எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்


பண் :

பாடல் எண் : 1

நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.

பொழிப்புரை :

கீழாலவத்தையாய் யாவராலும் நன்கு உணர நிகழும் கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் போல்வனவே, நுண்ணறி வுடையோரால் மட்டும் ஊன்றியுணரப் படுகின்ற மத்தியாலவத்தை யாகிய சகல சாக்கிரம் முதலிய ஐந்தும். அந்த ஈரைந்து அவத்தை களிலும் உள்ள இருபத்தைந்து தத்துவங்களும் சுத்த மாயையிலும் உள்ளன. (யோகாவத்தையில் அவை செயற்படும்) அவைகளி னின்றும் உயிர் தனது உணர்வு விடுபட்டுச் சென்று, திருவருளில் முன் பெல்லாம் தான் கண்டு வந்த கனவு போல உணரப்படுகின்ற காட்சியில் தோய்கின்ற நிலையே சுத்த சாக்கிரம் முதலிய சுத்தாவத்தைகளாம்.

குறிப்புரை :

`கேவல ஐந்தவத்தைகளை உவமையாகப் பற்றிச் சகல ஐந்தவத்தைகளின் உண்மையை உணர்தல் போல, அவ்விரண்டையும் உவமையாகப் பறஅறிச் சுத்த ஐத்தவத்தைகளின் உண்மையை உணர்ந்து கொள்ளல் வேண்டும்` - எனவும்,
பிரகிருதி மாயை, அசுத்த மாயை இவற்றின் தொடர்பு கீழாலவத்தை மத்தியாலவத்தைகளோடு ஒழிய, யோகாவத்தையில் சுத்த மாயையின் தொடர்பு மட்டுமே உளதாம்` - எனவும்,
`அந்தச் சுத்தமாயைத் தொடர்பும் நீங்கித் திருவருள் பற்றாக நிகழ்வனவே சுத்தாவத்தைகள்` - எனவும் கூறியவாறு. யோகாவத்தை களின் உண்மை யோக நூல்களால் விளங்கும்.
`இங்கு, `சுத்தம்` எனப்படுவது உடம்போடு கூடி நிற்கும் பொழுதே திருவருள் வயப்பட்டு நிற்பது ஆகலின், இது சகலத்திற் சுத்தமே, `தனியான சுத்தம் வேறு உண்டு` என்பது மேலேயும் குறிக்கப்பட்டது. `அசுத்த மாயையில் உள்ள தத்துவங்களைப் போல சுத்த மாயையும் அவ்வகைத் தத்துவங்கள் உள்ளன என்பது சிவாகமங் களின் துணிபு` என்பதைச் சிவஞானமாபாடியம் முதலியவற்றால் உணர்க.
`அன்ன` - என்பது இடைக்குறைந்து நின்றது. `அன்னவற்றில் ஆன` என உருபுவிரித்து, `விந்து சத்தியில் உள்ளன` என முடிக்க. `இன்` வேண்டாவழிச் சாரியை, `உயிர்` என்றது அதன் உணர்வை, `கலந்ததும் இவ்வாறே` - என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. `இவ்வாறு` எனச் சுட்டியது, முன்னர், `தூலம், சூக்கம்` என்றவற்றை.
இதனால், மேல், `சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும் என்னும் மந்திரத்தில் பொதுவாகச் சுட்டிப்போந்த சுத்தாவத்தைகளின் உண்மை தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.

பொழிப்புரை :

`சாக்கிரத்தில், `அதீதம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்பட்ட பொருளையும் தம்மையும் வேறு வேறாக அறிதல் இன்றி அப்பொருளேயாய் அழுந்தித் தற்போதத்தை இழந்திருப்பர். அதனால் அவர், இடம் பெயரமாட்டாது கிடந்த கிடப்பில் கிடக்கும் பசுங்குழவி போல்பவாவர்.
சாக்கிரத்தில் `துரியம்` - என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்படும் பொருளையும், தம்மையும் வேறு வேறாக அறிந்து, அந்த அளவில் அனுபவிக்கும் உணர்வு உடையவராவர், அதனால், அவர் இடம் பெயர்ந்து தவழ்ந்து செல்லும் குழவி போல்வர்.
சாக்கிரத்தில், `சுழுத்தி` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் உணரப்படும் பொருளையும், உணரும் தம்மையும் வேறுவேறாகப் பகுத்து நன்குணர்வர். அதனால் அவர் வளர்ச்சியடைந்து நன்கு நடக்கும் சிறுபிள்ளைகள் போல்வர்.
சாக்கிரத்தில், `சொப்பனம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், பொருளில் மேலும் மேலும் நாடும் நாட்டம் மிகுந்து இருப்பர். அதனால் அவர் நன்கு ஓடி ஆடும் பருவச் சிறுபிள்ளை களோடு ஒப்பர். (மகளிரில், `பெதும்பைப் பருவத்தாரோடு ஒப்பர்` எனலாம்.)
சாக்கிரத்தில், `சாக்கிரம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவர். அதனால் அவரக்ள கட்டிளமையுடையவரோடு ஒப்பர். (எனினும், ஆடவர்களில் பிரமசாரிகளையும், பெண்டிரில் கன்னிகைகளையும் இங்கு உவமையாகக் கொள்க.)

குறிப்புரை :

இம் மந்திரம். `சாக்கிரத்தில் சகல மாகிய மத்தியா லவத்தையின் இயல்பும், சாக்கிரத்தில் சுத்தமாகிய நின்மலா வத்தையின் இயல்பும், ஒரு தன்மையனவே` என உணருமாறு அவற்றின் இயல்புகளைப் பொதுமையில் வைத்து உடலினைச் சிலேடையாக உணர்த்திற்று. மத்தியாலவத்தையில், உணரப்படும் பொருள் உலகமும், நின்மலாவத்தையில், உணரப்படும் பொருள் சிவமும் ஆகின்ற இவ்வளவே வேறுபாடு என்க. இதனை,
``ஆணவத்தோடு அத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோடு அத்துவிதம் சாருநாள் எந்நாளோ``
என்னும் தாயுமானவர் வாக்கும் ஓராற்றான் விளக்கும்.
முன்னர் நின்ற, `பிறந்தார்` முதலிய மூன்றும் `பிறக்கப் பெற்றார்` என வினையாலணையும் பெயராய எழுவாய்கள். பின்னர் நின்ற, `கிடந்தார்` முதலிய மூன்றும் பயனிலைகள். கிடந்தார் முதலியவரோடு ஒப்பவரை, `கிடந்தார்` முதலியோராகவே உபசரித்தார். ``கிடந்தார்`` என்றது முதலியன அப் பருவத்தினரையே. அதிகாரப் பெயருள் `பருவம்` என்றதன் பொருள் இதனான் நன்கு விளங்குகின்றது.
ஈற்றடியில், `நனவிற் கனவு ` என்பதன் பின் `தோன்றப் பெற்றார்` என்பதும், `ஓடல்` என்பதன் பின்` உடையார்` என்பதும் தொகுக்கப்பட்டன.
`நற்செய்தி` என்றது அதனை உடைய பருவத்தைக் குறித்தது. அப்பயனிலைக்கு, முன்னர்ப் போந்தவற்றுக்கு இயைய, `நனவில் சாக்கிரம் தோன்றப் பெற்றார்` என்னும் எழுவாய் வருவித்ததுக் கொள்க.
இதனால் சாக்கிரத்தில் நிகழும் இருவகை ஐந்தவத்தைகளின் இயல்பு உண்மையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

பொழிப்புரை :

சிவநெறி மார்க்கம் நான்கனுள் சற்புத்திர மார்க்க மாகிய கிரியையில் நிற்பின் சிவ தத்துவங்கள் ஐந்தும் காட்சிப்படுவன வாம். சிவத்தோடு தன்னை ஒன்றவைத்து உன்னும் சகமார்க்க மாகிய யோகத்தால் சிவனது திருவருளை நிரம்பப் பெறுதல் கூடும். சிவனது ஞானத்தை உணர்தலாகிய சன்மார்க்கத்தால் ஆன்மாவினது ஞானமும் சிவஞானமேயாய், அதுவே தற்சொரூபமாய் நிற்கும். அந் நிலையில் சிவனது எல்லாக் குணங்களும் ஆன்மாவுக்கு உளவாகும். அப்பொழுது ஆன்மாவும் சிவனைப் போலவே எங்கும் நிறைந்து விளங்கும்.

குறிப்புரை :

கல்வி - வித்தை; ஞானம், என்றது சிவ ஞானத்தை. குறி - குறித்தல்; உணர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `தன்` - என்றது ஆன்மாவை. சிவமாம் தன்மையை எய்தினமை தோன்ற, `திரு மேனி` என்றார். `பலவும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அந்த அறிவில்` எனச் சுட்டு வருவிக்க. `அளவு` என்பது `சராசரம்` என்றதனோடும் இயையும். சரியை, கிரியையிற் செலுத்துமுகத்தானே பயன்படுதலின், அஃதொழிந்தவற்றையே கூறினார். கிரியை, யோகம், கல்வி ஆகிய காரணங்கள் காரியங்கலாகவே உபசரிக்கப்பட்டன. மூன்றாம் அடி தளை மயங்கி வந்தது.
இதனால், ஆன்மா நின்மலாவத்தையை அடையும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
போதம் கலைகா லமேநியதி மாயையும்
நீதி அராகம் நிறுத்தினன் என்னே.

பொழிப்புரை :

`சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை` என்னும் சிவ தத்துவங்களையும், அவற்றின் கீழ் உள்ள `கலை, காலம், நியதி, வித்தை, அராகம், மாயை` என்னும் வித்தியா தத்துவங் களையும் அநாதி நிலையினின்றும் இறங்கி ஆதியாய் நிற்கின்ற சிவன் படைத்தருளினான் என்று உணர்க.

குறிப்புரை :

`ஆம் தத்துவம்` என்றது `அராகம்` என்பதனோடும் சென்று இயையும். `போதம்` என்றது `வித்தை` என்னும் பொருட்டாய்ப் பொதுவாக `வித்தியா தத்துவம்` எனவும், சிறப்பாக அவற்றுள் ஒன்றாகிய `வித்தை` என்றும் இருபொருள் தந்து நின்றது. கலை முதலிய ஐந்தும் கூடிய நிலையிலே ஆன்மா `புருடன்` எனப்படுவ தன்றி, புருட தத்துவம் தனித் தத்துவம் அன்றாதலின், அதனை இங்குக் கூறிற்றிலர்.
இதனால், அத்துவாக்களில், `ஆறாறு` எனப்பட்ட தத்துவங் களில் சிவதத்துவம் ஆவனவும், வித்தியா தத்துவம் ஆவனவும் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.

பொழிப்புரை :

(மேற்கூறிய இருவகைத் தத்துவங்களையும் கூட்டித் தொகை காணின்) `சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை, கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை` - எனப் பன்னிரண்டாம். இவற்றுள் `புருடன்` என்பது ஏனையபோல ஒரு தத்துவம் அன்று. கலை முதலிய ஐந்தனோடும் கூடி நிற்கும் ஆன்மாவே.

குறிப்புரை :

இங்ஙனம் தொகையை வேறு மந்திரத்தில் வைத்துக் கூறியதற்குப் பயன், `புருடன்` என ஒரு தத்துவத்தைக் கூட்டியதும், அது பற்றிய விளக்கத்தைத் தந்ததும் ஆகும். ஆதி - முதல். என்றது, `தத்துவம்` என்றபடி. செய்யுள் நோக்கி வித்தியாதத்துவங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. சைவத்தின் சிறப்புத் தத்துவங்களை மட்டுமே கூறினார், ஆன்ம தத்துவங்கள் பிறராலும் கொள்ளப்பட்டு, விளங்கிக் கிடத்தல் பற்றி.
இதனால், மேற்கூறப்பட்ட தத்துவங்கட்குத் தொகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

பொழிப்புரை :

`ஆணவம், மாயை, கன்மம்` - என மலங்கள் மூன்றாம். அவற்றை எதிர்நிரல் நிறையாக வைத்து, அரிசிக்கு முளை, தவிடு, உமி - இவைபோல்வனவாக உணர்க. ஆன்மாவும் சிவனைப் போலச் சித்துப் பொருளேயாயினும், அரிசி போன்ற ஒரு தன்மையை அஃது உடைமையால் அரிசிக்கு உமி முதலிய குற்றங்கள் அநாதியாக இருத்தல் போல, ஆணவம் முதலிய குற்றங்கள் அநாதியே உளவாக, அது சிவனைப் போலப் பதியாகாது, பசுவேயாய் நின்றது. உனது தன்மையை இங்ஙனம் நீ உள்ளவாறு உணர்ந்து, பாசங்களில் பற்றுக் கொள்ளாது விடுத்துப் பதியாகிய சிவனைப் பற்றி இன்புறுவாயாக.

குறிப்புரை :

`முளை அத்தவிடுமி போலக் காணும்` என மாற்றி உரைக்க. `ஆன்மாவும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். தண்டுலம் - அரிசி. ஆக்கம், உவமை குறித்தது நின்றது, ஆணவத்தைப் பிற சமயிகள் கொள்ளாமையால், `மலம் மூன்று` என்பதை எடுத்தோதி வலியுறுத்தினார்.
இதனால், அத்துவாக்கள் யாவும் மாயையேயாக, அவை பற்றி வேறும் இருமலங்கள் ஆன்மாவிற்கு உளவாதல் கூறப்பட்டது.
``மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்``
என்னும் சிவஞான சித்தியாரையும், அதற்கு மாதவச் சிவஞான யோகிகல் உரைத்த உரையையும் காண்க.

பண் :

பாடல் எண் : 7

பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின்
பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.

பொழிப்புரை :

உலகில் பாலைத் தரும் பசுக்கள்யாவும் ஒரே நிறம் உடையன அல்ல; பல நிறம் உடையன. (அது போல, சீவர்களாகிய பசுக்களும், `பசுத்துவம்` எனப்படும் பந்தத்தைத் ஒரே வகையாக உடையன அல்ல; ஒரே வகையை உடையனவாயின், பந்தத்தினின்றும் விடுபடுதலும் எல்லாப் பசுக்களுக்கும் ஒரு காலத்திலே நிகழ்தல் வேண்டும். அவ்வாறில்லாமையால், பந்த வேறுபாடு பலதிறப் பட்ட தாம்.) ஆயினும், பசுக்கள் தரும் பயனாகிய பால் ஒரு நிறமேயாம். (அது போல அவை அடையும் வீடுபேறு ஒருதன்மையுடையதே.) இனிப் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவன். (ஆகவே, அவன் ஒரு தன்மையனேயன்றிப் பல தன்மை உடையவன் அல்லன். (அதுபோலச் சீவர்களை, `பெத்தம், முத்தி` என்னும் இரு நிலைகளிலும் உடன்நின்று நடாத்தும் பதி ஒருவனே, ஆகையால் அவன் பதித்தன்மை ஒன்றே உடையனன்றிப் பசுக்கள் போலச் சார்த்ததன் வண்ணமாய்த் தன்மை வேறுபடுபவனல்லன்.)
ஆயன் பசுக்களை மேய்க்காமல் அவற்றின் இச்சைப்படி விட்டு விடுவானேயானால் இவை ஆயனைச் சென்று சேராமல், காட்டில் திரிந்து அல்லற்பட்டே ஒழியும். (அதுபோல, சிவன் சீவர்களைக் கண் ணெடுத்துப் பார்க்காமல் விட்டுவிடுவானேயானால், அவை அவனை அறிந்து இன்புற மாட்டா, பந்தத்தால் விளையும் துன்பத்தில் கிடக்கும்.
``மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே``
எனப் பின்னரும் பசுக்களுக்கு மேய்ப்பான் இருத்தல் இன்றியமையாது எனக் கூறுவார்.)

குறிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி பெற்று நின்றது. `பசுக்கள் தலை வனைப் பற்றி விடாவே` எனப் பாடம் ஓதுபவர்கள்; `சிவனது அருள் இன்றியே சீவர்கள் சிவனை அடைய இயலும் எனக் கூறுவோராவர்.
`பசுக்கள் கொட்டிலை அடைந்த பின்பும் ஆயன் அவைகளைப் புறக்கணித்துவிட்டு விட்டொழிவான் அல்லன்` என்பதையும் நோக்குக. இதனால், `மேய்க்கும் கோல்` என்பது திரோதான சத்திமட்டும் அன்று; அருட்சத்தியுந்தான் - என்க.
பால் பிறர்க்கு மட்டுமே பயன் படுவன அல்ல. கன்றுகளின் நலத்தில் கருத்துடைமையால், அக்கன்றுகளை வளர்த்தல் பசுக்கள் அடைகின்ற பயனேயாம். மேலும் வறட்சுப் பசுக்கள் போற்றப் படாமல், மிக்க பாலைத் தரும் பசுக்களே போற்றப்படும். அதனால் பால் அதனைத் தரும்பசுக்கள் அடையும் பயனுமாகும். ஆகவே அது சீவன்கள் அடையும் வீடுபேற்றிற்கு உவமையாதற்கு இழுக்கில்லை.
இதனால், `மேற்கூறப்பட்ட மலங்கள் உயிர்தோறும் வேறு வேறு வகையாய் உள்ளன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

பொழிப்புரை :

தாத்துவிகங்களாகிய உடம்பு, அதில் கரணங் களாய்ப் பொருந்தியுள்ள ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், அந்தக் கரணங்கள் ஆகிய இவற்றின் இயல்பினை அறியாமையால் அவை களையே `தான்` என மயங்கிக் கெடுகின்ற அந்த உயிர், (அந்த அறியா மையை நீக்கிக் கொள்ள முயலாமல்) மேலும் மேலும் அந்த அறியா மையையே வளர்த்துக் கொண்டிருக்குமானால், அது அடைவது ஏழு நரகங்களிலும் சென்று வீழ்ந்து அங்குள்ள துன்பத்தைத்தான்.

குறிப்புரை :

`வீடு பெறுதல் இயலாது` - என்றபடி. `உடல்` என்பது பெரும்பான்மையும் தூல உடம்பையே. இந்தியம், `இந்திரியம்` என்பதன்மரூஉ. நல்வினைசெய்வார் அரியர் ஆகலின், அதன் பய னாகிய சுவர்க்கத்தை அடைதலைக் குறியாதொழிந்தார்` இந்நிலை யிலே நிற்கும் உயிர்கட்குச் சுத்த நனவாதிகள் நிகழா என்பது கருத்து. எனவே, தத்துவங்களின் இயல்பை உணருமுகத்தால் தம்மை அவற்றின் வேறாக உணர்ந்த உயிர்கட்கே திருவருள் கிடைக்கச் சுத்த நனவாதிகள் உளவாம். சிவஞானபோதத்திலும்,
``இவ்வான்மாத் தன்னை அவ்விந்திரியத்தின் வேறாவான் காணவே
தமது முதல் சீபாதத்தை அணையும் ``*
என்றது காண்க. இங்குக் கூறப்பட்ட தத்துவ தாத்துவிகங்கள் வைதிக சமயத்தார் பலர் கூறுவனவேயாதலின், அவற்றை எடுத்தோத்த தாகக்கூறாது, அனுவாதமாகக் கூறினார். சிவாகமங்கள் நரகங்களைப் பலவாகக் கூறினும் `ஏழ் நரகம்` - என்பது ஒரு பொது வழக்கு.
இதனால், தத்துவஞானத்தவரே சுத்தநனவாதி பருவங்களைத் தலைப்படுவாராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம்
சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம்
பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம்
மற்றது உண்டி கனாநன வாதலே

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` - என்னும், காரண அவத்தை மூன்றனுள் கேவலத்தில் துரியாதீதம், உயிர், `நான்` என் -கின்ற தன்னுணர்வும் இன்றி, ஆணவத்தில் அழுந்தி அதுவேயாய்க் கிடந்த நிலை `யான்` என்னும் உணர்வு முகிழ்க்கின்ற கேவலத்தில் துரியம், மேற் குறித்த நிலையில் இறைவன் அவ்வுயிருக்கு மூலகன் மத்தைக் கூட்டு வித்த நிலை. கேவலத்தில் சுழுத்தி, மூலகன்மத்தோடு காரண சரீரமாகிய மாயா தத்துவத்தைக் கூட்டிய நிலை. இவைகளில் ஆன்மாவிற்கு வினையை ஈட்டுதல் நுகர்தல்கள் இல்லை, கேவலத்தில் சொப்பனம் கால நியதிகளைக் காட்டுவித்த நிலை. சாக்கிரம் கலை வித்தை அகாரகங் களைக் கூட்டிய நிலை. இந்தச் சொப்பன சாக்கிரங்களில் தான் உயிர் வினைகளை ஈட்டுதலும் நுகர்தலும் நிகழும்.

குறிப்புரை :

இவற்றுள் முதல் மூன்றினையும் முறையே `அநாதி கேவலம், விஞ்ஞான கேவலம், பிரளயகேவலம்` - என்பர். `காதல்` என்றது மயக்கத்தை. அஃது ஆகுபெயராய் மாயையைக் குறித்தது.
இதனால், மும்மலங்களைக் கூறிய இயைபு பற்றி, அவற் -றோடு தொடரும் கேவல ஐந்தவத்தையின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

பொழிப்புரை :

நனவில் கனவு இல்லாமைபோலக் கனவிலும் நனவு இல்லையாதலின், சுழுத்தியில், சுழுத்தி முதலிய மூன்று நுட்ப அவத் -தைகள் மட்டுமே உள்ளனவாம். (அவைகளை `சுழுத்தியிற் சுழுத்தி, சுழுத்தியில் துரியம், சுழுத்தியில் துரியா தீதம்` எனக் கூறிக் காண்க.)
இங்ஙனம் கூறியதனானே, சொப்பனத்தில் சாக்கிரம் ஒழிந்த நான்கும் உளவாதல் பெறப்பட்டது.
நனவில் சொல்லப்படும் துரியமும், துரியாதீதமும் தாமே தனித்து நிகழும் நிலையில் துரியத்தில் இரண்டும், துரியாதீதத்தில் அஃது ஒன்றுமாகவே நிகழும். (அவை, `துரியத்தில் துரியம்` துரியத்தில் துரியாதீதம்` எனவும், `துரியாதீதத்தில் துரியாதீதம், எனவும் சொல்லப்படும்.)
``ஐந்துசாக்கிரத்தில்; நான்கு கனவினில்`` என்னும் சிவஞான சித்திச் செய்யுளுக்கு இதுவும் பொருளாமாறு அறிந்து கொள்க.

குறிப்புரை :

`இதனுட் கூறியன யாவும் கீழாலவத்தை` என்க.
பகுதி - மூலப்பகுதி. தற்கூட்டு மாயை - கீழாலவத்தையில் ஆன்மாவிற்குக் கூட்டப்படும் மாயை. `அது மூலப்பகுதியே` என்ற படி. `வந்தவழி` என்பது `வந்து` எனத்திரிந்தது. வந்தவழித் தாமே உளவாம் என்க. மூன்றாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. முதற் கண் ``நனவிற் கனவில்லை`` என்றது `கனவில் நனவு இல்லை` என்பதனைத் தெளிவிக்கக் கூறிய உவமை.
இதனால், கீழாலவத்தை பற்றிய சில நுட்பங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.

பொழிப்புரை :

தத்துவம் முப்பத்தாறில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியா தத்துவத்தில் புருடன் ஒன்றும் ஆக இருபத்தைந்து தத்துவங்களை ஆன்மாத் தன்னின் வேறாகக் கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சாக்கிரமாகும்.
பின்னர், வித்தியா தத்துவத்தில் எஞ்சியுள்ள ஆறு தத்துவங் களையும் அவ்வாறு கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சொப்பனமாகும்.
பின்னர், சிவ தத்துவம் ஐந்தனையும், `இவை பிரளயாகலர் சகலர்கட்கு பிரேரக மாத்திரையாயும், விஞ்ஞானகலருக்குத் தனு கரண புவன போகங்களாயும் பயன்பட்டுத் தோற்றமும் அழிவும் உடைய அநித்தியப் பொருள்களேயன்றி, இவை தாமே சிவனது இலய போக அதிகாரத் திருமேனிகளாகிய நித்தியப் பொருள்கள் அல்ல; அத் திரு மேனிகள் இவற்றின் வேறாய்ச் சத்தி வடிவாவனவே` எனத் தெளிந்து, அவை பற்றியிருந்த மயக்கத்தின் நீங்குதலே சகலத்தில் சுத்த சுழுத்தி யாகும். இவற்றிற்குப் பின் எஞ்சி நிற்பது காரண நிலையில் உள்ள சுத்த மாயையே,

குறிப்புரை :

`சிவ தத்துவங்கள் பிரேரக காண்டம்` - என்பதை நோக்காதார், `அவை யின்றியும் வித்தியா தத்துவங்கள் நீங்கிய வழியும் சிவதத்துவங்கள் தொழிற்படும்` எனவும் இம்மந்திரத்திற்குப் பொருள் உரைப்பர்.
மலாவத்தைகட்கே தத்துவங்களின் தொழிற்பாடும், அவை யின்மையும் காரணமாவதன்றி, நின்மலாவத்தைக்கு அவை காரணம் ஆகாமையையும், `நின்மலாவத்தை திருவருளானே நிகழ்வன` என்பதையும் அவர் நோக்கிலர்.
சகலத்தில் சுத்த சாக்கிரம் முதலியனவும் சகலத்தில் சகல சாக்கிரம் முதலியனபோல இலாடத் தானத்தே நிகழ்தல் பற்றி இவற்றையும் `சாக்கிர சாக்கிரம் முதலியனவாகக் கூறுவர். எனினும் இடம் நோக்கி `அவை இவை` எனக் கொள்ளப்படும்.
இம் மந்திரத்துட் கூறப்பட்டன நின்மலாவத்தைகளே.
இதனால், `நின்மலாவத்தைகளாவன இவை` - என்பதை வகுத்துக் கூறத் தொடங்கி, முதல் மூன்றின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன்இல்லை யாமே.

பொழிப்புரை :

(முன்னை மந்திரத்திற் கூறியவாறு) உயிர் மாயா காரியங்களையெல்லாம் கடந்து எஞ்சி நின்ற காரண நிலையில் உள்ள சுத்த மாயை தாரகமாகச் சிவத்தை உணர்ந்து நிற்றலே சகல சாக்கிரத்தில் சுத்த துரியமாகும்.
பின்னர் ஆன்மா அந்த நிலையிலும் நில்லாமல் விட்டு நீங்கி, அந்தக் காரணமாயையும் தொடர்பின்றி நிற்கச் சிவமே தாரகமாக அதனை உணர்ந்து நிற்றல் சகல சாக்கிரத்தில் சுத்த துரியாதீதமாகும். இந்நிலையில் உடம்பு இருந்தும் இல்லாததேயாம்.

குறிப்புரை :

`உடம்பு வழியாக மலவாசனைகள் உயிரைத் தாக்கா` என்பதாம். `மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை` என்றாரேனும், `புருடன் மாயையில் வந்ததே துரியத்தில் ஆயமுறை` என்றலே கருத்தென்க. சேய்மை, `சேய்` எனமுதனிலை மாத்திரமாய் நின்றது. `சேய்மை` என்றது `அதீதம்` என்றவாறு. கேவலம் - தனிமை; கட்டற்ற நிலை. `விந்துவும் தன்னைவிட்டுச் செல்ல, உயிர் தான் சிவத்தில் சென்றக்கால், சேய்மைத்தாகிய கேவலமாம்` என்க.
இதனால், முன்னை மந்திரத்திற் கூறியவைபோக, எஞ்சி நின்ற இரண்டன் இயல்புகள் கூறப்பட்டன. இவை ஐந்தும் தச காரியத்துள் முதல் மூன்றினை ஒன்று கூட்டிப் பகுத்தன என்க.

பண் :

பாடல் எண் : 13

அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா
அதீதத் துரியத் ததனால் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய அனலின் துரியத்து முற்றுமே.

பொழிப்புரை :

நின்மல துரியாதீத நிலையில் சிவனையன்றிப் பிறி தொன்றையும் தாரகமாகக் கொள்ளாமையால், சடத்தன்மை சிறிதும் இன்றித் தூய அறிவேயாய் நிற்கின்ற ஆன்மா, அந்நிலையில், பழஞ் சுடராகிய சிவனது அவ்வருள் வழியே, தொடர்ந்து அவனையே உணர்ந்துநிற்குமாயின், அவ் வருளால் தனது தூய்மை கெடாது, என்றும் அந்நிலையிலே நிற்கும் நிலை கைகூடுவதாகும்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்யாவிடில், மீளக் கீழ்நிலையை அடையும்` என்பதாம். `துரியாதீதம்` என்பது, `அதீத துரியம்` எனப் பின் முன்னாகி நின்றது. `முதிய அனல்` என்பதைச் சுட்டும் `அது` என்னும் சுட்டுப் பெயர், செய்யுள் பற்றி முன் வந்தது. `அனல்` என்றது, சுடர் என்னும் பொருளது ஆதலின் ``அதனால்`` என்றது `அருளால்` என்றதேயாம். முதலடியை மூன்றாம் அடியாகவும் அனு வத்தித்துக் கூறியது. `இங்குக் கூறுமாறு நில்லாவிடின் ஆன்மாத்தான் அரிதில் அடைந்த நிலையை இழந்துவிடும்` என்பது உணர்த்தற்கு. இயமானன், `யஜமானன்` - என்பதன் திரிபு. `வேள்வித் தலைவன்` என்பது இதன் பொருள். யஜமானன்` என்பது உலகவழக்கில் பொதுவாகவழக்கினும், செய்யுள் வழக்கில் உயிரையே குறித்தல் அன்றிப் பிறவகையில் பொருள் தாராது. முதுமை, பழமையைக் குறித்தது. `அநாதி` என்பதை, `பழமை என்றல் தமிழ் வழக்கு. இறுதியில் உள்ள `துரியம்`, `கடப்பு` என்னும் பொருளதாய்ப் பாசங்களைக் கடந்ததை உணர்த்திற்று`.
இதனால், அரிதிற் பெற்றதொன்றைப் பேணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.

பொழிப்புரை :

பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளில் முப்பத் தைந்து கருவிகள் மட்டுமே கூடிச் செயற்படுவது கேவல சாக்கிரம். (இதுவும் சகல சாக்கிரம்போலப் புருவநடுவில் நிகழும்` என்பது மேற் பல இடங்களில் கூறப்பட்டது.)
சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும் ஆகப் பன்னிரண்டு தத்துவங்களும் ஆன்மாவை எப்பொழுதும் விட்டுக் நீங்குவன அல்ல, அதனால், `புருடன்` என ஒன்றுபோலக் கூறுமிடம் எல்லாம் அவத்தை பேதத்தில் இப்பன்னிரண்டு தத்துவங்களும் கொள்ளப்படும். `அவற்றுள் முப்பத்தைந்து கருவிகள் மட்டுமே கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்` என்றமையாலும், அவற்றுள் `புருடன்` என்பது, மற்றும் பதினொரு கருவிகள் கூடியது ஆகையாலும், நாற்பத்தாறு கருவிகள் கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்.
கேவலசாக்கிரத்தில் செயற்படும் நாற்பத்தாறு கருவிகளாவன; ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரிய விடய மாகிய சத்தாதி ஐந்து, கன்மேந்திரிய விடயமாகிய வசனாதி ஐந்து, அந்தக் கரணம் நான்கு, புருடன் ஒன்று, பிரணாதி வாயுக்கள் பத்து என்பன, ``புருடன்` என்பது பன்னிரண்டு கருவிகளை அடக்கியது - என்பது மேலே கூறப்பட்டது.
ஆன்மா புருவ மத்தியிலே நிற்பினும் தொண்ணூற்றாறு கருவிகளும் செயற்படின் சகல சாக்கிரமும், அவற்றுள் ஐம்பது கருவிகள் நீங்க, கேவல சாக்கிரமும் நிகழும் என்க.
சகல சாக்கிரத்தில் ஆன்மா புலன்களை அறிவதில் தீவிரமாய், நன்குணர்ந்து நிற்கும். கேவல சாக்கிரத்தில் ஆன்மாப் புலன்களை அறிந்தும் அறியாதது போன்ற மந்த உணர்வு உடையதாய் இருக்கும். இவை அவ்விரு சாக்கிரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு.
முப்பத்தைந்து கருவிகளில் ஞானேந்திரியம் ஐந்தும், கன் மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்துக் கருவிகள் நீங்க, ஏனை இருபத் -தைந்து கருவிகள் மட்டும் செயற்படுவது கேவல சொப்பனம். இந்நிலையில் ஆன்மாக் கண்டத் தானத்தில் நிற்கும். கைகண்ட - சாக்கிரத்தில் நன்கு துய்க்கப்பட்ட.
அவ்விருபத்தைந்தில் சித்தம், பிராணன், புருடன் - ஆகிய மூன்று கருவிகள் மட்டுமே செயற்படுவது கேவல சுழுத்தி. (பொய் என்றது ஐம்புலன்களை. `சுழுனையில் பொய்கண்ட மூவர் உளர்` என இயைத்துக் கொள்க. `இவருள் புருடனும் ஒருவன்` என்பதாம்.) `சுழுத்தி நிகழும் இடம் இருதயம்` என்க.
பொருள்களை உணரும் ஆற்றல் உடைய புருடன் இரு -தயத்தை விட்டு உந்தியை அடைந்தால் அந்நிலை கேவல துரியமாம். அப்பொழுது பிராணன் மட்டுமே உளதாக இருவரே இருப்பர். (இரு கருவிகள் மட்டுமே அவ்விடத்தில் செயற்படும்` என்றபடி.) இங்குப் புருட தத்துவத்தையே உயிராக உபசரித்தார். `உந்தி மேவில்` என்றதனால் முன்பு இருதயத்தில் நின்றமை பெறப்பட்டது.

குறிப்புரை :

உந்திக்குகீழ் உள்ளது மூலாதாரமே. ஆதலால், `புருடனோடு உடன் இருந்த ஒரு கருவியாகிய பிராணனும் நீங்க, புருடன் ஒருவனும் மூலாதாரத்தை அடைந்தால் கேவல துரியா தீதம் நிகழும் - என்பது குறிப்பால் விளங்கிற்று.
கீழாலவத்தைகளில் செயற்படும் கருவிகளை, `தொகைக் குறிப்பு` - என்னும் குறிப்பு வகையால் மரபு பற்றி உணர்த்தினார். என்க.
இதனால், `கீழாலவத்தைகட்கு உரிய கருவிகள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.

பொழிப்புரை :

(`புரியட்டக சரீரம்` - என்பது பெரும்பான்மையும் சூக்குமசரீரத்தையும், சிறுபான்மை பரசரீரத்தையும் குறிக்கும். இது சிவஞான போத இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண சிவஞான மாபாடியத்தாலும் விளங்கும்.)
தன்மாத்திரை ஐந்தும், அந்தக் கரணம் மூன்றும் ஆக எட்டும் கூடியது சூக்கும சரீரம். இவ்விடத்தில் சித்தம் பிரகிருதியில் அடங்கும்.
மூலப் பிரகிருதி ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் ஆக எட்டும் கூடியது பர சரீரம்.
எனவே, `புரியட்டகம்` என்பது இவ்விரு சரீரங்கட்கும் பெயராதல் விளங்கும். (இவை இரண்டுமே இம் மந்திரத்திற் குறிக்கப்படுகின்றன.)
இரு புரியட்டக சரீரங்களும் தூல சரீரத்தோடு பொருந்தி நிற்கும் நிலையே இருவகைச் சாக்கிராவத்தையாகும். (இருவகை சகலமும், கேவலமும், இவ்வாறு சுருங்கக் கூறினாராயினும் கேவல சாக்கிரத்திலும் கனவிற் போலவே புரியட்டக சரீரம் நிற்கும் என்க.) சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், பிராணாதி பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்கள். ஆகையால் அவற்றை எண்ணாமல் விடுக்கச் சூக்கும சரீரத்தில் மூன்று அந்தக்கரணங்கள் மட்டுமே செயற்படும் நிலை கேவல சொப்பனமாம். கேவல சாக்கிரத்தல் இருவகை இந்திரியங்கள் செயற்படும். கேவல சொப்பனத்தில் அவை செயற்படா. (இங்குப் பரசரீரம் கருத்தில் கொள்ளப்படவில்லை.) பரசரீரத்தில் `பிரகிருதி, புருடன்` என்னும் இரண்டு மட்டுமே தொழிற்படும் நிலை கேவல சுழுத்தியாம். (இங்கும் பிராணன் எண்ணப்படவில்லை.) பரசரீரத்தில் புருடன் ஒன்று மட்டுமே செயற்படும் நிலை கேவல துரியமாம். (இங்கும் பிராணன் எண்ணப்பட வில்லை. ஒரு கருவியும் இன்றி ஆணவ மாத்திரம் இருத்தலே கேவல துரியாதீதம்` என்பது கருத்து.)

குறிப்புரை :

கேவல துரியாதீதத்தில் பிரகிருதி சிறிதும் அறிவைப் பிறப்பியாது, இருளாயே இருக்கும் என்க.
இதனால், கீழாலவத்தைக் கருவிகள், வேறு வேறு சரீரங்களாதல் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.

பொழிப்புரை :

சாக்கிரத்தில் சாக்கிரமாவது உயிர் பொறிகளின் வழியாகப் புறத்தே உலாவிப் புலன்களைப் புதிது புதிதாக உணரும் நிலை.
சாக்கிரத்தில் சொப்பனமாவது, புறத்துச் சென்று புதிய காட்சி -களைக் காணாது முன்பு கண்டவற்றைப் பற்றியே நினைந்திருத்தல்.
சாக்கிரத்தில் சுழுத்தியாவது, முன்பு கண்ட காட்சிகளை நினைதலையும் விடுத்துப் பொதுமையின் நிற்றல்.
சாக்கிரத்தில் துரியமாவது, புறப்பொருள்களால் விளைந்தது துன்பமாயின் அதனைப் போக்கவும், இன்பமாயின் அதனைக் காக்கவும் ஆன வழிகளைப் பலவாக எண்ணுதல்.
சாக்கிரத்தில் துரியாதீதமாவது, அவ்வாறு எண்ணுதல் இன்றி, துன்பம், அல்லது இன்பத்திலே மூழ்கித் தன்னை மறத்தல்.

குறிப்புரை :

இவையே `சகலத்திற் சகலம்` - என்றும், `மகாசகலம்` என்றும் சொல்லப்படுவன என்க. இவை இனிது விளங்குதற் பொருட்டு, அரிய பொருளை மறந்து கைவிட்டவன் நினைவு வந்த பொழுது அதுபற்றி மூர்ச்சித்தல், தெளிந்து புலம்பல், விட்ட இடத்தை நினைத்துப் பார்த்தல் முதலியவற்றை அதீதம் முதலியனவாகக் கூறிக் காட்டுவர்.
`அதீதத்து ஊண் ( அநுபவித்தலை) நந்தி (விடுத்து) உள்நாடல் இலாமையாம் என்க.
இதனால், சகலத்தில் சகல சாக்கிரம் முதலியவற்றின் இயல்புகள் அனுபவத்தில் வைத்து உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டமறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாத காணல்
அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.

பொழிப்புரை :

(மேல், `நனவிற் கனவில்லை` என வந்த மந்திரத்தில் சித்தாந்தம் கூறிய நாயனார். இது முதல் மூன்று மந்திரங்களால் சில பூர்வ பக்கம் கூறுகின்றார்.)
கனவு நனவுபோல மிகத் தெளிவாக நிகழ்தல் சொப்பனத்தில் சாக்கிரம். (இதுவே, `சொப்பனத்தில் சொப்பனம்` என்பது சித்தாந்தம்.)
கனவு தெளிவாக அன்றி, மந்தமாக நிகழ்தல் சொப்பனத்தில் சொப்பனம். (இது வேறன்று என்பது சித்தாந்தம்.)
கனவில் காட்சியாகக் காணாது, கருத்தாக மட்டும் சிலவற்றை உணர்தல் சொப்பனத்தில் சுழுத்தி. அந்த உணர்வும் இன்றி இருத்தல் சொப்பனத்தில் துரியம் (இதனானே, `உணர்வு கனவில் உண்டாகும் இன்பத்துன்பங்களிலே அது அதுவாக அழுந்துதலே சொப்பனத்தில் துரியாதீதம்` - என்பது பெறப்படும்.)

குறிப்புரை :

`கனவில் நனவில்லை` என்பதே சித்தாந்தம். `கண்ட, காணாத` என்பன அஃறிணை பன்மை வினைப் பெயர்.

பண் :

பாடல் எண் : 18

சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

பொழிப்புரை :

சுழுத்தியில் ஒருகால், `இது நல்ல உறக்கம்` என அதனை உணர்தல் சுழுத்தியில் சாக்கிரம். சுழுத்தியில் `நாம் நன்கு உறங்குகின்றோம்` எனத் தன்னை உணர்தல் சுழுத்தியில் சொப்பனம். (இவை இரண்டும் நிகழில் சுழுத்தி யில்லையாம் என்பது சித்தாந்தம்.)

குறிப்புரை :

சுழுத்தியை உணர எழுகின்ற அறிவைச் சுழுத்தியில் தோய் கின்ற அறிவு அழிக்க, யாதும் தோன்றாதநிலை சுழுத்தியில் சுழுத்தி, அவ் எழுச்சியும், அழிப்பும், தோன்றாது அடங்கும் நிலை சுழுத்தியில் துரியம். (இதனானே, `அவ்வடக்கத்தால் எழுகின்ற உறக்க இன்பத்தில் ஆழ்ந்துவிடுதல் சுழுத்தியில் துரியாதீத நிலை` என்பது பெறப்படும்).

பண் :

பாடல் எண் : 19

துரிய நனவாம் இதம்உணர் போதம்
துரியக் கனவாம் அகம்உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியத்
துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :

துரியத்தில் பேருறக்கத்தில் விளைகின்ற மிக்க இன்பத்தினைக் காலத்தொடு ஒட்டி நெடிதுணர்தல் துரியத்தில் சாக்கிரம். அவ்வின்பத்தை உணராது தன்நிலையை உணர்தல் துரியத் தில் சொப்பனம். துரியத்தில் திருவருள் உணர்வு தோன்றல் துரியத்தில் சுழுத்தி. துரியத்தில் திருவருட்கு முதலாகிய சிவத்தை உணர்தல் துரியத் தில் துரியம். (இதனால், சிவத்தில் ஒடுங்கல் துரியத்தில் துரியாதீத மாதல் கொள்ளப்படும்.)
(இவற்றுள், `முதற்கண் கூறிய நிலையே துரியத்தில் துரியம்` என்பதும், அவ்வின்பத்தில் தோய்ந்து, அதுவேயாய்க் கிடத்தலே துரியத்தில் துரியாதீதம்` என்பதும், `பிறவெல்லாம் கீழாலவத்தைக் கண் நிகழா` என்பதுமே சித்தாந்தம்.)
ஏகான்ம வாதிகள், `கீழாலவத்தையில் நிகழும் சுழுத்தியில் சீவன் பிரமமாய்விடும்` எனவும், `அதனால் அங்கு நிகழ்வது பிரமானந்தமே` எனவும் கூறுவர். இம்மந்திரத்திற் கூறிய பூர்வ பக்கமும் அவர்களது கொள்கையோடு ஓராற்றான் ஒத்துள்ளன்.
இனி `இங்குக் கூறப்பட்ட துரியம் பரதுரியமே` எனக் கொள்வாரும் உளர்.
துரியாதீத நிலை இங்குக் கூறப்படாமையால், அதில், `சித் தாந்தத்திற்கு வேறாய்ச் சொல்லப்படுவன இல்லை` என்பதாகின்றது.

குறிப்புரை :

வியோமம் - பரவியோமமம். பூர்வ பக்கங்களையும் உணர்ந்து கழித்தாலன்றிச் சித்தாந்தத்தில் தெளிவு பிறவாது ஆகலான், அதுபற்றி இம்மூன்று மந்திரங்களாலும் கீழாலவத்தை பற்றிய பூர்வ பக்கங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

அறிவறி கின்ற அறிவு நனவாம்
அறிவறி யாமை அடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாயின தான துரியமே.

பொழிப்புரை :

ஆன்மாத் தத்துவங்களின் இயல்பை அறியுமுகத் தானே தன்னியல்பை அனுமித்தறியும் நிலை சகலத்தில் சுத்த சாக்கிரம். (இதனை, `ஆன்மரூபம்` என்க.) தத்துவங்களின் இயல்பை உணரும் முகத்தால் அவற்றால் தனக்கு உண்டாகும் பாச அறிவை நீக்கி நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சொப்பனம். (இதனை, `தத்துவ சுத்தி` என்க.) பாச அறிவை நீக்கிய ஆன்மாப் பதியறிவை நாடி அது தோன்றாது நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சுழுத்தி. (இதனை, `ஆன்ம தரிசனம்` என்க. `சிவரூபம்` இங்கு உடன் நிகழும்.) பதியறிவை நாடி அதனை அறிந்த ஆன்மா, அந்த அறிவில் தனது அறிவு ஒடுங்கத் தான் தோன்றாது அது வேயாய் நிற்கும் நிலை சகலத்தில் சுத்த துரியமாம். (இதுவே, ஆன்ம சுத்தியும், சிவதரிசனமும், சிவயோக மும் என்க.) இதற்கு மேல் ஆன்மாத் தன்னால் பற்றப்பட்ட சிவம் விளைக்கின்ற ஆனந்தத்தில் மூழ்கிப் பிறிதொன்றையும் அறியாது நிற்றலே சகலத்தில் சுத்த துரியாதீதம் என்பது குறிப்பால் கொள்ளக்கிடந்தது. அதுவே `ஆன்ம லாபம்` என்க.

குறிப்புரை :

ஆன்ம சுத்தி, சிவ தரிசனம், சிவயோகம் இவை உடன் நிகழ்ச்சியாய் நிகழ்தல் பற்றி அம்மூன்றையும் ஒன்று கூட்டிச் சுழுத்தி துரியங்களாகப் பகுத்துக் காட்டினார். இவற்றிற்கு முன் இரண்டை, `சொப்பனம்` என ஒன்றாகக் காட்டினார்.
மேல், `ஆறாறில் ஐயைந்து` எனவும், `மாயையில் வந்த புருடன்` எனவும் போந்த மந்திரங்களை இங்கு உடன்வைத்துக் காண்க. மூன்றாம் அடியில் வகரமெய் விரித்தல் `அறிவையறிதலால் வரும் அறியாமை சுழுத்தி` என்க.
இதனால், நின்மலாவத்தையில் சில உட்கூறுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்து பின்
தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.

பொழிப்புரை :

வியாபகப் பொருளாகிய ஆன்மா, அந்த வியா பகத்தைத் தடுத்து அணுத்தன்மைப் படுத்திய ஆணவாதி பாசம் ஐந்தி னின்றும் நீங்கித் தனது வியாபகத்தைத் தலைப்பட்ட நிலை உண்மைச் சுத்த சாக்கிரம். (இதுவே சீவன் முத்தியாம்.)
சீவன் முத்தியில் மாயையாகிய உடம்பு இருத்தலால், அது வழியாக ஏனைப் பாசங்களின் வாசனைகளும் உளவாம். அவ் வாசனைகள் பெரும்பான்மையும் நீங்கி, அதிகார மலவாசனை நின்ற விடத்து, அனந்தேசுராதி பதங்களில் விருப்பம் உண்டாகும். அவ் வாற்றால் அப்பதங்களில் இருத்தல் உண்மைச் சுத்த சொப்பனம் (இஃது அதிகார முத்தியாம்.)
பின்பு அதிகாரமலம் நீங்கிப்போக மல வாசனை நின்ற விடத்து நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளையும் உள்ளடக்கிப் பெரு வியாபகமாய் நிற்கின்ற சாந்தி யதீத கலையில் சத்தி தத்துவத்தில் உள்ள புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த சுழுத்தி. (இது போக முத்தியாம்.)
போக மல வாசனை நீங்கி, இலய மல வாசனை நின்றவிடத்து, அச்சாந்தியதீத கலையில் உள்ள சிவதத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த துரியம். (இஃது இலய முத்தியாகும்)
(சாந்தி கலையில் சாதாக்கிய தத்துவ புவனத்தை அடைந் தவர்களும், சாந்தியதீத கலையில் உள்ள புவனங்களை அடைந் தவர்களும், `அணு சதாசிவர்கள்` எனப்படுவர். சுத்த வித்தை, ஈசுரம் ஆகிய தத்துவ புவனங்களை அடைந்தவர்கள் `வித்தையேசுரர்கள்` என்றும், `மந்திர மகேசுரர்கள்` என்றும் இருவகையினராய் இருப்பர்.)
(இலய முத்தி `உண்மைச் சுத்த துரியம்` என்றதனானே, ஆன்மா அனைத்து மல வாசனைகளும் சிறிதும் இன்றி நீங்கப் பரம சிவனோடு இரண்டறக் கலக்கும் சாயுசச்ச நிலை உண்மைச் சுத்த துரியாதீதம் ஆதல் விளங்கும்.)
இவையெல்லாம் பராவத்தைகளாம்.)

குறிப்புரை :

இவ்வாற்றால், சீவன் முத்தி, அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி, பரமுத்தி - என்பன உண்மைச் சுத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன சுழுத்தி துரிய துரியாதீதங்களாதல் போந்தவாறு அறிக.
`விட்டு, நயந்து, நின்று` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்து, `சூக்கம்` என்பதன் பின் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடு முடிந்து, உண்மைச் சுத்த சாக்கிரம் முதலிய மூன்றனையும் முறையே குறிப்பால் உணர்த்தின. `சூக்கம்` என்றது துரியத்தை.
பின்வந்த `விட்டு` என்பது, `விட்டவழி` என்பதன் திரிபு. அது `நந்த` என்பதனோடு முடிந்தது. `ஞானம்` என்பது `வித்தை` என்னும் பெயர்க்குப் பரியாயமாய், `வித்தைகள், வித்தையீசர்``* என்போரைக் குறித்தது. `வன்னம்` என்றது அவத்தையை, `மேலீடு` என்றது, `பராவத்தை` என்றபடி. நந்துதல் - வளர்தல்.
இதனால், உண்மைச் சுத்தமாகிய பராவத்தைகளின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 22

ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.

பொழிப்புரை :

சகலசாக்கிரத்தில் முப்பத்தாறு கருவிகளும் குறைவின்றிச் செயற்படும். அந்தச் சாக்கிரத்திற்குப் பின்னர் அதிலே, `சொப்பனம், சுழுத்தி` என்பவையும் நிகழும். அவைகளில் இளைத்து மடங்கும் கருவிகள் அசுத்த மாயையின் காரியங்களாம். அவை காலம், நியதி முதலியன. அவை செயற்படுதல் சிவதத்துவங்கள் செலுத்துதலினாலேயாகலின், `அவை செயற்படா. எனவே, சிவ தத்துவங்களும்செயற்படாமை பெறப்பட்டது. சிவதத்துவங்கள் ஐந்தில் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி என்பவை முறையே ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே போவதால், சகலத்தில் சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை நிகழும் என்க.
`உளனோ, இலனோ` - என்னும் ஐயம் நிகழுமாறு உயிர்ப்பின்றிக் கிடப்பது, அதற்குமுன் துரியநிலையில் இருந்த அந்த ஆன்மாவேயாம். (எனவே, விழிப்பு நிலையிலே உயிர்ப்பின்றி மூர்ச்சித்துக் கிடத்தலே சகலத்தில் துரியாதீத மாயிற்று.)

குறிப்புரை :

இவையெல்லாம் மத்தியாலவத்தைகள், எய் பகுதி - வினைத்தொகை. எய்த்தல் - இளைத்தல். பகுதி - தொகுதியுள் சில கூறுகள். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். `முந்த ஆனவன்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. `உந்த ஆனவன்` என்றலும் ஆம். இங்கும் துரியம் `சூக்கம்` எனப்பட்டது.
இம்மந்திரத்திற்குச் சித்தாந்ததத்துள் ஓரிடத்தும் பெறப்படாது அவரவர் கருதியவாறே உரைத்த உரைகள் உள.
இதனால், வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் கூடுதல் குறைதல்களாலே மத்தியாலவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும்
ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென் றறியும் அறிவை யறிந்தபின்
ஈதென் றறியும் இயல்புடை யோனே.

பொழிப்புரை :

(சுருதியும், குரு மொழியும் ``ஒன்று அவன்தானே`` என்றபடி,* `தன்னோடு ஒப்பவைத்து எண்ணுதற்கு மற்றொரு பொருள் இன்றித் தான்ஒன்றேயாய தனிமுதற் பொருள் ஒன்று உண்டு` என வலியுறுத்திக் கூறுகின்ற அப்பொருளை) மத்தியாலவத்தை கீழா லவத்தைகளில் மட்டுமே அகப்பட்டு உழன்ற இவ்வளவு காலமும், `இது` என்று நான் உணரவில்லை (யோகாவத்தையை அடைந்த பொழுது அதனைச் சிறிதே உணர்ந்தேன்.) நின்மலாவத்தையை அடைந்தபின் அதனைத் தெளிவாக உணர்ந்தேன். அதனை அவ் வாறுணர்ந்த பின் பிறிதொன்றையும் அரிய முயல்கின்றிலேன். (`அதனையே அறிந்து நின்றேன்` என்பதாம்.) அவ்வாறு அதனை உணரும் உணர்வை எய்திய பின்புதான் நான் மெய்யுணர் வுடையேனாயினேன்.

குறிப்புரை :

அவத்தைகளே அதிகாரப்பட்டு வருதலால் `இத்தனைக் காலமும்`-என்றது பயன்படாத அவத்தையிற் கிடந்த காலத்தையே குறித்தது. ஆகவே, அறிந்த காலம் பயன்படும் அவத்தை நிகழ்ந்த காலம் ஆயிற்று. `அறிந்தபின்` - என்ற அனுவாதத்தால், அறிந்தமை தானே பெறப்பட்டது. அறியற்பாலதாய பொருளை அறிவதே அறிவாதலின், அங்ஙனம் அறியும் பொழுதே அறிவராந் தன்மையை மக்கள் பெறுதல் பற்றி, ``அறியும் இயல்புடையேன்`` என்றார். `உடையேன்` என்னும் ஆக்கவினைக்குறிப்பில் ஆக்கச் சொல் தொக்கு நின்றது. அடைதலே அறிவிற்குப் பயன் ஆதலின், `அறிந்தபின்` என்றது, `பெற்றபின்` என்றதேயாம்.
ஞாயிற்றின் ஒளியால் இருள்நீங்கிப் பொருள்களைக் காண் கின்ற கண் அவ்வொளியால் ஞாயிற்றையே நோக்கியவழி அதற்கு அந்த ஞாயிறன்றிப் பிறிதொரு பொருள் தோன்றாதவாறு போல, முதல்வனது அருளால் மலம் நீங்கிப் பொருளியல்புகளை உள்ளவாறு உணர்ந்துவரும் உணர்வு, அம்முதல்வனையே உணர்ந்தவழி அவ்வுணர்விற்குப் பிறிதொருபொருள் புலனாகாது` என்பதே, ``ஈதென்றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்`` என்பதனால் கூறப்பட்டது.
இதனால், அவத்தைகளின் பயன்கள் அனுபவ முறையால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய்
அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதனுல காதி
இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.

பொழிப்புரை :

உலகிற்கு முதல்வனாகிய இறைவன் அறிவுடைப் பொருளாகிய உயிர்களில் அவற்றுக்கு உயிராகியும், அறிவில்லாத உருவமும், அருவமும் ஆகிய பொருள்களில் அவையேயாகியும் இவ்வாறு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் அவை யனைத்தினும் தான் வேறாவதோர் திறம் உடையனாயும், உயிர்களின் அறிவு ஒன்றை அறியுமிடத்துத் தானும் அவ்வாறு அப்பொருளை அறிகின்ற அறிவாய் உடனாயும் `சத்தியும், சிவமும்` என்னும் இரு திறத்தால் இயக்காவிடின் உயிர்கள் முழு மூடங்களாயும், உயிரல் பொருள்கள் சூனியமாயும் ஒழிவனவாம்.

குறிப்புரை :

எனவே, `அவன் அவ்வாறு இயக்குதலானே மேற் கூறிய அவத்தைகள் பலவும் நிகழ்கின்றன.` என்றபடி. இதனானே, இறைவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு அவ்வந் நிலைக்கேற்ற அறிவையும், அனுபவத்தையும் தந்துதவுதல் விளங்கும்.
`உலகிற்கு ஆதி` என உருபு விரித்து அதனை முதற்கண் கூட்டி, `நாதனும் ஆய்` என உம்மையும், ஆக்கச் சொல்லும் வருவித்து உரைக்க. இயற்பு - `நடத்துதல்` எனப் பிறவினை இது, `நடத்தல்` எனத் தன்வினையாயின், `இயல்பு` என நிற்கும். `இருள்` என்றது, `சூனியம்` என்றபடி. சூனியம், இங்கு, இருந்தும் இல்லாமை. `இருள், மூடம்` - என்பவற்றை எதிர் நிரல் நிறையாகக் கொள்க.
இதனால், `ஆன்மாவும், கருவிகளும் கூடிய துணையானே அவத்தைகள் நிகழமாட்டா; இறைவனது திருவருள் உடனாய் நின்று நிகழ்விக்கவே நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

பொழிப்புரை :

சிவன், `இச்சை, ஞானம், கிரியை` என்னும் தனது மூன்று சத்திகளில், `உயிர்களை உய்விக்க வேண்டும்` என விரும்பும் இச்சா சத்தியினால் உயிர்களில் எல்லாம் தான் நல் உயிராய்க் கலந்து, அநாதியே உயிர்களில் தன்னைப் போலவே பொருந்தியுள்ள பாசம், `அஃது ஒன்றே` யாகாது `ஐந்து` என்னும் படி முதல் மலத்தொடு நான்கு மலங்களைக் கூட்டியதனானே அம்முதல் மலம் முற்றிலும் அற் றொழிதற் பொருட்டுத் தத்துவ வகை முப்பத்தாறினையும் உண்டாக்கி, அம்முப்பத்தாறின் கூறுகளாக மற்றும் அறுபத்தாறு கருவிகளையும் தோற்றுவிக்து வைத்தான்.

குறிப்புரை :

`இவ்வாற்றால் உயிர்கள் முதல் மலம் முற்றிலும் நீங்கச் சிவனையடைந்து பேரின்பத்தை யடையும்` என்பதாம். `ஈசன் இராக சத்தியின் தான் நல் உயிராகி, ஐந்தோடு, மலம் அறுமாறு பேதம், சமைத்து, கருவியும் வைத்தனன்` என இயைத்துக் கொள்க. இராகம் - இச்சை. `பாசத்தோடு` என உருபு விரிக்க.
நன்மை, இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையால் அறிவேயாயும், இன்பமேயாயும் இருத்தல். `மலம் ஐந்து ஆக்கிய -தோடு` என்க. இவ் ஓடு, எண் ஓடு முதல் மலம் ஆணவம்; பின்னர்க் கூட்டிய நான்கு மலங்களாவன மாயை, கன்மம், மாயேயம், திரோ தாயி, மாயேயம், தத்துவ தாத்துவிகங்கள். எனவே, `தத்துவ பேதம், கருவி` என்றது மாயேயங்களை விளக்கியதாம். `கருவியும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
அவத்தை பேதங்கள் பெத்தமும், முத்தியுமாய் நிற்றலால், அவையிரண்டும் சிவன் செயலே யாதலை விளக்கியவாறு.
இம்மந்திரம் சைவ சித்தாந்தச் சுருக்கமாய் நிற்குமாற்றையும் உணர்ந்து கொள்க.
முன்னை மந்திரத்தில் தொகுத்துக கூறிய சிவனது செயல் இதனால், வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல்
சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.

பொழிப்புரை :

சகல சாக்கிரத்தில் சாக்கிரம் முதலியன நிகழுங் கால் இறுதியில் நிகழும் துரியாதீதத்தில் ஆன்மாத் தன்னையும், பிறிதை -யும் உணர்தல் இன்றி, ஆணவத்தால் விளையும் பேரிடரிலே மூழ்கி யிருக்கும். இது `தன்னுண்மை` எனப்படும். (இந்நிலை அநாதி கேவலத்தொடு ஒத்ததாகும்.)
நின்மல சாக்கிரத்தில் நிகழும் துரியாதீதத்தில் ஆணவம் இன்மையான், அதில் ஆன்மாச் சிவனால் தரப்படும் பேரின்பத்தில் மூழ்கித் தன்னையும் அறியா நிலையில் இருக்கும். (இஃது ஆன்மா இறுதியில் அடையும் சாயுச்ச நிலையோடு ஒத்ததாகும். இதுவே முன்பு ஆணவத்தோடு அத்துவிதமாய் நின்றதுபோலப் பின்பு மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதமாய் நிற்கும் நிலை.)
இங்குக் கூறிய இருவகைச் சாக்கிரத்திலும் துரியாதீதத்திற்கு முன்னாதல், பின்னாதல் நிகழும் துரியத்தில் ஆன்மாத் தனக்கு உளவாகும் இன்பத் துன்பங்களை அறிவதாய் இருக்கும்.

குறிப்புரை :

`முதல் அடியில் கூறிய சாக்கிரம் சகல சாக்கிரம்` என்பதும் `இறுதியிரண்டடிகளில் கூறிய சாக்கிரம் நின்மலசாக்கிரம்` என்பதும், இரண்டாம் அடியில் கூறியசாக்கிரம் இரண்டனையும் குறித்த பொது சாக்கிரம் என்பதும் அவ்வவற்றில் காட்டப்பட்ட அனுபவம் பற்றி உணர்ந்து கொள்ளப்படும்.
இரண்டாம் அடியை இறுதியிற் கூட்டி, `சாக்கிராதீதத்தின் பக்கத்ததாகிய துரியத்தில்` எனவும், `தான் அனுபவத்தை உறல்` எனவும் உரைத்துக் கொள்க.
முதற்கண் உள்ள `ஆணவம்` தன்காரியம் உணர்த்தி நின்றது. ஈற்றில், `பரன் உண்மையில் தங்கும்` என உருபு விரித்துரைக்க.
இதனால், `சகல சாக்கிரம், நின்மல சாக்கிரம்` என்பவற்றின் இயல்புகள் அவற்றை ஒப்பிட்டுக் காட்டி உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 27

மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`மலம்` என அடைகொடாது கூறுமிடத்துப் பெரும் பான்மையும் `ஆணவம்` என்றே பொருள்படும். இங்கும் அவ்வாறே கொள்க. கலப்பு செம்பிற் களிம்பின் கலப்புப் போல அநாதியே உள்ளது. அதனால் அந்த ஆணவத்தின் விளைவாக இங்குக் கூறியன யாவும் அநாதியே உள்ளனவாம். தாணு - சிவன். மதி - ஞானம். இஃது ஆன்மாவின் ஞானம். `மலக் கலப்பால் இருளாய் இருந்த ஞானம், சிவக் கலப்பால் ஒளியாம்` என்றபடி. `மலம் நீங்குமாறு இது` என்பது, ஒன்று இடையிட்டு மேல் உள்ள மந்திரத்தில் கூறப்பட்டது.
சத்தி, இங்கு அருட்சத்தி. `ஞானம் அழிந்தது` எனக் கூறாமல், `மறைந்தது` என்றே கூறினமையால், மலக் கலப்பு அற்றால் மதி ஒளியாதற்குத் தடையின்மையறிக.
இதனால், மலாவத்தைகட்குக் காரணம் ஆணவமும், நின்மலாவத்தைகட்குக் காரணம் அருட்சத்தியும ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.

பொழிப்புரை :

கீழாலவத்தைச் சுழுத்தியில் காட்சி எதனையும் காணுதல் இன்றித் தெளிவில்லாதிருக்கின்ற ஆன்ம அறிவில், சிங்கங்கள் போன்ற கொடிய குணங்கள் மூன்று விளங்கி நிற்கும். (அவை, `காமம், வெகுளி, மயக்கம்` - என்பன. `இவற்றின் விரியே பஞ்சக்கிலேசம்` என்பர். பஞ்சக்கிலேசமாவன, `அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம்` - என்பன. இவை, கொடுமை மிகுதி பற்றிச் சிங்கங்களோடு உவமிக்கப்பட்டன.)
அச் சுழுத்தியினின்றும் மேல் ஏறிச் சொப்பனத்தை அடைந்த ஆன்ம அறிவில் நான்கு நரிக்குட்டிகள் போன்ற சூழ்ச்சி வல்ல நான்கு கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்பன, இவை சூழ்ச்சிக் கருவிகள் ஆதலின், நரிக் குட்டிகளோடு உவமிக்கப்பட்டன. `நரிகள் சூழ்ச்சி வல்ல பிராணிகள்` என்பர்.
அச்சொப்பனத்தினின்றும் மேல் ஏறிச்சாக்கிரத்தை அடைந்த ஆன்ம அறிவினுள் பின்பு மதங்கொள்ளும் ஐந்து ஆனைக்கன்றுகள் போன்ற ஐந்து கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, செவி முதலிய ஞானேந்திரியங்கள். மத்தியாலவத்தைச் சாக்கிரத்தில் இவை வளர்ந்து மதம் மிக்க யானைகள் போல் ஆய்விடும்.)
(கீழாலவத்தையை விட்டு, மத்தியாலவத்தையை அடைந்த ஆன்ம அறிவு, மேற்கூறிய யானைக் கன்றுகள் வளர்ந்து, மதம் மிக்கு, ஒன்றோடொன்று மாறுபட்டு நிற்றற்கு இடமாய், இரு நிலைகளை யுடையதாம்; ஒன்று, அவ் யானைகளால் ஈர்ப்புண்டல். மற்றொன்று, அவற்றை அடக்கி ஒடுக்குதல்.)

குறிப்புரை :

`சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்* கூறும் முறைமையால், ஆன்ம அறிவே, இங்கு, `சிந்தை என்றும், `நெஞ்சு` என்றும் கூறப்பட்டது. அங்ஙனம் கொள்ளாது நேர்ப் பொருள் கொள்ளின் பொருந்தாமை அறிக. திகைத்தல் மூடம் ஆகாது, அறிவு அலமரும் நிலையாதலின், அந்நிலை துரியாதீதமும், துரியமும் ஆகாது, சுழுத்தியே யாதல் அறிக. பிறவும் இங்குக் கூறியன ஆதலை ஓர்ந்துணர்க. ``பகைக்கின்ற நெஞ்சு`` என்றது இடப்பெயரோடு முடிந்த பெயரெச்சத் தொடர். ஏனைய மூன்றும் வினைமுதற் பெயரோடு முடிந்த அத்தொடர்கள். நகைத்தல் - ஒளிவிடுதல். அகைத்தல் - பிளவுபடுதல்.
இதனால், கீழாலவத்தை சிலவற்றில் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன. மத்திய சாக்கிரத்தைக் கூறியது, ஐயம் அறுத்தற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 29

கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும்
விதறு படாமூனம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே.

பொழிப்புரை :

துன்பத்தால் அலறிக் கொண்டு, ஒரு வழிபடாது பதினெட்டு வழிகளில் போவதற்குப் பலமுகமாய் எழுகின்ற மனத்தை, நீவிர், நும் வாழ்நாள் முடிவதற்கு முன்னே மெய்ந்நெறியில் நிறுத்தினால், முன் மந்திரத்தில் கூறிய அந்த ஆனைகள் ஐந்தும் நடுங்கும்படி ஒப்பற்ற ஒரு பெரிய யானை உங்கள் அருகில் வந்து உங்களை எடுத்துச் செல்லும்.

குறிப்புரை :

அந்த யானையாவது சிவன். `ஆனையும்` என்னும் உம்மை சிறப்பு யானை, தன் பாகனைத் தானே எடுத்துச் சுமத்தல் போல, அடியார்களைத் தானே வந்து ஆட்கொண்டு அவர்களைத் தாங்கி நிற்றல் பற்றிச் சிவனை, `ஆனை` என்பர் அருளாளர். திருக்கடவூர்த் திருக்குறுந்தொகை ஒரு திருப்பதிகம் முழுவதிலும் சிவபிரானை, `ஆனை, ஆனை` எனப் பலகாலும் கூறினமை காண்க. `எடுத்துச் சுமப்பான்`l என்றார் உமாபதிதேவர். இனி `ஆனை` என்பதை `ஆன் + ஐ` என இருமொழித் தொடராக்கி, `பசுக்கட்குத் தலைவன்` எனப் பொருள் உரைப்பாரும் உளர்.
பதினெட்டு வழிகளாவன. புரியட்டக சரீரத்தில் உள்ள எட்டுக் கருவிகளும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் ஆம். தூல பூதங்கள் தன்மாத்திரைகளில் அடங்கின. அடங்கவே அவற்றின் கூறாகிய தாத்துவிகம் அறுபதும் அவற்றோடு உடன் அடங்கின. எனவே, `சூக்கும தூல சரீரங்களின் வழியே ஆன்மாப் புறத்துச் சென்று அலமரும்` எனக் கூறியவாறாம். கண் - புழை. `கண்களிலும்` என ஏழாவது விரிக்க. அவ்வாறு அலமராது நிற்றற்கு உபாயம் சரியையாதி தவங்களே. அவைகளே இங்கு, `மெய்வழி` எனப்பட்டன. `நின்றால்` என்பது, பிவ்விகுதி தொகுக்கப்பட்ட பிறவினை. சிந்தையை மெய்வழி நிற்பித்தலே நின்மலாவத்தையாம்.
இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் நில்லாது` நின்மலாவத்தையில் செல்லல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா
கனவகத் தேஉட் கரணங்க ளோடும்
உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.

பொழிப்புரை :

(கனவிலும் பிராணாதி வாயுக்கள் பத்தும் செயற் படுதலால், அந்தக் கரணங்களும் செயற்படவே செய்யும் - அதனால்,) நனவிற்போலக் கனவிலும், மேல் `ஆனைகள் ஐந்து` எனப்பட்ட ஞானேந்திரியப் புலனகள் ஐந்தோடு, கன்மேந்திரியப் புலன்கள் ஐந்தும், இன்னும் பிராணாதி வாயுக்கள் பத்தும் கூடி ஆன்மா அமைதி யுற்றிராதபடி தொல்லையுறவே செய்யும். இந்நிலையில் நிற்கும் ஆன்மா, ஒருமுகப்பட்ட சிந்தனையை விரும்புதலால், புலன்களை யெல்லாம் உதறித்தள்ளி, இருதயத்துட்புகுந்து சுழுத்தியில் நிற்கும்,

குறிப்புரை :

`கனவகத்தே, நனவகத்தே (நிற்கும்) உட்கரணங் களோடு, நால் ஐந்தும் வீடா` எனவும், `அகத்தே நின்று உள்ள, உதறி, நினைவகத்தே உள்புக்கு, இன்று இச் சுழுத்தி நின்றான்` எனவும் இயைத்துப் பொருள் கொள்க. இப்பொருள் காணமாட்டாதார் சித்தாந்தத்தில் இல்லாத பொருளை இயைபறவும் உரைப்பர்.
நினைவகம் - இருதயம். இது சுழுத்தித்தானம். இன்று - இப் பொழுது. அதாவது இருதயத்துட்புக்க பொழுது. `இச் சுழுத்தி என்றது, `நனவும், கனவும் போலப் புலன்களில் தொல்லையில்லாது, அமைதியாய் இருக்கும் சுழுத்தி` என்றபடி.
இதனால், `பெத்த காலத்தில் புலன்களின் நீங்கி நிற்கும் நிலை சுழுத்தி நிலை` என்பதும் கூறப்பட்டது. படவே, துரிய துரியா தீதங்களில் அவை யில்லாமை கூறவேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 31

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச்
சென்று துரியாதீ தத்துச் சிலகாலம்
நின்று பரனாகி நின்மலன் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சுழுத்தியில் அமைதியை உற்றுணர்ந் தவன், அஃது அறியாமையாகிய இருளால் விளையும் அமைதியே யாதலைத் தெரிந்து, அவ்விருள் நீங்கி, ஒளியில் விளையும் அமைதியை அடையவிரும்பி, ஆசானிடத்துச் சென்று அவன் உணர்த் தியவாறே, உலகியலிற்றானே இயம நியமாதிகளை மேற்கொள்ளும் யோகத்தில் பொருந்தி நின்று, அவ்யோகத்தில் துரியமாகிய தியானத் -தில் முதிர்ந்தவனாய், அதற்கு மேற்சென்று, அதன்கண் துரியாதீத மாகிய சமாதியில் சில காலம் நின்று, அதன் பின் பராவத்தையாகிய ஞானாவத்தைகளை அடைந்து, அதனால் பாசங்கள் முற்றிலும் நீங்கப் பெற்று முத்தனாவான்.

குறிப்புரை :

`நின்று, ஆகி` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்தன. `ஆசான்` என்பதன் பின், `கீழ்` என்னும் பொருளில் வரும் கண்ணுருபு விரிக்க. `உலகின் நியமாதிகளுற்று` என்பதனை மேலே `நிகழ்` என்பதன்பின் கூட்டுக. `ஒன்றி` என்றது, `யோகத்தில் பயின்று` என்றபடி. நின்மலம், இங்குப் பரமுத்தி,
இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் அன்றாடம் இயல்பாகவே பயின்று வருவோர், ஆசான் அருள்வழியில் முயன்று, முன்னர் மேலாலவத்தையில் பயின்றால், பின்னர் நின்மலாவத் -தையால் வீடு பெறலாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம்
தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோன மடைந்தொலி மூலத்த னாமே.

பொழிப்புரை :

பராவத்தை உண்மைச் சுத்தாவத்தையே யாயினும் துரியாதீதம், துரியம் ஒழிந்த மற்றை மூன்றாகிய சிவன் முத்தி, அதிகார முத்தி, போகமுத்திகளில் ஆன்மாஉலகபோகத்தை நுகரும். ஏனெனில், சுழுத்தி சொப்பனங்களில், தோற்ற முறையில் சாதாக்கியம் முதல் ஐந்து தத்துவ உடம்புகள் இருத்தலாலும் சாக்கிரத்தில் மாயா உடம்பு இருத்தலாலும் அவ்வாறு அதுகாறும் போகத்தை நுகர்ந்த ஆன்மா, இலயமுத்தியல் சத்திதத்துவத்தைக் கடந்து, சிவதத்துவத்தில் தடத்த சிவமாய்ப் புறப் பொருளுணர்ச்சி யின்றிச் சிவ உணர்வே மிக்கிருக்கும். அந்நிலையில் சூக்கும வாக்கை அது பற்றி நிற்கும். ஆகவே, பர துரியாதீதத்தை அடைந்த பொழுதுதான் ஆன்மாச் சிவஞானம் ஒன்றையன்றிப் பிறிதொரு பற்றும் இல்லாமல், சிவத்தை முழுமையாக அனுபவிக்கும்.

குறிப்புரை :

ஈசன் அதீதம் - பராவத்தையில் நிகழும் அதீதம்` இம் முதலடியை இறுதியிற் கூட்டியுரைக்க. ஆன்மா `தான் உலகு உண்டு` என்பதை, `போய்` என்பதன் பின்னர்க் கூட்டுக. தான் `சாதாசிவமாதி` என்பதில் `ஆதி` என்பது தொகுக்கப்ட்டது. மாய் சத்தி - தோற்றமும் ஒடுக்கமும் உடைத்தாய் நிலையில்லாத சத்தி. இங்குச் சுத்த மாயா சத்தி. `மாசத்தி` என்பதே பாடம் எனினும் `மாமாயையின் சத்தி` என்றே கொள்ளப்படும். மேனிகள் ஐந்து அணு சதாசிவர், மந்திர மகேசுரர், வித்தியேசுர், சுத்த வித்தையில் நிற்கும் மால், அயன். `ஐந்திலும் போய்` என உருபு விரிக்க. போதல் - புகுல். `அடைந்து` என்பதன் பின் `அவ்விடத்து` என்பது வருவிக்க. ஒலிமூலம் - மூலஒலி; நாதம். அதுவே சூக்குமைவாக்காம்.
இதனால், பராவத்தைகளில் அதீதம், அஃதொழிந்த பிற இவற்றின் உயர்வு, தாழ்வுகள் தெரித்துக் காட்டப்பட்டன.

பண் :

பாடல் எண் : 33

மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற
விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.

பொழிப்புரை :

அண்டத்தில் `தீ, ஞாயிறு, திங்கள்` என்னும் மூன்று மண்டலங்களில் விளங்கும் முதல்வனைப் பிண்டத்திலே அம்மூன்று மண்டலங்களில் வைத்துக் கண்டு மேல் எழுதற்கு ஏதுவாய், உடம்பிற்குள்ளே மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக நாளத்தையும் உடையவாய், நன்கு மலர்ந்த தாமரை மலர்கள் உள்ளன.

குறிப்புரை :

`அவைகளில் அவனை அவ்வாறு கண்டு, மேற் போவதே யோகாவத்தை` என்பதாம். மாயம் - நிலையாமை; அஃது அதனையுடைய மாயா காரியத்தைக் குறித்தது. `நாடன்` என்றதனால், அக்காரியம் அண்டமாதல் விளங்கிற்று. `கழிகின்ற` என்னும் பெய ரெச்சத்தை, ஏதுப் பொருட்டாகிய `தாமரை` என்பதனோடு இயைக்க. `ஒன்றும்` என்பது, `கீழ்` என்பதனோடும் சென்று இயையும். `மேல்` என்றது உச்சித் தலையை. `கீழ்` என்றது மூலாதாரத்தை. `மேல், கீழ்` என்றதனானே, இடையில் உள்ளனவும் பெறப்படும். யோக முறையில் மூலாதார முதல் மூன்று ஆதாரங்கள் அக்கினி மண்டல மாகவும், மற்றை மூன்று ஆதாரங்கள் ஞாயிற்று மண்டலமாகவும், ஏழாந்தானம் திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். `மூன்றினுள் உள்ள நாடன்` என்க.
இதனால், `யோகாவத்தைகள் அண்டத்தில் காணும் சிவக் காட்சியைப் பிண்டத்தில் காண்பனவாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதறி யாவகை நின்று மயங்கின
வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை
சூதறி வார்உச்சி சூடிநின் றானே.

பொழிப்புரை :

விடியல் வாராத பொழுதும் வந்ததாகக் கருதி நள்ளிரவிலே ஆரவாரித்த சில பறவைகளைப் போன்ற உயிர்கள், திருவருள் தம்மை நோக்குதல் இல்லாத நிலையிலே நின்று, பொய்யை `மெய்` எனக் கொண்டு மயங்குகின்றன. ஆதனால், எங்கள் இறைவனாகிய சிவனும் செம்பைப் பொன்னாக்கும் வித்தையை அறிந்தும் அறியாதவன் போல இருக்கின்றான். இச் சூழ்ச்சியை அறிந்த பெரியோர்கள், நீராதார யோகத்தாலும், சுத்த துரியத்தாலும் அவனது அருளில் தோய்ந்திருப்பர்.

குறிப்புரை :

நள்ளிரவில் ஆரவாரிக்கின்ற பறவை போல்வதாவது, சிவனையுணரும் பக்குவம் வாராத முன்பே வரப் பெற்ற வரைப்போல ஞான அனுபவங்களைக் கூறுதல். மாது, அருட்சத்தி, அது நோக்கா மையாவது ஆன்மாவிற் பதிய எண்ணாமை. எண்ணாத வகையில் நிற்றலாவது, பாசப் பற்றிலே கிடத்தல். வேது - வேதித்தல்; இரசவாதம் செய்தல், இங்குச் சீவனைச் சிவமாக்குதலாம். `வண்ணம் - வண்ணத் -தனாய்` என்க.
இதனால், `மலபரிபாகமும், சத்தி நிபாதமும் இல்லாதார் நூலறிவு பேசினாலும், யோகாவத்தையிற்றானும் செல்லாது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளிலே கிடத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :

(சுருதி உத்தி அனுபவங்களால்) அறிய வேண்டு -வதை அறிந்து, அதனால், `உலக முதல்வன் யாவன்` என ஆராய்ந்து, `அம்முதல்வன் சிவபிரானே` என நான் நன்குணர்ந்தேன். பின்பு அவனை என்பால் வருவிக்கும் வழியறிந்து வருவித்தேன். அவன் அவ்வாறே வந்து என் மனத்தில் நிலையாக நின்றுவிட்டான்.

குறிப்புரை :

கருத்து - அறியத் தக்க பொருள். `பாரத வருடம் ஒன்பது கண்டமாய் உள்ளது` என்பது ஆகமங்களில் சொல்லப் படுவது. `பிண்டத்தில் நவகண்டமாவன, ஆறு ஆதாரங்களும் மூன்று மண்டலங் -களுமாம்` எனின் அவ்விருவகையினவும் ஒன்றை விட்டு மற்றொன்று இல்லாமையறிக. `கண்டத்தையும்` என இரண்டாவது விரிக்க.
பொருத்து, பொருத்துதல்; மூவினையுட் படுத்தல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். இஃது ஆகுபெயராய்த் தனக்குக் காரணமாகிய முதனிலைமேல் நின்று, வினைமுதலை உணர்த்திற்று. எனவே, `உலகிற்கு முதல்வன் ஒருவன் உண்டு` என்பதை அறிந்ததாயிற்று. நிலத்தை `நிலமகள்` எனப் பெண்பாலாகக் கூறும் வழக்குப் பற்றிப் புவனத்தை, `புவனா` என்றார். திருத்து - திருத்தம்; `திருந்து` என்பதன் திரிபு. `திருத்தமாக` (செம்மையாக) என ஆக்கம் வருவிக்க. `மிகு தேவர் பிரான்` என்றது, `சிவபிரான் என்றபடி, `மிகு தேவர் பிரானைத் திருத்து அறிந்தே` என மாற்றியுரைக்க. `வா` என்னும் பகுதி `வரு` எனத் திரிந்து, `து` என்னும் பிறவினை விகுதியோடு புணர்ந்து, `வருத்து` என வருதல் உலக வழக்கில் உள்ளது. இதுவும் ஆகுபெயராய், இதற்குரிய உபாயத்தின் மேல் நின்றது. அது சரியை யாதி தவங்களுள் மேலானதாகிய யோகத்தையே உணர்த்திற்று. சிவன் மனத்தில் மன்னி நிற்றல் நின்மலாவத்தையிலாகும்.
இதனால், மல பரிபாகம் சத்தி நிபாதம் வரப் பெற்றோர் மேலாலவத்தை வழியாக நின்மலாவத்தை அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து)
ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு)
ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.

பொழிப்புரை :

ஓரிடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு மற்றை யிடங்களிலும் வியாபித்து நிற்றல் போல, மூலாதாரமாகிய இடத்தில் உள்ள அந்த விளக்கினை அதனை ஏற்ற வேண்டிய முறையை யறிந்து அவ்விடத்திற்றானே மேலே நிலாமண்டலங்காறும் உள்ள இடங் -களில் வியாபிக்கும்படி, இடையே அணைந்துவிடாதபடி எரியுங்கள்.

குறிப்புரை :

`எரித்தால், சிவபிரான் உங்கள் மனத்திலே வந்து மன்னியிருக்கப் பெறுவீர்கள்` என்பது குறிப்பெச்சம். ஆன விளக்கு - உலகில் ஓரிடத்தில் உள்ள விளக்கு. `விளக்கினைத் தூண்டுபவன் போல மூலசாதனத்து அவ்விளக்கினை எரியும்` என முடிக்க தன் வினை, பிறவினை இரண்டிற்கும் பொதுவான `எரி` என்னும்பகுதி, இங்குப் பிறவினையாய் நின்றது. `எரியும்` உம் ஈற்று ஏவல் வினை முற்று. தானம் என்றது மூலாதாரம் ஒழிந்த மற்றை ஆதாரங்களை, சாதனம் - தொழில் முதல் நிலைகள் இங்கு அஃது இடத்தைக் குறித்தது. `மூல சாதனத்து அவ்விளக்கு` என இயைக்க. `அவ்விளக்கு` எனப் பண்டறி சுட்டாகச் சுட்டியது, `அவ்விடத்து எழாது மடிந்து கிடக்கின்ற குண்டலிசத்தி` என்பது விளங்குதற் பொருட்டு. ஆன விதி - பொருந்திய விதிமுறை. அவை யோகநூல்களுட் கூறப்படுவன. மூலத்தான் - வழியால். `அதனில்` என்பது `அத்தில்` என மருவி வந்தது. `ஏனை` என்பது இடையில் உள்ள ஆதாரங்களைத் தழுவிற்று. கொண்டு - அகப்படுத்து.
இதனால். `முன் மந்திரத்தில் வருத்துதற்கு அறிந்த உபாயம் இது` என்பது சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய
விண்ஆட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின்
கண்நாடி காணும் கருத்ததென் றானே.

பொழிப்புரை :

(கண் முதலியனபோல வெளியிலே கண்டறியப் படாமல்) `உள்ளே கருதியறியப்படுகின்ற ஐம்புல ஆசைகளின் களியாட்டம் ஒழிதற் பொருட்டு யோகாவத்தையை நிகழ்த்துதற்குரிய இடங்கள் யாவை என ஆராயின், இருதயத்தினின்றும கீழே நோக்காமல், மேலே நோக்கினால், அந்த ஐம்புல ஆசைகளும் ஒருங்கு கூடி வந்து ஒடுங்கும் இடம் ஒன்று உண்டு. அந்த இடத்திலே நின்று, மேலும் ஆராய்க. அதுவே சிவனைப் புலப்படக் காணும் வழி` என்று எம் ஆசிரியர் நந்திபெருமான் எங்கட்கு அறிவுறுத்தார்.

குறிப்புரை :

`நாடும்` என்றது, `நாடி உணரப்படும்` என்றபடி. குமண்டை - களியாட்டம். ஒதுங்கிய - ஒதுங்குதற்பொருட்டு. விண் - மேலிடம். மேலிடத்தில் ஆடுதலாவது, மேலாலவத்தையில். அஃதாவது யோகா வத்தையில் நிற்றல். `வெளி` என்றது, `இடம்` என்றபடி, ஐவர் கூடும் சந்தி, ஆஞ்ஞை, (புருவ நடு) `நாடி` என்பது இகர ஈற்று ஏவல் வினைமுற்று. இது `நாடுதி` எனத் தகரம் ஊர்ந்து வருதல் பெரும்பான்மை. சிறுபான்மை தகரம் ஊராதும் வரும். காணுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய உபாயத்தைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறி வாகான்
அறியாத வற்றை அறிவானைக் கூட்டி
அறியா தறிவானை யாரறி வாரே.

பொழிப்புரை :

அறிவில்லாத சடங்களாகிய பாசங்களை அப்பாச அறிவினால் அறிகின்ற ஆன்மா அந்தப் பாச அறிவைக் கொண்டு அறியவாராத பதி, அப்பாசங்களின் நீங்கியவழியும் பசு அறிவாலும் அறியவாரான். ஆகவே, அறிவில்லாத சடங்களாகிய பாசங்களையும், அறிவுடைய சித்தாகிய ஆன்மாவையும் ஒன்று கூட்டி அவற்றின் செயற்பாடுகளை அறியாதறிபவனாகிய பதியை அறியவல்லார் யாவர்? (ஒருவரும் இல்லை.)

குறிப்புரை :

`பாச ஞான பசு ஞானங்களின் நீங்கிப் பதி ஞானங் கண்ணாகக் காண்பவர்களே பதியை அறிவார்கள்; அத்தகையோர் உலகில் மிக அரியர்` என்பது கருத்து. `தன்` என்றது `பசுவை, `தன்னறி விற்கும் ஆகான்` என உருபும் உம்மையும், அறியாதவற்றையும் அறிவானையும் கூட்டி என உம்மையும் விரிக்க. `அறியாதறிதலாவது, சுட்டியறியாது, பொதுவாக அறிதல். `கீழாலவத்தை மத்தியா லவத்தை களில் பாச அறிவும், மேலாலவத்தையில் பசு அறிவும் செயற்படுதலால் அவைகளில் பதி வெளிநில்லாது, நின்மலாவத்தையில் மட்டுமே வெளிநிற்பான்` என்பதையே இம் மந்திரத்தாற் கூறினார்.
இதனால், அவத்தைகளில் பதி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம். அந்நன வாதி
பெரியன கால பரம்பிற் றுரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.

பொழிப்புரை :

`பரவெளி` எனப்படுகின்ற திருவருள் வழி நிகழ் கின்ற நின்மலாவத்தைகளில், `பேருறக்கம்` என்னும் நிலையை அடைதலையே சிறந்ததாகக் கூறினோம். அதற்குக் கீழ் உள்ள நனவு, கனவு, உறக்கம், என்பவைகளும் எல்லார்க்கும் எளியன அல்ல. எனினும் நின்மலாவத்தையும் காலத்தொடு பட்டு நிகழ்வனவாகலின் அவை கழித்தற்குரியனவே. காலத்தைக் கடந்து எல்லையற்று நிகழ்வன பராவத்தைகள். அவைகளில் ஈற்றில் உள்ளது துரியம். அரிதாகிய, துரியத்தையும் கடந்த நிலை துரியா தீத நிலையாகும்.

குறிப்புரை :

`வியோமத்தின்கண்` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. எனவே, அது முதலில் வைத்து உரைக்கப் படும். `அந்நனவாதியும் அரியன; ஆயினும் தூடணம்` என்க. பரம் - மேல். அஃது ஆகுபெயராய், மேலனவாகிய நிலைகளைக் குறித்தன. `பின்` என்றது, `பின்னது` என்னும் பொருட்டு. `அதீதம்` இரண்டில் முன்னது, `கடந்தது` என்னும் பொருளது.
இதனால், `பதி பசுவை உண்மையில் அடையும் நிலை பராவத்தையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமாய் யோனியுள்
தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே.

பொழிப்புரை :

அசுத்த மாயையால், ஆணவ மலம் காரணமாக முன்பு சடம் போலக் கிடந்த உயிர் சித்துத் தன்மையை உடையதாம். (அஃதாவது, `செயற்படாதே கிடந்த, அறிவு இச்சை செயல்கள் செயற்படத் தொடங்கும்` - என்பதாம். இந்நிலை வித்தியா தத்துவங்களின் சேர்க்கையால் நிகழ்வது.)
பின்னர் மூலப் பிரகிருதியால், அந்தச் சித்துத் தன்மை நிலை பெற்று விளங்கும். (அஃதாவது, `அறிவு இச்சை செயல்கள் நன்கு செயற்பட்டு விளங்கும்` என்பதாம். இந்நிலை ஆன்ம தத்துங்களால் நிகழ்வது.)
`மாயை` என்கின்ற மலத்தினாலே மற்றொரு மலமாகிய ஆணவத்தை இறைவன் கழுவியொழிக்கின்றான் என்பது வியப்பான செய்திதான். `பொருளியல்புகள் அவ்வாறு அமைந்துள்ளன. `மலம் மலத்தான் - கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை, என ஐயம் எழுப்பி, `செழுநவ அறுவை சாணி உவர் செறிவித்து அழுக்கை - முழுவதுங் கழிப்பன்`-என விளக்கம் தந்தார் அருணந்தி தேவரும்.*
மாயை சேராத பொழுது ஆன்மாத் தனிமையுடையதாகும்` மாயை சேர்ந்த பொழுது கலையோடு கூடியதாகும். அதுவே நிலையில்லாத பல்வேறு பிறப்புக்களில் புகும் பிறவிநிலை. இனி, `மாயை, ஆணவம்` என்னும் இரண்டையும் கடந்து நிற்கும் நிலையும் உயிருக்கு உண்டு. (அதுவே சுத்தம்.)

குறிப்புரை :

`சீவன்` என்பதை முதலில் கூட்டுக. `சேதனமாம்` என்னும் ஆக்கச் சொல் தொக்கது, `பகுதியால் மன்னும்` - என மொழி மாற்றி, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. `மற்றையது` என்பது `மற்றது` என மருவிற்று. ஈற்றில் உள்ள மாயை, `வியப்பு` என்னும் பொருளது. கேவலம் - தனிமை. ஆணவம் சகசமாதலின் உயிர்க்கு ஆணவம் மாத்திரமே உள்ள நிலை `கேவலம் எனப்படும். `தன்னுண்மை` என்றும் சொல்லப் படும். கேவலாத்து விதிகள் முத்தி நிலையை, `கேவலம்` என்பர். `கலை` என்பது மாயையின் கூற்றையே குறித்தலால் மாயையின் காரியங்களாகிய தத்துவங்களோடு ஆன்மாக் கூடி நிற்கும் நிலை. `சகலம்` எனப்படுகின்றது. `சகலமாய், யோனியுள் அநித்தத்தில் தோயும்` என இயைக்க. கேவலத்தாகும், சகலத்தாய், எனக் கூறற்பாலன `கேவலமாகும், சகலமாய்` எனக் கூறப்பட்டன. `துரியத்துள்ளும்` எனச் சிறப்பும்மை விரித்து, `தோயும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `துரியத்துள்ளும் தோயும்` எனஉரைக்க. துரியம் - கடப்பு. இஃது இடுகுறியாகாது, காரணத்தளவில் நின்றது.
இதனால், மேற்கூறிவந்த அவத்தைகளையெல்லாம் ஓராற்றால் தொகுத்துக் காட்டும் முகத்தால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
சிற்பி