எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்


பண் :

பாடல் எண் : 1

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.

பொழிப்புரை :

காரிய தத்துவங்களாகிய தூல உடம்பு, தூல பூதம், சூக்கும பூதம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகிய ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு அவற்றின் நீங்கிய நிலை `மாயப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து காரண தத்துவங்களாகிய வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு நீங்கிய நிலை `போதப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து முன் நீங்கியவற்றின் வாசனை உளதாகிய சுத்த தத்துவங்களையும் வேறாகக் கண்டு கடந்த நிலை `உபசாந்தம்` எனப்படும் இதனையும் கடந்த நிலையே பந்தம் முழுதும் நீங்கிய வீட்டு நிலையாம்.

குறிப்புரை :

போதப்பாழ், `சீவப்பாழ்` என்றும், உபசாந்தம், வியோமப் பாழ்` என்றும் சொல்லப்படுதலை வருகின்ற மந்திரத்தில் காண்க. ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவத்தின் காரியம் ஆதல் பற்றி அவற்றைக் ``காரியம் ஏழ்`` எனவும், அவை போல வித்தியா தத்துவம் வேறு தத்துவத்தின் காரியம் ஆகாது ஆன்ம தத்துவத்திற்குக் காரண மாகியே நிற்றல் பற்றி அவற்றை, ``காரணம் ஏழ்`` என்றும், அதற்கு மேல் நீங்க வேண்டுவன இன்மையின் அந்நிலையை, ``உபசாந்தம்`` என்றும் கூறினார். தீர்தற்கு, `பந்தம்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `முப்பாழாவன இவை` என்பதும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

பொழிப்புரை :

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட மற்றும் அவையே, `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில் `போதப் பாழ்` எனக் கூறியதைச் ``சீவப் பாழ்`` என்றும் ``உபசாந்தம்`` எனக் கூறியதை ``வியோமப் பாழ்`` என்றும் இம்மந்திரத்திற் கூறியவாறு காண்க.
இதனால், `முப்பாழ்` என்பவற்றின் பெயர் வேறுபாடுகளும், உண்மை இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

எதிர்அற நாளும் எருதுவந் தேறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனும் பாழைக் கடந்துகற் பனையை
உதறிஅப் பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :

`என்றும் தன்னோடு ஒப்பார் இன்றி ஆனேற்றையே ஊர்தியாக உவந்து ஏறி உலாவுகின்ற சிவன் ஒருவனே பதி; ஏனையோர் யாவரும் பசுக்களே எனத் துணிந்து அவனது திருவடியை அடைய வேண்டி, முன்னர், `இதுவே கதி`, எனக் கருதிய மூன்று பாழ்களையும் கடந்து முன் கருதிய கருது கோள்களையெல்லாம் உதறித்தள்ளி, அவற்றையெல்லாம் கடந்த வேறொரு தனிப் பாழில் இப்பொழுது நான் அடங்கியிருக்கின்றேன்.

குறிப்புரை :

இதனால், `பாழ்` என்பது, `மாசாவன அனைத்தும் நீங்கிய தூய்மையே` என்பது விளங்கும். ஆகவே, மாயப் பாழாவது மான்` எனப்படும் பிரகிருதி நீக்கமும், `போதப் பாழ்` என்பது, `மோகினி` எனப்படும் அசுத்த மாயை நீக்கமும், `வியோமப் பாழ்` என்பது, `விந்து` எனப்படும் சுத்தமாயை நீக்கமும் ஆதல் பெறப் பட்டது. முப்பாழ்களுள் ஒன்றிரண்டையே முழுத் தூய்மையாகக் கருதுவார் கருத்துக்கள் திரிபுணர்வேயாதல் பற்றி அவற்றைக் ``கற்பனை`` என்றார். முப்பாழையும் கடந்த அப்பாழே முன் மந்திரத்தில் ``தூய சொரூபம்`` எனப்பட்டது. ``ஏறும் பதியெனும் நந்தி`` என்பதை, `ஏறும் நந்தியெனும் பதி` என மாற்றியுரைக்க. இந்தப் பதியினது பதமது கூட` என்றதனால் `இம் முப்பாழ்த் தரிசனமும், அவற்றது சுத்தியும் சிவபெருமானைப் பொதுநீக்கித் தனக்குவமை யில்லாத தனிப்பெரும் பொருளாக உணரும் உணர்வைப் பெற்றவர் களுக்கே கூடும்` என்றதாயிற்று. ``எதிர் அற`` என்றதும், இதனை வலியுறுத்தற்கேயாம்.
இதனால், `முப்பாழுங் கடந்தவழியே முதற்பாழாகிய சொரூப நிலையை அடைதல் கூடும்` என்பதும், `அது சிவஞானம் வழியாகவே கூடும்` என்பது கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

துரியம் அடங்கிய சொல்லுறும் பாழை
அரிய பரம்பரம்` என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் அன்றே உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறி வாரே.

பொழிப்புரை :

முப்பாழையும் கடந்த, சொல்லற்ற நிலையாம் சொரூபமாகிய உண்மையை, அறியாதார் சிலர், `அஃது உயிர்களால் என்றும் அடையப்படாத மிக மேலேயுள்ள நிலை` எனக் கூறுவர். (உயிர்களால் என்றுமே அடையப்படாது எனின், `அத்தன்மையதாகிய ஒருபொருள் உண்டு` என்பதே பெறப்படாது முயற்கோடு, ஆகாயத் தாமரை முதலியனபோல அதுவும் வெறும் கற்பனைப் பொருளாய் விடும். மிக மேலானதேயானும் ஆதலின்) அஃது என்றுமே உயிர்களால் அடையப்படாதது அன்று; செயற்கரிய சாதனைகளைச் செய்தவழிக் கிடைக்கின்ற ஓர் அரிய இடமேயாம். இவ்வுண்மையை அறிந்து, அவ்வாற்றால் அதனை அடைய முயல்பவர் எத்துணைப் பேர்? ஒரு சிலரேயாவர்.

குறிப்புரை :

``துரியம்`` என்றது பாழை. அடங்குதல் - கீழ்ப்படுதல்; எனவே சொல்லறும் பாழ் அதீத நிலையாயிற்று. ``அரிய`` என்பன, கிடைக்கப்படாத` என்னும் பொருளன. பரம், பரம் - மேலதற்கும் மேலானது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, ``நிலம்`` என்பதனுடன் கூட்டுக. உதித்தல் - எதிர்ப்படுதல். ``அறிவார்`` என்பதில் அறிதல். அதனுடன் காரியமாகிய முயலுதலையும் குறித்தது. `முயலுதல் இல்லையேல், அறிந்ததனால் பயன் என்னை` என்க.
இதனால், `முப்பாழும் கடந்த முதற்பாழ் உயிர்களால் முயன்று அடையற்பாலதோ, அன்றோ` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. முன் மந்திரத்திரத்திலும், ``அப்பாழில் ஒடுங்குகின்றேன்`` என அனுபவம் காட்டினார். ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``8 என்பது நாயனாரது திருவுளம் ஆதலின், அதுபற்றி எழும் ஐயத்தை இதனால் அறுத்தருள்வாராயினார்.

பண் :

பாடல் எண் : 5

ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு
வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ
தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.

பொழிப்புரை :

`மெய்ப் பொருளை அருளாசிரியர் பக்குவம் வாய்ந்தவர்கட்கு உபதேசிக்கும் உபதேச மொழி, `சிவாய நம` என்னும் மந்திரமே என்பதைச் சைவப் பெருமக்களன்றிப் பிறர் தெளிய மாட்டாராயினும் சைவப் பெருமக்கள் அதனைத் தெளிந்து அதன் உண்மையை ஆராயுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களும் தம்மின் வேறாகி நீங்கிய பொழுது அந்த ஐந்தெழுத்தில் பாசத்திற்கு வழியாகிய `நம` என்பதை நீக்கி, முன்பு நகரத்தின் பொருளாய்த் திரோதானமாய் இருந்த சத்தி வேறுபட்டு அருட்சத்தியாய் வகாரத்தின் பொருளாகி, யகாரத்தின் பொருளாகிய ஆன்மாவை, யகாரம் நீங்கிய இரண் டெழுத்தில் ஈற்றெழுத்தாகிய வகாரம், முதலெழுத்தாகிய சிகாரத்தின் பொருளாகிய உண்மைச் சிவத்தில் பின் என்றும் நீங்காதவாறு சேர்ப்ப தாகவே யன்றோ உணரப்படும்! `பிறிதாக ஒன்றும் உணரப்படாது` என்பதாம்.

குறிப்புரை :

`பக்குவிகளுக்கு ஆசிரியர் உபதேசிக்கும் உபதேச மொழி திருவைந்தெழுத்தே` என்பது,
``மன்ன என்னை ஓரு வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்``3
என்ற ஆசிரியர்,
``நானேயோ தவம் செய்தேன்; சிவாயநம எனப்பெற்றேன்``l என்று அருளிச் செய்தமையால் விளங்கும். அவர் எடுத்த எடுப்பிலே, ``நமச் சிவாய வாஅழ்க``* என எடுத்தருளிச் செய்தமையும் நினைக்கத் தக்கது.
``நன்னெறி யாவது நமச்சி வாயவே``*
``நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே``*
என்னும் திருமொழிகளும் ஓர்ந்துணரற்பாலன. நன்னெறி சன் மார்க்கம். ஞானநெறி. வாய் - வழி: பாசத்திற்கு வழி. ஈற்றடியை முதலில் வைத்து, `நமவாகிய வாய் அகன்றிட்டு, வேறாகிய பரை, யவ்வை மெய்ப் பரன்பால் கூட்டும்; அஃதாவது வா சிய்யில் கூட்டும்` என இயைக்க. செய்யுள் பற்றி எழுத்தும், பொருளும் விரவி வரக் கூறினார். தேறாமை, `சிவாயநம` என்பதன் பெருமையைத் தெளியாமை. எனவே, தேறுதலும் அதன் பெருமையேயாற்று. தேறுதல், அதன் காரியமாகிய ஆராய்தலையும் உடன் உணர்த்திற்று.
இதனால், `முப்பாழையும் முறையே கடத்தற்கும் பின் முப்பாழையும் கடந்து அப்பாழை அடைதற்கும் நற்றுணையாவது திருவைந்தெழுத்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும்
உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

பொழிப்புரை :

`உயிர் உடம்பே; உடம்பே உயிர்` என இவ்வாறு உயிரின் இயல்பை மயங்கி உணர்ந்து, அந்நெறியிலே தங்கள் ஆராய்ச்சியைச் செலுத்தபவர்கட்கு உயிர் இல்பொருளேயாம். உயிர் இல்பொருளாயினமையின், உடம்பின் தன்மையை அவர் உணர்ந்ததும் உணராமையேயாம். ஆகவே, அவர்கட்கு இங்குக் கூறி வந்த இருட்குழியாகிய தத்துவச் சிக்கலும் இல்லை; அக்குழியினின்றும் ஏறும் கரையாகிய முப்பாழும் இல்லை. அவற்றைக் கடந்த வேறு வெளியாகிய பரநிலையும் இல்லை.

குறிப்புரை :

`இவையெல்லாம் உயிர் உடம்பின் வேறு என்பதை உணர்ந்து, நிலையற்ற உடல் நலத்தைப் பெரிதாக நினைந்து, அதனை அடைய முயல்பவர்கட்கே உள்ளனவாம்` என்றபடி. ``இல்லை`` என்றது, இருத்தலைப் பற்றிக் கவலை உண்டாதல் இல்லை` என்றதாம். இத்தன்மையை நோக்கியன்றோ தெய்வப் புலவர்,
``நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்;
நெஞ்சத் தவல மிலர்``l
என்று அருளிச் செய்தார். ஈற்றடியை அதன் அயலடிக்கு முன்னர்க் கூட்டுக. உள்ளம் - உயிர். உரு - உடம்பு.
இதனால், முடிநிலைப் பேறாகிய இவற்றைக் கூறுமிடத்து `இன்னோரன்ன மெய்ந்நூற் பொருள்கள் எல்லாம் தக்கார்க்கே உரியன` எனத் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி