எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்


பண் :

பாடல் எண் : 1

இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுறை பேதமும் ஒன்றென லாமே.

பொழிப்புரை :

உயிர் சகலாவத்தையில் தத்துவங்களோடு கூடி `சீவான்மா` எனப் பெயர் பெற்று நிற்பினும் அது தத்துவங்களின் வேறாதல்போல்வதும், நின்மலாவத்தையில் தத்துவங்களின் நீங்கி வாக்குகளின் வடிவாய் நிற்குமிடத்து `அந்தரான்மா` எனப்பெயர் பெற்று நிற்பினும் அது வாக்குகளின் வேறாதல் போல்வதும் பரா வத்தையில் பரத்தோடு கூடிப் பரான்மா எனப் பெயர் பெற்று நிற்பினும் அது பரத்தின் வேறாதல் போல்வதுந்தாம். பரம் பொருள் சீவான் மாவில் நிறைந்து `சிவம்` என நிற்பினும் அது சிவனின் வேறாதலும், பரான்மாவில் நிறைந்து `பரம்` என நிற்பினும் அது பரான்மாவின் வேறாதலும்.

குறிப்புரை :

எனவே, `பராமான்மாவும், சீவான்மாவும் எவ்வாற் றானும் ஒன்றாதல் இல்லை` என்பதே இதனால் சொல்லப்பட்டதாம். அவத்தைகளே இங்கு `இடம்` எனப்பட்டன. ``ஒருவன்`` என்பது `புருடன்` என்னும் பொருட்டாய், உயிரைக் குறித்தது. ``உரு`` என்றது, தனக்கு வேறாய பொருள்` என்றவாறு அவற்றை உயிர், `தன்னின் வேறு` எனக் காணுதல் ஞானத்தினாலாம். ஆகவே, அந்த ஞானத்தினாற்றானே உயிர் பரத்தையும் `தன்னின் வேறு` என உணர்தல் வேண்டும் என்பதாம். அவ்வாறு உணரும் உணர்வே பதிஞானத்தைத் தரும். அவ்வாறின்றி, உயிர் தன்னையே பரமாகக் காணுதல் மல வாசனை பற்றி நிகழும் பசுஞானமாம். ``ஒன்று எனலாம்`` என்றது, `வேறாக உணரப் படுதலால் ஒரு தன்மையவாம்` என்றபடி. `திடமது போலப் பேதமும் ஒன்றெனலாம்` என இயைக்க. அது பகுதிப் பொருள் விகுதி.
இதில் உணர்த்தப்பட்ட பொருள் முன்பே சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒளியை ஒளிசெய்து ஓம்என் றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல்எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதந் தானே.

பொழிப்புரை :

பொருள்களை மாறாக உணரும் மயக்கத்தை நீக்கி உள்ளவாறுணரும் தெளிவைத் தருதலால் குண்டலி சத்தி ஒளியெனத் தக்கது. அதனை உலகர் இருளாக்கி வைத்துள்ளனர். அவ்வாறில்லாது அதனை ஒளியாகவே விளங்கும்படிச் செய்தல் வேண்டும். அது பிராணாயாமத்தால் மூலாக்கினியை எழுப்புதலால் உண்டாகும். அஃது உண்டாகும் பொழுதுதான் `வெறுங் காற்று` எனப்படுகின்ற மூச்சு சூரிய சந்திர கலைகளாம் சிறப்பு வளியாகும். அதனை அவ்வாறு செய்து, பயன் கிட்டும்படி கும்பகத்தால் சேமித்து, அதனானே சுழு முனை வழி வழியாயில்லாமல் அடைத்தும், உச்சியில் அருள் ஞானம் விளங்குகின்ற இடம் இடமாய் இல்லாமல் பாழ்படுத்தியும் வைத்திருக்கின்ற நிலையை மாற்றி வழியாகவும், இடமாகவும் செய்து குண்டலியை `ஓம்` என்று எழுப்பி மேற்போய் உலாவச் செய்து தெளி வுணர்வைப் பெற்றால், சிவ சீவர்களது உண்மை நிலை விளங்கும்.

குறிப்புரை :

`ஓம்` என்று எழுப்பி - என்றதனால், இவ்யோகம் பிரணவயோகமாதல் விளங்கும்.
இதனால், மேற்சொல்லப்பட்ட சிவ பர சீவர் பேதம் விளங்குதற்கு வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

முக்கா ரணங்களின் மூர்ச்சை தீர்த்(து) ஆவதக்
கைக்கா ரணமென்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மனி வேறே தனித்தேக
ஒக்கும்அ துன்மனி ஓதுட் சமாதியே.

பொழிப்புரை :

ஆறாதாரங்களில் மணிபூரகம், அனாகதம் ஆஞ்ஞை என்னும் மூன்று ஆதாரங்கள் சிறப்புடையன. சுவாதிட்டத் தினின்றும் எழுகின்ற பிராணன் `உதானன்` எனப் பெயர் பெற்று மேலோங்கி இவ்விடங்களில் சென்று ஆஞ்ஞையில் முடியும். அவ்வாறு முடியும்படி அதனை முடித்த பின்பு அவ்வாறு முடித்ததனால் உண்டாகும் பயனைக் கைம்மேற் பலனாக எமக்கு எம் ஆசிரியர் நந்தி பெருமான் அளித்தருளினார். அப்பயன் தான் யாதெனில், ஆஞ்ஞையில் விளங்கிய மனோன்மணி சத்தி அதற்கு மேலே வியாபினி சமனை உன்மனைகளாய்ச் செல்ல, உன்மனாந்தத்தில் சிவத்தோடு ஒன்றும் சமாதி நிலையாம்.

குறிப்புரை :

``காரணம்`` இரண்டில் முன்னது இடத்தையும், பின்னது காரணத்தினால் விளைவதாகிய பயனையும் குறித்தன. தீர்த்தல் - முடித்தல். `தீர்த்து, அதனால் ஆவதாகிய அப்பயனைத் தந்தனன் நந்தி` என்க. காண், முன்னிலையசை. ஏக ஒக்கும் அது - செல்லும் நிலையில் முடியும் நிலையாகின்ற அது, `உன் மனியாம்` என்க. ``உள்`` என்றது நுட்பத்தை. இது, பொது யோக சமாதியாகாது, பிராசாத யோக சமாதி யாகலின், ``உட்சமாதி`` என்றார்.
இதனால், முன் மந்திரத்தில், ``ஓம்`` - என்று எழுப்பி மேல் எழ வைத்ததலால் பயன் விளைதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.
சிற்பி