்து தத்துவங்களும் தூலசரீரமாம்` என்பதும், `அவற்றுட் சில உண்மையில் கரணங்களேயாம்` என்பதும் கூறப்பட்டன.
தனு, அல்லது தேகம் ஆன்மாவிற்கு நிலைக்களமும், கரணங்கள் ஆன்மாவிற்குக் கருவியுமாய் உதவும் என்க. இந்திரியங்கள் புறக்கருவிகளும், மனம் முதலியன உட்கருவிகளும் ஆதல் அறிக. `உட்கருவிகள்` என்பனவே, `அந்தக் கரணங்கள்` எனப்படுகின்றது.
[பதிப்புக்களில் முன் தந்திரத்தில், `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்து இறுதியில் காணப்படும் `இந்தியம் அந்தக்கரணம் இவை உயிர்` என்னும் மந்திரம் இத்தந்திரத்தில் இம்மந்திரத்தை அடுத்து இருந்ததாகும்.]

பண் :

பாடல் எண் : 4

இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.

பொழிப்புரை :

`மாபூதங்கள் மட்டுமே உயிர்க்குக் கரணம் ஆகா தொழிய, `இருவகை இந்திரியங்களும் அந்தக்கரணம் போல உயிர்க்குக் கரணமாம்` என மேலே சொல்லப்பட்டமையால், `மாபூதங்ளும் அவற்றின் காரியங்களுமே தூல தேகமாக இந்திரியங் களும் அந்தக்கரணம்போலச் சூக்கும தேகமாம் என்றலே பொருத்த முடைத்துப்போலும்` எனின், அங்ஙனம் கொள்ளுதல் பொருந்துவ தன்றாம். (இந்திரியங்கள் தூலதேகத்தில் இருந்து புறப் பொருளை அறிதலும், பொருள்களை எடுத்தல், கொடுத்தல் முதலிய வற்றைச் செய்தலும் கண்கூடாதலின் அவை தூல தேகமேயாம் என்பது கருத்து.) இனி மூலப்பிரகிருதியினின்றும் தோன்றுவனவாகிய பஞ்சக் கிலேசங்களால் அவற்றிற்கு முன்பே தோன்றிய பொதுப் புருட தத்துவத்தில் சிறப்புப் புருட தத்துவம் பொருந்தும். வித்தியா தத்துவம் ஏழில் `புருடன்` தவிர மற்றை ஆறு தத்துவங்களும் புருட தத்துவத் திற்கு மேலே உள்ளனவாகும்.

குறிப்புரை :

`இந்திரியம்` என்பது இடைக் குறைந்து நின்றது. `வந்தன என்பதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `இவை என்பு, தோல், இறைச்சி முதலியனபோலன்றி, உயிரின் அறிவு செயல்களுக்குக் காரணமாய் நிற்றலின் உயிர்போலவே தோன்று மாயினும்` என உரைக்க. இதனால், `இருவகை இந்திரியங்கள் - சூக்கும தேகம் - என்றால் என்ன` என்னும் ஐயத்தை நீக்கியவாறு. `உயிர் வந்தன` என்பது `உயிர்போல வந்தன` என வினையுவமத் தொகை, `உளத்தின்கண் மன்னும்` என ஏழன் உருபு விரிக்க.
தூல தேகம், சூக்கும தேகம் இவற்றைக் கூறியபின், `பண் புடம்பு` எனப்படும் குண சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `போர்ப்புடம்பு` எனப்படும் கஞ்சுக சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `முதலுடம்பு` எனப்படும் காரண சரீரத்தின் இயல்பையும் கூறினார்.
மான் - மகத்து; மூலப் பிரகிருதி. அது முக்குணமயமானது. அக்குணங்கள் வெளிப்படாது சூக்குமமாய் நின்றநிலை அவ்வியத் தமும், தூலமாய் வெளிப்பட்டுச் சமமாய் நின்றநிலை வியத்தமும் ஆகும். அவ்வியத்தமே பிரகிருதி. வியத்தமே காரணநிலையாதலின் அதனால் உயிர்க்கு வருவது ஒன்றுமில்லை. வியத்தமே காரிய நிலையாதலின் அதனாலே உயிர் முக்குணமயமாய் விகாரம் எய்துகின்றது. ஆகவே இந்த வியத்தமே குணசரீரம் ஆதல் அறிக.
பஞ்சக் கிலேசமாவன, அவிச்சை, அகங்காரம், இச்சை, ஆசை, கோபம் - என்பன. `இவை பிரகிருதியினின்றும் தோன்றும்` என்பதும், `இவற்றின் தொடர்பினாலே, இயற்கையில் விகாரம் இன்றியிருக்கும் உயிர் விகாரம் எய்தி, அகக் கரணம் புறக் கரணங்களால் புறத்து நிற்கும் பொருள்களைப் பற்றி, இன்பத் துன்பங்களை அடையும்` என்பதும் சாங்கிய மதக்கொள்கைகள். `அக்கொள்கை ஆகமங்கள் சிலவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது` என்பது இம்மந்திரத்துள், `மானது தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் முந்துளம் மன்னும்` என்பதனால் அறியக் கிடக்கின்றது. இந்தப் பஞ்சக் கிலேசத்தாலே உயிர் முக்குண உலகத்தோடு தொடர்பு பட்டு வினைகளை ஈட்டுவதும், நுகர்வதுமான நிலையை அடைதல் பற்றி இக் கிலேசத் தொகுதி `பும்சூத்துவ மலம்` எனப்படும் என்றும், பும்சுத்துவ மலத்தை எய்திய உயிர் `புருடன்` எனப்படும் என்றும் சிவஞான போத மாபாடியத்தில் சொல்லப்பட்டது. 3
இனி, `பிரகிருதிக்கு முன்பே புருடதத்துவம் உள்ளது` என்பது ஆகமங்களில் வெளிப்படை. அது பற்றி மாபாடியம் உடையார், `முன்பு உள்ளது பொதுப் புருடதத்துவம்` என்றும், `பின்பு பஞ்சக்கிலேசத்தால் ஆவது சிறப்புப் புருட தத்துவம்` என்றும் கூறிச் சிவஞான சித்தியாரின் `நிச்சயம் புருடனாகிப் பொதுமையில் நிற்பனன்றே`l என்பதைத் தம் கொள்கைக்கு மேற் கோளாகக் காட்டினார். `பொதுமையில் நிற்பன்` என்றது பொதுப் புருட தத்துவத்தைக் குறிக்குமாயின், பின்னர் பும்சுத்துவ மலத்தைக் குறிப்பிட்டு, அதனால் சிறப்புப் புருட தத்துவம் தோன்றும்` என்பதனையும் கூறியாக வேண்டும். அவ்வாறு பஞ்சக் கிலேசமோ, பும்சுத்தவ மலமோ, சிறப்புப் புருட தத்துவமோ எந்தச் சித்தாந்த மூல நூலிலும், எங்கும் சொல்லப்படவில்லை. எனினும், `இம் மந்திரத்தில் அவை கூறப்படுதல் சில ஆகமங்களின் கூற்றுப் பற்றி` எனக் கொள்ள வேண்டியுள்ளது. பும்சுத்துவம் - புருடத் தன்மை.
சித்தாந்த நூல்களில், புருடத்தத்துவம் வித்தியா தத்துவம் ஏழனுள் தோற்ற முறையில் இறுதியானதாகச் சொல்லப்படுகின்றது அதனால் மூலப் பிரகிருதியை அடுத்து மேல் நிலையில் உள்ளதாகும். அதற்குமேல் ஏனை வித்தியா தத்துவங்களில், `அராகம், வித்தை, கலை, நியதி, காலம்` என்பன முறையே ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ளன. இந்த ஐந்து தத்துவங்களையும் ஐந்து சட்டைகளாக உயிர் அணிந்து நின்ற நிலையில்தான் அது `புருடன்` எனப் பெயர் பெறுகின்றது. அது பற்றி அந்நிலை ஒரு தத்துவமாகச் சொல்லப் படுகின்றது. காலம் முதலாக உள்ள ஐந்தும் ஐந்து சட்டை போல்வதால், அவற்றது தொகுதி `கஞ்சுக சரீரம்` எனப்படுகின்றது. இந்த ஐந்து தத்துவங்களும் `மாயை` என்னும் தத்துவத்தின் காரியமாய், அதனின்றும் நேரேயும், பின் ஒன்றின் ஒன்றாயும் தோன்றும். ஆதலால் அம் மாயா தத்துவம் ஏனை வித்தியா தத்துவங்கட்குக் காரணமாதல் பற்றி, `காரண சரீரம்` எனப்படுகின்றது. ஆகவே, வித்தியா தத்துவங்கள் ஏழனுள் புருடன் கீழே நிற்க, ஏனை ஆறும் அதற்கு மேல் உள்ளனவாதல் பற்றி, ``மற்றாறும் முடிவிலே`` என்றார்.
தற்புருடன் - தானாகிய புருடன். அஃதாவது, சகலனாகிய புருடன். பிரளயாகலரினின்றும் சில உயிர்கள் `சகலர்` எனப் பெயர் பெறுதற்குக் காரணம் அவை முக்குண வடிவாகிய பிரகிருகியாற் கட்டுண்பதே யாதலின், `ஐவிதத்தால் தற்புருடன் மன்னும்` என்றார். முந்து உளம் - இப்புருடனுக்கு முன்னே உள்ள புருடன் அது, வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் இறுதியானது. அந்த அளவில் நிற்கும் உயிர்கள் பிரளயாகலராகும்.
வித்தியா தத்துவங்கள் அசுத்த மாயையின்காரியம். எனினும் அசுத்த மாயை பெரிதாய், வியாபகமாய் இருத்தலால், அது முற்றிலும் தத்துவங்களாய்ப் பரிணமித்துவிடுவதில்லை. அதனில் ஒரு சிறு கூறே தத்துவங்களாய்ப் பரிணமிக்கும். இது `மண் குடமாயிற்று` என்றால், அளவின்றியுள்ள மண்முழுதும் குடமாய் விடாது அதில் ஒரு சிறு பகுதியே குடமாயது போல்வதாம்.
இனி, மண்குடமாவதற்கு முன் அங்ஙனம் ஆகுமாறு பிசைந்து பக்குவப்படுத்தப்படுதல் போல அசுத்த மாயையின் ஒரு கூறு தத்துவங்களாய்ப் பரிணமிக்குமாறு பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் செய்யப்பட்ட அதுவே, `மாயா தத்துவம்` என ஒரு தத்துவமாகச் சொல்லப்படுகின்றது. `இவ்வாறு அசுத்த மாயையை அனந்த தேவர் தமது சத்தியால் பக்குவப்படுத்துவார்` என்பது ஆகமங்களின் கருத்து. இந்த மாயா தத்துவமே காரண சரீரம் என்க.
இதனால், பஞ்ச பேத உடல்களில் முன் சொல்லப்பட்ட இரு பேதங்கள் போக, எஞ்சிய மூன்று பேதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே?

பொழிப்புரை :

நிலையாய் இராமல் நிலையழிந்து ஒழிந்து போவன வாகியகுருதி, இறைச்சி முதலிய அழுக்குப்பொருள்களாம் பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும்?

குறிப்புரை :

`கூடாது, அதனால், இருவகை இந்திரியங்களும் ஆற்றலேயாயினும் அவை செவி, தோல் முதலிய உறுப்புக்கள் இன்றிச் செயற்படுதல் கூடாமையால், அவை தூல உடம்பே யல்லது சூக்கும உடம்பாகா` என்பதாம்.
இரதம் - இரசம்; அஃதாவது, உண்ணப்படும் உணவிலிருந்து ஊறிக் குருதி முதலியவாய்ப் பரிணமிப்பது அதுவே, குருதி முதலியன நிலைபெறுதற்குத் துணையாதல் பற்றி முதற்கண் கூறப்பட்டது. மேதை - நிணம். `கொழுப்பு` என்பர். அத்தி - அஸ்தி; எலும்பு. வழும்பு - நிணத்தில் உள்ள பசை. இதனை நிணத்திற்கு வேறாக எண்ணுதல் இல்லை. மச்சை - பித்த நீர். இங்குக் கூறப்பட்டவற்றுள் இரதம் வழும்பு இவை தவிர ஏனைய ஏழும் `தாதுக்கள்` எனப்படும். தாது - மூலப்பொருள். பாழாதல் - காணந்தோறும் பதனழிந்து, முடிவில் அழிந்து போதல். தாதுக்கள் யாவும் அத்தன்மையவே யாதல் பற்றி, `பாழாம் உபாதி` எனவும், இவ்வுபாதிகள் யாவும் பருப் பொருள்களாய்க் கட்புலனாவனவே` என்றற்கு `உருவம்` எனவும் கூறினார். உபாதி - மாசு. `இரதம் முதலியவாகக் கூறப்பட்ட செவ் வெண்ணின் இறுதியில் தொகைச் சொல் தொக்கது. ஏகாரம் வினாப் பொருளாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், மேல், `சூக்கும உடலன்று` எனக் கூறப்பட்டவை தூலதேகமே யாதல் காரணம் கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆரே அறிவார் அடியின் பெருமையை
ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.

பொழிப்புரை :

மேல், `அத்தன் அமைத்த உடல்` என்றபடி உயிர்களின் தகுதியை அறிந்து அத்தகுதிக்கேற்பப் பல்வேறு வகையான உடம்புகளை அமைத்துத் தருகின்ற இறைவனது அருள் மிகுதியையும் ஆற்றலின் மிகுதியையும் அறிய வல்லுநர் யாவர்; அந்நிலையில் `மக்களாய்ப் பிறந்தோர் அவ்வுடம்பைப் பெறுதற்குப் பல பிறவிகளில் தாம் செய்த நல்வினை இவை` என்பதை அறிய வல்லுநர் யாவர்; மக்களுடம்பு அசுத்த உலகத்து உளது ஆதலின் அஃது அவ்வுலகத்திற்கு மேல் உள்ள மிச்சிர உலகம், சுத்த உலகம் என்பவற்றில் உள்ளோரது உடம்புகளில் உள்ள கருவிகட்குமேல் அறுபத்தெட்டுக் கருவிகள் கூடியது என்பதை அறிபவர் யாவர்! மூவகை உலகத்து உயிர்கட்கும் திருவருளே முதற்காவலாய் உள்ளது என்பதை அறிகின்றவர் யாவர்! ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

முதற்கண் `அடி` என்றது இறைவனது திருவடியை, அது திருவருளே. `தத்துவம் தொண்ணூற்றாறு` என்பது வைதிகசமயம் அனைத்திற்கும் பொதுவான ஒரு கொள்கை. அத்தொண்ணூற்றாறும் தத்துவம், தாத்துவிகம்` என இரண்டாகவே பகுக்கப்படும். அவற்றுள் `தத்துவம் எத்தனை` என்பதில் சமயங்கள் வேறுபடுகின்றன. ஆகவே, `தாத்துவிகங்கள் எவை, என்பதிலும் ஒருமித்த கருத்து இல்லை. கட்டளைகளிலும் தாத்துவிகங்கள் பல்வேறு வகையாகவே சொல்லப் படுகின்றன. சைவ சித்தாந்தத்தில் தத்துவம் முப்பத்தாறு ஆகலின், தாத்துவிகம் அறுபதேயாதல் வேண்டும். அந்த அறுபதையும் கட்டளை களை ஒட்டிப் பலர் பல வகையாகக் கூறுகின்றனர். அவைகள் சில காரணங்களால் பொருத்தமாகத் தோன்றவில்லை. மாதவச் சிவஞான யோகிகள் `தாத்துவிகம் அறுபதும் ஐம்பெரும் பூதங்களின் கூறுகளே` என்கின்றார்.8 அதுவே பொருத்தமானதாகத் தெரிகின்றது. எனினும், பூதங்களின் கூறுகளாக அவர் ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன்மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து என்னும் இருபதை மட்டுமே கூறி `மற்ற நாற்பது எவை` என்பதைக் கூறாது விடுத்தார் ஆயினும் நாடிகள் பத்தும் ஆகாயத்தில் கூறுகளாகும். ஆக முப்பது போக மற்றை முப்பதும் மேற்கூறிய என்பு, தோல், இறைச்சி முதலியனவாகவும், மற்றும் பூதக் கூறுகளாகக் கட்டளைகளில் கூறப் படுவனவற்றையும் கொள்ளுதல் வேண்டும். எனவே, தாத்துவிகம் அறுபதில் அவற்றிற்கு மூலமாகிய மாபூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து என்பவற்றையும், அந்தப் பூதமும், தன்மாத்திரையும் இன்றிச் செயற்படமாட்டாத இருவகைப் பத்து இந்திரியங்களையும் அடக்கி, தூல தேகக் கருவிகளை `அறுபதே` என்றும், சூக்கும தேகக் கருவி `மேற்கூறப்பட்ட எட்டே` என்றும் வைத்து, `ஆகத் தூல சூக்கும தேகக் கருவிகள் அறுபத்தெட்டு` என, அறுபத்தெட்டாக்கை என்றார். எனவே `ஆக்கை` என்றது, தூல சூக்கும தேகங்களை யாயிற்று. இந்த இருவகை உடம்பும் சகலருக்கல்லது, பிரளயாகலர் விஞ்ஞான கலருக்கு இல்லையாதல் அறியத்தக்கது.
இதனால், `மக்களுக்குச் சிறப்பாக அமைந்த தூல சூக்கும தேகத்தின் இயல்பையும், அவற்றை அவ்வுயிர்கட்கு வழங்கிய இறைவனது அருளையும், ஆற்றலையும் அறிவுடையோர் ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.

பொழிப்புரை :

உடம்பை `எண்சாண் உடம்பு` என்றல் யாவரும் அறிந்தது. `அவரவர் கையால் எண்சாணேயாகும்` என்பது இதன் பொருள். `எறும்பும் தன் கையால் எண்சாண்` (தனிப்பாடல் திரட்டு, என்றார் ஔவையார். இந்த அளவு யாவராலும் நன்கறியப்பட்ட தூல தேகத்தைப் பற்றியதே. அந்த உடம்பிற்றானே கண் முதலிய ஞானேந்திரியங்களும், கால் முதலிய கன்மேந்திரியங்களும் ஆற்றல் வடிவாய்ச் சூக்குமமாய்த் தோன்றாது நிற்கின்றன. எவ்வாற்றா லேனும், எவ்விடத்திலேனும் ஊறு உண்டாகுமாயின் அவ்விடம் புண்ணாகிக் குருதியையும், சீழையும் ஒழுக விடுகின்ற தூல தேகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டு மேற்கூறிய அறுபத்தெட்டுக் கருவிகளைத் தக்கவாற்றால் திருவருள் ஒன்று சேர்க்கின்ற சேர்க்கையால் ஓர் உடம்பிலிருந்து மற்றோர் உடம்பு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

எடுத்த - ஆக்கப்பட்ட. `உடலிற் கைகளில் எனக் கூட்டுக. `கரக்கின்ற` என்றது. அன்பெறாதுவந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. `கை` என்றது `ஒருபுடை` என்றபடி. `அந்த இடம் ஊறுபட்ட இடம்` என்பது, `புண்கால்` என்றதனால் விளங்கிற்று. காலுதற்குச் செயப்படுபொருள்கள் வருவிக்கப்பட்டன. `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டன் நண்பால், உடம்பால், உடம்பு ஆம்` என இயைக்க. `புண் கால் ஆக்கை` என்றது, `தூல உடம்பு` என்ற வாறு. `அதனைத் தோற்றுவித்தற்காகவே அதற்குமுன் சூக்கும உடம்பு ஆக்கப்படுகின்றது` என்றற்கு, `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டு` என்றார். சேர்க்கை, `நண்பு` எனப்பட்டது. அது பான்மை வழக்கு, `உடம்பால் உடம்பு ஆம்` என்றதற்கு, சூக்கும `உடம்பால் தூல உடம்பு தோன்றும்` எனவும், சில தூல உடம்புகளால், வேறு சில தூல உடம்புகளும் தோன்றும் எனவும் இருபொருள் கொள்க. தூல உடம்பால் தூல உடம்பு தோன்றுதலே இனப் பெருக்கமாம். தன், சாரியை.
இதனால், தூல சூக்கும உடம்புகள் ஒருவகையில் காரியங்களாயும், ஒருவகையில் காரணங்களாயும் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன்
ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றதிங் காரறி வாரே.

பொழிப்புரை :

தூல உடம்புக்குள் சூக்கும உடம்பாய் நிற்கின்ற அந்தக்கரணங்கள் நான்கிற்கும், மேலும் நுண்ணிதான அதிசூக்கும உடம்பைக் கொண்டு இயக்கும் முதற்பொருளாய் உள்ள சீவான்மாத் தான் பரமான்மாவாகிய சிவத்தில் வியாப்பியமாய் நிற்கும். ஆகவே, எப்பொருளிலும் எஞ்சாது நிறைந்து நிற்கும் பிரமப் பொருளாகிய சிவம், தான் ஒன்றேயாயினும் பல சீவான்மாக்களிலும் வியாபித்து அதனதன் தன்மைக்கேற்ப ஏகதேசமாயும் நின்று, பின் சீவான்மா சீவத்துவம் (பசுத்துவம்) நீங்கிய பொழுது தன்னைப் போலவே வியாபகமாகிவிடுதலால் அவ்வேகதேசத் தன்மை நீங்கி வியாபகமாகி விடுகின்ற தன்மை, ஞாயிறு ஒன்றேயாய் வியாபகமாயினும் பல குடங் களில் உள்ள நீரில் எல்லாம் அதனதன் அளவிற்கேற்ப வேறு வேறு அளவில் பலவாய்த் தோன்றி, அக்குடங்களில் நீர் நீங்கிய பொழுது முன்பு நின்ற சிறு நிலையின் நீங்கி வியாபகமாகிவிடுகின்ற தன்மையை ஒக்கும் என்னும் உண்மையை அறிந்தனர் எத்துணைப் பேர்!

குறிப்புரை :

`கணக்கு` என்றது, `நிலைமை` என்றபடி. அஃது உவமம் குறித்து நின்றது. அது, பகுதிப்பொருள் விகுதி. `கடம்` என்றது, `நீர் உள்ள குடத்தையே என்பதும் `நின்றது ஞாயிறு` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `காட்டி` என்றது, `ஒத்துநிற்றலைத் தெளிவாகப் புலப்படுத்தி` என்றவாறு. `அடங்கி` என்றது, `ஏக தேசமாய்த் தோன்றி` எனவும், `அற்றது` என்றது, `அவ்வேகதேசத்தின் நீங்கி வியாபகமானது` எனவும் கூறியவாறு. `ஆர் அறிவார்` என்றது, `ஒரு பிரமமே, ஞாயிறு ஒன்றாயினும் பல குடங்களில் பலவாய்த் தோன்றுதல் போல, பல உடம்புகளில் பல சீவராய்த் தோன்றும்` என மயங்கிக் கூறும் ஏகான்மவாதிகளை உட்கொண்டு கூறியது. ஞாயிறு குடங்களில் உள்ள நீரில் தோன்றினும் ஞாயிறேயாய் விளங்குத லன்றிப் பிற இயல்புகளைப் பெற்று வேறுபட்டுத் தோன்றுதல் இல்லை. சீவரோ பிரமப் பொருளின் தன்மையினின்றும் பெரிதும் வேறுபட்டுத் தோன்றுதல் தெளிவு. சிறப்பாகப் பிரமம் ஞானானந்த மயத்தது. சீவர் அஞ்ஞான துக்கமயத்தர். இதனை அறியாமையே யன்றி, உவமையில், `குடம், நீர், ஞாயிறு` என மூன்று பொருள்கள் உளவாக, பொருளில் `பிரமமும், உடம்பும்` என இரண்டையே கூறுதலால் அவரைக் கருதி, `ஆர் அறிவார்` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

ஆறந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.

பொழிப்புரை :

யோகமுறையால் ஆறு ஆதாரங்களும் கீழாகி யதனால், அவற்றிற்குமேல் உள்ள பிரமரந்திரத்தை அடைந்தால், அங்ஙனம் அடைந்தவருடைய தூல உடம்பு விரையில் அழிந் தொழியாது உறுதி பெற்று நெடுநாள் இருக்கும். அந்நிலையில் சூக்கும உடம்பும் அதற்கு சார்பாய் உறுதிப்பட்டு நின்று, அதனை என்றுமே உயிர் உள்ள உடம்பாகச் செய்யும்.

குறிப்புரை :

முன்னர், `மூவாறு` என்றது தூல உடம்பின் கூறுக ளாகிய பூதம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, இவற்றிற்கு முதலாக அகங்கார வகை மூன்று ஆகிய பதினெட்டினை, பின்னர், `கலைகள் பதினெட்டு` என்றது. புரியட்ட காயமாகிய சூக்கும உடம்பின் தத்துவம் எட்டும், பத்து வாயுக்களாகிய தாத்துவிகம் பத்தும் ஆகப் பதினெட்டினை. வாயுக்கள் தூல தேகத்தனவாயினும் அவற்றாலே சூக்கும உடம்பு செயற்படுதல் பற்றிச் சூக்கும தேகக் கூறுகளுடன் கூட்டி எண்ணினார். இக்கருத்தே பற்றிச் சூக்கும உடம்பு. `பிராணமயகோசம், எனப்படுதலை நினைக. `ஊறும் உடம்பு` என்றது மேல், `புண் கால் ஆக்கை` என்றது போன்றது என்னும் - எனச் செய்யும். சிக்கென்றிருத்தல் - உறுதிபெற்றிருத்தல்.
இதனால், விரைவில் அழிதற்பாலதாகிய தூல உடம்பை அங்ஙனமாகாது நீடியிருக்கச் செய்யுமாறு கூறப்பட்டது. இது மேல் மூன்றாம் தந்திரத்துள் `காய சித்தி` அதிகாரத்துள் விரிவாகக் கூறப்பட்டதாயினும். `உடம்புகளைப் பற்றிக் கூறும் இவ்விடத்தில் நினைவூட்டுதல் நன்று` என்னும் கருத்தால் சுருங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

பொழிப்புரை :

`தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்றுடம்பு களையும் ஒருங்குசேர்த்து ஓர் உடம்பிற்கு உவமித்தால், தூல உடம்பு முகத்தையும், சூக்கும உடம்பு கழுத்திற்குக் கீழும், காலுக்கு மேலும் உள்ள உடலையும், பர உடம்பு கைகால்களையும் ஒத்து நிற்கும் அவ்வாறு அமைந்த அந்தப் பேருடம்பு சிவனது திருவருளில் அடங்கும்.

குறிப்புரை :

மெய்யினில் தூலம் - கண்கூடாக விளங்குதலால் ஐயத்திற்கு இடமின்றித் துணியப்படுகின்ற தூல உடம்பு. பொய்யினில் பொருந்தும் சூக்க உடல் - காட்சிப் புலனாகாமையால் உண்மை எளிதில் துணியப்படாது நுண்ணிதாய் உள்ள சூக்கும உடம்பு. `தூலம், சூக்குமம்` என்பவற்றின்பின் `ஆக` என்பது வருவிக்க. காட்டும் உடல் - உயிர்க்கு அறிவைத் தரும் பர உடம்பு. இங்கு `உடலை` என்றதில் ஐ சாரியை; வேண்டாவழி வந்தது. முகத்தையும், உடலையும் என்பவற்றோடு இயைக்க `கையினில்` என்பதையும் `கையையும்` எனத்திரிக்க. இஃது உருபு மயக்கம். துல்லியம் - ஒப்பு. இதன்பின் `என்க` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `துல்லியம் என்க` என உரைக்க. ஈற்றில் நின்ற `உடம்பு` என்பதற்கு, இவ்வாறான உடம்பு,` என உரைக்க.
இதனால், `மூவகை உடம்புகளும் வேறுவேறு இயல்பின வாயினும் செயற்பாட்டின்கண் ஒன்றுபோல இணங்கிச் செயற்படும்` என்பது கூறப்பட்டது. `அதற்குச் சிறந்த காரணம் திருவருள்` என்றற்கு அஃதும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட்
டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.

பொழிப்புரை :

பகைவரைச் சினக்கின்ற வேகம் பொருந்திய போர்க் குதிரை அண்மை, சேய்மை என்னும் இடங்கட்குத் தக்கபடி முன்கால்களை எட்டி வைத்துப் பின் கால்களை வாங்கிக்கொண்டு தடையின்றி ஓடுதல் போலச் சூக்கும உடல் அண்மை சேய்மைகளுக்கு ஏற்ப விரைந்து செல்ல வல்லது. அதனால், உயிர் அவ்வுடலைப் பற்றிக் கொண்டு, அத்தன்மையில்லாத தூல உடம்புகளுள் ஒன்றை விட்டு நீங்கி மற்றொன்றை எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளும். தூல சரீரம் சூக்கும சரீரத்தின் மேல் போர்வைபோலவே உள்ளதாகும். அதனால், உயிர் தூல உடம்பில் ஒன்றை நீக்கி விட்டு, மற்றொன்றை எடுத்துக் கொள்ளுதல் மக்கள் தமது போர்வை ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றை எடுத்துப் போர்த்துக் கொள்ளுதல் போல்வதே.

குறிப்புரை :

`வல்லது` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன் மந்திரத்தினின்றும் வந்தது. `போர்வை ஒன்றை விட்டு ஒன்றை இட்டு ஏயும் அவர் என்ன உயிர் காயத்தை ஏயும்` என்க. காயம் - தூல தேகம். ஏயும் - பொருந்தும். `உயிர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `ஏயும் அவரென்ன` என்றாராயினும் `அவர் ஏய்த்தல் என்ன` என்றலே கருத்து என்க. தாம் கூறிய சொற் கிடக்கைக்கு ஏற்ப `அவர்` என்றார். ஆகவே கருத்திற்கு ஏற்ப அது `மக்கள்` எனப்பட்டது.
இதனால், `தூல தேகத்தை விட்டு உயிர் நீங்குதலே இறப்பு என்பதும், அது மற்றொரு தூல தேகத்திற் சேர்தலே பிறப்பு` என்பதும் கூறப்பட்டன. தூல தேகம் சூக்கும தேகத்தினின்றே தோன்றுவ தாயினும் அதனைக் கொண்டே சூக்கும தேகம் அறிதல் செய்தல்களை இயற்றலால் எடுத்துக் கொள்வதாகக் கூறப்பட்டது. இதனானே உயிர் பல பிறப்புக்களில் செல்லுமாறும் கூறப்பட்டதாம். பிறப்புக்களின் மாற்றம் வினை நிமித்தமாக நிகழ்வது.

பண் :

பாடல் எண் : 12

நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம்
ஆகும் நனாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று)
ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.

பொழிப்புரை :

இவ்வுலகில் ஓர் உடம்பை விட்டு நீங்கிய உயிர் இறைவனது அருளாணையின்படி வேறோர் உடலில் சென்று, அவ் வுடலுக்குரிய இடத்தை அடைந்து, முன்பு இருந்து இடத்தில் அனுபவித்த அனுபவங்களை மறந்து அவ்விடத்து வரும் இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் அவை எவை போல எனின், பாம்பு முன்பிருந்த உடம்பாகிய தோலை நீக்கிவிட்டுப் புதிய உடம்பைப் பெறுதல் போல்வதும், முட்டையிற் பிறக்கும் உயிர்கள் முன்பு முட்டைக்குள் இருந்து பின்பு வெளிவந்து வேறு இடத்தை அடைதல் போல்வதும், கனவில், முன்பு நனவில் நிகழ்ந்தவற்றை மறத்தல் போல்வதுமாகும்.

குறிப்புரை :

`அரனருளாலே` என்பது முதலாகக் கொண்டு உரைக்க. முதற்கண் `சென்று` என்பதற்கு மற்றோர் உடம்பில் சென்று என்பது பொருளாகும். இஃது இவ்வுலகிலே மறுபிறப்பு எடுப்பதையே குறித்தது. `ஆகும்` என்றனவும், `போலும்` என்றவாறேயாம். நனவு, கனவோடொப்ப, `நனா` எனப்பட்டது. அல்லது - வேறு நிகழ்ச்சி. போகல் - நிகழ்தல். `நனாவில் நிகழ்ந்தவற்றைக் கனாவில் மறந்து, அல்லது போகல் போல்வதுமாம்` என்க. பாம்பு தோல் உரித்தல் ஓர் உடலைவிட்டு வேறு உடலில் செல்லுதற்கும். அண்டசம் ஓர் இடம் விட்டு, வேறொர் இடத்தை அடைதற்கும், நனவில் நிகழ்ந்தவற்றைக் கனவில் மறத்தல் முன் பிறப்பில் நிகழ்ந்தவற்றை அடுத்த பிறப்பில் மறத்தற்கும் உவமையாகச் சொல்லப்பட்டன. `பன்னகம் அண்டசங்கள்` என்னும் சிவஞான சித்திச் செய்யுளையும்,l அதன் உரையையும் இங்கு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், மறுபிறப்பு உளதாதல் பற்றித் தூல தேகத்திற்கு வேறாய்ச் சூக்கும தேகம் முதலியன உளவாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.

பொழிப்புரை :

ஓர் உயிர் நிலத்தில் இறந்தபின் சூக்கும சரீரம் பற்றாகச் சென்று நரக சுவர்க்கங்களை அடைந்து அங்கு உள்ளவைகளைப் பார்த்து அவற்றால் வரும் துன்ப இன்பங்களை நுகர்ந்து, அந்த உலகங்களை விடுத்துத் தான் செய்த வினையில் மேற் கூறிய உலகங்களில் நுகரப்பட்டு எஞ்சி நிற்கின்ற வினைகள் தொடர்த லால், யோக சித்தர் ஓர் உடம்பை விட்டும் மற்றோர் உடம்பில் புகுதல் போல வேறு பிறப்பை அடைந்து மீண்டு நிலவுலகத்தில் அப்பிறப்பிற் குரிய உடம்பை எடுத்துக் கொள்ளும்.

குறிப்புரை :

`இறப்பு எய்திச் சூக்கம் காரணமாச்செல நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு உண்டு பண்டு தொடர (சூக்கம் காரணமாச் செல) பிறப்பு எய்திப் பிண்டம் எடுக்கும் எனக் கூட்டிப் பொருள் கொள்க. `ஓர் உயிர்` - தோன்றா எழுவாய்.
`சூக்கம் காரணமாக` என்பதும், `எய்தி` என்பதும் பின்னும் கூட்டுதற்கு உரியன. காரணம் - கருவி. புடைபெயர்தற்கு உரிய கருவி. செல - செல்லுதலால். `நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு உண்டு` என்றது, `வினையிருந்த வகைக்கு ஏற்ப முன்னும் பின்னுமாக அடைந்து கண்டு நுகர்ந்து` - என்றபடி. தூல உடம்பை விட்டுச் சூக்கும தேகத்தோடு இருத்தற்குப் பாம்பு தோல் உரித்தலும், மறுபிறப்பில் முன் பிறப்பில் நிகழ்ந்தவற்றை மறத்தலும் முன் மந்திரத்தில் உவமையாகக் கூறியபின், ஒருதூல தேகத்தை விட்டு மற்றொரு தூல தேகத்தை எடுத்தற்கு யோகிகள் பரகாயப் பிரவேசம் செய்தல் இம் மந்திரத்தில் உவமையாகக் கூறப்பட்டது.
இதனால், மேற்கூறியது உவமைகூறி வலியுறுத்தப்பட்ட துடன், சுவர்க்க நரக அனுபவங்களைக் கூறும் முகத்தாலும் சூக்கும தேகம் உண்மை நிறுவப்பட்டது. சுவர்க்க நரக லோகங்கட்கும் வேறு வேறு தூல உடம்பு உளவாயினும் நிலவுலகத் தூல உடம்பே இங்குச் சிறப்பாக எடுத்து, அதன் இயல்பு விளக்கப்பட்டது.


பண் :

பாடல் எண் : 14

தானவ னாகிய தற்பரந் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

பொழிப்புரை :

தான் சிவனேயாய் நிற்கின்ற சிவ யோகி, அது காறும் தான் அடைந்திருந்த நிலைகளை யெல்லாம் போக்கி, உடல் நீங்கினபின் அந்நிலைக்கு அப்பாற்பட்ட முடிநிலைப்பேற்றை அடைவான். அந்நிலையை அடையாது தாமேயாய் நிற்கின்ற மற்ற உயிர்கள் தாம் செய்த வினைக்கீடாகக் கிடைக்கின்ற இடங்களில் செல்வனவாய், விண்ணுலகிலும், மண்ணுலகிலும் புகுந்து துன்புறும்.

குறிப்புரை :

தற்பரம் - தனக்கு மேல் உள்ள பொருள். அதனைத் தான் தாங்குதலாவது அதன்கீழ் அடங்கியிருத்தல். அஃதாவது தனக்கென ஒன்றின்றி, எல்லாவற்றையும் அதனுடையதாகவே கண்டிருத்தல். `தான் அவன் ஆதலாவது இதுவே என்றற்கு, `தான் அவன் ஆகிய` என்றதனோடு அமையாது, `தற்பரம் தாங்கினோன்` என்றார். இதுவே ஞான சிவ யோகம். இந்நிலை `அருள் நிலை` என்றும், `சுத்த துரியநிலை` என்றும் சொல்லப்படும். அதனையும் கடந்தது ஆனந்த நிலையாகிய அதீத நிலை யாகலின் அதனை, `பரமம்` என்றார். பரமம் - மேல் எல்லை. `விண் மண், இரண்டுலகத்துள்ளும் உயர்வு தாழ்வான இடங்களில் உயிர் செல்லும்` என்றற்கு, அவற்றை வேறு போல வைத்து, `எய்தும் இடம் சென்றும்` `வானும் நிலனும் புகுந்தும்` வருந்தும் என்றார்.
இதனால், தூலதேகமே நிலையின்றி, மாறி மாறி வருவதாகச் சூக்கும தேகம் வீடுபெறுங்காறும், அல்லது ஊழி முடிவுகாறும் நிலைத்திருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

பொழிப்புரை :

மெய்ஞ்ஞானிக்கு உடம்பாவது சிவனது அரு ளாகிய உடம்பேயாம், அஞ்ஞானிக்கு உடம்பாவது புலாலால் ஆகிய அந்த உடம்பேயாம். அஞ்ஞானிக்குமேல் நிற்பவனாகிய யோகிக்குப் பைசந்தி வாக்கும் அதற்கு மேல் உள்ள சூக்குமை வாக்கும் தக்கபடி உடம்பாகும். ஞானத்தின் மேல் எல்லையாகிய மோன நிலையை எய்தியவன் முப்பாழையும் கடந்த முத்தி நிலையையே உடம்பாகக் கொண்டிருப்பான்.

குறிப்புரை :

சிவம் ஏய் தனு - சிவத்தைப் பொருந்தி உள்ள உடம்பு. அஃது அருளே. முதல் இரண்டடிகளில் முறையே மேல் நிற் பவனையும், கீழ் நிற்பவனையும் பற்றிக் கூறினமையின், மூன்றாம் அடியில் இடை நிற்பவனைப் பற்றிக் கூறினார். ஈற்றடி முடிநிலையை எய்தினோனைப் பற்றிக் கூறியது. எனவே, `ஞானி` என்றது துரிய நிலையில் நின்றவனையேயாம். மோனி, அந்த நிலையை அடைந் தவன். சீவன் முத்தனாவான் அவனே. யோகிகளுள் சவிகற்ப சமாதியை அடைந்தவன் பைசந்தி வாக்கைக் கடக்கமாட்டாது அதனுட் பட்டும், நிருவிகற்ப சமாதியை அடைந்தோன் சூக்குமை வாக்கைக் கடக்க மாட்டாது அதனுட்பட்டும் நிற்பன் என்றபடி. `உடம்பாகும்` என்பது மூன்றாம் அடி ஈற்றிலும் சென்றியையும். எனவே, மோனியைத் தவிர ஏனையோர் யாவரும் ஓரளவில் பந்தம் உடையவர்களேயாயினர். முப்பாழ் ஆவன பின்னர்க் கூறப்படும்.
இதனால், `யோகியரும், ஞானியரும் தூலசூக்கும சரீரங்களோடு கூடி நிற்பாராயினும் அவர் அவற்றால் கட்டுண்ணாது, மந்திர வடிவராயும் நிற்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு
எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

பொழிப்புரை :

மூவகை ஆன்ம வர்க்கத்தினருள் விஞ்ஞானகலர் நிலையை ஆணவமே சூக்கும தேகமாய் நிற்கும். இனி அந்த விஞ்ஞானகலர்க்கு அடைய இருப்பவராகிய பிரளயாகலருக்கு அசுத்த மாயையே எல்லா உடம்புமாய் இருக்கும். `ஞானம் இல்லாதவர்` எனப் படுகின்ற சகலர்க்குக் கன்மத்திற்கு ஈடாக வருகின்ற பிராகிருதங்களே உடம்பாகும். ஆகவே, அருள் உடம்பு மெய்ஞ்ஞானைத்தை எய்தினவர்கட்கே வாய்ப்பதாம்.

குறிப்புரை :

மிகு தனு - சூக்கும தேகம். இஃது ஒப்புமையாகக் கூறியது. `நுண்ணிய பந்தம்` என்றபடி. `ஏய்` என்பது `எய்` எனக் குறுகிநின்றது. ஆகவே, அதனையடுத்து `ஞானம்` என்றது முன் சொன்ன விஞ்ஞானத்தையாயிற்று. பிரளயாகலருள் நேரே முத்தி பெறுபவரன்றி, விஞ்ஞானகலராகி முத்தி பெறுபவரும் உளர் என்க. கன்மத்தால் வருவதை, `கன்மம்` என்றார். அவ்வாற்றால் வரும் தனு பெரும்பான்மை பற்றிப் பிராகிருத சரீரத்தைக் குறித்தது. `ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாகும்` என்றதனால், `ஏனையோர்க்கு அது வாயாது` என்பதனை வகுத்துக் காட்டி, இறுதியடியால் அதனை நிறுவினார்.
இதனால், மேற்கூறியவற்றுள் சிறப்புடையது ஒன்று இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மலமென் றுடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.

பொழிப்புரை :

அறிவுடையீர், தம் உடம்பை அருவருத்து நீக்கத் தக்கதாக அறிவும் அறிவையில்லாதவர் அதனையே தாம், என்றும் இருக்கும் இடமாகக் கருதி, அதன்கண் தனியான ஒருபற்று வைத்துப் போற்றிவருதலைக் கண்டீரன்றோ! அவர் நிலையை அடைந்திருக்கும் உயிர்கள் அதன் பயனாகப் பற்பல தூல தேகங்களை எடுத்து உலகங்களிலேயே உழலும்.

குறிப்புரை :

`வீடு பெறா` என்றபடி. `இருக்கின், பற்றும்` - என்னும் பயனிலைகட்கு, `அத்தகைய உயிர்கள்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `கண்டீர்; பற்றும்` எனக் கூறியவற்றால், `நீவிரும் அவ்வாறு நிற்பின் அந்நிலையை அடைவீர்கள்` எனக் குறித்தவாறு.
இதனால், `உடம்புகள் யாவும் அழுக்குப்பொருளே` என்பதும், அஃதறிந்து அவற்றின் நீங்குதலே அறிவுடைமை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 18

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.

பொழிப்புரை :

நல்ல சொற்களையே பேசுகின்ற வாக்கிலும், நல்ல நினைவுகளையே நினைக்கின்ற மனம் முதலிய அகக்கருவிகளிலும் இறைவன் மெல்ல மெல்ல வெளிப்பட்டு விளையாடுவான். நல்லன அல்லாத சொற்களையே கேட்க விரும்புகின்ற செவியையும், அவ்வாறே, அறியத் தகாத தம் தம் புலன்களையே அறிய விரும்புகின்ற கண் முதலிய ஏனைப் பொறிகளையும், நல்லன அல்லாதவற்றையே நினைக்கின்ற உட்கருவிகளையும் உடைய மக்கள் இவ்வுலகில் வறுமையால் பசி மிக்கவராய் வருந்துவர்.

குறிப்புரை :

`அவர்மறுமையில் நற்பிறப்பையும், பிறப்பற்ற வீட்டையும் அடைதல் எங்ஙனம்` என்பது குறிப்பெச்சம். `உடம்புகளை அருவருத்து நீக்கத் தக்கனவாக உணர்பவரே நல்ல வாக்கு. மனங்களையும், அங்ஙனம் உணராவதவர் தீயனவாகிய வாக்கு மனங்களையும் உடையவராய், அதுவதற்குத் தக்கபயனை அடைவார்கள் என்றபடி. ஆகவே, `வாக்கு மனங்கள் நல்லன வாகும்படி செய்து` அதனால், உடம்புகளின் நீங்கப் பெறுதலே செயற் பாற்று` என்பதாம்.
சிற்பி