எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்


பண் :

பாடல் எண் : 1

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

பொழிப்புரை :

ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது; தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.

குறிப்புரை :

இங்கு, அறிபவனையே ``தான்`` என்றார், `ஆன்மா` என்னும் வழக்குப் பற்றி `அகம்` என்னும் தமிழ்ச் சொல்லாலும் குறிப்பது உண்டு. முதற்கண் தன்னை அறிதல் அனுமானத்தானும், பின்னர் அனுபவத்தானும் என்க. `தானே` என்றது, `பிறர் கெடுக்க வேண்டாது` என்றபடி. அறிவை அறிதல் - அறிவைப் பெறுதல். வழிபடுதல் சிவமாய தன்மை பற்றியாதலின், `சிவமாகி இருப்பன்` என்றபடி.
இதனால், `மெய்யறிவில் தன்னை அறிதல் முதற்படி` என்பது கூறப்பட்டது. ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார்`` எனவும், ``தம்மை உணரார் உணரார்`` எனவும் மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.l

பண் :

பாடல் எண் : 2

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.

பொழிப்புரை :

`எந்த உயிருக்கு மல பரிபாகம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே சிவபெருமான், வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்தலால், அருட்சத்தியாகிய தேவியும் அங்கே மகிழ்ச்சியோடு விரைவில் சென்று அப்பெருமானை வணங்குவாள்.

குறிப்புரை :

என்றது, `அவனது குறிப்பின்வழியே செயற்பட முற் படுவாள்` என்றபடி. சத்தி சத்திமான் வழிபட்டவள் ஆதலை இவ்வாறு விளக்கினார். சிவன் அங்கே என்றும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றிப் புதியனாகச்சென்று இருந்தது போலக் கூறினார். ``அங்கே`` எனப் பொதுப்படக் கூறியது. மெய்ந்நூல் வழக்கு. சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள் என்பது தோன்றுதற்கு, சலேல், ஒலிக் குறிப்பு. இஃது, ஓடி வருதலைக் குறிப்பால் உணர்த்திற்று. `சலேல் எனப் புகுந்து` என ஒருசொல் வருவிக்க. கூந்தலுக்குப் பொங்குதல் கற்றையாய் அடர்தல். `பொங்குதல் நிறைந்த குழலை உடையவள்` என்க. சத்தியை வேறெடுத்துக் கூறியது, `சத்தி நிபாதம் உளதாகும்` என்பது உணர்த்தற் பொருட்டு. ஆகவே, `மலம் பரிபாகம் உற` அதனால் சத்தி நிபாதம் உண்டாகி, அறிவு உதயம் உளதாம்` என்றதாயிற்று.
இதனால், அறிவுதயம் வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.

பொழிப்புரை :

மேற்3 கூறியவாறு, ``வானோர் தலைவி`` தந்த மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை அறியாது. `உடம்பே` என்று மயங்கியிருந்த என்னை, நந்திபெருமான் தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பன்று; அறிவு` என அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அன்று` என உணர்ந்து அதனின் நீங்கியிருக்கின்றேன்.

குறிப்புரை :

`நந்தி பெருமான் எனக்குச் சொல்லியதைத் தான் நான் உனக்குச் சொல்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். முன்மந்திரத்தில், ``சிங்காதனத்தே சிவன் இருந்தான்`` என்றும்; ``பொங்கார் குழலியும் போற்றியென்றாள்`` என்றும் கூறிப் பின், ``அருள் செய்தான் நந்தி`` என்றும், பின் ``அருளால் அறிந்தேன்`` என்றும் கூறியதனால், மலபரிபாகத்தால் சத்தி நிபாதமும், சத்தி நிபாதத்தால் குருவருளும், குருவருளால் அறிவுதயமும் உளவாதலைக் குறிப்பான் உணர்த் தினமை காண்க. அறிவுதயம், `ஞானோதயம்` என்றும் சொல்லப்படும். அருள்காரணமாக அருளிச் செய்த அறிவுரை ``அருளால்`` என்று உபசரிக்கப்பட்டது.
இதனால், அறிவுதயம் குருவருளாலே உளதாதல் கூறப்பட்டது.
[ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
மாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவே சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.]

பண் :

பாடல் எண் : 4

அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு)
அறைகின் றனமரை ஈறுகள் தாமே.

பொழிப்புரை :

தோற்றமும், கேடும் சடத்துக்கன்றிச் சித்துக்கில்லை. சித்துக்குப் பற்றுக்கோடு சித்தேயன்றிச் சடம் அன்று. அவ்வாறே சித்தை யறிவதும் சித்தன்றிச் சடம் அன்று. இவ்வாறு, `வேத முடிபுகள்` எனப்படுகின்ற உபநிடதங்கள் யாவும் கூறுகின்றன.

குறிப்புரை :

இந்த முறைமையால், `பிறப்பதும், இறப்பதும் உயிரன்று; உடம்பே உயிருக்கு உடம்பு பற்றுக்கோடன்று, சிவமே பற்றுக்கோடு - இனிச் சிவத்தை அறிவதும் உயிரேயன்றி, உடம்பன்று` என்பவற்றை உணர்த்தி, `உதயமான அறிவைக் கொண்டு இவற்றை யெல்லாம் இவ்வாறு அறிதல் வேண்டு` என்பது உணர்த்தியவாறு. `இட்டு`, அசை நிலை.
இதனால், `மெய்யறிவாவது இது` என்பது கூறப்பட்டது. (இம் மந்திரத்தின் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``ஆயு மலரின்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து முதல் அதிகாரத்து இறுதியில் சொல்லப்பட்டது.)

பண் :

பாடல் எண் : 5

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.

பொழிப்புரை :

`உலகத்தில் பலராய்க் குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய வேண்டும்` என்கின்ற சூழ்ச்சியைத் திருவுளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற சிவனை யான் `சிவன்` என்று அறிந்துகொண்டு போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து, `அப்பா` நீ மிகப் பெரியை` என்று கூறினான்.

குறிப்புரை :

மன்னுதல், இங்குப் பலராதல் எனவே, அவர் உலக மக்கள் ஆயினர். மாயம், `சூழ்ச்சி` என்னும் பொருட்டு, `மாயத்தின் கண்` என உருபு விரித்து. `சில முன்னி நின்றானை` என ஒருசொல் வருவித்து முடிக்க. `அருள் மாயம்` வினைத்தொகை. போற்றுதல், ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருள்``* வந்தான் என்றும், ``பிறவா முதல்வன் பிறந்து``* வந்தான் என்றும் இன்னோரன்னவாகச் சொல்லித் துதித்தல். ``பொன்`` என்று, `நிதி போல வந்து` என்றது. `இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாற்போல வந்து` என்றதாம். ``வந்து`` என்பதை `வா` எனத் திரித்துக்கொள்க. ஆனோர் - நாட்டோர்; உண்மையறிந்து வந்து மாணாக்கர் ஆயினோர். நட்டோரை `ஆனவர்` எனவும், பகைவரை `ஆகாதவர்` எனவும் கூறுதல் உலக வழக்கு. ``அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல்``8 எனக் கூறிய செயற்கரிய செயலைச் செயதமை பற்றி, `நீ ஏனையோரினும் வேறாய பெரியை` எனப் பாராட்டினார் என்பதாம். `குரு ஏனை மக்கள் போலவேயிருப்பினும் அவரை, மக்களுள் ஒருவராக அறியாது, தம்மை ஆட்கொள்ள வந்த சிவனாகவே அறிதல், பக்குவிகட்கன்றி, அபக்குவி -கட்கு இயலாது` என்பதை உமாபதி தேவர்.
``அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள் ஆர் அறிவார் புவி``
என்றும்,
``பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணா புவி`` l
என்றும் கூறினார். இதனால், `நாயனார் தம் குருவாகிய நந்தி பெருமானை நந்தி கணத் தலைவராக மட்டும் காணாது, சிவ பெருமானாகவே `கண்டிருந்தார்` என்பதும், `அது பற்றி இவரது சிறப்பை உணர்ந்து, அவரும் இவரைச் சிறப்பாகப்பாராட்டினார்` என்பதும் விளங்கும்.
இதனால், `அறிவை உதிப்பித்த குரு சிவமேயாவர்` என்பது உணர்த்தும் முகத்தால், `உண்மையறிவு சிவனால் அல்லது, பிறர் ஒருவராலும் தரப்படாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி வாக அறியும்அவ் வண்ணம்
அறிவறி வாக அணிமாதி சித்தி
அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.

பொழிப்புரை :

மெய்யறிவு வேண்டுவீர், உமது வேட்கை நிரம்ப வேண்டுமாயின் நீவிர் சிவனையே பொருளாக உணர்ந்து அவனிடம் அன்புசெய்யுங்கள் (பிறரைப் பொருளாக அறியும் அறிவுகள் எல்லாம் போலியறிவே.) யான் சிவனை உணர்ந்து பயன் பெற்றேன். (``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``) இவ்வாற்றால் உமது அறிவு உண்மை மெய்யறிவாயின், அதனைச் சிவனும் அறிந்து, பயன் தருவான். அதனால் அத்தகைய அறிவால் நிலையான வீடுபேறே யன்றி, இடையில் அணிமாதி சித்திகளும் தாமே வந்து வாய்க்கும்.

குறிப்புரை :

``அறிவு அறிவாக`` என வந்த நான்கிற்கும், `அறிவு மெய்யான அறிவாக` என்பதே பொருள். சொற்பொருட் பின்வரு நிலையணி. நந்தி சிவன். அது, ``அறிந்து`` என்பதனோடும் இயையும். ``நந்தியை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. ``அறியும்`` என்பதற்கும் வினைமுதல் ``நந்தி`` என்பதே அவ்விடத்து அறிதல், பயன் தருதலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. இரண்டாம் அடியில் `ஆக` என்பது `ஆனபின்` என்னும் பொருளதாயும், மூன்றாம் அடியில், ``ஆக`` என்பது, ``ஆதலால்`` எனக் காரணப் பொருட்டாயும் நின்றன. ``அணிமாதி சித்திக்கு`` `ஆம்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், `மெய்ப்பொருளை அறியும் அறிவே மெய்யறிவு. எனப் பொதுவாகச் சொல்லப்படினும், சிவனை மெய்ப்பொருளாக அறியும் அறிவே உண்மை மெய்யறிவாம்` என்பது கூறப்பட்டது. ``பொருள் அல்லவற்றை பொருள் என்று உணர்தலை, மருள்`` 3 3திருக்குறள் - 351. என்றார் திருவள்ளுவர்.

பண் :

பாடல் எண் : 7

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை அழகிய வாறே.

பொழிப்புரை :

உலகினர், `எமக்கு அறிவு வேண்டும், அறிவு வேண்டும்` என்று கூப்பாடு போடுகின்றனர். `ஆயினும், அங்ஙனம் கூப்பாடு போட்டுப் பெற்ற அறிவு அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார், அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாதிருக்கின்ற அந்த அறியாமை நீங்கி, அறிவு அறிவாகுமானால், முன்பு `அறிவு` என்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுகு வெளிப்பட நகைப்பு உண்டாகும்.

குறிப்புரை :

`தன்னை உடையார் ஒருவருக்கும் தான் காணப் படாது, அறிவுபோலவே தோன்றுதலும், தான் நீங்கிய பின் விளங்கி நிற்கும் அறிவைக் கொண்டே தான் அனுமித்துணரப்படுதலுமே அறியாமையின் இயல்பு` என்பது உணர்த்தியவாறு. ``அறிதோறறி யாமை கண்டற்றால்`` என்னும் திருக்குறளை8 நோக்குக.
``சுடரால் இருள்தேடச் சொல்லார்கள் எந்தாய்!
சுடரால் இருள்தேடச் சொன்னாய்`` *
என்றதும் இஃதே பற்றி. ``அறிவுபோல் அடரந்தெழும் அறியாமையின் வலியால்``* எனச் சிவஞான யோகிகளும் கூறினார். இத் தன்மையதான அறியாமையைச் செய்வது ஆணவ மலமே. அது பற்றி உமாபதிதேவர்.
``ஒருபொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``
எனவும்,
``பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்குண் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``*
எனவும் கூறினார்.
அழகிதல்லாததை, `அழகிது` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``அழகியவாறே`` என்பதன்பின் `தோன்றும்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், முன்மந்திரத்தில் கூறியபடி, `அறிவு அறிவாக அறிந்து அன்பு செய்ய அறிவு உதயம் ஆவதற்குத் தடையாய் உள்ளது, பெரும்பான்மையோரால் நம்ப இயலாத ஆணவ மலம்` என்பது உணர்த்தும் முகத்தால், `அது பரிபாகம் ஆதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது
அறிவாய வற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.

பொழிப்புரை :

அறிவு அறியாமையாய் இருந்த நிலையினின்றும் நீங்கி, அறிவேயாய் நிற்கப் பெற்றவனே, புற இந்திரியம் முதலிய கருவிகளில் அவையேதானாய் ஒன்றி, அவற்றின் அளவாய் நின்ற ஏகதேச நிலை நீங்கி, எங்கும் தானாம் வியாபக நிலையைப் பெறுவான். அந்நிலையைப் பெற்றபொழுதுதான். சடமேயாயினும் சித்துப் போலத்தோன்றிய கரணங்களில் அறிவாய் உள்ளவனும், அவற்றால் சீவனாய் இருந்தவனும் தானே ஆதல் அவனுக்கு விளங்கும்.

குறிப்புரை :

நீவுதல் - துடைத்தல். அறிவின் வினையை அதனை உடையான்மேல் ஏற்றி, `நீவியவன்` என்றார். ``பொறி`` என்றது உபலக்கணம். ``எங்கும் தானானபோது`` என்ற அனுவாதத்தால், எங்கும் தானானமை தானே பெறப்பட்டது. `அறிவாய` என்னும் அஃறிணைப் பன்மைப்பெயர், சாரியையும் உருபும் பெற்று, `அறிவாயவற்றினுள்` என வந்தது. `அறிவாய` என்றது, `அறிவுடையனபோலத் தோன்றியன` என்னும் பொருட்டு. செறிவு - மிகுதி. உம்மையை ``நின்றவன்`` என்பத -னோடும் கூட்டுக. ``ஆம்`` என்றது, `ஆதல் விளங்கும்` என்றவாறு.
இதனால், அறியாமை நீக்கத்தின் இன்றியமையாமை அதன் பயன் கூறும் முகத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து)
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து)
அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.

பொழிப்புரை :

மெய்யறிவை அடைந்தோரது உள்ளங்கள் அனைத்துலகங்களையும் உட்கொள்ளவல்லன; செய்தற்கரிய சரியை கிரியா யோகங்களில் பழகிப் பழுத்தன. அதனால், முதற்கடவுளாகிய சிவபிரானும் அவரது உள்ளங்களையே தானாகச் செய்து, அவற்றின் கண் நீங்காமலும் நிற்கின்றான்.

குறிப்புரை :

``ஆவது`` இரண்டும் துவ்வீறுபெற்ற தொழிற் பெயர்கள். அவை ஆகுபெயராய், அவற்றையுடைய உள்ளங்களைக் குறித்தன. `நெஞ்சொடு` என்பதன்பின் `ஒன்றாகி` என்பது வருவிக்க. ``நெஞ்சு`` என்பது பொதுப்பட அந்தக் கரணங்களைக் குறித்தன. அதனானே இனம் பற்றிப் புறக் கரணங்களும் கொள்ளப்படும். ஈற்றில் `அறிவுடையார் நெஞ்சம்` என்றது, `அது` (அதன்கண்) என்றும் சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இதனால், மெய்யறிவு பெற்றோரது கரணங்கள் நம்மனோரது கரணம்போலப் பசுகரணமாகாது, பதிகரணமாதல் கூறப்பட்டது.
``பாலை நெய்தல் பாடியதும், பாம்பொழியப் பாடியதும் காலனைஅன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்``
-திருக்களிற்றுப்படியார் - 2.
என்னும் சாத்திர மொழியை இங்கு ஒப்பு நோக்கி யுணர்க.

பண் :

பாடல் எண் : 10

மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

பொழிப்புரை :

உடம்பும், உலகமும் ஆகிய இவற்றின் அடிநிலைப் பொருளாகிய மாயைக்குத் தலைவனாய் உள்ள சிவன், உயிர்களின் பெத்த காலத்தில், `அயன், மால், அரன்` என மூவராய் நின்று அவைகளை முத்தொழிலில் அகப்படுத்தி, அவைகளால் அணுகுதற்கு அரியனாய்ச் சேய்மையில் நின்றவன், முத்தி காலத்தில் அம்மூவர்க்கும் மேலாய மூர்த்தியாய் வெளிப்பட்டு அருகில் விளங்கி கரும்பு போலவும், அமுதம் போலவும் இனிப்பவன் ஆகின்றான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. உலகத்தை ``நன்னாடு`` என்றார். ``காய நன்னாடு`` உம்மைத் தொகை. கரு - முதற் காரணம். முதல் - முதல்வன் தலைவன். சேயவன் - சேயவனாய் நின்றவன்` என இறந்த காலத்து வந்தது. ``ஆய்`` என்பது ``அணியன்`` என்பதனோடும் இயையும். ``கரும்பாய்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக்கிடந்தன.
இதனால், முன் மந்திரத்தில், ``அறிவுடையார் நெஞ்சத்து ஆகி நின்றான்`` எனக் கூறியதன் மேல், `அவன் அங்ஙனம் ஆகி நின்று செய்வது இது` என்பது கூறப்பட்டது. இஃது இனிது விளங்குதற் பொருட்டு இதன் மறுதலை நிலையையும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 11

என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
என்னையிட் டென்னை உசாவுகின் றேனே.

பொழிப்புரை :

இவ்வளவு காலமும் யான் என்னையறியாமல், என்னின் வேறாகிய பொருள்களையே யானாக எண்ணியிருந்தேன். (அதனால் அவற்றில் அழுந்தி, அவையேயாய் இருந்தேன்.) நந்தி பெருமானது அருளால் என்னை யான் அவற்றின் வேறான பொருளாக அறிந்தபின் அந்தநிலை சிறிதும் இல்லை. மேலும் யான் யானாகிய நிலையை நழுவ விடாமல் உறுதியாகப்பற்றி, என்னையே ஏதுவாகப் பற்றி, எனது இயல்பை யான் நன்கு ஆராய்ந்து வருகின்றேன்.

குறிப்புரை :

மாணாக்கன் நிலைமை இதுவாய் இருத்தல் பற்றி நாயனார் தமது நிலையையும் அதுவாகக் கூறினார். அவன் அந்நிலையினின்று தாழாமல் நிலைத்து, மேல் ஏறுதற்பொருட்டு. `நந்திபெருமான் அருளால்` என்பது, மேலெல்லாம் நாயனார் கூறிவந்தவாற்றால் கொள்ளக் கிடந்தது.
இதனால், `குருவருளால் அறிவு உதயமானபின் அதனை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனற்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

பொழிப்புரை :

நம் கையில் உள்ளது உடம்பாகிய ஒரு விளக்கு, அது நிலையற்றது; சிறிதுபோதுநின்று மறைந்து விடும் என்பது நம் போன்றவர்களை விட்டு அது மறைந்தமையால் அறிந்தேன். மேலும் இது முடைநாற்றம் வீசுவதாயும், பசி, நோய் முதலியவற்றால் வருத்துவதாயும் உள்ளது. இனித் திருவருளாகிய மற்றொரு விளக்கு மிகச் சேய்மையில் உள்ளதாகப் பெரியோர்கள் சொல்வதால் அறிகின்றேன். அந்த விளக்கு எப்பொழுதுமே நம்மை விட்டு நீங்காமல் ஒளிவீசிக் கொண்டே யிருக்குமாம். மேலும் அது தூய்மையானதாயும், தனி ஓர் இன்பத்தைத் தருவதாயும் இருக்குமாம். அதனை அடையத்தான் நான் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

இதுவும் முன் மந்திரம்போலவே மாணாக்கனது நிலை நோக்கிக் கூறியதாம். `நீயும் இந்த விளக்கைவிட்டு, அந்த விளக்கைத் தேடி அடை` என்பது குறிப்பெச்சம். ``காய விளக்கது`` என்பதை முதலில் கூட்டுக. இதில் உள்ள `அது`, பகுதிப்பொருள் விகுதி. மாயம் - நிலையாமை. உடம்பு மாயையின் காரியம் ஆதலாலும், ஆணவம் இருள்போல்வதாக, மாயை விளக்குப் போல்வது ஆதலாலும் ``காய விளக்கு`` என்றும், திருவருள் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்து வருதலின் அதனையும் ``விளக்கு`` என்றும் கூறினார். தூய்மையையும், கனற்றுதலையும் கூறவே அவற்றின் மறுதலைகள் பெறப்பட்டன. கனற்றுதல் - வெதுப்புதல்; துன்பந் தருதல்.
இதனால், `உதயமான அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், என்பது கூறப்பட்டது. `திருவருளே ஞானக்கண்` - என்க.

பண் :

பாடல் எண் : 13

தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி
பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

பொழிப்புரை :

`நன்றேயுடையனாயும், தீதேயில்லாதவனாயும் உள்ள சிவனது அருளே எல்லாவற்றினும் மேலான துணையாம்` என்று துணிந்து அதனையே பெற விரும்புகின்றேன். விரும்பி அதனை எல்லாத் திசைகளிலும் சென்று தேடுகின்றேன். அதனைத் துதிக்கின்றேன். இவ் வகையில் யான் அதனை நினைவளவில் பெற்றுவிட்டேன்.

குறிப்புரை :

`இனி அதனை அனுபவமாகப் பெறுவேன்` என்பதாம். ஆகவே, நீயும் நாடியும், தேடியும், பாடியும் நின்றால், அதனை அனுபவமாகப் பெறுவாய்` என்பது குறிப்பு. இறந்த காலத்தில் நிகழ்ந்த -வற்றை மாணவன் பொருட்டு நிகழ்காலத்தில் நிகழ்வதாகக் கூறினார்.

`நலமே உடையான் அடியே பரம் துணையாம் என நாடுகின்றேன்; திசை எட்டோ டிரண்டிலும் தேடுகின்றேன்; பாடுகின்றேன்; குறையா மனத்தாலே கூடுகின்றேன்` எனக் கூட்டி முடிக்க. சிவனது அருளை, `அவன் அடி` என்றல் மரபு. இதனால், `அறிவு உதயமாகி, ஆன்மரூபத்தாலும், ஆன்ம தரிசனத்தாலும் தத்துவ தரிசனம் தத்துவ சுத்திகளைச் செய்தபின் சிவதரிசனத்தைப் பெற முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறவியே.

பொழிப்புரை :

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய்8 உள்ள முதல்வனாகிய சிவபெருமானது விளை -யாடலால் முதற்கண் இயல்பாய் உள்ள ஒரு மலமாகிய ஆணவமும், அது பற்றிப் பின் வந்து பெருகிய மலங்களாகிய மாயை கன்மங்களும் அவை வந்தவழியே ஒருவன் போகச் செய்து, அநாதியே அடியவ னாகிய தன்னையும், தனக்கு அநாதியே தலைவனாய் உள்ள அப்பெருமானையும் உணர்ந்து, பாசங்களை விட்டு அவனது திருவடியை அடைந்து அவனே ஆயினால், பின்பு அவனுக்குப் பிறவிகள் வாரா.

குறிப்புரை :

`ஆடல்`, `ஆட்டம்` என வருதல் போல, `விளையாடல்` என்பது `விளையாட்டம்` என வந்து, அத்துச் சாரியை பெற்றது. `விளையாட்டத்தில்` என ஏழாவது விரிக்க. ஐந்தொழில் இறைவனுக்கு விளையாட்டுப் போல்வதாதல் பற்றி அவற்றை அவனது விளையாட்டம்` என்றார். `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``மலம்`` என்பது ``ஓர்`` என்பதனோடும் சென்று இயைந்தது. `பெருகு` என்பது கடைக்குறைந்து நின்றது. மாயையும், கன்மமும் முறையே விரிதலும், தொடர்தலும் உடைமைபற்றி, ``பெருகு மலம்`` எனப்பட்டன. மலங்கள் வந்தவாறு, உயிர்களின் அபக்குவம். `அது நீங்கினால், அது வழியாக வந்த மலங்களும் நீங்கும்` என்பார், ``வந்தவா பேர்த்திட்டு`` என்றார். `ஆறு` என்பது கடைக் குறைந்து நின்றது ``பண்டை`` என்பது, ``தன்னை`` என்பதனோடும் இயையும் `தலைவனாவான் சிவனே`` என்றற்கு, ``சிவமாக`` என்றாரேனும், `அவனாக` என்றலே கருத்து.
இதனால், அறிவு உதயத்தின் பயன்கள் முறையானே தொகுத்துணர்த்தப்பட்டன
சிற்பி