எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்


பண் :

பாடல் எண் : 1

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.

பொழிப்புரை :

பெத்தம் தடத்தமாக, முத்தியே சொரூபம் ஆதலின், முன் அதிகாரத்தில் கூறிய மும்முத்திகளையே இவ்வதிகாரத்தில் `முச்சொரூபம்` என ஏழு மந்திரங்களால் வேறொரு வகையாக விளக்குகின்றார். `பெத்தம் தடத்தமே, முத்தியே சொரூபம்` என உணர்தலே இவ்வதிகாரத்தின் பயன். (தடத்தம் - செயற்கை, சொரூபம் - இயற்கை.)
`ஆணவம், திரோதாயி, மாயை, மாயேயம், கன்மம்` என இவ்வாறு ஐந்து மலங்களும் ஆன்மாவை வந்து பற்றி, ஒன்று, இரண்டு, மூன்று`, என இவ்வாறு தொகை மிகுந்த முறையிலே அவற்றினின்றும் ஒவ்வொன்றாக நீங்கி, முழுதும் விடுபட்ட ஆன்ம ஞானம், பின் `சிவோகமஸ்மி` என்னும் அனுபவத்தைப் பெற்று, அதற்குப் பின்னும் மேலே மேலே சென்று முச்சொரூபமாகிய மும்முத்திகளைப் பெற்று, முடிவில் அநாதியான சொரூப சிவனை அடைந்து நலம் பெறும்.

குறிப்புரை :

மலம் ஐந்தும் ஏறிய முறையே நீங்குதலாவது, பிராரத்த கன்மம் நீங்க, அதனால் வந்த மாயேயம் நீங்குதலும், காரியமாகிய மாயேயம் நீங்கவே காரணமாகிய மாயையும் நீங்குதலும், கன்மம், மாயேயம், மாயை இவைகளைச் செலுத்தி நிற்பதே திரோதாயி ஆதலின் இம்மூன்றும் நீங்க, திரோதாயியாய் அவற்றைச் செலுத்தி நின்ற சத்தியும் அந்நிலை மாறி அருட் சத்தியாய் ஆன்ம அறிவிற் பதிதலும், அஃது அவ்வாறு பதியவே, ஆணவம் நீங்குதலுமாம்.
`எறிய மலம் ஐந்திடை அடைந்தவாறே ஆறிய ஞானம்` என்க. ஆறுதல் - தணிதல்; நீங்குதல். ஞானம், இங்கு ஆன்ம ஞானம். முன் அதிகாரத்தில் கூறப்பட்ட, `சீவன் முத்தி, சிவமுத்தி, பர முத்தி` என்பனவே இவ்வதிகாரத்தில் ஆன்ம சொரூபம், சிவ சொரூபம், பர சொரூபம், என மூச்சொரூபங்களாக வைத்து உணர்த்தப்படுகின்றன. அவற்றுள் ஆன்ம சொரூபம், ``ஆறிய ஞானம்`` என்பதனாலும், சிவ சொரூபம் ``சிவோகம் அடைந்திட்டு`` என்பதனாலும், பர சொரூபம், பண்டைப்பரன் உண்மை எய்தும், என்பதனாலும் இங்கு உணர்த்த ப்பட்டன. தச, காரியத்துள் தத்துவரூபம் முதல் ஆன்ம தரிசனம் ஈறாக உள்ளவை ஆன்ம சொரூபமாகவும், சிவயோக சிவ போகங்கள் சிவ சொரூபமாகவும், பரமுத்தி நிலை பர சொரூபமாகவும் வைத்து உணர்த்தப்படுதல் அறிக. சிவ ரூபம் ஆன்ம தரிசனத்துள்ளும், ஆன்ம சுத்தியும், சிவ தரிசனமும் சிவபோகத்துள்ளும் அடங்கும்.
பின்வரும், `பரன் உண்மை எய்துதலையும் உடன் வைத்து, ``முச் சொரூபத்து வீடுற்று`` என்றார். பண்டு - அனாதி.
இதனால், `முச்சொரூபமாவன இவை` என்பதும், அவற்றின் இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பொழிப்புரை :

`சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்` என்னும் மூவகை உயிர்களுக்கும் மூன்றுவகையான மாளிகை போன்ற, `பிராகிருத சரீரம், மாயேய சரீரம், வைந்தவ சரீரம்` என்னும் மூன்று வகையான உடம்புகள் இருப்பிடமாய் உள்ளன. அந்த மூன்று வகை உடம்புகட்குள்ளேதான் தத்துவங்களும் உள்ளன. அவ்வுடம்புகளில் ஒவ்வொன்றிலுமே `ஆன்மா,சிவம், பரம்` என்னும் மூன்று ஒளிப்பொருள்களும் வெளிப்படுகின்றன. அவ்வொளிகளை நேரே உணரும் வாய்ப்பு உளதாயின், அதன்பின் மேற்கூறிய உடம்புகளுக் குள்ளே உயிர் இருக்க வேண்டிய விதி இல்லையாய்விடும்.

குறிப்புரை :

``மாளிகை மூவர்`` என்பன உருவகங்கள். `மூவர் இருப்பிடமாக மாளிகை மூன்று உளர்`` என இயைக்க. முதிர்பு - வலுவடைதல். அஃதாவது உடம்பு அழிந்தாலும் தாம் அழியா திருத்தல். அத்தன்மை யுடையனவே தத்துவங்களாம் ``மூன்றினின் என்பதில் இன், வேண்டாவழிச் சாரியை, சோதி - ஒளி; என்றது அறிவை. காண்டல் ஆன்ம, சிவ, பர தரிசனம் செய்தலாம். தடத்த சிவத்தையே `சிவம்` என்றும், சொரூப சிவத்தைப், `பரம்` என்றும் நாயனார் இவ்விடங்களில் குறித்தருளுகின்றார். ``மூன்றுஎன்பதைச் சோதிக்கும் கூட்டி, `மூன்று சோதியை`` என உரைக்க. பரம் உடம்பினுள்ளே முளைத்தெழுதலாவது, `ஞான நிலையாகிய நின்மல நிலைக்குமேல் பர நிலையில் அடையப்படும் ஞேயப்பொருள் உண்டு என்னும் உணர்வு தோன்றுதல். கணக்கு - கட்டளை, விதி. காயக் கணக்கு அறுதல் பிறப்பு அறுதலாம். பயனை, ``ஆறு`` என்றார், ``அறத்து ஆறு இது என வேண்டா``l என்பதிற்போல. ``ஆறு`` என்பதன் பின், `உண்டாம்` என்னும் பொருட்டாகிய, `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், முச்சொரூபங்களையும் மூவகை உயிர்களும் தம் தம் உடம்பிற்றானே உணர்ந்து அடைதற்குரியன என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன
நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய
பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.

பொழிப்புரை :

உலகங்கள் எல்லாம் ஒடுக்க நிலையை எய்தி விட்டன. அதனால், உலகம் உள்ளளவும் இருந்த அந்த ஊழியும் போய், அடுத்த ஊழி வரும் நிலைமை தோன்றி விட்டது, உலகம் உள்ள பொழுது விளங்கிக்கொண்டிருந்த, `ஞாயிறு, திங்கள் தீ` என்னும் முச்சுடர்களும் காரண நிலையில் ஒன்றாகி விட்டன. இவை போல எல்லாப் பொருள்களும் தம் தம் காரண நிலைகளை எய்தி விட்டன. ஆயினும் பரமசிவன் முன் இருந்தவாறே இருக்கின்றான் என்றால், அவனது நீளத்தின் எல்லையையும், அகலத்தின் எல்லையையும் யார் அறிய வல்லார்!

குறிப்புரை :

``பெயர்ந்து`` என்னும் எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `போயினது` என்பது, ``போன`` எனக் குறைந்து நின்றது. ஆய - ஆயின. பரிசு - தன்மை. காரியத்தில் தூலமாய்க் காணப்படும் இயல்புகள் காரணத்தில் சூக்குமமாய்க் காணப்படாது நிற்கும் ஆதலின் அங்ஙனம் நிற்பவனவற்றை, `தன்மை` என்றார். பான்மை - பகுதி; என்றது காரணப் பகுதிகளை, ``பான்மையுள்`` என்பதன்பின், `ஆயின` என என்னும் சொல்லெச்சம் வருவித்துக்கொள்க. நீள அகலங்கள் காலம் பற்றியும், இடம் பற்றியும் கொள்ளப்படும். பரம் பொருள், `நித்தியம்` ஆதலின் கால அளவைக் கடந்ததும், எல்லாப் பொருளும் தன்னில் வியாப்பியமாய் நிற்க, தான் எல்லாவற்றிற்கும் வியாபகமாய் நிற்றலின் இடத்தைக் கடந்ததும் ஆயிற்று, அவற்றையே, ``அளவும், பெருமையும் ஆர் அறிவார்`` என்றார். ``ஆர் அறிவார் அவ் அகலமும் நீளமும்``* என முன்னருங் கூறினார். ``நீள அகலம் உடையாய் போற்றி``* என்றதும், ஏனையெல்லாப் பொருட்கும் வியாபகமாய் நிற்றலையே குறித்தது. இதிலும் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால் முச்சொரூபங்களுள் பர சொரூபத்தின் பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து)
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.

பொழிப்புரை :

மகா மாயையை முதலாக வைத்து எண்ணுகின்ற காரணங்களையும், அவற்றின் காரியங்களையும் வேறு வேறு வகைபடத் தோற்றுவித்து, அவற்றை அங்ஙனம் செய்தற்கு ஏற்ற `அருவம், உருவம், அருவுருவம்` என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொண்டு, மூவகை நிலையில் நின்று, முடிவில் குருவாகியும் வந்து ஆட்கொள்கின்ற அருளாளனாகிய சிவன், அளவில்லாத உயிர்களிலும் அவ்வவற் -றோடும் சேர்ந்து உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும், கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான்.

குறிப்புரை :

``வாய்`` என்பது `வாயில்` என்னும் பொருட்டாய், `காரணம்` எனப் பொருள் தந்தது. உலகத்திற்கு உரிய முதற் காரணங்களில், `மகா மாயை` எனப்படும் சுத்த மாயையே பெரிதாகலின் அதனைப் ``பெருவாய்`` என்றார். `முதலாக` என ஆக்கம் வருவித்துக் கொள்க. அதனை முதலாக வைத்து எண்ணுமாறு `மகா மாயை, மாயை, பிரகிருதி` என இம்முறையால் எண்ணுதலாம். பேதம் வகை. காரணங்கள் இயல்பிலே வேறுபட்டிருப்பினும், அவ் வேற்றுமையை உயிர்களின் தகுதி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பொருத்துதலின், அங்ஙனம் பொருத்துதலையே காரணங்களையும் சிவனே பேதித்ததாகக் கூறினார். காரண வேறு பாட்டிற்கு ஏற்பக் காரியங்களை வேறு வேறாகச் செய்பவன் சிவனே யாதல் தெளிவு. செய்யுள் நோக்கி, அருவுருவம் இறுதியில் வைக்கப்பட்டது. அருவம் முதலிய மூவகைத் திருமேனிகளின் நிலை, `இலயம், போகம், அதிகாரம்` என்பனவாம் என்பது மேலெல்லாம் சொல்லப்பட்டது. `உடனாய், ஒன்றாய்,வேறாய் இருத்தலே அத்துவிதமாய் இருத்தலாம்` என்பது சித்தாந்தம் ஆதல் வெளிப்படை.
``உலகெலா மாகி வேறாய்
உடனுமாய்``3
என்பது சிவஞானசித்தி.
``ஈறாய், முதல் ஒன்றாய், இரு பெண் ஆண், குணம் மூன்றாய்,
மாறாமரை நான்காய், வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார்சுவை, ஏழோசையொடு, எட்டுத்திசை தானாய்,
வேறாய், உடன் ஆனான் இடம் வீழிம்மிழ லையே``l
என்னும் திருமுறைத் திமொழியும்,
``ஈறாகி அங்கே, முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய்,
மாறாத எண்வகையாய், மற்றிவற்றின் - வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை யென்றும்
கடனாய் இருக்கின்றான் காண்``8
என அதனை எடுத்துக்காட்டி நிறுவிய சாத்திர யாப்பும் கண்டுணரற் பாலன. சத்தி கோன் சத்திக்குத் தலைவன். ஞானேச்சாக் கிரியா சத்திகளைக் கொண்டு செயலாற்றும் முதல்வன் `பதி` எனப்படுபவன் இவனே. இந்நிலை தடத்தமேயாகலின் இவனை இங்கு, `சிவன்` எனக் கொள்க. `பன்மையில்` என உருபு விரிக்க. ஈற்றில் ``உருவாய்`` என்றது, உயிர்தோறும் தனித்தனிப் `பொருந்தும் பொருளாய்` என்றபடி.
இதனால், முச்சொரூபத்துள் சிவ சொரூபத்தின் இயல்புகள் வகுத்துரைக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
அணியென லாய்நின்ற ஆறது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

பொழிப்புரை :

இரத்தினங்கள் நிறம், ஒளி, வடிவம் என்பவற்றைப் பெற்றுப் பல அணிகலங்களாய் நிற்கும் முறைமை போலத் தான் `பரம், சிவம், ஆன்மா` என்னும் முச்சொரூபத்தை யுடையதாகி அந் நிலைகளில் தனது சத்தியால் சீவனும் அடங்கித் தோன்றும்படி செய்த, `நந்தி` என்னும் பெயரையுடைய அந்த முதல்வனது திருவடிகளையே பற்றாகப் பற்றி உய்வாயாக.

குறிப்புரை :

பரம் - சொரூப சிவம். அதன் வடிவம் அகண்டமாய் இருத்தல் பின்னர்க் கண்டமாய் உள்ள வடிவத்தைக் கூறுதலின் அதனோடு ஒப்ப அகண்டத்தையும் `வடிவம்` என்றார். `இலக்கணம்` என்றது வடிவத்தை. சிவம் - சதாசிவன், மகேசுரன் ஆகிய தடத்த சிவங்கள். இனிச் சிவமே ஆன்ம சொரூபமாய் நிற்றலாவது சீவனில் அதுவேயாய்க் கலந்து நிற்றல். `பர சொரூபம் சிவ சொரூபமாயும் ஆன்ம சொரூபமாயும் நிற்றல் ஆதி சத்தியால் என்றபடி ``ஆதி சத்தியால்`` என்பதன் பின், `அவற்றில்` என்பது வருவிக்க.
இதனால், `ஒரு பெரும் பொருளே தனது சத்தியால் முச்சொரூபமாய் நின்று உயிர்களை உய்விக்கின்றது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.

பொழிப்புரை :

பிற மணிகளில் ``ஒளி`` என்றும், `நிறம்` என்றும் `சோபை` என்றும் இங்ஙனம் பல பெயர்களால் சொல்லப்பட்டு விளங்குகின்ற கதிர்கள் ஒரு படிக மணியிலே பொருந்த, அப்படிக மணிவேறு பல மணிகளாய்க் காட்சியளிப்பது போன்றதே `தத்துமசி` மகாவாக்கியத்தால் உபதேசிக்கப்படும் பொருள். அஃதாவது, `உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின், பாசத்தைச் சார்ந்து பாசமாய் இருந்த நீ, அந்நிலை நீங்கிச் சிவத்தைச் சார்ந்து சிவம் ஆகிறாய்` என்பதாம். (சீவன் பாசமாய் இருந்த நிலை சொல்லால் சொல்லப்படும். அஃது அந்நிலையினின்றும் நீங்கிச் சிவமாகிய நிலை) சொல்லால் சொல்ல வாராது, முத்தி பஞ்சக்கரமும் மொழியாய் இராது அனுபவமான ஒளி நிலையாகும். இது முப்பாழும் கடந்த நிலையும், குரு பஞ்சாக்கரத்தை உபதேசித்து, சின்முத்திரையால் அஞ் ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞானத்தை உணர்த்திய முடிந்த நிலையும் ஆகும்.

குறிப்புரை :

``நல்ல மணி`` என்றது சார்ந்ததன் வண்ணமாம் இயல்பால் சாரப்பட்ட பல மணிகளாய் விளங்கும் மணி: என்றது படிக மணியை. ஆகவே, ``கல்`` என்றது பிற மணிகளையாயிற்று. கதிரின் இயல்பை இனிது விளக்குவார் அதனைப் பல பெயர்களால் குறித்தார். ``தட்ட`` என்பதை ``ஒன்றின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக, முப்பதம் - முப்பதப் பொருள். இது சொல்லாகுபெயர். இதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. அல் - இருள். அல் அறுத்ததைக் கூறவே, ஒளியை வழங்கியதும் தானே பெறப்பட்டது. அறு முத்திரை, `அறுத்த முத்திரை` எனப் பிறவினை வினைத்தொகை. `உரைத்த அறுத்த` என்பதற்கு. `குரு` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.
இதனுள், `முச்சொரூபத்துள் முடிவான பர சொரூபத்தை குரு உபதேசத்தின் வழி அடைதலே முடிநிலைப் பயன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்த
இடந்தரு வாசலை மேல்திற வீரே.

பொழிப்புரை :

வரிசையாய் அமைந்துள்ள செந்தாமரை மலர்களின் பல்வேறு வகையாய்க் காட்சியளிக்கின்ற இறைவனை மூலாதாரத்தி னின்றும் எழுந்து மேல்நோக்கி நடக்கின்ற அனல் நாதாந்தத்திலே நிறுத்திக்காட்ட, அதனால், அவ்விடத்தை அடைந்த பால் ஒழுகும் தனங்களையுடைய பெருமாட்டி அடைத்து வைத்திருக்கின்ற விசாலமான மேல் வாசலைத் திறக்கும் உபாயம் அறிந்து திறவுங்கள்.

குறிப்புரை :

`அப்பொழுது அவ்வத் தாமரை அளவில் அடங்கித் தோன்றிய இறைவன், எல்லையில் பேரொளியாய்க் காட்சி யளிப்பான்` என்பது குறிப்பெச்சம். `அக்காட்சி சிவ சொரூபக் காட்சி யாகும்` என்பதும், அதனைக் கண்டால் பர சொரூபத்தைக் காணுதல் கூடும் என்பதும் இதன் உட்கருத்துக்களாகும்.
ஒன்றையொன்று சார்ந்திருப்பதை, உடந்தையாய் இருப்பது, என்றல் வழக்கு. `உடந்தை` என்பது உடந்த` என நின்றது. ஒற்று மிகாமையும் இத்திரிபு நோக்கியேயாம் பின் வந்த `செந்தாமரை` என்பது அது போலும் தீயைக் குறித்தது உடந்த செந்தாமரை ஆறு ஆதாரங்கள். தீ, மூலாக்கினி. `நாதத்தில் தகைந்தால்` என்க. தகைதல் - தடுத்தல். `தகைந்ததால்` என்பது குறைந்து நின்றது. `சோதியைத் தகைந்ததால்` என இயைக்க. பயோதரி, குண்டலி, சத்தி, அட்டி அடைத்தல் இறுக மூடிவைத்தல் மேல் வாசல் துவாதாசாந்தத்திற் செல்லும் வழி. அஃது உச்சித் துளையாம். அதனைத் திறத்தலாவது, உணர்வு அதனைக் கடந்து செல்லும் இயல்பினை அடைதல் `மேல் வாசலை` என மொழி மாற்றி யுரைக்க.
இதனால், சிவசொரூப பர சொரூபங்களை அடைதற்கு உபாயம் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி