எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்


பண் :

பாடல் எண் : 1

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.

பொழிப்புரை :

`துவம்` என்பதே சித்தர் மரபில், `தொம்` என மரூஉ மொழியாகக் கூறப்படுகின்றது.] `துவம்` என்னும் பதம் முன்னே எழ, அதனை அடுத்து, `தத்` என்னும் பதம் வந்து பற்ற. அதன்பின் `அசி` என்னும் பதமும் வந்து சேர, இம் மூன்றும் கூடிய கூட்டமாய் அமைந்த வாக்கியத்தின் பொருளாக ஒருவன் ஆகிவிடுவானாயின், அவன் வியாபகப்பொருளாகிய பரம்பொருளேயாவன். பின் முன்பு தான் பொருந்தியிருந்த மும்மலங்களும் நீங்கச் சிவமாகியிருப்பான்.

குறிப்புரை :

வாக்கியம் `தத்துவமசி` என்று இருப்பினும் பொருள், `துவந்ததசி` என்பதேயாகலின் அவ்வாக்கியத்தை நாயனார் இவ்வாறே கூறுகின்றார். இதுபற்றி மேலே குறினோம்* எய்துதல் - பொருள் அனுபவமாகப் பெறுதல். வேதம், முதற் பொருளைப் பொதுவாக, `பரம்` எனக் கூறும். ஆகவே, `நீ அது ஆகின்றாய்` என்னும் வேதவாக்கியத்தால் பொது அனுபவம் உண்டாதலை ``பராபரம் ஆகும்` என்ற கூறிப் பின், சித்தாந்தம் `துவம்சிவமசி` எனக் கூறுகின்ற சிறப்புப்பொருளை எய்திச் சிவமாய் இருக்கும் எனக் கூறினார். மற்றும் இது பற்றிய சில விளக்கங்கள் மேலே* கூறப்பட்ட வற்றைக் காண்க.
இதனால், `முப்பதம் ஆவன இவை` என்பதும், அவற்றால் பெறப்படும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

பொழிப்புரை :

`அறிவாவது சடத்தின் குணமாகாது, வேறேயாம்` என்பதை உணர்ந்து பூதம் முதலிய தத்துவ வகைகளையும், அவற்றின் கூறுகளாகிய தாத்துவிக வகைகளையும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் நாதமுடிவாக அவற்றின் இயல்புகளை ஆராயும் முகத்தால், `தான்` என மயங்காது விட்டொழித்து உண்மையாகவே, `தத்துவமசி` என்னும் வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள `தொம்` பதப்பொருளாகி நிற்றலே ஆன்மாவின் உண்மை இயல்பாகும்.

குறிப்புரை :

`உண்மையாக அன்றி வெறும் வாய்மொழியாக அவ்வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை` என்பதாம். இதுவே. தசகாரியத்துள் `தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி ஆன்மரூபம்` என நான்காக வகுத்துக் கூறப்படுகின்றது. சிவஞானபோதத்தில், `இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே``* எனப் பட்டதும் இதுவே. தொண்ணூற்றாறு கருவிகள் மேலே கூறப்பட்டன.
இதனால், முப்பாதங்களுள் ஆன்ம பதமாகிய தொம்பதப் பொருளை உண்மையாக உணருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

முப்பதங்களுள், `அசி` என்னும் பதமே தத் பதம் என்றும் `துவம் பதம்` என்றும் சொல்லத்தக்கதாய் உள்ளது. (அஃதாவது, இரண்டையும் ஒன்றாகச் செய்கின்றது.) அந்தப்பதத்தில் தான் அருட்சத்தி இருக்கின்றாள். அதனால், வாக்குக்களால் எட்ட முடியாத சிவனும் அந்தப்பதத்திலேதான் கற்பனையாக அன்றி, உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

தத் - அது. துவம் - நீ. அசி - ஆகிறாய். எனவே, `அது நீ ஆகியாய்` என்கின்ற பொழுது இரண்டையும் ஒன்று படுத்துவது `அசி` ஆதல் உணர்க. பெத்தகாலத்தில் சிவன் சீவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும், முத்தி காலத்தில் சீவன் சிவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும் சத்தியினாலேயாகலின், `அசி` என்னும் பதத்திலே நேரிழையாள் உளள் - என்றார். திருவைந் தெழுத்தில் அசிபதமாய் நிற்பது வகாரமும், நகாரமும் ஆம்.
``அவன்இவ னானது அவன் அருளால் அல்லது,
இவன் அவன் ஆகான் என்று உந்தீபற``*
எனத் திருவுந்தியார் சீவன் ஒன்றும் மாட்டாமையை வலியுறுத்துகிறது. `உளன்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. `அப்பதத்து` எனச் சுட்டு வருவித்து, `சிவன் கலந்து நின்றான்` எனமுடிக்க.
இதனால், முப்பதத்துள் `அசி` பதத்து உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து
கணுவொன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால் தேன் அமுதென இன்பத்
துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.

பொழிப்புரை :

`துவம்` பதப்பொருளாகிய ஆன்மாவும் `தத்` பதப் பொருளாகிய பரமும் `அசி` பதத்தால் ஒன்றான பின்பு, அதில் சிவமும் கலந்துவிடுமாயின், அக்கலவை, பாலும் தேனும் கலந்த கலவையில் அமுதமும் கலந்தாற்போல இனிமையோடு, உறுதியையும் தந்து நிற்கும். அக்கலவையின் சிறப்புச் சொல்லற்ற நிலையாய்த் தோன்றும்.

குறிப்புரை :

பரம், சிவம் இரண்டும் ஒன்றாயினும் பொதுவும், சிறப்புமாகிய உணர்வு வேறுபாடு பற்றி வேறுவேறாகக் கூறினார். பரமாதல் வேதாந்த ஞானத்தாலும், சிவமாதல் சித்தாந்த ஞானத்தாலும் என்க. `அசிபதத்தால்` என மூன்றாவது விரிக்க. ``ஏய்ந்து`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. கணு - வேற்றுமை. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இணை - ஒப்பு. பால், ஓரளவு இனிப்புடையது. தேன், மிக இனிப்புடையது. ஆகவே அவை முறையே ஆன்மாவிற்கும், பரத்திற்கும் உவமையாம். அமுது உறுதி பயப்பது. ஆகவே, அது சிவத்திற்கு உவமையாம். இன்பத் துணை - இனிய பொருள்களின் கலப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் அனுபவச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :

அழகிய சொற்களால் ஆகிய, பழமையான, மெய்ம்மை கூறும் மகாவாக்கியம் `தொம், (துவம்) தத், அசி` என்னும் மூன்று சொற்களை யுடையது. அச்சொற்கள் முறையே புத்தி முத்திகளை விரும்புகின்ற சீவன், பரம்பொருள், அதன் சத்தி ஆகியவற்றைக் குறித்து நிற்கும். அவ்வாக்கியத்தைப் பன்முறையும் உணர்தலால் அடையப்படும் செவ்விய பொருள், குருவாகி வந்து ஆட்கொள்கின்ற சிவனே.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதற்கண் கூட்டியுரைக்க.
`பத வாக்கியம்` என இயையும். வாக்கியம் சாதனம் ஆகலின், செம்பொருள், அதனால் அடையப்படும் பொருளாயிற்று. செம்மை, எஞ்ஞான்றும் திரிபின்றி ஒருதன்மைத்தாய் நிற்பது. இதுவே, வடமொழியில் `சத்து` என்பதற்குப் பொருள் என்பது சித்தாந்தம்.
இதனால், `முப்பத வாக்கியம் மெய்ப்பொருளை அடையும் வழி` என்பதும், அதனால், அடையப்படும் மெய்ப்பொருள் சிவனே என்பதும் கூறப்பட்டன. இரண்டாம் அடி அனுவாதமாய், மேலெல்லாம் கூறியதை வலியுறுத்திற்று.

பண் :

பாடல் எண் : 6

ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்

உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

பொழிப்புரை :

எழுத்தறி கல்வியில் அறியவேண்டிய எழுத்துக்கள் ஐம்பது. அவற்றுள் ஒன்றையேனும் அறியாதவரும் உளர். அவரும் மக்களுட் சிலராகவே இருக்கின்றனர்: (அவர்கள் நற்கதி அடையு மாறில்லை. ஆகவே,) கல்வி கற்றவர் அக்கல்வியின் முடிநிலையாக முப்பதங்களைக் கொள்ளுதல் வேண்டும். கொண்டு, செம்மையான, உயர்ந்த வாசியோகத்தைச் செய்தல் வேண்டும். அவ்யோகம் `ஹம்ஸ:` என்னும் மந்திரமாக அமைதலின், அதுவே தொம்பதமும், தத்பதமுமாய் நிற்கும். நிற்கவே, அது, `யோஹம்` என்று ஆகி, சீவன் சிவனாகின்ற பயனைத் தகும்.

குறிப்புரை :

``கல்லா நெஞ்சில் - நில்லான் ஈசன்`` ஆதலின், எழுத்தறியாதவரை இகழ்ந்தார்* ``அறியாதவரும்`` என்பதன்பின், `உளர்` என்பது வருவிக்க. `அவரும்` என்னும் உண்மை தொகுத்த லாயிற்று. சிவனை நினையாது செய்யும் யோகம் வெறு ஹடயோக மாய் ஆன்மிகப் பயனைத்தாராது ஆதலின், `உம்பனை நாடி முப்பதத் திடை வாசி செலுத்திட` என்றார். `உம்பரன்` என்பது குறைந்து நின்றது. `நாடிச் செலுத்திட` என இயையும். உரைபதம், வினைத் தொகை. செம்பரம் - செவ்விதும், மேலானதும் ஆகிய பொருள். அப் பொருளாம் தன்மையைக் குறிக்கின்ற பதத்தையே அதுவாக உப சரித்தார் `ஹம்ஸ` மந்திரம் இயல்பாக இயங்கும் சுவாசத்தாலே அமைதலின் அதனை, `அசபா மந்திரம்` என்பர். செபிக்கப்படாத மந்திரம்` என்பது இதன் பொருள். `பேசாத மந்திரம்` என்றும் கூறுவர். `தம் யோகம், பரயோகம்` எனத் தனித்தனி முடிக்க. தம் யோகம் - தம்மால் செய்யப்படும் யோகம் பரயோகம் - மேலான யோகம். ``ஆகும்`` என்றது `ஆதலாகிய பயனைத் தரும்` என்றபடி.
இதனால், `முப்பத அனுபவத்தை வாசியோகத்தால் பெறலாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.

பொழிப்புரை :

ஆன்மாவிற்குச் சிவனை அறிகின்ற அறிவும் நழுவுவதே `அதீதம்` எனப்படும் முடிவுநிலைவாய்க்கும். அஃதாவது, ஆன்மாச் சிவனை அறியும் பொழுது, `யான் சிவனை யறிகின்றேன்` என அறிகின்ற அறிவும் அதைவிட்டு நழுவினால் அதன் பின்பே துரியாதீதநிலை வாய்க்கும்` என்பதாம். (ஆகவே அவ்வறிவு நழுவிய நிலை துரியமாதல் பெறப்பட்டது.) இனி அவ்வாறின்றி, ஞானேந்திரியம், கன்மேந்திரியம் அவற்றின் விடயங்களாகிய சத்தாதி, வசனாதி முதலிய தத்துவ தாத்துவிகங்கள் நீங்கியபோதிலும், `யான்` என்னும் உணர்வு நீங்காது. ஆகவே, அது நீங்குதல் நின்மல சாக்கிரம் முதலியவற்றிலாம். அவையும் நீங்கினால் பரசாக்கிரம், பரசொப்பனம் முதலியனவே இயற்கை நிலையாகிய முத்தியைக் கூட்டுவிக்கும்.

குறிப்புரை :

நந்தி யறிவு - நந்தியை அறிவும் அறிவு. விட - நீங்க. `யான்` என்பது நீங்குவதாகிய நின்மலாவத்தையை. `நின்மலாவத்தை` என ஒரு சொல்லாற் கூறிப்போகாது அனைத்தையும் முறையானே எடுத்தோதினார். அவற்றை அதீததம் முதலாகக் கீழ்நோக்கிக் கூறும் பொழுது `யான்` என்னும் உணர்வு ஒன்றைவிட மற்றொன்றில் மிக்கிருக்கும் - என்பது உணர்த்துதற்கு துரியத்தில் பாசநீக்கமே உளதாகும். சிவப்பேறு அதீதத்திலே உண்டாகும். ``நல ஐந்தும்`` என்றதனால் அவை நின்மலாவத்தையாயின. `அவையும் நந்தில்` என்றதனால் `நனவாதி` எனப்பட்டவை பராவத்தையாயின. நின்மலா வத்தை பராவத்தைகளின் இயல்பு மேற்போந்த அதிகாரங்களில் கூறப் பட்டன. அனாதி - இயற்கை. `அனாதியை முட்டும்` என இயைக்க.
இதனால், முப்பத அனுபவம் நின்மலாவத்தை பராவத்தைகளில் நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

பொழிப்புரை :

பரதுரியத்தில் உலகத்தை அனுபவித்தலாகிய கேவல சகல அஞ்சவத்தைகள் எஞ்ஞான்றும் நிகழாது அறவே நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரோவொருகால் நிகழினும் நிகழும். ஆகவே, நின்மல துரிய `அசி` பத அனுபவமாய் நிற்பதே. `அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை` என்பதாம்.)

குறிப்புரை :

`பரதுரியத்து ஓவும்` என இயையும் ஓவும் - நீங்கும். ஓவுவன நனவும், கனவும், சுழுனையும்` இவை கேவல சகல அவத்தைகள்` என்பது. ``படி உண்ட`` என்றதனால் விளங்கிற்று. படி - உலகம். ``படி உண்ட`` என்பதை, ``நனவு`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. விரிவு இல் கனவு - நனவுபோல விரிந்த அறிவு இல்லாத கனவு. சுழுத்தியில் அறிவு பெரிதும் ஒடுங்குதலால் அதனை, `கனவும் ஒடுங்கிய உபசாந்தம்` என்றார். ``சிவன்பால்`` என்பதன்பின், `நிகழும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `நின்மலாவத்தை மகாவாக்கிய அனுபவமாக, பராவத்தை அதனையும் கடந்த அனுபவமாம்` என்பது கூறப்பட்டது.
சிற்பி