எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்


பண் :

பாடல் எண் : 1

பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

பொழிப்புரை :

நன்கு அமைந்த உடலால் எழுகின்ற காமமும், பலவகையாகப் பேசுகின்ற பேச்சுக்களும், வெளிச்செல்லும் பொழுது விளங்கி நிற்கின்ற மூச்சும், அம்மூச்சுப் பெரிதாயவழி எழுகின்ற ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் ஆகிய இவைகளையெல்லாம் பிறர், `எங்கே போயின` என்று திகைத்து அண்ணாந்து பார்க்கும்படி உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்தொழியும்.

குறிப்புரை :

ஆகவே, `இதனை நிலையுடையதாக எண்ணிப் பற்றுச் செய்தல் நன்றன்று` என்பதாம். முதல் தந்திரத்தில் `யாக்கை நிலை யாமை` கூறியது அறத்தை வலியுறுத்தல் பற்றி. எனினும் ஞானத்தை உணர்த்தும் இவ்விடத்திலும் அதனையுணர்தல் இன்றி யமையாமை பற்றி, வேறொரு கருத்துப் பற்றிக் கூறுகின்றார். `பண்` என்னும் முதல் நிலை, பண்ணி அமைக்கப்பட்ட நல்ல நிலையை ஆகு பெயரால் உணர்த்தும். முறைப்படி அமைந்த இசை `பண்` எனப்படுவதும் அவ் வாற்றாலேயாம். `அந்நிலையில்தான் காமம் உளதாகும்` என்றற்கு, `பண் ஆரும் காமம்` என்றார். `மனத்தையும்` என்றதனோடு இயைய, ஏனை உம்மைகட்கு முன்பும் இரண்டன் உருபு விரிக்க. `அண்ணாந்து பார்த்தல்` என்பது, எங்கும் காணாது திகைத்து நிற்றலைக் குறிக்கும் குறிப்பு. பார்க்க - பார்க்கும்படி.
இதனால், `காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி,கண்,
கழிகின்ற கால்,அவ் இரதங்கள், தானம்,
மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.

பொழிப்புரை :

நிலையின்றி அழிவதாகிய உடம்பை இடமாகக் கொண்டிருப்பனவே செவி, கண் முதலிய அறிவுப் பொறிகளும், வாக்கு முதலிய செயற்பொறிகளும், அவற்றின்வழி வருகின்ற புல இன்பங்களும், அந்தக் கரணங்களுக்கு வலுவூட்டுகின்ற பிராண வாயு வும், ஒன்றையொன்றோடு முடிந்துவைத்துள்ள நாடிகளும், மற்றும் பல ஆற்றல்களுக்கு உரிய இடங்களும். ஆகவே, உடம்பு அழிந்தால், அவையும் அதனோடே அழிந்தொழிதலால், அழிவதாகிய உடம்பிற்கு அதனை அழியாது நிலைபெறுத்துவதொருதுணை எதுவுமில்லை.

குறிப்புரை :

`உடம்பின்கண் ஆகும்` என ஏழாவது விரிக்க. `ஆகும்` என்னும் செய்யுமென்னும் முற்றிற்குச் செவி, கண் முதலியபல பெயர்களும் முடிவாயின. செய்யுள் நோக்கி அப்பெயர்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. கால் - காற்று; பிராண வாயு. இரதம் - சுவை; என்றது இன்பத்தை.
இதனால், `தூல தேகம் அழிவுடையதாகலின், அதன் இயல்பை மாற்றுமாறில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இலையாம் இடையில் எழுகின்ற காமம்
உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.

பொழிப்புரை :

மாதரது நுண்ணிய இடையின்மேல் எழுகின்ற காம உணர்ச்சி மக்கள் உள்ளங்களில் உலையிடத்தில் உள்ள நெருப்புப் போல மிகுகின்ற ஆசையாலே பெருகி மிகும். ஆயினும் அந்த ஆசையால் சிறிதும் கலங்காது கல்போல உறுதியுற்று நிற்கும் உள்ளம் உடையவர்கள், சிவனது திருமுன்பில் காமம், குரோதம் முதலிய குற்றங்களோடு கூடாது மேன்மையுற்று விளங்குகின்ற ஒளி உடம்பைப் பெற்று வாழ்வார்கள்.

குறிப்புரை :

இலையாம் இடை - `இல்லை` என்றே சொல்லத்தகும் முறையில் அமைந்த இடை. `இடை` என்றது இடக்கர் அடக்கல். உலை வாய - கொல்லனது உலையின்கண் உள்ளவை; நெருப்பு இடம் பற்றிப் பன்மையாகக் கூறப்பட்டது. `உலைவாயன போலும் நேசம்` என அஃது உவமத் தொகையாய் வந்தது. `மூழ்குவிக்கும்` என்பதில் பிற வினை விகுதி தொகுத்தலாயிற்று. அதற்கு `அவற்றை` என்னும் செயப் படு பொருள் வருவிக்க. `உளத்து` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. `மின்னுடல்` என்றது, `ஒளியுடம்பு` என்றபடி. `திவ்விய சரீரம்` என்பர். சித்தத்தை உடையவரது செயலை, `சித்தம் திருமுன்னிடக்கே தாங்கித் திரியும்` எனச் சித்தத்தின் செயலாக உபசரித்துக் கூறினார். முன்னிடை - முன்னிடம். குவ்வுருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. சிவலோகத்தையே, `சிவ முன்னிடை` என்றார். `சிவ முன்னிலைக்கே` எனப்பாடம் ஓதுதலுமாம்.
இதனால், `நிலையில்லாத உடம்பினாலே சிவ புண்ணியங்களைச் செய்து நிலையுடைய வீட்டைப் பெறுதல் தக்கது` என்பது, அவ்வாறு செய்யாதாரது செயலையும், செய்தாரது செயலையும் ஒப்பிட்டுக் கூறுமுகத்தால் உணர்த்தி முடிக்கப்பட்டது.
சிற்பி