எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை


பண் :

பாடல் எண் : 1

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.

பொழிப்புரை :

`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.

குறிப்புரை :

`முயல்` எனப்படுவது, உண்மையில் முயலாகாமை போல, ஞானியர்பால் பிறர் குறையாகக் காண்பனவும் உண்மையில் ஆகாமையும் இவ்வுவமையால் கொள்ளத் தக்கது. `ஞானமில்லாரது இகழ்ச்சிகள் ஞானியைச் சார மாட்டாமையே யன்றிச் சார்தற்கு யாதும் இயைபும் இல்லை` என்பது இவ்வுவமையால் கூறப்பட்டதாம்.
``எறிவான்`` வான் ஈற்று வினையெச்சம். ``நெஞ்சு`` என்றது அறிவை. `அது குருவுபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியும் அறிவு` என்க.
இதனால், `உண்மையுணராதாரது இகழ்ச்சியால் உண்மை யுணர்ந்தார்க்கு வருவதோர் இழுக்கில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக்
கருந்தாழ் கயத்தில் கரும்பாம்பு நீங்கப்
பெருந்தன்மை பேசுதி ஒழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாறே.

பொழிப்புரை :

மனமே, `பெரிய முயற்சியையுடைய கருடன் தன்போக்கிலே தான் ஆகாயத்தில் பறக்கவும், கரிய நாகம் அஞ்சி ஓடி, மிக ஆழ்ந்த புற்றுள் ஒளிந்து கொள்ளுதல் போலவதே, மெய்யுணர் வுடையார் முன் மெய்யுணர்வில்லாதாரது நிலை என்பதைச் சில சான்று களால் நீ உணர்ந்திருந்தும் மெய்யுணர்வில்லாதாரது கூற்றுக்களைப் பெரிது படுத்திப் பேசுகின்றாய். இனி அவ்வாறு பேசுதலை விடு. ஏனெனில் உண்மை மெய்ந்நெறியாகிய பெருநெறியில் ஏனைச் சிறுநெறிகள் எல்லாம் பெரிய ஒரு கடலிலே சிறிய பல ஆறுகள் சென்று உருத்தெரியாது அடங்குதல் போல்வதே.

குறிப்புரை :

``கருமை`` இரண்டும் பெருமை; ஏனையது நிறம் ``நீங்க`` என்பது `மறைய` என்றபடி, அது, `மறைதல் போல்வதாக` பொருள் தந்தது. `பெருந்தன்மை பட` என ஒருசொல் வருவிக்க. பெரிது படுத்திப் பேசுதலாவது, `அவைகளும் ஏன் உண்மைகளாய் இருக்கக் கூடாது` என எண்ணி மயங்குதல். `சென்ற` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ``சென்ற`` என்றது சென்று அடங்குதலைக் குறித்தது. ``ஆறு`` இரண்டில் முன்னது நதி. பின்னது உவம உருபு. `ஆறாதலையுடையவே` என ஈற்றில் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. பிறர் நெஞ்சின் இயல்பினைத் தம் நெஞ்சின்மேல் ஏற்றியுரைத்தார்.
இதனால், `புறங் கூற்று மொழிகள் மயக்கும் தன்மையுடைய வாயினும் குரு உபதேசத்தில் உறைத்து நின்று மயங்கலாகாது` என்பது கூறப்பட்டது. `பிற நெறிகள் குற்றம் உடையன ஆகாது, குறை மட்டுமே உடையன` என்பது பின்னர்க் கூறிய உவமையால் பெறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 3

கருதலர் மாளக் கருவாயில் நின்றே
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் வேட்ட தனிஉம்பர் ஆமே.

பொழிப்புரை :

பகைவரைப் போர்க்களத்தில் எதிர்த்துப் போர் செய்யாது, அவர்தம் நகரத்தை முற்றுகையிட்டே காலத்தைப் போக்குதல் புல்லறிவாண்மையாகும். சிவநெறியைச் சாராதவர் செய்யும் பெரிய தவங்கள் எல்லாம் அப்புல்லறிவாண்மையை ஒக்குமேயானால், அவற்றால் தரப்படும் பயன்கள் எல்லாம் சுவர்க்க போக வாசிகளாய்ச் சில காலம் வாழ்ந்திருத்தலேயாகும்.

குறிப்புரை :

`முத்திப் பயனை அவை தரமாட்டா` என்பதாம். ``கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்``* என மேலே கூறினமையால், ``மருவலர்`` என்றது சிவனை மருதாவர்களை யாயிற்று. ``ஒத்தால்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின் கண் வந்தது, ``நீரின்றமையா துலகெனின்``* என்பதிற் போல ``ஆமே`` என்பது, `ஆகும் அதுவே` எனப் பொருள்தந்தது.
``பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``
என்னும் சிவஞான போதத்தை* நோக்குக. `பிறவிக்குக் காரணமான வினைகளை வெல்வதற்குப் பசு புண்ணியங்களைச் செய்தல்` என்பது இங்குக் கூறிய உவமையால் குறிக்கப்பட்ட பொருள்.
இதனால், பதி புண்ணியங்களை உணராது பசு புண்ணியங் களையே புகழ்வாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.

பொழிப்புரை :

பெரிய நிலவுலகத்தவர் யாவரும், வானுலகத்துப் பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய சிவனையே `பரம் பொருள்` என உடன்பட்டு மனத்தால் நினைத்தும் பின்னர் அவன் திரு வடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். அதனை நன்கு சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்தலே தக்கது. அதை விடுத்து பிற சமயிகளது சொற்களைக் கேட்டு மாறுபடாதீர்கள்.

குறிப்புரை :

``தட்டை யிடுக்கித் தலையைப் பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா;
பேணித் தொழுமின்கள்``9
என்றாற் போல ஞானம்பந்தரும் அருளிச் செய்வார். ``நிலம்`` என்றும் ``கணம்`` என்றும் கூறினமையால், ``எழும்`` என்று அஃறிணை முடிபு தந்தார். ``பெருநிலம் முற்றும், கணம் பதினெட்டும் - எம் ஈசனே ஈசன் என்று இணங்கி, உன்னி, காண வணங்கி எழும்` என இயைந்து, ``காண வணங்கி`` என்பவற்றில் விகுதி பிரித்துக்கூட்டி, `கண்டு வணங்க எழும்` என முடிக்க. `வணங்கி` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. ``பிறைநுதல் வண்ணமாகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே``8 என்றதும் காண்க.
பதினெண் கணங்கள் இவை என்பதை,
``விரவுசா ரணரே, சித்தர்,
விஞ்சையர், பசாசர், பூதர்
கருடர், கின்னரர், இயக்கர்,
காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர், ஆகாச வாசர்,
உத்தர குருவோர், யோகர்,
நிருதர், கிம் புருடர், விண்மீன்
நிறைகணம் ``மூவா றாமே``3
என்னும் நிகண்டினால் அறிக. விஞ்சையர் - வித்தியாதரர். இயக்கர் - யட்சர். காந்தர்வர் - கந்தருவர். சுரர் - தேவர். தைத்தியர் - அசுரர். உரகர் - நாகர் உத்த குருவோர் - போக பூமியர். யோகர் - முனிவர். நிருதர் - அரக்கர். விண்மீன் - நட்சத்திர மண்டலர்.
இதனால், `உயர்ந்தோர் நெறி சிவநெறியே` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

என்னிலும் என்உயி ராய இறைவனை
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை
உன்னில் உம் உன்னும் உறும்வகை யாலே.

பொழிப்புரை :

என்னைத்தான் நான், `என் உய ர்` என்று ஓற்றுமைக் கிழமை பற்றி எண்ணுவேன். ஆயினும், என் உயிரினுள் உயிராய் நின்று எனக்கு உறுதிசெதய்து வருபவன் எங்கள் இறைவனாகிய சிவன். ஆகவே, `என் உயிர்` என்று யான் வலியுறுத்திக் கூறுதற்கு உண்மையில் உரியவன் அவனே. அவன் உண்மையில் பொன்னினும், மணியினும் சிறப்பாகக் கொண்டு போற்றத்தக்கவன். தூய்மையே வடிவானவன் உலகில் காணப்படும் பொருள்களில் எல்லாம் மேலான ஒளிப்பொருளாகிய. பகலவன் ``வெங்கதிர்`` என்று சொல்லப்படுதல் போல, உயிரினுள் உயிராய் இருந்து அங்குள்ள இருளை முற்றக் கடிதலால் அவனை `வெவ்வுயிர்` என்றலும் பொருந்தும் (`வெம்மை` என்பதற்கு, `விருப்பம்` என்பதும் பொருளாகலின், ``வெவ்வுயிர்`` என்பது, `விரும்பத் தக்க உயிர்` என்றும் பொருள் தரும்) அவன் உயிர்களின் குணங்கட்கு வேறான குணங்களையுடையவன். அவனை நீவிர் நினைப்பீராயின், உம்மையும் அவன் நினைப்பான். (அவனை நீவிர் அடைதல் கூடும்)

குறிப்புரை :

``என்னில் ஆரும் எனக்கினி யார் இலை
என்னி லும் இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளே உயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே``3
என்னும் அப்பர் திருமொழியையும் காண்க.
``என்னிலும் என் உயிராய இறைவன்`` என்றது, `என் உயிர்` என்று யான் சிறப்பித்துக் கூறுதற்கு என்னிலும் மிக உரிமையுடைய இறைவன், என்றபடி, ``மணியிலும்`` எனப் பின்னரும் உருபு விரிக்க. ஆய - உயர்ந்த, மின்னிய - ஒளி விடுகின்ற. விகிர்தன் - வேறு பட்டவன். `உம்மை உன்னும்` என்பதில் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. உறும் வகையாலே உன்னும்` என முன்னர்க் கூட்டி முடிக்க.
இதனால் முன் மந்திரத்தில், ``எம் ஈசனே ஈசன்`` என்று உயர்ந்தோர் பலரும் உன்னி வந்து வணங்குவர் என்றதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து)
ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.

பொழிப்புரை :

நூல்களில் சொல்லப்பட்ட பொருள்களைப் பிறர் அறிய நன்கு உரைப்பவராயினும், தாங்கள் ஐம்புலன்களை வென்று, `இவன் பரமோ, அவன் பரமோ, எல்லாருமே பரமோ` என இங்ஙனம் பலவாறாக எண்ணி அலமரும் ஐயங்களை விரைவில் விடுத்து, `இவன் ஒருவனே பரம்` என்று ஒருதலையாக உணரத்தக்கவன் ஒரு முதல்வனே. அத்தகைய முதல்வன் எங்கள் பரமாகிய சிவன் ஒருவனே ஆதலின், அவனையே நீவிர் நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் மனத்தால் ஒன்றியிருங்கள்; பயன் அடைவீர்கள்.

குறிப்புரை :

`பொருள்கள் உரைப்பவராயினும்` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றில், `ஆதலின்` என்பது வருவித்து. `எம் நிமலனை நின்றும் ஒன்றும் என முடிக்க. மேல் ``எம் ஈசனை`` என்றும், ``என் உயிர்`` என்றும் கூறினாற்போல, இங்கும் `எம் நிமலனை` என்பதில் `எம்` என்பது தொகுத்தலாயிற்று.
``ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்``*
எனவும்,
``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினும் இல்லை:
அவனோடொப்பார் இங்கு யாவரும் இல்லை``*
எனவும் மேற்கூறியவற்றையே இங்கு வலியுறுத்து ஓதினார்.
இதனால், ஐயக் கொள்கை ஆகாமை கூறப்பட்டது.
``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து``*
எனத் திருவள்ளுவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

நுண்ணறி வாய் உல காய் உல கேழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப்
பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.

பொழிப்புரை :

உயிர்கள் தூல சித்தாதல் போல இல்லாமல் சூக்கும சித்தாய், சடவுலகத்தை இயக்கியும், அறிவுலகமாகிய உயிர்களின் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தும் நிற்கின்ற, எங்கள் தந்தையாகிய சிவபெருமான், உயிர்களின் தனித் தன்மையை உணர்ந்து அவற்றைப் பக்குவப்படுத்தும் முறைகளில் பக்குவப்படுத்துவோனாவான். அவனை உணர்ந்த பெருமக்களையே உயர்ந்த அறிவினையுடையோர் சேரவிரும்புகின்றார்கள்.

குறிப்புரை :

பின் ``என் அறிவாய்`` என்றமையால் முன்பு ``உலகு`` என்றது சட உலகத்தையாயிற்று. பண்ணுதல் தகுதி யாக்கல். ``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை``* என்பதனால், சிவன் பண்ணறிவாளன் ஆதலையறிக. ``விண்`` என்பது உயர்வைக் குறித்தது. அறிவின் மிக்கோராதல் பற்றித் தேவர்கள், `புலவர்` என்றும், `விபுதர்` என்றும் சொல்லப்படுவார்கள். ஆதலின் அவர்களையே ``விண்ணறிவாளர்`` எனக் கூறினார் எனவும், இனி `விண்ணாவது சிவபோகம்; அறிவாளர் அங்குள்ள சிவஞானிகள் எனவும் கொள்ளலும் ஆகும். விண்ணறிவாளர் விரும்புதற்குக் காரணமானவற்றையே முதலில் உடம்பொடு புணர்த்தலாகக் கூறினார். ``விண்ணறிவாளர் விரும்புகின்றார்`` என்றதனால், `நீவிரும் அவ்வாறு விரும்புதலே தக்கது` என்பது குறிப்பாயிற்று.
இதனால், `அறிவு வடிவான மெய்ப்பொருள் சிவனே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே.

பொழிப்புரை :

தேவர்களாலும், (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனைச் சிறுதும் இடையீடின்றி உள்ளத்தால் பற்றுங்கள்; பற்றினால் பற்றிய அப்பொழுதே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எஞ்ஞான்றும் நீவிர் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டால், உமது தன்மை சிவத்தன்மையாய்விடும்.

குறிப்புரை :

கண் - காலம் பற்றிய இடைவெளி. காலை - காலம் `அக்காலையே` எனச் சுட்டு வருவித்து உரைக்க. இயற்றுதல், பண்ணுதல் என இருகாற் கூறியது அகம், புறம் நோக்கியாம். `உம் தன்மை` என எடுத்துரைக்க. ``பராபரன்`` என்பது, அவனது தன்மையைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், சிவன் சாராதார்க்கு அரியனாயினும் சார்ந்தார்க்கு எளியன் ஆதலை உணர்த்தி, `அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்றான் அருள்செய்த பேரரு ளாளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.

பொழிப்புரை :

சிவன், தான் பொருளால் ஒன்றாயினும், எண்ணில்லாத பல பொருள்களிலும் நிறைந்திருப்பவன் (என்றது, `அவ்வாறு வியாபிக்கும் சத்தியை உடையவன்` என்றபடி) ஆயினும் தன்னைச் சார்ந்தவர்க்குச் சார்ந்தபின்பே அருளும் பேரருளை யுடையவன். அன்பு செய்யும் மனத்தினர் தாம் அறிந்தவாறு செய்யும் செயல்களுக்கெல்லாம் இணங்குபவன். அன்பர்கள் பலவாய் நிறைந்த மலர்களைத் தூவிப் புகழும் கெடாத புகழினையுடையவன்.

குறிப்புரை :

`அவனை அணுக வேண்டினார்க்கு அணுகுதல் எளிதேயாம்` என்பது கருத்து. `உலகு ஏழும் உடன் பரந்தவன்` என மாற்றியுரைக்க, எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உடன் - ஒருசேர. `ஆளவன்`` என்பதில் முதலில் நின்ற அகரம் விரித்தல். கன்றாமை - வெறாமை அது வெறுத்தலின் மறுதலையாகிய விரும் -புதலைக் குறித்தது, ``கல்வி`` என்றது, கற்றுச் செய்யும் செயல்களை, `அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளுபவன்` ஆதலை `கன்றா மனத்தார்தம் கல்வியுள்நல்லவன்`` என்றார். ``பொன்றாத`` என்பதைப் புகழுக்கு அடையாக்குக.
இதனால், `சிவனது இயல்பை உணரவல்லார்க்கு அவனை அடைதல் எளிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே யென்றும் எறிமணி தான்அகம்
காற்றின் விளக்கது காயம் மயக்குறல்
மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

பொழிப்புரை :

எம் தந்தையாகிய சிவபெருமானது பொன் போலும் சிவந்த திருவடிகளில், அகத்தில் எனது மனத்தையும், புறத்தில் பூக்களையும் ஏற்றி, `போற்றி போற்றி` என்று பலநாளும் துதித்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியின் ஓசை போன்ற ஓர் ஓசை உள்ளத்திலே கேட்டது. உடனே, காற்றின் முன்னே உள்ள விளக்குப் போல்வதாகிய உடம்பு எந்த நேரத்திலும் நீங்குவதாயினும், அஃது என்றும் நீங்காமலே இருப்பது போலக் காட்டி மயக்குகின்ற மயக்கத்தை நீக்கும் உபாயமும் கேட்டது. பின்பு எல்லாவற்றையும் அடக்கி, மேலே வியாபித்துள்ள பரவெளியும் என் கண்முன் காணப்பட்டது.

குறிப்புரை :

``போற்றி என்றேன்`` என்பதை, ``என்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``கேட்டது`` என்பதை, முன்னரும், கூட்டி, `அகம் எறிமணி கேட்டது, மாற்றலும் கேட்டது` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர். இவ்வோசை யோகத்திற் புலனாகும். ஓசை `விள
க் -காகிய காயம்` என்க. அது பகுதிப் பொருள் விகுதி. ``மாற்றல்`` என்பது ஆகுபெயராய் அதற்குரிய உபாயத்தைக் குறித்தது. உபாயம் கேட்டமை யாவது. அகத்தில் யோகத்தால் புலனாயினமையாம். ``கேட்டது`` எனச் செயப்படுபொருள் வினை முதல் போலக் கூறப் பட்டது. பரவெளி யாவது, திருவருள் அது காணப்பட்டமையாவது தெளிவாக விளங் -கினமை அதனைக் கண்டமை கூறவே அதன்கண் உள்ள சிவத்தைக் கண்டமை கூறவேண்டாவாயிற்று. `நீவிரும் ஏற்றிப் போற்றினால், கேட்டும், கண்டும் பயன் பெறலாம்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `சரியை கிரியா யோகங்களால் சிவனை அடைந்து, அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞ்ஞானிகள் ஆவீராக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வார் இல்லை
கூடுபுக் கேறலுற் றேன் அவன் கோலம் கண்
மூடிக்கண்டேன் உல கேழும்கண் டேனே

பொழிப்புரை :

என்னைத் தானே தேடிக்கொண்டு வந்து என்னுள்ளேயிருக்க ஒருப்பட்டுவிட்ட சிவனை என்னுள்ளே புகுந்து அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (ஆகவே, வேறிடத்தில் அவனை அறிதலும் இயலாமை வெளிப்படை) யான் வெளியே சென்ற அலையாமல் என் உடம்பினுள்ளே கீழ் இருந்து மேல் ஏறிச் சென்று பொழுது அவனது அழகைக் கண்டேன்; காணுங்கால் கண்ணைத் திறந்து பார்த்துக் காணாமல் கண்ணை மூடிக்கொண்டே கண்டேன். அப்பொழுது அவனை மட்டுமா கண்டேன்? ஏழுலகங்களையும் கண்டேன்.

குறிப்புரை :

``தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்``*
எனவும், ``தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்` எனவும் அருளிச் செய்தவாறு, பக்குவம் எய்திய ஆன்மாக்களை அவை பக்குவம் எய்தியது உணர்ந்து தானே சென்று அடைந்து அருளுபவன் சிவன் ஆதல் பற்றி, நேடிக்கொண்டென்னுள்ளே நேர்தரு நந்தியை`` என்றார். ``கூடு புக்கு ஏறலுற்றேன்`` என்றது மூலாதாரத்தினின்று ஆறு ஆதாரங்களையும் நிராதாரத்தில் யோக நெறியால் சென்றமையை, ``கண் மூடி`` என்றது அந்நெறியைக் குறித்தற்கு. யோகக் காட்சியில் அவனைக் கண்டவர்கட்கு அவனது அருளால் எவ்விடத்திலும் எக்காலத்துப் பொருளும் இனிது விளங்குதலைக் குறிக்க, ``கோலம் கண்டேன் உலகேழும் கண்டேன்`` என்றார். ``ஆரும் உணர்ந்தறிவார் இல்லை`` என்றதற்கு, இறைவன் யோகியர் உள்ளத்தில் விளங்குதல் போலப் புற இடங்களில் விளங்குதல் இல்லை` என்பதே கருத்து. இக்கருத்தே பற்றி அம்மை திருவந்தாதியிலும்,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``l
என்று அருளிச் செய்யப்பட்டது. இதில் அன்பர் உள்ளம் குறிக்கப்பட்டது.
``காலையும், மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம், ஆரூர் அரனெறி யார்க்கே``3
என்ற அப்பர் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
இதனால், யோக முயற்சியும், அன்பும் சிவனை அடைதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனும் உடைய சிறுவரை ஒன்றுகண்(டு)
ஊனம்ஒன் றின்றி உணர்தல்செய் வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே

பொழிப்புரை :

யோகக் காட்சி பற்றி, `முக்காலமும் உணர்ந்தவர்` எனப் பலரும் கூறப்பட்டுக் குவியும் புகழாகிய உயர்வையும், அவ்யோகத்தாலே பிறர் ஒருவரால் அசைக்க ஒண்ணா அருள் உணர்வாகிய துளங்கா நிலையையும், அமுதமாகிய தேனையும் உடைய ஒரு சிறு குன்று மக்கள் எல்லாரது உடம்பிலும் உள்ளது. அதனை உணர்ந்து, ஏறும் வழியறிந்து ஏறி, அதனை உணர்வினால் அடைந்த தவத்தோரை, அவர் உடம்பு நீங்கிய பின்னர்த் தனது பேருலகில் ஏற்றுகின்ற ஆண்மையுடையவனாகவும் எங்கள் சிவன் இருக்கின்றான்.

குறிப்புரை :

யோக நெறியில் பருவ நடு `மேரு` எனப்படுதல் பற்றி, அதனை ``வரை`` என்கின்றவர், அஃது எண் சாண் உடம்பினுள் ஓரிடத்ததாதல் பற்றி ``சிறுவரை`` என்றார். `நுண்ணியதாகக் காணத்தக்கது` என்றலும் கருத்து. `உடம்பினுள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. அவ்விடத்துப் பருகி இன்புறுதற்கு ஏதுவாய் உள்ள அமுதத்தை, ``தேன்`` எனச் சிறப்புருவகமாகக் கூறி, ஏனைய, `புகழ், ஞானம்` என்பவற்றை உருவகம் செய்யாது வாளா கூறினமையின், இஃது ஏகதேச உருவகம். ``கண்டு`` என்றது, காணுதற்கு அருமை குறித்தது. செய்தல் -தருதல். `ஏனையோர் அது மாட்டார்` என்பது உணர்த்துதற்கு மாட்டுவானை, ``மறவன்`` என்றார். மறவன் - வீரன் உம்மை சிறப்பு. இங்கும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், சிவநெறி நின்று சிவயோகம் செய்யின், புகழும், ஞானமும், இன்பமும், வீடும் பெறலாம்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாமதி ஆம்மதியாய் நின்ற மாதவர்
தூமதி யாகும் சுடர்பர மானந்தம்
தாமதி யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு)
ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.

பொழிப்புரை :

`மதி` என்பதற்கு, `அறிவு` என்பதும் பொருள் ஆதலால் `மதி` என்னும் பெயருக்கு வானத்துச் சந்திரனை விட மிக உரிமையுடைய உச்சிச் சந்திரனை அடைந்து, அதனால் உண்டாகும் அறிவையே அறிவாகப் பெற்ற யோகிகளுடைய தூய அறிவாய் விளங்கும் ஒளி, பேரின்பமே வடிவாக உடைய பரம்பொருளாம். அதனால், பிறரெல்லாம் தங்களுடைய நிலையற்ற அறிவையே அறிவாகப் பற்றி உலகத்தை நுகர்ந்துகொண்டிருக்க இவ்யோகிகள் `உபசாந்தம்` என்னும் நிலையை அடைந்து, அநாதியே பற்றிய மலங்கள் நீங்கப்பெற்று, அமைதி நிலையை அடைகின்றனர்.

குறிப்புரை :

`மாதவரது தூய்மதி` என்க. பரமானந்த வடிவானதை, ``பரமானந்தம்`` என்றார். தாமதி - தாவுகின்ற மதி. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றும் நிலையில்லாத அறிவு. அற்றார். முற்றெச்சம். தெளிவு பற்றி நிகழ்காலம், இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட யோகத்தின் சிறப்புடைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு)
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம்அற்(று) `எனதியான்` மாற்றிவிட் டாங்கே
திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே

பொழிப்புரை :

`சாலோகம், சாமீபம், சாரூபம்` மூன்றும் பத முத்திகளாம். சிலர் இவற்றையே வேறு வகையாகக் கூறி `பரமுத்தி` எனச் சாதிப்பர். அவற்றில் எல்லாம் இருள்மலம் ஆகிய ஆணவம் பற்றறக் கழியாமையால் அதன் காரியமாகிய துன்பம் அவ்விடங்களில் சிறிது சிறிது உள்ளதேயாம். ஆகையால், `அவை குறையுடையன` என்று அறிந்து, அவற்றோடு நிற்றலை விடுத்து. ஆணவம் பற்றற நீங்கினமையால், அதன் காரியமாகிய மயக்கமும், `யான், எனது` செருக்கும் பற்றறக் கழிய, அப்பற்றுக்களை இயல்பிலே இல்லாதவ னாகிய பரம சிவனிடத்தில் அடங்கி நிலைத்திருப்பவர்களே உண்மை -யில் சிவனைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`அயன், அரி, அரன்` என்னும் மூவர் பதவிகளைச் சிவநூல்கள் ஓரிடத்தும் `முத்தி` என்றல் இல்லையாகலின் அவைகளை மூனறு `பத முத்திகள்` என்றல் கூடாமையறிக. இதம் உற்ற பாசம் - பெத்த நிலையில் இன்பம்போலத் தோன்றிய பாசம். ``ஆங்கு`` என்றது பண்டறி சுட்டு திதம் - நிலைபேறு `இந்நிலையை அடைந்தவர்களே நிலை பெற்றவர்` என்றதனால், பதமுத்தியடைந்தவர்கட்கும் பின்னர்ப் பிறப்புவருதல் உண்டு என்பது,
``தவம் செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து
பவம் செய்து பற்றறுப்பா ராகத் - தவம் செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றாசூழ் சொல்லுமாம் கண்டு``
என்பது சிவஞான போதம்.* `பரமுத்தி யொழிந்த ஏனைய முத்திகள் இன்பநிலை ஆகா` என்பதைச் சிவஞான சித்தி கீழ்க்காணுமாறு விளக்கும்.
``பினாதி அருள் பெற்றவர்கள் நித்தஉரு வத்தைப்
பெற்றிருக்கை முத்தியெனில், பெறும்பதமே இதுவும்;
இனாதுநிலை இதுதானும்; காயம் உண்டேல்,
இருங்கன்மம், மாயைமலம் எல்லாம் உண்டாம்.`` 9
சித்தி - பேறு. சித்தர் - பேறு பெற்றவர்.
இம்மந்திரம் அகச் சமயத்தார்க்கு அறிவுறுத்தியது.

பண் :

பாடல் எண் : 15

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.

பொழிப்புரை :

சிவஞானத்தால் சிவதரிசனத்தைப் பெற்றோர் யாவரும் சிவனைப் பெற்றவராகவே எண்ணப்படுவர். (அவர் பின்பு பதமுத்திக்கு மேலான அபர முத்தி பரமுத்திகளை அடைவர் ஆதலின்,)
``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்.`` l
என்றபடி அவர்கள் `சுத்தம், அசுத்தம்` என்னும் இருவகைப் பிரபஞ்சத்துள் எதில் இருப்பினும் அதில் பற்றற்றேயிருப்பர். அவர், `பதமுத்தி, அபரமுத்தி, பரமுத்தி` என்னும் மும்முத்திகளையும் தம்மை அடைந்த மாணாக்கர்க்கு அளிக்க வல்ல ஆசிரியர்களும் ஆவர். இனி மூலாதாரத்தில் ஒடுங்கியிருக்கும் குண்டலி சத்தியை எழுப்பி அதன் பயனைப் பெற்ற யோகியரும் சதாசிவ மூர்த்திபோல அபர ஞானமாகிய கலைஞானங்களை வழங்கத் தக்கவராவர்.

குறிப்புரை :

`சீருடன் தோயாதவர்` என இயைக்க. சீர் - சிறப்பு திருவருள். `அதனுடனேயிருந்துகொண்டு, தோய்வின்றி இருப்பர்` என்க சத்தியைப் பெற்றவர் சத்தர். சதாசிவமூர்த்தி பரஞானத்தையும் தருவபர் ஆயினும், அவர் வேதாகமங்களை அருளிச்செய்து, பிறர்க்கு அறிவுறுத்தினமையே இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனால், சிவஞானிகளும், சிவயோகிகளுமே ஆசிரியராவர் என்பது உணர்த்தும் முகத்தால், பிறரை ஆசிரியராகக் கொண்டு மயங்குதல் கூடாமை கூறி முடிக்கப்பட்டது.
முதல் தந்திரம் முதலாகச் சில இடங்களில் கூறியவற்றையே இங்குக் கூறினார். ஆயினும் அவை சுபக்கத்தாரை நோக்கி உண்மை யுணர்த்தலாகக் கூறப்பட்டன; இவை பரபக்கத்தாரை நோக்கி, அறிவுரையாகக் கூறப்பட்டன. இவ்வேற்றுமை உண்மையால், இவை கூறியது கூறல் ஆகாமை உணர்க. இங்ஙனமாகவே, இவ்வாறு உரையாதார்க்கு இவை கூறியது கூறல் ஆதலையும் உணர்க.
சிற்பி