எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்


பண் :

பாடல் எண் : 1

அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொழிப்புரை :

கெடுதல் இல்லாத ஓங்காரத்தின் கலைகள் பனி -ரண்டில் `அ, உ, ம, விந்து` என்னும் நான்கிற்கு அப்பால் ஐந்தாவதாய் உள்ள அர்த்த சந்திர கலையை அடைந்தால் ஓர் அமுததாரை ஒழுகும் (அஃது உடல் எங்கும் உள்ள நாடிகளில் பாய்ந்து உடலை உறுதிப் படுத்தும். இந்த இடம் புருவநடுவிற்குச் சற்றுமேல், `நெற்றி நடு` என்னலாம்) பின்பு நிரோதினியைத் தாண்டி ஏழாவதாய் உள்ள நாத கலையை அடைந்தால் அவ்விடத்து ஓர் ஆனந்தம் தோன்றும் (அந்த ஆனந்தம் சிறையில் உள்ளவனுக்கு, `விடுதலை தோன்றி விட்டது` என்பது தெரிந்தவுடன் உண்டாகின்ற ஆனந்தம் போல்வதேயாகும். இந்த இடம் பிரமரந்திரத்திற்குப் பின்) அதனைக் கடந்து நாதாந் தத்தைத்தாண்டி, ஒன்பதாவதாய் உள்ள சத்திகலையிலும் அதனைக் கடந்து வியாபினி கலையைத் தாண்டிப் பதினொன்றாவதாய் உள்ள சமனா கலையிலும் சென்று உள்ளத்தை அசையாதிருக்கச் செய்தால், அத்தகையோர் இவ்வுலகத்திலே இருப்பினும் உமைகேள்வனாகிய சிவன், `ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே`` 3 என அருளிச்செய்தபடி அவர்கள் உடம்பிற்குள்ளே இனிது வெளிப்பட்டு நின்று, ``வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால்தோறும் - தேக்கிடச் செய்து``8 (அஃதாவது பேரானந்தத்தை விளைத்து) நிற்பான்.

குறிப்புரை :

``மூஞ்சில் ஓங்காரம்`` என்பதை முதலிற் கொள்க.
`ஓர் ஒன்பானில், பதினொன்றில் வைத்திடில், வஞ்ச அகமே நின்றும் கிளிமொழி கேள்காயம் ஆம்` எனக் கூட்டி முடிக்க.
வைத்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
பிரபஞ்சம், `வஞ்சம்` என வந்து, புணர்ச்சியில் வகரம் கெட்டபின் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்றும்` என்னும் உம்மையும் தொகுக்கப் பட்டது. கேள் - கேள்வன். ஈற்றடியை மகடூ முன்னிலை யாக்கினாரும் உளர். நாயனார் இந்நூலில் யாண்டும் மகடூ முன்னிலை வைக்கக் காண்கிலம்.
இதனால், பிராசாத யோகமும் கரணத்தோடு கூடிய மலாவத்தையேயன்றி, நின்மலாவத்தை ஆகாமை அதன் பயன்கள் சிலவற்றை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.
மேல் மந்திரம் - 696 இன் உரையைக்கொண்டு இப் பொருளைத் தெளிக. மற்றும் பிராசாத நூல்களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 2

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.

பொழிப்புரை :

[சகலத்தில் சுத்தமாகிய யோக வகைகளில் பிராசாத யோகத்தில் ஒருவகையான பராவத்தை நின்மலாவத்தைகள் சொல்லப் படுகின்றன. அவை மேற்கூறிய சுத்தத்தில் சுத்தாவத்தைகளாகிய பரா வத்தையும், இனிக்கூறப்படும் நின்மலாவத்தைகளும் அல்ல.* அந்த அவத்தைகளில் தத்துவங்களின் நீக்கமும் சொல்லப்படுகின்றது. அவற்றுள் அமைந்த நின்மலாவத்தையை இம்மந்திரம் குறிப் பிடுகின்றது.]
புருடதத்துவமும், அதற்குக்கீழேபொருந்தியுள்ள சித்தமும் சூக்குமமாகிய நாதவிந்து கலைகளிலே ஒடுங்கும். அவ்வொடுக் கங்கள் முறையே யோகத்தில் நின்மலாதீதமும், யோகத்தில் நின்மல துரியமும் ஆகும். சித்தத்திற்குக் கீழ் உள்ள புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்று அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் யோகத்தில் நின்மல சுழுத்தி முதலியவற்றில் விரிந்துநிற்கும். இங்ஙனமாகவே ஞானவத்தைகளை நோக்க, மேற்கூறிய பதினொன்றாந் தானமாகிய சமனா கலையும் யோகாவத்தைத் தானமேயாம். (`ஏனெனில், அவ்விடத்தும் சுத்த மாயைத் தொடர்பு இருத்தலின்` என்பது கருத்து).

குறிப்புரை :

ஆறும் - தணியும்; ஒடுங்கும் ``உடனே`` என்பது எண்ணொடுவின் பொருட்டாய் நின்றது. ``அருவம்`` என்றது, சூக்குமம் என்றபடி. அகார உகார மகாரங்களை நோக்க, விந்து நாதங்கள் சூக்குமம் ஆதலை உணர்க. ``அருவமொடு`` என்றது, `அருவத்தளவில்` என்றபடி. அதீதத்துரியம், உம்மைத் தொகை. `துரியத்தில்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `மிக்குள்ள எட்டும் சுழுத்தியினின்றும் கீழ்க்கீழ் விரியும்`` என்க. புத்திமட்டும் தோன்றுவது சுழுத்தியும் அதனுடன் அகங்காரமும் தோன்றுவது சொப்பனமும் அவற்றுடன் மனமும் தன்மாத்திரையும் தோன்றுவது சாக்கிரமும் ஆகும். இம்முறையில் நாதாந்தம் முடிய, `துரியாதீதம்` எனச் சொல்லப் பட்டாலும் அதற்குமேலும் பரவிந்து பாநாதங்கள் இருத்தலால் பதி -னொன்றாந்தானமும் சகலத்தில் சுத்தாவத்தைத் தானமே - என்றபடி. இதனை, சிவமூல மந்திரங்களை நோக்கிப்பிரணவ கலைகள் பொதுவாக, `சூக்கும பஞ்சாச்சரம்` எனச் சொல்லப்பட்டாலும் அகார உகார மகாரங்கள் விந்து நாதங்களை நோக்கி, `தூலம்` எனச் சொல்லப் படுதலைப்போலக் கொள்க. ``பதினொன்றும்`` என்னும் உம்மை சிறப்பு. பிராசாத யோகத்தின் அவத்தைகளை எடுத்துக்காட்டியது. அவற்றிடையேயுள்ள தாரதம்மியங்கள் போன்றனவே சுத்தத்திற் சுத்தாவத்தைகட்கும், சகலத்திற் சுத்தாவத்தைகட்கும் இடையேயுள்ள தாரதம்மியங்கள்` என்பது உணர்த்துவதற்கு அவத்தைத் தானத்தை `அவத்தை` என உபசரித்தார்.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் காரணங்காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திட நந்தியல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டும் அதுதிடம் எண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபடி சிவாகமங்கள் கூறுகின்ற அந்தத்தானங்கள் பதினொன்றிலும் சென்று நின்றால் உடம்பு விரைவில் அழியாது நெடுங்காலத்திற்கு நிலைபெறும் வகையில் உறுதியடையும். அந்நிலையில் அவ்வுடலில் உள்ள உயிருக்குச் சிவனைத் தவிரத் துணையாவார் வேறு ஒருவரும் இலராவர். (அஃதாவது, `அவ்வுண்மை அவ்வுயிருக்கு நன்கு விளங்கி நிற்கும்` என்பதாம்) அதனால் உனது மனம்போனபடி நீ போய் அலைந்துகொண்டிருந்த அலைவுகளையெல்லாம் விடுத்து அமைதியுற்றிருந்த அந்த அமைதியே வழியாகச் சிவன் தன் அடியார்களோடு கூட்டுதல் உறுதி. இந்த உறுதியும் உனக்கு அந்நிலையில் விளங்குவதாகும்.

குறிப்புரை :

கைகலத்தல், `கலத்தல்` என்னும் பொருட்டாய ஒருசொல். நாட்டி அழுத்திட - நிலைப்படுத்தி உறுதிசெய்ய `உறுதி செய்ய` என்ற அனுவாதத்தானே உறுசெய்தலும் பெறப்பட்டது. விதி - முறைமை.
இதனால், சகலத்திற் சுத்தம் மலாவத்தையேயாயினும் அது பயனுடைத்தாதல் கூறப்பட்டது.
சிற்பி