எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்


பண் :

பாடல் எண் : 1

தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து
மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி
ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று
வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.

பொழிப்புரை :

ஆறத்துவாக்களில், `தத்துவம் முப்பத்தாறு` என்பது முன்பே குறித்து, விளக்கம் தரப்பட்டது. (எனவே, அஃது இங்கு நினை வூட்டும் அளவே கூறப்பட்டதாம்.)

குறிப்புரை :

சொல்லுலகத்தில் முதலாவதாகிய மந்திரம் பதினொன்று, அவை `ஈாசனம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தி யோசாதம் என்னும் பிரம மந்திரம் ஐந்தும், `இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அத்திரம்` - என்னும் அங்க மந்திரம் ஆறுமாம். தன் என்றது உயிரை.
இவற்றை ஏற்க விரும்பாதவர்கள், `ஏழ்கோடி` எனப் பாடத்தைத் திருத்தினர். கோடி` என்பது ஏனையவைபோல எண்ணுப் பெயர் ஆகாமையை நோக்குக.
செய்யுள் நோக்கி - `எண்பான் ஒன்று வைத்த பதம்` என்பது பின் கூறப்பட்டது.
பதங்கள் எண்பத்தொன்று. `அவை யிவை` என்பதைச் சிவநெறிப் பிரகாசச் செய்யுள் - 179,80,81 - இன் உரையிற் காண்க. இங்கு எடுத்துக் கூறின் விரியும்.
வன்னம் ஐம்பத்தொன்று. வன்னம் - எழுத்து. அவைகளை வடமொழி பற்றி யறிக. இவற்றுள் ஒன்று நீக்கி, ஐம்பது என்றலும் வழக்கு என்பதனை, ``ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்`` என்னும் மந்திரத்தான் அறிக.
மேதினி - புவனம். புவனம் இருநூற்றிருபத்து நான்கு. தத்துவங்கள் தோறும் புவனங்கள் உள்ளன. அவற்றின் எண் ணிக்கையைச் சிவஞான மாபாடியம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தில் காண்க.
கலை ஐந்து. `அவை நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` - என்பன. வந்த - ஆன்மாவிற்கு வழியாகக் கிடைத்தன.
இந்த அத்துவாக்கள் ஆறிலும் உயிர் வியாபித்திருத்தலால், அது செய்த வினைகள் சஞ்சிதமாய், இவ்வத்துவாக்களைப் பற்றிக் கிடக்கும். அவை உள்ள வரையில் உயிருக்கு உண்மை ஞானம் விளங்கமாட்டாது. அதனால் பக்குவம் எய்திய உயிர்கட்குச் சிவன் குருவாகி வந்து, `அத்துவ சுத்தி` அல்லது `கலா சோதனை` - எனப்படும் நிருவாணதீக்கையில் ஞானவதியாகவாவது, கிரியாவதி யாகவாவது செய்யும் ஆகுதிகளால் சஞ்சிதத்தைத் துடைத்து, உபதேசத்தைச் செய்தருளுவான். அங்ஙனம் அவன் செய்த உபதேச மொழியை உயிர் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து பின் நிட்டை எய்தும்.
ஞானவதியாவது குண்டம், மண்டலம், வேதிகை முதலிய எல்லாவற்றையும் குரு தமது அகத்திலே கற்பித்துக் கொண்டு செய்வது. கிரியாவதியாவது, அவைகளை வெளியில் யாவரும் காண அமைத்துச் செய்வது.
இதனால், அத்துவாக்களின் தொகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து)
ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும்
கூடினர் கூடிக் குறிவழி யேசென்று
தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.

பொழிப்புரை :

(அத்துவாக்களைத் தரிசிக்க, அஃதாவது உள்ளபடி நேரிலே காண விரும்பியவர்கள் பிராசாத நெறியில் நின்று) உடம்பிலே கீழிருந்து பாவிக்கப்படுகின்ற நெருப்பு மண்டலம், நீர் மண்டலம், நிலா மண்டலம் - என்னும் மூன்று மண்டலங்களை உள்ளே உணர்ந்து இடை கலை, பிங்கலை வழியாக ஓடுகின்ற அந்தத் துணைவரோடு தாமும் ஓடித் தூல சூக்கும தத்துவங்களாகிய இருபத்தைந்து தத்துவங்களைக் கண்டார்கள். அதன் பின்பு அந்தத் துணைவரால் ஆகாமையின், குரு காட்டிய அந்தக் குறியான வழியிலே சென்று பர தத்துவங்களைத் தேடினர். அவ்வாறு தேடியும் அவை தரிசனப்படாமையால், ஒன்றும் தோன்றாது திகைத்து நின்றுவிட்டார்கள்.

குறிப்புரை :

`ஓடும் அவர்` - என்றது உருவகம். ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு, புருட தத்துவம் ஒன்று இவை இருபத்தைந்து தத்துவம். வித்தியா தத்துவங்கள் `புருடன்` என ஒன்றாய் அடக்கப் பட்டன. ஆன்ம தத்துவம் தூலமும், வித்தியா தத்துவம் சூக்குமமும் ஆகும். சிவ தத்துவம் பரம். அஃதாவது அதிசூக்குமம். தூல சூக்கும தத்துவங்கள் சகலர் பிரளயாகலர் கட்குச் சரீரமாய் அமைதலால், அவை யோகக் காட்சியில் காணப் படுவவாயின. `உள் இருபத்தைந்து` - என்றதும் இதுபற்றி, சிவ தத்துவம் அவ்வான்ம வருக்கத்தினருக்கு வேறாய் நிற்றலின், அவை அங்ஙனம் காணப்படாவாயின.
சிவ தத்துவங்களையும் அனுபவமாக உணர்ந்த பின்பே ஆன்மாச் சிவத்தை அடைய இயலும். தத்துவம் முப்பத்தாறும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் அடங்கியுள்ளன. ஏனை நான்கு அத்துவாக்களும் தத்துவத்தில் அடங்கிவிடும். ஆகவே, தத்துவங் களைக் கண்டுவிட்டால், கலைகளைக் காண்டலும் எளிதில் கூட, அத்துவாக்கள் அனைத்தும் காணப்பட்டனவாய்விடும்.
இதனால், அத்துவாக்களில் சில பகுதிகளைக் காணுமாறும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலமள வாக்கிஅ தீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.

பொழிப்புரை :

`நமசிவாய` என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஏனைக் கிரியா மந்திர யோக மந்திரங்களைப் போல எண்ணாமல், உண்மையை அனுபவமாக உணர்விக்கும் ஞான மந்திரமாகக் கொண்டு) சகலசாக்கிரத்தில் (சகலஐந்தவத்தைகள் நிகழாதவாறு தடுத்து,) ஞானவத்தைகளாகிய சுத்த சாக்கிரம் முதலியனவே நிகழுமாறு, அந்தச் சாக்கிரம் முதலிய ஐந்திலும் ஐந்து வகையாகச் சுத்த மானதம் ஆகிய அறிவினாலே கணித்து, ஆதாரங்கள் ஆறும், அவற்றிற்கு மேல் ஏழாவதாகிய நிராதாரமும் உடம்பளவினவாய் நீங்க, உடம்பைக் கடந்த துவாதசாந்தமாகிய மீதானத்தில் சென்று பொருந்திய அன்பே வடிவாய் நிகழும் திருக்கூத்தை உயிர் சென்று அடைவதே, எல்லையில் இன்பத்தைச் சிவம் பெருக்கி, அதற்கு வழங்குகின்ற சிவமாம் நிலையாகும்.

குறிப்புரை :

`நமசிவாய` என்பதை ஒரு பெயராக்குதற் பொருட்டு அதன் ஈற்றில் மகரமெய் புணர்க்கப்படுதலை, `நமச்சிவாயம்சொல்ல வல்லோம்`3 என்னும், அப்பர் திருமொழியால் உணர்க. `நமச் சிவாயம்` என்பதை `சிவாயம்` என்றது முதற்குறை `நமசிவாயம் ஐந்தும்` எனமாற்றி முதலிற் கூட்டி, `ஐந்தினையும் சாக்கிர சாக்கிரம் ஆதியில் தலை முதலாக ஆக்கி` - என உரைக்க. தலை - முதல். முதலாவது. நமசிவாய இரண்டாவது, சிவாயநம. மூன்றா வது,சிவாய, நான்காவது,சிவ. ஐந்தாவது, சி. இவையே சுத்த சாக்கிரம் முதலிய ஐந்திலும் கணிக்கும் முறை. `தூலம்` - என்றது உடம்பை `அதீதம்`, `கடந்தது` என்னும் பொருளது. இவ்வியல்பினை,
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற``
என்னும் திருவுந்தியாரால் உணர்க. `ஆதார நிராதாரயோகங்கள் பாவனை மாத்திரமே` என்பதை அந்நூல்.
``ஆக்கில் அங் கேஉண்டாய், அல்லதங் கில்லையாய்ப்
பார்க்கில் பரமதன் றுந்தீபற;
பாவனைக் கெய்தாதென் றுந்தீபற``
எனக் கூறிற்று.l இந்தப் பாவனாயோகங்கள் ஆன்மாத் தன் முனைப்பு அறுதற்குரிய சாதகங்களாம். அச்சாதகங்களால் அம்முனைப்பு அற்றால், ஆன்மா `யான்` என்றும், `எனது` என்றும் எழுந்து உலகத்தில் சென்றும் பற்றும் நிலை ஒழியும். அஃதொழிந்த பொழுது, மீதானத்தில் இறைவனது திருக்கூத்தின், சிலம்பொலி கேட்கும்` அது கேட்டவுடன் ஆன்மா இல்லார்க்குக் கிழியீடு நேர் பட்டாற் போலப் பேரார்வத்துடன் ஓடி அவனையே அடைந்து அவன் மீதே அன்பு செலுத்தி அவனது இன்பத்தில் அழுந்தியிருக்கும். அதனைத் திருக்களிற்றுப்படியார்,
``ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியேசென் றொத்தொடுங்கி - ஓசையின்
அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தில்
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து``.3
என விளக்கிற்று.
இவ்வெண்பாவில் கூறப்பட்ட அந்த நிலையே இங்கு அதீதம் எனப்பட்டது.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``.
(தொல், பொருள் - பொருளியல்.) எனத் தொல்காப்பியரும், அவ்வாறே,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையே அது,`` * *திருவருட்பயன் - 80.
என உமாபதி தேவரும் கூறியவாறு. அன்பே இன்பத்திற்குக் காரணம் ஆதலின், ஆனந்த தாண்டவத்தை உயிரினது அன்பான தாண்டவம் என்றும், அந்நிலையில் அந்த ஆனந்தத்தை வழங்குகிற சிவத்தை. (இன்ப வெள்ளத்தைத்) தேக்கும் சிவம் என்றும் கூறினார். அன்பே சிவம். (முதல் தந்திரம் - அன்புடமை) என்றதும் இங்குக் கூறிய அன்பையே என்பதையும் இதனானே உணர்க.
அன்பு நிலையே ஆனந்த நிலையாம் அன்றி வெறும், அறிவு நிலை ஆனந்த நிலை ஆகாமையை இங்கு உணர்ந்துகொள்க.
இதனால், `அத்துவாக்களைக் கடக்குமாறும்` கடந்தவழி உளதாகும் பயனும் கூறப்பட்டன.
சிற்பி