எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்


பண் :

பாடல் எண் : 1

முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

பொழிப்புரை :

``பற்றுக பற்றற்றான்; பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு``*
என்றபடி, உலகப் பற்றை நீக்குதற்கு வழி சிவப்பற்றைக் கொள்ளுத -லாகும். அப்பற்று உண்டாதற்கு வழி, சிவனைக் குருலிங்க சங்கமங் -களை வழிபட்டு உறுதுணையாகப் பற்றுதலாகும். மனம் புலன்களின் வழி ஓடாது தன் வயப்படுதற்கு வழி யோகசமாதி. முத்திக்கு வழி சிவ ஞானம். அந்த ஞானம் வருதற்கு வழி உயிர் உபசாந்தத்தை அடைதலாம்.

குறிப்புரை :

`இங்கு எடுத்துக்கொண்ட பொருள் முத்தியே` என்பது தோன்றுதற் பொருட்டு, `சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்` என்னும் முறைப்படி ``முத்திக்கு வித்து`` என்பதையே முன்னர்க் கூறினா -ராயினும் ஈற்றடிக்கு முன்னே கூட்டியுரைத்தல் கருத்தென்க. ``சத்தி`` என்றது ஞானத்தையே. `முத்திக்கு வித்து, சக்திக்கு வித்து` என்பவற்றைக் கூறுதலே கருத்தாயினும் அவை வலியுறுதற் பொருட்டு வேறு இரண்டை உடன் கூறினார். இஃது ஒப்புமைக் கூட்ட அணி பணிந்துற்றப் பற்றுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மனத்தை அது சென்றவிடத்தால் செலவிடாது* அடக்கித் தன் வயப்படுத்துதலே பெறற் கரிய பேறாகலின் அதனையே ``சித்தி`` என்றார். சிவபரம் - சிவமாகிய பரம் பொருள். தானாதல் - சமாதி. ``சிவம் பரம்`` என்றதனால், சிவ யோகமே குறிக்கப்பட்டதாம். உபசாந்தமாவது மாயேயங்கள் எல்லாம் நீங்கிய நிலை` என்பது முன்பே கூறப்பட்டது.
இதனால், `உபசாந்தம் ஞானத்தைப் பயக்க, ஞானம் வீடு பேற்றைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.

பொழிப்புரை :

`காரிய தத்துவம்` எனப்பட்ட ஆன்ம தத்துவங்கள் பிரகிருதியில் ஒடுங்கினும், பிரகிருதி ஒடுங்காத பொழுது அவை மீளத் தோன்றும் நிலை உளதாகும். ஆகவே, பிரகிருதி ஒடுக்கமே காரிய தத்துவ ஒடுக்கம் ஆதலின், அஃது அசுத்த மாயையில் ஒடுங்குவதாம். இனி, `காரண தத்துவம்` எனப்பட்ட வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையில் ஒடுங்க, அசுத்த மாயை கலக்குண்ணாது சுத்த மாயையில் வியாப்பியமாகி நிற்றலே காரணதத்துவ ஒடுக்கம் ஆதலின், அசுத்த மாயை சுத்த மாயையில் ஒடுங்குவதாகும். (இங்கு ஒடுக்கமாவது காரியப் படுதல் இன்றி வியாப்பிய மாத்திரம் ஆதல்) இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றபொழுது ஆன்மா பர துரிய நிலையை அடையும். (`அப்பால் அதீத நிலை தானே வரும்` என்பது கருத்து) `உபசாந்தம்` என்பதன் தன்மை ஆன்மா இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றுத் துரிய நிலையை அடைதலேயாகும்.

குறிப்புரை :

பார் - நிலம். என்றது, முன் அதிதகாரத்தில், ``எய்தாப் பேரும் நிலம்``3 எனப்பட்ட நிலம். அணவுதல் - அடைதல் இதற்கு, `உயிர்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், `உபசாந்தமாவது இது` என்பதும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத்
தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``பார்`` எனப்பட்ட அந்தப் பர துரியமே முற்றான ஆன்ம சுத்தி நிலையாகும். (எனினும், அதற்கு முன்னே `சிவதுரியம்` எனச் சொல்லப்பட்ட நின்மல துரியமே ஆன்ம சுத்தியாகச் சொல்லப்படுகின்றதன்றோ எனின்` பராவத்தையில் இனிது வெளிப்படுகின்ற பர சிவம், நின்மலாவத்தையில் ஓரளவாக வெளிப்படுதல் பற்றி அங்ஙனம் கூறப்படுகின்றது. ஆயினும் ஆன்மா பர சிவத்தோடு இரண்டறக் கலந்து உடனாய், வியாபகமாய் நிற்றல் ஒப்பற்ற உபசாந்தமாகிய பராவத்தையிலே யாகலின், பர துரியமே முற்றான ஆன்ம சுத்தியாம் என்க.

குறிப்புரை :

இதனை மெய்கண்ட நூல்கள் `ஆன்ம லாபம்` எனக் கூறும், ``சுத்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. முன்னியே - முன்பே கருதப்பட்ட சாக்கிராதீதம், நின்மல துரியாதீதம். `புரிவு` என்பது விகுதி குன்றி, முதனிலை மாத்திரமாய் நின்றது. புரிவு - செயல்; மேற்குறித்த ஆன்ம சுத்தி பரம் - பர சிவம் `காட்சியாவதனால்` எனவும், `உபசாந்தத்தில்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. தன்னில் - பரசிவத்தில், `வியாத்தி` என்றது வியாப்பியத்தை.
இதனால் உபசாந்தமே முடிநிலைப் பேறாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களும் தன்னின் மேம்பட்டுத் தன்னை மயக்காதபடி அவைகளைக் கீழ்ப்படுத்தி, அவைகளால் வரும் மயக்கத்தினின்றும் நீங்குதலே தன்னைத் தான் பெறுதலாகிய ஆன்ம தரிசனமாகும். (சிவரூபம் இதில் உடன் நிகழும். ``தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாம் தொழும்`9 என்றார் திருவள்ளுவரும்) ஆன்ம தரிசனத்திற்குப்பின் நிகழ்வதாகிய ஆன்ம சுத்தியாவது, சொல் நிகழ்ச்சியில்லாத, மௌன நிலையாகிய நின்மல துரியாதீதமாகும். (இதில் சிவதரிசனமும், சிவயோகமும் உடன் நிகழும்) ஆன்ம சுத்திக்குப் பின் அடையற்பலாதாகிய ஆன்ம லாபமாகிய சிவப்பேறாவது, பர துரியா தீதமே.

குறிப்புரை :

ஆறுதல் - அடங்குதல்; கீழ்ப்படுதல். தீர்தல் - மும்மலங்களும் நீங்குதல். குருவாகிவந்து அருள்செய்யும் அருட் பெருக்குப் பற்றிச் சிவனை, ``குருபரன்`` என்றார். குருபரம் - குருமார்களுக்கெல்லாம் மேலான குரு; ஞானகுரு. வியாத்தம் - வியாத்தி; சம நிறைவு. சமமாதல், சிவ வியாபகத்தோடாம். ஆன்மாச் சிவத்தில் வியாப்பிய மாயினும் பெத்தத்தில் ஏகதேசமாய் நின்ற நிலையினின்றும் நீங்கி வியாபகமாயினமை பற்றி ``வியாத்தி`` என்றார்.
இதனால், உபசாந்தத்தை அதற்கு இனமாய் முன்னிகழ்வன வற்றோடு ஒப்பித்துக்காட்டி அதன் இயல்பு இனிது விளக்கப்பட்டது. இதனானே அவற்றது இயல்புகளும் தெளிவிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய்
ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே
ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.

பொழிப்புரை :

உபசாந்தம் பத்து நிலைகளையுடையதாகச் சொல்லப்படும்.
1. கருவி கரணங்கள் உலகியல் வகையில் செயற்படாது, மெய்யுணர்வு நெறியில் செயற்படுதல். (இஃது யோகாவத்தை, இது முன்பு `சீவ துரியம்` எனப்பட்டது. இது கருவிகளின் மாற்றுச் செயல் ஆதலின், இதனை, வாதனை`` என்றார்).
2. ஆன்மாத் தன்னைக் கருவிகளின் வேறாக உணர்தல் (இஃது ஆன்ம தரிசனமாம். உள்ளம் - ஆன்மா; `ஆன்மா` என்றது, `ஆன்மாத் தான் ஆதல்` என்றபடி.)
3. ஆன்மாத் தன்னையிழத்தல். (அஃதாவது தற்போதம் நீங்குதலாம்.) ``போய்`` என்றது, `தான் போய்` என்றபடி.
4. தற்போதத்தை இழந்த ஆன்மாச் சிவனையே உணர்ந்து அவனேயாதல். (இதுவே தசகாரியத்துள் சொல்லப்படும் சிவயோகம். ஆன்ம தரிசனத்தில் சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி சிவதரிசனத்தில் தொடங்கி சிவயோகத்தில் முற்றுப்பெறும்.)
5. சிவானந்தம் உதயமாதல். (இது சிவயோகத்தில் முடிநிலையில் நிகழும்.)
6. உயிர் சிவானந்தத்தை அனுபவித்தல். (இஃது `ஆனந்தானுபவம்` எனப்படும். இதில் உயிருக்கு, `நாம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வு நிகழும்.)
7. உயிர் ஆனந்தத்தில் அழுந்துதல். (இதில் அந்த உணர்வும் இல்லாதொழியும்.) இஃது `ஆனந்தாதீதம்` எனப்படும். (இரண்டு முதல் 5 முடிய உள்ள நான்கும் நின்மலாவத்தையில் சாக்கிர, சொப்பன, சுழுத்தி, துரிய அவத்தைகளாம். 6,7 நின்மல துரியாதீதமாம்.)
8. சகலரினின்று பிரளயாகலர்களாகப் பெற்ற உயிர்களும், பிரளயாகலரில் பக்குவம் பெற்ற உயிர்களும் பின் விஞ்ஞானகலராய் இறைவனால் திருவருள் செய்யப்பெற்றுச் சுத்த புவன போக்கியப் பொருள்களால் இன்புற்றிருத்தல்.
9. அதற்கு மேலும் சுத்த புவன அதிபதிகளாய் ஆட்சி புரிதல். (இவை `அபர முத்தி` எனப்படும்).
10. இங்குக் கூறிய இவைகளில் ஒன்றும் இன்றிச் சிவனோடு இரண்டறக் கலந்து அவனது வியாபகத்தில் அடங்கி விடுதல் என்பன. (இறுதி மூன்றும் பராவத்தைகளாம். அவற்றுள் பத்தாவதே பரமுத்தியாம்.)

குறிப்புரை :

`இங்குக் கூறியன எல்லாம் உபசாந்தம்; எனப்படு மாயினும் பராவத்தையே உண்மை உபசாந்தம். என்பதும், அவற்றுள் பர முத்தியே முடிநிலை`- என்பதும் கருத்துக்கள் ``சிவானந்தத்து`` என்றதனால் சிவானந்தம் உதயமாதல் பெறப்பட்டது. ``தோய்ந்து`` என்றதனால், தோய்தலும் வேறொன்ற ாயிற்று. ``மோனம்`` என்றது அமைதியை; அது துன்பம் இன்மையைக் குறித்தது. ``அனுபவத் தொடே`` என்னும் ஒடு, எண் ஒடு. ஆய்தல் - இங்கு முற்றுணர்வுபெற்று எல்லாவற்றையும் அறிதல் ஆகவே, அஃது ஆட்சி செய்தலாயிற்று. `உபசாந்தம் ஈரைந்துமே` என முடிக்க. ஏகாரம் தேற்றம்.
இதனால், ஞானச் செய்தியாவன பலவும் உபசாந்தத்தின் படிநிலைகளாகத் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பரையின் பரஅப ரத்துடன் ஏகமாய்த்
திரையின்இன் றாகிய தெண்புனல் போலவுற்(று)
உரையுணர்ந்(து) ஆரமு தொக்க உணர்ந்துளோன்
கரைகண் டவன் உரை யற்ற கணக்கிலே.

பொழிப்புரை :

பர சிவத்தின் சத்தியாகிய பராசத்தியின் தடத்த நிலை அதன் அபரமும், சொரூபநிலை அதன் பரமும் ஆகும். பெத்தத்தின் நீங்கிய உயிர் முதற்கண் நின்மலாவத்தையிலும், பராவத்தையில் அதீதத்திற்குக் கீழ்ப்பட்ட நான்கு நிலைகளிலும் பராசத்தியின் அபர நிலையைப் பொருந்தியும் அதீதத்தில் அதன் பர நிலையைப் பொருந்தியும் அலையற்றுள்ள கடல்நீர் போல யாதோர் அலைவுமின்றியிருக்கும். எனினும், அபர நிலையில் தேவாமுதத்தைப் பெற்று உண்பவன், அதனைத் தான் பெற்ற அருமை, அதன் சுவை மிகுதி, அதன் பயன் முதலியவற்றை உணர்ந்து நிற்பவன் போலவும், பர நிலையில் அவ்வாறு உணர்தல் இன்றி அந்த அமுதத்தின் சுவையிலே மூழ்கித் தன்னை மறந்து நிற்பவன் போலவும் இருப்பான். இவ்விருவரில் தன்னை மறந்து, உரையுணர்விறந்தவன் நிலையே முடிந்த நிலையாம்.

குறிப்புரை :

``உரையுணர் விறந்து நின்று உணர்வதோர் உணர்வே``9 என்றும் அருளிச் செய்தமையும் காண்க. சத்தியின் நிலையே சிவத்தின் நிலையாயினும் உயிர் சத்தி வழியாகவே சிவத்தையடைதல் பற்றி அங்ஙனம் அடையப்படும் நிலைகளைச் சத்திநிலைகளில் வைத்துக் கூறினார். ``உரை உணர்ந்து`` என்றது, `உரையையும், உணர்வையும் வேறாக நன்குணரும் நிலையில் நின்று` என்றபடி. ஒக்க உணர்தல் - முற்ற உணர்தல்; என்றது நன்குணர்தலை `உணர்ந்துளோன் உரையற்ற கணக்கில் கரை கண்டவன் ஆவான்` என முடிக்க. கணக்கு நிலை - கணக்கில் நிலையை அடைந்த பொழுது.
இதனால், ஞானச் செய்திகளின் முடிநிலை அனுபவங்கள் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி