எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி


பண் :

பாடல் எண் : 1

தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன்
பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன்
பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.

பொழிப்புரை :

வியாத்தன், தைசதன், பிராஞ்ஞன், விராட்டன், இரணிய கருப்பன், அவ்வியாகிருதன் இதயன், பிரசாபதி, சாந்தன் இம்முத்திறத்து ஒன்பது பெயர்களும் சீவ சாக்கிரம் முதலிய முத்திறத்து ஒன்பது அவத்தைகளிலும் சிவன் தான் காட்சிப்படும் முறையால் எய்தும் பெயர்களாம். ஆகவே, அவனை அத்தன்மையனாகக் காணும் காட்சியில் சீவனும் சார்ந்ததன் வண்ணமாம் தன் றன்மையால் அப்பெயர்களைப்பெற்று நிற்கும்.

குறிப்புரை :

விசுவன் - உலகுயில் வடிவினன். தைசதன் - (தேசசு) ஒளி வடிவினன். பிராஞ்ஞன் - பெருஞான வடிவினன். இம்மூன்று பெயர்களும் முறையே பிராணாயாம பிரத்தியாகாரங்களாகிய சீவ சாக்கிரத்திலும் ஆன்ம தரிசன சிவரூபங்களாகிய சிவ சாக்கிரத்திலும், சீவன் முத்தி அதிகார முத்திகளாகிய பரசாக்கிரத்திலும் எய்துவனவாம்.
விராட்டன் - விராட் புருடன்; சகல புவன வடிவினன். இரணிய கருப்பன் - பொன்வண்ணத்தன்; கவர்ச்சி தருபவன். அவ்வியாகிருதன் - பிரிவுபடாதவன்; அருவுருவன். இம்மூன்று பெயர்களும் முறையே தாரணையாகிய சீவ சொப்பனத்திலும், ஆன்ம சுத்தி சிவ தரிசனங்களாகிய சிவ சொப்பனத்திலும், இலய முத்தியாகிய பர சொப்பனத்திலும் எய்துவனவாம்.
இதயன் - இருதயத்தில் ஒளிர்கின்றவன்; பிரசாபதி - உயிர்களைப் பாதுகாப்பவன். இங்கு ஆகாமியம் நிகழாவாறு தடுத்துப் பிறப்பில் வீழாதபடி காத்தல் என்க. சீவனும் இவ்வாற்றால் தன்னைத் தற்காப்பதாகும். சாந்தன் - அமைதியுடையவன். பிறபொருள் அனைத்திலும் பற்றின்றியிருத்தலோடு ஒன்றன் வாசனையேனும் இல்லாது இன்ப வடிவாய் இருப்பவன். இம்மூன்று பெயர்களும் முறையே தியான சமாதிகளாகிய சீவ சுழுத்தியிலும், சிவயோக சிவபோகங்களாகிய சிவ சுழுத்தியிலும், இலய முத்தி பர முத்திகளாகிய பர சுழுத்தியிலும் எய்துவனவாம். `பர சுழுத்தியில் காட்சிப்படுபவன் சொரூப சிவனாகிய பரம சிவனே` என்பது `சாந்தன்` என்னும் பெயரால் அறியப்படுவது. மாண்டூக்கியோப நிடதத்து ஏழாவது மந்திரம், ``சிவம், சாந்தம், அத்வைதம், சதுர்த்தம்`` எனக் கூறி மற்றும் பலவாறாக வருணித்தது சொரூப சிவத்தையேயாம்.
சதுர்த்தம் - நான்காவது பொருள். அஃதாவது, `துரிய மூர்த்தி` என்பதாம். இங்குத் துரிய துரியாதீதங்களும், `சுழுத்தி` என அடக்கப்பட்டமையால் மூன்றாவது மூர்த்தியாகச் சொல்லப்பட்டது. `சிவன் நான்காமவன்` என்பதனால், அவன் மூம்மூர்த்திகளுள் ஒருவன் ஆகாமை விளங்கும்.
மற்றும் அவ்வுபநிடதத்து நான்காம் மந்திரம் `தைசசன்` என்பது சொப்பனாவத்தையில் எய்தும் பெயராகக் கூறிய சொப்பனத்தைச் சீவ சாக்கிரத்தை நோக்கச் சிவ சாக்கிரம் சொப்பனம் போலத் தோன்றுதல் பற்றிக் கூறியதாகக் கொள்ளல் வேண்டும்.
விசுவ ரூபியை முண்டகோபநிடதம் `அந்தரான்மாவிற்கு அக்கினி தலை, சந்திர சூரியர் கண்கள், திக்குகள் காது, வேதங்கள் வாக்கு, வாயு மூச்சு, புவனங்கள் இருதயம்` என வருணித்து, `அவனது பாதங்களிலிருந்தே அனைத்துலகங்களும் `உண்டாயின` என்றது.3
``நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகமும் முகிழ்த்தன முறையே``
என்பது ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து.
`தொல் பதம்` என்பது எதுகை நோக்கி, `தொற் பதம்` எனத் திரிந்தது. இஃது உயிர்கட்கு அநாதியாய் உள்ள பசுத்துவத்தை ஒட்டி நிகழும் அவத்தையைக் குறித்தது. பதம் - அவத்தை. ``நற்பதம்`` என்பது நின்மலாவத்தையையும், ``பிற்பதம்`` என்பது அவற்றின்பின் நிகழும் பராவத்தையும் குறித்தன.
``அபிமானி`` என்பதைச் சாதியொருமைப் பெயராகக் கொண்டு சிவன், சீவன் இருவரையுங் கொள்க.
இவ்வதிகாரத்து இம்முதல்மந்திரத்தால் நவாவத்தை அபிமானிகள் எய்தும் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

நவமாம் அவத்தை நனவாதி பற்றின்
பவமாம் மலம் குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முக்கூற்று ஒன்பான் அவத்தைகளில் முதற்கூறாகிய `சீவ அவத்தை` எனப்படும் யோகாவத்தையில் நிற்பினும் பிறப்பு உண்டாகவே செய்யும். அதனால் குரு உபதேசத்தின் வழியாகச் சிவ அவத்தை ஆகிய நின்மலாவத்தையை அடைந்து, `யான், எனது` என்னும் பற்றுக்களை விடுத்து, அப்பற்றுக்கள் சிறிதும் இல்லாத சிவயோகமாகிய உண்மை ஞான வெளியில் நீ அதுவாகி அடங்கி நில். அந்நிலையே சிவ துரியமாகும். அதன்பின் துரியாதீத நிலை எளிதில் கைவர, பரம சிவனை அடையும் உண்மை நிலை உண்டாகும்.

குறிப்புரை :

விதந்தோதாது பொதுப்பட ஓதியதனால் ``நனவாதி`` என்றது முதற்கண் நிகழும் சீவ அவத்தையைக் குறித்தது. `பற்றினும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. மலம் - ஆணவம். அதன் காரியமே யான்` என்னும் செருக்கு. குணம் - மாயை. அதன் காரியங்களே `எனது` என்னும் செருக்கிற்கு நிமித்தம். `இவற்றால் வரும் பற்று` என்க. `அந்தப்பற்றுக்கள் வந்து பற்றாத தவம்` என்றதனால் அது சிவ யோகமாயிற்று. அந்நிலை அருள்நிலையே யாகலின் அது, ``சத்திய ஞானப் பொது`` எனப்பட்டது. துவம் - தன்மை. ஆர் - பொருந்து. ``ஆம்`` என்பதை முன்னரும் கூட்டி, `அதுவே துரியம் ஆம்; பின்பு சொரூபம் ஆம்` என முடிக்க.
இதனால், மேற்கூறிய அபிமானப்பெயர்கள் ஒன்பதில் இதயனிலும் மேலான, `பிரசாபதி, சாந்தன்` என்னும் பெயர்களைப் பெற முயல்வதே சிறப்பு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவமான சிந்தையில் சீவன் சிதையப்
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதம்
தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சிவ துரியத்தில் சீவன் ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏகனாகி`` நிற்றலால் `தான்` என்பதொரு முதல் இல்லையாய்விட, ``மல மாயை தன்னொடு வல்வினையின்றே ``* என்றபடி. பிறப்பிற்குக் காரணமாய் நின்ற மும்மலங்களும் அடியோடு கெட்டொழியும். ஒழியவே சீவபோதம் பராவத்தையின் இறுதியில் நிகழும் சாந்த சிவ போதமேயாம். அதனால் அந்நிலையில் அந்த சாகிய சீவன் செய்யும் செயல்களும் பிறப்பிற்கு ஏதுவாம் ஆகாமிய வினையாகாது சிவ போதத்தை நினைப்பிக்கின்ற தவங்களேயாய், மற்றும் தான் செய்தன ஆகாது சிவன் செய்தனவேயாகி விடும்.

குறிப்புரை :

``ஆகும்`` என்பதனைப் ``போதம்` என்பதனோடும் கூட்டி, `அந்தத்தின் நிகழும் நற்சிவ போதம் ஆகும்` என்க. `தவமாம் அவையாகி` என்றதனால், `அவர் செய்யும் செயல்கள்` என்பது பெறப்பட்டது. தான் செய்யும் செயல்களைத் ``தான்`` என்றார். `தான் செய்வன அல்ல ஆகும், என்றதனால், `சிவன் செய்வன ஆகும்` என்பது தானே பெறபட்டது``. சித்தம் சிவமாக்கிச் செய்தன வேதவமாக்கும் அத்தன்`` 8 என்று அருளிச் செய்தது காண்க.
இதனால், மேற்கூறிய அபிமானப் பெயர்களுள் `பிரசாபதி` என்னும் பெயரினனாதலும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதற்கண் சொல்லப்பட்ட ஒன்பது அவத்தைகளைப் போல அவற்றுக்கு முன்னே சீவன் தன் சொல்லால் சொல்லி எண்ணக் கூடாத ஒன்பது நிலைகள் உள்ளன. ஆகவே, அனைத்தையும் தொகுத்து நோக்கும்பொழுது பதினெட்டாகின்ற இவைகளினின்றும் சீவர்களைப் பிரித்துத் தானாகச் செய்துவரும் தலைவனாகிய சிவன் முத்தி நிலையில் தான் ஒருவனேயாகி விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

இங்கு, ``தத்துவம்`` என்றதைச் சித்தாந்த முறையில் சிறப்பாகவும், பிற மதங்கள் கூறும் முறையில் பொதுவாகவும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, மாயாகாரியங்களோடு `சிவன்` சிவன், பரன், என்பனவும் தத்துவங்களாம். ஆனபின், ``தத்துவம்`` என்றது ஆகுபெயராய் அவை பற்றி நிகழும் அவத்தைகளைக் குறிக்கும். ஆகவே, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்ட சீவன் முதலிய மூன்று பற்றிய ஒன்பது அவத்தைகளுடன், மாயா காரியங்களில் உணர்வுக் கருவிகளாகிய ஞானேந்திரியம் ஐந்து, அந்தக் கரணம் நான்கு ஆகிய ஒன்பது கருவிகளால் நிகழும் உணர்வு நிலைகளாகிய ஒன்பது அவத்தைகள் உளவாக, அனைத்தும் ``ஈரொன்பான்`` ஆகும். `இந்நிலைகள் அனைத்தையும் நீக்கிச் சீவனைத் தன்னைப் போலவே என்றும் ஒரு நிலையில் நிற்கச் செய்து சிவன் தான் மட்டுமே விளங்கி நிற்கின்றான். இதுவே உண்மை நிலையாகிய சொரூபநிலை` என்றபடி. `பர துரியத்தையும் பேர்கின்றான்` என்றது, அபர முத்தியினின்றும் நீக்குதலை நோக்கி. ``ஒன்பானின்`` என்பதில் இன் உவம உருபு. `மாயா காரியங்கள்` என்பது விளங்குதற் பொருட்டு. ``எண்ணத்தகா`` என்றார். ``பின்`` என்று. `முடிவில்` என்றபடி. `தன்போலச் செய்த` என உவம உருபு விரிக்க. `தற்செய்த` எனற்பாலது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ``செய்த`` என இறந்த காலத்தாற் கூறினமையின் பண்டு தொட்டுச் செய்து வருதல் விளங்கிற்று. `தானே சிறந்தான்` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், அவத்தைகள் பலவற்றாலும் உயிரைச் சிவன் உய்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை ஈடறுத் தானே.

பொழிப்புரை :

`உயிர்களின் பொருட்டு அவற்றிற்கு ஏற்புடைய வித்தை பதினான்கையும் செய்தருளிய முதல்வன்` என்று உயர்ந்தோர் யாவராலும் சொல்லப்படுகின்ற அத்தன்மையை உணர்ந்து நான் சிவனை ஏனைத் தேவரினின்றும் வேறு பிரித்து, `அவனே எங்கள் கடவுள்` என்று இரவும், பகலும் ஓயாது சொல்லிக் கொண்டிருப்பேன். அதனால், வரும் பிறப்புக்களில் என்னை வந்து பற்ற நின்ற வலிய வினைகள் இல்லாதொழிந்தன. மற்றும் இப்பொழுது தோன்றும் வினைகளையும் அவன் அழித்துவிட்டான்.

குறிப்புரை :

`அதனால் இனி எனக்குப் பிறவி இல்லை`, இசையெச்சம். ``உலகம்`` என்பதை முதலிற் கொள்க. வித்தை பதினெட்டாயினும் அவற்றுள் உபவேதம் நான்கை நீக்கி, `பதினான்கு` என்றலும் வழக்கு வித்தை பதினெட்டாவன, வேதம் நான்கு, உபவேதம் நான்கு, அங்கம் ஆறு, உபாங்கம் நான்கு.
``அட்டாதச வித்தைக்கும் சூலபாணியே
கர்த்தா என்று சுருதி கூறுகின்றது``
என்பது வாயு சங்கிதையில் சொல்லப்படுவது*
``ஈசாநஸ் ஸர்வ வித்யாநாம்``
என்பது மகாநாராயணோப நிடதம்.
அகைத்தல் - பிரித்தல். `அகைத்து` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ஈடு - முன் இடுதல். அது முன்பு, ``வல்வினை`` என்றதனால், முன் இடப்படுவதாகிய வினையையே குறித்தது.
இதனால், `அபிமானப் பெயர்கள் ஒன்பதனாலும் குறிக்கப்படுமாறு ஒன்பது அவத்தைகளிலும் விளங்குபவன் சிவனே` என உணர்ந்தவழியே பிறப்பு நீங்குதல் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும்
பலம்பல பன்னிரு காலம் நினையும்
நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.

பொழிப்புரை :

சிவன் உயிர்களுக்கான நல்லவழிகள் பலவற்றைச் சொல்லியருளிய காலம் எல்லையறியப்படாத பழமையுடையது. (`படைப்புக் காலம்` என்றபடி) உயிர்த் தொகுதிகள் அவ்வழிகள் பலவற்றில் தம் கருத்திற்கு ஏற்புடையவற்றைப் பற்றி அவற்றிற்கு ஏற்ற பயன்களை அடைந்து வருகின்றன. பெரும் பொழுது ஆறும், சிறு பொழுது ஆறுமாகிய பன்னிரண்டு காலங்களிலும் சிவபெருமானை நினைவதால் விளையும் பயன்களும் பல அங்ஙனம் நினைத்தற்குரிய இடங்களும் பல என்றாலும் ஆறு இடங்களில் (ஆறு ஆதாரங்களில்) சிவன் இனிது விளங்குபவனாய் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அந்த ஆறு இடங்களில் அவனை நினைக்கப் பழகுங்கள்` என்பது குறிப்பெச்சம்.
`தான் நலம் பல தொகுத்தன காலம் நீளம்` எனவும், பன்னிரு காலம் நினையும் பலம் பல` எனவும் மாறிக் கூட்டுக. நினைத்தற்குச் செயப்படுபொருளும், ``தான்`` எனப்பட்ட சிவனே என்பது எளிதின் விளங்கும். சிறுபொழுது ஆறும் பெரும்பொழுது ஆறின் வேறாவன அல்ல எனினும் `எஞ்ஞான்றும் ஒழியாது நினைக` என்றற்கு அவற்றை வேறுபோல வைத்து ``பன்னிரு காலம்`` என்பதை வினைத்தொகை யாக்கி, `சொல்லப்படும் காலை, மாலை இருகாலமும்` எனவும் உரைப்பர்.
இதனால், `வீடு பெற விரும்புவோர், ஒன்பான் அவத்தைகளில் சீவ அவத்தைகளாகிய யோகாவத்தையை முதற்கண் பற்றுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் மேலான முதற்பொருள் தன்னியல்பில் `சிவம்` என்றும், `சத்தி` என்றும் இரு கூற்றை யுடையதாய் இருக்கும். அவற்றுள் சத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி` என்னும் பெயருடையதாய் நின்று, `அறிவு அருள், உயிர், தத்துவங்கள் வேதம் முதலிய நூல்கள், பஞ்சகலைகள், சுத்தமாயை, அசுத்த மாயை, பல சமயத்தாரும், ஆராய்ந்து கூறும் முத்திநிலைகள்` என்னும் ஒன்பது வகையாய் நிற்கும்.

குறிப்புரை :

இவற்றுள் அறிவே ஞானம். அருளே இச்சை, இவை இரண்டும் தன்னால் தான் அடையும் பேதங்கள். ஏனைய ஆறும் தான் அவையேயாய்க் கலந்து நிற்கும் கலப்பினால் அடையும் பேதங்கள். அங்ஙனம் கலந்து நின்று அவற்றை இயக்குதலே கிரியை ஆதலின் அதனை வேறு கூற வேண்டாவாயிற்று.
``ஆதி`` இரண்டனுள் முதலது `முதற்பொருள்` என்னும் பொருட்டு. ஈற்றது ஆதி சத்தி. இதுவே `திரோதான சத்தி` எனப்படும். `பராற் பரம், பராற் பரை` என்பன `பராபரம், பராபரை` என மருவி வழங்கும். `மேலானவற்றிற்கும் மேலானது, மேலானவற்றிற்கும் மேலானவன்` என்பன இவற்றின் பொருள், `பராபரம்` என அஃறிணையாற் கூறியது. `சிவம்` எனக் கூறியவவாறு. தன்னிலையில் சிவம் `பரமசிவம்` என்றும், அதனது சத்தி `பராசத்தி` என்றும் சொல்லப்படும். அது வாளா இருப்பதன்றி, யாதொன்றையும் செய்வதன்று. செய்ய நினைக்குங்கால், ஒரு சிறு கூற்றானே `ஆதி சத்தி` என வேறு நின்றே செய்யும். அதனால், பேதங்கள் எல்லாவற்றிலும் ஆதி சத்தி உடனாய் நிற்கும் என்க.
ஆதி சத்தி `ஞானம்` என்னும் வகையில் அனைத்துயிர்களின் அறிவிலும் அறிவிற்கு அறிவாய் நின்று அவ்வறிவுப் பொருள்களை அறியச்செய்யும் `கிரியை` என்னும் வகையில் உயிர்களையும், உயிரல் பொருள்களையும் இயக்கி நிற்கும் இவற்றிற்கெல்லாம் காரணம் தான் அருள்வடிவாய் இருத்தலே.
``கலை`` என்பதனை இரட்டுற மொழிந்து கொள்க. ``தத்துவவம்`` என்றது பொருட் பிரபஞ்சத்தையாகலின். சொற் பிரபஞ்சம் எஞ்சாமைப் பொருட்டு அதனை வேறு கூறினார். பஞ்ச கலைகளும் இரு மாயைகளுள் சுத்த மாயா காரியமேனும் அவை தத்துவங்களின் வேறாய் அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்றல்பற்றி வேறு கூறப்பட்டன. காரியங்களை முன்னர்க் கூறிக் காரணங்களை முடிவிற் கூறினார். ஓர் முத்தி, வினைத்தொகை. சித்தாந்த முத்தி அருட்சத்தியால் ஆவது ஆகலின், பிற சமயத்தார் கூறும் முத்திகளே திரோதான சத்தியால் ஆவன என்க.
`ஒன்பானுடனும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `ஒன்பானுடனும் ஆதி ஆம்` என முடிக்க.
ஒன்பது பேதங்களையும் ``நீதியாம் பேதம்`` என்றது, `உயிர்கள் பக்குவத்தை யடைதற்கு, இவை இன்றியமையாத முறைகளாம்` என்றற்கு.
இதனால், `ஒருவனாகிய சிவன் தனது ஆதி சத்தியால் பல பேதங்களை அடைந்து நிற்றலால், நவாவத்தை அபிமானியும் ஆகின்றான்` என்பது குறிப்பால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.

பொழிப்புரை :

அநாதியே பற்றிய மலத்தால் அறியாமையை யுடையதாய் நிற்கின்ற உயிர்களின் அறிவு அவ்வறியாமை நீங்கித் தெளிவடைதற் பொருட்டுத் தெளிவிற்கு வித்தாக, தம்முள் மாறுபட்ட நரகலோக சுவர்க்க லோகங்களிலும் பூலோகத்திலும் வினைக்கீடாகச் சென்று பிறக்கும் பிறப்புக்களையும் சிவன் உயிர்கட்கு அமைத்திருக் -கின்றான். அங்ஙனம் அமைத்தது அருள் காரணமாகவேயாம். அதனை வன்கண்மையாக நினைக்கும் தங்கள் நினைப்பை விட்டு, அருளாகத் தெளியமாட்டாதார் தெளிதற்கு வாயிலான மானுடப் பிறப்பைப் பெற்றதும் வினையின் விளைவேயாம்.

குறிப்புரை :

``சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்``9 கூறும் முறையில் இங்கு உயிரிகளின் அறிவு ``சிந்தை`` எனப்பட்டது. ``தெளிவித்து`` என்றது வினைத்தொகை. `வித்தாகி` என ஆக்கம் வருவிக்க. ``பிறப்பும்`` என்னும் உம்மை, `வீடேயன்றி` என எதிரது தழுவிய எச்சம். ``உயிர் பெற்றது`` என்றது, `பிறப்பை எடுத்தது` என்றபடி. `உயிர் பெற்றது வினை` என மாறிக் கூட்டுக, வினையின் விளைவை ``வினை`` என்றார். என்றது, `முன்னைப் பிறவிகளின்றும் இப்பிறப்பிற்கு வேறு சிறப்பில்லை` என்றபடி. அஃதாவது, `இப்பிறப்பிலும் முன்புபோல வினையை ஈட்டிக் கொள்ளுதலை மட்டுமே செய்வவர்; உய்யும் நெறியைத் தலைப்படார்` என்பதாம்.
இதனால், `மானுடப் பிறப்பை எய்தினோர் சிவன் நவாவத்தை அபிமானியாதலை உணர்ந்து படிமுறையானே அவனை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை :

இங்குக் கூறிவரும் ஒன்பான் அவத்தைகளிலும் சிவன் அபிமானியாய் நிற்கும் நிலைகள், அவ் அவத்தைகளில் செயற்படும் தத்துவங்கள், மற்றும் சில இவற்றை உணர்ந்து அவ்வொன்பான் அவத்தைகளிலும் `துரியம்` எனப்படும் நிலையிலே நிற்றற்கண் பர துரியத்தில் சீவன் செம்மைச் சிவனாகிவிடுவதே சித்தாந்த நெறியின் முடிநிலைப் பயனாகும்.

குறிப்புரை :

எனவே, `பிற பிற சமயத்தார் கூறும் சித்திகள் எல்லாம் முடிநிலைச் சித்திகள் அல்ல` என்பதாம். நவாவத்தைகளில் செயற் படும் நவதத்துவங்களான, சீவ அவத்தையில் பிராணனை இயக்கும் அகங்காரம், தியானிக்கப்படும் பொருளை ஒருதலையாக உணரும் புத்தி, அதனையே சிந்திக்கும் சித்தம் என்பனவும், சிவ அவத்தையுள் குருமொழியைச் சிந்திக்கும் ஞானம், அடையப்படும் பொருளைத் தெளியும் ஞானம், தெளியப்பட்ட பொருளையே விரும்பி அதன்கண் அழுந்தும் ஞானம், என்பனவும், பராவத்தையில் சிவனது நேர் அதிகார சத்தி, போக சத்தி, இலயசத்தி என்பனவுமாம். இங்குப் பராசத்தியும் வேற்றுமை மிக இன்மையால் இலய சத்தியாகக் கொள்ளப்பட்டது. செம்பால் - செம்மைப்பகுதி. என்றது சொரூப நிலையை. எனவே, `சொரூப சிவம்` என்பதை நாயனார், `செம்பாற் சிவம்` எனக் குறித்திருத்தல் குறிக்கொளத் தக்கது. செம்மை - உண்மை நிலையில் வேறுபடாது இருந்தவாறே இருத்தல். சித்தி - பேறு. என்றது, சிறப்புப் பற்றி முடிநிலைப் பேற்றையே குறித்தது.
இதனால் நவாவத்தைகளின் முடிநிலைப்பயனும் அதனை அடையுமாறும் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி