எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்


பண் :

பாடல் எண் : 1

சாத்திகம் எய்தும் நனவென்ப சாற்றுங்கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

பொழிப்புரை :

சாக்கிரம் பொருள்களை நன்குணரும் நிலையாகலின் அது, `சாத்துவிக குணத்தின் காரியம்` என்றும், சொப்பனம் பொருள்களைச் சாக்கிரத்தில் அனுபவித்த வாசனையளவாய் நிற்கும் நிலையாதலின் அது மெய்ம்மைக்கு எதிரான போலி அனுபவம் ஆதல் பற்றிச் சாத்துவிகத்திற்கு எதிரான, `இராசதகுணத்தின்காரியம்` என்றும், சுழுத்தி, யாதும் உணராத நிலையாதலின் அஃது, இருள் மயமான `தாமத குணத்தின் காரியம்` என்றும் சொல்லப்படும். துரியம் இம்மூன்றையும் கடந்ததாகலின் அது `நிர்க்குணமாய் நிகழ்வது` என்றும் சொல்லப்படும்.

குறிப்புரை :

`துரியம் நிர்க்குணம்` எனவே, அதனைக் கடந்த துரியாதீதம், நிர்க்குணம்` எனச்சொல்ல வேண்டாவாயிற்று. துரிய துரியாதீதங்களை `நிர்க்குணம்` எனக்கூறியதனானே `நிர்க்குணம்` என்னும் வழக்கு. மாயாகுணங்கள் இல்லாமையையே குறிக்குமன்றி, யாதொரு குணமும் இன்மையைக் குறியாது - என்பது பெறப்படும். இறைவனை `நிர்க்குணன்` எனவும், `குணாதீதன்` எனவும் கூறுதலும் இந்தக் கருத்திலே தானே யன்றி, `யாதொரு குணமும் இல்லாதவன்` என்னும் கருத்தினாலன்று. இயல்பாகவே மாயையின் நீங்கி நிற்கும் இறைவன், குணங்கள் பலவற்றையுடையனாதலை நினைக.
முத்தொழில்களில், `படைத்தல் இராசதத்தொழில்` என்றும், `காத்தல் சாத்துவிகத் தொழில்` என்றும், `அழித்தல் தாமதத் தொழில்` என்றும் சொல்லப்படும். அதனால் அவ்வத்தொழிலைச் செய்யும் மூர்த்திகளை அவ்வக்குணம் உடையவராகக் கூறுவர். ஆகவே மும் மூர்த்திகளும் `குண மூர்த்திகள்` என்றும், மூவருக்கும் அப்பாற்பட்ட பரமசிவனை, `நிர்க்குணன்` என்றும் `குணாதீதன், என்றும் கூறுவர்.
மற்றும் மேற்கூறிய சாக்கிரம் முதலிய அவத்தைகள் முக்குணங்களின் காரியங்களாகச் சொல்லப்படுதல் பற்றித் திருமாலை, `சாக்கிரமூர்த்தி` என்றும், பிரமனை, `சொப்பனமூர்த்தி` என்றும், முக்குணங்களையும் கடந்து, நிர்க்குணனாய் உள்ள பரமசிவன் துரியமூர்த்தியாகின்றான். துரியம் நான்காவதாகலின், பரமசிவனை, `மூவருக்கும் அப்பால் உள்ள நான்காமவன்` என்பர்.
இனி மும்மூர்த்திகளை முக்குணங்களில் ஓரோர் குணத்தை உடையவராகக் கூறுதலும் அவர் கொண்டுள்ள தொழில் பற்றியே யன்றி, அவரவருக்கு உள்ள குணம் பற்றியன்று. `குணம் பற்றி` எனின், சொப்பன மூர்த்தியும், சுழுத்தி மூர்த்தியும் விழித்துக்கொண்டை யிருக்க, சாக்கிர மூர்த்தி துயில்கொள்பவனாய் இருத்தல் அமையாது. சாக்கிரம் முதலிய மூன்று பற்றியே கூறினாராயினும், சகலத்தில் கேவலம் தாமதத்தாலும், சகலத்தில் சகலம் இராசதத்தாலும் சகலத்தில் சுத்தத்தில் யோகம் சாத்து விகித்தாலும் நிகழும் என்க. ஆகவே, சுத்தம் நிர்க்குணமாம். முக்குணம் கூறுதல்பற்றி, நிர்க்குணமும் கூறவேண்டிய தாயிற்று. `சாத்துவிகம்` என்பது `சாத்திரம்` என மருவிற்று.
இதனால், சகலாவத்தையில் முக்குணங்கள் தொடருமாறு கூறப்பட்டது.
சிற்பி