எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை


பண் :

பாடல் எண் : 1

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.

பொழிப்புரை :

``அண்ட பிண்டம் அவை சமம்``* *கோயிற் புராணம் - பதஞ்சலி சருக்கம் - 70. என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது ஆதலின், இதய கமலம் எட்டிதழ்களை உடையதாகக் கொள்ளப்படுதல் போலவே நில வுலகமும் எட்டிதழ்களையுடைய தாமரை மலர்களும், அவ்விதழ்களில் திசைக் காவலர்கள் இருப்பதாகவும் பாவித்து அவர்களை வழிபடல் வேண்டும் - என்பது வைதிகக் கொள்கை. அவரளவிற்கு அது வேண்டுவதே என்பதை முதற்கண் கூறுகின்றார். இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

உதிக்கின்ற சூரியனுடன் தோன்றுகின்ற இருளில் தோன்றாமை எல்லார்க்கும் உரியது ஆதலின். இதனை ஏனையோர்க்கும் கொள்க. இந்திரன் முதலிய எண்மரையும் கிழக்கு முதலாகத் தொடங்கி எட்டுத்திசையையும் வலமாக எண்ணிப் பொருத்திக் கொள்க. ஈசன் - ஈசானன். நிதித்தல் - நிதிமிகுதல்.
இதனால் `திசை காக்கும் கடவுளர் எண்மராவார் இவர்` என்பது கூறப்பட்டது. கிழக்கிலும், வடக்கிலும் இந்திரனையும், குபேரனையும் நீக்கி, முறையே `ஞாயிறு, திங்கள்` என்பவரைக் கூறுதலும் உண்டு. அவ்விடத்தில் திங்களை, `சோமன்` என்ப,
``ஞாயிறாய், நமனு மாகி,
வருணனாய்ச், சோம னாகித்
தீ, யறாநிருதி, வாயு,
திப்பிய சாந்த னாகி`` - திருமுறை - 4,32.6.
என்னும் திருப்பாடலைக் காண்க. இனி, `சோமன்` என்பதும் குபேரன் பெயரே என்பாரும் உளர்,

பண் :

பாடல் எண் : 2

ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கியல் மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

பொழிப்புரை :

உயிர்களோடு ஒன்றி இயங்குகின்ற மாயா நகரத்தில் ஒன்றை ஒன்று ஒத்துள்ள தாமரைமலர்கள் எட்டிதழ்களையுடையன வாகும். அவை உள்ளே நுணுகிய புழையை உடைய தண்டின்மேல் உள்ளன. அவற்றுள் ஒரு தண்டு `சுழுமுனை` எனப்படுகின்றது. அதனோடு உள்ள புழையால் மலர்கின்ற தாமரையில் விளங்குகின்ற ஒளியையே யோகிகள் காண்கின்றனர் ஆதலின் மற்றொரு தாமரையிலும் அந்த ஒளியையே பாவித்து உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

இம்மந்திரம் இரட்டுற மொழிந்தது. பூ - 1 மலர்; இதய கமலம் 2 பூமி. மாயாபுரி - 1 அண்டம். 2 பிண்டம், உடம்பு இதய கமலத்தை உடைய தண்டு சுழுமுனை நாடி. பூமியைத் தாங்குகின்ற தண்டு அனந்தன் - (ஆதிசேடன்) இதய கமலத்தில் விளங்குகின்ற ஒளி சிவன். அவனையே அண்டத்திலும் (பூமியிலும்) நடுநாயகனாக வைத்து, ஏனையோரைச் சுற்றுக் கடவுளராகக் கொண்டு வழிபட்டு உய்க என்பதமாம். இவ்வாறு செய்யும் வழிபாடு சிவாலயங்கள் அனைத்திலும் என்றும் நிகழ்ந்து வருதல் வெளிப்படை எனவே, `முன் மந்திரத்துக் கூறப்பட்ட திசைக் காவலர்களைச் சிவனது ஆணையை நடத்தும் அதிகாரிகளாகக் கொண்டே வழிபடுதல் வேண்டும்` என்பது போந்தது. `இதுவே சிவ நெறி` என்க.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க எழுதல் - மேம்படுதல்.
இதனால், `வைதிக கருமங்களைச் செய்யினும் சைவ முறையிலே செய்தலே ஆன்றோர் ஆசாரம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ்
எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில்
பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே

பொழிப்புரை :

அரும்பாய் இருந்து அலர்த்த அலர்கின்ற தாமரை மலர்கள் உடலினுள்ளே ஒன்றல்ல; மூன்று உள்ளன. அந்த மூன்றிலுமே ஒளி வடிவான இறைவன் விளங்குகின்றான். எனினும், மேற்கூறிய எட்டிதழ்த் தாமரையிலே நின்றுவிடாமல் ஏறிச் சென்று இரண்டிதழ்த் தாமரையை அடைந்து அவனைத் தரிசித்தால், பிறந்து வளர்கின்ற உடம்பு கனவுக் காட்சியாய்விடும்.

குறிப்புரை :

``மொட்டு அலர்கின்ற`` என்ற விதப்பால், அலர்த்த அலர்தல் பெறப்பட்டது. அலர்த்துதல் பிராணாயாமத்தால். மூன்று தாமரைகளாவன, மேல் ஆதாரங்களாகிய, `அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்பன எட்டிதழ்த் தாமரை அனாகதமே. கீழ் ஆதாரங்களில் வேறு கடவுளர் இருத்தலின் அவற்றைக் கூறாது, இம்மூன்று ஆதாரங்களை மட்டுமே கூறினார். இவற்றில் சிவன் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என இருப்பன். அதனால், `உருத்திரனிடத்திலே நின்று விடாமல், சதாசிவனை அடைக` என்றார். ஆதார யோகத்தின் பயன் விளைவது அவ்விடமேயாகும் அனாகதம் பூசைத்தானமாக ஆஞ்ஞையே தியானத் தானமாம். ஏற்பு - எழுந்து பண்டம் - உடம்பு. இது பின்னர் வருதலின், முன்னர் ``மூன்றுள`` என்றது இதனுள்ளேயாயிற்று. கனவுக் காட்சியாதலாவது, `கனவு போல நிலையாது` என்னும் உணர்வு மிகுதல்.
இதனால், `ஆதார யோகம் யாவும் ஒரு பெற்றிப்பட்டன அல்ல; மேலையாதார யோகமே சிவ யோகமாய்ப் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

பொழிப்புரை :

உடம்பினுள், முன் அதிகாரத்தில் கூறியவாறு உள்ள சிறுமலையினின்றும் தோன்றுவது ஆறு அன்று; அருவியே அந்த அருவியின் நீரை ஏற்கின்ற குளம் (ஏரி) ஒன்று உண்டு. அதில் விளையும் விளைவுவகைகளோ பல. ஆயினும் அவ்வினைவினது இயல்பு அறிதற்கரிதாய மிக நுட்பமாய் உள்ளது. அதனை வெளிப் படக்கூறினால், மாதொரு கூறனாகிய பரம்பொருளேயாம்.

குறிப்புரை :

`அருவியே ஆறு` என ஏகாரத்தை மாற்றி யுரைக்க. ``அகம்`` என்பதை முதலிற் கூட்டுக. ``அருவி`` என்றதனால், அது தோன்றும் இடமாகிய மலையுண்மை தானே பெறப்பட்டது. `மலையில் ஆறு உற்பத்தியாதல் இயல்பு; ஆயினும் இங்கு அஃதில்லை` என்றபடி. `அஃது ஆஞ்ஞை` என்பது மேலே சொல்லப்பட்டது. அருவி - ஆஞ்ஞை யினின்றும் பெருகும் அமுத தாரை. குளம் - இருதயம். விளைவு பல வகையினதாதல் இறைவனது எண் குணங்கள் பற்றியாம். முதல் இரண்டடிகளிற் பொதுப்படக் கூறியவற்றை ஏனையோர் அறிவா ராயினும், அதனைச் சிறப்புவகையான் அறியாமை பற்றி, `அதனை அவ்வாறு அறிதல் வேண்டும்` என்பதைப் பின்னிரண்டடிகளால் கூறினார். `அங்ஙனம் உணராத பொழுது அவர் முயற்சி பெரும்பயன் தாராது` என்பதாம். வேறேயிருத்தல், தலைமையிடத் திருத்தல்.
இதனால், மேலையாதார யோகங்களையும் சிவ யோகமாகச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

தியானப் பொருள் பிராசாத கலைகள் பன்னிரண்டிலும் நிறைந்து, எட்டிதழ்த் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசையெட்டும், அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மரும், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்துமாய் உள்ள முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையேயாம்.

குறிப்புரை :

`தியானப் பொருள் சிவனே` என்றபடி ``தேர் எட்டும்`` என்பதை, ``தேவதை எட்டும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``தேர்`` என்றது, படைக்கலம் முதலிய பிறவற்றையும் தழுவிய உபலக்கணம். `திசைக் காவலர் அவ்வாறெல்லாம் வழிபடப்படுவர்` என்க. அகை - பிரிவு. மற்று, அசை. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `உதிப்பிக்கின்ற ஆறு, ஆதிப்பிரானை` என முடிக்க. `ஆதிப் பிரானை உதிப்பிக்கின்ற ஆறாம்` என்றபடி. ஆறு - முறைமை. `உதிப்பிக்கின்ற` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
இதனால், `யோகத்தின் எட்டுறுப்புக்களில் `தியானம்` ஏதேனும் ஒன்றைத்தியானிப்பது அன்று; சிவனைத் தியானிப்பதே` என்பது கூறப்பட்டது. `ஏதேனும் ஒன்றைத் தியானிக்கலாம்` என்பது யோக மதம்.

பண் :

பாடல் எண் : 6

ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.

பொழிப்புரை :

வைதிக முறையில் வழிபடினும், இதய கமலத்தின் எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக ஏழ் எண்ணி ஏழாவதாகிய வட இதழ் ஈறாக உள்ள இதழ்களில் உள்ளவர்களாக மேற்சொல்லப்பட்ட திசைக் காவலர்களைச் சகலவருக்கத்து ஆன்ம வர்க்கத்தவராகவும், அடுத்த வடகீழ் இதழில் உள்ள ஈசானனை அவரின் மேம்பட்ட பிரளயாகல உருத்திரனாவும், எட்டையும் கடந்து மேலாக ஓங்கி நிற்கும் உயர்புற இதழில் சீகண்ட உருத்திரரை வைத்துச் சிவனாகவும், கீழ்நோக்கித் தூங்கும் கீழ்ப்புற இதழில் ஆதார சத்தியை வைத்து அச்சத்தியாகவும் பாவித்து வழி படின் சிறப்புடைய சைவ வழிபாடாக அமையும்.

குறிப்புரை :

``ஏழ்`` என்று ஏழ் இதழ்களின் உள்ள தேவதைகளைக் குறித்தது. `சகலமாக இயம்பும்` என ஆக்கம் வருவிக்க. `இயம்பும்` - இயம்பப்படும். `வாழும் ஒன்று பரம்` என மாற்றிக்கொள்க. ``பரம்`` என்பது, `மேலானது` என்னும் அளவாய் நின்றது. ஊழி பராபரம் அயன், மால் இவர்களது ஊழிலும் அழியாது நிற்கும் சீகண்ட உருத்திரர். தாழ்வு - கீழ் உள்ளது; ஆதார சத்தி. மேல், ``சுருங்கிய தண்டின் சுழுனையினூடே`` என்றமையால் இம்முறைக்கு மூலா தாரத்தில் உள்ள குண்டலிசத்தியே தாமரையின் கிழங்காகும், இதய கமல வழிபாடு சைவாகமங்களில் சொல்லப்பட்ட சைவமுறை வேறாதலையறிக. தனித்தன்மை - சிறப்புத் தன்மை; அது சிவ வழிபாட்டுத் தன்மையாம்.
இதனால், வைதிகத்தில் சைவமாம் வகை சொல்லப்பட்டது. அனைத்துத்தேவர்களையும் ஒரு நிகராகப் பரமாகக் கருதுவது தனி வைதிகம் என உணர்க.

பண் :

பாடல் எண் : 7

பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.

பொழிப்புரை :

முதற்கடவுளாவான் உலகிற்குப் பலவகையான ஊழிகளைப் பகுத்து வைத்துத்தான் அவற்றில் அகப்படாது நிற்பவன். அங்ஙனம் பகுக்கப்பட்ட ஊழிகள் பெரும்பான்மையாக ஐந்தாகும். அவை நிவிர்த்திகலை யூழி முதலாக, சாந்தியதீதைகலை ஊழி ஈறானவையாம். அவற்றில் ஒன்றிலும் உள்ளாய் நிகழும் ஊழிகள் பல. ஒவ்வோர் ஊழியையும் கடந்து அனைத்து ஊழிகளும் முடிந்த பின்பும் அவற்றில் மாயையில் அனைத்து உலகங்களும் ஒடுங்கவும் தான் ஒடுங்காது மேல் நிற்பவன் எவனோ, அவனே முழுமுதற்கடவுள்.

குறிப்புரை :

`அத்தகையோன் பரம சிவனே` என்பது கருத்து. அதனால், `ஏனையோர் பலரும் அவனால் தோற்றி ஒடுக்கப்படும் உயிர் வருக்கத்தினரே` என்பதும் அருத்தாபத்தியால் பெறப்பட்டது. பகல் - பகுதல்; பகுத்தல். பகலோன் - பகுத்தலை உடையவன். நின்ற - நின்றன. இரண்டாம் அடியீற்றில் `பல` என்பது வருவிக்க. `செல்லூழிதோறும் அண்டத்துச்சென்றவன்` என்க. `அண்டம்` என்பது, `அப்பால்` என்னும் பொருட்டு. ``உச்சியுள்`` என்பதும் அது ஊழியுள் அவ்வூழி - எல்லா ஊழிகளிலும் முடிவான ஊழி. ஒன்றின் - பொருந்தியிருப்பின். `அவன் பகவனாம்` என முடிக்க. ஈற்றடி இன எதுகை.
இதனால், இதய கலம வழிபாடு சைவ வழிபாடாக நிகழ்தலே சிறப்புடையதாதல், அதற்குக் காரணம் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வளியும்
பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.

பொழிப்புரை :

முதற் கடவுளால் ஆக்கி அளிக்கப்படும் உலகத்தின் திசைகள் எட்டாகப் பாகுபட்டு உள்ளன. `அத்திசைகளில் எட்டு யானைகள் நின்று உலகத்தைத் தாங்குகின்றன` என்பதும், `அந்த யானைகளைத்தங்கள் ஊர்திகளாகக் கொண்டு உலாவும் தலைவர்கள் உளர்` என்பதும் இருக்கட்டும். நெருப்பும், நீரும், ஓயாது இயங்கும் காற்றும் ஆகாசமாகிய வெளியைப் பற்றாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அதுபோல, அனைத்திற்கும் பற்றுக்கோடாய் உள்ளவன் அனைத்து ஊழிகளையும் கடந்து நிற்கின்ற அவனே.

குறிப்புரை :

`அதிசைக் காவலர்களே உலகிற்குப் பற்றுக் கோடல்லர்` என்பது கருத்து. அக்கருத்து உவமை காட்டித் தெளிவிக்கப்பட்டது. பூண்ட - பூண்டன; சுமக்கின்றன. எண்மரையும் சேர்த்து, `குழாம்` என்றார். அவர்களை உலகிற்குப் போதியவராகக் கருதுபவரை உட்கொண்டு, ஏனைத் தேவரைச் சேர்த்திலர். `குழாமும் திரியும்` என்க. உம்மை, இறந்தது தழுவிற்று. பரிதல் - இயங்குதல். ஆகாசத்தில் பரியும் எனவும், `அதுவே பற்று` எனவும் மாற்றியுரைக்க. தான், அசை. `அதுபோல அனைத்திற்கும் பற்று அவனே` என்பது குறிப்பெச்சம்.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட பொருள் வலியுறுத்தி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.

பொழிப்புரை :

சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்குமேலே, தனக்கு வருவாயாகும் நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ் நிலங்கட்குப் பாய விடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேறும், கிழங்கும், இல்லாமலே செழிப்பான ஒரு கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களைச் சிவன் விரும்பிச் சூடுதல் இல்லை.

குறிப்புரை :

ஊறும் அருவி, விந்துத் தானத்தில் உண்டாகின்ற அமிர்ததாரை. அதனை உடைய உயர் வரை, ஆஞ்ஞை; புருவ நடு. அதற்கு மேலேயுள்ள அருங்குளம் உச்சி. அது `சந்திர மண்டலம்` எனப்பட்டு, சந்திரன் தருகின்ற அமிர்தத்தைப்போல அமிர்தத்தைத் தருதலால், `ஆறின்றிப் பாயும் அருங்குளம்` எனப்பட்டது. ``உண்டு`` என்பதன்பின், `அதன்கண்` என்பது வருவிக்க. செழுங்கொடி, ஆஞ்ஞையினின்றும் மிடற்றினின்றும் உச்சிக்குச் சென்று பரவும் நாடிகள்; நரம்புகள் பூத்த தாமரை, உச்சியில் மலர்கின்ற ஆயிர இதழ்த் தாமரை. அதனையே சிவன் விரும்பிச் சூடுதல், அத்தாமரையினின்றும் தோன்றும் யோகக் காட்சிகளையே ஆஞ்ஞையில் தன்னைத் தியானிக்கும் யோகிகட்குத் தான் வழங்கும் பிரசாதமாகக் கொண்டிருத்தல் இம்மந்திரமும் மேற் போந்த சில மந்திரங்களை போலப் பிசிச்செய்யுள். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
இதனால், அட்ட தள கமல வழிபாட்டிற்குமேல் யோக வழிபாடும் செய்யத் தக்க சைவ வழிபாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

பொழிப்புரை :

மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போகும் காலத்தில், அவனது திருவருளைப்பெற்று நிற்கும் பெரியோர்கள் உலகத்தார் ஆங்காங்கே நின்று கொண்டும், இருந்து கொண்டும், தங்கள் வாய்க்கு வந்த எவற்றைப் பேசினாலும் அவற்றைப்பொருட்படுத்தாது, ஐம்புலன்களை வெல்லுதலும் செய்து, நடந்தாலும், இருந்தாலும் சிவனை உணர்ந்தேயிருப்பர்.

குறிப்புரை :

`அவருடைய உணர்வே உண்மை அட்டதள கமல வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். இறைவனுடைய திருவுள்ளம், `உயிர் தன்னை உணர்தற்கு எந்தத் தடையும் இருத்தல் கூடாது` என்பது. ஆணவமலம் மறைத்தலைச் செய்யாது வாளா இருத்தலும், மாயை கன்மங்கள் உயிர்கள் திருவருள் நெறியில் ஒழுகுதற்குத் துணை செய்தலுமே மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போதலாம். `அந்நிலை மலம் பரிபாகமான காலத்தில் உண்டாகும்` என்பது கருத்து. ``மால் இவன் என்ன மன நினைவில் - ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் - தத்தம் மனத்தன பேச``3 என்னும் ``நிலையே, நிலம், நின்றும், இருந்தும் பல பேசினும் விகிர்தனை நாடுவர்`` என்றார். ``வென்றும்`` என்னும் உம்மை சிறப்பும்மை.
இதனால், சைவ வழிபாடு மலபரிபாகத்தில் உலகியலின் நீங்கினாரிடத்தில திரிபின்றி நிற்கும்` என்பது கூறப்பட்டது.
சிற்பி