எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்


பண் :

பாடல் எண் : 1

கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

பொழிப்புரை :

கேவலாவத்தைக்குப் பின்பு ஆன்மாச் சகலத்தை அடைதலே கலவு நிலையாகும். (கலத்தல்மலத்தோடேயாகையால், இக்கலப்பு அசுத்தமேயாம். எனவே, கேவலத்திலிருந்த அசுத்தம் போய்விடவில்லையாம். முன்னை அசுத்தமே பின்னை அசுத்தத் திற்குக் காரணம் ஆகையால்) விடாது பற்றியுள்ள முதல் அசுத்தமாகிய இருள் நீங்கும் சமையத்தில் ஆன்மாச் சகல நிலையினின்றும் சிறிது சிறிதாக விலகி அப்பாற் செல்லுதலே செலவு நிலையாகும். (இது மலங்களினின்றும் நீங்கும் நிலையாகலின், `நின்மலாவத்தை` எனப்படும்) இந்நிலையில் ஆன்மாத் தன்னைக் காணுதல், பின் திரு வருளைக் காணுதல், பின் திருவருளைக் காணுதல், பின் பராசத்தியைக் காணுதல் இவை மூன்றும் முறையே நிகழ்ந்து நீங்கினால் சாக்கிராதீதம் வாய்க்கும். அதன் பின்பே நின்மலாவத்தை முடிவுபெறும்.

குறிப்புரை :

தன்னைக் காணுதல் முதலிய மூன்றும் முறையே, `சைதன்னிய தரிசனம், ஞான தரிசனம், பரை தரிசனம்` எனத் துகளறு போதத்தில்* கூறப்படுதல் காண்க. சாக்கிராதீதம், `பரையில் அதீதம்` என்பதனோடு கூட்டி இரண்டாகவும், பரையில் அதீதத்தை யடுத்துச் சுத்தாவத்தையும் அந்நூலில்l கூறப்படுதலையும் காண்க. அந்நூலில் `சுத்தாவத்தை` எனப்பட்டதும், இம்மந்திரத்தில் `சுத்தம்` எனப் பட்டதும் நின்மலாவத்தையேயாம். ``மேவும், பாவும்`` என்றாராயினும், `கேவலந் தன்னில் சகலத்து மேவுதல் கலவு` எனவும், `விடா இருள் நீக்கத்துப் பாவுதல் செலவு` எனவும் உரைத்தலே கருத்தென்க. பாவுதல் - பரவுதல்; முற்றும் பொருந்துதல்.
இதனால், சகலாவத்தை சுத்தாவத்தைகளின் இயல்பு ஒப்பிட்டு உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

பொழிப்புரை :

எந்தப் பொருள் மேலும் எழுகின்ற விருப்பத்தை வெல்லுங்கள்; வெறுப்பை ஒழியுங்கள்; உள்ளம் தூய்மையாகும். ஆனபின் அதனை இயன்ற அளவு திருவருளைப் பற்றியே இயங்கச் செய்யுங்கள். பின்பு அஃது அல்லும், பகலும் திருவருளையே சார்ந்து அமைதியுற்றிருக்கும். அப்பொழுது மலைக் குகையுள் அடைக்கப் பட்டவனுக்கு அந்தக் குகை வெடித்துப் பெரிய விடுதலை கிடைத்தது போன்ற ஒருநிலை உண்டாகும்.

குறிப்புரை :

`மலாவத்தைகள் நீங்கிப் பராவத்தை நிகழும்` என்றபடி. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதும் ஆயிற்று. இஃது ஒட்டணி.
அளவு - அளாவுதல்; கலத்தல். அது விரும்புதலைக் குறித்தது. வெகுளி, `வெறுப்பு` என்னும் அளவாய் நின்றது. `விருப்பம் நீக்குதற்கு அரியது` என்பதுபற்றி அதனை, `வெல்லுமின்` என்றார். `தூங்கினால்` என்றதனால், தூங்குதல் பெறப்பட்டது. `வெல்லுதல், விடுதல், செலுத்துதல் எல்லாம் யோகத்தால் உளவாகும்` என்பதும், `அவை உளவாகவே நின்மலாவத்தை பராவத்தைகளில் செல்லுதல் கூடும்` என்பதும் கருத்து.
இதனால், கலவு செலவுகளில் நிகழும் சுத்தாவத்தையின் இயல்பு கூறப்பட்டது.
சிற்பி