எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்


பண் :

பாடல் எண் : 1

தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி
நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.

பொழிப்புரை :

எனது உடம்பினுள்ளே உற்பத்தியாகி, கீழ்மேலாய் உள்ளது. யோக முயற்சியால் மேல் கீழாய்ச் சுழல்வதற்கு இடமாகின்ற மூன்று மண்டலங்கள் உள. (அவை `தீ, ஞாயிறு, திங்கள்` என்பன) அம்மண்டலங்கட்கு மேலேயுள்ள முதல்வனைப் பற்றியுள்ள ஓர் இளமையான கொடி, அவனைப் பற்றித் தொங்கிக்கொண்டு, உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் தருதல் அறியத் தக்கது.

குறிப்புரை :

எனதாகிய உடம்பை `யான்` என்றே கூறினார். உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் என்னும் அளவில் உள்ள பகுதி தீ மண்டலமாகவும், அனாகதம், விசுத்தி உள்ள பகுதி ஞாயிற்று மண்டலமாகவும், ஆஞ்ஞை, அதற்குமேல் உள்ள ஏழாந்தானம் உள்ள பகுதி திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். இம் மூன்று மண்டலங் களையும் கடந்து துவாதசாந்தத்தில் விளங்குகின்ற சிவனே மண்டல பரம். பரம் ஆகின்றவனை, ``முதல்வன்`` என்றார். அவனைப் பற்றிக் கொண்டு மூலாதாரம் வரையில் தொங்கி, மூலா தாரத்தில், தலையை வைத்துத் தூங்குகின்ற பாம்பு வடிவாய் உள்ளது. குண்டலி சத்தி. அதனையே, ``ஏன்றெய்தி இன்புற்றிருந்த இளங்கொடி`` என்றார். இன் புறுதல், சுகமாகத் துயிலுதல். ``நான்று`` என்பதை, ``எய்தி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நலம் செய் ஆறு, நலம் தரும் ஆறு` எனத் தனித்தனிக் கூட்டுக. இருகாற் கூறியது உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் உணர்த்தற் பொருட்டு. யோக முயற்சியால் ஞானமே யன்றி, அதற்குமுன் உடல் நலமும் கூடுவது என்க. சுழல்கின்றது ஓர் மூன்று படி மண்டலம் - சுழலுகின்ற இடமாகிய ஒரு மூன்றடுக்கு மண்டலம். கீழ் மேலாகச் சுழல்வது, மேற்குறித்த குண்டலிசத்தி, யோக முயற்சியால் எழும் மூலாக் கினியால் விழித்தெழுந்து சுழலுதல், `அஃது` இங்ஙனம் எழுந்து சுழன்றே நலந்தரும்` என்க. `அறியத் தக்கது` சொல்லெச்சம்.
இதனால், முப்பரங்களுள் மண்டல பரம் பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே.

பொழிப்புரை :

மண்டல பரம் துவாதசாந்தத்தில் நிற்றலால் ஏனைய கடவுளர்க்கெல்லாம் மேலான கடவுளாயும், அங்கே திருநடனம் புரிவதால் மன்றில் நிறைந்ததாயும், தனது சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குவதாயும், இன்னும் நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாயும் உள்ளது. அந்தப்பரம் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்த பின்னர், குடத்துள் இருந்த விளக்குப்போல இருந்த அது, குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

குறிப்புரை :

``மாபரம் ஆயது`` என்பதை முதலிற் கொள்க. ஏனைய கடவுளாவார் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் விளங்குபவர்கள். `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்கும் கீழாய் அடங் குவதே ``நந்தி`` என்றது `குரு` என்றவாறு ``நந்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. இதன் பின் `ஆம்` என்பது எஞ்சிநின்றது. `வருதல், ஆதல்` என்ப வற்றிற்கு `அது` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. நன்மையை, `குணம்` என்றல் வழக்கு. நன்மை, இங்கு இனிது விளங்கி நிற்றல்.
``கன்றை நினைந்தெழு தாய்என வந்த கணக்கது ஆகாதே``l
என்னும் திருவாசகத்தையும் காண்க.
இதனால், மண்டல பரத்தின் பெருமையும், அஃது உயிர்கட்கு அருள் புரியுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

பொழிப்புரை :

பரம்பொருள், `முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது` என உணரப்படும் பொழது `தத்துவ பரம்` எனப்படும். பொருளால் வேறாகாமை பற்றி முன்மந்திரத்தில், `மண்டல பரமே குருவாய் வந்து உணர்த்துவது` எனக் கூறப்பட்டதாயினும் அவ்வாறு வந்து உணர்த்துவது தத்துவ பரமே. பரம் பொருள் குருவாகி வந்து உணர்த்தியது சைவ வரலாற்றில் அன்றிப் பிற சமய வரலாற்றில் காணப்படாமையால், குருவாகி வந்து உணர்த்தும் தத்துவ பரம் சிவபரமே என்பது தெளிவு. அது செய்த உபதேசமும் சொல்லமாற் சொன்ன உபதேசமே. அஃதாவது, சின் முத்திரையால் உணர்த்திய உபதேசமே. அந்த உபதேச பரத்திற்கு வேறாய்வெளிப்பட்ட, வேதாகமங்களை அருளிச்செய்த சதாசிவ நாயனார் வெளிப்பட்டது. முற்கூறிய கூறா உபதேசம் இனிது தெளியப்பட்டு பயன் தருதற் பொருட்டாம். அவ்விரு மூர்த்திகளது செயலாலும் பயன்கொள்பவரால் அச்செயல்கள் மேலும் மேலும் இன்பம் பெருகும்படி நன்கு பேணப்படும்.

குறிப்புரை :

``ஆறாறு தத்துவம்`` என முன்னர்க் கூறினமையால், ``அப்பரம்`` என்று, தத்துவபரம் ஆயிற்று. ``கூறில்`` என்னும் எச்சம், `கூறிற்றாயின்` எனத் தெளிவின்கண் வந்தது. `அது சிவபரமே` எனச் சுட்டு வருவித்து முடிக்க. `தத்துவ பரம் குருவாகிவந்து உணர்த்து மாயின், சதாசிவநாயனார் வேதாகமங்களை அருளிச் செய்தல் எதற்கு` என்னும் ஐயத்தை நீக்குதற்கு, ``பேறாக`` என்றார். பேறு பயன். ஆக - உண்டாதற் பொருட்டு. தென்முகக் கடவுள்பால் சென்று கேட்ட சனகாதி நால்வர் வேதாகமங்களை ஓதியுணர்ந்தபின், அவற்றின் பொருளைத் தெளிதற் பொருட்டுக் கேட்டாராயினும், பொதுவாக குரு உபதேசத்தைக் கேட்ட பின்பு அதனைத் தெளிதற்குப் பயன் படுவனவே வேதாகமங்கள் என்பது பற்றி, ``பேறாக`` என்றார். எனவே, தென்முகக் கடவுள் வரலாற்றை எடுத்துக்காட்டியது, முன் மந்திரத்தில், ``நேர்தரு நந்தியும் ஆம்`` என்றதற்கு அனுபவம் காட்டியதேயாம். வேதாகமங்களின் வழி மேலும் மேலும் சிந்தித்த பொழுதே குருவுபதேசம் நிலைபெற்றுப் பயன் தருவதாம். அதனையே, ``பேணும்`` எனக் கூறினார். பேணும் - பேணப்படும்.
இதனால், முப்பரங்களில், `தத்துவபரமாவது இது` என்பதும், அஃது உயிர்கட்கு அருள்புரியுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம்
பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.

பொழிப்புரை :

பரம்பொருள் உயிர்களைப் பாதுகாக்கும் பதியாகி நிற்றல், அவ்வுயிர்கள் வேறு பற்று எதுவும் இன்றி, அனைத்துப் பற்றுக்களையும் விடுத்து, அந்தப் பரம் பொருள் ஒன்றையே பற்றி நிற்கும் பொழுதுதான், (இப்பாதுகாவல், பிறவிக் கடலினின்றும் எடுத்துக் காக்கும் காவல்) பிற பற்றுக்களை யெல்லாம் விடுத்துப் பரம் பொருளையே பற்றுதல், குரு உபதேசத்தைச் சிந்தித்துத் தெளிதலால் உண்டாகும். அதனையே,
``ஓர்த்துள்ளம் உள்ள துணரின், ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு``
-திருக்குறள் - 357.
எனத் திருவள்ளுவர் கூறினார்.
அங்ஙனம் வேறு பற்று அறப் பரம்பொருளையே பற்றும் பொழுது அந்தப் பரம்பொருளின் ஞானமே உயிரினது ஞானமாகிப் பின்பு, அதுவே பரம் பொருளும் ஆகிவிடும். பரம்பொருளாகிய பற்றப்படும் பொருளை இவ்வாறு பற்ற வல்லவர்கட்கு அப்பற்றுதலின் கண் பரம் பொருள் பரம்பொருளாகவே வெளிப்படும்.

குறிப்புரை :

``பரம்பதியாவது`` என்பதை முதலிற்கூட்டுக. மூன்றாம் அடியில் ``பற்று`` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், ஆகுபெயரால், பற்றப்படும் பொருளைக் குறித்தது. ஈற்றடியிலும் ``பற்று`` என்பது முதனிலைத் தொழிற்பெயராய், ஏழாம் வேற்றுமை ஏற்றது. பரம் பரம் ஆதல் - உண்மையாக வெளிப்பட்டு விளங்குதல்.
இதனால், `தத்துவ பரத்தை அதன் உபதேசத்தின் வழியே சென்று அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பரம்பர மான பதி பாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரம் சிவம் மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.

பொழிப்புரை :

பாசங்களோடு சிறிதும் தொடர்பின்றி, மேலானதற்கும் மேலானதாய் நிற்கின் அதுவே மிகமேலான பரம்; பதி. (என்றது `பசு பரம்` என்றபடி பாசங்களின் மேலானது பசு; அது பரம். அதற்கு மேலானது பதி; அது பரம்பரம் `தற்பரம்` என்றும் சொல்லப் படும். தற்பரம் தனக்கு மேலானது. `தன்` என்பது ஆன்மா தற்பரம், பரமான்மா `தத்துவ பரம்` என்பது தத்துவங்களைக் கடந்த நிலையை மட்டும் குறிப்பது. `பசு - பரம்` என்பது, கன்மம் திரோதாயி இவற்றிற்கு மேல் பசு இவற்றையும் கடந்தது பசுபரம்) இவ்வாறான `பரம்` என்றும் `சிவம்` என்றும் சொல்லப்படுகின்ற அந்தப் பொருளை உயிர், மாயா காரியப் பொருள்களில் எந்த ஒன்றினின்றும் அடையப்படாத பேரானந்தத்தையுடையதாகும். அந்த ஆனந்தத்தைப் பொருளாகக் கொண்டு முயன்று அடையும் அறிவே, `அறிவு` என்று சொல்லப்படும்.

குறிப்புரை :

பாசம் பற்றாப் பரம்பரம், பரம்பரமான பதியாகும் என இயைக்க. ``பரசிவானந்தம்`` என்பதன் பின்னர், `ஆகும்` என்பது எஞ்சி நின்றது. இதன்பின், `இதனை` என்பது வருவிக்க.
இதனால், முப்பரங்களில் `பசுபரம்` என்பது இது - என்பதும் `அது பாசத்தோடு தொடர்பின்றி ஆனந்த மயமாய் உள்ளது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று
தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி
நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந்
தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.

பொழிப்புரை :

சகலத்தில் புருவ நடுவிலே நிகழும் `கேவல சாக்கிரம், சகல சாக்கிரம்` என்னும் இருவகைச் சாக்கிரத்துள், வித்தியா தத்துவங்களில் கலை முதலிய ஐந்து தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய நிலையில் ஆன்மா உயிர்ப்பும் இன்றித் தனித்துக் கிடக்கும் ஒருநிலையை அடையும் அந்நிலையும் ஒருவகைக் கேவலமே. அந் நிலையில் கருவிகள் இல்லாவிடினும், ஆணவம் உள்ளது. கருவிகள் ஒடுங்கிய நிலையில் இந்தக் கேவல நிலை உண்டாகாமல் நீங்கித் திருவருள் அறிவிக்க அறிதலாகிய அறிவினைப் பெற்று அறிகின்ற சாக்கிரம் முதலியவைகளை அடைந்து, முடிவாக அதீதத்தை எய்தி, அதன்கண் விளங்குகின்ற ஞேயத்தில் அழுந்தும் பொழுதே ஆன்மா, மேற்கூறிய பசு பரமாகிய தற்பரமாய் நிற்கும்.

குறிப்புரை :

நாலொன்று - ஐந்து. இரண்டாம் அடி, `சகலத்தில் சகலம்` என்றும், `மகா சகலம்` என்றும் சொல்லப்படுகின்ற மத்தியாவத்தையில் நிகழும் அதீதத்தின் இயல்பைக் கூறியது. ``நினைவுற்று அகன்று`` என்பதை `அகன்று நினைவுற்ற` என மாற்றிக் கொள்க. அகலுதல், மேற்கூறிய அதீதத்தை. நினைவுறுதல் - அறிவு பெறுதல். இவ்விடத்தில் அது திருவருளால் நிகழ்வதாகும். `இதுவே நின்மலாவத்தை` என்பதை மேலெல்லாம் கூறியவாற்றான் அறிக. `தான்` என்றது ஆன்மாவை. `தற்பரமே பசுபரம்` என்பது முன்மந்திர உரையில் கூறப்பட்டது.
இதனால், `முன்மந்திரதிற் கூறப்பட்ட நிலையை ஆன்மா அடைதற்கு வழி நின்மலாவத்தை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
தற்பர கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடக ராதியே.

பொழிப்புரை :

ஆன்மா தன்னைத்தான் வேறு `தத்துவங்கள் வேறு` என உணர்தல் ஆன்ம தரிசனமாம். அதன்பின், கருவிகள் நீங்கிய பின்பும் தனக்கு அறிவு நிகழக் காணுதலால் `எஞ்ஞான்றும் தனக்கு அறிவைத் தருவது சிவமே` என உணர்ந்து சிவனது அறிவையே தனது அறிவிற்குப் பற்றுக் கோடாக உணர்ந்து, அவன் அறிவினாலே அவனை நோக்குதல் சிவதரிசனமாகும். இவ்விடத்தில் ஆன்மசுத்தியும் ஓரளவு உடன் நிகழும். பின்பு அங்ஙனம் உணரப்பட்ட சிவனிடத்தில் தான் அடங்கி அவனேயாய் நிற்றல் சிவயோகமாகும். இந்நிலையில் ஆன்ம சுத்தி நிறைவுறும். அதனால், பின்பு பிரபஞ்சம் காட்சிப்படினும் ஆன்மா அதனைப் பற்றாது ஒதுக்கிவிடும். இம்மூன்று நிலைகளையும் தாண்டிய பொழுது, காலத்தைக் கடந்து நிற்றலால், `கால பரம்` என்னும், ஆன்மாவைக் கடந்து நிற்றலால், `தற்பரம்` என்றும் சொல்லப் படுகின்ற பசுபரம் தோன்றும். பின் அதனோடு ஒற்றுமைப் படுதல் நின்மல துரியாதீதமாகும். இஃது இம்மையில் அம்மையாம் ஆன்ம லாபமாகும். இவற்றிற்குப்பின் தேகம் நீங்கப் பரசிவத்தில் கலத்தல் பரதுரியாதீத மாகும். இவற்றை யெல்லாம் தெரிந்துணர்தல், அகரத்தை முதலாக உடைய எழுத்துக்களால் ஆகிய நூல்களினாலேயாம்.

குறிப்புரை :

தூயம் - தூய்மை. நன்மை, வன்மை, முதலிய சில பண்புப் பெயர்கள் மையீறு பெறாது, `நலம், வலம்` என்றாற் போல அம்மீறு பெற்று வருதல் பற்றி. `தூய்மை` என்பதை, `தூயம்` என்றார். இது நாயனாருடைய தனித்ததோர் ஆட்சி. ``கண்டதூய்மை`` என்பது `கண்டதனால் வரும் தூய்மை` எனப்பொருள் தந்து நின்றது. ஆன்ம தரிசனத்தையே, ``தற்கண்ட``என்றும், ஆன்ம சுத்தியின் முதல் நிலையையே ``தூய்மை`` என்றும், அதன் முடிநிலையை ``தன்னில் விலாசம்`` என்றும், சுத்தி பெற்ற ஆன்மாப் பின்னர் பிரபஞ்சத்தால் தாக்குண்ணாமையே ``தூடணம்`` என்றும் கூறினார். விலாசம் - விளக்கம். தன்னில் விலாசம் - சிவத்தில் வியாப்பியமாய் மாசுபற்றா திருக்கை பிறழ்தல் - மாறுதல். அஃது இங்கு நீங்குதல் மேற்று. `ஆன்ம சுத்தியையும் கடந்தது? என்றமையால், பின்னிரண்டடிகளில் ஆன்ம லாபம் கூறப்பட்டதாம். ``பரம்`` என்று அதன் தோற்றத்தை. ``கலந்து`` என்றது, `கலந்தபின்` என்றபடி. `கலந்துபின்` என்றதனால், கலத்தலும் பெறப்பட்டது. `கலந்த பின் உளதாம் பராதீதம்` என்க. இதனை ``அற்ற அதீதம்`` என்றது, `தேகம் நீங்கிய பின் நிகழும் அதீதம்` எனறபடி. நின் மலாவத்தையும், பராவத்தையும் அனுபவத்தில் சொல்லிறந்து நிற்பனவாயினும், அவற்றை முதற்கண் நூல்களால் உணர்ந்த வழியே முயற்சி கூடும் என்றற்கு ``நாடு அகராதி`` என்றார். நாடு, முதனிலைத் தொழிற்பெயர். அகராதி, அடையடுத்த ஆகுபெயர். `அகராதியால்` என உருபு விரிக்க.
இதனால், `முப்புரங்களில் தற்பரமாகிய பசுபரத்தை நூல்கள் வழியாக நுண்ணிதின் உணர்ந்து அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
சிற்பி