எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை


பண் :

பாடல் எண் : 1

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் ஒட்டணி பெற்றது.]
ஊமைக் கிணறு - வாய் இல்லாத கிணறு. அஃதாவது, தோண்டப்படாமல் நிலத்தினுள்ளே கிடக்கின்ற நீர்நிலை. என்றது கேவல நிலையை. ஆமை, கேவலத்தில் கிடக்கும் ஆன்மா. அழுவை - அழுவம்; பள்ளம். பள்ளங்கள் ஐந்தாவன, கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் யோகம், சகலத்தில்ஞானம்` என்னும் காரண அவத்தைகள், அவற்றுள், `வாய்மை` என்னும் பள்ளம் சகலத்தில் ஞானம். இதுவே நின்மலாவத்தை. இதனை அடைந்த ஆன்மா நித்தியமாம் தன்மையைப் பெறும்.

குறிப்புரை :

ஆன்மா எப்பொழுதும் நித்தியமேயாயினும் உடம்போடு கூடிப் பிறந்தும், இறந்தும் வருதலால் அநித்தியமாக எண்ணப்படுகின்றது. ஆகவே, `மென்மேலும் ஓர் ஆயிரத்தாண்டு` என்றது. `என்றும் இறவாமையை உடையதாம்` எனப்பொருள் தந்து, நித்தியம் ஆதலை உணர்த்திற்று.
இதனால், `நின்மலாவத்தை பராவத்தைக்கு வாயிலாய் நிற்கும்` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

பொழிப்புரை :

`நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் ஐம்பூதங் களும் முறையே பிரமன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர்களாலேதான் தொழிற்படுகின்றன. ஆகவே அந்த ஐவரையும் ஆதார யோகத்தால் `சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்னும் ஆதாரங்களில் முறையாகக் கண்டு, பின்நிராதாரத்தை அடைய வல்லவர்கட்கு இறப்பும் இல்லை. வாழ்வில் உணர்வும் இல்லையாம்.

குறிப்புரை :

`எனவே, மேல் - வெல்லும் அளவு என்பது,* என்பது முதலாகக் கூறிய சாதனங்கள் ஆதாரயோகத்தாலே எளிதில் கைவரும்` - என்பதாம். `நிலம் முதலிய ஐம்பூதங்கட்கும் பிரமன் முதலிய ஐவரும் அதிதேவர்கள்` என்பதை உண்மை விளக்கம், சிவஞான சித்திச் சுபக்கம் ஆகியவற்றால் அறிக. செய்யுள் நோக்கிப் பூதங்களையும், அதிதேவர்களையும் முறை பிறழவைத்தார். அங்கிக்கு அதிதேவ னாகிய உருத்திரனை `அங்கி` என்றே கூறினார். மேல் அஞ்சு - மூலா தாரத்திற்கு மேலே உள்ள ஐந்து ஆதாரங்கள் ஓடி - முறையாக ஏறி விரவுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `ஆதார யோகம் ஆயுளை வளர்த்து, உலகியல் உணர்வை நீக்கும் முகத்தால் நின்மலாவத்தைக்கு வாயிலாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.

பொழிப்புரை :

`உயிர்கள் அனைத்திற்கும் சிவன் தந்தை` என்பதும், `சித்தி தாய்` என்பதும் வேதாகமங்களில் எங்கும் முழங்கும் முழக்க மாதலை அறியாது சிலர் ஆன்மாவை, `தாயும் இலி; தந்தையிலி` என்கின்றார்கள். அஃது உண்மையாயின், சடப்பொருள்களாகிய தத்துவங்களும், அவற்றைக்கொண்டு ஆன்மாக்கள் உலகில் பிறந்து வினைகளை நுகர்ந்தும் ஈட்டியும், பின்பு இறந்தும் செல்லும்நிலை இல்லையாகவேண்டும்.

குறிப்புரை :

உயிர்களுக்குச் சிவனும், சத்தியும் தந்தையும், தாயும் ஆதலை, ``ஆலவாயில் அப்பனே`` எனவும் ``பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை``l எனவும், மற்றும் பல இடங்களிலும் இவ்வாறு வருவனவற்றால் அறிக. சிவனுக்கும், சத்திக்கும் வேறு பாடின்மை பற்றிச் சிவனையே. ``தொடர்ந்து நின்றேன் - தாயானை``3 ``அம்மையே, அப்பா``8 என்றாற்போலவும் பல இடங்களில் அருளிச் செய்வர். எவ்வாறாயினும், `பரம்பொருட்கு ஆன்மா மகன்` என்பதில் ஐயமில்லை. ``அறிகிலர்`` என்பது, அறியாமையால் அதனை மறுத்துக் கூறுதலாகிய காரியத்தை உணர்த்திற்று. ஆன்மா அறிவுடை உலகமாயும், தத்துவ தாத்துவிகங்கள் அறிவிலா உலகமும் ஆதலின், `ஆன்மாத் தோற்றம் உடையது ஆகாவிடின் உலகமே இல்லை` என்பார். ``ஆன்மாவும் இல்லையால்; ஐயைந்தும் இல்லையே`` என்றார். வித்தியாதத்துவங்களைப் புருடதத்துவத்தில் அடக்கி ``ஐயைந்து`` என்றார்.
இதனால், `ஆன்மா யோக ஞானங்களால் உலகினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.

பொழிப்புரை :

அறிவு உதயசூரியன் போலத் தோன்றி விளங் குதலும், அவ்வாறின்றி மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல மழுங்கி நிற்றலும், அத்தமித்த சூரியன்போல ஒடுங்கி யிருத்தலும் ஆகிய இவையே பெத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன துரியங்களாகும். ஆகவே, `அவற்றின்பின் நிகழும் துரியமும் அறிவுசெயற்படாது அடங்கிக் கிடக்கும் நிலை` என்பது சொல்ல வேண்டா. இந்தப் பெத்தநிலை அவத்தைகளை விடுத்துச் சுத்தநிலை அவத்தையை ஒருவன் எய்துவானாயின்` அவன் மிக நன்மையை அடைந்தவனாய், எல்லையில்லாத ஆனந்தத்தையுடையவனாவான்.

குறிப்புரை :

``உதயம்`` எனக் கூறிய சொற்குறிப்பால் இவ்வாறு பொருள் கொள்ளக்கிடந்தது. ``மூன்றின்`` என்பதில் `இன்` வேண்டா வழிச் சாரியை கதி - நிலை. பதிதல் - அழுந்துதல். `பற்றுக்களில் பதிதரும்` என்பது, பின்பு ``பற்றாத் துரியம்`` என்றதனால் விளங்கும். பற்றாத் துரியமும் யோக துரியமும், ஞான துரியமுமாம். `யோகா வத்தையை அடைந்தவன் ஞானாவத்தையையும், பின்பு பரா வத்தையையும் அடைதல் உறுதி` என்பது பற்றி ``அதிசுபனாய் அனந்தானந்தியாகும்`` என்றார். சுபன் - நன்மையை அடைந்தவன். அனந்தம் - முடிவில்லாதது. அனந்த + ஆனந்தி = அனந்தானந்தி. இது வடமொழிப்புணர்ச்சி.
இதனால், மலாவத்தைகள் துன்பநிலையும், நின்மலாவத்தை இன்ப நிலையும் ஆதலைக் கூறும் முகத்தால், நின்மலாவத்தின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

பொழிப்புரை :

சட உலகங்கள் யாவும் தனக்குள் அடங்கியிருக்க, சிவஞானத்தால் எல்லாப் பொருளையும் ஒருங்கேயறியும் தன்மை யுடையவன் ஆகின்ற அத்தகைய நல்ல துரியத்திலே தங்கும் நிலையை ஓருயிர் அடைந்துவிட்டால் அது நல்ல உயிராகும், பின்பு அது பிறவி யாகிய தீமையை விளைவிக்கின்ற முப்பத்தாறு தத்துவங்களில் செல்லாது. முன்பெல்லாம் சடங்களாகிய அவற்றிற்சென்று அவையே யாய் இருந்ததுபோல் இல்லாமல் அவற்றின் நீங்கி அறிவுப் பொருளாய், செல்லாது செல்வதாகிய சிவகதியை அடையும்.

குறிப்புரை :

பெத்த காலத்தில் ஆன்மாப் பாசங்களின் வியாப்பி யமாய் இருந்து, முத்திகாலத்தில் அவைகளைக் கீழ்ப்படுத்தி நிற்றல் பற்றி, ``எல்லாம் தன்னுட் புக`` என்றும், பெத்த காலத்தில் ஆன்மாத் தத்துவங் -களைப் பற்றி ஏகதேசமாய் இருந்து, முத்தி காலத்தில் சிவ ஞானத்தைப் பற்றி வியாபகமாய் நிற்றல் பற்றி, ``யாவுளும் தானாய்`` என்றும் கூறினார். `நன்று` என்பது இறுதிநிலை கெட்டு, ``நல்`` என முதனிலை யளவாய் நின்றது. ``நல்லாந் துரியம், நல்லுயிர்`` என்பவை, `சுத்த துரியம், சுத்தான்மா` என்பதாம். ``புரிந்தக்கால்`` என்பது, புரிதலின் அருமை தோற்றி நின்றது. ``ஆகிப்புரிந்தக்கால்`` என்றாரேனும், `புரிந்து ஆகியக்கால்` என்பது கருத்தென்க. செல்லாது செல்லுதலாவது, `முன்பு வேறாய் இருந்து, பின்பு சென்று அடைதல்` என்பதின்றி, முன்பே உள்ளதனை உணர்தல் ``அன்றே`` என்றது தேற்றம்.
இதனால், நின்மலாவத்தையின் இயல்பும், பயனும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 6

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும்
தோய்ந்த கருமத் துரிசக லாதே.

பொழிப்புரை :

நெருப்பில் காய்ந்து நெருப்பாகவே இருந்த இரும்பு நெருப்பை விட்டு நீங்கினால் நெருப்பாய் இராமல் இரும்பாகவே யிருக்கும். இருப்பின் நெருப்பின் சூடு விரைவில் ஆறிவிடாது; இருக்கவே செய்யும். அதுபோல நின்மல சாக்கிர சொப்பன சுழுத்தி -களோடு தத்துவங்களின்றும் ஆன்மா நீங்கியபோதிலும் துரியத்திலும் அவற்றில் முன்பு மூழ்கியிருந்த வாசனை இருக்கவே செய்யும்.

குறிப்புரை :

`அதனால் நின்மலதுரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். கருமம் - தொழில். துரிசு - குற்றம். என்றது அதன் வாசனையை. தசகாரியங்களுள் தத்துவ ரூபம். தத்துவதரிசனம் இவ்விரண்டும் நின்மலசாக்கிரம். ஆன்ம ரூபம் தத்துவ தரிசனத்தில் உடன் நிகழும். ஆன்ம தரிசனம் நின்மல சொப்பனம். இதில் தத்துவ சுத்தி அடங்கும். சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி நின்மல சுழுத்தி, இதில் தரிசனம் நிகழ, ஆன்ம சுத்தி ஓரளவே நிகழும். சிவயோகம் நின்மல துரியம். இதில் ஆன்மசுத்தி முற்றுப்பெறும். எனினும் பண்டை வாசனை சிறிது இருக்கும். சிவபோகமே நின்மல துரியாதீதம். இதுவே ஆன்ம லாபம். இங்கு ஆன்மாப் பண்டை வாசனையும் இன்றிச் சிவமேயாய் நிற்கும். ஆகவே இதனை அடைதல் இன்றியமையாததாயிற்று. வாதனை - வாசனை.
இதனால், நின்மல துரிய துரியாதீதங்களின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைந் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

பொழிப்புரை :

வேதம் முதலாகிய சொல்லுலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும் தனது வடிவமாகக் கொண்டுள்ள சிவன் புலப்பட்டு நின்று, தனது திருவருளாகிய தேனை வழங்குகின்ற நின்மலாவத்தையில் கடக்க வேண்டிய சாக்கிரம் முதல் நான்கையும் கடந்து முடிந்தபின் துரியாதீதமே பாரவத்தையாய் விளங்கும்.

குறிப்புரை :

என்றது, `விரைவில் பராவத்தை கைகூடும்` என்றதாம். தெரிசனாவத்தை, பொருள்களின் இயல்பை உள்ளவாறுணரும் நிலை. அது ஞானாவத்தையாதல் அறிக. `விடு` என்பது `வீடு` எனத்திரியாது செய்யுள் நோக்கி, `விடு` என்றே, நின்று, விடுதலாகிய தொழிலையே குறித்தது. உம்மை, சிறப்பும்மை. `விடுத்திட வேண்டிய வகை` என்றதனால் அவைமுதல் நான்கு நிலைகளேயாயின. `விட்டது` என்பதே துணிவுப் பொருளை உணர்த்துமாயினும், `ஆய்விட்டது` என்றல் உலக வழக்கு. `முடிந்துவிட்டது` என்பது அதன் பொருளாகும். அது பற்றி, `அடைந்துவிட` என்பதை, `அடைந்தாய்விட` என்றார். `நின்மலம்` என்பதை ``மலம்`` என்றது முதற்குறை. `நிருவிகற்பம்` என்பது `விகற்பம்` என்றதும், `சன்மார்க்கம்` என்பது `மார்க்கம்` எனவும் வந்த செய்யுட்களைக் காண்க.l
இதனால், `நின்மல துரியாதீதமேபராவத்தைக்கு நேர்வாயில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையிற்றானே நின்மல துரியாதீத நிலை (இதுவே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படுவது) தோன்ற, ஆன்மா அதிலே நிலைத்திருக்குமாயின், சிவனது திருவருள் அதனை விட்டு நீங்காது. அந்நிலையில் நீ பராவத்தையை அடைவதற்குச் சித்த சலனத்தால் பற்றக்கூடிய உலகியல் நிலை வந்து சிறிதும் தீண்டாதபடி சமாதி நிலையில் நில். அப்பொழுது முன் சொன்ன திருவருள் உன்னைச் சிவனோடு ஒன்றுபடுத்தும்.

குறிப்புரை :

`ஆங்கண்` என்பது பெயரால் நின்று உருபேற்றது. `தான்` என்றது சிவனை. `ஒன்ற முதலாகும்` என்றாராயினும், `முதலாய் நின்று ஒன்றுவிக்கும்` என்பதே கருத்து.
இதனால், நின்மல துரியாதீதத்தில் சிவன் அருளுருவாய் நின்று, பராவத்தையில் ஆனந்த உருவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

பொழிப்புரை :

எவ்வுயுரினின்றும் தன்னை வேறுபடுத்திக் கொள்ளாது, அதனோடு ஒன்றாகியே, அதற்கு அப்பனாகியும் இருக்கின்ற சிவன். எவ்வுலகிலும் உள்ள உடற்கூட்டத்தை `ஆண், பெண்` என இருசமபாதிகளாகப் பிரித்து வைத்துள்ளான். என்னையும் தன்னினின்றும் வேறுபடுத்தி, அத்தகையனவாகிய உடம்புகள் உள்ள அனைத்திடங்களிலும் செல்லவிடுத்து, அந்த உடம்புகளுக்குள்ளே புகுத்தினான். பின்பு தன்னினின்றும் என்னை வேறுபடுத்தாது ஒன்றாக்கிக் கொள்கின்ற அருட்கேவலத்திலே செலுத்தி, என்னோடு பொருந்தி நிற்கின்றான்.

குறிப்புரை :

``வேறுசெய்யா அத்தன்`` என்பதை முதலிற் கொள்க. இரண்டாம் அடியில் ``வேறு செய்தான்`` என்பது முற்றெச்சம். `என்னையும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்த லாயிற்று. அருட்கேவலமாவது, ஆன்ம தரிசனத்தில் தத்துவ சுத்தி நிகழ்ந்த பின்னர் ஆன்ம சுத்திக்கு இடைப்பட்ட நிலை. இதுவே துகளறு போதத்தில் * ஆம் அவதரமான கேவலம்` எனச் சொல்லப்பட்டது. இதைச் சிறப்பாகக் குறிப்பிடும் முகத்தால் நின்மலாவத்தை முழுதும் குறிக்கப்பட்டது. ``வேறுசெய்யா அருட்கேவலம்`` என்றதனால், `நின்மலாவத்தையே பதியைப் பசு பற்றும் நிலை` என்பது விளங்கும். இது சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தை. இதனால், ``வேறுசெய்தான் என்னை எங்கணும் விட்டுய்த்தான்`` என்றது, சகலத்தில் கேவலம். சகலத்தில் சகலம், சகலத்தில் சுத்தமாகிய யோகம் - என்னும் இவைகளைக் குறித்ததாயிற்று.
`உடம்புகளை ஆண், பெண்` - என இருவகையாய்ப் பிரித்து வைத்ததைக் கூறியது, `அவத்தைகள் யாவும் இருபாற்கும் பொதுவே` என்பது உணர்த்துதற்கு, `மெய்த்தொகை வேறுசெய்தான்` என்றே கூறினமையால், உயிரில் - ஆண், பெண் - என்னும் வேறுபாடில்லை என்பதும், `உயிராகிய பறவைக்குக் கூடாய் உள்ளனவே உடம்புகள்` என்பதும், `அதனால், வினைக்கீடாக ஆண் உடம்பில் புகுந்திருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய்ப் பெண் உடம்பில் புகுதலும், பெண் உடம்பில் இருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய் ஆண் உடம்பில் புகுதலும் கூடும்` என்பது விளங்கும். விளங்கவே, இதனை உணராத மதங்கள், ஆணுக்கன்றிப் பெண்ணுக்கு வீடுபேறில்லை என்றும், `ஆணைவிடப் பெண்ணுக்கு இறைதொடர்பு எளிதும் மிக்கதுமாம்` என்றும் கூறுவன எல்லாம் போலியாதல் பெறப்படும். இம்மந்திரம் சொற்பொருட்வருநிலையணி பெற்றது.
இதனால், `பதியை அடைதற்குப் பசு - ஆண், பெண் - என்னும் வேறுபாடின்றி நின்மலாவத்தையை அடையமுயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில்
நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே
அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து)
இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

பொழிப்புரை :

உயிர்கள் காற்றாடியில் உள்ள ஓலைகளைப் போலவும் கொள்ளியைச் சுழற்றுங்காலத்தில் தோன்றுகின்ற வட்ட வடிவுபோலவும், கடலில் அலைகள் போலவும், தயிரைக்கடையும் மத்தைப் போலவும் `மேல், கீழ், நடு` என்னும் மூன்றுலகங்களிலும் விரையச் சென்று மீண்டு மீண்டு, ஆழ்குழிப்பட்டுத்துன்புற்று, சிவன் அருள்புரிந்தபொழுது அவ்வருளால் ஆழ்குழிகளாகிய இவற்றி னின்றும் மீண்டு கரையேறி, அவனை அடைந்து இன்புறும்.

குறிப்புரை :

உவமைகள் ஒரு நிலையில் நில்லாது பல நிலையில் மாறி மாறி விரையச் சுழலுதலை விளக்க வந்தன. இச்சுழற்சிக்குக் காரணம் பாசங்களே.
``மலம் மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி மன்னிச்
சலமாரும் பிறப்பி றப்பில் தங்கி, இத் தரை, கீழ், மேலும்
நிலையாத கொள்ளி வட்டம், கறங்கென நிமிடத் தின்கன்
அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே``8
என்னும் சிவஞான சித்தியினைக் காண்க.
``மலங்கள் ஐந்தால் சுழல்வதன் தயிரில் பொருமத்துறவே``l
என்பது திருவாசகம்.
``ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி``3
என்றார் பிறரும், அறம் காண் - அறம் காரணமாகச் சென்று காண்கின்ற - கவர்க்கத்தை இத்தகையதாகக் கூறவே, நரகம் மறம் காரணாகச் சென்று காண்பதாயிற்று. புவி, அறம், மறம் இரண்டாலும் சென்று காண்பது. இறங்கா - வீழ்ந்து `இறங்கா நீங்கும் என இயையும், எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. இறங்குதல் சொல்லப்பட்டமையானே சுவர்க்க நரக புவிகள் ஆழ்குழியாயின. `அக்குழிகளில் வீழ்வன எல்லாம் மலா வத்தைகள்` என்பது மேற்காட்டிய மேற்கோள்களாலே விளங்கும். ஆகவே, நின்மலாவத்தையே உயிரின் கரையேற்றம் ஆகின்றது.
இதனால், சகலமாகிய மலாவத்தை பிறவி நிலையாய்ப் பெருந்துன்பம் விளைக்கும் இழிவைக் கூறுமுகத்தால், நின்மாலவத்தையினது உயர்வு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

பொழிப்புரை :

`ஆன்மாவே சிவம்` என்று சொல்லத்தக்க நிலையை ஆன்மா அடைந்தபின், அநாதியே பொருந்திய சகசமலமாகிய ஆணவமும், அதனை முன்னிட்டு வந்த, `மாயை` கன்மம், மாயேயம், திரோதாயி, என்னும் பாசவேறுபாடுகளும் அவற்றிற்கு உரியவாய் ஆன்மாவினிடத்து விளங்கிய இழிகுணங் களும், இவை நீங்கினாலும் நீங்கப் பெற்ற சுத்தான்மா விடத்திலும் பின்னும் நிற்கின்ற இவற்றின் வாசனைகளும் சூரியன்முன் சந்திரன் போல அடங்கி ஒடுங்கிவிடும். (வாதிக்கமாட்டா` என்றபடி).

குறிப்புரை :

மலங்களின் இழிகுணங்களை இருபாஇருபஃது நான்காம் செய்யுளால் அறிக. ஆன்மாச் சிவமாம் தன்மையை அடைதல் நின்மலாவத்தையில் ஆதலின், `அதனை அடைக` என்பார், இவ்வாறு அதன் பயனை விரித்தார். இதனானே `நின்மலாவத்தை` என்னும் பெயர்க்காரணமும் விளங்கிற்று.
இதனால், நின்மலாவத்தை அதன்பெயருக்கேற்ற பயனை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.

பொழிப்புரை :

[இதன்பொருள் வெளிப்படை]

குறிப்புரை :

`உள்ளம்`, ஏற்புழிக்கோடலால், `யோகியர் உள்ளம்` என்க. ஏனையோர்க்கு அப்பாவனையில்லாமையறிக. `நினைப்பவர் மனம் கோயிலாக்கொண்டவன்* என்றாற்போல்வனவும் இக்கருத்தே பற்றி வரும் என்க. செய்யுளாகலின் உள்ளத்தைச் சுட்டும் `அங்கு` என்பது முன்னே வந்தது.
`தத்துவ தாத்துவிகங்களும், அவற்றைச் செலுத்தும் கடவுளரும் யோகபாவனையால் கடக்கத்தக்கவர்கள்` என்பதை உணர்த்தும் முகத்தால் யோகத்தை விதித்தவாறு.
இதனால், நின்மலாவத்தைக்கு உரிய வாயிலின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு)
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாகுமே.

பொழிப்புரை :

(இதன் பொருளும் வெளிப்படை)

குறிப்புரை :

அறிவு என்னும் ஞானம் - அறிவுகளில் எல்லாம் மேலானமை பற்றி, `அறிவு` என்றே சொல்லப்படுகின்ற மெய்யறிவு. நாயனாரது நோக்கில் அது சிவஞானமே. ``திரி`` என்றது உயிர் அறிவை. ``உயிர் எனும் திரி மயக்கி`` என்பதிலும் ``உயிர்`` என்பது அப்பொருட்டு. ஞானத்தை - தீ - என்னாதது ஏகதேச உருவகம். உயிரை, `திரி` என்றே கூறியது சிறப்புருவகம். ``அதனுட்புக்கு ஊனை நோக்கும்`` என்றதை, `ஊனுட்புக்கு அதனை நோக்கும்` எனக் கொள்க. இருளற நோக்கியவழி முன் புலப்படாதிருந்தவை புலப் படுதல் போல, ஊனை இருளற நீக்கினால் முன் மந்திரத்திற் கூறியன எல்லாம் விளங்கும் ஆகலின், ``வானகம் ஏற வழி எளிதாமே`` என்றார். ``வானகம்`` என்றது, யோகத்திற்கு அப்பாற்பட்ட நின்மலா வத்தையை,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக,
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி, இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில், கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே``
-திருமுறை - 4.75.4.
என்று அருளினமையை நோக்குக. மடம்படும் உணர் - பசு போதம்.
இதனால், `மேல் குறிப்பால் உணர்த்திய யோகம் சிவயோகம் ஆதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி யெழுகின்ற வேதா கமங்களும்
நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.

பொழிப்புரை :

நான் எனது விருப்பப்படியேவிட்டும், வாங்கியும் இயக்குகின்ற பிராணவாயுவையும், மிகுத்தெழுக்கின்றதமருக ஓசையையும், வல்லுநர்கள் பாடுதலால் எழுகின்ற வேதாகம ஒலிகளையும், நான் கண்ட முறை, சுழுமுனா நாடியினுள்ளாக, நடனத்தில் தூக்கிய காலின் கீழாம்.

குறிப்புரை :

`யோகத்திலே ஞானத்திற்குரிய எல்லாவற்றையும் சிவனது நடனத்தின் வழியே பெறலாம்` என்றபடி. `தடித்து` என்பது செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், `சிவயோகமே ஞானத்திற்கு வாயில்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

பொழிப்புரை :

முதலில் நிகழும் அறிவு பெரிய தவ அறிவாயும், பின்னர் நிகழும் அறிவு அந்தத்தவத்தால் வரும் மெய்யறிவாயும் நிகழ்தல் வேண்டும். பின்னை அறிவு மெய்யறிவாய் நிகழ்ந்தவழியே முன்னை அறிவு தவ அறிவாய் நிகழ்ந்தமை அறியப்படும், இல்லையேல், அது வெற்றறிவாக அறியப்படும். முதல் அறிவால் நிகழ்ந்த தவத்தால் பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளேயாம்.

குறிப்புரை :

முதுதவம் - பெருந்தவம். ``அறிவினில்`` என்ற `இன்` ஏதுப் பொருளில்வந்த ஐந்தாம் உருபு. பின்னைப் பெற்றால்` என இயையும். ``அறிவினைப் பெற்றால்`` என்பதில் `அறிவு` எனப் பட்டது. பின் இரண்டடிகளால் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் `இன்னது` என விளக்கப்பட்டது.
ஆன்மாத் தன்னை உள்ளவாறு அறிதலாவது, உலக வாழ்க்கையானே தனக்குச் சுதந்திரம் இன்மையை உணரும் முகத்தால், தனக்கு ஒரு தலைவன் உளன் ஆதலை அனுமானத்தால் உணர்தலும், பின்னர்த் தனது தவத்திற்கு ஏற்ப நிகழும் நிகழ்ச்சிகளால் அனுபவமாக உணர்தலுமாம். அனுமானத்தால் உணருமாற்றை ஔவையார்,
``ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்;
அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;
எனை ஆளும் ஈசன் செயல்`` 3
என விளக்கினார். `பின்னை` என்பது `மற்று` என்னும் பொருளைத் தந்தது. பேயினது அறிவு நெறிப்படா அறிவு அஃது உவம ஆகு பெயராய் அதுபோன்ற அறிவைக் குறித்தது.
`பல பிறப்புக்களில் செய்த தவமுதிர்ச்சியால் பின்னர்ச் சில பிறப்புக்களில் ஞானம் நிகழும்` என்பதும், `அந்த ஞானமாவது இது` என்பதும் உணர்த்தும் முகத்தால், `ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை` என்பது இதனாற் கூறப்பட்டது. ``இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத் தான் ஞானம் நிகழும்``8 எனவும், ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார் எம்மையுடைமை`` எனவும் மெய்கண்ட தேவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 16

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.

பொழிப்புரை :

நின்மல துரியத்தை அடைந்தவர்கட்கே, அதன் பின்னர் ஆனந்த நிலையாகிய அதீத நிலை வாய்க்கும். அதனால் அவர் அந்த அதீத நிலையை அடையமுயலுதலன்றி, முன் சொன்ன சிவ யோகத்தைப் புரிய எண்ணமாட்டார்கள். அவ்யோகத்தைப் புரியாமை -யால், அவர்கள் உலகப்பற்றில் வீழ்ந்துவிடமாட்டார்கள். ஆகவே, சிவானுபவமாகிய செயல் ஞான துரியாதீதத்தை அடைந்தவர்கட் கல்லது. ஏனைச் சிவயோகிகட்கு உண்டாகமாட்டாது.

குறிப்புரை :

ஆன்மா, ``தான்பணியைநீத்தல்``l நின்மல துரியத்திலேயாதலை அறிக. ஆன்மாச் செயலற்றிருத்தலாகிய இதனையே நாயனார் முதல் தந்திரத்து `உபதேசப்` பகுதி 15.16,17 ஆம் மந்திரங்களில் நயம்பட விளக்கியிருத்தல் காண்க.
இதனால், ஒன்று இடையிட்டு மேற்கூறிய சிவயோகம் நின்மலா வத்தைக்குச் சாதனமேயன்றிச் சாத்தியம் ஆகாமை உணர்த்தப் பட்டது.
ஆன்மா தன் செயல் அற்று, `எல்லாம் சிவன் செயல்` என்று இருக்கும் நின்மல துரிய நிலையே
``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்`` (திருவுந்தியார் - 30)
எனவும்
``செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோ! நாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு``l
எனவும் சாத்திரங்கள் கூறுகின்றன.

பண் :

பாடல் எண் : 17

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

பொழிப்புரை :

[கீழாலவத்தை மத்தியாலவத்தைகளை நோக்க, மேலாலவத்தையாகிய யோகாவத்தை நிறைவுடையதேயாம். எனினும், ஞானாவத்தையை நோக்கின் அது குறைவுடையதேயாகும். ஆகையால்] இயமம், நியமம் முதலாக உள்ள அந்த எட்டுறுப்புக் களையும் (சமாதி உட்படக்) கடந்து, நின்மல துரிய நிலையில் ``அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி நிற்றலாகிய``8 அந்தச் சமாதி கைவந்தால்தான் அநாதி தொட்டே பற்றியுள்ள ஆணவமலம் வாசனையும் இன்றி நீங்கும். (அப்பொழுது பின் வந்த மாயை கன்மங் களாகிய பாசங்களும் அவ்வாறாம். ஆகவே, அப்பொழுதுதான்) ஆன்ம, `பசு` என்கின்ற நிலைமை நீங்கப்பெற்று, `சிவம்` எனப்படும் நிலையை எய்தும்.

குறிப்புரை :

ஒளி வந்தவழியல்லது இருள்போகாதது போல, ஞானம் வந்த வழியல்லது அஞ்ஞானத்தைச் செய்வதாகிய ஆணவ மலம் அறுமாறில்லை. ``அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான் - ஆனத்தால் அதுபோவது; அலர்கதிர்முன் இருள் போல்``3 என்பது சிவஞானசித்தி. இதனால் இங்கு ``சமாதி`` என்றது ஞான சமாதியேயன்றி, யோக சமாதியன்று. ``தான் அவனாகும் சமாதி`` என எடுத்தோதியதும் அது விளங்குதற் பொருட்டு. இந்த ஞான சமாதியையே திருக்களிற்றுப்படியார்,
``சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியும்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று``8
எனக்கூறிற்று. இங்குக்கூறிய சமாதியை `யோக சமாதியே` எனக் கொள்கின்றவர்கள் `எட்டு` என்னும் எண்ணிக்கைக்குத் தங்கள் தங்கட்குத் தோன்றிய பொருளைக் கூறுவர்.
ஈற்றடியை முதலிற் கூட்டி, `ஈன்மில் காயம் இருநிலத் திருக்கும்` என முடிக்க. காயம் இருத்தலைக் கூறியது, `ஞான சமாதியை அடைந்தோர் காயத்தை இருந்த வேண்டினும் இருக்கும்` என்பது உணர்த்துதற்கு, ஞானிகளது உயிரேயன்றி, உடம்பும் நின்மலமேயாதலைக் குறித்தற்கு, ``ஈனம் இல் காயம்`` என்றார்.
இதனால், `யோக துரியாதீதத்தைக் கடந்து நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

பொழிப்புரை :

(இருவினையொப்பு மலபரி பாகம்வந்த பொழுது ஆன்ம அறிவில் பதிகின்ற அருட்சத்தியை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என அதன் தன்மை பற்றி வழங்கப்படுமாயினும் அவை `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் சக்தி களின் வகையாகவே சொல்லப்படுகின்றது.l அந்த ஐந்து சக்திகளும் சிவனது திருவடியேயாம். (அருளை `அடி` எனக் கூறுதல் மரபு. அதனால், சத்தி நிபாதத்தில் உண்டாகின்ற ஞானமும் `திருவடி ஞானம்` என்றே கூறப்படும்). அந்த ஞான ஒளி தோன்றியவுடன், அநாதி தொட்டு விடாது பற்றி நிற்கின்ற ஆணவ இருள் நீங்கும். அது நீங்கவே, ஆன்மாவிற்கு இயல்பாய் உள்ள இச்சாஞானக்கிரியா சத்திகள் (ஆணவத்தால் தடுக்கப்பட்டிருந்தனவேயன்றி, அழிக்கப் படாமையால்) விளக்கம் பெற்று ஆன்மாத் தனது இயற்கை நிலையை அடையும். அடைந்த பொழுது முதற்கண் முற்றும் நீங்காத பெத்தமும் அது முற்றும் நீங்கிய முத்தியும் என்னும் இரண்டற்கும் இடைநிலையில் ஆன்மா இருக்கும்.

குறிப்புரை :

அந்த நிலையே நின்மலாவத்தை என அறிக. `தோன்றும் ஐஞ்சத்தி தொலையா அரனடி` எனவும், `ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா` எனவும் கூட்டுக.
`ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா`` எனப்பொதுப் பட ஓதினாராயினும் சொல்லுவாரது குறிப்புத்திருவடி ஞானத்தின் மேலதும், ஆணவ இருளின் மேலதும் ஆதலை அறிக. மூன்றாம் அடியில் நின்ற ``தொலையா`` என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெய -ரெச்சம். மூன்றாம் அடியில் உள்ள ``தொலையா`` என்பது `செய்யா` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அதனை, `தொலைய` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக்கொள்க. இங்ஙனமாகவே இம்மந்திரம் சொற்பின்வருநிலையணிபெற்றதாம்.
இதனால், ஞானாவத்தையே நின்மலாவத்தையாதலன்றி, யோகாவத்தை அன்னதாகாமை தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.

பொழிப்புரை :

உயிர்கள் அவற்றைச் செலுத்துகின்ற சிவசத்தியின் தன்மைக்கு ஏற்ப மயக்க உணர்வைப் பெற்றுப் பெத்தத்தையும், மெய் உணர்வைப் பெற்று முத்தியையும் ஏனெனில், அந்த `மயக்கம், மெய்` என்னும் இரண்டையும் உயிர்கட்குத் தருகின்ற ஞானமாகிய தன் சத்திக்குச் சத்தனாய் உள்ள சிவன், ஒரு பெற்றியில் நில்லாது இருவேறாய் நிற்கின்ற அந்தச் சத்திக்கு உயிராய் நின்று அதனைச் செலுத்துவன் ஆதலின்.

குறிப்புரை :

`உயிர், சத்தியால் மான்று பெத்தத்தையும், தெருண்டு முத்தியையும் பெறும்` என்க. இது முறை நிரல்நிறை. உயிர் பக்குவம் எய்தாத பொழுது மலங்கள் அதன் ஆற்றலை அடக்கித்தாமே மேற்பட்டு நிற்றலால் அப்பொழுது சிவனது அப்பாசங்களைச் செலுத்தி அவை வழியாக உயிருக்கு மயக்க உணர்வையும், உயிர் பக்குவம் எய்திய காலத்தில் அதன் ஆற்றலை மலங்கள் அடக்க மாட்டாது, அதற்குக் கீழ்ப்பட்டுப் போதலால், அப்பொழுது சிவனது சத்தி தான் நேர்நின்று உயிர்கட்கு மெய்யுணர்வையும் தரும். அதனால், ``மான்றும், தெருண்டும் பெறும்`` என்றார். மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து. ஒன்றாகிய சத்தியே, பாசத்தின் வழிநின்று அறிவை மயக்கும் பொழுது `திரோதான சத்தி` என்றும், மயக்காது விளக்கும் பொழுது `அருட்சத்தி` என்றும் பெயர் பெறும். `ஞானத்தன்` என்பது இன்னோசை நோக்கி மெலித்தல் பெற்றது. ஒன்றேயாயினும் இரண்டாய்ச் செயலாற்றுதல்பற்றிச் சத்தியை ``ஊன்றல் இல்லா ஒளி`` என்றார். மற்று, தான் அசைகள். ``ஒளிக்கு ஒளி`` என்றது, `சிவன் செயற்படுத்திய வழியிலே சத்தி செயற்படும்` என்பது உணர்த்துதற்கு முன்பு, ``சத்திக்குச் சத்தன்`` என்றதை இனிது விளக்கியவாறு.
இதனால், மேற்கூறிய பெத்தமும் முத்தியும் சிவனாலே ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

தத்துவங்கள் முப்பத்தாறினையும், அவை தாமே அறிந்தும், செய்தும் வருவனவாக மயங்கி, உண்மையில், `அவற்றைக் கருவிகளாகக்கொண்டு அறிபவனும்` செய்பவனும் நான்தான்` என்பதையான் பெத்த காலத்தில் அறிந்து கொள்ளாமலே மயங்கி யிருந்தேன். பின்பு நந்திபெருமான், மேற்குறித்த உண்மையை எனக்கு அறிவுறுத்தருளினார். அந்த உண்மையை அங்ஙனமே அறிந்து கொண்டமையால், முத்தனாயினேன்.

குறிப்புரை :

`பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `இவ்விரண்டிற்கும் காரணம் பக்குவம் எய்தாமையும், எய்தினமையும்` என்பது மேலே கூறப்பட்டது.
இதனால், `மெய்யுணர்வு திரோதானசத்தி அருட்சத்தியாய் மாறின அளவில் பெறப்படாது. குருவினாலே பெறப்படும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

பொழிப்புரை :

தான் `சீவன்` என்கின்ற நிலைமை நீங்கி, `சிவன்` என்கின்ற நிலைமையை அடைந்த பெரியோன் சிவன் சத்தி இருவனாயும் நேரே கண்டது தன்னுடையே உடம்பிற்குள்ளேயாகும்.

குறிப்புரை :

`சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தையாகிய நின்மலா வத்தையிலாம்` என்றபடி `அந்நிலையை அடைந்தவன் பின் பரா வத்தை அடைதல் உறுதி` என்பது கருத்து. முன் இரண்டு அடிகளில் சிவனும், பின் இரண்டு அடிகளில் சத்தியும் குறிக்கப்பட்டனர். அவ் வடிகளின் பொருள் வெளிப்படை ``கண்டது`` என்னும் ஒருமை அத் தொழிலைக் குறித்தது. `கண்டது ஊனிடை` என மாற்றியுரைக்க.
இதனால், `சகலத்திலேயே நின்மலாவத்தையில் சிவ சத்திகளை அவர்களது ஞானமாகிய கண்ணால் காணுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.

பொழிப்புரை :

ஆணவ இருளைச் சிறிதே நீக்குவனவாகிய மாயா காரியக் கருவிகளும் அவற்றால் சிறிதே நீக்கப்படுகின்ற ஆணவ இருளும், அதனை நீக்க உதவுகின்ற சிவசத்தியும் அச்சத்தியால் காப்பாற்றப்படும் ஆன்மாவும் ஆகிய இவைகளை முறையாக முன்னர் உணர்தல் வேண்டும். (அவ்வாறு உணர்தலே அரிது. ஆயினும்) அதன்பின் அவற்றோடு நில்லாது ஆன்மாவின் எளிய நிலையையும், அந்நிலையை உணர்ந்து சிவன் அதன்மேல் கொள்ளும் இரக்கத்தையும், அவ்விரக்கத்தால் ஆன்மாவிற்கு உண்டாகின்ற அனைத்துப் பொருள்களையும் பற்றிய உண்மையான உணர்வின் சிறப்பையும் உணர்ந்து, பின் பல பொருள் உணர்வை விடுத்துச் சிவன் ஒருவனையே உணர்கின்ற உணர்வு உண்டாகுமானால், அதன் பின்பே சிவனது பேரின்பம் ஆன்மாவிற்கு உளதாகும்.

குறிப்புரை :

பின்னர், ``பரை`` எனத் திருவருள் குறிக்கப்படுதலால், முதற்கண் ``ஒளி`` என்றது மாயையாகிய ஒளியையே குறித்தது. அளியது - அளிக்கத்தக்கது. அஃதாவது, இரங்கத்தக்கது.
துகளறுபோதத்தில், ஒளியை உணர்தல், முதல் ஏழு அவதாரங் களாகவும், இருளையுணர்தல், அடுத்துமூன்று அவதரங்களாகவும், ஆன்மாவை உணர்தல், அடுத்த `தன்னுண்மை சைதன்னிய தரிசனம்` எனவும், இரக்கத்தை (திருவருளை) உணர்தல் `ஞானதரிசனம்` எனவும் தெருளைஉணர்தல் அடுத்த எட்டு அவதரங்களாகவும் கூறப் பட்டன. இவற்றின் பின்னர்க் கூறப்பட்டன எல்லாம் சிவன் ஒருவனையே உணர்ந்து நிற்கும் நிலைகளாம். அந்நிலைகளே சிவானந்த விளைவுகளுமாம். ``பரை`` என்பது பொதுவாக `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், நின்மலாவத்தையின் உட்கூறுகள் ஒருவாறு விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.

பொழிப்புரை :

`சிவானந்தம்` என்பதும் சிவனது அருட் குணங்களில் ஒன்றேயாம். (வரம்பில் இன்பம்) ஆகவே, அச்சத்தி வழியாக ஞான நிலைகளில் முடிநிலையை அடைந்த உயிர் பின் சிவத்திலே அழுந்தி, ஐவகை உடம்புகளினின்றும் நீங்கி, அறிவே வடிவாய், அந்த அறிவுக்கு அறிவாய் உள்ள சிவத்திலேயே பிரிதல் இன்றி நிற்குமாயின் சிவனை முற்றும் பெறுதலாகிய மிகப்பெரிய பேறு உளதாகும்.

குறிப்புரை :

``தானே`` என்பது, `அந்த உயிரே` எனத் தேற்றப் பொருள் தந்தது. சமாதி - தான் அதுவாதல், கோபம் - கோவம், பாபம் - பாவம்` என வருதல்போல, `மகாபாக்கியம், என்பது, ``மகா வாக்கியம்`` என வந்தது. பாக்கியம் - பேறு இவ்வாறன்றி `மகா வாக்கியம்` என்றே கொள்ளுதற்கு இங்கு ஏதும் இயைபில்லாமை அறிக.
இதனால், முன்மந்திரத்தில் குறிக்கப்பட்ட சிவானந்தம் வாய்க் குமாறும் `அதுவே பெரும்பேறாகிய ஆன்மலாம்` என்பதும் கூறப் பட்டன. இப்பேறு கிடைத்தற்குக் கூறப்பட்டவழி நின்மலாவத்தையே யாதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 24

அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.

பொழிப்புரை :

அறிவித்தாலும் அறியும் தன்மையில்லாத அபக்குவர்க்கும் குருவின் உபதேசம் ஏற்புடையதன்று; (பயன் இன்மையால்) முற்பிறவியிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தும் நிட்டை கூடாது விட்டமையால் கருவிலே திருஉடையவராய்ப் பிறந்து, ஞானத்தின் திருவுருவாயே நிட்டையை வேண்டி நிற்பவர்க்கும் குருஉபதேசம் வேண்டுவதன்று. எனவே அறிவித்தால் அறியும் பக்குவம் உடையவராய் அறிவிப்பாரை நாடிநிற்கும் அவர்கட்கே ஞான குரவர் உபதேசத்தைச் செய்வராக. பக்குவம் வாய்ப்பினும் தம்மையும், தலைவனையும் குருஉபதேசத்தாலன்றித் தாமாகவே அறிபவர் உலகில் யார் இருக்கின்றார்கள்? (ஒருவரும் இல்லை).

குறிப்புரை :

அறிவித்தால் அறியும் ஆற்றலும், `அறியவேண்டும்` என்னும் அவாவும் இல்லாதவர் `பிராகிருதர்` என்றும் முற்பிறப்பிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர். `சாமுசித்தர்` என்றும், பரிபக்குவம் வாய்ந்து, ஞானகுருவைத் தேடுகின்றவர் `வைநயிகர்` என்றும் சொல்லப்படுவர். இதனை, `பண்டை நல்தவத்தால் தோன்றி`l என்னும் சிவஞானசித்திச் செய்யுளின் உரையால் உணர்க. இவர்களையே இங்கு நாயனார் `அறிவற்றவர் அறிவுற்றவர், அறிவுற்று அறியாமை எய்தி நிற்பார்` என்றார். இம்மூன்று பெயர்களில் நடுவில் உள்ள ஒன்றில் உள்ள `அறிவு` என்பது மட்டும், `ஞானம்` என்றும், மற்றையிரண்டும் `அறியும் ஆற்றல்` என்றும் பொருள் தந்தன. ``அறியாமை`` என்பதில், `மை`. வினையெச்ச விகுதி. எனவே, `அறியாமல்` என்பது அதன்பொருள். அறியும் ஆற்றல் இருந்தும் அறியாமல் நின்றதற்குக் காரணம், அறிவிப்பார் இன்மை. இறுதியில், ``தம் அறிவு ஆர் அறிவார்`` என்றதும், `அறியும் ஆற்றலைப் பெற்றவர்க்கும் அறிவிப்பார் இன்றி அறிதல் இயலாது` என்பதை விளக்குதற்கேயாம். உம்மை இரண்டும் எதிரதுதழுவியும், இறந்தது தழுவியும் நின்றன. முன்னிரண்டடிகளில் பாடம் திரிவுபட்டுள்ளது. ``அறிவிக்க`` என்பது வியங்கோள் அதற்கு எழுவாய், ஆற்றலால் வந்து இயைந்தது.
இதனால், ஞான குரவராயினார்க்கு ஒரு கட்டளைபோல வைத்து பரிபக்குவம் இல்லார்க்கு ஞானாவத்தை நிகழாமையும், பரிபக்குவம் உடையார்க்கும் ஞானகுரு இன்றி அது நிகழாமையும் கூறப்பட்டன. ஞானம் ஞான குரு இன்றி நிகழாமை மேலே சில இடங்களில் கூறியிருக்கவும், இங்கும் அதனைக் கூறியது, `பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்டு` என்பவாகலின் நின்மலாவத்தை கூறும் இவ்விடத்திலும் அதனை வலியுறுத்தற்பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 25

சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.

பொழிப்புரை :

சகலத்தில் சுத்தமாகிய மேலாலவத்தையும், (யோகாவத்தையும்) சகலத்திற் சகலமாகிய மத்தியாலவத்தையும், சகலத்தில் கேவலமாகிய கீழாலவத்தையும் ஆகிய இவைகளின் தொடர்புகள் சிறிதும் இல்லாது நீங்கிய நின்மல துரியத்தில் நிற்றலால் சுத்தான்மாக்களாய், சொல் நிகழ்ச்சி அத்துரியத்திற்கு முற்பட்ட, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி` என்னும் மூன்றோடே நீங்கப் பெற்றவர்கட்கு, சத்தாய் உள்ள சிவமும், அசத்தாய் உள்ள பாசங்களும், சதசத்தாய் உள்ள ஆன்மாவும் முறையே சித்தும், அசித்தும், சிதசித்தும் ஆதல் முற்ற அனுபவமாய் விளங்கும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. அசுத்தம் போலத் தொடர்பற்றதாகக் கூறினமையால், ``சுத்தம்`` என்றது சகலத்திற் சுத்தமேயாயிற்று. முப்பொருள்களின் இயல்பு சத்து, அசத்து, சதசத்து ஆதல் மட்டும் விளங்கல் நிரம்பாமையால், `அவை முறையே சித்தும், அசித்தும், சிதசித்துமாதல் விளங்கும்` என்றார். சிவஞான போதத்துள்ளும் `இருதிறன் அல்லது சத்தாம்` என்று ஒழியாது. ``சிவசித்தாம்`` என அருளியதையும் 8 அதன் உரையையும் நோக்குக.
`சத்து` என்பது, `உள்ளது` என்றும், `அசத்து` என்பது இல்லது` என்றும், `சதசத்து` என்பது, `சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்கும்` என்றும் பொருள் தரும். இன்றும் `உள்ளது` என்பது, `என்றும் ஒரு படித்தாய் உள்ளது` என்றே பொருள்தரும். அதனால் `அசத்து` என்பது `சிலகாலம் உள்ளதாய் இருந்து பின் இல்லதாகிவிடும்` என்றே பொருள் தரும். இம்முறையில் சத்தாய் உள்ளது சித்தாயும் இருக்கும்; அஃதாவது அறிவாய், ஒருஞான்றாமை அறியாமை உடையதாகாமல் இருக்கும். அசத்தாய் உள்ளது அசித்தாயும் இருக்கும். அஃதாவது எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் அறிவுடையதாகாது அறியாமையை உடையதாயே இருக்கும் `சடம்` என்பது இதுவே சதசத்தாய் உள்ளது சிதசித்தாயும் இருக்கும். அஃதாவது சித்தோடு கூடிச் சத்தாயும் அஃதாவது அறிவுடையதாயும் அசித்தோடு கூடி அசத்தாயும் அஃதாவது அறியாமையுடையதாயும் இருக்கும். `இவையெல்லாம் நூலறிவால் அறியப்பெறினும், அனுபவமாக விளங்குவது நின்மல துரியத்தில்` என்பது இம்மந்தரத்தில் கூறப்பட்டது ``கூடிநிற்கும்`` என்றது அனைத்தும் விளங்கும்` என்றபடி ஏகாரம் பிரிநிலை.
இதனால், `நின்மலாவத்தையில்தான் அனுபவ ஞானம் உண்டாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

பொழிப்புரை :

புருடன், (ஆன்மா) பிறிதொரு பொருள் அறிவியாமல் தானாகவே ஒன்றையும் அறியும் தன்மையுடைய னல்லன்; அதனால், அவன் அறிவில்லாத சடப்பொருளும் அல்லன். (`அறிவித்தால் அறிவான்` என்றபடி). இத்தன்மை உடைய இவன், பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் அறிபவனாகிய சிவனது அறிவைக்கொண்டு தன்னை முன்மந்திரத்திற் கூறியவாறு, `சதசத்து` என அறிவானாயின்` அப்பொழுது இவனும், இவனால் சாரப்பட்ட கருவித்தொகுதியும் சிவனது அருளாகியே நிற்கும். (`இவனும் சிவமாகி, இவனது கரணங்களும் சிவகரணமாய்விடும்` என்றபடி). அங்ஙனம் நிற்கவே, முன்பு அசித்தோடு கூடி அசித்தாய் இருந்த, அல்லது ஏகதேசமாய் அறியும் சிற்றறிவை உடையவனாய் இருந்த இவனே, எல்லாவற்றையும் அறியும் அறிவுடையவனாகிச் சிவத்தோடே கூடி இரண்டற்றிருப்பான்.

குறிப்புரை :

``தானே`` மூன்றில் இறுதியில் உள்ளதில் ஏகாரம் தேற்றம். ஏனைய பிரிநிலை. ஆன்மா நின்மலாவத்தையை அடைதல் பற்றியே கூறி வருதலாலும், முன் மந்திரத்திலும் ``சுத்தராய்ச் சொல்லற்றவர்கட்கே`` எனச் சீவர்களே குறிக்கப்பட்டமையாலும் அத்தொடர்ச்சி பற்றி இம்மந்திரத்திற்கு `ஆன்மா` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``தானே அறிவான் அறிவு`` என்பதன் ஈற்றில் `ஆன்` உருபு விரிக்க. ``ஆனால்`` என்பதில் ஆக்கம் அறியாததனை அறிதலை உணர்த்திற்று. ``நிற்க`` என்ற அனுவாதத்தால், `நிற்கும்` என்பது தானே பெறப்பட்து. ``சதசத்து`` என்றதில் அசத்தும் பெறப்பட்டமைாயல், ``இரண்டும்`` என்றதில் அசத்துத் தொகுதியும் ஒன்றாயிற்று. ``தங்கும்`` என்னும் `செய்யும்` என்முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ஆன்மா, வடமொழி வழக்குப் பற்றி ஆண்பாலாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன்மந்திரத்தில், `ஆன்மாச் சிதசித்து` எனக்கூறிய வகையில், `சித்தாதல் இவ்வாற்றால்` என்பது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.

பொழிப்புரை :

மாயாகாரியங்களாகிய கருவிகளின் உண்மையை உணர்ந்தவர்கட்கே மெய்ப்பொருளாகிய சிவத்தை உணரும் உணர்வு கிடைக்கும். அந்த உணர்வானே ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும். அதனை அடையவே, அந்தச் சிவஞானமே சிவபத்தி -யாய்ப் பரிணமிக்க, அந்தப் பத்தியால் சிவானந்தம் விளைவதாகும்.

குறிப்புரை :

``தத்துவம்`` நான்கில் முதலது உபசார வழக்கால் `தத்துவம்` எனப் பெயர்பெற்றது நிற்கும் மாயா கருவிகளைக் குறித்தது. ஏனையவை உண்மை வழக்கால் மெய்ப்பொருளைக் குறித்தன. ``தலைப்படல்`` இரண்டனுள் முதலது ஆன்மாவின் செயலாயும், இரண்டாவது ஞானத்தின் செயலாயும் நின்றன. தான் - ஆன்மா. அவன் - சீவன். ``ஆகவே`` என்ற அனுவாதத்தால், ஆதல் தானே பெறப்பட்டது. ஈற்றில் உள்ள தான், அசை.
இதனால், முன் மந்திரத்தில் `ஆன்மாத் தன்னை யுணர்தல் சிவஞானத்தால்` என்றமை பற்றி, அந்தச் சிவஞானம் கிடைக்குமாறும், அது கிடைப்பின் விளையும் பெரும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 28

தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.

பொழிப்புரை :

ஆன்மாத் தனது இயல்பை உள்ளவாறறிந்தால் தான் பாசத்துடன் நில்லாது சிவத்துடனே நிற்கும். அவ்வாறு நிற்கும் பொழுதுதான் மலங்களின் சேட்டை ஒழியும். பாசங்களின் சேட்டை ஒழிவே பிறப்பின் ஒழிவாகும். எவ்வாற்றானும் மீண்டும் பிறவி எய்தாத நிலையே முடிநிலைப் பரமுத்தியாகும். மற்றும் அதுவே நன்னெறியாகிய ஞானத்தால் அடையப்படும் பேரறிவுப் பொருளும் ஆகும். அது சின்முத்திரை வழியாகக் கிடைக்கும்.

குறிப்புரை :

சேட்டையை, `குணம்` என்றார். ``பின்`` என்பது, `மற்று` என்னும் பொருளில் வந்தது. `பின்னும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மையும், `அதுவே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயின. `பின்னும் அதுவே` என்பதை, ``சன்முத்தி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `நன்றது` என்பது எதுகை நோக்கி, `நன்னது` என வந்தது. `முத்திரையால் என உருபு விரிக்க. சின்முத்திரையைப் பெறுமாறு, வருகின்ற மந்திரத்தில் காண்க.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய தத்துவ ஞானத்தால் ஆன்ம சுத்தி உண்டாக, அதன்பின் நிகழும் ஆன்ம லாபமும் அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 29

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

பொழிப்புரை :

(சிவனுக்கு வடிவமாய் அமைவது. அவனது சத்தியே. அதனை, ``காயமோமாயை அன்று; காண்பது சத்தி தன்னால்l என்னும் சிவஞான சித்தியால் அறியலாம். `அரிதரு கண்ணியாணை ஒருபாகமாக அருள் காரணத்தில் வருவார்``3 என அருளிச் செய்ததும் இதனையே. அவ்வாறு ஆகுமிடத்து.)
ஞானசத்தியே உடல். கிரியாசத்தியே உடலில் உள்ள பல உறுப்புக்கள். இச்சாசத்தியே `உயிர்களை உய்விக்கவேண்டும்` என்னும் கருணையாய் உள்ளிருந்து உந்துவதாய் மேற்கூறியவைகளை இயக்கும் உயிராகும். இவைகளையெல்லாம் கொண்டு அவன் செய்யும் தொழில்கள் ஐந்து. (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்). இங்ஙனம் ஆகலின் அவ்வைந்தொழிலில் இறுதிக்கண்ணதாகிய அருளலை தற்போதம் அற்றிருந்தவர்கள் மட்டுமே பெற்றார்கள் (`பிறரெல்லாம் ஏனை நான்கையே பெறுகின்றனர்` என்பதாம்).

குறிப்புரை :

இறைவனுக்கு `அருவம், அருவுருவம், உருவம்` என மூவகை வடிவங்கள் உள. அவற்றுள் அருவம் தவிர, ஏனைய இரண்டும் பற்றி இங்குக் கூறப்பட்டன. `உருவ வடிவத்தில் உடலும் உறுப்பும் நம்மனோரது உடலும், உறுப்பும்போலவே இருப்பினும் அவை அன்ன அல்ல; இங்குக் கூறிய சத்திகளே` என அறிவுறுத்தபடி அருவுருவ வடிவம் மந்திர வடிவம். அதனுள் சத்தியோசாத மந்திரம் உடலும், ஈசான மந்திரம் சென்னியும், தற்புருட மந்திரம் முகமும், அகோரமந்திரம் இருதயமும், வாமதேவமந்திரம் மறைவுறுப்பும் ஆக இவ்வாறு அமைகின்றன.
இறைவன் சனகாதி நால்வர்க்குத் தென்முகக் கடவுளாய்க் கல்லால மர நீழலில் இருந்து சின்முத்திரையாலே ஞானத்தை உணர்த்தியதைக் கருத்தில்கொண்டே,
``மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே``
என்றார். (`ஆகவே, அவரைப் போன்றாரும் அவ்வாறு ஞானத்தைப் பெறுதல் கூடும்` என்பது குறிப்பெச்சம்.)
அருவம் வடிவம், `இலயம்` என்றும், அருவுருவ வடிவம் `போகம்` என்றும், உருவம் வடிவம் `அதிகாரம்` என்றும் சொல்லப் படும் நிலைகளையுடையனவாம். இனி ஞானகுரவருடைய திருமேனியும் சிவோகம்பாவனை காரணமாகச் சத்தி வடிவம். அல்லது அருட்டிருமேனியாம் ஆகலின், அவரால் சின்முத்திரை வழியாகப் பலரும் பெறுதல் கூடும் என்க. சின்முத்திரையின் இயல்பை முத்திராலட்சணங்களில் காண்க.
இதனால், முன்மந்திரத்தில் கூறிய ஞான முத்திரையின் உண்மையும், அதனைப் பெறுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.

பொழிப்புரை :

[முன்மந்திரத்தில் சிவனுக்கு உள்ளனவாகக் கூறிய ஞான சத்தி இச்சா சத்தி கிரியா சத்திகள் உயிர்கட்கும் உள்ளன, அஃது எவ்வாறு பெறப்படுகின்றது எனின்,], `சடப்பொருள்கட்கு வேறாய் உயிர் உண்டு` என உணரவைப்பதே உயிரினது ஞான சத்திதான், (அஃதாவது, எங்கே அறிவு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் `உயிர் உள்ளது` என உணரப்படுகின்றது என்பதாம்). இனி, அந்த அறிவு `யான்` எனத் தன்னைப் பற்றியும், `எனதும்` எனப் பிற பொருளைப் பற்றியும் கொள்கின்ற பற்றும் இச்சாசத்தியின் செயலேயாகும், அந்தப் பற்றுக் காரணமாக உயிர் பலவான மாயா காரியப் பொருள்களைச் செயற்படுத்தி, அவற்றால் பயன் உறுவது கிரியா சத்தியின் செயற் பாடே. இவ்வாறு இவை நுட்பமாக ஓர்ந்துணரத்தக்கன. (அங்ஙனம் உணராமல், `உயிர்கட்கு இந்தச் சத்திகள் இல்லை` என்று கருதிவிடுதல் கூடாது). எனினும், உயிர்கட்கு அவற்றின் வினைப்பயன்களை ஊட்டுவிக்கின்ற சிவன் செயற்படுத்தவே இச்சத்திகள் செயற்படும். ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் அவைகளே தனி நின்று செய்யும் செயல்கள் ஆகாது, அவற்றுள் உயிர்க்கு உயிராய் நிறைந்து நிற்கும் சிவன் செயல்களே ஆகின்றன.

குறிப்புரை :

இவ்வாற்றால், `ஒன்றேனும் நம் செயல் அன்று; எல்லாம் சிவன் செயலே` என்று உணரப்பெறுவதே தம்மையுணர்ந்து, பின் தலைவனை உணர்தலாகும்.
``சீவனும் இச்சா ஞானக்
கிரியையால் சிவனை ஒப்பன்
ஆவன்என் றிடின் அனாதி
மலம்இவற் றினை மறைக்கும்;
காவலன் இவன்செய் கன்மத்
தளவினில் கொடுப்பக் காண்பன்;
பாவியாம் புத்தி முத்திப்
பயன்கொளும் பண்பிற் றாமே``
-சுபக்கம் - சூ. 1 . 64.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளைக் காண்க. ``உயிர்க்கு அறிவு`` என்பதை, `உயிருக்கு உள்ள அறிவு` என விரிக்க. ``உயிர்க்குக் கிரியை`` என்பதும் அத்தகைத்து. உண்மையை உணர்த்துவதை ``உண்மை`` என உபசரித்தார்.
அபிமானம், `மானம்` எனப்பட்டது. `பற்று` என்பதே பொருள். உயர்தல், எண்மிகுதல். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். பின்னும் அஃது இருமடியாகுபெயராய், அவற்றைக் கொண்டு செய்யப்படும் செயல்களை உணர்த்திற்று. `ஊட்டுதல்` இரண்டில் முன்னது, `வலுப்படுத்துதல்` என்னும் பொருளது. பின்ன -தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``உள்ளத்துளான்`` என்பதன்பின், `செயல்` என்பதுசொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், மேல், ``தன்னை யறிந்து சிவனுடன் தானாக`` என்றது பற்றி, அங்ஙனம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு)
அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.

பொழிப்புரை :

`கிரியை, இச்சை, ஞானம்` என்பன சிவனுக்கு என்றும் இயல்பாகவே விளங்கி நிற்கின்றன. `உயிர்கட்கோ` எனின், அவை அனாதியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுப் பின்பு சிவனால் கூட்டப் பெறுகின்ற சுத்தமாயை அசுத்த மாயைகளின் காரியங்களில் அவை சிறிதே விளங்குகின்றன. சிவன் இந்த மாயைகள், அவற்றின் காரியங்கள், ஆணவம் ஆகிய அனைத்தையும் கடந்து, நிலைத்து நிற்பதாகிய துரியாதீத நிலையில் இருக்கின்றான்.

குறிப்புரை :

`தொன்மை` என்பது விகுதி கெட்டுப் பகுதி மாத்திரமாய் நின்றது. தொன்மையானவற்றைத், ``தொன்மை`` என்றார். `சீவர்க்கு` என்னும் நான்கன் உருபுதொகுத்தலாயிற்று. கழிவற்ற - அழிவில்லாத; என்றும் உள்ளகாரணம், மாயைகள் காரியம் அவற்றினின்றும் தோன்றிய கருவிகள் சுத்த மாயை விஞ்ஞான கலருக்கே கருவியாய்ப் பயன்படும் என்க. இருள் போலுதலின் ஆணவத்தைப், `பாழ்` என்றார். சாந்த + அதீதம் = சாந்தாதீதம். சாந்தம் - அமைதி; என்றது துரிய நிலையை` பராவத்தையில் அதீதத்தை அடைந்தோர்க்கு மீட்சியில்லை ஆகையால் அதனை, `அழிவற்றது` என்றார்.
இதனால், சிவ சீவர்களது இச்சா ஞானக் கிரியைகளின் வேறுபாடு உணர்த்தப்பட்டது. இதனானே அவற்றை உடையவர்களது வேறுபாடும் தானே பெறப்படும். முன்மந்திர உரையிற் காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அஃது இனிது விளக்கப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 32

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.

பொழிப்புரை :

உணருமாற்றால் உணராதவர்களால், `இல்லை` என மறுத்துக் கூறப்படும் பொருளாய் உள்ளவனும், உணருமாற்றால் உணர்ந்தவர்களால், `உண்டு` என நிறுவப்படும் பொருளாய் உள்ளவனும், உலகின்கண், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகைப் பட்ட எல்லாப் பொருள்களிலும் ``அவையே தானாய்``க்* கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையைத் தான் எய்தாமையால் அவற்றின் வேறாய் உள்ளவனும் ஆகிய முதல்வனாம் சிவனை வாக்குக் குறிப்பிட முயலுமாயின் அதற்கு எட்டாத நெடுந்தொலைவில் உளன். இவ்வுண்மையை உயிர் எவ்வளவு விரைவாக அவ்வளவு விரைவில் அதன் உள்ளுயிராய் விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

``இல்லதும் உள்ளதுமாய்`` - என்பதை முதலிற் கொள்க. முதல் அடியில் சொல்லப்பட்ட இன்மை உண்மைகள் புலனாகாமை புலனாதல்களைக் குறித்து நின்றன. ``உண்மையுமாய், இன்மையுமாய்``8 என்று அருளிச்செய்ததும் இவ்விரு பொருளும் பற்றி என்க. `இல்லதும் உள்ளதும் ஆகிய யாவையும்` - என்க. ``ஆகியும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது சொல்லால் சொல்லுதலை, `சொல் சொல்லிடில்` எனக்கருவியே வினை முதல் போலக் கூறப்பட்டது. சொல், வாக்கு, அது நால்வகைத்தாதலை அறிக. வாக்குக்கள் சுத்த மாயாகாரியம் ஆதலின் அதற்கும் அப்பாற்பட்ட நிலையை `தூர அதிதூரம்`` என்றார். ``பாதாளம் ஏழினும் கீழ் சொள் கழிவு பாதமலர்``l ``சோதி மணிமுடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை``3 ``சொற்பதச் சொற்பதமும் கடந்துநின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை`` * என்னும் திருமொழிகளை உணர்க. அது, பகுதிப்பொருள் விகுதி. `உணர்தல், அவன் அருளால்` என்பது அறிக.
இதனால், முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் துரியா தீதனாயினும் எங்கும் நிறைந்து நிற்பவன் ஆதலின், அவனை உணரு மாற்றால் உணரின் உணரப்பட்டு நிற்பான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி
உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட
உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே
உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.

பொழிப்புரை :

சிவனது சத்தி (உயிர்கள் பக்குவம் எய்தாத பொழுது) அவற்றுக்கு உலகின்மேல் ஆசையை உண்டாக்குதலும், (பக்குவம் எய்திய பொழுது) அவற்றுக்கு அவ்வாசையைப் போக்குதலும் ஆகிய இரு செயல்களைச் செய்யும். (முன்னை நிலையில் திரோதான சத்தியாயும், பின்னை நிலையில் அருட் சத்தியாயும் அது நிற்கும். திரோதானசத்தி, `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும்) உயிருக்கும் உலக ஆசை நீங்கிய பொழுது அருட் சத்தி உயிரை அசத்தை விடுத்து சத்தினை நாடுதலில் விருப்பம் உண்டாக்கி, இவ்வாறு அதனுடன் என்றும் உடனாய் நிற்றலால்தான் உயிர் உலகப் பற்றினை ஒழித்து, மேலான வீட்டினைச் சேர்வதாகின்றது.

குறிப்புரை :

இம்மந்திரத்தில் பாடவேறுபாடு மிகுதியாய் உள்ளது. ``அருள்சத்தி``, வினைத்தொகை. மூன்றாம் அடியில் உள்ள ``உயிர்`` என்பதன்பின் நான்காம் உருபு விரிக்க.
இதனால், `பெத்த நிலையாகிய சகலாவத்தைகளும், முத்தி நிலையாகிய சுத்தாவத்தைகளும் சிவசத்தியாலே நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.

பொழிப்புரை :

`மலம்` எனப்படும் ஐந்தும் நீங்கப் பெற்றவர்களே சிவமாந்தன்மையைப் பெற்றார்கள். அவற்றுள் ஒன்று ஒன்று நீங்கப் பெற்றவர்களும், ஒருமலமேனும் நீங்கப் பெறாதவர்களும் நிலத்திற் பிறந்து, பின் சுவர்க்கத்திலும், நரகத்திலும், புகும் பகுதியினரேயாவர். ஆயினும், `இவ்விருவகை நிலைகளும் சிவனது கருணை காரணமாக அவனது சத்தியாலே நிகழ்வன` என்பதை அறிபவர் உலகத்தில் அரியர்.

குறிப்புரை :

ஒன்றிரண்டு மலங்கள் நீங்கப்பெறுதலாவது ஆணவம் தவிர ஏனைய மாயை கன்மங்கள் நீங்கப் பெறுதலாம். `அவர்கள் இயற்கையாயுள்ள பிரளயாகலர், விஞ்ஞானகலரா தன்மையர் ஆதலல்லது, சிவமாம் தன்மையைப் பெறாமையால், ஆணவ வலியால் மீண்டும் சகலர் நிலையை அடைதல் கூடும்` என்பதாம். ஆயினும் `இவ்இருவகையும் பக்குவ அபக்குவங்களை நோக்கிச் சிவனது அருட் சத்தியும், திரோதான சத்தியும் செய்யும் செயலேயாம்` என்பதும் `திரோதான சத்தியின் செயலும் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல்போலக் கருணை காரணமாக நிகழ்வதே` என்பதும் அறியத் தக்கன என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் சிவத்தினது ஞானத்தாலே என்பது தோன்ற அடைபுணர்க்கப்பட்டது. ஆகவே, `ஐம்மலம் தீர்ந்தவர் அந்த ஞானத்தைப் பெற்றுச் சிவம் ஆவர்` என்பதும், `ஐம்மலத் தீராதவர் அந்த ஞானத்தைப் பெறார் ஆகலின் சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆக மாட்டாது பிறப்பை எய்துவர்` என்பதும் போந்தவாறு அறிக. `பாரின்கண் பிறந்து` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `மலாவத்தை நீங்கப் பெறாதவர்க்குப் பிறப்பு அறாது` என்பதும், `மலாவத்தை நீங்கி நின்மலாவத்தையை எய்தினோரே பிறப்பற்றவர் ஆவர்` என்பதும் ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.

பொழிப்புரை :

ஏற்புடைய செயல்களை ஏற்குமாற்றால் செய்யும் இறைவனுடைய கருணை பரிக்கிரக சத்தியாகிய `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளின் ஆற்றலைக் கொண்டும், `மந்தம, தீவிரம்` என்னும் இருவகை அருட் சத்தியைக் கொண்டும், கன்மத்தின் வழியாக, `இன்பம், துன்பம்` என்னும் இரண்டை ஊட்டுகின்ற திரோ தான சத்தியைக் கொண்டும் அவ்வப்பொழுது ஏற்புடையவற்றைச் செய்யும்.

குறிப்புரை :

`எய்தினர்` என்பது பாடம் ஆகாமை அது பற்றி யெழுந்த உரைகளானேவிளங்கும். எய்தின - ஏற்புடையன. `எய்தின செய்யும்` என்பது, சொற்பொருட் பின்வருநிலை அணியாய்ப் பலமுறை வந்தது. ``செய்யும்`` நான்கில் ஈற்றில் உள்ளது எச்சம். ஏனையவை முற்று. இதனையும் முற்றாகக் கொள்ளின் இறையருள் எவ்வாற்றானும் ஏற்புடையனவே செய்யும்` என முடிக்க. இப் பொருட்டு ``இறையருள்`` என்பது மட்டுமே முதலிற் கூட்டத்தக்கது. அருள்காரணமாக இறைவன் செய்வனவற்றை அருளே செய்வன போலக் கூறினார். `பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து` என்றாற்போல. ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. தான், அசைகள். ஞால சத்தி - ஞாலத்தை நடத்தும் சத்தி. ஞானசத்தி, ஞாலசத்தி இரண்டும் தாதான்மியமாய் உள்ள ஒரு சத்தியின் வகையேயாம். மந்ததரம் மந்தத்திலும், தீவிரதரம் தீவிதத்திலும் அடக்கி இரண்டாகக் கூறப்பட்டன.
இதனால், முன் மந்திரத்தில், ``ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே`` எனக் கூறியது இவ்வாற்றால் என விளக்கு முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

பொழிப்புரை :

ஆணவ மலத்தால் வளைக்கப்பட்ட கோணல் நீங்கி நேரான நிலையை அடைந்தோர் சிவமே ஆயினமையால், சுவர்க்கத்தை விரும்புதல், நரகத்திற்புகுதல், மாயை கன்மங்களின் குழாத்துள் இருத்தல், அவற்றால் பிறந்து இறந்தும், இறந்துபின் பிறந்து உழல்வதாகிய பயனில் செயல்களை உடையராதல் ஆகிய இவை அனைத்தையும் விட்டு நலம் பெற்றார்கள்.

குறிப்புரை :

`திருந்தனர்` என்பது எங்ஙனம் பாடம் ஆயிற்று என்பது தெரியவில்லை. ``திரு`` என்றது இன்பத்தை - இன்பம் இன்மை, துன்பம் உண்மையைக் குறித்தது. ``திருந்தினர்`` என்பவற்றோடெல்லாம், ``சிவமாய்`` என்பதனைக் கூட்டி, `விட்டார்` என முடிக்க. சொற்பொருட் பின்வரு நிலைஅணி. `திருந்தியது முன் மந்திரத்திற் கூறிய ஞான சத்தியால்` என்க.
இதனால், மேற்கூறிய இறையருட் செயலால் உயிர்கள் அடையும் முடிநிலைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன்அரு ளாமே.

பொழிப்புரை :

அவம் - பயன் இன்மை. பயனாவது நன்மையே, எனவே, ``அவம்`` என்றது, `நன்மை இன்மை` என்றபடி. அது தீமை உடையதாகவும் இருக்கலாம். சிவம் - நன்மை.
பகுத்தறிவில்லாதவர், `இஃது அவம், இது சிவம்` எனப்பகுத் துணர மாட்டார். (ஆகவே, `அவர் அவத்தைச் சிவமாக எண்ணி, அதனைப் பற்றிக்கொண்டு உழல்வர்` என்பதாம்). பகுத்தறி வுடையவர் அவற்றை நன்கு பகுத்துணர்வார். (ஆகவே `அவர் அவத்தை விடுத்துச் சிவத்தைப் பற்றி நன்மையடைவர்` என்பதாம்). பகுத்தறிவு திருவருளால் வாய்ப்பது. அங்ஙனம் வாய்க்கப்பெற்று, அவத்தினையும், சிவத்தினையும் உள்ளவாறு உணர்ந்தால், பகுத்தறிவு இல்லாத பொழுது, `உயிர் அவத்தில் உழன்றதும் சிவனது அருளால்தான் பின்பு அதனைவிடுத்துச் சிவத்தைப் பற்றியதும் சிவனது அருளால்தான் என்பது அனுபவமாய் விளங்கிவிடும்.

குறிப்புரை :

`அறிவு, அறிதல்` என்பன பகுத்தறிவையும் பகுத்தறிதலையுமே குறத்தமை, `அவமும், சிவமும்` என்றதனால் விளங்கும். `பகுத்தறிதற்கு அங்ஙனம் அறியும் அறிவு வாய்ப்பது திருவருளால்` என்றற்கு, ``அருளால்`` என்றே கூறிப் போயினா ராயினும், `அருளால் பெற்ற அறிவால்` என்பதே கருத்து. அவமும், சிவமும் அவன் அருளாதல் விளங்கும்பொழுது, `முன்னையது பக்குவம் இன்மையின் அது வருதற்பொருட்டு இயற்றப்பட்டது` என்பதும் விலங்கும் என்பது கருத்து. அவம், மலாவத்தைகளும், சிவம், நின்மலாவத்தைகளும் ஆகும்.
இதனால், `நின்மலாவத்தையே பயனுடையதாம்` என்பதும், `அது திருவருளால் நிகழும்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 38

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.

பொழிப்புரை :

[`சிவன் அருள்` என்றும், `சிவனது சத்தி` என்றும் சொல்லப்படுவது ஒருபொருளேயாகும். அதனால்,] அருளாகிய சத்தி, தீ பொருளாய் இருக்க, சூடு அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றியிருத்தல்போல, சிவம் பொருளாய் இருக்க, தான் அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றி யிருக்கும். அங்ஙனம் இருக்கும்பொழுது அறிவாகியேயிருக்கும். (இது சத்தியின் `உண்மை` எனப்படும் சொரூபம்) அதுவே, `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும் மலங்களாயும் நின்று (உயிர்கள் சிவனை அறியாதபடி மறைக்கும். இந்நிலையில் அது, `திரோதனகரி, திரோதாயி` - என்னும் பெயர்களைப் பெறும். இஃது அதன், `பொது` எனப்படும் தடத்தம்) பின்பு அதுவே தனது உண்மையான அருளாகும்பொழுது, சிவன் உயிர்களுக்கு முன்போல மறைந்து நில்லாமல், இனிது விளங்கும் பொருளாய்த் திகழ்வான்.

குறிப்புரை :

``அருளது சத்தி யாகும் அரன்றனக்கு; அருளை யின்றித்
தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம்இன்றிச் சத்தியில்லை``l
``ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினைச் செய்ய ஏவும்
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
ஆய்வர்``8
என்னும் சிவஞான சித்தியையும்,
``முயங்கி நின்று - (மலம்) பாகம் உற உதவு
திரோதாயி ஒன்று``
``நேராதல் மருவுங்கால், முன்
சினமருவு திரோதாயி கருணையாகித்
திருந்திய சத்தி நிபாதம் திகழும் அன்றே``3
என்னும் சிவப்பிரகாசத்தினையும் காண்க.
`போதமாய்` என ஆக்கம் விரிக்க. ``இருள் ஒளியாய் ஈண்டும் மும்மலம்` என்றது, `இருளுக்கு ஒளிவந்து பொருந்துதலால், அதற்கு மேலும் கூடுகின்ற மும்மலங்களாய் நிற்கும்` என்றவாறு இருள் - ஆணவம். நான்காவது தொகுத்தலாயிற்று. `இருளுக்கு ஒளி` என்பதைப் ``பிணிக்கு மருந்து``3 என்றது போலக் கொள்க. `ஒளியாவது மாயை` என்பது வெளிப்படை. ஆய் - ஆதலால். ஆதல் - பின்பு வந்து சேர்தல். ஈண்டுதல் - திரளுதல். எனவே, அவை கன்மம் ஆயின. மலங்களை ஏவுதலால், சத்தியமே மலமாக எண்ணப்பட்டது. `திருவருள் ஆக` என்பது கடைக்குறைந்து நின்றது. `திருவருளால்` என்பது பாடமாயின், `அது திருவருள் ஆக, அதனால்` என உரைக்க. நந்தி - சிவன்.
`சத்தி புணரும்; முன் மந்திரத்தில் சுட்டப்பட்ட அருளின் நிலைமையெல்லாம் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 39

ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.

பொழிப்புரை :

`படைக்கும் சத்தி, காக்கும் சத்தி, அழிக்கும் சத்தி` என இவ்வாறு சத்திகள் வேறு வேறாகச் சொல்லப்படினும், உண்மையில், அவை அனைத்தும ஒரு சத்தியின் பேதங்களே. அஃது எவ்வாறெனி ல் பூக்கள் அனைத்தும் ஒரு நிலையையே அடையாமல் பல நிலைகளை அடைகின்றன. (சில அரும்பாகவும், சில போதுக ளாகவும், சில மலர்களாகவும்,சில வாட்லகளாகவும் ஆகின்றன) அந்த வேறுபட்ட நிலைகள் அனைத்திற்கும் ஏற்பச் சூரியனது கதிர்கள்` என்னும் வகையில் ஒன்றேயாவது போல்வதாம்.

குறிப்புரை :

சிவசத்தியின் வேறுபாடு `பிறவற்றை நோக்கிய வேறுபாடேயன்றித் தன்னிலே வேறுபட்ட வேறுபாடு அன்று` என்பதாம். ``அருட் பேதம்`` என்பதை முதலில் வைத்து, ``பேதித்துப் பேதியாவாறு`` என முடிக்க. ``தம்`` என்பதனை, ``செயல்`` என்பதனோடும் கூட்டுக. ``வினை`` என்பது, அது நிகழ்தற்கு ஏதுவாகிய பக்குவத்தைக் குறித்த ஆகுபெயர். ``பேதிப்ப`` என்பதில் உள்ள `பேதித்தல்` என்னும் செயலின் வினை, செயலையுடைய பதுமாதிகள் மேல் ஏற்றப்பட்டது. சேட்டித்தல் - செயற்படுத்தல். ``ஆதித்தன்`` இரண்டில் பின்னது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பேதித்துப் பேதியவாறு`` என்னும் பயனிலைக்கு. `அக்கதிர்கள்` என்னும் எழுவாய் வருவிக்க.
`அருட் பேதம், ஆதித்தன் தோன்றப் பது மாதிகள் செயல் பேதித்து நிகழும்படி அவனது கதிர்கள் செயற்படுத்துமிடத்து அக்கதிர்கள் பேதித்தும் பேதியாவாறு` என வினை முடிவு செய்க.
இதனால், முன் மந்திரத்தில் சத்தி பலவாதல்போலக் கூறப் பட்டமை பற்றி, `சத்திகள் பலவோ` என எழும் ஐயம். `சத்தி செயல் பற்றிப் பலவாகச் சொல்லப்படுகின்றதேயன்றி, உண்மையில் பலவன்று. `ஒன்றே` எனஅபதை உவமையால் கூறித் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே.

பொழிப்புரை :

`சிவனது அருள்` எனப்படும் சத்தி, உலகுயிர் களோடு பொருள் தன்மையால் வேறாய் நின்று அவற்றை அறிவித்தும், இயக்கியும் நிற்றல், அவ்வாறு நிற்பினும் தான் அவற்றின் வேறாய்த் தோன்றாது ஒன்றேயாய் நிற்றல் என்னும் இவ்வகைகளால் ஒரு வகையில் பேதமாயும், பிறிதொரு வகையில் அபேதமாயும் இருத்தலும், மலங்களை நீக்குதலால் உயிர்களின் அறிவை விளக்கு தலால் அறிவாயும், மலங்களைச் செலுத்துதலால் அவற்றின் அறிவை மறைத்து அறியாமையாயும் இவ்வகைகளால் ஒருவகையில் அறிவாயும், பிறிதொரு வகையில் அறியாமையாயும், நாதத்தை எழுப்புதலால் நாத மாயும், அதனை ஒடுக்குதலால் நாதம் இல்லதாயும் இவ் வகை களால் ஒரு வகையில் நாதமாயும், பிறிதொரு வகையில் நாதம் இல்ல தாயும் இவ்வாறெல்லாம் பேதப்பட்டு நிற்றல் அதன் இச்சையாலேயாம்.

குறிப்புரை :

இம்மந்திரத்துள் இரண்டாம் அடியில் பாடம் பெரிதும் திரிபு பட்டுள்ளது. மற்றும் திரிபுகள் உள. ``பேதா பேதம், போதா போதம், நாதாநாதம்`` என்பன அன்மொழித் தொகையாய், `இரண்டும் அல்லாத வேறொன்று` எனப்பொருளஅ தாராமல், உம்மைத் தொகையாய் இரண்டையும் குறித்துநின்றன. நாதம் - மொழி. ``அருள்`` இரண்டில் பின்னதை முதலிற்கூட்டி, ``அருளின்`` என்பதற்கு, `அதன்` எனப் பொருள் உரைக்க. அருளையுடைய சிவனது இச்சையை ஒற்றுமை பற்றி அருளது இச்சையேயாகவும், இச்சைப்படி நிகழ்வனவற்றை இச்சையாகவும் உபசரித்துக் கூறினார்.
இதனால், `சத்தியினது பேதங்கள் அது தானாகவே ஆக்கிக் கொள்வன அன்றிப் பிறிதொன்றால் ஆக்கப்படுவன அல்ல` என்பது கூறப்பட்டது. `சத்திதான் பலவோ என்னில், தான் ஒன்றே. அனேகமாக வைத்திடும், காரியத்தால்` என்பது சிவஞான சித்தி.l

பண் :

பாடல் எண் : 41

மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.

பொழிப்புரை :

மனிதன் ஒருவன், யானைபோலப் பொய்யாகச் செய்யப்பட்ட பொறியினுட் புகுந்து மறைந்து கொண்டு, அதனை உயிருடையது போலப் பலவகையில் இயங்கச் செய்யும் செயல்போல, அருள் மாயையின் காரியமாய்ப் பரந்து விரிந்த உலகினுள் மறைந்து நின்று அதனைப் பலவகையாக இயங்கச்செய்து, அதனானே உயிரினது அறிவைப் படைத்தல் முதலிய தொழில்களால் பலவாறாக விளங்குவித்து, அவ் இயக்கத்துட்பட்டு அலமரச் செய்யும். `அருள்` எனப்படுவது சிவனது அருளே.

குறிப்புரை :

கரி - யானை. அதனை ஆட்டுதல் வினைக்கு வினை முதல் ஆற்றலால் பெறப்பட்டது. `பொய்யானையின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே எண்ணிச்சிறுபிள்ளைகள் பலவகை உணர்ச்சிகளை அடைதல்போல, உலகத்தின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே கருதி, அறிவில்லாதவர் பலவகை உணர்ச்சிகளை எய்துகின்றனர்` என்பது உவமையால் போந்த பொருள். அத்தகைய உணர்ச்சிகளைத் தோற்றுவித்தலையே, ``போதம், புரிந்து`` என்றார். ``அருள்`` என்பதை முதலிற்கூட்டுக. ``பூதம்`` என்பது உபலக் கணத்தால் `பூதம் முதலியவை` எனவும், `பூ` என்பது, மண் முதலியவை` எனவும் பொருள் தந்தன. `படைப்பாதியால்` என உருபு விரிக்க. ``இயல் கூட்டத்தால்`` என்றாரேனும், `கூடிய இயலால்` என்பது கருத்து. இயல் - இயலல்; இயங்குதல். முதனிலைத் தொழிற்பெயர். `அஃது அரன் அருளாமே` என, எழுவாய் வருவித்துரைக்க. இதனை எடுத்துக் கூறியது, `பிறகடவுளரது அருள்கள் அல்ல` என்பது உணர்த்தி, `அவர்களது செயல்களும் அரன் அருளே` என வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், `எல்லாம் திருவருட்செயலே` என்பது விளங்காமை அறியாமையால் என்பகு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.

பொழிப்புரை :

`தத்துவம் முப்பத்தாறினுள் ஒன்றேனும் தான் அல்லன்` எனத் தெளிந்து, அவைகளை, `தான்` என மயங்கும் மயக்கத்தினுள் நீங்கினவன் எவனோ அவனே, அவற்றிற்கு வேறாகி, மேலே உள்ள பரவெளியை அடைந்து வீடு பெற்றவனாவன் அந் நிலையில் முன்பு இருந்த மயக்கம் நீங்கித் தெளிவு பெற்று, எளிதில் அணுக இயலாத சிவத்தை அடைந்து அதுவேயாவன், அதுவே அவன் அடையவேண்டிய இறுதி நிலையாகும். அந்நிலையில் சிவனைப்போல இவனும் வியாபகமாய், ஏனை எல்லாப் பொருள்களும் தன்னில் வியாப்பியமாய் நிற்க விளங்குவான்.

குறிப்புரை :

``ஆகி எய்த`` என்றது, `ஆகி எய்துதற் பொருட்டு` என்றது ஆகலின், அஃது இறுதியில் வைத்து உரை கூறப்பட்டது ``வீடு`` என்றது, வீட்டின்பத்தை. தேறா - தேறி. மருள்தேறுதலாவது, மருளின்றும் நீங்கித் தெளிவையடைதல். பின்னும், ``தெளிவுற்று`` என்றது, `அத்தெளிவு நிலைபெறப் பெற்று` என்றபடி. தீண்டாச் சிவம் - பற்றுதற்கரிய சிவம்.
இதனால் மேல், `திருவருள் செய்வனவாகச் சொல்லப்பட்ட செயல்களில் இறுதியாக உயிர் பயனடைதல், இவ்வாறான நின்மலாவத்தையில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொழிப்புரை :

அடைதற்கரிய சிவபத்தியைப் பொதுவாகத்தான் அறிந்த முறையில் அடைந்து ஒழுகிய ஒருவன் பின்பு கிரியா குருவின் அருளால் சிறப்பாக அதனை அடைந்து, அவர் அறிவுறுத்த முறை யிலே சிவதன்மத்தில் ஒழுகிச் சிவயோகத்திலும் பயின்று, அதன் பயனாகப் பின்பு சிவஞானமாகிய யானையின்மீது ஏறிச் செலுத்தி, மும்மாயை களையும் தாண்டிச் சென்று, அப்பால் உள்ள சிவனோடு கூடுதலும் கூடும்.

குறிப்புரை :

``மீண்டு உற்று`` என்றதனால், முன்பு ஒரு முறை உற்றிருந்தமை பெறப்பட்டது. நூல்வழியாகவும், காட்சி வழியாகவும் அவரவர் தாம் தாம அறிந்தவாற்றால் சிவ பத்திகொண்டு சிவதன்மங் களில் ஒழுகுதலால் வரும் சிவபுண்ணியம், பொதுச் சிவபுண்ணியமும், குரு அருளால் அறிந்து அவற்றில் முறைப்படி ஒழுகுதலால் வரும் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியமும் ஆகும். பொதுச் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியத்தைத் தர உண்மைச் சிவ புண்ணியமே உண்மைச் சிவ ஞானத்தைத் தரும். உண்மைச் சிவ ஞானமே சிவமாம் தன்மையைப் பயக்கும். இம்முறையையே இம்மந்திரம் கூறுமாறு அறிக.
சரியை, கிரியை இரண்டும் `சிவ தன்மம்` என ஒன்றாகவும் சொல்லப்படும் என்பதை,
``நல்லசிவ தன்மத்தால், நல்லசிவ யோகத்தால்,
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்``*
என்னும் திருக்களிற்றுப்படியாரால் விளங்கும்.
`நேயத்தை அருளால் மீண்டு உற்றுச் சென்று ஏறித்தூண்டித் தாண்டிச் சாரலும் ஆம்` என வினைமுடிக்க. `மா` என்பது காட்டு விலங்குகள் அனைத்திற்கும் பொதுவான பெயர். `பாய்மா, பரிமா` என்பன குதிரையைக் குறிக்கும் சிறப்புப்பெயர். `அரிமா` என்பன சிங்கத்தைக் குறிக்கும் சிறப்புப் பெயர். `கைம்மா` என்பது யானையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். எனவே, இங்கு, `மா` என்னும் பொதுப்பெயர், இடம் நோக்கிக் கைம்மாவைக் குறித்தது. அது, ஞானம், எவ்விடத்திலும் யானையாக உருவகப்படுத்துதலே மரபாதலால் விளங்கும். உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால், `தவம், ஞானம்` என்னும் இரண்டுமே குரு வருளால் எய்தற்பானவாய், ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``சிவனுடன் சாரலும் ஆமே`` எனக்கூறிய சார்ச்சி, `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என நால்வகைப் படுதலால், அவ்வம்முறையால் சிவனைச் சார்ந்தவர் முறையே. `சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர்` என நிற்பர். எனினும் இறுதியில் சொல்லப்பட்ட சமாதியரே சிவானந்தத்தை அடைந்தவர். அவரே நிலையான அருள் தன்மையைப் பெற்றவரும் ஆவர்.

குறிப்புரை :

சாரணர் முதலிய மூவரும் சிவலோகத்தில் இருக்கும் நிலைபற்றி அப்பெயர்களால் கூறப்பட்டன. சாரணர் - எங்கும் சென்று உலாவி வருபவர். `ஒருவர் இல்லத்தில் பணி புரியும் பணியாளர் அவ் இல்லத்தில் எங்கும் செல்லும் உரிமையுடையர் ஆதல்போலச் சிவ லோகத்தில் எங்கும் செல்வபர்` என்றபடி. இதுவே `சாலோக பதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் சரியைத் தொண்டு, `தாச மார்க்கம்` அல்லது, `தொண்டர் நெறி` எனப் பட்டது. சித்தர் - சிறப்புப் பயன் கிடைக்கப் பெற்றவர். `சிவ லோகத்தில் சிவனுக்கு அணுக்கராய் இருக்கும் சிறப்புரிமை பெற்றவர்` என்றவாறு. இதுவே `சாமீபபதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகைத்தாதல் பற்றியே இதனைத் தரும் கிரியைத் தொண்டு, `சற்புத் திரமாரக்கம்` அல்லது `மகன்மை நெறி` எனப்பட்டது. சமாதியர் - சிவனுக்குச் சமமானவர். `சிவலோகத்தில் சிவனது உருவத்தைப் போன்ற உருவத்தையே பெற்றிருப்பவர்` என்றபடி. இதுவே `சாரூப பதவி` எனப் படுகின்றது. இப்பதிவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் யோகப் பயிற்சி, `சகமார்க்கம்` அல்லது `தோழமை நெறி` எனப்பட்டது. இவை மூன்றுமே பத முத்திகளாம். சாத்தியர் - சாத்தியத்தை, அஃதாவது தமது கிறிக்கோளை அடைந்துவிட்டவர். இவரை ``மெய்ஞ்ஞான தத்துவர்`` என எடுத்துக்கூறியதனால், `முன் சொல்லப்பட்ட மூவரும் மெய்ஞ்ஞானத்திற்குரிய படிகளில் நின்றவர்` என்பது பெறப்பட்டது. குறிக்கோள், சிவனோடு இரண்டறக் கலந்து, மீண்டுவாரா நிலைமையில் இருத்தல். அந்நிலையே ஆனந்த நிலையுமாம் ஆதலின், ஆனந்தத்தைப் பெறுதலும் குறிக்கோளாயிற்று. ``சத்த அருள்`` என்பது, `வெண்மைய ஆடை` என்பதுபோல வினைக் குறிப்பு பெயரெச்சத்தொடர் `தத்துவம்` என்பதபல பொருட்கட்கு உரியதாகச் சொல்லப்படுதலால், இங்குச் சொல்லப்படும் தத்துவம், `மெய்ஞ் ஞான தத்துவம்` என்றார். `மெய்ஞ் ஞானமாகிய தத்துவம்` என்றபடி. `முன் மந்திரத்திற் சொல்லிய சார்ச்சி வகையை உடையவர் நால்வகையினர்` என்றற்குச் ``சார்ந்தவர்`` என்பதை எழுவாயாக வைத்துக் கூறினார். சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இங்குக் கூறிய சமாதி, `அநாதிக்குச் சமமாக எண்ணப்படும் ஆதி` என்க.
இதனால், `சிவனைச் சாருமுறையும், அம்முறைகளால் அடையும் பயன்களும் நால்வகையினவாம்` என்பது உணர்த்தும் முகத்தால் `இறுதியிற் கூறிய பயன்நின்மலாவத்தையாலே உளதாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

பொழிப்புரை :

(உண்மையுணர்ந்தோர்) `அறிபவனும், அறியப் படுபவனும் - என உள்பொருள் இரண்டு` எனக்கூறுவர் ஆயினும் அவ்விரண்டு பொருளும் எஞ்ஞான்றும் வேறுநில்லாது உடலும், உயிரும் போல ஒன்றாகியேயிருத்தலால், பாசமாகிய அசுத்தத்தின் நீங்கினோர், அறியப்படுபவனை யறிதலோடு அறிபவனையும் அறிதலாகிய இரண்டறிவையுடையராகாது, அறியப்படுபவனை மட்டுமே அறிதலாகிய அந்த ஓர் அறிவை மட்டுமே உடையவராய் இருப்பர் அவ்வாறிருத்லே நிறைவான சுத்த நிலையாகும்.

குறிப்புரை :

உடலும், உயிரும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விரண்டனுள் ஒன்றே உள்ளது; மற்றொன்று இல்லை` எனக் கூறுதல் அறியாமையுடையாரது கூற்றாதல்போல, அறிவானும், அறியப்படுபவனும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விருவருள் ஒருவனே உளன்; மற்றொருவன் இல்லை` என்றல் அறியாமை யுடையவரது கூற்றாய்விடும் - என்பது உணர்த்துதற்கு. ``தான் என்று, அவன் என்று தத்துவம் இரண்டு என்பர்`` எனவும், `ஆயினும், அறிபவனது அறிவை அறியப் படுபவனிடத்தே நிலைத்து நில்லாத -வாறு அகற்றி, `தான்` என்றும், இவ்வாறெல்லாம், `யான், எனது - பிறர், பிறரது` என மயங்கி உழலச் செய்வது மல சத்தியேயாகலின் அச்சத்தி முழுவதுமாக நீங்கப் பெற்றவர் அங்ஙனம் பலதலைப்படும் அறிவுடையராகாது, `அவனே` என அறியும் அந்த ஒருதலைப்பட்ட அறிவையே உடையராய் இருப்பர்` - என்பது உணர்த்துதற்கு ``கேவலத்து ஆனவர்தான் என்று இரண்டு உன்னார்`` எனவும், அவ்வாற்றால், அறிபவன் அறியப்படுபவனேயாய் நிற்றலே மலம் முழுவதுமாக நீங்கிய நிறைவான சுத்த நிலை - என்பது உணர்த்துதற்கு, ``தான் இன்றித் தான் ஆகத்தத்துவ சுத்தமே`` எனவும் கூறினார்.
ஈற்றடியில் உள்ள ``தான்`` இரண்டில் முன்னது அறி -பவனையும், பின்னது அறியப்படுபவனையும் குறித்தன. தன்மையை என்பது பாடம் அன்று ``கேவலம்`` என்றது. கலப்பின் நீங்கி நிற்றலைக் குறித்தது. ``தத்துவம்`` இரண்டில் முன்னது, `உள்ளது, என்றும், பின்னது `உண்மை` என்றும் பொருள் பயந்தன. ``சுத்தம்`` என்பதன் பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. ஏகாரம் தேற்றம். உண்மைச் சுத்தத்தை அதைற்குச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. அதனுள்ளும் சிவயோக நிலையே இங்கு வலியுறுத்தப்பட்டது. மெய்கண்ட தேவரும் இவ்வாறே,
``நான் அவன்என்(று) எண்ணினர்க்கும் நாடும் உளம் [உண்டாதல்,
தான்எனஒன்(று) இன்றியே, தான் அதுவாய் - நான்என ஒன்(று) இல்என்று தானே எனும்அவரைத் தன்அடிவைத்(து)
இல்என்று தான்ஆம் இறை`` l
என அருளினமை காண்க.
இதனால், நின்மலாவத்தையின்றிப் பராவத்தையை எய்துதல் கூடாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.

பொழிப்புரை :

(`என்னை உடையானாகிய தலைவன் எங்குளன்` எனப்புறத்தே பலவிடத்துத் ``தேடியும் தேடொணாத் தேவனாய்`` உள்ள சிவனை, `இனி என்னுள்ளேதான் நான்தேட வேண்டும்` என உணர்ந்து, அவ்வாறே) அவனைத் தன்னுள்ளே அறிய முயல்கின்ற பெருமகன் அம்முயற்சியில் உறைத்து நிற்பனாயின், அவனைத்தான் அடைந்துவிடுவான். அம்முறையில் அவன் தன்னுள்ளே தேட முயலாது, புறத்திற்றானே தேடிக் கொண்டிருப்பானாயின், அவன் சிவனைத் தன்னுள்ளேயும் அடைதற்கு அறியவனாகியேயிருப்பான்.

குறிப்புரை :

`சிவனைப் புறத்தே தேடாது தன்னுள்ளே தேடி அடைவதுதான் நின்மலாவத்தை` என்பது குறிப்பு.
``தேடிக் கண்டுகொண்டேன்;திர மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்``* என நாவரசர் அருளிச்செய்தமையை இங்கு உன்னி உணர்க. மற்றும் அவர் இத்திருமந்திரத்தை ``முன்னோர் மொழி பொருளேயன்றி, அவர்மொழியும் - பொன்னேபோல்போற்றும்`` வகையில் (நன்னூற் பாயிர உரைமேற்கோள்) தமது `சித்தத் தொகை`த் திருக்குறுந்தொகையில் எடுத்தருளிச் செய்தமையும் உணரற்பாற்று. இதனானே, உண்மைப் பாடங்களும் சில விளங்கும். யாப்புக்கேற்பன கொள்ளப்படும். எனவே முன்பு, ``தேடிக் கண்டுகொண்டேன்`` என்னும் திருப்பாடலும் இதனையே இனிது விளக்கியதாயிற்று. ``தன்னினில்`` என்பவற்றில் இன்னுருவோடு ஒத்த இல்லுருபு இன் சாரியை பெறுதல் சிறுபான்மை இலேசினால் கொள்ளப்படும்.l உம்மையை மாற்றிவைத்துரைக்க.
இதனால், நின்மலாவத்தையே சிவனை அடையும் வழியாதல் வயியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகிய இயற்றவல் லானும்
ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.

பொழிப்புரை :

மாணவகனே, குருவருள் பெறாத மற்றவர் -களைப்போல நீயும் இராக் கதிரிபோலச் சிறிதறிவைத் தருபவனாயும், பகற் கதிர்போலப் பேரறிவைத் தருபவனாயும் இருந்து எல்லா வற்றையும் செய்கின்ற சிவனைப் புறத்தெல்லாம் தேடி, `ஐயோ!` சிவனைக் காணமுடியவில்லையே` என்று கதறி அழாதே. ஏன் எனில், அவனை அகத்தே அறிதலாகிய அந்த நெறியைப் பற்றி, அதிலே சென்ற பொழுது அவன் எனக்குக் கிடைத்தான். அதன்பின் அவன் முன்போல இருசுடராய் இல்லாமல் பகற் கதிராகிய ஒரு சுடரேபோலத் தோன்றி, அந்நிலையினின்றும் மாற்றம் சிறிதும் இன்றி, என் உள்ளத்துள் நீங்காதிருக்கின்றான்.

குறிப்புரை :

`நீயும் அந்நெறியிலே சென்றால் தவறாமல் அவனை அடைவாய்` என்பது குறிப்பெச்சம். `அகத்தே அறியும் நெறியே நின்மலாவத்தை` என்பது மேலே குறிக்கப்பட்டது. ``வழியே`` என்றது, `பிறழாது பற்றி` என்றபடி. ``நேர்பட்ட பின்னை`` என்ற அனுவாதத்தால், நேர்பட்டமை தானே பெறப்பட்டது. உம்மை சிறப்பு. சிறிதறிவைத் தருதல் திரோதான சத்தியால், பேரறிவைத் தருதல் அருட்சத்தியால். இவையே பெத்த முத்தி நிலைகளாம். ரகாரவகையால் எதுகை ஒன்றிற்று.
இதனால், நின்மலாவத்தையை எய்தாது வருந்தும் மாணாக்கன் மேல் இரக்கங்கொண்டு, அதனை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.

பொழிப்புரை :

குடம், சால், சாடி முகலாகக்கலங்கள் பல வகையால் இருப்பினும் அவை அனைத்திலும் ஒருமண்ணே பொருந்தியிருத்தல் போலப் பிறப்பு வகையால் உயிர்களின் அறிவு பல்வேறு வகைப்பட்டிருப்பினும் ஒரு பேரறிவாகிய சிவன் அவை அனைத்தின் அறிவினுள்ளும் இருக்கின்றான், அங்ஙனமாயினும், கண் எல்லாப் பொருளையும் பார்க்க. பார்க்கப்பட்ட பொருள்கள் கண்ணைப் பாராததுபோல, அறிவுக்கறிவாய் உள்ள சிவன் அனைத்துயிர்களையும அறியினும் அவ்வுயிர்களுள் ஒன்றேனும் அவனை அறிதல் இல்லை.

குறிப்புரை :

இதனுள் முதலிற்போந்த உவமை, ஒருவனே பலவற்றில் இருக்கும் அளவிற்குக் கூறிய ஒருபுடை எடுத்துக்காட்டு உவமை. மற்றுக் காரிய காரணங்களைப் பற்றியதன்று. `பலவற்றை` என உருபு விரிக்க. `குடம் முதலியனை கண்ணைக் காணாமை மட்டும் அன்று; தம்மையும் மட்டும் அன்று; தம்மையும் தாம் அறிவதில்லை` என்பதனையும் பின்னர்க் கூறிய உவமையால் உடன்கொள்க.
``காட்டிய கண்ணே தனைக்காணா, கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான்; உள்ளத்திற் காண்``l
``காணொணா கர ணங்களுக்குயிர்
கண்டி டாமையின் இன்றெனின்,
காணுமோ கடம் கண்ட கண்ணினைக்
கண்டு நிற்பதும் கண்ணதே``8
எனவும் போந்த சாத்தர மொழிகளைக் காண்க.
``ஒருவனே`` என்பதன் பின் `அறிவாய் உளன்` என்பது வருவிக்க. உள்நின்ற - உலகத்துள் நின்ற யோனிகள். ஆகுபெயர். வண்ணம் - நிலைமை. நிலைமையனை `நிலைமை` என்றதும் ஆகுபெயர். ``அண்ணலும்`` என்னும் உம்மை, உவமையைத் தழுவிநின்ற எச்ச உம்மை.
இதனால், `மேற்கூறியவாறு ஒருவனே எல்லா உயிர்களின் அகத்திலும் நிற்றல் எங்ஙனம்` என்னும் ஐயம் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.

பொழிப்புரை :

ஏழுலகத்தில் உள்ள உயிர்களையும் சிவன் ஒப்ப நோக்கித்தான் அவற்றின் உள்நின்று காத்து வருகின்றான். (என்றாலும், சிலரே அதனை யுணர்ந்து, ஏனையவற்றைப் பற்றாது விடுத்து அவனிடத்திலே சென்று அடங்குகின்றனர். அங்ஙனம் அடங்கினவர்கள் சிவனது எண்குணங்களையும் தாங்களும் உடையவராவர். பலர் அவ்வாறு உணர்ந்து சிவனை அடைதல் இல்லை. அங்ஙனம் அடையாதவர்கள் உலகியலில் சிக்கித் துன்புறுகின்றனர். சிவனை அடைந்து அடங்காதவர்கள் சிவனது குணத்தைப் பெறுதலும் கூடுமோ! (கூடாது).

குறிப்புரை :

`சிவம்` எனப்பின்னர் வருதலால் `ஓம்புபவன் சிவன்` என்பதும் குணம் அவனுடையன என்பதும் போந்தன; ஓம்புதலை எடுத்துக் கூறினமையால், ஒப்ப நோக்குதல் பெறப்பட்டது. `ஓம்புபவன் ஒப்ப நோக்கினும் ஓம்பப்படும் உயிர்கள் பக்குவ பேதத்தால் பயன் பெறுதலில் வேறுபடுகின்றன, என்பதாம். ஆகவே, `அனைவரும் ஒருகாலத்திற்றானே நின்மலாவத்தை எய்தார்` என்பதாம் `சென்று` எனற்பாலதனை, `வந்து` என்றது இடவழுவமைதி `அக்குணம் கொள்ளலும் ஆமே` என்க. உம்மை சிறப்பு. ஏகார வினா, எதிர்மறை உணர்த்தி நின்றது. சிவனது எண்குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை* இவைமுறையே சுதந்திரத்துவம், விசுத்ததேகம், நிராமயானமா` சருவஞ்ஞத்துவம்,அநாதி முத்தத்தன்மை, அலுத்த சத்தி. அநந்த சத்தி, பூர்த்தி` என வடமொழியில் சொல்லப்படும்* அலுத்த சத்தி, `குறைவில்லாற்றல் உடைமை` என்றும் சொல்லப்படும். பூர்த்தி, `திருத்தி` என்றும் சொல்லப்படும். அநாதி முத்தத்தன்மை `அநாதி போதம்` என்றும் சொல்லப்படும். சிவனைச் சேர்ந்தார். ``என் குணத்துளோமே``l எனக்கூறுமாறு காண்க.
இதனால், அனைவரும் பக்குவபேதத்தால் ஒருங்கே நின்மலாவத்தையை எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடம் கூடல் பெரிது
குறியறி ஆவகை கூடுமின் கூடில்
அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.

பொழிப்புரை :

`குறிக்கொளத் தக்கது இது` என அறியாதவர்கள் அதனை அடைதல் எங்ஙனம் கூடும்? (கூடாது) அவர் உடம்பிற் கட்டுண்டு நிற்குங் காலம் பெரிதாகும். ஆகையால், நீவிர், `குறிக்கொள்ளத் தக்க பொருள் இது` என்பதை அறிந்து, பின்பு அதுவே யாகும்படி பொருந்தி நில்லுங்கள். நின்றால், உங்களுடைய அறிவு அறிவாய் இருக்கும். வீட்டின்பமும் சித்திக்கும்.

குறிப்புரை :

குறி - குறிக்கப்படும் பொருள். முதனிலைத் தொழிற் பெயர் ஆகபெயராய்ச் செயப்படுபொருளை உணர்த்திற்று. காணுதல், இங்கு, `அடைதல்` எனத்தன்காரியம் தோற்றி நின்றது. கூடல், அதற்குரிய காலத்தைக் குறித்த ஆகுபெயர். என் வினையெச்சப் பொருள் தந்தது. `வரிப்புனை பந்து`, என்பதிற்போல. ``ஆவகை``, வினைத்தொகை. அன்னம் - சோறு. அது, ``பாதகமே சோறு பற்றினவா`` என்பதிற்போல நின்றது உம்மை, சிறப்பு.
இதனால், `உயிர் குறிக்கொளத் தக்க பொருள் சிவமே யாதலின், அதனை நின்மலாவத்தையால் அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
தானோ பிறப்போ டிறப்பறி யானே.

பொழிப்புரை :

உயிர் உடம்பொடு கூடி நிற்கும் நிலையில் வருகின்ற இன்பத் துன்பங்களை நுகர்வது உடம்பா? உயிரா? இதனை எண்ணிப் பார்த்து உண்மையை உணரமாட்டாமல் திரோதான சத்தியால் வரும் மயக்கத்திலே இருந்து கொண்டு, `யான் உண்மையைநன்கறிவேன்` என்றுசொல்கின்ற மனிதன்தான் பிறந்ததாகிய `பிறப்பு` என்பதும், பின்பு இறக்கப்போவதாகிய `இறப்பு` என்பதையுமே `இன்ன` என அறியமாட்டான்.

குறிப்புரை :

`மற்ற உண்மைகளை எங்ஙனம் அறிவான்` என்பது இசையெச்சம். `இன்பம் உறுகின்றது ஏது? என மொழி மாற்றியுரைக்க. ``ஏது`` என்பது, `யாது` என்பதன் மரூஉ, சிறப்புப்பற்றி இன்பமே கூறப்பட்டதாயினும் துன்பமும் உடன்கொள்ளப்படும். `யான் சுகிக்கின்றேன்; துதிக்கின்றேன்` என உணரும்பொழுது யான்` எனப்படுவது உடம்பின் வேறாகிய உயிரே; அவ்வுயிரே தான் என உணரமாட்டாது, திரோதான சத்தியால் வரும் மயக்கத்தால் உடம்பையே தானாக மதிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் `பிறப்பு, இறப்பு` என்பவற்றின் உண்மையையே `இவை` என அறியமாட்டான் ஆதலின், அவன் தனது அறிவை `அறிவு` எனக் கூறுவன எல்லாம் போலியே என்பதாம். `பிறப்பு` என்பது உடம்பு தோன்றுதலும், `இறப்பு` என்பது உடம்பு அழிதலுமே. ஆவன அல்லது, உயிர் தோன்றுதலும், அழிதலும் அல்ல. ஆயினும் மயக்கத்தால் மக்கள் உயிர் தோன்றுவதும், அழிவதுமாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பு. மயக்குதற்கு உரியவளாகக் கூறியதனால் ``வானோர் தலைவி`` திரோதான சத்தியாயினார் `திரோதான சத்தி உள்ள வரையில் மக்கள் மெய்யறிவைப் பெறமாட்டார்` என்பதனால், `அருட்சத்தி தோன்றினால் மெய்யறிவைப் பெறுவார்` என்பது பெறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் பெறப்படுகின்றது. `அருட்சத்தி` தோன்றியபொழுதே மெய்யறிவு தோன்ற, நின்மலாவத்தை நிகழும் என்றலின், இம்மந்திரம் இவ்வதிகாரத்திற்கு உரியதாயிற்று. இம்மந்திரத்துள் பன்மையொருமை முதலியன அறியாரால் பாடம் திரிக்கப்பட்டது. இது, வருகின்ற மந்திரத்தானும் விளங்கும்.
இதனால், `நின்மலாவத்தைக்குக் காரணம் மெய்யறிவு` என்பது உணர்த்தி முடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது
சிற்பி