எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்


பண் :

பாடல் எண் : 1

தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.

பொழிப்புரை :

தத்துவங்களையும், அவற்றின் நீங்கியவழித் தன்னையும் அறிதலை விடுத்துச் சிவத்தை அறிகின்ற சுத்த நிலையை அடைந்தவனும், அவ்வாறின்றி, `தத்துவம், சிவம்` என்ற இரண்டையும் அறியாது, ஆணவம் ஒன்றிலே மட்டும் அழுந்தி யிருக்கின்ற, தனது அநாதியியல்பை உடையவனும், இவ்விருவரின் வேறாய்த் தத்துவங் -களை அறிந்து நிற்பவனும் தம்தம் ஆற்றலுக்கு ஏற்ப முறையே, சத்து, அசத்து, சதசத்து ஆகிய பொருள்களில் பொருந்தியிருப்பர்.

குறிப்புரை :

இங்ஙனம் அநுவாத முகத்தால் கூறியதனானே, `கேவலம், சகலம், சுத்தம்` என்பன காரண அவத்தைகள்` என்பதும், அவற்றின் இயல்புகளும் பெறப்பட்டன.
அவற்றின் இயல்புகளாவன, ஆன்மா அநாதியில் ஆணவ மலத்தோடு மட்டும் பொருந்தி, இருளில் மூழ்கியிருந்த நிலை கேவலம். எனவே, பிற்காலங்களிலும் கருவி கரணங்களின் நீங்கி, ஆணவ மலத்தோடு மட்டும் இருத்தலும் கேவல நிலையேயாதல் விளங்கும். கீழாலவத்தை மத்தியாலவத்தைகளிலும் இந்நிலை இடையிடையே வருவதாம்.
ஆன்மா மாயா காரியங்களாகிய தத்துவங்களோடு கூடியச் சிறிதே அறிவு பெற்று உலகத்தை அறிந்து நிற்கும் நிலை சகலம். யோகா வத்தையும் கருவிகரணங்களின் வழி நிகழ்வனவேயாகலின் சகலமேயாம்.
ஆன்மா மும்மலங்களினும் நீங்கிச் சிவத்தையே அறிந்து நிற்கும் நிலை சுத்தம் என்க. சகலத்திலும் இது நிகழ்வதாயினும் அது நிறைவுடையதன்று.
`தன்` என்பது முன்னர்ச் சிவத்தையும், பின்னர் ஆன்மாவையும் குறித்தன. `சுத்தன்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. `சத்தாவது நிலைத்ததும், அசத்தாவது நிலையாததுமாம்` என்றற்கு, ``மன்னிய சத்து` என்றார். ஆணவம் முத்தியில் சத்தி கெட்டு நிற்றலால், `அசத்து` என்றார். தத்துவங்களில் இங்குத் தனு கரணங்களையே `சதசத்து` என்றார். சதசத்தாவது உயிரே ஆயினும், சகல நிலையில் தத்துவங்களையே உயிராக உணரும் நிலை உளதாதல் பற்றி அவ்வாறு கூறினார். `தொழில்` என்றது, அதற்கு ஏதுவாய ஆற்றலை. `தத்தம் தொழிலளவாகவே துன்னுவர்` என்க.
இதனால், `இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காரண அவத்தைகள் இவை` என்பதும், அவற்றின், இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்``*
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து)
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக்
காமிய மாயேய மும்கல வாநிற்பத்
தாமுறு பாசம் சகலத்த தாமே.

பொழிப்புரை :

உயிர் மாயை கன்மங்களோடு கூடாது ஆணவத்தோடு மட்டும் இருந்த நிலை கேவலாவத்தை. (இதுவே உயிர்களின் அநாதி நிலை). பின்பு இறைவன் மாயா காரியங்களைக் கூட்டுவிக்க, அவற்றால்சிறிது அறிவைப்பெற்று வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும் நிலை சகலாவத்தை.

குறிப்புரை :

எனவே, `உயிர் மாயை கன்மங்களோடு கூடுதற் கியலாத தன்மை கேவலத்திற்கும், அவற்றோடு கூடுதற்கியன்ற நிலை சகலத்திற்கும் காரணம்` என்றதாயிற்று.
`உயிர் மாயையின் இடைந்து கேவலம் ஆம்` எனக் கூட்டுக. `இடைதல்` என்பது இயற்கையிலே விலகி நிற்றலைக் குறித்தது. `இடைந்தவழி` என்பது `இடைந்து` எனத் திரிந்து நின்றது. எறித்தல் - ஒளிவிடுதல். எனவே, மாயை விளக்காதல் பெறப்பட்டது. இஃது ``எறிப்ப`` என்ற குறிப்பாற் பெறப்பட்டமையால், குறிப்புருவகம். `மாயா தனுவிளக்கா`l என்றார் மெய்கண்டதேவரும். `கான்மியம்` `காமியம்` என மருவிற்று. `மூல கன்மம் காரணமாக உயிர்களால் செய்யப்பட்டது` என்பது இதன் பொருள். மாயேயம் - மாயையின் காரியங்கள். அவை தனு கரண புவன போகங்கள். இறைவனால் உறுவிக்கப்படுவனவற்றைத் தாமாக உறுவன போல வைத்து, `தாம் உறு பாசம்` என்றார். அங்ஙனம் கூறினமையால், அவை ஆகந்துக மாகிய மாயை கன்மங்களைக் குறித்தன. `அப்பாசம்` எனச் சுட்டு வருவித்து, `அப்பாசங்களால்` என உருபு விரிக்க.
இதனால், முன்னை மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட காரண அவத்தை மூன்றனுள் முதல் இரண்டு அவத்தைகளின் இயல்புகள் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள்
இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.

பொழிப்புரை :

ஆன்மதத்துவங்கள் கூடுதல் குறைதல்களால் நிகழும் அவத்தைகளே சகலாவத்தைகள் ஆதலின், அவைகளை அடைந்தோர் யாவரும் சகல வருக்கத்தினரே. ஏனெனில், அவர்களே முக்குண வடிவாகிய பிரகிருதியுட்பட்டு, மும்மலங்களை உடையவர் -களாய் இருத்தலின். எழுவகைப் பிறவியும் எய்தும் உயிர்கள் யாவும் சகல வருக்கத்தினவாதல் தெளிவு. இனி அவ் உயிர்களின் மேம்பட்டவர்களாக எண்ணப்படுகின்ற `அயன் மால்` என்பவர்களும் பிரகிருதி புவனத்துள் பிறந்து இறந்தமை புராண இதிகாசங்களில் கேட்கப்படுதலால், அவர்களும் சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

`நீல உருத்திரர்` என்பவர் ஆகமங்களில் அருகிச் சுட்டப்படுதலால், அவர் சகல வருக்கத்தினராதலை நாயனர் இங்குக் குறிக்கவில்லை. `சகலரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. சகல வருக்கத்தினரே சிவனை அறியாது மயங்குபவர். அது ``தோன்றலர்தொத் துள்ளார் துணை``3 என்னும் திருவருட்பயனாலும் விளங்கும். அயன், மால் என்பவரும் ஒரோவழி அங்ஙனம் மயங்குபவராதலை நினைக்க. இரண்டாம் அடியின் இறுதியில், `அவரேயாதலின்` என்னும் காரணச் சொல்தொக்கு நின்றது.
மாலோனைப் பிறவாதவனாகக் கூறின், நிலவுலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தமக்கள் சிலரைப் புராண இதிகாசங்கள் `மாயோன் அவதாரம்` எனக் கூறுதலை `உண்மை` என்னாது, உயர்த் -தற்பொருட்டுக் கூறிய உபசாரமொழிகளாகக் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கொள்ளின், மாயோன் சம்பு பக்கத்தவனே யாவன்.
நரர் - மக்கள். கீடம் - புழு. `நரராதி கீடம் அந்தமாம்` என்க. உம்மை, `அனைத்தும்` எனப் பொருள் தரும் முற்றும்மை.
இதனால், `காரண அவத்தைகளை மூன்றாக எண்ணுதல் சகலரை நோக்கியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தாவிய மாயையில் தங்கும் பிரளயர்
மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர்
ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :

மாயை ஒழிந்த ஏனை இரு மலங்களையுடைய `பிரளயாகலர்` என்போர் பிரகிருதியைக் கடந்த மாயாதத்துவத்தில் இருப்பர். அதனால் இவர்களது தனு கரணாதிகள் பிராகிருதம் ஆகாது. மாயேயமேயாம். (எனவே, `மாயையின் நீங்கினார்` என்பது, `பிரகிருதியின் நீங்கினார்` என்பதேயாம். ஆகவே, இவர்கள் சகலரினும் மேம்பட்டவர்கள், சிவனை ஒரு போதும் அறியாது மயங்குவாரல்லர்.) மாயையின் நீங்கினாராயினும் கன்மம் நீங்கப் பெறாதவர்கள். (இவர்களுக்கு உள்ள கன்மம் சூக்கும கன்மமே.) அனந்த தேவர் வழிநின்று குணமூர்த்திகளை ஏவிப் பிரகிருதி மாயையில் காரியங்களைச் செய்விக்கும் சீகண்ட ருத்திரர், மற்றும் பிரகிருதி தத்துவத்தில் உள்ள நூற்றெட்டுப் புவன ருத்திரர்கள் ஆகியோர் இப்பிரளயாகலர் வருக்கத்தைச் சேர்ந்தவர்களே.

குறிப்புரை :

இவ்வுருத்திரர்களைப்பற்றிச் சிவஞானபோதம் சூத்திரம் இரண்டு, அதிகரணம் மூன்றின் மாபாடியத்தால் அறிக. தானிய கடந்த, `பிரளயர் மிக்குள்ளனர்` என இயைக்க. மேவிய மேவப்பட்ட. `மாயையில் தங்கும் பிரளயர்` என்ற அனுவாதத்தானே. `அவர் மாயையில் தங்குவர்` என்பது பெறப்பட்டது. மற்று, அசை. அது - முன்னர்க்கூறிய மாயை. ``உடம்பு`` எனத்தனுவையே கூறினா ராயினும், இனம்பற்றிக் கரணம் முதலியனவும் கொள்ளப்படும். `ஒன்றிய - கீழ் உள்ளாரோடு பொருந்திய` என உரைக்க. `சீகண்ட உருத்திரரே சகலர்கட்குப் பரம்பொருளாய் எல்லாவற்றையும் அருளுபவர்` என்பது சிவாகாமங்களில் சொல்லப்படுவது. `கைலாச பதியாய் உள்ளவர் இவரே` என்பதும் அத்தகையது. அதனால், இவர் பிரளயாகலருள் பக்குவராய்ச் சிவனருளைப் பெற்றவர் என்க. `ஆவயின் உள்ளார்` என ஒரு சொல்வருவித்து, அத் தொடரை, `கன்மத்தர்` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``தாவிய மாயையில் தங்கும் பிரளயர்`` என்றதனால், அவருக்குச் சகலாவத்தை உண்டாகாமை பெறப்பட்டது. கேவலாவத்தை சுத்தாவத்தைகள் எல்லார்க்கும் உள்ளது.
இதனால், சகலாவத்தை இல்லாதவருள் ஒருசாராரது இயல்பும், `அன்னார் இவர்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.

பொழிப்புரை :

எல்லார்க்கும் உரித்தாகின்ற கேவலாவத்தையைத் தாங்களும் உடையவர்களாய், ஆயினும் கன்மமும், மாயையும் இன்றி, ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்களில் பக்குவம் பெற்றோர் அனந்தர் முதலிய அட்ட வித்தியேசுரர்களும், சத்த கோடி மகாமந்திரேசுரர்களும் ஆவர். அபக்குவரோஅநேகர்.

குறிப்புரை :

அபக்குவர்களையும் `மந்திரேசுர்` என்பர். இவர்களைச் சிவஞான சித்தி.8 ``வித்தைகள்`` எனக்கூறிற்று. `மந்திர மகேசுரர்` என்பதனை, ``ஈசர்`` எனக் கூறினார். `அநேகர்` என்ற குறிப்பானே, அபக்குவர் என்பது போந்தது. ஒரு மலம் உடையோர் `விஞ்ஞான கலர்` எனப்படுவர்.
இதனால், `சகலாவத்தை யில்லாதவருள் மற்றொரு சாரார் இவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு)
ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர்
தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.

பொழிப்புரை :

மேல், `ஒருமலம் உடையார்` எனக் கூறப்பட்ட -வர்களில், பெறுதற்கரிய சிவனது திருவருளை நிரம்பப் பெற்ற சிலர் அதிகார மல வாசனை, போக மல வாசனை ஆகியவைகள் நீங்கப் பெற்று, இலய மல வாசனை மட்டுமே உடையவர் ஆவர். ஆகவே, அவர்கள் மலம் முற்றும் நீங்கிய முத்தர்களாகவே கருதப்படுவர். (அதனால் அவர்கட்குக் கேவல நிலை உள்ளதாகவும் கருதுதல் கூடாது. அவர்கள் வாழ்வது அபர விந்து அபர நாதங்களைக் கடந்த பரவிந்து பர நாதங்களிலாம். ஆகவே, அவர்கள் சூக்குமை வாக்கு ஒன்றை மட்டுமே உடையவர் ஆவர். அவ்வாற்றால் அவர்கள், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவராகக் கருதப்படுவர்.

குறிப்புரை :

`போம்மலந் தன்னால்` என்றது, `மலம் போயதனால்` என்றபடி, மலம் இங்கு மல வாசனை. போயவை அதிகார மல வாசனை, போக மல வாசனைகளே. அஃது, ``ஓம் மயமாகி`` என்றத னாலும், ``ஒடுங்கலின்` என்றதனாலும் விளங்கும். ஒடுங்கல். இலய நிலையில் நிற்றல். அதனுள்ளும் இங்கு கூறப்பட்டது சூக்கும இலய நிலையே. அதனால், `விந்து, நாதம்` என்பன அபர `விந்து, அபர நாதங்களே ஆயின. இங்ஙனமாகவே, `அபர முத்தர்கள்` என்னும் பெயர் இந்நிலையில் நின்றோர்கட்கு பெரிதும் பொருந் துவதாம். `அணு சதாசிவர்கள்` என்னும் பெயரும் போக மலம் உடையவர்கட்கே பொருந்துவது. அவர்கள் சாதாக்கிய தத்துவத்தில் போகங்களை நுகர்ந்து கொண்டிருப்பர். தோம் - குற்றம்; மலம். `இவர் தொழில்` என ஒரு சொல் வருவித்து `தோம் அறு சுத்தாவத்தையே` என ஏகாரத்தை மாறிக் கூட்டி முடிக்க. ஏகாரம் - பிரிநிலை.
இதனால், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஓரிருள் மூவகை நால்வகை யும்முள
தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை
சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை
வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.

பொழிப்புரை :

ஆன்மாத் தன் அறிவை யிழந்து நிற்பதாகிய கேவல நிலையுள் மூன்றுவகை உண்டு. அவை நாலாகவும் வகுத்துக் கூறப்படும். `அவை யாவை` - என ஆராயின், ஆணவகேவலம், ஆணவத்தை நீக்குதற்குச் சிவன் விரும்பும் விருப்பக் கேவலம், தத்துவ சுத்திக்குப்பின் ஆன்ம தரிசனத் தொடக்கத்தில் உளதாகும் திகைப்புக் கேவலம்` என்பன. (இவை முறையே ஆன்மா அநாதியில் ஆணவத்தில் மூழ்கியிருந்த நிலையும், பின்பு இறைவன் ஆன்மாவை அந்நிலையினின்றும் விடுவிக்க மாயையைக் கூட்ட முனையும் நிலையும், பின்பு மாயா காரியங்களாகிய கருவி கரணங்களினின்றும் நீங்கிய நிலையுமாகும். இவை முறையே மருட்கேவலம், சகல கேவலம், அருட் கேவலம் - எனப் பெயர் பெறும். இறைவன் மாயையைக் கூட்டமுனைவது சூக்கும ஐந்தொழிலாகும். இந்நிலை சருவ சங்காரத்திற்குப் பின் மீளப் படைத்தற்கு முன்னேயும் உளதாகும். இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்து அதிகரணத்தின் சிற்றுரையால் உணர்க. அருட் கேவலம் துகளறு போதத்திலும் சொல்லப்பட்டது.
இனிச் சகல கேவலத்தை, விஞ்ஞான கேவலம், பிரளய கேவலம் - என இரண்டாக்கி, `கேவலம் நால் வகைத்து` என்றலும் உண்டு (இதனை நாயனார் உய்த்துணர வைத்தார். சகல கேவலத் -தையும் வேறாக எண்ணி, `கேவலம் ஐவகைத்து` என்றலும் உண்டு. அதனை நாயனார் குறித்திலர். மாயை, கன்மம் - இரண்டனோடும் கூடாது, அவை கூட்டப்படுதற்கு ஆவன செய்யப்படும் நிலை விஞ்ஞான கேவலம் - எனவும், கன்மம் கூட்டப்பட்டு, மாயை கூட்டப் படாத நிலை பிரளய கேவலம் - எனவும் உணர்க.)
இவ்வாறான பல வகை அவத்தைகளை வைத்துச் சிவன் ஆன்மாக்களின் பாசங்களைப் போக்குகின்றான்.

குறிப்புரை :

`ஆகவே அஃது அருட் செயலேயன்றி, வன்கண்மைச் செயலன்று` என்பது குறிப்பெச்சம். `சேர் இச்ை\\\\u2970?` `சேர்க்கும் இச்ை\\\\u2970?` எனப் பிறவினை வினைத்தொகை. சார் இயல் - சார்பு தன்மை. இயல் உடையவற்றை `இயல்` என்றார். அவை மாயா காரியங்கள். `தாம், ஏ` அசைகள். தணப்பு - நீக்கம். இஃது ஆகுபெயராய், அது நிகழும் நிலையைக் குறித்தது. வாரி வைத்தல் - அள்ளி வைத்தல்; `மிகுதியாக வைத்து` என்றவாறு.
இதனால், காரண அவத்தைகள் மூன்றனுள் ஒன்றன் உட்பகுதிகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று)
எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி
மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு)
எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.

பொழிப்புரை :

உண்மையான சுத்தாவத்தையாவது, விபரீத ஞானத்தையே தருகின்றவைகளாகிய கருவிகள் முப்பத்தாறினின்றும் விடுபட்டு அப்பாற்போய், அங்ஙனம் போயதனால் அறியா -மையையே தருவதாகிய ஆணவமலம் வந்து பற்றுதலாகிய அந் நிலையும் தோன்றாதொழிய, யாதொன்றனையும் உண்மையாகவே அறியும் அறிவை யுடையவனாய், அந்த அறிவால் சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஒருகாலத்திலே ஒருங்கே உணரும் நிலையை உடையனாய், அத்தன்மைத்தாய் விளங்கும் பராகாயமாகிய அருள் வெளியுட் பகுந்து, அவ்வெளிக்குள் உள்ள சிவனை, அடையாமல் அடைந்திருப்பதாகும்.

குறிப்புரை :

போதம் - அறிவு. `பொய்` என்றது விபரீதத்தை. போதம் தருவனவற்றை, `போதம்` என்றார். எய்யாமை - அறியாமை. `எய் யாமையே அறியா மையே` என்பது தொல்காப்பியம்.l எய்யாமைக்கு எதிராக `எய்தல்` என்றோ, `எய்த்தல்` என்றோ ஒரு சொல் அக்காலத்தில் இல்லையாயினும் இங்கு நாயனார் `அறிகின்ற அத்தன்மையுடையவன்` என்னும் பொருளில், `எய்யவன்` என்றார். மெய் - பொருள். `மெய்யாம் வெளி` என இயைத்தலும் ஆம். சராசரங்களும் தானாதல், அவற்றை ஒரு காலத்தே ஒருங்கே உணர்ந்து நிற்றல். எய்தாமல் எய்தல், புதுவதாய்ச் சென்று அடையாமல் அநாதியே பெற்றிருந்த பொருளை அஃது அன்ன தாதலை உணர்ந்து, வியத்தல். இதனானே, `சுத்தாவத்தையே இயற்கை` என்பதும், `கேவலமும், சகலமும் மலங்களாகிய உபாதியான் ஆக செயற்கைகள்` என்பதும் விளங்கும். இக்கருத்தே பற்றித் திரு வள்ளுவரும், வீட்டு நிலையை, `பேரா இயற்கை`3 என்றார். எய்துதற்குச் செயப்படு பொருள், `வெளி` என்ற குறிப்பால் பெறப்பட்டது. `எய்தும்` எனக் காலம் வினை முதல் போலக் கூறப்பட்டது.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு உண்மையாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அனாதி பசுவியாத் தியாகும் இவனை
அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு)
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.

பொழிப்புரை :

அனாதியே பாசத்துட்பட்டுப் பசுத்தன்மை எய்தி நின்ற இந்த உயிரை, அனாதியாயும், ஆதியாயும் வந்த ஐந்து மலங்களால் ஆட்டிப் படைப்பவன் சிவன். அவன் அனாதியில் கேவல நிலையிலிருந்த உயிரை சகல நிலையில் கொணர்ந்துவைத்துப் பின்பு அனாதியாய பிறப்பு ஒழியும்படி சுத்தாவத்தையில் சேர்ப்பான்.

குறிப்புரை :

முதல் அடியில் `அனாதியில்` என ஏழாவது விரிக்க. `பசுவாய்` என்னும் ஆக்கச் சொல்தொக்கது. `வியாத்தியாய்ப் பசுவாகும் இவனை` என மொழிமாற்றி உரைக்க. ஒன்றைத் தன்னுள் அடக்கியிருப்பது வியாபகப் பொருள்; ஒன்றில் தான் அடங்கி யிருப்பது வியாப்பியப் பொருள். அடங்குதலும், அடக்குதலும் இன்றிச் சமமாய் இருப்பது வியாத்தி (வியாப்தி) பொருள். `அனாதி யாய், இல்லாய் வந்த` என இரண்டிலும் ஆக்கம் வருவித்து உரைக்க. அனாதியில்லாய் வருதலாவது, ஆதியாய் வருதல். அனாதியாய் வந்தது ஆணவம். ஆதியாய் வந்தவை மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி. `ஆட்டி` என்பது பெயர். ஆட்டுமாறு பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. `ஆட்டி - இட்டு, ஆக்கும்` என முடிக்க. `ஆகும்` என்பது பாடம் அன்று. `கேவலனை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப் பட்டது. `வித்தினின்று` மரம், மரத்தி -னின்றும் வித்து என்பது போல, `வினையால் பிறப்பு, பிறப்பால் வினை` என இவ்வாறு முதல் அறியப்பாடது தொடர்ந்து வருதலின் பிறப்பை `அனாதி` என்றார்.
இதனால், `கேவலம் ஆணவத்தின் செயல்` என்பதும், `சலகமும், சுத்தமும் சிவன் செயல்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

பொழிப்புரை :

எல்லாவற்றினும் மேலாய், நிறைவாய் உள்ள உண்மைச் சுத்த துரியாதீதமே, `சுத்தாவத்தை` என்றற்குப் பெரிதும் ஏற்புடையது. அஃது `அருட்கேவலம்` எனப்படும் தத்துவ சுத்திக்குப் பின் வாய்ப்பதாகும். அதனை அவ்வாற்றால் சிவனால் தரப்பட்டவர் தனித்த ஒரு சுத்தமாகிய அந்த அதீத நிலையில் யாதொரு பற்றும் இல்லாத சிவமேயாய் இருப்பர். (இதில், `யான், எனது` என்னும் உணர்வு இல்லையாம்.) இனி அதற்குக் கீழ்நிலையில் உள்ள துரிய நிலையில் ஆன்ம அறிவு சிறிதே நிகழ்தலால், ஆன்மாச் சிவனை அறியும் முகத்தால் தன்னை அறிபவனாக உணரும் நிலை உள்ளதாம்.

குறிப்புரை :

`அந்தரம்` என்பது, `ஆகாயம்` என்னும் பொருட்டாய், மிக மேலான நிலையைக் குறித்தது. அஃது உண்மைச் சுத்த துரியா தீதமாம். `அதற்கு வழி` என்றதனால், `கேவலம்` என்றது, அருட் கேவலம் ஆயிற்று. தந்தோர் - தரப்பட்டோர். `அதனைத் தந்தோர்` என்க. `சுத்த கேவலம்` என்றதில், `கேவலம் கலப்பற்றது` எனப் பொருள் தந்தது. ``தற்பரத்தின்பால்`` என்பதன் பின் `உளர்` என்பது எஞ்சி நின்றது. `இடை` - ஏழனுருபு. `அறிவுற` என்னும் செயவெ னெச்சம் காரணப் பொருளில் வந்தது. தான், அசை. ஏகாரம், தேற்றம். இதன்பின்னும் `உள்ளது` என்பது எஞ்சி நின்றது. `தத்துவம் ஆமே` - எனப்பாடம் ஓதலும் ஆம்.
இதனால், சுத்தத்தில் சுத்தமாய் உள்ளவை சுத்த துரியமும் துரியாதீதமும் ஆதல் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

பொழிப்புரை :

நிலம் முதல் பிரகிருதி ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் சகல வருக்கத்து ஆன்மாக்கட்குப் பரமாய் உள்ள சீகண்ட உருத்திரரிடத்தில் ஒடுங்கும் (இது பற்றியே இவை, `ஆன்ம தத்துவம்` எனப் பெயர் பெற்றன. ஒடுக்கம் கூறுதலால் காரணமாய் உள்ள பிரகிருதியையும் கூட்டி `இருபத்தைந்து` என்றார்.)
அந்தச் சீகண்ட உருத்திரரும், `தமக்கு` தனு கரணம் முதலியன வாய் வருவன அசுத்த மாயையே` என்னும் உண்மையை உணர்ந்து அவற்றின் நீங்கிச் சுத்த வித்தையில் வீடு பெறுவார். (எனவே, `அசுத்த மாயா காரியங்களாகிய வித்தியா தத்துவங்கள் அந்தச் சுத்த வித்தைக்குத் தலைவராகிய அனந்த தேவரிடத்தில் ஒடுங்கும்` என்பது தானே பெறப்பட்டது.)
இனி, அந்தச் சுத்த வித்தை முதலாக ஒடுக்க முறையில் நிற்கும் முதல் மூன்று தத்துவங்களும், `சத்தி` எனப்பெயர் பெற்று நிற்கும் இலய சிவனிடத்தில் ஒடுங்கும். சிவ தத்துவம் ஐந்தில் எஞ்சிநின்ற `சத்தி, சிவம்` என்னும் இருதத்துவங்களும் முடிநிலைப் பேறாய் உள்ள சுத்த சிவனிடத்தில் ஒடுங்கும். இவை யெல்லாம் மீளத் தோன்றுங்கால் இம்முறையானே தோன்றும்.

குறிப்புரை :

`ஆன்மா` என்பது, ஏற்புழிக் கோடலால், `சகல வருக்கத்து ஆன்மா` எனப் பொருள் தந்தது. அவைகட்குப் பரமா யுள்ள கடவுளை அவ்வான்மாக்களாக உபசரித்துக் கூறினார். `ஆன்மாவும்` - என்னும் உம்மை சிறப்பும்மை. சுத்த சிவன், `இலயம், போகம், அதிகாரம்` - என்னும் நிலைகளில் நிற்குங்கால் முறையே, சத்தன், `உத்தியுத்தன், பிரவிருத்தன்`-எனப் பெயர் பெறுதலை நினைக. சத்தன் - சத்தியை உடையவன். எனவே, சத்தியை உடை யவனை, `சத்தி` - என ஆகுபெயரால் கூறியதாயிற்று. `ஐயை - சத்தி. `சித்தி` என்றது, `முடிநிலைப் பேறு` என்னும் பொருட்டாய் நின்றது. இப்பொருளை, `தத்துவம் எண்மூன்றும் சென்று ஆன்மா தத்துவத் தொடுங்கும்` என்னும் சிவஞான சித்திச் செய்யுட்கு8 மாதவச் சிவஞான யோகிகள் உரைத்த உரை பற்றித் தெளிக.
சீகண்ட உருத்திரருக்கு ஒடுக்கங் கூறிய அதனானே, சகல வருக்கத்தினரான `அயன், மால்` என்பவரில், `அயன் மாலிடத்திலும், மால் சீகண்ட உருத்த்திரரிடத்திலும் ஒடுங்குவர்` - என்பதும், `வித் -தியேசுரர் மகேசுரனிடத்திலும் மகேசுரன் சதா சிவனிடத்திலும், சதா சிவன் `சத்தி` என நிற்கும் இலயசிவனிடத்திலும், `சத்தி` என்னும் சிவன், `சிவன்` என்றே பெயர்பெற்று நிற்கும் சிவனிடத்திலும் அந்தச் சிவன் சுத்த சிவனிடத்திலும் ஒடுங்குவர் என்பதும் பெறப்படும். இவற்றால், `சகலத்தில் நிகழும் சுத்த சாக்கிரம்` எனப்படும் தத்துவ சுத்தி ஒன்றே, `நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளின் அடங்கிய தத்துவங் -களினின்றும் முறையே நீங்குதலே, சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத் தில் சொப்பனம் முதலான பஞ்சாவத்தைகளாய் நிகழும்` என்பதும் உய்த்துணரவைத்தமை அறிந்துகொள்க.
இதனால், `அவத்தைக்கு ஏதுவாவன தத்துவங்களே` என்பது பற்றி அவற்றின் ஒடுக்கத் தோற்றமுறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.

பொழிப்புரை :

(மேல், `நாலாறுடன் புருடன்` - என்னும் மந்திரத்தில் `வேதாந்தி தத்துவம்`-எனக் கூறப்பட்ட இருபத்தெட்டுத் தத்துவங்களில்) ஒடுக்க முறையில் முதல் இருபத்தைந்து தத்துவங்கள் சீவனில் அடங்கும். இருபத்தாறாம் தத்துவமாகிய ஈசுரன் உட்பட மற்றைய மூன்று தத்துவங்களும் மெயப்பொருளாகிய பரப்பிரமத்தில் சீவன் ஒன்றாகும் பொழுது அதில் அடங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், `விவகாரத்திற்குக் காரண சத்தியாகிய மாயை, அதற்கு அதிட்டானமாம் பாரமார்த்திகப் பொருளாகிய பரப்பிரமம் என்னும் அவ்விரண்டிலே எல்லாம் தோன்றுதலால், எல்லாம் ஒடுங்குதலும் அவற்றிலேதான்` எனலாம்.

குறிப்புரை :

`இது வேதாந்தி கொள்கை` என்பதாம். `ஐயைந்தும் ஆன்மாவில்` என்று, `ஐயைந்தாவன ஆன்மா உட்பட` என்றபடி, ``அடங்கிடும்`` என்பது `ஆன்மாவில்` என்பதனோடும் சென்றியைந் -தது. `மெய்யாகக் கண்ட` என ஆக்கம் வருவிக்க. `மேவும் மெய் யோகத்தில்` என்றாரேனும் `மெய் யோகம் மேவுகையில்` என்றலே கருத்து. மேவுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. காண - காணுதல். காணுதல் - தோன்றுதல். எய்யும்படி - அறியும்படி. `எய்யும் படி காணுதலால் நாலேழ் அவற்றில் எய்தி அடங்கும்` எனக் கூட்டி முடிக்க. `நாலேழும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அவற்றில் அடங்கும் எனச் கூட்டியுரைக்க.
இதனால், தத்துவங்களின் தோற்ற ஒடுக்க முறைகளை வேதாந்திகள் சித்தாந்தத்தின் வேறுபடக் கூறுமாறு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.

பொழிப்புரை :

ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக் காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். இரு மலம் உடையவராகிய பிரளயாகலர் கேவலா வத்தையை அடையும் பொழுது வித்தியாதத்துவத்தின் முடிவாகிய மாயாதத்துவம் அவர்கட்கு அனுபவப்பொருளாகும். போக்கிய காண்டமாய்த் தூலமாய் உள்ள பிரகிருதிக் காரியங்களை உடைய சகலர் கேவலாவத்தையை அடையும் பொழுது காரணமாகிய பிர கிருதியையே பற்றிக்கொண்டு, அதன் காரியப் பொருள்களில் ஒன்றையும் அனுபவித்தல் இன்றியிருப்பர், இனிச்சகலாவத்தை சகலர்கட்கே உளதாகும்.

குறிப்புரை :

`ஒன்றும்` - என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது. இரண்டாம் அடியோடு இயைய, முதல் அடியின் ஈற்றிலும், `ஆவர்` என்னும் ஆக்கம் வருவிக்க. விஞ்ஞானகலர்க்கும் சுத்த மாயை உளதாயினும் அதனால் செலுத்தப்படும் அசுத்த தத்துவங்கள் அவர் கட்கு இல்லாமையால், `கேவலத்தில் அனுபவம் இல்லை` என்றும், ஏனையோர்க்குப் பிரேரக காண்டம், போசயித்திரு காண்டம்` -என்பவை இருத்தலால் அவர்கட்கு `கேவலத்தில் அனுபவம் உண்டு` என்றும், `சகலர்` என்பதில், `கலை` எனப்படுவது பிரகிருதியே யாகையால், `சகலர்க்கு மட்டுமே சகலாவத்தை உண்டு` என்றும் கூறினார். `கேவலம்` என்பது பின்னும் சென்றியைந்தது. காணும் உருவம் - காணப்படுகின்ற தூலப்பொருள். `காணாமை` என்பதில், காணுதல் - அனுபவித்தல். காணாமை, காணும் உருவத்தைக் காணாமை. பூணும் - பற்றாகும்.
இதனால், காரண அவத்தைகள் பொதுவாகச் சொல்லப் படினும் அவை அவ்வவ்வுயிர்களின் பந்த வேறுபாட்டிற்கு ஏற்ப வேறுபட்டு நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆணவமா கும்விஞ் ஞானகலருக்குப்
பேணிய கன்மம் பிரளயா கலருக்கே
ஆணவம் கன்மமும் மாயையும் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.

பொழிப்புரை :

(இம் மந்திரத்தில் பதிப்புக்களில் காணப்படும் பாடம் திரிவு செய்யப்பட்ட பாடம்.)
விஞ்ஞானகலர் - என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் ஆணவமலம் ஒன்றுமே. `பிரளயாகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் அந்த ஆணவத்துடன் கன்மமும் கூடிய இரண்டு மலங்கள். `சகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாச பந்தமே. `ஆணவம், கன்மம், மாயை` - என்னும் மும்மலங்களும்.
`பிரளயாகலர்` என்பதில், `பி` என்னும் இகரம், வடசொல் பற்றிவந்த குற்றியலிகரமாய் அலகு பெறாதாயிற்று. பின்னும் இவ்வாறு ஆம் இடங்கள் உள.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் உள்ள `ஆணவம்` என்பதன் பின் எண்ணும்மை விரிக்க.
இதனால், மூவகை உயிர் இனங்களில் இலக்கணங்களும் கூறப் பட்டன. இதனால், `மாயை` எனப்பட்டது பிரகிருதியே - என்பதை மேலெல்லாம் கூறியவாற்றால் உணர்க.

பண் :

பாடல் எண் : 16

கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால்
ஆவயின் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

பொழிப்புரை :

(ஒன்று இடையிட்டு முன்னை மந்திரத்தில் கூறிய கேவல வகைகளில்) தமக்குரிய கேவலநிலை அடைபவராகக் கூறப்பட்ட விஞ்ஞானகலர், அக்கேவல நிலையினின்றும் எழுச்சி பெறுதல் `விந்து` எனப்படும் சத்தி தத்துவத்தினாலாம். (எனவே, கேவல நிலையில் அவர்கள்` நாதம்` எனப்படும் சிவதத்துவத்தைப் பற்றியிருந் -தமை பெறப்படும். ) அந்த விந்து சத்தியோடு பிற சுத்த மாயா தத்துவங் -களைப் பற்றிச் செயற்படுதலே அவர்களது சகல நிலை யாகும். (ஆகவே சகலருக்குப் போலப் பிரகிருதி தத்துவங்களைப் பற்றும் சகல நிலை அவர்கட்கு இல்லையாம்.) அந்தச் சகல நிலையில் அவர்களுடைய தனு கரணங்கள், மந்திர வடிவாகிய சுத்த மாயையால் ஆயினவேயாம்.

குறிப்புரை :

`கிளர்ந்த` என்பது பாடமாயின், `எழுச்சியுற்ற` என்பது பொருளதாகும். அப்பொழுது, பின்பு வந்த `கிளர்` என்பது `கிளர்ந்தமை` எனப்பொருள்தரும். `விஞ்ஞான` என்பது `கிளர்ந்தமை` எனப் பொருள் தரும். `விஞ்ஞான` என்பது கடைக் குறைந்து நின்றது. கிளர், முதனிலைத் தொழிற்பெயர். `இவரது சகல நிலை, சகலரது சகல நிலை போன்றதன்று` என்றற்கு, `அச்சகலம்` எனச்சுட்டிக் கூறினார். எனவே, இங்கு, `சகலம்` என்பது ஒப்பின் ஆய பெயராயிற்று. `சகலத்தை` என்னும் இரண்டன் உருபை ஏழன் உருபாகத் திரித்துக் கொள்க. இரண்டன் உருபை ஏழன் இருபாகத் திரித்துக் கொள்க. உம்மை சிறப்பு. `மெய்ம்மை, மந்திர மாமாயை மேவிய` - என மாறிக் கூட்டியுரைக்க. மெய் - உடம்பு. தனு வொன்றையே கூறினாராயினும் கரணமும் உடன் கொள்ளப்படும். மை, பண்புணர்த்தாது, பகுதிப் பொருள் விகுதியாய் நின்றது. `மாமாயையாய்` - என ஆக்கம் வருவிக்க. `மேவிய`-என்பது, `மேவின` என முற்று.
இதனால், விஞ்ஞானகலர் தமது கேவலத்தில் நீங்கித் தமக்குரிய சகலத்தில் நிற்குமாறு கூறப்பட்டது. (இந்தச் சகலம் சகலரது சகலம் போலாமையால் இதுவும் `கேவலம்` என்றே வழங்கப் படுகின்றது. எனினும், விஞ்ஞானகலரது கேவலம் இரு தன்மைப்பட்டு நிற்குமாற்றை இம்மந்திரம் கூறிற்று என்க.)

பண் :

பாடல் எண் : 17

மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம்
மாயச் சகலத்துக் காமியம் மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :

வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் மட்டுமே செயற்பட்டு நிற்கும் நிலையில் பிரளயாகலர்பால் அந்த மாயா தத்துவ மும் மெத்தெனவே செயற்படுதலால் ஆணவம் மேற்பட்டு நிற்கும். (அஃதே அவர்க்குக் கேவல நிலையாகும்.) இனி, அவர்கட் குரிய சகலா வத்தைக்கண் சுத்த தத்துவங்கள் செயற்படுதலானே கன்ம மலங் காரியப் படுவதாகும். இந்நிலையில் நிற்பவர்கள், மேல், ``தாவிய மாயை``- என்னும் மந்திரத்தில் (2199) குறிப்பிடப்பட்ட நூற்றெட்டுருத்திரராவர்.

குறிப்புரை :

`பிரளயாகலர்பால்` - என ஏழாவது விரிக்க. `ஆணவம்` என்பதின்பின் `மிகும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. மாயம் - நிலையாமை. பிரளயாகலர்க்குரிய சகல நிலையாவது, வித்தியாதத்துவங்கள் செயற்பட அவற்றால் அறிவு விளங்கப்பெறும் நிலை. காமியம் - கான்மியம். அஃதாவது காரிய கன்மம். மாமாயை என்றது, அதன் காரியமாகிய சுத்த தத்துவங்களைக் குறித்த ஆகு பெயர். `மாமாயையால் காமியம்` என உருபு விரித்து, மாறிக்கூட்டுக. `சுத்த தத்துவங்கள் செயற்பட்டுநிற்கும்` என்றதனால், அவற்றால் வித்தியா தத்துவங்கள் செயற்படுதல் தானே பெறப்பட்டது.
`காமியம்` என்பதன்பின்னும், `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. மன்னுதல் - நிற்றல். இது `மன்` என முதனிலையளவாய் நின்று, மன்னுவாரைக் குறித்தது.
இதனால், இருமலம் உடையார்க்குக் கேவல சகலங்கள் நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.

பொழிப்புரை :

`மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

`ஆகவே, இவர்கள் அனைவரும் மூன்றவத்தை -களையும் அடைவர்` என்பது குறிப்பெச்சம். மேல், விஞ்ஞான கலர் பிரளயாகலர்கட்கும் சிலவகையான சகலாவத்தைகள் உள என்பதுபோலக் கூறியமையால், `மும்மலத்தவரே உண்மையில் சகலாவத்தையை அடைவர்` என்றற்கு, `அம்மெய்ச்சகலத்தர்` என்றார். ஆர்த்தல் - ஆரவாரித்தல். இஃது உலக மயக்கத்தில் மயங்கிச் செருக்குதல். மேல், ``சகல அவத்தையில் சார்ந்தோர்`` - என்னும் மந்திரத்திலும் (2198) இம்மந்திரப் பொருள் கூறப்பட்டதாயினும் அங்கு, `சகல வருக்கத்தினராவார் இவர், என்பதை உணர்த்துதலும், இங்கு, `உண்மைச் சகலாவத்தையை எய்துபவர்கள் இவர்` என்பதை உணர்த்துதலும் ஆகக்கருத்துக்கள் வேறுவேறு என்க. பின்னர்க் குறிக்கப்பட்ட கருத்தே இம்மந்திரத்தாற் கொள்ளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம்
மத்த இருள்சிவ னானகதி ராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சுத்தவத்தையில் மூழ்கினவர்களே, `ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலங்களும் செயல் ஒழிந்து, உண்மை மாத்திரையாய் நிற்றலாலும், அம்மலங்களைச் செயற்படுத்தித் தனியாகி அவறறிற்குத் தலைமை பூண்டு நின்ற திரோதான சத்தியாகிய மலமும் சிவசூரியனது கிரணமாம் அருட் சத்தியால் சற்று விட்டு நீங்குதலாலும் உண்மையில், `சுத்தர்` எனத் தக்கவர் ஆவர்.

குறிப்புரை :

சகலத்தில் சுத்தத்தை எய்தினோரை நீக்கி உண்மைச் சுத்தத்தை எய்தினோரைச் சுட்டுதற்கு, `தோய்ந்தவர்` என்றார். சத்து - செயற்படுதல் இன்றி உண்மை மாத்திரையாய் நிற்றல். `சத்து ஆதலாலும்`-என ஆக்கமும், உம்மையும் விரிக்க. செயற்படத்தக்க பொருள்கள் செயற்படாது, உண்மை மாத்திரையாய் நிற்றல், `அவற்றின் காரண நிலை`-என்றும், செயற்பாடு, `அவற்றின் காரிய நிலை` என்றும் சொல்லப்படும். மலங்கள் காரண நிலையில் நிற்கு மிடத்து உயிரைப் பந்திக்க மாட்டா; காரிய நிலையை அடையும் பொழுதுதான் உயிரைப் பந்திக்கும். மலங்கள் உயிர்களிடத்தில் காரியப்படுதலும், படாமையும் அவற்றின் அபக்குவ பக்குவங்கட்கு ஏற்ப நிகழும். `மும்மலங்கட்கும் காரியங்கள் உள` என்பதைச் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண மாபாடியத்தாலும், இருபா இருபஃதாலும் அறிக. காரணங்கள் நிலையுடையவாதல் பற்றி அவற்றை, `சத்து` என்றும், காரியங்கள் நிலையாமை பற்றி அவற்றை `அசத்து` என்றும் கூறினார்.
மத்தம் - மயக்கம். `மத்தமாகிய இருள்` என்க. எனவே, `விபரீத ஞானம்` என்றதாம். விபரீத ஞானத்தைச் செய்வதை, விபரீத ஞான மாகவே உபசரித்துக் கூறினார். அருட் சத்தியை, `கதிர்` என்றதனால், சிவன் கதிரவனாதல் பெறப்பட்டது. இது குறிப்புருவகம். சத்து ஆதலாலும், ஓடலாலும், விட்டிடலாலும் சுத்தராவார்கள்` என முடிக்க.
இதனால், உண்மைச் சுத்தாவத்தை நிகழும் முறைமையும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.

பொழிப்புரை :

உயிர் சிவத்தோடு மட்டுமே பொருந்தி நிற்கின்ற அந்தத் தனிநிலையே பரமுத்தி நிலையாகும். அதுவே உண்மையில் தூய்மை யாகும். (இதனைச் `சிவகேவலம்` என்றும். `பர கேவலம்` என்றும் கூறலாம்.) இதற்குக் கீழ்ப்பட்டன எல்லாம் சகலங்களே. (அஃதாவது, மாசொடுபட்டனவே.) அந்நிலையில், சகல வருக்கத்து ஆன்மாக்கள் கலை முதல் மண் ஈறாய் உள்ள தத்துவங்களின் நீங்கி நிற்றல். அவற்றிற்கு மெய்ந்நூல்களில்சொல்லப்படுகின்ற சுத்த கேவல மாகும். (இஃது, `அருட் கேவலம்` என்பதாகத் துகளறு போதத்தில் சொல்லப்பட்டது. வெண்பா-25) புருவ நடுவிலே நிகழ்வதாகிய சாக்கிராவத்தையிலே புறப்பொருளில் தோய்தல் இன்றி, அறிவுக் கறிவாய் உள்ள சிவத்திலே தோய்ந்திருத்தல் சகலத்தில் சுத்தமாம். (இதுவே, `சாக்கிரத்தில் அதீதம்` - என்க.)

குறிப்புரை :

முதற் பொருளை, `தத்` எனக் குறிப்பிடுதல் உபநிடத வழக்கு. `தான்` என்றது, முன்னர்க் கூறிய தற்கேவலத்தை. `சகலம்` என்பது `கலப்பு` என்னும் பொருட்டாய் நின்றது. இரண்டாம் அடியின் ஈற்றில் உள்ள `ஆம்` என்பதை மூன்றாம் அடியில் உள்ள `கேவலம்` என்பதன் பின்னர்க் கூட்டுக. `சாக்கிரத்தில்` என ஏழாவது விரிக்க. ஈற்றடியிலும் `சிவம்` தத்` என்றே சொல்லப்பட்டது. இரண்டிடத்திலும் `தன்` என்றே பிரித்து, `சிவத்தை இவ்வாறு கூறுதல் தமிழ் வழக்கு` என் -றலுமாம். `தற் சுத்தம்` என்பதில் `தன்` என்றது, மேற்கூறிய சகலத்தை.
இதனால், `கேவலம்` என்னும் காரண அவத்தை பல வகையில் நிகழ்தலும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன. மேல், `ஓரிருள் மூவகை` என்னும் மந்திரத்தில்8 கேவலம் மூன்றும், நான்குமாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

அறிவின் றமூர்த்தன் அராகாதி சேரான்
குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல்இலான் தினக்கற்றல் இல்லோன்
கிறியன் மலவியாபி கேவலத் தானே.

பொழிப்புரை :

சிவஞான சித்தியாரில்,
``அறிவிலன்; அமூர்த்தன்; நித்தன்;
அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன்; கலாதி யோடும்
சேர்விலன்; செயல்க ளில்லான்;
குறியிலன்; கருத்தா அல்லன்;
போகத்திற் கொள்கை யில்லான்;
பிறிவிலன் மலத்தி னோடும்
வியாபி - கேவலத்தில் ஆன்மா``l
எனப் போந்த செய்யுளின் உரையை நோக்கி இம்மந்திரத்தின் பொருளை உணர்ந்து கொள்க.

குறிப்புரை :

இம்மந்திரத்து இறுதியில் உள்ள `கேவலத்தான்` என்னும் எழுவாயை முதற்கண் வைத்து, `அறிவின்று` என்பதன்பின் `ஆக` என்பது வருவித்துப் பின் அனைத்துப் பயனிலைகளோடும் கூட்டி முடிக்க. அமூர்த்தன் - உடம்பில்லாதவன். அராகம் முதலியவை புத்தி குண பாவகங்கள். குறி - இச்சை. நித்தம் - பிறப்பு இறப்பு இன்மை. கலாதி - கலை முதலிய தத்துவங்கள். `கலாதியைக் கூடான்` என்க. `தின` என்பது, `தின்ன` என்பதன் இடைக்குறை. `போகம் புசிக்க` என்பது பொருள். கிறியன் - பொய்யன்; இருந்தும் இல்லாதவன். மல வியாபி - ஆணவ மலத்தையே முழுமையாகப் பற்றியிருப்பவன்.
இதனால், காரண அவத்தை மூன்றனுள் `கேவலம்` என்னும் அவத்தையின் இயல்பு அதனை அடைந்த ஆன்மாவின்மேல் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.

பொழிப்புரை :

பிரளயாகலர், சகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை யினராய் விளங்கும் ஆன்மாக்கட்கும் முறையே அசுத்த மாயை, பிரகிருதி மாயை, சுத்த மாயை என்பவற்றால் அவ்வப் புவனங்களில் தனு கரண போகங்கள் உளவாகும். எல்லா உயிர்கட்கும் சுத்த மாயை -யின் காரியமாகிய வாக்குக்களால்தான் சவிகற்ப உணர்வு உண்டாகும்.

குறிப்புரை :

`விந்து` இரண்டில் முன்னது பைசந்தி வாக்கைக் குறித்து, அதற்குக் பற்றுக்கோடாகிய அசுத்தமாயையை உணர்த்திற்று. அதனால், `மாயை` என்பது பிரகிருதி மாயையைக் குறித்தது. பரையாவது சூக்குமை வாக்காகலின் அஃது அதன் வடிவாய் நின்ற சுத்த மாயையைக் குறித்தது. இம்மூன்றும் பின் வந்த பிரளயாகலர், சகலர், சுத்தர் என்பவரோடு முறையே இயைந்தன. இங்கு, `சுத்தர்` என்றது ஏனை இரு திறத்தாரை நோக்கச் சுத்தராகிய விஞ்ஞான கலரைக் குறித்தது. இம்மூத்திறத்தாரையும் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார்.
`பிரளயர், சகலர், சுத்தர் ஆன்மாக்கட்கு வையத்தே தனுவும், சத்தியும், கிரியையும் விந்துவினாலும், மாயையினாலும், ஞான பரையினாலும் சந்ததம் (எப்போதும்) மேவும்; மெய்ஞ்ஞானம் விந்துவின் மேவும்` - என இயைத்துப் பொருள் கொள்க. சத்தி - ஆற்றல்; என்றது கரணத்தையும், `மெய்ஞ்ஞானம்` என்றது சவிகற்ப ஞானத்தையும் ஆகும். `மூவகை ஆன்மாக்களுக்கும் சவிகற்ப உணர்வு வாக்குக்களாலேதான் உண்டாகும்` என்பதை,
``மூவகை அணுக்க ளுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்``*
என்னும் சிவஞான சித்தியாலும் அறியலாம். விளங்கிய ஞானம் - சவிகற்ப உணர்வு.
`கேவலத்தில் நின்ற ஆன்மாக்கள் தங்கள் தங்களுக்கு ஏற்ற தனு கரண புவன போகங்களால் சகல நிலையை அடையும்` என்பது கருத்து.
இதனால், மூவகை ஆன்மாக்களுக்கும் சகலாவத்தை நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கேவல மாதியில் பேதம் கிளக் குறின்
கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள்
ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா
ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.

பொழிப்புரை :

காரண அவத்தைகள் `கேவலம்` முதல் மூன்றாகச் சொல்லப்பட்டாலும் அவற்றுள் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து `கேவலத்திற் கேவலம், கேவலத்திற் சகலம், கேவலத்திற் சுத்தம்` என்று மூன்றும், `சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தம்` என மூன்றும், `சுத்தத்திற் கேவலம், சுத்தத்திற் சகலம், சுத்தத்திற் சுத்தம்` என மூன்றும் ஆக ஒன்பதாம். இவ்வேறுபாடுகள் நுண்ணுணர்வுடையார்க்கே விளங்கும்.

குறிப்புரை :

இதனால், காரண அவத்கைள் மூன்றிலும் உள்ள வேற்றுமை வகைகள் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 24

கேவலத் திற்கே வலம்அதீ தாதீதம்
கேவலத் திற்சக லங்கள் வயந்தவம்
கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்
ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.

பொழிப்புரை :

உயிர்கட்கு ஆணவ மல மறைப்பைச் சிறிதே நீக்கிச் சிறிதே அறிவைத் தருவன மாயா கருவிகள். அதனால், அவை ஒடுங்கிய விடத்து ஆணவம் மேற்படுவதே கேவல நிலை. கீழா லவத்தை மத்தியாலவத்தைகளில் எல்லாக் கருவிகளும் நீங்காது, தலை யாய கருவிகள் நீங்கியதே `அதீதம்` எனப்படுகின்றது. கீழா லவத்தையில் நிகழும் அதீதம் முக்குண வடிவான பிரகிருதி மேம் பட்ட நிலை. மத்தியாலவத்தையில் நிகழும் அதீதத்திலும் சிவ தத்துவமும், கால தத்துவமும் ஒடுங்காதே நிற்க, உயிருக்குப் புலன்கள் மிக்கு நிகழும். இதுவும் அதீதமேயாகும். இவ்விரண்டும் சகலாதீதமாகும்.
சருவ சங்கார காலத்தில் இறைவன் எல்லாக்கருவிகளையும் அழித்துவிட்டு, உயிர்களுக்கு முழு ஒய்வைத் தருதலால், அது பொழுது உயிர், உணர்வு சிறிதுமின்றி, முழுமூடமாய், ஆணவ இருளில் மூழ்கிக் கிடக்கும். இது கேவலாதீதமாகும். இதனையே `விஞ்ஞான கேவலம்` என்பர். இந்நிலையில், ஒடுக்கிய உயிர்களை இறைவன் மீளத் தோற்றுவிக்க முயலும் நிலையும் கேவலந்தான். அதனையும் `சகல கேவலம்` - என்றே கூறுவர். அதற்குக் காரணம் அந் நிலையில் இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்வான் என்பதே. இவை முதலான அவத்தைகள் பலவற்றுள் ஒன்றும் இல்லாது ஆன்மா ஆணவ இருளில் மூழ்கிக் கிடந்த நிலை அனாதி கேவலமாகும். இதனை, `மருட் கேவலம்` - என்பர். இவற்றுள் இரு சகலாதீதத்திற்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான கேவலத்தையே, `அதீதாதீதமாகிய கேவலத்தில் கேவலம்` என்றார். அதீதாதீதம் - அப்பாலைக்கு அப்பால்.
மேற்கூறியவாறு இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்யும் நிலையாகிய சகல கேவலமே கேவலத்தில் சகலமாம். சூக்கும ஐந் தொழிலாவது சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும் தோற்று விக்கும் முகத்தால் உயிர்கட்கு உணர்வைப் பொதுவாக நிகழ்வித்தல். சிவதத்துவங்கள், வித்தியா தத்துவங்களைச் செலுத்தியவழியே உயிர் கட்கு அறிவு இச்சை செயல்கள் சிறப்பாக விளங்கும். அஃது இந்நிலை -யில் இல்லாமையாலும், நால்வகை வாக்குக்களும் சுத்த மாயையில் காரியமேயாதலாலும், `கேவலத்தில் சகலங்கள் வயிந் தவம்` என்றார். வயிந்தவம் (வைந்தவம்) - விந்துவின் காரியம். விந்து- சுத்த மாயை. வாக்குக்கள் பலவாதலால் அவற்றால் தோன்றும் உணர்வுகளும் பலவாதல் பற்றிச் `சகலங்கள்` எனப் பன்மையாகக் கூறினார்.
சகலரும், பிரளயாகலரும், `விஞ்ஞானகலர்` என்னும் நிலையை அடைதலே, கேவலத்தில் சுத்தமாகும். அஃதாவது` சகலர் மண் ணாதி கலையந்தம் முப்பத்தொரு தத்துவங்களைக் கடந்து சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலும், பிரளயாகலர் வித்தியா தத்துவங் -களைக் கடந்து, சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலுமாம்.
இந்நிலையை அடைந்த பிரளயாகலர் சகலர்கட்கும் இறைவன் இயற்கை விஞ்ஞானகலர்க்குப் பக்குவ காலத்தில் உள்நின்றே ஞானத்தை உணர்த்தி, வீடு தந்தருள்வது போலவே அருள்தருவான்.

குறிப்புரை :

`விஞ்ஞான` என்பது கடைக் குறைந்து நின்றது. `விஞ் ஞானகலர் ஆதல்` எனவும், `அருள் மூர்த்தி யாதல்` எனவும், `தானேயாய்` எனவும் எஞ்சி நின்ற சொல்லெச்சங்கள் வருவித்துக் கொள்க. தானேயாதலாவது, செயற்கையால் முன்னிலையினும், படர்க்கையினும் தோன்றாமல், இயற்கையில் தன்மையிலே நிற்றல். `அருள் மூர்த்தியாதலும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மையும், `தானேயாயே` என்னும் தேற்றேகாரமும் அவ்விடங்களில் உடன் வருவிக்க.
இதனால், முன் மந்திரத்தில் ஒன்பதாகத் தொகுத்துக் கூறிய அவத்தைகளில் `கேவலத்தில் மூன்று` என்ற அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிரா தீதம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையில் நிகழும் அதீதமே சகலத்திற் கேவலமாகும். மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரமே சகலத்திற் சகலமாகும். சகலத்தில் சுத்தாவத்தையே சகலத்தில் சுத்தமாகும்.

குறிப்புரை :

மத்தியாலவத்தை, சகலத்தில் சுத்தாவத்தை இவை -களின் இயல்புகள் மேலே உணர்த்தப்பட்டன. முதற்கண் ஒன்பதாக வகுத்துக்காட்டி, இங்கு, `சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆம்` என்றது, `கீழாலவத்தை, மத்தியாலவத்தை, மேலாலவத்தை இவையும் சகலத்திற் கேவலமும், சகலத்தில், சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆம்`-என்பது உணர்த்துதற்கு.
இதனால், முன் மந்திரத்தில் கூறியவற்றைத் தொடர்ந்து `சகலத்தில் மூன்று` - எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல்
சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.

பொழிப்புரை :

பரமசிவனோடு இரண்டறக் கலந்த நிலையே சுத்தத்தில் சுத்தம். சீவன் முத்தி நிலையில் பிராரத்தத்தால் விளையும் இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பற்றிருக்கும் நிலையே சுத்தத்தில் கேவலம். சீவன் முத்தி நிலையில் உலகர்பால் இரக்கம் மிக்கு அவர்கட்கு உய்தியை வலிந்து சென்றும் உணர்வித்தலும், அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி இவைகளை அடைந்து அவ்வந் நிலையில் விளையும் சுத்த போகங்களை நுகர்தலும் சுத்தத்தில் சகலம்.

குறிப்புரை :

உபசாந்தம் - அமைதி; நடுவு நிலைமை. விலாசம் - விளையாட்டு; தமக்கு உவப்பான செயல்களில் ஈடுபடுதல். இங்கும், `சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே` என்றது, `சீவன் முத்தி ஒன்றிலேதானே இம்மூன்றும் சொல்லுதற்கும் உரியன என்பது உணர்த்துதற்கு.
இதனால், `சுத்தத்தில் மூன்று` எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடு
சாக்கிரந் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிர தீதந் தனில்சகா னந்தமே
ஆக்கும் மறையாதி ஐம்மல பாசமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்திலும் சொல்லுலகம் முதலாகச் சொல்லப்படுகின்ற ஐந்து மலங்க ளாகிய பாசங்களே உயிருக்கு உலக அனுபவங்களையே தந்து நிற்கும்.

குறிப்புரை :

எனவே, `இவைகள் மலாவத்தைகளேயன்றிப் பரா வத்தைகள் அல்ல` என்பதாம். முதற்கண் நின்ற, `சாக்கிரம்` என்பது மத்தியாலவத்தையைக் குறித்தது. இரண்டு, மூன்றாம் அடிகளில் வந்த `சாக்கிரம்` என்பவனவும் சொற்பொருட் பின்வரு நிலையாய், அதனையே குறித்து நின்றது. ஒடு, எண் ஒடு. மறையாதி - வேதம் முதலியன. அவை சொல்லுலகம் ஆதலை நினைக. `சாக்கிர சாக்கிரந் தன்னில் ... சாக்கிராதீதந்தனில், மறையாதி ஐம்மல பாசமே சகா னந்தமே ஆக்கும்` எனக் கூட்டி முடிக்க. ஏகாரம் இரண்டும் பிரிநிலை. அவற்றுள் முன்னதனால் பிரிக்கப் பட்டது சிவானந்தமும், பின்னதனால் பிரிக்கப் பட்டது திருவருளும் ஆகும். எனவே, `பராவத்தையில் உயிருக்குத் திருவருள் சிவானந்தத்தை ஆக்கும்` -என்பது போந்தது.
இதனால், `சகலம், சுத்தம்` - என்னும் இரண்டிற்குக் காரணமும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 28

சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை
நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.

பொழிப்புரை :

(`சாக்கிராதீதம்`-என்ற பெயர் சொல்லப்படுவன இரண்டு. ஒன்று ஆணவம் நீங்கிய சாக்கிராதீதம்; மற்றொன்று, ஆணவம் நீங்காத சாக்கிராதீதம்.) அவற்றுள் ஆணவம் நீங்கிய சாக்கிராதீதமும் பராவத்தையில் உயிர் சென்று தங்காதபடி பரோ பாதியை உண்டாக்கும் ஆகையால், பராவத்தையாகிய உபாதியற்ற நிலையை நோக்கியே செல். ஏனெனில், `உபாதியாயினும் பரோபாதி தானே` என நினைப்பனவெல்லாம் பாசத்தோடு கூடியிருக்க நினைப்பனவேயாகும்.

குறிப்புரை :

`ஆணவம் அறும் சாக்கிராதீதம்` என எடுத்துக் கொண்டு உரைக்க. தான், அசை, பாடத்தை இவ்வாறே ஓதலும் ஆம். ஆணவம் அறாத சாக்கிராதீதம், மத்தியாலவத்தையில் நிகழும் அதீதம். ஆணவம் அற்ற சாக்கிராதீதம், நின்மலாவத்தையில் நிகழும் அதீதம். இவை யிரண்டும் சகலத்தில் சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆகும். இவற்றுள் நின்மலாவத்தைகள் தமக்குக் கீழ் உள்ளவற்றை நோக்கச் சுத்தமே யாயினும், உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் செல்லு தற்குத் தடை யாதலும் உடையன. அவை அன்னவாதல் பரோபாதியை உடைமை யினாலாம். அது பற்றியே, `பராவத்தை தங்காது பரோ பாதியை ஆக்கும்` என்றார். உபாதி - தடை. பரோபாதி - மேல் நிலைத் தடை. அஃது உலகம் எங்கும் சிவம் நிறைந்து நிற்றலை நினைந்து எப்பொருளிலும் சிவத்தையே கண்டிருத்தல். இது சிறப்புடையதே யாயினும், சிவத்தையே நேராகக் கண்டிருத்தலை நோக்கச் சிறப்பில தாதலை உணர்க.
உபசாந்தம் - உபாதியற்றநிலை. அது பராவத்தையேயாதல் அறிக. `உபசனுந்தத்தையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. `குணம் நோக்குதல் மலம் நோக்குதலாகும்` - என மொழி மாற்றி, `அதன் குணம்` என உரைக்க. எல்லாப் பொருளிலும் சிவத் தையே காணிணும் அஃது உலகத்தை இடையிட்டுக் காண்பதேயாத -லின் அக்காட்சியின் சிறப்பை மட்டும் நோக்குதல், `மலம் நோக்குதல் ஆகும்` என்றார். சிவத்தை `உபாதி` என உரைத்தாரும்` உளர்.
இதனால், மேற்கூறிய அவத்தை பேதங்களில் `சுத்தத்திற் சுத்தத்தையே குறிக்கொண்டு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும்
`அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.

பொழிப்புரை :

`பெத்தம், முத்தி` - என்பவற்றையும், `சாக்கிர சொப்பன சுழுத்திகளுக்கு அப்பாலும், குறைந்த கருவிகளே செயற் படுகின்ற துரியம், ஒரு கருவியும் செயற்படாத துரியாதீதம் ஆகிய அவத்தைகள் உள` என்பதையும் அறியாமலே உயிர், அவத்தைகளை அனுபவித்து வருகின்றது. ஆயினும், `அவையெல்லாம் சிவனது திருவருளால் இன்ன இன்னவாறு நிகழ்கின்றன` என்பதை அவனது அருளாலே அறிந்த பின், உயிருக்குத் தற்போதம் இல்லை. அஃது இல்லையாகவே, அதற்குத் தனக்கென யாதொரு செயலும் இல்லை.

குறிப்புரை :

``சுத்தம்`` என்றது கருவிகள் அனைத்தும் ஒடுங்கிய ஒடுக்கத்தைக் குறித்தது. துரியமும், அதீதமும் அறிதற்கு அரியனவாம். ``தோன்றாமல்`` என்பது வழக்கு முறையால், ``தோன்றப் பெறாமல்`` எனப் பொருள் தந்தது. ``தான்`` என்றது உயிரை. உண்டல் - அனுபவித்தல். ``அறிந்த பின்`` எனக் கூறிப் பின் நிகழ்ச்சியை உணர்த் -தினமையால், `அதற்குமுன் கூறப்பட்டவை அறிதற்கு முற்பட்ட நிகழ்ச்சி` என்பது விளங்கிக் கிடந்தது. ஆகவே, ``அனுபவிக்கும்`` எனக் கூறப்பட்ட அவத்தைகள் பெத்த அவத்தைகள் - என்பதும், `அறிந்த பின் நிகழ்வன மத்தியவத்தைகள்` என்பதும் போந்தன. `தான்` என்றது திரோதான சத்தியை - எனக் கொள்கின்றவர்கள், `சுத்த துரியாதீதத்தையும் அது மறைக்கும், என உரைத்தல் வியப்பிற்குரியது.
இதனால், பலவாகக் கூறப்பட்ட அவத்தைகள் எல்லாம் பெத்த அவத்தை, முத்தி அவத்தை என இரண்டாய் அடங்குதலும் அவற்றுள் பெத்த அவத்தைகள் மலங்களாலும் அவத்தைகள் திருவருளாலும் நிகழ்தலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

எய்திய பெத்தமும் முத்தியும் என்பன
எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு)
`எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே
எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் அனாதியே அடைந்துள்ள பெத்த நிலையும், பின்பு முடிவில் அடையும் முத்தி நிலையும் சிவன் தனக்கு ஒரு விளையாட்டைப் போல மிக எளிதிற் செய்யும் அருட்செயலே யாகும். `அச்செயல்களில் அகப்பட்டு வருகின்ற உயிர்கள், இறுதியில் மாசு நீங்கிய நிலையில் இடப்படும்` என்று சொல்லப்படுவதால், அந்நிலையில் அவை சிவனையே அடைந்திருக்கும். அப்பொழுது அவை அறிவே முடிவாய் இருக்கும்.

குறிப்புரை :

`விளையாட்டு` என்றது, விளையாட்டுப் போல் வதனைக் குறித்தது. ஒடுருபை ஆல் உருபாகத் திரித்து, `எய்தும் அருள்` என முன்னே கூட்டி முடிக்க. அருளால் நிகழவனவற்றை அருளாகவே உபசரித்துக் கூறினார். `எய்திடு உயிர் நெறியானே சுத்தத்து இடும் என்னவே` எனக் கூட்டுக. இடும் - இடப்படும். என்ன - என்று சொல்லப்படுதலால். `அறிவாம்` என்றதனால், முன்பு அறியாமையாய் இருந்தமை பெறப்படும்.
இதனால், `எல்லாம் சிவனது அருளேயாதலின் அவ்வருள், முடிவில் சிவனையே அடைவிக்கும்` என்பதும், `அந்நிலை அறிவு நிலை` என்பதும் கூறப்பட்டன. `அறிவு நிலை` என்றதனால் `ஆனந்த நிலை` என்பது சொல்லாமலே அமைந்தது.

பண் :

பாடல் எண் : 31

ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர்
ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே

பொழிப்புரை :

ஐந்து மலங்களையுடையவர்களாகச் சொல்லப் படுவோர் யாவரும் அதிகமான மாயைத் தொடக்கு உடையவர்கள். அவர்கள் அசுத்த வினையிலும் நீக்குதற்கரிய தூல வினைத் தொடக்குடையவர்கள். அத்தன்மைத்தான வினைத்தொடக்கால் சுவர்க்க நரகங்களை அடைந்து உழல்பவர்கள். ஆகையால், அவர்கள் சிவனை எளிதில் அறியும் அறிவுடையராவாரோ! `ஆகார்`.

குறிப்புரை :

`அதனால், அவர்கட்குச் சிவன் தன்மையிலும், முன்னிலையிலும் தானே நேர்நின்று ஞானத்தை உணர்த்தாமல், படர்க்கையில் ஆசான் மூர்த்தியை அதிட்டித்து நின்று, பலநாள் உடன் கொண்டு, கேட்பித்தும், சிந்திப்பித்தும், தெளிவித்தும் ஞானத்தை உணர்த்துவன்` என்பது குறிப்பெச்சம். `ஆகவே, இவர்கள் சுத்தாவத்தையை அரிதில் எய்துவர்` என்பதாம்.
முன் இரண்டடிகளில், `ஐம்மலத்து ஆரும்` எனப் பிரித்து இரண்டாம் வேற்றுமைப் பெயர்த் தொகையாகக் கொள்க. `அதிகரித்த` என்பது, `அதித்த` எனக் குறைந்து நின்றது. `சகலர்` என்பது, `மாயையோடு கூடினவர்` எனப் பொருள் தரும் ஆதலின், `அதிகரித்த சகலர்` என்பது, பெரிதும் மயக்கத்தைத் தருகின்ற, முக்குண வடிவாகிய பிரகிருதி பந்தத்தை உடையவர் ஆதலைக் குறித்தது. `அரனார்க்கு` என்றது, `அரனாரை அறிவதற்கு` என்றபடி. ஏகார வினா, எதிர்மறைப் பொருளில் வந்தது.
இதனால், சுத்தாவத்தை பற்றியதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம்
உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து)
அரிய கனா தூலம் அந்நன வாமே.

பொழிப்புரை :

(உயிர்கள் யாதானும் ஓர்யோனியிற்புக்குப் பிறந்த பின்பு தான் சாக்கிரம் முதலிய அவத்தைகளை அடையும்` எனக் கருத வேண்டா. அவ்வவ் யோனியிற் புக்கிருக்கும் நிலையிலு ஐந்தவத்தை -களை அடையும். அவை கருவளர் அவத்தைகளாம்.)
வித்தில் நின்ற உயிரை முளையாகிய உடம்போடு முதற்கண் கலக்கச் செய்வதாகிய `காரண சரீரம்`, அல்லது, `ஆனந்தமயகோசம்` எனப்படுகின்ற மாயா தத்துவத்தோடு உயிர்தொடர்பு கொள்வதே கருவினில் துரியாதீதம். பின்பு `கஞ்சுக சரீரம்` அல்லது, `விஞ்ஞானமய கோசம்` - எனப்படுகின்ற, அராகம் முதலிய ஐந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் துரியம். பின்பு, `குணசரீரம்`, அல்லது, `மனோமய கோசம்` எனப்படுகின்ற மூலப் பிரகிருதியோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சுழுத்தி. பின்பு, `சூக்கும சரீரம்`, அல்லது `பிராணமய கோசம்` எனப்படுகின்ற சித்தம் ஒழிந்த அந்தக்கரணம் மூன்று, தன்மாத்திரை ஐந்து ஆக எட்டுத் தத்துவங் களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சொப்பனம். (சித்தம் பிரகிருதியில் அடங்கும்.) பின்பு, `தூல சரீரம்`, அல்லது அன்னமய கோசம்` எனப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, மாபூதம் ஐந்து ஆகப் பதினைந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சாக்கிரம்.

குறிப்புரை :

இந்த ஐவகைச் சரீரங்கள் பற்றியே இத் தந்திரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டது. உயிர்கள் கேவல நிலையிலிருந்து சகல நிலைக்கு வரும்பொழுது அதீத நிலையிலிருந்தே முறையாக வருதல் பற்றி, `கருவளர்ச்சியும் அதீதத்திலிருந்தே முறையாக நிகழும்` என அறியுமாறு அவத்தைகளை அதீதத்திலிருந்து முறையாகக் கூறினார். ஆசை - அராகம். தோற்ற முறையில் இறுதிக்கண் உள்ள அராகத்தைக் கூறவே, அதற்கு முன்னுள்ள தத்துவங்களும் அடங்கின. முதல் - மூலம்; அது மூலப் பிரகிருதி. எட்டுதல் - தீண்டுதல். `சுழுத்தி, முதலை எட்டும்` என்க. சுழுத்தியில் நிற்கும் உயிரினது செயலைச் சுழுத்தியின் செயலாகக் கூறினார். `சூக்கத்து` என்றாற்போலத் `தூலம்` என்பதிலும் அத்துச் சாரியை விரித்து, `ஆம்` என்பதைக் `கனா` என்பதனோடும் கூட்டுக.
இதனால், கருவிலும் அஞ்சவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணுங் கனவுமா யேயம் திரோதாயி
காணும் நனவில் மலக்கலப் பாகுமே.

பொழிப்புரை :

துரியாதீத நிலையில் உயிருக்கு ஆணவ மலம் மட்டுமே இருக்கும். அதற்குமேலே உள்ள தான துரிய நிலையில் அதனோடு வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் முதலிலே உள்ள மாயா தத்துவம் வந்து பற்றும். அடுத்து நிகழும் சுழுத்திய வத்தையில் நல்லனவும் தீயனவும் ஆகரிய காரிய கன்மங்கள் வந்து பற்றும். (இதனால், கால தத்துவமும், நியதி தத்துவமும் பற்றுதல் பெறப்படும்) அடுத்து நிகழும் சொப்பனத்தில் மேற்கூறிய கன்மங் களுக்கு ஏற்பமாயா காரியங்களான கலை முதல் நிலம் ஈறான ஏனை எல்லாத் தத்துவங்களும் வந்து பற்றும். (ஆகவே, சுத்த தத்துவங்கள் வந்து பற்றுதலும் தானே அமைந்தது.) இறுதியாக நிகழும் சாக்கிரத்தில், முன்பு நான்கு மலங்களும் பற்றிக்கொண்டதனால் அவை அனைத் -தையும் செலுத்துகின்ற திரோதான மலம் வந்து பற்றும். (என்றது, `அனைத்தையும் முழுமையாக நடத்தும்` என்றபடி.) ஐந்தவத்தை -களிலும் ஐந்து மலங்கள் இம்முறையில் உயிரை வந்து பற்றுவனவாம்.

குறிப்புரை :

`அதீதம் ஆணவம் ஆகும்; மேல் பூணும் துரியம் மாயை ஆம்; சுழுத்தி பொய்க் காவியம் ஆம்; பேணுங்களவு மாயேயம் ஆம்; நனவில் திரோதாயி காணும்; மலக் கலப்பு இவ்வாறு ஆகும்` என இம்மந்திரத்தின் சொல்முறைமை கொள்க.
காரணம் நிலையுடைமையால் அது, `மெய்` என்றும், காரியம் நிலையால் அது, `பொய்` என்றும் சொல்லப்படும். கான்மியம், `காமியம்` என மருவி வழங்கும். `மாயேயம்` எனவரும் இடங்களில் எல்லாம் `மாமாயை` எனப் பாடம் திரிக்கப்பட்டது என்பதை மேலேயும் கூறுவோம்.
இதனால், அவத்தைகளில் பாசங்கள் பற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

அரன்முத லாக அறிவோர் அதீதத்தர்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக்
கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர்
அருளும் மறைவார் சகலத்துற் றாரே.

பொழிப்புரை :

`ஆணவம் அதீதத்தில் பற்றும்` என முன் மந்திரத்தில் கூறினமையால், அந்நிலையை மட்டும் உடையராய் அதிலே நிற்பவர்கள், `சிவபெருமான் முதல்வன்` என உணரும் உணர்வை இழவார். (இவர்கள் விஞ்ஞான கலரே.)
`மாயா தத்துவம் துரியத்தில் வந்து பற்றும்` என்றும், `வித்தியா தத்துவங்களில் காலமும், நியதியும் வந்து பற்றும்` என்றும் முன் மந்திரத்தில் கூறினமையால், அந்த இரண்டில் நிற்பவர்களும் மேற் கூறப்பட்டவர்போல, `சிவபெருமானே முதல்வன்` என்னும் உணர்வை இழத்தல் இல்லை. (இவர்கள் இருதிறத்தினரும் தம்முட் சிறிது வேறுபாடுடைய பிரளயாகலரே. இவர்களில் பின்னவர் புருட தத்துவத்திற்குச் சிறப்பு ஏதுவாய் நிற்கும் கலை, வித்தை, அராகங்களைப் பொதுமையாக அன்றிச் சிறப்பாக உடையராகார் என்பது நாயனார் கருத்து - என்க. `கருவில் அதீதம்` என்னும் மந்திரத்திற் கூறியவற்றிற்கும், அடுத்து முன் மந்திரத்திற் கூறிய வற்றிற்கும் சிறிது வேறுபாடு உண்டென்க.)
`கலை முதலிய ஏனை எல்லாத் தத்துவங்களும் சொப்பனத்தில் வந்து பற்றும்` - என்று முன் மந்திரத்தில் கூறப் பட்டமையால், அவர்கள், `தமக்கொரு தலைவன் உளன்` என்பதையே அறியார். இவர்கள் சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

சொப்பன நிலைதானே இத்தன்மையதாகலின், சாக்கிரநிலை இத்தன்மையதாதல் சொல்லவேண்டாவாயிற்று.
இறுதியில் `சகலத்துற்றார்` எனக் கூறியதனால், மேற் சொல்லப்பட்டவர்கள் விஞ்ஞானகலரும், பிரளயாகலருமாதல் விளங்கிற்று. அவத்தைகளைக் கூறியது பற்றி, அவற்றில் வந்து பற்றும் மலங்களையும், மலங்களைக் கூறியது பற்றி அவை வந்து பற்றும் அவத்தைகளையும் முன் மந்திரம் பற்றி உயத்துணர வைத்தார். `அருளும்` என்ற உம்மை, முதல்வனைப் பொதுப்பட உணரும் உணர்வும் இலராதலைக் குறித்தது.
இம் மந்திரத்தில் பாடம் பலவிடத்துத் திரிவுபட்டுள்ளது.
இதனால், மூவகை உயிர்கள் அடையும் அவத்தைகளின் கூடுதல் குறைவுகள் கூறும் முகத்தால் அவற்றின் பாச நிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று
மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி
வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.

பொழிப்புரை :

`கருவில் அதீதம்`l என்னும் மந்திரத்திற் கூறியபடி கருவிலேயே பல அவத்தைகளை அடைந்த உயிர், பின்பு பலருங்காணப் பிறந்து, சகலாவத்தையில் பூதம் முதலிய புறக் கருவிகளாலும், மனம் முதலிய அகக் கருவிகளாலும் செய்தற் குரிய செயல்களை மேற்கொண்டு, பல போக்கியப் பொருள்களில் பொருந்தி, ஓசை முதலிய புலன்களில் மூழ்கிப் பலவகை அனுபவங்களை அனுபவிப்பதாய்க் காணப்படும்.

குறிப்புரை :

`கருவுற்றிடும் சீவன் உரு உற்றுச்சகலத்தே பூத மனாதியால் மன்னிவரும் செயல் பற்றிப் போகத்து உற்றும், சத்தாதி மன்னிப்போகம் மருவுற்றும் காணும்` எனக் கூட்டி முடிக்க. ஞானேந் திரியங்களின் புலன்களையே கூறியவாராயினும், இனம் பற்றிக் கன்மேந்திரியங்களின் புலன்களாகிய மொழிதல் முதலியனவும் கொள்ளப்படும். சூக்கும தூல பூதங்களே ஞானேந்திரிய கன்மேந் திரியங்கட்கு நிலைக்களன் ஆதல் பற்றி அவற்றை, ``பூதம்`` எனப் பொதுப்படக் கூறினார். பூத மனாதி, `பூதங்களும் மனாதிகளும்` என உம்மைத் தொகை.
இதனால், சகல வருக்கத்து உயிர்கள் சகல நிலையில் நிற்குமாறு இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

இருவினை ஒத்திட இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக்
குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

பொழிப்புரை :

உயிர்கள் தமக்கு இருவினையொப்பு வாய்க்கப் பெற்ற பொழுது சிவனது சத்தி முன்பு பிறவித் துன்பத்தைத் தரும் திரோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, வீட்டின்பத்தைத் தரும் அருட்சத்தியாகித் தங்கள் அறிவில் பதியப் பெற்று, அதனானே மெய்யுணர்வு வேட்கை நிலைத்து நிற்க அவ்வேட்கை மிகுதியால் ஞான குருவை அடைந்து அவர் உபதேசித்த முறைப்படி தம்மைச் சிவனது அருட்சத்தியின் வழிப்படுத்திக் கொண்டு, அதனாலே எல்லா மலங்களும் நீங்கப் பெற்று, மீட்டும் பிறவா நிலையில் நிற்பதே சுத்தாவத்தையாம்.

குறிப்புரை :

கேவல நிலையில் இருந்த உயிர்கள் சகல நிலையை அடைந்த பின்பு அதன்கண் பல்வேறு பிறப்புக்களை எய்தி, வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும். அப்பொழுது நல்வினைப் பயன்களில் விருப்பமும், தீவினைப் பயன்களில் வெறுப்பும் கொண்டு, நல்வினைப் பயன்களை விரைவில் எய்தவும், எய்திய வழி நீங்காது நிறுத்திக் கொள்ளவும், தீவினைப் பயன்களை எய்தாது தடுக்கவும், எய்தியவழி விரைவில் அகற்றவும் முயலும், அம்முயற்சியே அவற்றிற்குப் பின்னைப் பிறவி கட்குக் காரணமாய் அமையும். ஆகவே, `நல்வினையும் தீவினை போலப் பிறப்பைத் தருவதே` என உணர்ந்து, `விலங்கு பொன்னால் இயன்றதாயினும், இரும்பால் இயன்றதாயினும் விலங்கயேன்றி வேறன்று` என்பதுபோல, இருவகை வினைகளையும் தளைகளாகவே உணர்ந்து, விருப்பு வெறுப்பின்றி இரண்டையும் சமமாக நோக்கும் பக்குவ நிலையே இருவினை யொப்பாகும். அத்தகைய நோக்கு உண்டாயின், மேலும் மேலும் வினை ஏறுதல் நீங்கும். அந்நிலையில் என்றுமே உயிரினது அறிவில் ஒன்றி நிற்கின்ற சிவனது சத்தி, முன்பு திதோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, அருட்சத்தியாகிப் பதியும். அதுவே சத்தி நிபாதம். சத்தி நிபாதத்தால் `வினைகளே பிறப்பிற்குக் காரணம்` - என்பதை உணர்ந்து, உயிர் வினைக்கு அஞ்சும். அவ்வஞ்சுதல், பிறவிக்கு அஞ்சுதலேயாகும். இங்ஙனம் பிறவிக்கு அஞ்சும் உயிர், பிறவி நீங்கும் வழியை உணர்த்துவாரையே நாடி ஓடும். அவ்வாறு ஓடுதலே ஞான வேட்கையாகும். இந்த ஞானவேட்கையே சத்தி நிபாதத்தின் பயன். அவ்வேட்கை நீங்காது நிலைக்கப் பெற்ற உயிர்களின் முன் சிவன், ஞானியராகிய ஆசான் மூர்த்திகளை அதிட்டித்து நின்று, ஞானத்தை உணர்த்துவன். அவ்வாறு உணர்த்த உணர்ந்த உயிர், அஞ்ஞானம் நீங்கப் பெற்றுச் சிவனை அடைந்து, அவனைப் போலவே பிறவாமை யுடையதாய் அவனது இன்பத்தில் திளைத்திருக்கும். அவ்வாறு திளைத்திருத்தலே சுத்தாவத்தை. இவையே இம்மந்திரத்தில் முறையாகக் கூறப்பட்டன.
அருட்சத்தியை, `இன்னருட்சத்தி` என்றதனால், திரோதான சத்தி இன்னாமைச் சத்தியாதல் விளங்கிற்று. ஆதரம் - விருப்பம். சத்தி நிபாதம் வாயாத முன்பும் இடையிடையேயும் ஓரொரு கால் ஞானவேட்கை நிகழுமாயினும் அது, துயில் எழாதவன் துயிலின் இடையிலே சிறிது சிறிது விழிப்பை அடைதல்போல, நிலைத்தல் இன்றி விரைய நீங்குவதாக, சத்தி நிபாதத்தின் பின் உண்டாகும் ஞான வேட்கையே நிலையுடைய உண்மை ஞான வேட்கையாம்` என்பது உணர்த்துதற்கு, `ஞான ஆதரம் மன்னி` என்றார். சக்தி நிபாதம் வாய்க்கப் பெறாதவரது ஞான வேட்கையையே திருவள்ளுவர், `தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்` என்றார்.3 `கூட்டி என்றது, தானே தன்னை அருட்சத்தி வழியில் சேர்த்தி` என்றபடி.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு முறைப்பட இனிது விளக்கப்பட்டது. இந்நிலை சிவஞான சித்தியிலும் இவ்வாறே,
``இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்தி தோயக்
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டை சிற்றறி வொழிந்து ஞானம்
பெறுகிநா யகன்றன் பாதம் பெறுவது சுத்த மாமே``*
எனக் கூறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 37

ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ
டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப்
பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின்
ஈறார் பரசிவம் ஆதேய மாமே.

பொழிப்புரை :

முப்பத்தாறாகச் சொல்லப்படுகின்ற கருவிகளே அவத்தை வேறுபாடுகட்குக் காரணம். அந்தக் காரணத்தின்வழிக் காரியமாய் நிகழும் அவத்தைகள் இருபத்தைந்து. (கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் சுத்தம், நின்மலம் ஆகிய ஐந்தில் ஒவ்வொன்றிலும் சாக்கிரம் முதலிய ஐந்து.) அந்த இருபத்தைந்தில் முடிவாய் உள்ளது சுத்த துரியாதீதம். அதனை உயிர் அடைந்த பொழுது, ஐந்தொழில் தலைவர்களாகிய ஐவரும் அதனைத் தடை செய்யாது இருக்க, அவ்விடத்து மிக்கு விளங்கும் அருள் ஞான ஒளியினால், அனைத்துயிர்கட்கும் முடிவான புகலிடமாய் உள்ள பரசிவனது பேரின்பம் அதன் அறிவினுள்ளே பொங்கித் ததும்பும்.

குறிப்புரை :

முப்பத்தாறினையும் தொகுத்து `ஆறு` என ஒன்றாகக் கூறினமையின் `அதின்` என ஒருமையாற் கூறினார். ஆறு - வழி. `ஓட` என்னும் செயவெனெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ஓடுதல், தொடர்ச்சியாக நிகழ்தல். `போம்` என்னும் பெயரெச்சம், `போய தனால் உண்டாகும்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. ஈறார் பரசிவம் - முடிநிலையில் பொருந்தி நிற்கும் பரசிவம். ஆதேயம் - இடத்து நிகழ்பொருள். ``ஆதேயம் ஆம்`` என்றதனால, ``பரசிவம்` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் இன்பத்தைக் குறித்தது. எந்நிலையிலும் சிவம் உயிருக்கு ஆதாரமேயன்றி, ஆதேயம் ஆகாது. எனினும் அதனால் தரப்படும் இன்பம் உயிரினது அறிவினுள்ளே ஊற் றெழவே உயிர் அதனை நுகர்வதாகும். அதுபற்றி அஃது `ஆதேயம்` எனப்பட்டது. ``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது``l என முன்னருங் கூறினார். ``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம்போல் - பற்ற வாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``1(*) எனவும் ``ஊற்றிருந்துள்ளம் களிப்போன் போற்றி``(*)2 எனவும் ஆளுடை அடிகள் அருளிச் செய்தார். இவை யெல்லாம் பற்றியே,
``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்``(*)3
என்றார் உமாபதிதேவர். ``ஐயைந்தாவன, சாக்கிரம் முதலிய ஐந்திலும் தனித்தனி நிழும் சாக்கிரம் முதலியன`` என்பார்க்குக் காரண அவத்தைகள் யாதேனும் ஒன்றேபெறப்படுதல் அன்றி, அனைத்தும் பெறப்படாமை அறிக.
இதனால், மேல் பெயரளவாகக் சுட்டப்பட்ட சுத்தாவத்தை -யின் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான்
தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.

பொழிப்புரை :

சகலாவத்தையில் தன்னை உடம்பின் வேறாக உணராமல், உடம்பையே ``தான்`` என உணர்ந்து நின்றவன், சுத்தா வத்தையை ஓரளவேனும் அடைந்த பின்பே தன்னை உடம்பின் வேறு பட்ட பொருளாக உணர்ந்தான். பின்பு சுத்தத்தில் துரிய நிலையை அடைந்து, சிவனது அருளை உணர்ந்தான். ஆயினும் அதனையும் கடந்த சுத்த துரியாதீதத்தை அடைந்து சிவனை உணர்ந்து அவனோடு இரண்டறக் கலவாது, துரியத்திலேயே அவன் இருந்துவிடுவானாயின், உடம்பு நீங்கிய பின், மீளவேறோர் உடம்பை எடுத்தலும் கூடும்.

குறிப்புரை :

``தனைக்கண்டான்`` என்பதில் `தன்` என்றது சிவனை யாகலின், அங்கு, `துரியம்` என்றது சுத்த துரியமேயாயிற்று. அஃது அங்ஙனமாகவே, `முதல்` என்னும் பொருள்பட வந்த `முன்` என்பது, சுத்தாவத்தையின் தொடக்கமாயிற்று. `அதன்கண் தன்னைக் கண்டான்` என்றதனால், தன்னைக் காணாதிருந்தது சகலத்தில் ஆயிற்று. `துரியத்தில்` என ஏழாவது விரிக்க. துரிய நிலை அருள் நிலையும், துரியாதீத நிலையே சிவ நிலையும் ஆதலால், சிவனது அருளே சீவனாக உபசரித்து, `தனைக் கண்டான்` என்றமைதெளிவாம். `துரியமுன்`` என்பதில் `முன்` இடமுன். அவ்விடத்து நிகழ்வது துரியா தீதம். `பின்னையும்` என்ற உம்மை, உயர்வு சிறப்பும்மை. ``பிறந்திடும்`` என்றது, `பிறத்தல் கூடும்` என்றதேயன்றி, அஃது ஒருதலையன்று என்பதைச் சாத்திரங்களைக் கொண்டு தெளிக.
துரிய நிலையில் பிராரத்தவாசனை தாக்காதவாறு திருவருளில் உறைத்து நிற்றல், `நள் அனல் வேவாத நற்றவரது செயலைப் போலவும்`, `பண் அமர மாச் செலுத்தும் பாகரது செயல் போலவும்`l பெரிதும் அரிதாகலின், அதனிற் சிறிதே சோர்வு உண்டாயின், அவ் அற்றம் பார்த்து, பிராரத்த வாசனை தாக்க, அதனால், ஆகாமியம் தோன்றி முதிர்ந்து, அடுத்த பிறப்பு வருதலும் கூடும். அது பற்றியே, `ஈசனோ டொன்றாக்கால் - பின்னையும் வந்து பிறந்திடும்` என்றார். `தான்` என்பதை ஈற்றடியில் முதலிற் கூட்டுக.
இதனால், `சுத்த துரியாதீதமே பிறவா நிலை` என்பது உணர்த்தும் முகத்தால், அதனது இன்றியமையாச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்
ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த
நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.

பொழிப்புரை :

புருவ நடுவிற்றானே திருவருளால் சிவத்தைத் தலைப்படும் சாக்கிரம் முதலிய அவத்தைகளில் முடிவான அதீத நிலை கைகூடுமாயின், பாச ஞானத்தை உண்டாக்க வந்த வாக்காகிய மயக்கும் பொருள் கெடும். அது கெடவே, `இனியும் வருங்கொல்` என எதிர்நோக்கி அஞ்சப் படுவதாகிய பிறப்பு, வாராதே ஒழியும். அதனால் பரமுத்தி நிலை கிடைக்கும். எவ்வாறெனில் அவ்விடத்தில் பாச ஞான பசு ஞானங்கள் தோன்ற மாட்டா ஆகையால்,

குறிப்புரை :

`ஆக்கிய` என்பது, `செய்யிய` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வயிந்தவம் - விந்துவின் காரியம். அஐவ இங்கு வாக்குக்களே. மால் - மயக்கம். நந்த - கெட. `நந்த` என்றமையால், நந்துதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. மயக்கம் தருவனவற்றை, `மயக்கம்` என்றார். பெத்தர்களுக்கு வாக்குக்கள் தெளிவைத் தருவன வாயினும், முத்தர் கட்கு அவை சிவஞானம் நிகழ்தற்குத் தடையாய் உலகுணர்வைப் பயக்கும் ஆதலின் அவற்றை, `மால்` என்றார். நோன்மை - வலிமை. ஏனை முத்திகளினும் வலியுடைத்தாய் நிலைத்து நிற்பது பரமுத்தி என்க. `வாக்கு` என்பது பாச ஞானத்தையும், `மனம்` என்பது பசுஞானத்தை உணர்த்துதலைச் சிவஞானபோதம் ஆறாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தால் உணர்க.
இதனால், `சாக்கிரத்தில் சுத்தாவத்தையைத் தலைப்பட்டோர் அவற்றுள் துரியத்திலே நின்று விடாமல், துரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என மேற்கூறியது, அதன் பயன் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில்
அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.

பொழிப்புரை :

`இன்பம், துன்பம்` என்னும் இரண்டும் உலக உணர்வே நிகழும் சகலாவத்தையில் நிலையின்றி, மாறி மாறித் தோன்றும். அகலாவத்தையாகிய சுத்தாவத்தையில் அவை தோன்றவேமாட்டா. `சகலாவத்தையில் அவை தோன்றுதல் ஏன்` எனில், இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் சகலாவத்தை.

குறிப்புரை :

`பிரபஞ்சம்` என்னும் வடசொல்லுக்கு, `விரிவுடையது` என்பது பொருளாகலின் அதனை `அகலம்` எனத் தமிழாக்கி, முதலிலும், கடைசியிலும் சொற்பின்வரு நிலையணி தோன்றக் கூறினார். அஃது ஆகுபெயராய்ப் பிரபஞ்சத்தை உணர்ந்து நிற்கும் சகலாவத்தையைக் குறித்தது. இடையில் உள்ள `அகலம்`, `சகலம்` என்னும் வடசொற்கு எதிராய வடசொல். `சுத்தம்` என்னாது `அகலம்` என்றது அவ்வணி தோன்றுதற் பொருட்டேயாம். `அப்பும் அனலும்` என்றவை மறைபொருட் சொற்கள். அவையும் சொற்சுவை தோன்ற வந்தனவேயாம். அப்பு - நீர். அனல் - தீ. இவை அவற்றின் வெளிப் படைப் பொருள். அச்சொற்கள் நான்கடியிலும் வந்தது, சொற்பொருட் பின்வருநிலையணி. அவ் ஆறு - அந்த வழி. நிலையை `வழி` என்றார்.
இதனால், சகலாவத்தை பந்தமும், சுத்தாவத்தை வீடும் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம்
உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து)
உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களில் கீழ் உள் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்த தத்துவங்களாகும். அவை அவ் வியத்தமாகிய மூலப்பிரகிருதியினின்றும் நோறி ஒடுங்கும். இடையில் உள்ள வித்தியா தத்துவம் ஏழும் மிச்சிர தத்துதவமாகும். அவை அசுத்த மாயையினின்றும் தோன்றி ஓடுங்கும். மேலே உள்ள சிவ தத்துவம் ஐந்தும் சுத்த தத்துவங்களாகும். அவை சுத்த மாயை யினின்றும் தோன்றி ஒடுங்கும். இம் மூவகைத் தத்துவங்களும் மூன்று காண்டங்களாய்ப் பிரிந்து ஆன்மாவோடு கூடி, அதற்கு அறிவிச்சை செயல்கள் நிகழக் கருவிகளாய் நிற்கும்.

குறிப்புரை :

மூன்று காண்டங்களாவன; `போக்கிய காண்டம், போசயித்திரு காண்டம், பிரேரககாண்டம்` என்பன. இவற்றை ஆன்ம தத்துவம் முதலாக வைத்துப் பொருத்திக் கொள்க. போக்கியம் - புசிக்கப் படுவது. போசயித்திரு - புசிப்பவன். பிரேரகம் - செலுத்துதல். இவற்றை இவ்வாறே,
``ஐந்து சுத்தத்தின் கீழ், ஏழ் சுத்தாசுத்தம்; அசுத்தம்
தந்திடும் புமான்கீழ் எண்மூன் றாய தத்துவம்; சீவற்கு
வந்திடும்; பிரேரகாண்டம், மருவு போசயித்திரத்தோடு
அந்தமில் அணுக்களுக்குப் போக்கிய காண்ட மாமே``3
என சிவஞானசித்தியில் கூறப்பட்டமை காண்க.
`மாயேயம்` என்று உள்ள இடங்களில் எல்லாம் `மாமாயை` என்றே பாடம் திரிக்கப்பட்டது போலவே, `போசயித்திரு காண்டம்` என்று உள்ள இடங்களில் எல்லாம், `போகசயித்திரு காண்டம்` என்றே பாடம் திரிக்கப்பட்டுள்ளது.
அவ்வியத்தமாகிய மூலப்பிரகிருதி பல சமயத்தாராலும் நன்கறியப்பட்டது ஆதலின் அதனை `அதின்` எனப் பண்டறிசுட்டாற் கூறினார். `உறும்` என்பதை `அதின்` என்பதனோடும் கூட்டுக. உறுதல் - சூக்குமமாய்ப் பொருந்தியிருத்தல். எனவே அது, தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் உளதாம் நிலையாதல் அறிக. `ஏழ் சத்தா சுத்தம்; மாயையின் உறும்` என இயைக்க. `உறுமால் மாமாயையின்` என்பதனையும் `சுத்தம்` என்பதன் பின்னர்க் கூட்டி, `உறும் ஆன்மாவினோடே` என்பதை மீட்டும் மூன்றாம் அடியின் இறுதியில் கூட்டி யுரைக்க. காண்டம் - பகுதி.
இதனால், தத்துவம் முப்பத்தாறும் பற்றிய சில சிறப்பியல்புகள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின்
ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே.

பொழிப்புரை :

சிவனே எல்லாம் செய்பவன் ஆகையால், உலக மாகிய மகவிற்கு அவனை, `தந்தை` எனலாம். உலகிற்கு முதற் காரணமான `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளுள் சுத்த மாயையையே சிவன் தான் நேரே பற்றிச் செயற்படுத்துதலால் அதனைச் சிவனோடு புணர்ந்து உலகமாகிய மகவை ஈன்ற, `நற்றாய்` எனலாம்; அசுத்த மாயையைச் சிவன் தான் நேரே பற்றிச் செயற் படுத்தாமல், அனந்த தேவரைக் கொண்டும், அவர்வழியாகச் சீகண்ட உருத்திரரைக் கொண்டும் செயற்படுத்துதலால் அதனை, உலகமாகிய மகவை வளர்க்கும் `செவிலித் தாய்` எனலாம். எனவே, சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு முதற் காரணங்களாலும், சிவனாகிய கருத்தாவினாலும் உலகம் தோன்றி நிலை பெற, உயிர்கள் அவ் வுலகத்தைப் பற்றி நின்று, `சகலம், கேவலம்` என்னும் இருநிலைகளில் மாறி மாறி உழன்று, முடிவில் சிவனது அருளாலே ஞானத்தைப் பெற்று, அவற்றினினின்றும் விடுதலை அடைந்து சுத்த நிலையை அடையும்.

குறிப்புரை :

செவிலி முதலியோரைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். உலகமாகிய மகவை எடுத்துக் கூறாமையால் அது. `தந்தை, நற்றாய், செவிலி` என்பவற்றால் பெறப்பட்ட குறிப்புருவகமாகும். உயிரை, `தான்` என்றது சாதி யொருமை. இங்ஙனம் மகவாக உருவகிக்கப்பட்டவை, `சேதனம், அசேதனம்` என்னும் இருவகைப் பிரபஞ்சமுமாகும். சேதனப் பிரபஞ்சங்கள் அறிவைப் பெறுதலும், அசேதனப் பிரபஞ்சம் பல்வேறு வகையான தன்மைகளைப் பெறுதலும் இங்குக் குறிக்கப்பட்ட மூவராலுமாம் என்க. சுத்த மாயை சகலர் பிரளயாகலர்கட்குப் பிரேரகமாத்திரையாயும், நால்வகை வாக்குக்களாயும் பயன்படும். அஃது அவர்கட்குத் தனு கரண புவன போகங்களாய் வருதல் இல்லை. விஞ்ஞானகலர்க்கு மட்டுமே சுத்தமாயை தனு கரண புவன போகங்களாய் வந்து பயன்படும்.
சுத்தமாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனறும், அசுத்த மாயையே, `மாயை` எனப்படுதலால், அதன் காரியங்கள், `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும். எனினும், பிரகிருதியும் அசுத்த மாயையின் காரியம் ஆதல் பற்றி பிராகிருதங்களையும், `மாயேயம்` என அடக்கிச் சொல்லுதல் உண்டு.
``வித்தைகள், வித்தை யீசர், சதாசிவர் என் றிவர்க்கு
வைத்துறும் பதங்கள், வன்னம், புவனங்கள், மந்திரங்கள்
தத்துவம், சரீரம், போகம், கரணங்கள் தாம் எலாமும்
உய்த்திடும் வைந்தவந்தான் உபாதான மாகி நின்றே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக. இதனுள் `விந்து` என்பதே பகுதிப் பொருட்டாகிய விகுதியைப் பெற்று, `வைந்தவம்` என வந்தது. பகுதிப் பொருள் விகுதியை வட நூலார் `சுவார்த்த பாவ தத்திதப் பிரத்தியயம்` என்பர்.
இதனால், உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள் ஆமாற்றை விளக்கி, அதனாலே காரண அவத்தைகள் மூன்றும் நிகழ்தலைத் தெரிவித்து, அதிகாரம் முடிக்கப்பட்டது.
சிற்பி