எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி


பண் :

பாடல் எண் : 1

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை
உற்றிடும் காரணம் காரியத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

பொழிப்புரை :

முன்அதிகாரத் தொடக்கத்தில்l `காரிய தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, சீவஉபாதி` என்றும், `காரண தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, `பரோபாதி` என்றும் கூறப்பட்டன. இங்கு, `பரம்` என்பது, பரம் பொருளைக் குறியாமல், `சீவ உபாதிக்கு மேலே உள்ளவை` எனப் பொருள் தந்தது. `இவ்விருவகை உபாதிகளும் நீங்கினால் காரியம் காரணத்தோடு அற்றுவிட்டதாகும். அங்ஙனம் அவை அற்று விட்டதால், `அணு` எனப்பட்ட உயிர் அவ்வணுத்தன்மை நீங்கி, வியாபகப் பொருளாகிய சிவத்தை அடைந்து தனது வியாபக நிலையைப் பெற்று இன்புறும்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

குறிப்புரை :

அற அறுதல் - முற்றும் நீங்குதல். இரண்டாம் அடியிலும் ``ஏழும்`` என்பதன் பின்னும் `அற` என்பது வருவிக்க. ``காரியம், காரணம்`` என்பன நிரல் நிறையாய் மேற்கூறிய `சீவ உபாதி, பரோ பாதி, என்பவற்றோடு இயைந்தன. பின்னர் ``அணு வருதலால், அச் சிவம்`` என்னும் சுட்டு `வியாபகச் சிவம்` என அதன் வியாபகத்தைச் சுட்டிற்றாம். `அணு வியாபகம் ஆகும்` என்றதனால், `அணுத்தன்மை உயிர்க்குச் செயற்கையால் வந்தது என்பதும், `வியாபகமே அவனது இயற்கை` என்பதும் பெறப்பட்டன. செயற்கை, ஆணவ மலம்.
இதனால், உயிர் செயற்கையின் நீங்கி இயற்கையை எய்துதற்குத் தடையாய் உள்ளவை உபாதிகள்` என்பதும், அவை, `காரிய உபாதி, காரண உபாதி` என இருவகையினவாம் என்பதும் கூறப்பட்டன.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அகராம் உயிரே; உகாரம் பரமே`` என்னும் மந்திரம் மேல் நான்காம் தந்திரத்தில், `திருவம் பலச் சக்கரம்` அதிகாரத்தில்* சிறிது வேறுபாட்டுடன் வந்ததேயாகும் இவ்வதிகாரத்தில் அதற்கு இயைபில்லை.]

பண் :

பாடல் எண் : 2

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நினைவு மிகுத்த நனா கனா
ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

பொழிப்புரை :

தத்துவங்களுக்குள்ளே சில காரியமும், சில காரணமும் ஆதல் பற்றி அவற்றை, `காரியம், காரணம்` எனப் பிரித்துக் கூறினாலும் தத்துவங்கள் அனைத்திற்கும் மாயையே காரணமாகத் தத்துவங்கள் அவற்றின் காரியம் ஆதல் பற்றி அவை அனைத்தையும் இங்கு ``காரியோபாதி`` என்றார். ``நனவு`` என்றது சகல சாக்கிரத்தை. அதன்கண் நிகழும் `நனவு, கனவு, உறக்கம்` என்பவற்றில், இவற்றிற்கு முன் நிலைகளில் எல்லாம் கிடைக்கப்பெறாத பேறு கிடைக்கப் பெறுகின்ற துரிய நிலையை அடைந்த பொழுதுதான் உயிர் உண்மையில் `துவம்` பதப் பொருளாகும்.

குறிப்புரை :

`நினைவு வேறாய்` என மாற்றியுரைக்க. நினைவு - உணர்வு. ``மிகுத்த`` என்றதனால், நின்மலமாதல் குறிக்கப்பட்டது. எனவே, இங்குக் கூறப்பட்ட நனவு முதலியன நின்மல சாக்கிரம் முதலியவாயின ஆகவே, `இங்குக் கூறப்பட்ட உபாதிகள் நின்மலாவத்தையில் நீங்கும்` என்றதாயிற்று. நிலம், துரியம், ஆதல் - கிடைத்தல். `ஆம் நிலம்` என்க. உபாதி நீங்கிய நிலையே உயிர்க்குத் தூய்மையாதலின் `அது தொம்பதப் பொருளாம்` என்றார். ``பதம்`` என்பது சொல்லாகு பெயராய் அதன் பொருளைக் குறித்தது.
இதனால் உபாதிகள் நீங்கும் இடம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உயிர்க்குயி ராகி ஒழிவற் றழிவற்(று)
அயிர்ப்பறு காரணோ பாதிவெதி ரேசத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமித்தா லன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாதே.

பொழிப்புரை :

எல்லா உயிர்களிலும் அவற்றிற்கு உயிராய், ஒரு ஞான்றும் விட்டு நீங்காது, அழிவின்றியிருப்பினும் உயிர்கள் முன் மந்திரத்தில் கூறிய உபாதிகள் அனைத்தினின்றும் நீங்கிய பின்பே முன்பு பாலில் நெய்போல விளங்காதிருந்த நிலையினின்றும் நீங்கித் தயிரில் நெய்போல வெளிப்பட்டு விளங்குகின்ற சிவன் அவ்வாறு வெளிப்பட்டாலன்றி யாதோர் உயிர்க்கும் துன்பத்தைத் தருகின்ற ஆணவ மலம் நீங்குதல் உண்டாகாது.

குறிப்புரை :

`உயிர்கட்கு உள்ள உபாதிகளில் மூல உபாதி ஆணவ மலமே யாதலின், முன் மந்திரத்தில் மாயேயங்களாகிய ஆறாறும் நீங்கியபின் உயிர்தொம்பதமாம் - என்றது என்னை` என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். ஆணவத்தை நீக்க வேண்டியே மாயேயங்கள் சேர்க்கப்பட்டமையால். `அவை நீங்க` என்றமையால், `அவற்றிற்குக் காரணமான ஆணவம் நீங்கினமை தானே பெறப்படும் என்றபடி. அயிர்ப்பு - ஐயம். வெதிரேகம் - எதிர்மறை; அது முன்னை நிலைக்கு மாறாய் அமையும் நிலையைக் குறித்தது. உயிர்த்தல், இங்கு விளங்குதல் உபமித்தல் - உடனாதல். இதுவும் அந்நிலை விளங்குதலையே குறித்தது. `ஒளியாலல்லது இருள் நீங்காதவாறு போல், சிவம் பிரகாசித்தா லல்லது ஆணவ மலம் நீங்காது என்பதாம். `மாயேயங்களாகிய உபாதிகள் நீங்கினவிடத்தே பிரகாசிப்பவன் சிவன்` என்றதனால், மாயேயங்கள் நீங்கினவிடத்துச் சிவம் பிரகாசித்தலால் ஆணவ மலம் நீங்கிற்றாம்` எனக் கூறற் பாலதனை வலியுறுத்தற் பொருட்டு `உபமித்தாலன்றி ஆணவம் வீடல் செய்யாது` என எதிர்மறை முகத்தாற் கூறினார்.
இதனால், `ஆதியாய உபாதி நீங்குங்கால், அநாதியாய உபாதி நீங்கியேவிடும்` என ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கரக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறு பாழில் பராற்பரந் தானே.

பொழிப்புரை :

`காரிய உபாதி` எனமேற் கூறப்பட்ட உபாதிகள் உள்ள பொழுது, உயிர் தன்னையே அறியாது மயங்கும். காரிய உபாதிகள் நீங்கக் காரண உபாதிகள் நீங்காதிருக்குமாயின் உயிர் தன்னை ஒருவாறு அறியினும் தலைவனை அறியாது மயங்கும். இக்காரிய காரண உபாதிகள் உயிர்கட்கு ஆக்கி வைக்கப்பட்டவை. இன்னும் இவ்வுபாதிகள் பலவாகச் சொல்லப்படுகின்ற பதங்களாகிய உலகங்களைச் சார்ந்து நிற்பனவாம். இவையெல்லாம் அற்ற நிலையே `வெறும் பாழ்` எனப்படுகின்றது. அவ்விடத்தில் தான் மேலானவற்றிற்கெல்லாம் மேலான பரம் பொருள் உள்ளது.

குறிப்புரை :

`உயிர் அந்த வெறும்பாழை அடைந்து தான் பரம் பொரூளை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. `கலக்கும்` என்பன பாடம் அல்ல. கடும்பசு - மலத்தால் மிக மூடப்பட்ட பசு; என்றது, சகலவருக்கத்து உயிரை - காரிய காரணம், உம்மைத் தொகை. ``கற்பனை`` என்றது, ஆக்கப்பாட்டினை. பதம் - பதவி. பார் - உலகம். ஏகாரம், பிரிநிலை. அதனைப் பிரித்து, ``பாழ்`` என்பதனோடு மாறிக்கூட்டி, `பாழிலேதான் பராற்பரம்` என்க. தான் கட்டுரைச் சுவைபட வந்தது. `உள்ளது` என்பது சொல்லெச்சம்.
இதனால், `உபாதிகள் எல்லாம் நீங்கின இடமே உயிர் அடையத் தக்க இடம்` என்பது கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
சிற்பி